அசோகன் முத்துசாமி
கடவுள் மகத்தானவர் என்று டிவிட்டரில் எழுதினார் நரேந்திர மோடி. சங்பரிவாரிகளுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதே சந்தேகத்திற்குரியது. கடவுள்களையும், நம்பிக்கைகளையும் பயன்படுத்திக் கொள்வதாலேயே அவர்கள் பக்திமான்கள் ஆகிவிடமாட்டார்கள். சாவர்க்கர் தான் இறந்த பின்னர் மின்மயானத்தில்தான் எரிக்கப்பட வேண்டும் என்றும், பிண்டம் வைப்பது போன்ற சடங்குகள் செய்யக் கூடாது என்றும், எரியூட்டும்போது வேதமந்திரங்கள் ஓதினால் போதும் என்று உயில் எழுதிவைத்தவர். போகட்டும். நம் விஷயத்திற்கு வருவோம்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதப் படுகொலைகளில் குல்பர்க் சொசைட்டி படுகொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் நரேந்திர மோடியையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி 2006ம் ஆண்டு புகார் கொடுத்தார். காவிச் சீருடை அணிந்திருந்த குஜராத் காவல்துறை அதை ஏற்கவில்லை. கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுத்து அது உச்சநீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, அந்தக் குழுவின் அறிக்கையை நடுநிலையுடன் பரிசீலிக்க நடுநிலையாளரை நியமிப்பது எனப் பல நடவடிக்கைகள் எடுத்து விசாரணையையும் நடத்திய பிறகு மோடியின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டுமா கூடாதா என்பது பற்றி கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்குத்தான் மோடி கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
தன்னை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டதாக மோடி இதை வியாக்கியானம் செய்கிறார். உண்மையில் நீதிமன்றம் யாரையும் குற்றவாளி என்றோ அல்லது குற்றமற்றவர் என்றோ கூறவில்லை. ஜாக்கியா ஜாப்ரியின் புகார் மனுரவ வழக்காக ஏற்று விசாரணை நடத்துமாறுதான் கூறியிருக்கிறது. அந்த விசாரணியில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அது பற்றிய நடுநிலையாளரின் மதிப்பீடு ஆகியவற்றின் பின்னணியில் விசாhக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால், நீதிமன்றம் தன்னை நிரபராதி என்று கூறிவிட்டது என்று கத்தி கூச்சல் போட்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். உண்ணாவிரதம் எதற்கென்று கேட்டால்நீங்கள் மூர்ச்சையாகி விழுந்தாலும் ஆச்சரியமில்லை. மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்காகவாம். குஜராத்தில் அவர் எதைக் கொன்று தின்றாரோ அதைப் பாதுகாக்கப் போகிறாராம். நிற்க.
சங்பரிவாரிகள் எதைச் செய்தாலும் அதற்கு மிக ஆழமான காரணங்கள் இருக்கும். அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தல், மோடியின் பிரதமர் கனவு என்கிற பல காரணங்கள் ஒரு பக்கம் இருக்க இதற்கு இன்னுமிரண்டு பரிமாணங்களும் இருக்கின்றன. முதலாவதாக, வழக்கு குஜராத்திலேதானே நடக்கப் போகிறது, நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று மோடி எண்ணியிருக்கலாம். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இந்த உத்தரவை அவர் வரவேற்கலாம். மற்றொன்று, வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட் மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வேலை இது.
நீதிமன்றத்தை மிரட்டுவதற்காகவும் மோடி இப்படிச் செய்தார் என்று கருதுவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. விவரங்கள் பின்வருமாறு:
ஊழலைப் பற்றி வாய் கிழியப் பேசும் சங்பரிவாரத்தின் லட்சணம் இப்போது ஊரறிந்த ரகசியம். அதை உணர்ந்தவர்கள் எல்லாம் இப்போதே சொம்பைத் துhக்கி உள்ளே வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலைத் தடுக்க என்று லோகாயுக்தா என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கொரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். குஜராத்தில் ஊழலே இல்லை என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட மோடியின் ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோகாயுக்தாவிற்கு இன்னும் பொறுப்பாளர் நியமிக்கப்படவேயில்லை. அதற்குக் காரணம் மாநில ஆளுநரோ அல்லது மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ அல்ல. சாட்சாத் மோடிதான்.
லோகாயுக்தாவாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவர்தான் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான பெயரை பதவியிலிருக்கும்உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அதை முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பரிசீலித்து அந்தப் பெயரை ஆளுநருக்கு பரிந்துரைப்பார்கள். ஆளுநர் நியமிப்பார். இதுதான் நடைமுறை.
குஜராத்திற்கு லோகாயுக்தா நியமிக்கப்பட வேண்டும் என்கிற வேலை கடந்த டிசம்பர் மாதத்தில் வேகம் பிடித்தது. அம்மாதம் 31ம் தேதி தலைமை நீதிபதி எஸ்.டி.தாவே என்கிற ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். ஆனால் மோடி அதை ஏற்கவில்லை. அவர் ஏற்கனவே வோரா என்கிற நீதிபதியை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். இந்த வோரா யார் தெரியுமா? 2002ல் 14 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட பெ°ட் பேக்கரி வழக்கின் குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் என்று விடுவித்து தீர்ப்பு வழங்கியவர். மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்து, பின்னர் மோடியின் ஆட்களாலேயே ஹரேன் பாண்ட்யா என்பவர் கொல்லப்பட்டார். அவர் கொஞ்சம் உண்மை பேச ஆரம்பித்ததால் அவருக்கு இந்த தண்டனை. அந்த வழக்கிலும் கீழ் கோர்ட்டில் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. ஹரேனின் தந்தை விட்டல் பாண்ட்யா மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பு வழங்கியவரும் இந்த வோராதான். இவர் ஏன் மோடியின் ஆளாக இருக்கிறார் என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை.
