அயோத்தி பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் ஏற்பட்ட அச்சத்திற்கு ஸ்டேன்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் குற்றவாளி தாராசிங்கிற்கு ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெரிவித்த கருத்துக்கள் வலுவூட்டுகின்றன. நீதிபதிகளும் அறிந்தோ அறியாமலோ வகுப்புவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். ஒரு முறை ஒரு கருத்து பொது புத்தியில் ஏறிவிட்டால் அது தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொள்ளும். கடந்த 21.1.11 அன்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஆர்.எஸ்.செளகான் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் தெரிவித்த, பின்னர் நீக்கிவிட்ட இரு கருத்துக்கள் பின்வருமாறு; 1. ''கிரஹாம் ஸ்டேன்சும் அவரது இரண்டு சிறு வயது மகன்களும் மனோஹர்பூரில் ஒரு ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த போது எரித்துக் கொல்லப்பட்டபோதும், ஸ்டேன்சின் மத நடவடிக்கைகளுக்காக, ஏழைப் பழங்குடி மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றியதற்காக, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்த அம்சங்கள் அனைத்தும் ஒரிசா உயர்நீதிமன்றத்தால் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது;அது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக திருத்தியுள்ளது; அந்த தீர்ப்புடன் நாங்கள் உடன்படுகின்றோம்''. 2. ஒருவரின் நம்பிக்கையில் பலாத்காரத்தைப் பயன்படுத்தியோ, சினமூட்டியோ, மதம் மாற்றியோ, தூண்டிவிட்டோ அல்லது ஒரு மதத்தைவிட இன்னொரு மதம் சிறந்தது என்கிற தவறான அனுமானத்தின் அடிப்படையிலோ தலையிடுவதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை''. இதைப் படித்தவுடன் அதிர்ச்சி அடைந்த மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட பலர் தங்களது ஆட்சேபனையை தெரிவித்தனர். சில ஊடகங்களும் விமரிசித்தன. நீதிபதிகள் முற்றிலும் தேவையற்ற வகையில் இக்கருத்துக்களைக் கூறியுள்ளனர் என்றனர். ஆம், அது தேவையற்றதுதான். வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. உயர் நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது. அதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மரண தண்டனை தேவையில்லை என்பதை வலியுறுத்துவதற்கு நீதிபதிகள் முதல் கருத்தைக் கூறியிருப்பது போல் மேலோட்டமான பார்வைக்கு தெரிகின்றது. ஆனால், இரண்டாவது கருத்து அப்படி இல்லை என்கிறது. அவர்கள் மத மாற்றத்தையே கண்டிக்கிறார்கள். எப்படியாயினும் இந்த தர்க்க நியாயமே சரியில்லை. மூன்று கொலைகளைச் செய்த ஒருவனது தண்டனையை குறைப்பதற்காக அவன் செய்த குற்றத்தையே நியாயப்படுத்துவதற்குச் சமம். அவர்களது இரண்டாவது கருத்து அதைத்தான் காட்டுகிறது. நிற்க. இப்போது இந்தக் கருத்துக்களை நீதிபதிகள் தங்களது தீர்ப்பிலிருந்து நீக்கி விட்டனர். அதற்கு பதிலாக பின்வரும் கருத்துக்களை சேர்த்துள்ளனர். முதலாவது கருத்து இருந்த இடத்தில்; ''என்றபோதிலும்,குற்றம் நடந்து 12 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டன. முந்தைய பத்திகளில் விவாதிக்கப்பட்டுள்ள உண்மை நிலைமையின் காரணமாக உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் கருதுகின்றோம்''. இரண்டாவது கருத்து இருந்த இடத்தில்; ''எந்த வகையிலும் ஒருவரின் நம்பிக்கையில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது''. இது சரி. ஆனால், அவர்கள் தாங்களாக இந்த மாற்றத்தைச் செய்யவில்லை. பலரின் கண்டனத்திற்கும், விமரிசனத்திற்கும் பின்னர்தான், சுட்டிக் காட்டிய பின்னர்தான் செய்துள்ளார்கள். முதலில் கூறிய இரு கருத்துக்களும் அப்பட்டமான இந்துத்துவக் கருத்துக்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அடுத்தடுத்து நீதிமன்றங்கள் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகின்றது. வகுப்புவாதம் சகல துறைகளிலும் இன்னும் வலுவாக நிலையிறுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. நீதிபதிகளின் சிந்தனையையும் அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கருத்து பொது புத்தியில் ஏற்றப் பட்டுவிட்டால் அது தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்ளும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். மத மாற்றம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்ற சங்பரிவாரின் கருத்துதான் தாராசிங்கின் கொலைவெறிக்குக் காரணம். மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றமல்ல. சட்டம் வகுத்தாலும் நியாயப்படி குற்றமல்ல. ஜனநாயக கோட்பாட்டின் படி குற்றமல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, ஒருவர் தான் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றவும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கவும் உரிமை உண்டு. இது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. அவன் செய்த கொலைகளை விசாரித்த நீதிபதிகள் இதை மறந்துவிட்டார்கள். இதைவிடவும் சங்பரிவாரின் கருத்து அவர்களது சிந்தனையில் மேலோங்கி இருந்திருக்கின்றது. அது தீர்ப்பில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. இது திருத்தப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அப்படியே மக்களிடம் சென்றிருக்கும். அவர்கள் அதை அப்படியே மற்றவர்களுக்கு பரப்பிக் கொண்டிருப்பார்கள். அது மீண்டும் பல கொலைகளுக்குக் காரணமாகவும் ஆகும்; நீதிபதிகளின் இத்தகைய தீர்ப்புகளுக்கும் காரணமாகவும் ஆகும். பொது புத்தியில் இருப்பது அவர்கள் சிந்தனையில் இடம் பிடிப்பது ஆச்சரியமில்லையே?சங் பரிவாரத்திடமிருந்து மக்களுக்கு;மக்களிடமிருந்து நீதிமன்றங்களுக்கு; நீதிமன்றங்களிடமிருந்து மீண்டும் மக்களுக்கு;பின் அங்கிருந்து மீண்டும்.....அரசியல் அதிகாரத்தை யார் வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளட்டும், குடிமைச் சமுதாயம் எங்களிடம் இருக்கின்றது என்று அத்வானி ஏன் சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment