Saturday, July 9, 2011
குறி பார்த்துச் சுடத் தெரியாத கும்பல் -பி.சாய்நாத்
தமிழில்: அசோகன் முத்துசாமி
மன்மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைந்து விட்டன; லொட லொடவென்று வாயடிப்பவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஒரு மந்திரத்தை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்; முதலில் அவர்கள் இதைப் பெருமிதத்துடன் கூறினார்கள்; பின்னர், தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்வதற்காகக் கூறினார்கள். 'நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். மன்மோகன்சிங் மிக மிக நேர்மையான மனிதர். அவருக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது'. இது இப்போது குறைவாகத்தான் கேட்கிறது. அந்தப் பிரியங்கள் நேர்மைச் சூதாட்டத்தின் வேறு சூதாட்டக்காரர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், நேர்மையான பிரதமர் நமது வரலாற்றிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் அதில்தான் இருக்கிறது.
பத்திரிக்கை ஆசிரியர்களை வாரம் ஒரு முறை சந்திப்பது என்கிற சிங்கின் முடிவு இந்தக் குளறுபடியிலிருந்து அவர் எந்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்கிறது. ஊழலுடன் அவரது அரசாங்கத்திற்கு இருக்கும் பிரச்சனை ஒரு மக்கள் தொடர்புப் பிரச்சனை என்பது அவர் கற்ற பாடம். 2ஜி ஊழலில் அரசியல்வாதிகளைப் பார்த்து ஊடகங்கள் குரைத்தபோதும் அத்தகைய ஊழல்களின் மையமாக இருக்கின்ற கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றன. ஊடகங்கள் 'குற்றம் சாட்டுபவராகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும்' செயல்படுகின்றன என்று மன்மோகன்சிங் கருதுகிறார். (அது சரியாக இருக்கலாம்). எனினும், அவர் வாரம் ஒரு முறை அவர்களைச் சந்திக்க விரும்புகிறார். எனவே இது ஒரு மக்கள் தொடர்பு நடவடிக்கையா? அல்லது அனைத்து துறைகளிலும் (தங்கள் துறை தவிர்த்து) ஊழலை எப்படி ஒழிப்பது என்கிற மற்றவர்களிடம் இல்லாத அறிவு இந்தியாவின் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் இருக்கிறது என்று அவர் நினைக்கிறாரா? முன்னதாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அவரது அரசாங்கத்தின் ஊழல்களை எண்ணுவது என்பது மக்கள் தொகையை கணக்கெடுப்பது போல. மிகப் பெரிய, சிக்கலான கணக்கெடுப்பு. நடந்து முடிந்து புதைக்கப்பட்ட ஊழல்கள் இருக்கின்றன; இன்னும் உயிரோடு மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் ஊழல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமாக தோண்டி எடுக்கப்படுகின்றன. அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஊழல்கள் வரிசையில் நிற்கின்றன. இன்னும் இதர ஊழல்கள் பற்றி ஊடகங்கள் மௌனமாக இருந்து உதவி செய்கின்றன. இன்னும் பல ஊழல்கள் திட்டமிடப்பட்டுக் கொண்டும், செயல்படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதற்கு முன்னர் இருந்த அமைச்சரவைகள் அனைத்தின் சொத்து மதிப்பை ஒன்று சேர்த்தாலும் அதைவிட அதிகமான சொத்து மதிப்பு இருக்கக் கூடிய (500 கோடிக்கும் மேல்) ஒரு அமைச்சரவை இப்போது இருக்கிறது. 1969ம் ஆண்டு வெளிவந்த ஜிம்மி பிரெஸ்லினின் 'தி கேங்க் தெட் குட் நாட் சூட் ஸ்டிரைட்' (குறி பார்த்துச் சுடத் தெரியாத கும்பல்) நாவலில் வரும் கும்பலை நினைவூட்டுகிறது அவர்களது ஆற்றல். அந்த கும்பல் போல் நியூயார்க் நகரில் சில பகுதிகளில் மட்டும் இந்த கும்பல் ஆட்சி நடத்தவில்லை; ஒரு மிகப் பெரும் நாட்டை ஆட்சி செய்கின்றது.
ஊழல் நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பிடித்த கதைகள் இருக்கின்றன. ஆனால் மூன்று மூலகாரணங்கள் இருக்கின்றன; அவற்றை அலட்சியப்படுத்தினால் ஆய்வு பயனற்றதாகிவிடும். முதலாவது: இந்திய சமுதாயத்தின் கட்டமைப்பு ரீதியான அசமத்துவங்கள்; செல்வமும் அதிகாரமும் மிகப் பெரிய அளவில் சிலரிடம் குவிந்து கிடப்பது, வர்க்கம் மற்றும் சாதி, பாலின மற்றும் இதர கெட்டியாகப் பதிந்திருக்கும் பாகுபாடுகள் ஆகியவை அவற்றில் அடக்கம். இரண்டாவது: பொருளாதாரக் கொள்கை மொத்தமும் இந்த அசமத்துவங்களை கடந்த இருபது ஆண்டுகளில் மிக மிக வேகமாக ஆழப்படுத்தியிருக்கின்றது; தீவரமாக்கியிருக்கின்றது; நியாயப்படுத்திவிட்டது. எடுத்துக் காட்டாக, அரசியல் சட்டத்தை இழித்து இது குடிமக்களைவிட பெருங்குழும நிறுவனங்களை முக்கியமானவையாக ஆக்கிவிட்டது. மூன்றாவது: பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எதுவும் இல்லாத, தண்டனையிலிருந்து விலக்கு பெற்ற, எதற்கும் கட்டுப்படாத தன்மை கொண்ட கலாச்சாரம். பெருஞ்செல்வாக்கு உள்ளவர்கள் எதையும் செய்துவிட்டு தப்பிப்பதற்கு இது அனுமதிக்கிறது. இங்கு ஒரு மாநிலத்தின் நீதிபதி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு எதிர்ப்புப் பேரணியில் அவருடைய கார் சிக்கிக் கொண்டதால் வேலை நாட்களில் பேரணிகள் நடத்துவதையே அவர் தடை செய்தார். இங்கு ஒவ்வொரு சாமியாரும் ஒவ்வொரு வரிச் சட்டத்தையும் மீறலாம்; அதிகாரத்திலிருக்கும் ஆட்சியை அவர்கள் எதிர்க்காதவரை.
ஊழலின் மூலவேர்களைப் பற்றி கவனிக்காமல் ஊழலை ஒழிக்கிறோம் என்பது திறந்திருக்கும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும்போது தரையை ஈரமின்றி துடைக்க முயற்சிப்பதாகும். மூலவேர்கள் பழையவை. அவற்றின் (மனிதர்களால் உண்டாக்கப்பட்ட) வாய்ப்பெல்லையும், அளவும், அவை உண்டாக்கும் சேதமும் மிகப் புதியவை.
கடந்த இருபது ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு செல்வம் சிலரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது; பெரும்பாலும் அருவருப்பான வழிமுறைகளில் குவிக்கப்பட்டிருக்கிறது; அதற்கு பொருளாதாரக் கொள்கையே பெரும்பாலும் வழி வகுத்தது. பெரு முதலாளிகளின் செல்வத்தைக் கொழிக்கச் செய்யும் கருவியாக அரசு சுருக்கப்பட்டுவிட்டது. தனியார் முதலீட்டுக்கு உதவுவதற்காகவே அரசு இருக்கிறது. கடந்த ஆறு பட்ஜெட்டுகளில் வருமான வரி, சுங்க வரி, ஆயத்தீர்வை போன்ற நேரடி வரிகள் ஆகியவற்றில் அளித்த சலுகைகள் மூலம் மட்டுமே பெருங்குழும நிறுவனங்களுக்கு 21 லட்சம் கோடி ருபாய்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றது. அதே காலகட்டத்தில் உணவு மானியமும், விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடும் வெட்டப்பட்டிருக்கின்றன.
