Thursday, October 13, 2011

ஊழல் யாத்திரை



அசோகன் முத்துசாமி


மோடியின் ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். டாடாக்களும் அம்பானிகளும் வேறு தனியாக சான்றளிக்கிறார்கள், மோடி நல்லவர் வல்லவர் என்று. கோட்சேயின் வாரிசுகளைப் புகழ்ந்தே பழக்கப்பட்ட நவீன காந்தியவாதி அன்னா ஹசாரேவும் ஆமாம் சாமி என்கிறார்.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பது முதலாளித்துவமும் அதன் லாப வெறியும்தான். ஆனால், அந்த முதலாளிகள் ஒருவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்றால் நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. எங்கேயோ இடிக்கிறதே என்கிற சந்தேகம் எழுகின்றது.  ஒரு வேளை இவர் மற்றவர்களைவிடக் குறைவாக வாங்குகிறாரோ? அந்த மகிழ்ச்சியில் அமெரிக்காவும் முதலாளிகளும்  மோடியைக் கொஞ்சி மகிழ்கிறார்களோ? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு (எவ்வளவு என்று பின்னால் பார்க்கப் போகிறோம்) அள்ளிக் கொடுக்கிறவர் மத்தியில் அதிகாரத்திற்கு வந்தால் எவ்வளவு அள்ளிக் கொடுப்பார் என்பதால்தான் அம்பானிகள் அவர் பிரதமராக வேண்டும் என்கிறார்களோ?
வாருங்கள்  என்னதான் விஷயம் என்று பார்த்துவிடுவோம்.
குஜராத் மாநில காங்கிர° கட்சியின் சார்பில் குடியரசுத் லைவரிடம் மோடி செய்துள்ள ஊழல்கள் பற்றி விரிவாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்பது வேறு விஷயம். முதலாளித்துவக் கட்சிகள் தங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் எதிரிகளைப் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவது வழக்கம்தானே?
இனி பட்டியல்:
1. மாநிலத் தலைநகர் காந்தி நகரில் மட்டும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் 5197 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. மாநிலத் தலைநகரம் தனியே உருவாக்கப்பட்ட ஒரு நகரம். இப்படி தலிநைகரை உருவாக்கும் திட்டத்திற்கு என்று கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு அலுவலகங்கள், சட்டமன்றம், தலைமைச் செயலகம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும், அரசு ஊழியர்கள், முன்னுரிமைச் சமூகப் பிரிவினர் ஆகியோருக்கு விடுகள் கட்டிக் கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எதிர்காலக் கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் என்பதால் அந்த நிலத்தை எந்த தனியாருக்கும் விற்கக் கூடாது. அப்படி விற்க வேண்டிய விசேட நிலை ஏற்படுகின்ற போது அவற்றை பகிரங்க ஏலம் மூலமே விற்க வேண்டும். ஆனால், ஏல முறை பின்பற்றப்படாமல் (2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போல்) அற்ப விலைக்கு டிஎல்எப் என்கிற கட்டுமான நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீச°, சத்யம் கம்ப்யூட்டர்°, ரகேஜா காhப்பரேஷன் மற்றும் பூரி பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு துhக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மொத்த 17,67,442 சதுர கிமீ நிலத்தை வெறும் 105 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்திற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட விலையின் படி அதன் மதிப்பு 3358 கோடி. சந்தை விலையின்படி அதன் மதிப்பு 5323 கோடி. விற்றதோ வெறும் 105 கோடி. ஆக இழப்பு 5197 கோடி.
2.  டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர மீட்டர் 900ரூபாய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. சந்தை விலையோ ரூ10,000 என்கிறார்கள். டாடா நிறுவனம் இந்த நிலத்திற்காகக் கொடுக்க வேண்டியது (ரூ900 என்கிற கணக்கில்) ரூ400 கோடி. அதையும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ50 கோடி என்று தவணை முறையில் கொடுத்தால் போதும். இந்த நிலமும் கால்நடை பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும். முறையான, வெளிப்படையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார்கள்.
