அசோகன் முத்துசாமி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானத்தின் சுருக்கம்:
'ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தங்கள், மற்றும் சம்பந்தப்பட்ட இதர ஆவணங்கள் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும்,
'பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சர்வதேசச் சட்டங்கள், குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதி மற்றும் மனிதாபிமான சட்டத்திற்கு (எது பொருந்துமோ) உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியும்,
'இலங்கையின் லெசன்ஸ் லேர்ன்ட் அன்ட் ரிகான்சிலேஷன் கமிஷனின் (கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்-எல்எல்ஆர்சி) விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகள், ஆகியவற்றை கவனத்தில் கொண்டும், மற்றும் இலங்கையின் தேசிய இணக்கப் போக்கிற்கு அது பங்களிக்கக் கூடிய சாத்தியத்தையும் ஏற்றுக் கொண்டும்,
'நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஆட்களைக் காணமல் போகச் செய்வது போன்ற பரவலான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான முறையில் விசாரிக்க வேண்டிய தேவை, வட இலங்கையை ராணுவ நீக்கம் செய்ய வேண்டும், நிலத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு பாரபட்சமற்ற நிர்வாக ஏற்பாட்டைச் செயல்படுத்த வேண்டும், கைது செய்து சிறையிலடைக்கும் கொள்கையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும், முன்னர் சுயேச்சையாக இயங்கிய சிவில் அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்ட வேண்டும், அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் வேண்டும், மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான சீர்திருத்தங்களை வகுக்க வேண்டும் போன்றவை உள்ளிட்ட அந்த அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வரவேற்றும்,
'சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் விஷயத்தில் எல்எல்ஆர்சி அறிக்கை போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை, மற்றும் அது தொடர்பான தனது சட்டபூர்வமான கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை மற்றும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது சுயேச்சையான, நம்பகமான விசாரணையை நடத்தி, அத்தகைய விதி மீறல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்போம் என்று தான் அளித்த உறுதி மொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது குறித்த கவலையைத் தெரிவித்துக் கொண்டு,
'1. அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்றுமாறும், அத்துடன் அது தொடர்பான சட்டப்படியான கடப்பாடுகளை பூர்த்தி செய்ய உடனடியாக நடிவடிக்கைகள் எடுத்திடுமாறும், சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டன என்கிற கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான, சுயேச்சையான விசாரணையை நடத்தி அத்தகைய விதி மீறல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்போம் என்று தான் அளித்த உறுதி மொழியை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறும் இலங்கை அரசாங்கத்தை அறைகூவி அழைக்கின்றது.
2. எல்எல்ஆர்சி பரிந்துரைகளின் பேரில் இது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் விஷயத்தில் என்ன செய்ய இருக்கிறது ஆகியவை பற்றிய ஒரு விரிவான செயல்திட்டத்தை மனித உரிமைகள் கவுன்சிலின் 20 வது அமர்வில் சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
3. (ஐநாவின்) மனித உரிமைகள் தூதர், மற்றிதர சிறப்பு அதிகாரம் படைத்தவர்கள் ஆகியோர் அந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்குமாறும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமாறும் ஊக்கப்படுத்துகின்றது.' (ஆதாரம்: டிரான்ஸ்கரன்ட்ஸ் இணையதளம்).
இந்த தீர்மானம் அமெரிக்காவின் முன்முயற்சியால் அல்லது திட்டத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முன்மொழிந்திருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் தவிர நார்வே இதில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு இலங்கை உள்நாட்டுப் பிரச்சனையில் அதற்குள்ள நீண்ட கால தொர்பு ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கையில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானம் பேசுவதற்கு அது பல முறைகள் முயற்சித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றது. நிற்க.
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரின. பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளாத 'நக்சலைட்' குழுக்கள் சிலவும் கோரின. தெர்தல்களில் ஈடுபடாத சில சமூக இயக்கங்களும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரின. (விநோதம் என்னவென்றால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த, அணுசக்தியை எதிர்ப்பதே தங்களது குறிக்கோள் என்று சொல்லி வந்த உதயகுமார் தலைமையிலான 'அரசியல் சார்பற்ற' கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவும் இந்த அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தது).
விடுதலைப் புலி ஆதரவுக் குழுக்களில் ஒரு பகுதி இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றபோது, மற்றொரு பகுதி இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போது அமெரிக்கா திடீரென்று இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்திருப்பது ஏன் என்கிற அடிப்படையில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டனர். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களிலும் இப்படி இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தன. இருக்கின்றன.