அதுவும், மோடி அரசாங்கத்தின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்ற நிலைமையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எப், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்றதன் மூலம் மட்டும் சமார் 5197 கோடி ரூபாய் குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மட்டும் சுமார் 33000 கோடி அளவிற்குச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த திட்டத்தின் மொத்த செலவே 2200 கோடிதான். ஆனால், அதற்கு 9570 கோடி கடன் கொடுத்திருக்கிறது மோடி அரசாங்கம். வட்டி எவ்வளவு தெரியுமா? 0.10 சதவீதம். அந்தக் கடனையும் 20 வருடம் கழித்து அடைத்தால்போதும். இவை இரண்டு உதாரணங்கள் மட்டுமே. இது போல் பல முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சலுகை வழங்கப்பட்டு அதற்கு கைம்மாறும் பெறப்பட்டிருக்கின்றது. இது குறித்த புகார் மனு ஒன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கின்றது. நியாய உணர்வுள்ள எவரேனும் லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டுவிட்டால் தனக்கும் எடியூரப்பா கதிதான் என்று மோடி அஞ்சுவதில் அர்த்தம் இருக்கிறது.
தாவேவின் யெரை ஏற்காத மோடி தலைமை நீதிபதிக்குதன்னுடைய ஆள் வோராவை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகின்றார். நீதிபதிக்கோ ஆச்சரியம். தாவேவின் பெயரை ஏன் நிராகரிக்கிறீச்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் வோரா ஏற்கனவே குஜராத் மாநில ஜீடிசியல் அகாடமிக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் அவரை லோகாயுக்தாவாக நியமிப்பது சாத்தியமில்லை என மோடிக்கு பதில் எழுதுகின்றார். ஆனால், இதற்குப் பின்னர் மர்மமான முறையில் ஒரு சம்பவம் நிகழ்கின்றது. தான் யோகாயுக்தா பதவியை ஏற்க விரும்பவில்லை என்றும், பரிசீலனையில் உள்ள பெயர்களின் பட்டியலில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கிவிடுமாறும் தாவே ஒரு பேக்ஸ் அனுப்பிவிடுகிறார். ஒரு வேளை இது மோடி நன்றி சொன்ன கடவுளின் கைங்கரியமாக இருக்கும்.
அதற்குப் பின்னர் மீண்டும் புதிதாக லோகாயுக்தாவை நியமிக்கும் நடைமுறை துவக்கப்படுகின்றது. ஆளுநர் புதிய பெயரைக் கொடுக்குமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொள்கிறார். இம்முறை ஆர்.ஏ.மேத்தா என்கிற நீதிபதியின் பெயரை தலைமை நீதிபதி பரிந்துரைக்கின்றார். இவரையும் நிராகரிக்கும் மோடி அவர் மீது குற்றம் குறைகளைக் கூறுகிறார். இந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்கிறார். மீண்டும் தன்னுடைய ஆள் வோராவை நியமிக்குமாறு கடிதம் எழுதுகிறார். அதாவது ஒன்று வோராவை நியமிக்க வேண்டும். அல்லது லோகாயுக்தாவே தேவை இல்லை என்பது அவரது நிலை. இத்தனைக்கும் மேத்தா மிகவும் நேர்மையானவர் என்றும், அவர் மத்திய அல்லது மாநில அரசுப் பதவி எதற்கும் ஆசைப்பட்டவர் இல்லை என்றும், அவரைப் பற்றி நன்கு விசாரித்து அறிந்து கொள்வதற்காக 45 நாட்களைச் செலவிட்டதாகவும் தலைமை நீதிபதி முகோபாத்யாயா மோடிக்குப் பதில் எழுதுகிறார். மேத்தா பெயரை மீணடும் வலியுறுத்திய தலைமை நீதிபதி ஆளுநருக்கும் அது தொடர்பாகக் கடிதம் எழுதுகிறார். மேத்தாவை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் மாநில ஆளுநர் தன்னுடைய தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி மேத்தாவை நியமிக்கிறார். இதற்குத்தான் பாஜக நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டது. மாநில உரிமைகளில் மத்திய அரசாங்கம் தலையிடுகின்றது என்றெல்லாம் கூப்பாடு போட்டது. ஆளுநர் மாநில அரசாங்கத்தின் கருத்தைக் கேட்காமலேயே நியமனம் செய்துவிட்டார் என்று புலம்பியது.
ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து மோடி அரசாங்கம் நீதிமன்றம் சென்றுள்ளது. அந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னர் செப்25ம் தேதி காந்திநகரில் ஒரு பெரும் பேரணியை நடத்தவிருக்கிறார். ஐந்து லட்சம் பேரைத் திரட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் விசாரத்துக் கொண்டிருக்கும்போது இப்படி எல்லாம் பேரணிகள் நடத்துவது நீதிமன்றத்தை மிரட்டுகின்ற செயலாகும். தீர்ப்பு எங்களுக்குச் சாதமகமாக வரவில்லை என்றால் என்ன செய்வோம் தெரியுமா, பார்த்துக் கொள்ளுங்கள் எங்கள் பலத்தை என்பதாகும்.
தகவல் ஆதாரங்கள்: அவுட்லுக், கம்யூனலிசம் காம்பேட், ரெடிப்.காம், தி ஹிந்து.
(22.9.11 அன்று எழுதப்பட்டு 30.9.11 தீக்கதிர் நாளிதழில் வெளியானது.)
No comments:
Post a Comment