புதிய தாராளமய பொருளாதார கட்டமைப்பு பொது மக்கள் பணத்தில் கார்ப்பரேட் துறையைப் பேணி வளர்க்கும் பணியை அரசுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதனால்தான் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரு முதலாளிகளின் லாபத்தை மேலும் வீங்கச் செய்வதற்காக அரிய செல்வ வளங்கான நிலம், நீர், அலைக்கற்றை என எதையும் தூக்கிக் கொடுப்பதுதான் அரசின் பணி. இப்படி தேசத்தின் செல்வ வளங்களை தனியார் முகவர்களுக்கு சலுகை விலையில் கூவிக் கூவி விற்பதுதான் நம் காலத்து ஊழலின் மூலவேராகும். ஊழல்கள் அறிகுறிகள்தான்; குடிமக்களுக்கு அல்லாமல், பெருநிறுவனங்களுக்கு சேவை செய்யும் அரசே நோய்.
தேர்தல் செலவுகள் குறித்து சரியாகவே கவலைப்படுகிறவர்கள் மற்றவற்றையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். தேர்தலில் செலவழிப்பதற்காக அதிக பணம் வைத்திருக்கும் வர்க்கம், முறைகேடாகச் சேர்க்கப்பட்ட பணம் வைத்திருக்கும் வர்க்கம் ஒன்று இருக்கிறது. 1947லிருந்து கேள்விப்பட்டிராத அளவு பணம். பல மாநிலங்களில், கோடீஸ்வரர்களாக இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்துப் பார்க்க முடியாது.
இந்த வருடம் மே மாதம் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (மற்றும் கடப்பா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல்) ஆகியவற்றிற்கு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அறிவித்துள்ள சொத்துக்களைப் பாருங்கள். ஜனநாயக சீர்திருத்த்திற்கான அமைப்பின் (ஏடிஆர்) தலைமையிலான 1200க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்புகளைக் கொண்ட சுறுசுறுப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் உதவியால் இது பற்றிய தரவுகள் நம்மிடம் இருக்கின்றன; அவற்றை ஆய்வு செய்தால் வேடிக்கையாக இருக்கிறது.
இந்த 825 எம்எல்ஏக்கள் தாங்களாகவே தெரிவித்தபடி அவர்களுடைய சொத்து மதிப்பு சுமார் 2128 கோடிகள் ரூபாய்கள் என்று ஏடிஆர் தரவு கூறுகின்றது. இவர்களில் 231 பேர் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். 2006க்கும் 2011க்கும் இடைப்படட காலத்தில் அவர்கள் சராசரியாக 169% தங்களது சொத்துக்களை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதாவது, தங்கள் முந்தைய வாழ்நாள் முழுக்க அவர்கள் சேர்த்த செல்வத்தை விட அதிகமான செல்வத்தை முதல் ஐந்தாண்டு பதவி காலத்தில் சேர்த்திருக்கக் கூடும்.
இப்போது 825 நிலமற்ற தொழிலாளர்களின் குடும்பங்களை நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய சொத்துக்களையும் எம்எல்ஏக்களின் சொத்துக்களையும் நம்மால் ஒப்பிட முடியாது; ஏனெனில், நிலமற்ற தொழிலாளர் குடும்பங்களிடம் சொத்து எதுவும் இல்லை; அவர்கள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை பார்த்தால் 825 சட்டமன்ற உறுப்பினர்களின் செல்வத்திற்கு இணையாக பணம் சம்பாதிக்க அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை பார்த்தால் அதிகபட்சமாக அவர்கள் ஈட்டக் கூடிய பணம் தேசிய சராசரியாக ஆண்டுக்கு சுமார் 12,600 ரூபாய்கள் மட்டுமே. அந்த 2128 கோடி எல்லையைத் தொடுவதற்கு இந்த 825 நிலமற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும். அவர்கள் சாப்பிடுவது போன்ற மடத்தனமான பழக்கங்களைக் கைவிட வேண்டும். ஆனால் அதை நாம் பத்தாயிரம் குடும்பங்களாக ஆக்குவோம். இந்த ஜாக்பாட் அடிக்க அவர்களுக்கு கிட்டத்தட்ட 170 வருடங்கள் தேவைப்படும். பத்து லட்சம் குடும்பங்களுக்குக் கூட அந்த இலக்கை நெருங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படும். (இந்த சட்டமன்ற உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வெறும் அறுபது மாதங்களில் தங்களது சொத்துக்களில் பெரும்பகுதியைப் பெற்றார்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்).
ஆம், ஆழமான அசமத்துவங்கள் நிலவுகையில் தொழிலாளர் குடும்பங்கள் 2128 கோடி புள்ளியைத் தொடுவதை விடுங்கள்; அவர்களிடம் எப்போதுமே சொத்து இருக்க முடியாது. அவர்கள் கடனாளிகளாகவே இருப்பார்கள். அந்தக் கடன்களுக்கு அவர்கள் செலுத்தும் வட்டி எம்எல்ஏக்களின் சொத்துக்களுடன் சேரும்; எம்எல்ஏக்களில் சிலர் லேவாதேவிக்காரர்கள். எனினும், அரசால் வளப்படுத்தப்படும் கார்ப்பரேட் உலகின் செல்வத்துடன் ஒப்பிடும்போது அந்த எம்எல்ஏக்களின் செல்வம் அற்பமானதே. கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்த சராசரியாக ஆண்டுக்கு 3.5 லட்சம் கோடியைச் சம்பாதிப்பதற்கு பத்து லட்சம் நிலமற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு சுமார் 275 வருடங்கள் ஆகும்.
அடுத்து தண்டனையிலிருந்து விலக்கு பெற்ற தன்மை. டாக்டர் சிங் தன்னுடைய அமைச்சரவையை மாற்றி செப்படி வித்தைகள் செய்யலாம்; ஆனால், பெரிதாக எதுவும் மாறுமா? கிரிக்கெட்டுக்காக அதிக நேரம் செலவிடும் ஒரு விவசாயத் துறை அமைச்சர்; கிரிக்கெட் எனும் ஒரு தேசிய பெரு விருப்பத்தை ஒரு அருவருக்கத்தக்க வர்த்தகச் சகதியாக மாற்ற உதவியவர். (இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இடர் நிறைந்த இரண்டாவது இன்னிங்சில் மற்றொரு விக்கெட், ஜவுளி அமைச்சரின் விக்கெட், விழுந்து விட்டது). மற்றொருவர், கனரகத் தொழில் அமைச்சர், வட்டித் தொழில் செய்பவர்களுக்கு உதவியதற்காக உச்சநீதி மன்றத்தால் அவமதிக்கப்பட்டார்; பின்னர் தவறாமல் அவர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். பதவியிலிருந்து தூக்கிப் போடப்பட்டாலும், அவர்களுக்குப் பதிலாக பதவிக்கு வருகிறவர்கள் எவ்வளவு இளைஞர்களாக இருந்தபோதிலும், நிலைமையை மாற்றப் போவதில்லை. ஏனெனில் அதற்குக் காரணம் மந்தமான ஆட்சியோ அல்லது மோசமான விதிகளோ மட்டும் அல்ல. தீய கொள்கைகளாகும்.