இவை தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம்) அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உள்பட இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு தொடர்பான வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன; அவற்றை நிறைவேற்ற இந்தியா இலங்கை மீது ராஜீய ரீதியாக நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கேருகின்றன. அதற்கான போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 22ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மூன்றாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஷரத்தில் இந்தியா ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன்தான் சர்வதேச அமைப்புகளுடைய பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது.
இனி நமது கருத்துக்கள், சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவற்றைப் பதிவு செய்யலாம். இதே கருத்துக்கள் வேறு பலருக்கும் இருக்கலாம்.
1. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும், பிரிட்டனும் தீர்மானம் கொண்டு வரப் போகின்றது என்கிற செய்தி வெளியில் வந்த அதே நேரத்தில் பிரிட்டனின் சேனல் 4 தொலைக் காட்சி இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் பற்றிய புதிய தகவல்களும் சான்றுகளும் அடங்கிய காணொளி ஒன்றை ஒளிபரப்பப் போவதாகச் செய்தி வெளிவந்தது. ஒளிபரப்பப்பட்டது. இது நிச்சயமாக யதேச்சையாக நடந்திருக்க முடியாது.
2. ஏனெனில், மனித உரிமைகள் பெயரால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் பல நாடுகளின் உள்விவகாரங்களில் வேறு உள்நோக்கங்களுடன் தலையிட்டிருக்கின்றன. யுகோஸ்லாவியா, இராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியவை சில உதாரணங்கள். மேலும், பொதுவாக கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு எதிராக எப்போதுமே அமெரிக்கா மனித உர்மைகள் மீறல் எனும் பழியைச் சுமத்திக் கொண்டேதான் இருக்கின்றது. சுதந்திர வர்த்தகத்திற்கு (சுதந்தரமான சுரண்டலுக்கு?) கம்யூனிஸ்ட் சமுதாயங்களில் வழியில்லை என்கிற அடிப்படையில், தனிநபர் சுதந்திரம் இல்லை என்று ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டேதான் இருக்கின்றது.
இதன்றி, இப்போது சிரியாவை ஆக்கிரமிக்கும் உள்நோக்கத்துடன் அல்லது அங்கு தன்னுடைய கைப்பாவை அரசாங்கத்தை பதவியில் அமர்த்தும் திட்டத்துடன் அந்த நாட்டிற்கு எதிராகவும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இவற்றையெல்லாம் செய்வதற்கு முன்னர் பொது புத்தியை தன்னுடைய திட்டத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பதற்கு அனைத்து வகையான பிரச்சார உத்திகளையும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொள்வர். எனவே, இலங்கை விஷயத்திலும் அதே உத்தியை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் அது பிழையில்லை. எனவே, தீர்மானமும் சேனல் 4 காணொளியும் ஒரே நேரத்தில் களத்திற்கு வருவது தற்செயலானதல்ல.
இதன் பொருள் சேனல் 4 கூறும் பதைக்க வைக்கும் செய்திகள் உண்மையல்ல என்பதல்ல. உண்மையான செய்திகளையே அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் வெளியே சொல்வார்கள்; இல்லை என்றால் மறைத்து விடுவார்கள்.
3. ஒரு பலம் பொருந்திய மேற்கு ஐரோப்பிய சோஷலிச நாடாக இருந்த யூகோஸ்லாவியாவில் அமெரிக்கா இதுபோல் தலையிட்டது. தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்தியது; பல துண்டுகளாகச் சிதறடித்தது; பல லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இனமோதல்களைத் தூண்டிவிட்டு, பின்னர் அதையே சாக்காக வைத்து படுமோசமான யுத்தத்தை அந்த நாட்டின் மீது நடத்தியது. தன்னுடைய தாக்குதலை நியாயப்படுத்த அமெரிக்காவும், அதன் நேட்டோ கூட்டாளிகளும் பல பொய்களை கட்டவிழ்த்து விட்டனர். இது குறித்து 'ஐஏசிஇஎன்டிஇஆர்.ஆர்க்' என்கிற இணையதளம் கேள்வி பதில் வடிவில் அந்தப் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளது. அவற்றில் சில:
'கட்டுக்கதை அ. இந்த மோதலில் யூகோஸ்லாவியாவே ஆக்கிரமிக்கும் நாடு. அதன் அதிபர் மிலோசெவிச் ஒரு புதிய ஹிட்லர்.
உண்மை: யூகோஸ்லாவிய ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் அல்லது போர்க் கப்பல்கள் எதுவும் மற்றொரு நாட்டை தாக்கவில்லை. கொசோவாவில் நடக்கும் சண்டை ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. யூகோஸ்லாவியா 1.1 கோடி மக்களைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் சிறுநாடு. உலகின் மிகப் பெரும் ராணுவ சக்திகள் உள்பட மொத்தம் 50 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 19 நாடுகள் அதைத் தாக்குகின்றன. வளைகுடாப் போரின் போது (1991) இராக்கின் சதாம் உசேனை சாத்தான் போல் சித்தரித்தது போல் மிலோசெவிச்சும் ஒரு சாத்தான் போல் சித்தரிக்கப்படுகிறார். 'விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு மிலோசெவிச்சைச் சாத்தான் போல் சித்தரிப்பது அவசியம்' என்று ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒப்புக் கொண்டார். (சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கல், மார்ச் 30, 1999).
கட்டுக்கதை ஆ: இனப்படுகொலைகள் (அல்லது இனத் தூய்மைப்படுத்துதல்), மனிதத் துன்பம் ஆகியவற்றால் கிளின்டன், ஆல்பிரைட் மற்றும் பென்டகன் தளபதிகள் ஆகியோர் செயல்படத் தூண்டப்பட்டார்கள்.
உண்மை: பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்தும், அவற்றுக்கு ஆயுதங்கள் வழங்கியும் 1991-2ல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நேட்டோ நாடுகள் யூகோஸ்லாவியாவை துண்டாடுவதில் மிக முக்கியமான பாத்திரம் வகித்தன. கொசோவாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று 1980களில் கோரியது சர்வதேச நிதியம்தான் (ஐஎம்எப்). இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 45 ஆண்டுகளாக யூகோஸ்லாவியாவில் பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றாகவும், அமைதியாகவும் தான் வாழ்ந்து வந்தன. யூகோஸ்லாவியாப் பிரிவினையைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர்களில் அனைத்து தரப்புகளிலும் பெரும் ரத்தக்களறியும், மனித உரிமை மீறல்களும் நடந்தன. 1995ம் ஆண்டு அமெரிக்காவால் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்ட குரோஷிய ராணுவத்தால் ஆறு லட்சம் செர்பியர்கள் முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான குரோஷியாவின் கிராஜினா பிராந்தியத்திலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டது தனிப் பெரும் இனத்தூய்மைப்படுத்தும் செயலாகும். கொசோவாவில் மீள் குடியமர்த்தப்பட்ட 55,000க்கும் மேற்ப்பட்ட இந்த செர்பியர்கள் நேட்டோ குண்டு வீச்சுக்களாலும், கொசோவாவில் நடந்த உள்நாட்டுச் சண்டையாலும் அகதிகளான லட்சக்கணக்கானோரில் அடங்குவர். (ஜீலியா டாப்ட், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர், சி-ஸ்பான், மார்ச் 29, 1999). மக்கள் தங்களது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த அமெரிக்காவின் அக்கறை அதற்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்கிற விருப்பு வெறுப்பு சார்ந்ததாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமெரிக்கா, கனடா ஆகிய இரு நேட்டோ சக்திகளுக்காக கிட்டத்தட்ட வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பூர்வகுடிகள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். துருக்கியிலிருந்து குர்த் இன மக்களும், மற்றும் பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், குவாதமாலா ஆகிய நாடுகளின் உள்நாட்டு மக்கள் வெளியேற்றப்பட்டதை அமெரிக்க ஆயுதத்தாலும் பணத்தாலும் ஆதரித்தது அமெரிக்கக் கொள்கை.
கட்டுக்கதை இ: அமெரிக்கச் செய்தி அறிக்கைகள் சமநிலையானவையாகவும் பாரபட்சமற்றவையாகவும் இருக்கின்றன. நமக்கு உண்மைச் செய்திகளைக் கொடுக்கின்றன.
உண்மை: நாம் இன்று காண்பது என்னவென்றால் உண்மைகள் மிகப் பெருமளவு திரிக்கப்படுவதைத்தான். ஊடகங்கள் பெரும் வர்த்தக நலன்களின் ஆதிக்கத்தில் உள்ளன; அவை பென்டகனின் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக ஒரே ஒரு குழு அனுபவிக்கும் துன்பங்கள் மட்டும், கொசோவாவை விட்டு வெளியேறும் அகதிகளில் துன்பங்கள் மட்டும் காட்டப்படுகின்றன; நேட்டோ குண்டு வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட இதர யூகோஸ்லாவியர்கள் கிட்டத்தட்ட அலட்சியப்படுத்தப்பட்டனர். தி நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், ஏபிசி, சிபிஎஸ், என்பிசி, தி கிரோனிக்கல் எக்சாமினர் மற்றும் இதர ஊடகங்கள், மிகப் பெருமளவு குண்டுகள் வீசப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், யூகோஸ்லாவியச் சம்பவங்கள் பற்றி ஒரு பக்கச் சார்பான கருத்துக்களையேக் கொடுத்தன. நேட்டோ போர் விமானங்களுக்கு இயந்திரங்களை விநியோகிக்கும் அமெரிக்காவின் பெரும் ராணுவ ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிக்கிற்குச் சொந்தமானது என்பிசி தொலைக்காட்சி; எம்எஸ்/என்பிசியின் பங்குதாரர்.'
'கட்டுக்கதை ஈ: அமெரிக்கா மற்றும் நேட்டோவின் குறிக்கோள் கொசோவாவில் பெரும்பான்மையாக இருக்கும் அல்பானிய முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான்.
உண்மை: அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் தடைகள் ஈராக்கில் தினசரி பெரும்பாலும் 300 முஸ்லிம்களைக் கொன்று கொண்டிருக்கின்ற (அவர்களில் பாதி பேர் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்) அதே வேளையில் யூகோஸ்லாவியாவில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நடிக்கிறார்கள். பென்டகன் ஒன்றும் மனிதாபிமான நிவாரண அமைப்பும் அல்ல; பெரும் நிறுவனங்மளுக்குச் 'சொந்தமான' அமெரிக்க அரசியல்வாதிகளும் உண்மையிலேயே எந்த மக்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை-அல்பானியர்கள், செர்பியர்கள், குர்துகள், ஈராக்கியர்கள் அல்லது இந்த நாட்டின் ஏழை உழைக்கும் மக்கள் என எவரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இந்த யுத்தம் யூகோஸ்லாவியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களைக் கொன்று கொண்டிருக்கின்றது. அவர்களின் மண்ணை கதிரியிக்கத் தன்மை கொண்ட செறிவிழந்த யுரேனியம் ஆயுதங்களைக் கொண்டு அவர்களது மண்ணை விஷமாக்கிக் கொண்டிருக்கின்றது.'
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் என்கிற பெயரில் அமெரிக்காவைத் தலையிட அனுமதித்தால் அது தமிழர்களைப் பாதுகாக்கும் அல்லது நீதி கிடைக்க வழி செய்யும் என்பது மூட நம்பிக்கையே என்பதற்கு இந்த மேற்கோள்கள் உதாரணங்களாகும்.
யூகோஸ்லாவியா குறித்த செய்திகளுக்கு முடிவு கிடையாது. அவ்வளவு கொடூரமும், வஞ்சகமும், துயரமும் நிறைந்தவை அவை. பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த நாட்டில் இன மோதல்களைத் து£ண்டிவிட்டு, மனித உரிமை மீறல்கள் என்கிற பெயரில் தலையிட்டு, பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலியிட்டு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களது வர்த்தக மற்றும் அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொண்டன. மேற்கு ஐரோப்பாவிற்கும் எண்ணை வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியன் கடல் பகுதிகளுக்கும் இடையிலான பாதையாக யூகோஸ்லாவியா இருந்தது.
மேலும், இலங்கை பூகோள ரீதியாக ராணுவ கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருப்பதால் அமெரிக்காவின் கை நீண்ட நாட்களாக பரபரத்துக் கொண்டிருந்தது.
4. லிபியாவிற்கு எதிராகவும் மனித உரிமைகளின் பெயரால்தான் அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் மூன்றாவது பத்தி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
'ஐக்கிய நாடுகளின் ஏழாவது அத்தியாயத்தின்படி,
'சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டம் ஆகியவை உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களின் கீழ் தங்களுடைய கடப்பாடுகளுக்கு ஏற்ப லிபிய அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், பொது மக்களைப் பாதுகாக்கவும், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி அதிவிரைவாக மக்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானம் கோருகின்றது.' (ஐநா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம், தி கார்டியன்).
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திலும் இதே மாதிரி வாசகங்கள் இருப்பதைக் கவனியுங்கள். சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இதே மாதிரியான வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் லிபியாவின் மீது குண்டு மழை பொழிந்தன. கடாபியின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கின. ஆயிரக்கணக்கான அமெரிக்க, நேட்டோ போர் விமானங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிவது எப்படி மனித உரிமைகளைக் காக்கும் செயல் என்று தெரியவில்லை. அறிஞர் அய்ஜாஸ் அகமது 'லிபியா மீண்டும் காலனியாக்கப்பட்டது' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவை 'மனித உரிமைகள் ஏகாதிபத்தியம்' என்று வர்ணிக்கின்றார்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயராலும், மனித உரிமைகளின் பெயராலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், அணுஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் இராக் மீது படையெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மனித உரிமைகளின் பெயரால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட முதல் நாடு லிபியாதான்.
'பெங்காஷியில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள் என்ற ஒபாமாவின் கூற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை; போரின் ஆரம்ப கட்டங்களில் கடாபியின் படைகளால் கைப்பற்றப்பட்ட கலகக்காரர்களின் நகரங்களில் படுகொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை. அதற்கு மாறாக, நேட்டோவின் கூலிப்படைகளால் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. லிபியாவில் குடியிருந்த கறுப்பு ஆப்பிரிக்கர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் லிபியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று நைஜர், மாலி மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகள் தெரிவிக்கின்றன; நேட்டோவின் உள்ளூர் கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களும் நேட்டோவின் 40000க்கும் மேற்பட்ட குண்டு வீச்சுகளின் நாசகரமான பாதுகாப்பில் திரிபோலி நோக்கி முன்னேறியபோது இது நிகழ்ந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகளையும், தொழிலாளர்களையும் தன்னுடைய நாட்டின் விரிவடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக கடாபியின் ஆட்சி வரவேற்றிருந்தது; அந்த மூன்று லட்சம் பேர் மட்டுமின்றி, லிபியாவைச் சேர்ந்த கறுப்பின மக்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. இந்த சூறையாடலின் அளவு இன்னும் அறுதி செய்யப்படவில்லை; ஆனால், ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் சேர்ந்து நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட இந்த யுத்தத்தால் 50000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவு; ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர்; பெரும்பாலும் நேட்டோவிடம் ஆயுதம் பெற்ற கலகக்காரர்களினால்தான் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள்தான் இப்போது அந்த நாட்டின் அரசாங்கமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.' (மீண்டும் காலனியாக்கப்பட்ட லிபியா, அய்ஜாஸ் அகமது, பிரன்ட்லைன் நவம்பர் 18, 2011).
மனித உரிமைகள் பெயரால் லிபியாவில் தலையிட்டவர்கள் அந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று அடக்கினார்கள். அந்நாட்டின் எண்ணை வளங்களை ஏற்கனவே கொள்ளையடிக்கத் துவங்கிவிட்டார்கள்.
5. இப்படிப்பட்ட அமெரிக்கா இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு நோக்கம் என்னவாக இருக்க முடியும்? நிச்சயமாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க முடியாது.
'அமெரிக்காவின் நலன்களுக்கும், (இந்த தீர்மானத்தைப் போலவே) எல்எல்ஆர்சியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரும் இந்தியாவின் நலன்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று ராஜபட்சே அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க ஒரு கருவியாக ஒபாமா நிர்வாகம் இந்த தீர்மானத்தை முன்னுக்குத் தள்ளுகிறது. இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள மற்றும் தமிழ் மேட்டுக்குடியினருக்கு (அல்லது அரசியல்வாதிகளுக்கு) இடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று புதுதில்லி ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்துகிறது' என்று உலக சோஷலிச இணையதளம் கருத்து தெரிவித்துள்ளது. (சரத் குமாரா, டபிள்யூஎஸ்டபிள்யூஎஸ் இணையதளம், மா£ச் 7, 2012).
இப்படியரு தீர்மானம் கொண்டு வரப்படப் போவது பற்றி அமெரிக்க வெளிறவுத் துறை முன் கூட்டியே ராஜபட்சேவிற்குத் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட இணையதளம் மேலும் பின்வருமாறு கூறுகிறது:
'விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராஜபட்சேவின் யுத்தத்தை ஆதரித்த வாஷிங்டன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை விட அதிகமாக இலங்கையில் மனித உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை. (அந்நாடுகளில் மனிதஉரிமைகள் பற்றிய அதன் அக்கறை எத்தகையது என்பதை மேலே உள்ள விவரங்கள் தெளிவாக்குகின்றன-இந்தக் கட்டுரை ஆசிரியர்). கொழும்பு சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கமாக பொருளாதார, ராஜீய உறவுகளை விட்டு விலகும்படி இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கு இந்தப் பிரச்சனை ஒபாமா நிர்வாகத்திற்கு ஒரு வசதியான கருவியாகும்'.
6. இந்த தீர்மானத்தில் உருப்படியாக ஒன்றும் இல்லை என்பது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள பலரின் கருத்து. இருந்தாலும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பற்றிய சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க இது பயன்பட்டிருக்கின்றது என்பது வேறு பலரின் கருத்து.
ஆனால், உண்மையில் இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் சர்வதேச விமரிசனங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அரசாங்கத் தவைர்கள் போர்க்குற்ற விசாரணையைச் சந்திக்க வேண்டிய அபாயத்திலிருந்து தப்பிப்பதற்கும் இலங்கைக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா என்று சரத் குமாரா கூறுகிறார்.
ஆம், அது சரிதான். ஏனெனில், அமெரிக்காவின் நோக்கம் இலங்கையைப் பகைத்துக் கொள்வேதா அல்லது அங்குள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோ அல்ல. இலங்கையில் தான் காலூன்றுவதுதான் அதன் திட்டம். இலங்கையின் சர்வதேச அரசியல் கொள்கை முடிவுகளிலும், இலங்கைப் பொருளாதாரத்திலும் தன்னுடைய செல்வாக்கை செலுத்துவது அதன் நோக்கம். அதே நேரத்தில், மனித உரிமைகள் விஷயத்தில் தனக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதாகவும் காட்டிக் கொள்ளலாம்.
காரியம் முடிந்ததும் இந்த முகமூடியைக் கழற்ற அமெரிக்கா சற்றும் தாமதிக்கவில்லை. தீர்மானம் மார்ச் 23ம் தேதி நிறைவேற்றப்படுகின்றது. 24ம் தேதியே இலங்கை மீது 1980களில் தான் விதித்திருந்த ஆயுதக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
'..தீர்மானம் வியாழனன்று (23.3.12) நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாகத் தளர்த்தியுள்ளது. வியாழக்கிழமை முதல் இந்தக் கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி இலகு ரக விமானங்கள், கண்காணிப்பு கேமராக்கள், அது தொடர்பான பொருட்களை இலங்கை அமெரிக்காவிலிருந்து வாங்கிக் கொள்ளலாமாம். குறிப்பாக, கடல் மற்றும் வான் மார்க்கமான கண்காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும்'. (தீக்கதிர், 24.3.12).
கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்காகத்தான் ஐநாவின் மனித உரிமைகளுக்கான தூதர் மற்றும் சிறப்பு அதிகாரம் பெற்ற இதரர்களின் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக் கொள்ள இலங்கையை வலியுறுத்துகிறது தீர்மானம். அப்படி உதவி செய்யப் போகிறவர்கள் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் ஆட்களாகத் தான் இருப்பார்கள். அதில், இலங்கையின் சம்மதத்துடன் என்கிற சொற்றொடரை இந்தியா சேர்த்துள்ளது. அவ்வளவுதான்.
இப்போது ஆயுதங்கள் வாங்குவதற்கு இருந்த தடைகளை நீக்கிய பின்னர் இலங்கை சம்மதிக்க மாட்டேன் என்றா கூறப் போகிறது?
7. எப்படியாயினும், சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத் தமிழர்கள் ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுவது இனியாவது முடிவிற்கு வர வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், தமிழர்களுக்கு சம அரசியல் உரிமையும், தமிழர் வாழும் வட கிழக்குப் பகுதிக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதற்கும் இலங்கையின் மீது ராஜீய ரீதியான நிர்ப்பந்தம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவிற்குத்தான் இந்த விஷயத்தில் முக்கிய பாத்திரம் இருக்கின்றது.
ஆனால், இப்போது அமெரிக்காவும் மூக்கை உள்ளே நுழைத்துவிட்டதால் என்ன நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-----------------------------------------------------------24.3.12
(இக்கட்டுரையின் சற்று சுருக்கப்பட்ட வடிவம் 'இளைஞர் முழக்கம்' ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்துள்ளது).