இந்த நில பரிமாற்றத்திற்கு டாடா நிறுவனம் செலுத்த வேண்டிய °டாம்ப் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பே வெறும் 2200 கோடிதான். மேற்கு வங்கத்திலிருந்து இந்த திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிய செலவு 700 கோடி. இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 2900 கோடி. பொதுவாக கடன் கொடுக்கும்போது இந்த 700 கோடி செலவை நிதிநிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆக அதைக் கழித்துவிட்டால் 2200 கோடிதான் அதன் மதிப்பு. ஆனால், மோடி அரசாங்கத்தால் அதற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? 9570 கோடி. கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று சொன்னால் தொழிற்சாலையைக் கையகப்படுத்தி, அது அதே 2200 கோடிக்கு விற்றாலும் கூட அரசாங்கத்துக்கு 7370 கோடி நட்டம்.  அதாவது, மக்கள் பணம்.
இந்தக் கடனையும் இருபது வருடங்கள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். அது வரைக்கும் வட்டி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.10 சதவீதம்தான். இது போதாதென்று தயாரிக்கப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு நானோ காருக்கும் ரூ60,000 மானியமாக வழங்கப்படுகிறது. இது இந்தத் தொழிற்சாலை இயங்கும் வரை தொடரக் கூடியது. குஜராத் மாநில மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் துhக்கிக் கொடுக்கிறார் பாருங்கள், மோடி?
இந்த ஆலை அமைக்கப்பட்டிருக்கும் இடம் நீர்ப்பற்றாக்குறை இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடம். ஆதலால், எந்த விவசாயிக்கும் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை. விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பும் கொடுக்கப்படுவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவார்களாம். அடப்பாவிகளா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நீங்கள் எப்படி உருப்படுவீர்கள் என்று பார்ப்போம்.
ஆனால், டாடா நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1400 கியூபிக் மீட்டர் நீர் வழங்கப்படுகின்றது. அதாவது, 14 லட்சம் லிட்டர் தண்ணீர். அவசரத் தேவைக்கு நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.
நானோ கார் தொழிற்சாலைக்கு மோடி காட்டியிருக்கும் மொத்த சலுகை சுமார் 33000 கோடி. இந்தத் திட்டத்தை பேசி முடித்தது வெவ்வேறு வகையான கொள்ளையர்களுக்கு இடையில் தரகு பேசும் நீரா ராடியா.
3. முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்காக அதானி குழுமத்திற்கு 2003, 2004ம் ஆண்டுகளில் 3,86,83,079 சதுர மீட்டர் நிலத்தை பாஜக அரசாங்கம் வழங்கியிருக்கிறது. முதலில் ஒரு ச.மீ. 1 ரூபாய்க்கும் கடைசியாக 32 ரூபாய்க்கும் விற்றிருக்கிறது. உண்மையில் விலை கொஞ்சம் அதிகம்தான். மொத்தம் 46 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்புள்ள அதானி குழுமம் அநேகமாக கடன் வாங்கித்தான் இந்தத் தொகையைக் கட்டியிருக்கும்.  பாவம், மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா?
இதைவிடப் பெரிய அநியாயம் என்னவென்றால், இதே பகுதியில் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ச.மீ. 800லிருந்து 10000 வரை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். விற்கவில்லை என்பதைக் கவனிக்கவும். லாபம் தனியாருக்கு, நட்டம் பொது மக்களுக்கு என்பது தனியார்மயம். இதுதான் இந்துத்துவத்தின் கொள்கையும்.
இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 10000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்பது ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனம். நல்ல லாபத்தில் இயங்கக் கூடியது. மாநிலத்தில் எங்கே எண்ணை, எரிவாயு இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யும் வேலை அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அது பல கோடிக்கணக்கான லிட்டர்கள் எண்ணை,எரிவாயுவை உற்பத்தி செய்யும் என்று கூறப்பட்டது. குஜராத் பெட்ரோலிய மையமாக ஆகும் என்கிறார்கள். பல்வேறு இடங்களிலிருந்து கடன் பெற்று 4933 கோடி ரூபாய் முதலீடு செய்தது அந்த நிறுவனம். 51 இடங்களில் எண்ணை தேடும் உரிமம் பேற்ற அந்நிறுவனம் வெறும் 13 இடங்களில் மட்டும் எண்ணை இருப்பதைக் கண்டுபிடித்தது. 2009, மார்ச் 31 வரை அது வெறும் 297 கோடி பெறுமானமுள்ள எண்ணையையும், எரிவாயுவையும் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. முதலீடோ 4933 கோடி.
இதற்கிடையே ஜியோ குளோபல் என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் இந்த அரசுத் துறை நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. எதற்காக, ஏன் இந்த ஒப்பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இது விரிவான விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒன்று எண்ணை கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அங்கு நிச்சயமாக எண்ணை இருப்பு இருக்க வேண்டும்.
இப்போது அந்நிறுவனம் வேண்டுமென்றே எந்த உற்பத்தியிலும் ஈடுபடவில்லை. அப்படி எனில் என்ன ஆகும்? காலப் போக்கில் அது நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, எண்ணை வளத்தோடு சேர்த்து அடிமாட்டு விலைக்கு யாராவது தனியாருக்கு விற்கப்படக் கூடும்.
மேலும், கிருஷ்ணா கோதாவரி படுகை ஊழலைப் போலவே இதிலும் நடக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஜியோ குளோபல் நிறுவனம் தேவையான இயந்திரங்களை அளிக்கும் என்றும், அதற்கான வாடகையை மட்டுமின்றி உற்பத்தியில் ஒரு பங்கும் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது. வெறும் இயந்திரச் சேவை மட்டும் வழங்குவதாக இருந்தால் வாடகைக் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும். லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இதுதான் வர்த்தக முறை. லாபத்தில் பங்கு வேண்டும் எனில், அந்த நிறுவனமும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை.
இந்தப் பட்டியல் மிகவும் பெரியது. பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவிற்குத் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு கட்ச் மாவட்டத்தில்  மிகக் குறைந்த விலைக்கு நிலம் அளித்தது, விவசாயப் பல்கலைக்கழக நிலத்தை 7 நட்சத்திர விடுதி கட்டுவதற்கு சாத்ராலா ஹோட்டல் நிறுவனத்திற்கு அற்ப விலைக்கு விற்றது, எ°ஸார் நிறுவனத்திற்கு வன நிலத்தை வழங்கியது,  அகமதாபாத்துக்கு அருகில் ச.மீ. ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்தை வெறும் 4424 ரூபாய் விலைக்கு பாரத் ஹோட்டல்° என்கிற நிறுவனத்திற்கு விற்றது என மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் உள்ளன.
அரசுக்குச் சொந்தமான விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ மோடி பயன்படுத்துவதே இல்லை. உள்நாட்டுப் பயணமாகட்டும், வெளிநாட்டுப் பயணமாகட்டும் பெரு முதலாளிகள் கொடுக்கும் மிக ஆடம்பரமான தனியார் விமானங்களில்தான் பயணிக்கிறார். மோடி ஏன் தான் விரும்புகிற நபரே ஊழல் தடுப்பு அதிகாரியாக (லோகாயுக்தா) நியமிக்கப்பட வேண்டும் என்கிறார் என்பது இப்போது புரிந்திருக்கும்.
இந்த லட்சணத்தில் அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை போகிறார். அதை அவர் பீகாரில் இருந்து துவக்கியிருக்கிறார். கர்நாடகாவிலிருந்தோ, குஜராத்திலிருந்தோ துவங்கியிருந்தால் அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்க்கிறார் என்று நம்பலாம்.
------------------------------------------------13.10.11      

Tuesday, October 4, 2011

நீதி சிறையில், அநீதி வெளியில்




அசோகன் முத்துசாமி


நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அவர் மீது 2002ம் ஆண்டு கலவரக் கறை படிந்திருக்கிறதே என்று ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சியின் நிருபர் சோ ராமசாமியிடம் கேட்கிறார். எந்த நீதிமன்றமாவது அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறதா என்று சோ பதில் கேள்வி கேட்கிறார்.
உண்மைதான். இன்னும் எந்த நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லைதான். அப்படியொரு தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு மோடி விடுவாரா என்பதுதான் இப்போது பிரச்சனையே.
மதப் படுகொலைப் புகார்களில் பல எடுத்துக் கொள்ளப்படவேயில்லை என்பதும், அதை மீறி காவல்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகார்களில் பலவற்றுக்கு முதல் தகவல் அறிக்கையே எழுதப்படவில்லை என்பதும், அப்படி எழுதப்பட்ட வழக்குகளில் பலவற்றுக்குக் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். அதையும் மீறி வழக்கு விசாரணை என்கிற கட்டத்தை அடைந்த பிரபலமான பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்பட சில வழக்குகளில் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடித்தார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.
ஆனால், இவை எதுவும் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டும் வழக்குகள் அல்ல. மோடியால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரம்தான் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது. அதன் ஒரு முக்கியமான பகுதி பின்வருமாறு:
“...கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களை அகமதாபாத்திற்கு எடுத்து வருவது என்கிற முடிவும், விஎச்பி பந்தை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருப்பதும் அகமதாபாத்திலும் மாநிலம் முழுவதிலும் மத வன்முறைகள் வெடிப்பதற்கு நிச்சயம் இட்டுச் செல்லும் என்று அந்தக் கூட்டத்தின் முடிவில் அவருக்கு (மோடி) புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது.  அத்தகைய ஒரு நிலைமையைச் சமாளிக்கத் தேவையான ஆட்கள் குஜராத் காவல்துறையிடம் இல்லை என்பதையும் அவருக்குப் புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு நான் அளித்த சாட்சியத்தின் அது தொடர்பான பகுதி பின்வருமாறு கூறுகிறது:
“பந்திற்கான அறைகூவல் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், கோத்ராவில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்பதால் பந்தை ஆதரிப்பது என்று கட்சி முடிவு செய்து விட்டது என்றும் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார். மேலும், குஜராத்தில் மதக் கலவரங்களைச் சமாளிக்கும் விஷயத்தில் மாநிலக் காவல்துறை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமமாக இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகின்றது என்றும், இப்போது இது போன்ற சம்பவங்கள் இனி எப்போதும் நடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் வலியுறுத்திப் பேசினார். இந்துக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிப்பது தவிர்க்க முடியாதது’’ (ஐபிஎன் லைவ் தொலைக் காட்சி இணையதளம்).
பிணங்களைக் கொண்டு வந்து ‘இந்துக்களின்’ கோபத்தை அதிகரிப்பது, பந்த் நடத்தி கலவரம் செய்வதற்குத் தோதான சூழலை உருவாக்குவது, காவல்துறையினர் தலையிட்டு காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவது என்று எல்லாவும் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.
காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்பது இப்போது வரலாறு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் குல்பர்க் சொசைட்டி கொலைகள். முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி பல முறை அபயக் குரல் எழுப்பியும் காவல்துறை காது கோளாத துறையாக இருந்தது. இந்துத்துவ வெறியர்களால் 69 பேர் கொல்லப்பட்டார்கள்.
மோடி இட்ட வாய்மொழி உத்தரவிற்கு ஆதாரம் சஞ்சீவ் பட்டின் பிரமாணப் பத்திரம்தான். அந்த பத்திரத்தையும் பட் அவர்கள் ஜாப்ரியின் மனைவி தொடுத்திருக்கும் வழக்கிற்கொரு ஆதாரமாகவும்தான் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதில் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறை துணை அதிகாரியாகவும், பட்டின் வாகன ஓட்டுநராக இருந்தவருமான கே.டி.பந்தும் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தார். பட் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறையின் துணை ஆணையராக பதவி வகித்தவர்.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பட் மேலும் பல முக்கியமான விவரங்களைக் கொடுத்துள்ளார். 