நம் காலத்தில் ஊழலை எதிர்த்துப் போராட விரும்புகிறீர்களா? அசமத்துவக் கட்டமைப்பையும், புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையையும் மற்றும் பொறுப்பு எதுவும் இல்லாத எதற்கும் கட்டுப்படாத கலாச்சாரத்தையும் அப்புறப்படுத்துவதற்குச் செயல்படுங்கள். நமக்கு லோக்பால் தேவையா? ஆம். அரசாங்கத்திற்கும் மேலே இருக்கும் ஒரு சூப்பர் அரசாங்கமாக இருக்க வேண்டுமா? அரசியல் சட்டத்திற்கும் மேலானதாகவும், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமற்றதாகவும் அது இருக்க வேண்டுமா? நீங்கள் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள். அசமத்துவம், பொருளாதாரக் கொள்கை மற்றும் எதற்கும் கட்டுப்படாத தன்மை ஆகிய மும்மூர்த்திகளை அதனால் அடக்க முயுமா? முடியாது. அது அதை நோக்கி இயங்கும்படி தாயரிக்கப்படவில்லை. அது மக்களும் அவர்களது நிறுவனங்களும் நடத்த வேண்டிய பெரிய போராட்டம். நீங்கள் எந்த முறையில் உங்களது உரிமைகளைப் பாதுகாக்கிறீர்களோ அந்த அளவிற்கு மட்டுமே அவை பாதுகாப்பானவை.
இடம் பெயர்க்கப்படுதல், பலாத்காரமாக நிலம் கையகப்படுத்தப்படுதல், இயற்கை வளங்கள் சக்கையாகப் பிழிந்தெடுக்கப்படுதல், வன மற்றும் நில உரிமைகள் ஆகியவற்றை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை உள்ளூர் போராட்டங்களாக இருக்கலாம்; ஆனால், ஊழலை அவை பெரிய அளவில், ஏன் உலக அளவில், எதிர்க்கின்றன. அவர்கள் அசமத்துவத்தையும், பாரபட்சத்தையும் எதிர்த்துப் போராடுகின்றனர். அவர்கள் எதையும் செய்துவிட்டு தண்டனையின்றி தப்பித்துக் கொள்வதையும், பேராசையையும், லாபத்தையும் எதிர்க்கின்றனர். அவர்கள் தங்களது தலைவர்களை பதில் சொல்லக் கடமைப்பட்ட நிலையில் வைக்க முயற்சிக்கின்றனர். ஐரோம் ஷர்மிளா போல் சிலர் நியாயமற்ற சட்டங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். மற்ற சிலர் சட்டங்களை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் (சில வன உரிமைப் போராட்டங்கள் போல) எனப் போராடுகின்றனர். என்றபோதிலும், அவர்களில் எவரும் தேசத்தைவிடப் பெரியவர்களாக தங்களைக் கருதிக் கொள்வதில்லை. அல்லது தாங்கள் வகுக்கும் சட்டங்களுக்கு மற்றவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவிக்கவில்லை. அல்லது தாங்கள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல அடித்துக் கூறவில்லை. என்றபோதிலும், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், நம் உரிமைகளுக்காவும் போராடுகின்றனர்; ஒடுக்குமுறை கட்டமைப்புகளை கூடுதல் கடமைப் பொறுப்பு உள்ளவையாக ஆக்குவதற்கு உதவுகின்றனர்.
இது பற்றி மறதி எதுவுமில்லை. உரமிழந்த ஒரு ஊழல் அரசாங்கத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இது நன்றாகத் தெரியும். 36 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் அரசியல் சட்டத்தின் அனைத்து அமைப்புகளுக்கும் மேலானவராக தன்னை வைத்துக் கொண்டார். ஒரு ஒற்றை மனிதரைக் கொண்ட சூப்பர் அரசாங்கம். நம்மைப் போன்றவர்களும், மத்தியதர வர்க்கத்தினரும், சில அறிவாளிகளும் கூட அந்த மனிதரையும் அவரது சகாப்தத்தையும் ஆரவாரமாக வரவேற்றார்கள் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவரது பெயர் சஞ்சய் காந்தி. அந்த காலகட்டத்தின் பெயர் அவசரநிலை. மற்றவை வரலாறு.
----------------------------------நன்றி: தி ஹிந்து 8.7.11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment