Friday, February 4, 2011

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் -இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்








தமிழில்: அசோகன் முத்துசாமி

"மார்க்சிய தத்துவத்தை முழுமையடைந்த ஒன்றாகவோ, மீறக் கூடாத ஒன்றாகவோ நாங்கள் கருதுவதில்லை; மாறாக, வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று சோஷலிஸ்டுகள் விரும்பினால், அனைத்துத் திசைகளிலும் வளர்த்தெடுப்பதற்கான ஒரு விஞ்ஞானத்திற்கான அடித்தளத்தை மட்டுமே அது அமைத்திருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்.
வி.இ.லெனின்

ஆரியர்களின் வருகையிலிருந்துதான் இந்திய வரலாறு துவங்குகின்றது என்று நமது வரலாற்று ஆசிரியர்கள் ஒரு காலத்தில் கருதினர். எனினும், ஆரியர்களுடையதை விட தொன்மையானதும், வளர்ச்சியடைந்திருந்ததுமான ஒரு நாகரீகத்தை திராவிடர்கள் கொண்டிருந்தனர் என்று தென்னிந்திய வரலாற்று ஆசிரியர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறாக, இந்திய வரலாறு குறித்து இரண்டு பாரபட்சமான போக்குகள் எழுந்தன. ஒன்று ஆரியர்களுக்குச் சார்பாகவும், மற்றொன்று திராவிடர்களுக்குச் சார்பாகவும். இரண்டு போக்குகளும் பெரும்பாலும் கட்டுக்கதைகளை ஆதாரமாகக் கொண்டிருந்தன. கட்டுக்கதைகளை ஆதரமாகக் கொண்டு வரலாறு எழுதுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் என்னென்ன உற்பத்திக் கருவிகள் இருந்தன என்பதையும், அத்தகைய கருவிகளைக் கொண்டு செய்யப்படும் உற்பத்தியை நிர்வகித்த சமூக உறவுகள் என்ன என்பதையும், சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி அரசியல் மோதல்களுக்கும், யுத்தங்களுக்கும், புரட்சிகளுக்கும் இட்டுச் சென்றன என்பதையும் இந்த ஆசிரியர் சில காலத்திற்கு முன்னர் ஆராய முயற்சித்தார்.1
உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியுடன் வரலாற்றை தொடர்புபபடுத்தி ஆராயும் பல அறிஞர்கள் இப்போது தோன்றியுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவருமே வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையை உள்வாங்கிக் கொண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. என்றாலும், இந்த அறிஞர்கள் முந்தைய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும் வலுவாகவும், பயனுள்ள வகையிலும் விமரிசனத்திற்கு உட்படுத்தியுள்ளனர். எடுத்துக் காட்டாக, 1972ம் ஆண்டு பேராசிரியர் ரொமிலா தாப்பர் ஆற்றிய 'சர்தார் படேல் நினைவுச் சொற்பொழிவின்' தலைப்பே 'கடந்த காலமும் பாரபட்சமும்' என்பதாகும். வரலாற்று ஆசிரியர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர் என்று அவர் அங்கு சுட்டிக் காட்டினார்; ஒரு பிரிவு இந்தியா மீது ஏகாதிபத்தியம் செலுத்தும் ஆதிக்கத்தை நியாயப்படுத்த முயற்சித்தது; மற்றொரு பிரிவு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மீது பரிவு கொண்டிருந்தது. இந்த இரண்டு கொள்கைகளையுடைய வரலாற்று ஆசிரியர்கள் பாரபட்சமாகவே வரலாற்றை ஆய்வு செய்ய முயற்சித்தனர்; தத்தமது அரசியல் சார்பு நிலைக்கு ஏற்ற வகையில் வரலாற்றுக் கோட்பாடுகளை உருவாக்க முயற்சித்தனர்.
இது நவீன இந்திய வரலாறு எழுதப்படுவதற்கும் பொருந்தும். எடுத்துக் காட்டாக, ஹாலந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள்தான் நாகரீகமற்றிருந்த இந்தியாவை நாகரீகமடையச் செய்தார்கள் என்ற ஏகாதிபத்தியவாதிகளின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில், அந்நியர்களின் வருகைக்கு முந்தைய நு£ற்றாண்டுகளில் இந்தியாவில் நிலவிய நிலைமை பற்றி ஏகாதிபத்திய வரலாற்று ஆசிரியர்கள் விவரித்தனர். மறுபக்கம், தேசிய வரலாற்று ஆசிரியர்கள், இந்தியாவின் நவீனமயத்திற்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது அந்நிய ஆதிக்கமே என்றும், அது இல்லை என்றால் உலகிலுள்ள நாகரீகமடைந்த மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடத்தக்க வகையில் இந்தியா முன்னேறியிருக்கும் என்பதை நிறுவும் வகையிலும் வரலாற்று உண்மைகளைத் தேர்ந்தெடுத்து வியாக்கியானம் செய்தனர்.
இந்திய வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எவரும் இந்த இரண்டு கண்ணோட்டங்களையும் நிராகரித்துவிடுவர் என்று வேறொரு இடத்தில் எடுத்துக் காட்ட முயற்சித்துள்ளேன்; அவை இரண்டுமே பாரபட்சமானவை; அவற்றை ஆதரிப்பவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கங்களின் குறுகிய நலன்களுக்கு சேவகம் செய்யக் கூடியவை.1 குறிப்பாக, இந்திய சமூக அமைப்பில் இயற்கையாகவே பல நு£ற்றாண்டுகளாக வளர்ந்து வந்த பலவீனங்களே அந்நிய ஆதிக்கம் நாட்டில் ஆழமாக வேர் விடுவதற்கான தளத்தைத் தயார் செய்தன என்பதை எடுத்துக் காட்ட முயற்சித்துள்ளேன். பண்டைய மற்றும் மத்திய கால வடிவில் இந்திய சமுதாயத்தின் அடித்தளத்தை அது அழித்தபோதும், ஒரு புதிய அடிப்படையில் அதை நவீனமயமாக்கத் தவறியது. நவீயமயமாக்கல் போக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்துதான் துவங்கியது.
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆராயும் மற்ற பல ஆசிரியர்களின் அணுகுமுறையிலிருந்து இது வித்தியாசமானதாகும். உதாரணமாக, ஆரம்பத்தில் பல்வேறு வடிவங்களில் தென்னிந்தியாவில் நிகழ்ந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு எழுச்சிகளை ஏகாதிபத்திய ஆதரவு வரலாற்று ஆசிரியர்கள் வெறுப்புடனே பார்த்தனர். மறுபுறம், தேசியவாத வரலாற்று ஆசிரியர்கள் அவற்றை தேச விடுதலைப் போராட்டத்தின் துவக்கமாகவும், அதற்கான முன்மாதிரிகளாகவும் கருதினர். நான் இன்னும் வேறு விதமாக இந்த நிகழ்வுகளை மதிப்பிடுகின்றேன். உண்மையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி துவங்கிய காலத்திலிருந்தே மக்கள் அதை எதிர்த்து வந்தனர். கேரளாவில் வேலுத்தம்பி தாளவா மற்றும் பழசி ராஜா ஆகியோரின் தலைமையில் நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலகங்கள் போல, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலை கொள்வதற்கு முன்பே இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதை எதிர்த்துக் கலகம் செய்துள்ளனர். 1857 எழுச்சி மிகப்பரவலாகவும், அத்தகைய உள்ளூர் கலகங்களின் உச்சபச்ச வடிவமாகவும் இருந்தன. அந்த மிகப்பரந்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலகத்தை 'சிப்பாய்க் கலகம்' என்று பிரிட்டிசார் வகைப்படுத்தினர். அந்தக் கலகம் தேசிய இயக்க வரலாற்றின் ஒரு கட்டத்தின் முடிவைக் குறித்தது.
பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்பு இந்தியாவில் நிலவிய வர்ண-சாதி உறவுகளையும், அந்த உறவுகளின் அடிப்படையிலான கிராம சமுதாயத்தையும் பாதுகாப்பதற்காக விவசாய மக்களும், அவர்களைச் சுரண்டிய நிலவுடமை வர்க்கமும் இணைந்து நடத்திய உயர் வடிவிலான கலகங்களாகும் அவை. அதே நேரத்தில், அது ஒரு குறிப்பிட்ட வகை தேச விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டமும் ஆகும். இறுதியாக, 1857 போராட்டத்திற்குப் பிந்தைய நிகழ்வுகள் அத்தகைய போராட்டங்கள் எப்போதுமே வெற்றி அடையாது என்பதையும் காட்டின.
1857ம் ஆண்டுக் கலகம் ஒடுக்கப்பட்டதற்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் தோன்றியது. அது இந்திய தேசிய காங்கிரஸ். 1857க்கும் அதற்கு முந்தைய பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலகங்களிலும் பங்கேற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இவர்கள் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் மற்றும் அந்நிய கலாச்சாரத்தில் 'முற்போக்கு' தன்மையைக் கண்ட இவர்கள் அதை இந்தியாவில் பின்பற்ற விரும்பினர். ஆதலால், தங்களது நாட்டில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதே மாற்றங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்குத் தடையாக இருப்பது கண்டு அவர்கள் வெறுத்துப் போயினர். அவர்களின் மனக்குறைகள் மேலும் பரவலாகின; வளர்ந்தன; இறுதியில் பிரிட்டிஷ் எதிர்ப்பு மக்கள் இயக்கமாக பரிணமித்தது. இந்த இயக்கம் 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி வெற்றிகரமாக நிறைவுற்றது. ஆதலால், இந்திய தேசிய காங்கிரசின் வளர்ச்சியும், அதன் வெற்றியும், 1857 மற்றும் அதற்கு முன்னர் நாட்டின் பல்வேறு பாகங்களில் நிகழ்ந்த மக்கள் கலகங்களின் தொடர்ச்சி மற்றும் அவை வெற்றிகரமாக நிறைவுற்றதைக் குறிக்கின்றன என்று காங்கிரஸ் சார்பு வரலாற்று ஆசிரியர்கள் கூறிக்கொள்கின்றனர்.
இந்தியா விடுதலை பெற்ற 25ம் ஆண்டு பொன்விழாவை குறிக்கும் வகையில் 1970களின் முற்பகுதியில் பல்வேறு நு£ல்களும், ஆராய்ச்சி நு£ல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. அவற்றில் பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலகங்கள் முக்கிய இடம் பிடித்தன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை நிச்சயமாகச் செழுமைப்படுத்தியிருக்கின்றன. என்றபோதும், முக்கியமான பல கேள்விகளுக்கு தர்£க் நியாயப்படியான பதில்களை அறிஞர்கள் பலர் தரத்தவறினர்.
1. 1857 மற்றும் அதற்கு முந்தைய கலகங்கள் ஏன் வெற்றிபெறவில்லை? அவை ஏன் ஒடுக்கப்பட்டன?
2. 1857 கலகம் ஒடுக்கப்பட்டதற்குப் பின்னர் தோன்றிய தேச விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் ஆயுதப் போராட்டங்களிலிருந்து விலகியே இருந்தது? அது சாமான்ய மக்களின் இயக்கமாக மாறிய பின்னரும் 'அகிம்சையான போராட்டம்' என்பது அதன் முக்கியமான முழக்கமாக ஆனது? அந்த இயக்கத்தின் தலைவர்கள் அந்நிய ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு ஏன் மக்களின் ஆயுதத்தாங்கிய போராட்டம் எனும் 'அபாயத்தைத்' தவிர்க்க முயன்றனர்?
3. மதம் மற்றும் சாதி அடிப்படையிலான பிரிவினைவாத (sமீநீtணீக்ஷீவீணீஸீ) அரசியல் எப்படி விடுதலை இயக்கம் தோன்றிய நாள் முதலே தேசியவாதிகளின் முன் தடைகளை ஏற்படுத்தியது? இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய ஆட்சியாளர்களால் எப்படி விடுதலை இயக்கத்திற்கு உள்ளேயே சீர்குலைவை வளர்க்க முடிந்தது? விடுதலைப் போராட்டம் முழுவதும் ஒன்றாக இருந்த இந்தியா எப்படி இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது? விடுதலைக்குப் பின்னர் அவை எப்படி பரஸ்பரம் மோதிக் கொள்வதாக ஆனது எப்படி?
4. 1947 ஆகஸ்டு 15ஐ நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒரு புது யுகத்தின் பிறப்பாக எண்ணிக் கெண்டாடியபோது, ஒரு தலைமுறை முழுவதும் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்ற மகாத்மா காந்திக்கு அந்த நாள் ஏன் உற்சாகமளிக்கத் தவறியது? அவரைப் பின்பற்றியவர்களில் ஒரு பிரிவினர் ஆள்வோராக தங்களை மாற்றிக் கொண்டபோது, மற்றொரு பிரிவினர் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாட்டால் ஏமாற்றமடைந்தனர்? அதைத் தொடர்ந்த வருடங்களில் காந்தியவாதிகளில் ஒரு பெரும்பிரிவினர் ஏன் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டத் துவங்கினர்?
சுருக்கமாகக் கூறினால், 1857ல் உச்சநிலையை அடைந்த முந்தைய தேசிய இயக்கம் அந்நிய ஆட்சியாளர்களால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்டது. 1885 வாக்கில் தோன்றிய புதிய விடுதலை இயக்கம், வெற்றிகரமாக முடிந்ததுபோல் தோன்றினாலும், அது தன்னுடைய நோக்கங்கள் மற்றம் குறிக்கோள்கள் என்று மக்கள் முன்வைத்தவற்றை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பல்வேறு புதிய பிரச்சனைகளை எழுப்பியது. இதற்கான காரணத்தைத் தேடவேண்டியதில்லை.
18ம் நு£ற்றாண்டின் பிற்பாதியிலேயே பிரிட்டிசார் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சியாளர்களாக ஆயினர். மொத்த இந்தியாவையும் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு ஒரு நு£ற்றாண்டு காலம் பிடித்தது. அதற்கடுத்த நு£ற்றாண்டிற்குள் 1947 ஆகஸ்டு 15 அன்று அவர்கள் தங்களது ஆட்சியை முடித்துக் கொண்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
இந்த காலகட்டம் முழுவதும் ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம் வெற்றிபெற ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர். எண்ணற்ற குடும்பங்கள் நிராதரவாகின; மக்கள் கடும் அடக்குமுறையைச் சந்தித்தனர். உண்மையில், இந்தப் போராட்டங்களில் மக்கள் காட்டிய உறுதியும், துணிச்சலும், அமைப்பு ரீதியாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஆற்றலுமே பிரிட்டிசாரை நாட்டை விட்டு வெளியேறும்படிச் செய்தது.
இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் கலந்து கொண்ட வீரமிக்க தேசபக்தர்கள் விரும்பிய வகையில் விடுதலை கிடைக்கவில்லை. 1930ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதியும் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் உள்ளடக்கம் ஈடேறவில்லை. சமூக, அரசியல், கலாச்சார தளங்களில் அந்நிய ஆதிக்கம் து£க்கி எறியப்படவில்லை; நாட்டின் அரசியல் நிர்வாகத்தில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. வெள்ளை ஆட்சியாளர்களின் இடத்தில் மாநிற ஆட்சியாளர்கள் வந்தனர்.
தேசவிடுதலைப் போராட்டத்தின் முதல் கட்டத்தில் நிலப்பிரபுத்துவ மன்னர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றனர். இரண்டாவது கட்டத்தில், முதலாளிகள் தலைமையேற்றனர். மேலும், இந்த முதலாளிகள் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பை அழிக்கவில்லை. அதற்குப் பதிலாக அதனுடன் சமரசம் செய்து கொண்டனர். ஆதலால், விடுதவைப் போராட்டத்தின் இரண்டு கட்டங்களையுமே மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். 1857ல் முடிந்த முதல் கட்டம்; 1947ல் முடிந்த இரண்டாம் கட்டம். இந்த இரண்டு கட்டங்களிலும் இயல்பாக அமையப் பெற்றிருந்த பலவீனங்களை விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து மதிப்பிட வேண்டும். அந்தத் திசை வழியில் ஒரு சாமான்யமான முயற்சி என்கிற வகையில் இந்த நு£லில் வரலாற்றுப் பொருள்முதல்வாதமே என்னுடைய கண்ணோட்டம். அதன் காரணமாக, சாதாரண தேசியவாத வரலாற்றியலாளர்களின் அணுகுமுறையிலிருந்து என்னுடைய அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டிருப்பதைக் காணமுடியும்.
இது இயல்பாகவே மார்க்சியரல்லாத வரலாற்று ஆசிரியர்களின் மனதில் அய்யங்களை எழுப்பக் கூடும். முதலாவதாக, வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்வது என்று முடிவு செய்துகொள்வது சுயேச்சையான வரலாற்று ஆய்விற்கு இடையூறு செய்வதாக ஆகாதா என்று கேள்வி எழுப்பப்படலாம். இரண்டாவதாக, மற்ற நாடுகளில் நிலைமை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இந்தியாவிற்குப் பொருந்துமா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்காக, வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் சாரத்தையும், அதன் ஆய்வு முறைகளையும் ஆராய்வது அவசியமாகின்றது.
நாம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து ஆரம்பிக்கலாம். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட எழுதப்பட்ட அனைத்திலும் மிகச் சுருக்கமாகவும், முழுமையாகவும் எழுதப்பட்ட படைப்பு. இந்த நு£லைத் தொகுத்து ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகின்றார்.
'......ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்தின் பொருளாதார உற்பத்தியும், கட்டாயமாக அதிலிருந்தே தோன்றும் சமுதாயக் கட்டமைப்பும் அந்த சகாப்தத்தின் அரசியல் மற்றும் அறிவுசார் வரலாற்றின் அடிப்படையாக அமைகின்றன.....அதன் விளைவாக (நிலம் பொதுவுடமையாக இருந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தின் முடிவிற்குப் பிந்தைய) வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்திருக்கின்றது; வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான, ஆளும் வர்க்கங்களுக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டமாகவே இருந்திருக்கின்றது.....என்றாலும் இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த சமுதாயத்தையும் சுரண்டலில் இருந்தும், ஒடுக்குமுறையில் இருந்தும், வர்க்கப் போராட்டங்களில் இருந்தும் என்றென்றைக்குமாக விடுவிக்காமல் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கமான தொழிலாளி வர்க்கம் தன்னைச் சுரண்டும், ஒடுக்கும் முதலாளி வர்க்கத்திடமிருந்து இனியும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது...' (முன்னுரை 1883)
பின்னர், மேலே தொகுத்துக் கூறப்பட்டுள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் சாராம்சம் தொடர்பான சில குறிப்பிட்ட விஷயங்களில் மார்க்சிஸ்டுகள் மத்தியில் சில தவறான அபிப்பிராயங்கள் எழுந்தன. தான் எழுதிய கடிதம் ஒன்றில் ஏங்கெல்சே இந்த விஷயங்களில் ஒன்று குறித்த நிலைப்பாட்டை பின்வருமாறு விளக்கினார்:
'இளைஞர்கள் சில சமயம் பொருளாதார அம்சத்திற்கு அதற்கு உரியதைவிட அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு நானும், மார்க்சும் ஓரளவிற்கு எங்களை நாங்களே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். எங்களது அடிப்படைக் கோட்பாட்டை எங்களது எதிரிகள் மறுத்ததால் அதை நாங்கள் வலியுறுத்திக் கூறவேண்டியிருந்தது. பரஸ்பர வினையாற்றலில் ஈடுபட்டுள்ள மற்ற காரணிகளுக்கு அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்கு எங்களுக்கு எல்லா சமயங்களிலும் போதுமான நேரமோ, இடமோ அல்லது வாய்ப்போ கிடைக்கவில்லை'3
பொருளாதார மற்றும் பொருளாதாரமற்ற காரணிகளுக்கு இடையிலான பரஸ்பர வினையாற்றலை அதே சுயவிமரிசனக் கடிதத்தில் ஏங்கெல்ஸ் தெளிவாக எடுத்துரைக்கிறார்:
'..பொருளாதார நிலைதான் அடிப்படை. ஆனால், வர்க்கப் போராட்டங்களின் அரசியல் வடிவங்கள், வெற்றி பெற்ற வர்க்கத்தால் நிறுவப்படும் அரசியல் சட்டங்கள், நீதி அமைப்புகள், இந்தப் போராட்டங்களில் பங்கேற்பவர்களின் மூளையில் அவை ஏற்படுத்தும் பிரதிபலிப்புகள், அரசியல், சட்ட, தத்துவார்த்தக் கோட்பாடுகள், மதக்கருத்துக்கள், அவை மறுக்கக் கூடாத கொள்கைகளாக மேலும் வளர்ச்சியுறுதல் ஆகிய அப்போராட்டங்களின் விளைவுகள் போன்ற மேல்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகளும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தப் போராட்டங்களின் மீது தங்களது செல்வாக்கை செலுத்துகின்றன; மற்றும் பல உதாரணங்களில் அவை குறிப்பாக போராட்டத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. இந்த அனைத்துக் கூறுகளுக்கிடையில் ஒரு பரஸ்பர வினையாற்றல் இருக்கின்றது; அதில் முடிவற்ற, எண்ணற்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மத்தியில் (அதாவது, அப்படி ஒன்று இல்லை என்று கருதக்கூடியவையும், புறக்கணிக்கக் கூடியவையுமான விஷயங்கள், நிகழ்வுகளின் உள்தொடர்புகள் நெருங்கிய சம்பந்தமில்லாதவையாகவோ அல்லது நிரூபிக்க முடியததாகவோ இருக்கின்றனவோ அவை), பொருளாதார இயக்கம் இறுதியில் நிச்சயம் தன்னை வலியுறுத்திக் கொள்ளும். அப்படி இல்லை எனில், வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்திற்கும் இந்தத் தத்துவத்தைப் பொருத்துவது முதலாம் லகுப்புக் கணிதச் சமன்பாட்டிற்கு விடை காண்பதைவிடவும் சுலபமானதாக இருக்கும்.' 4
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் அனைத்து முழுமையான படைப்புகளிலும், சுரக்கமான கடிதத் தொடர்புகளிலும் இந்தக் கருதுகோளைக் காணமுடியும். வேதங்களையும், உபநிஷத்துகளையும் நம்புகிறவர்கள் போல், மார்க்சோ, ஏங்கெல்சோ அல்லது மார்க்சிஸ்டுகளோ மார்க்சியத்தை இறுதியான, நிலையான உண்மை என்று எப்போதும் கருதியதில்லை. மார்க்சிஸ்டுகள் உலகை பல வகைகளில் வியாக்கியானம் செய்ய முயற்சிப்பது மட்டுமின்றி, உலகை மாற்றவும் பாடுபடுகின்றார்கள்; மேலே சுருக்கமாக விவரிக்கப்பட்ட கண்ணோட்டத்தின் உதவி கொண்டு தங்களைச் சுற்றி தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை விருப்பு வெறுப்பின்றி ஆராயவும் செய்கின்றார்கள். வரலாற்று ஆய்வுக்கான மார்க்சிய வழிமுறையான வரலாற்றுப் பொருள்முதல்வாதம்தான் அது.
கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது, அய்ரோப்பா புரட்சிகரமான எழுச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த எழுச்சியில் நேரடியாகப் பங்கேற்ற மார்க்சும், ஏங்கெல்சும் அந்தப் புரட்சியின் பல்வேறு தத்துவார்த்த அம்சங்களை ஆராய்ந்தனர். 1848-49ம் ஆண்டுகளின் புரட்சியின் படிப்பினைகளை ஆய்வு செய்து  மார்க்ஸ் எழுதிய 'பிரான்சில் வர்க்கப்போராட்டம் (1848-1850)' என்கின்ற நு£லின் மறுபதிப்பிற்கு ஏங்கெல்ஸ் ஒரு அறிமுக உரை எழுதினார். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் பிரயோகிப்பது தொடர்பான சில கேள்விகள் குறித்து அதில் தெளிவுபடுத்தியிருந்தார்.
"ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிலைமையின் அடிப்படையில், பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கொண்டு சமகால வரலாற்றின் ஒரு பகுதியை விளக்குவதற்கு மார்க்ஸ் எடுத்த முதல் முயற்சியே இங்கு மறுபதிப்பு செய்யப்படும் நு£ல்.... நிகழ்வுகளையும், தொடர்ச்சியான நிகழ்வுகளையும் சமகால வரலாற்றைக் கொண்டு மதிப்பிட்டால், இறுதியான பொருளாதாரக் காரணங்களை எப்போதுமே சென்றடைய முடியாது. உலகச் சந்தையில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் அன்றாடம் ஏற்படும் அசைவுகளையும், உற்பத்தி முறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் பற்றிய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கான ஒரு பொதுவான முடிவிற்கு வரும் வகையில் கவனிப்பது என்பது இன்றும் கூட சாத்தியமற்றதாக இருக்கின்றது. பலவகைப்பட்டவையும், சிக்கலானவையுமான, இடைவிடாமல் மாறிக் கொண்டிருப்பவையாகவும் இந்தக் காரணிகள் இருக்கின்றன....அவற்றில் மிக முக்கியமான காரணி மேல்பரப்பில் (அல்லது கண்கூடாக) தன்னை மூர்க்கத்தனமாக வெளிப்படுத்திக் கொள்ளும்வரை பொதுவாக நீண்ட காலத்திற்கு ரகசியமாக செயல்பட்டு வருகின்றது."
1848-50 களில் பிரான்சில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களை மதிப்பிடும்போது மார்க்ஸ் செய்த சில பிழைகளையும் அந்த அறிமுகத்தில் ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டுகின்றார்.
"மார்க்ஸ் இந்தப் பணியை மேற்கொண்டபோது, குறிப்பிடப்பட்ட பிழையின் தோற்றுவாய் இன்னும் கூடுதலாக தவிர்க்க முடியாததாக இருந்தது. 1848-49 புரட்சி காலகட்டத்தின்போது, அதே நேரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பொருளாதார மாற்றங்களைக் கவனிப்பது அல்லது பார்வையிலேயே வைத்திருப்பதும் கூட அசாத்தியமாக இருந்தது. 1848-50களின் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தின்போது, முதல் மு¬றாயக நாடுகடத்தப்பட்டு லண்டனில் இருந்த முதல் சில மாதங்களிலும் அதுதான் நிலைமை. ஆனால் மார்க்ஸ் சரியாக அந்த காலத்தில்தான் தன் பணியைத் துவக்கினார். இத்தகைய சாதகமற்ற சூழ்நிலைமைகள் இருந்தபோதும், பிப்ரவரிப் புரட்சிக்கு முந்தைய பிரான்சின் பொருளாதார நிலைமை பற்றியும், புரட்சிக்குப் பிந்தைய பிரான்சின் அரசியல் வரலாறு பற்றியும் மார்க்சுக்கு மிகச் சரியான ஞானம் இருந்ததால், நிகழ்வுகளைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை மார்க்சால் அளிக்க முடிந்தது; அந்த நிகழ்வுகளுக்கு இடையிலான உள்தொடர்புகளை, முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்தச் சித்திரம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது; பின்னர் மார்க்சே பிரயோகித்த இரட்டைப் பரிசோதனைகளையும் அபாரமாக தாக்குபிடித்தது."
1848-50 களின் புரட்சிகர எழுச்சி சூழலின் பின்னணியில் மார்க்ஸ் இந்த நு£லை எழுதினார் என்பதையும், மார்க்ஸ் தானே மேற்கொண்ட ஆய்வுகளின் காரணமாக சொல்லப்பட்ட முறையில் அவராலேயே சில மாற்றங்கள் செய்யப்பட்டதையும் கூறுகின்ற ஏங்கெல்ஸ் மேலும் தொடர்கிறார்:
"....1850ம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே, புரட்சியின் முதல் அத்தியாயம் முடிந்து விட்டது என்றும்,  ஒரு புதிய உலகப் பொருளாதார நெருக்கடி வெடிக்கும் முன்னர் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும் நாங்கள் கூறிவிட்டோம். அந்தக் காரணத்தினாலேயே புரட்சியின் துரோகிகள் என்று நாங்கள் புறக்கணிப்பிற்கு ஆளானோம்; எங்களைப் புறக்கணித்தவர்களில் கிட்டத்தட்ட விதிவிலக்கு இன்றி அனைவருமே பின்னர் பின்னர் பிஸ்மார்க்குடன் சமரசம் செய்து கொண்டார்கள்; பிரச்சனைக்குக் காரணம் அவர்கள்தான் என்று பிஸ்மார்க் யாரைக் கருதினாரோ அவர்கள்.
"நாங்களும் தவறு செய்திருக்கின்றோம் என்பதை வரலாறு காட்டியுள்ளது. அந்த காலகட்டத்தில் எங்களது கண்ணோட்டமும் ஒரு மாயை என்பதை அது அம்பலப்படுத்தியுள்ளது. அது அப்போது நாங்கள் கொண்டிருந்த தப்பெண்ணங்களைத் து£ண்டிவிட்டது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்கம் எந்த நிலைமைகளில் போராட வேண்டியிருந்ததோ அதை முற்றிலும் மாற்றிவிட்டது. 1848ல் கைகொள்ளப்பட்ட போராட்ட முறை இன்று ஒவ்வொரு வகையிலும் காலாவதியாகிப் போய்விட்டது...."
என்றாலும், புரட்சிகரப் போராட்ட அனுபவங்களின் விஷயத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்வதோடு நிற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதும்போதும், எழுதுவதற்கு முன்னரும், பின்னரும் தாங்கள் எழுதிய ஒவ்வொரு நு£லின் உள்ளடக்கத்தையும் கவனமாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்கள். அந்தப் போக்கில் அவர்கள் தாங்கள் வந்தடைந்திருந்த முந்தைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை உணர்த்தும் புதிய உண்மைகளை அவர்கள் கண்டபோதெல்லாம் புதிய முடிவுகளை எடுக்க அவர்கள் தயங்கியதேயில்லை. ரஷ்யா, சீனா, இந்தியா உள்பட அனைத்து நாடுகள் சம்பந்தப்பட்ட வரலாற்று உண்மைகளையும், புள்ளிவிவரங்களையும் திரட்டுவதற்கு அவர்கள் குறிப்பான கவனம் செலுத்தினார்கள். இந்த நோக்கத்திற்காக அவர்கள் பல மொழிகளைக் கற்க ஆரம்பித்தார்கள்.
இறுதி உண்மையைக் கண்டுவிட்ட ஞானிகளாக மார்க்சும், ஏங்கெல்சும் தங்களை எப்போதுமே கருதிக் கொண்டதில்லை என்பது தெளிவு. உண்மையைக் கண்டடைவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிவியல் ஆய்வாளர்களாகவே கருதினார்கள். அந்தப் பொருளில்தான், மார்க்சிய வரலாற்று மாணவர்கள், இந்த நு£லாசிரியர் உள்பட, வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் வரலாற்றைப் பயிலும், வரலாற்று ஆய்வில் ஈடுபடும் எவரொருவரும் இந்தக் கண்ணோட்டத்தைப் பின்பற்றாத மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக்கொணரும் வரலாற்று உண்மைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. மாறாக, அத்தகைய ஒவ்வொரு வரலாற்று உண்மையும் கவனமாக ஆராயப்பட வேண்டும். அதுபோல, இந்த உண்மைகளின் அடிப்படையில் அவர்கள் வந்தடைந்த முடிவுகளையும் விமரிசனபூர்வமாக ஆராய வேண்டும். எடுத்துக் காட்டாக, சமீப காலங்களில் பொதுவாக இந்திய வரலாறு குறித்தும், குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகள் ஒவ்வொன்றிலும் மதிப்புமிக்க உண்மைகள் அடங்கியுள்ளன.
என்றபோதும், அந்த ஆய்வுகளில் பல முதலாளித்துவ தேசியவாதக் கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டவை. இன்னொரு பக்கம், அவற்றில் மற்றவை ஒரு மதத்தின் பார்வையிலிருந்து, அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் அல்லது ஒரு மொழியைப் பேசும் மக்கள் என்கின்ற குறுகிய பார்வையிலிருந்து எழுதப்பட்டவை. முடிவுகளை வந்தடையும் விஷயத்தில் மட்டுமல்லாது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருள்களிலிருந்தும் இந்த பாரபட்சத்தை பகுத்துணர முடியும். அவற்றை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதே நேரத்தில், ஆய்வறிஞர்கள் என்கின்ற வகையில் அவர்கள் வரலாற்று உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கு செறிவூட்ட இந்த உண்மைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மார்க்சியரல்லாத வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை விமரிசனபூர்வமான ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதன் மூலம் வரலாற்றுப் பொருள்முதல்வாத முறைக்கு செறிவூட்ட வேண்டியதன் தேவையை முன்னர் எழுப்பப்பட்ட கேள்விகள் தெளிவாக்குகின்றன. இந்தக் கேள்விகளின் தன்மை என்னவென்றால், விடுதலைப் போராட்ட வரலாறுகள் எதுவொன்றாலும் இந்தக் கேள்விகளுக்கு தர்க்கரீதியான பதில் அளிக்க முடியாது. மற்றொரு புறம், இந்தியாவின் கடந்த கால வளர்ச்சி, அந்நியர்கள் தங்கள் ஆட்சியை நிறுவுவதற்கு முன்னர் நாட்டில் நிலவிய சமூக அமைப்பின் தன்மை ஆகியவை பற்றிய ஆய்வின் அடிப்படையில் விடுதலைப் போராட்டத்தை ஆராய்வதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை பிரயோகிப்பவரால் விடையளிக்க முடியும்; தேசியவாத வரலாற்று ஆசிரியர்களால் அளிக்க முடியாத விடைகளை அளிக்க முடியும். இந்த நூலில் அதுதான் முயற்சிக்கப்படுகின்றது.

குறிப்புகள்:
1. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இந்திய சரித்திரத்திலெக்கு ஒரு எத்தினோட்டம் (மலையாளம்), சிந்தா பப்ளிகேஷன்ஸ், திருவனந்தபுரம், 1975.
2. மே.கு நூல்
3. ஏங்கெல்ஸ் ஜோசப் பிளாக்கிற்கு எழுதிய கடிதம், செப்டம்பர் 21 (22), 1890.
4. மே.கு கடிதம்    
(வரலாறு/சமூகம்/நில உறவுகள்- எனும் நூலில் இருந்து)

No comments:

Post a Comment