2002 பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி எரிக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற உண்மைச் சம்பவங்கள் -பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் கோத்ராவில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு நாட்களில் கோத்ரா நகரின் அனைத்து தொலை பேசிகளின் அழைப்பு விவரங்களும் உளவுத் துறை அதிகாரி என்கிற வகையில் அவரிடம் இருந்தன. அதற்குப் பின்னர் மோடி நடத்திய கூட்டம், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகள் ஆகியவை தொடர்பான ஆதாரங்களும் அவரிடம் இருந்தன. காவல்துறை உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளின் தொலை பேசி அழைப்புகள், அவர்கள் செய்த தவறுகள் மற்றும் அவர்கள் செய்யத் தவறியவை குறித்த விவரங்களும் அவற்றில் அடங்கும். அவற்றைஎல்லாம் அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
பிரச்சனை என்னவென்றால் எஸ்ஐடி அதன் அடிப்படையில் மேற்கொண்டு தொடர வேண்டிய விசாரணையை பாரபட்சமின்றி நடத்தவில்லை. அது மட்டுமின்றி, மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த தகவல்களை ‘சம்பந்தப்பட்டவர்களுக்குத்’ தெரிவித்தும் விட்டது. (போதாக்குறைக்கு அது பத்திரிக்கைகளுக்கும் கசிந்துவிட்டது. இவ்வருடம் பிப்ரவரி மாத டெகல்கா இதழ்களில் இந்த விவரங்கள் வெளி வந்துவிட்டன என்பதையும் பட் இந்த பத்திரத்தில் தெரிவித்துள்ளார்).
விளைவு? மோடி அரசின் உயரதிகாரிகள் பட்டை மிரட்டத் துவங்கினர். பல வகையான தொல்லைகள் கொடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பையும் குறைத்து, கிட்டத்தட்ட பாதுகாப்பே இல்லாமல் செய்து அச்சுறுத்தினர். ஒன்றும் பலிக்கவில்லை என்றவுடன் கே.டி.பந்த்தை எஸ்ஐடியே மிரட்டியுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் 5ம் தேதி எஸ்ஐடியால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பந்த் கிட்டத்தட்ட குற்றவாளி போல் நடத்தப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்து விடுவோம், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளார்கள். மற்ற சாட்சிகளும் இது போல் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் பட். நிற்க.
இப்போது இந்த பந்த் என்பவர்தான் பல்டி அடித்துவிட்டார். மிரட்டினால் அவரும்தான் என்ன செய்வார்? பட் என்னை மிரட்டி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் என்று குற்றம் சாட்டியிருக்கின்றார். அதன் பேரில் பட் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு இதுவரை இரண்டு முறை சோதனையிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டின் நேர்மைக்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். தற்போது அவர் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். அதற்கு முன்னதாக நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மோடி அரசாங்கம் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு செய்திருந்தது. ஜாமீன் கேட்ட பட்டிற்கு செப்டம்பர் 4ம் தேதி நீதிமன்றம் ஒரு ஆலோசனை சொன்னது. காவல்துறையின் காவலில் மூன்று மணி நேரம் இருந்து வருவதற்குச் சம்மதித்தால், அந்த நேரத்தில் அவர் தன்னுடைய வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்று காவலர்களுக்குக் காட்டினால் (பட் தன்னுடைய லாக்கர்களில் குஜராத் மதப் படுகொலைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கலாம் என்று மோடியின் காவல்துறை ‘பயப்படுகிறது’) உடனடியாக ஜாமீன் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் பட் அதை மறுத்துவிட்டார். இந்த குண்டர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், அரசாங்கம் தனக்கு என்ன தீங்கு செய்தாலும் அதைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் இருப்பேன், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்  என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். .
பட்டின் கைது மதப் படுகொலை வழக்குகளின் சாட்சிகளுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக அறிக்கை விட்டுள்ளன. அதிலும், இஷான் ஜாப்ரின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடுத்திருக்கும் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் பட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உண்ணாவிரதம், பேரணி, இப்போது கைது என்று மோடி தொடர்ந்து நீதிமன்றங்களையும், சாட்சிகளையும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். சோ சொன்னது போல் ஒரு வேளை மோடி எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல் போகலாம். ஆனால், சங் பரிவாரிகள் தங்கள் வழக்கம் போல் ‘முஸ்லிம்களுக்கு எப்படிப் பாடம் புகட்டினோம் பாருங்கள்’ என்று நீதிமன்றத்திற்கு வெளியே சில இடங்களில் ரகசியமாகவும், சில இடங்களில் பகிரங்கமாகவும் பெருமை பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.

-----------------------------------------------5.10.11
   

Sunday, September 25, 2011

மோடி பாணி மிரட்டல்



அசோகன் முத்துசாமி

கடவுள் மகத்தானவர் என்று டிவிட்டரில் எழுதினார் நரேந்திர மோடி. சங்பரிவாரிகளுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதே சந்தேகத்திற்குரியது. கடவுள்களையும், நம்பிக்கைகளையும் பயன்படுத்திக் கொள்வதாலேயே அவர்கள் பக்திமான்கள் ஆகிவிடமாட்டார்கள். சாவர்க்கர் தான் இறந்த பின்னர் மின்மயானத்தில்தான் எரிக்கப்பட வேண்டும் என்றும், பிண்டம் வைப்பது போன்ற சடங்குகள் செய்யக் கூடாது என்றும், எரியூட்டும்போது வேதமந்திரங்கள் ஓதினால் போதும் என்று உயில் எழுதிவைத்தவர். போகட்டும். நம் விஷயத்திற்கு வருவோம்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதப் படுகொலைகளில் குல்பர்க் சொசைட்டி படுகொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் நரேந்திர மோடியையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி 2006ம் ஆண்டு புகார் கொடுத்தார். காவிச் சீருடை அணிந்திருந்த குஜராத் காவல்துறை அதை ஏற்கவில்லை. கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுத்து அது உச்சநீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, அந்தக் குழுவின் அறிக்கையை நடுநிலையுடன் பரிசீலிக்க நடுநிலையாளரை நியமிப்பது எனப் பல நடவடிக்கைகள் எடுத்து விசாரணையையும் நடத்திய பிறகு மோடியின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டுமா கூடாதா என்பது பற்றி கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்குத்தான் மோடி கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
தன்னை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டதாக மோடி இதை வியாக்கியானம் செய்கிறார். உண்மையில்  நீதிமன்றம் யாரையும் குற்றவாளி என்றோ அல்லது குற்றமற்றவர் என்றோ கூறவில்லை. ஜாக்கியா ஜாப்ரியின் புகார் மனுரவ வழக்காக ஏற்று விசாரணை நடத்துமாறுதான் கூறியிருக்கிறது. அந்த விசாரணியில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அது பற்றிய நடுநிலையாளரின் மதிப்பீடு ஆகியவற்றின் பின்னணியில் விசாhக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால், நீதிமன்றம் தன்னை நிரபராதி என்று கூறிவிட்டது என்று கத்தி கூச்சல் போட்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். உண்ணாவிரதம் எதற்கென்று கேட்டால்நீங்கள் மூர்ச்சையாகி விழுந்தாலும் ஆச்சரியமில்லை.  மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்காகவாம். குஜராத்தில் அவர் எதைக் கொன்று தின்றாரோ அதைப் பாதுகாக்கப் போகிறாராம். நிற்க.
சங்பரிவாரிகள் எதைச் செய்தாலும் அதற்கு மிக ஆழமான காரணங்கள் இருக்கும். அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தல், மோடியின் பிரதமர் கனவு என்கிற பல காரணங்கள் ஒரு பக்கம் இருக்க இதற்கு இன்னுமிரண்டு பரிமாணங்களும் இருக்கின்றன. முதலாவதாக, வழக்கு குஜராத்திலேதானே நடக்கப் போகிறது, நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று மோடி எண்ணியிருக்கலாம். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இந்த உத்தரவை அவர் வரவேற்கலாம். மற்றொன்று, வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட் மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வேலை இது.
நீதிமன்றத்தை மிரட்டுவதற்காகவும் மோடி இப்படிச் செய்தார் என்று கருதுவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. விவரங்கள் பின்வருமாறு:
ஊழலைப் பற்றி வாய் கிழியப் பேசும் சங்பரிவாரத்தின் லட்சணம் இப்போது ஊரறிந்த ரகசியம். அதை உணர்ந்தவர்கள் எல்லாம் இப்போதே சொம்பைத் துhக்கி உள்ளே வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலைத் தடுக்க என்று லோகாயுக்தா என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கொரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். குஜராத்தில் ஊழலே இல்லை என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட மோடியின் ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோகாயுக்தாவிற்கு இன்னும் பொறுப்பாளர் நியமிக்கப்படவேயில்லை. அதற்குக் காரணம் மாநில ஆளுநரோ அல்லது மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ அல்ல. சாட்சாத் மோடிதான்.
லோகாயுக்தாவாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவர்தான் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான பெயரை பதவியிலிருக்கும்உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அதை முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பரிசீலித்து அந்தப் பெயரை ஆளுநருக்கு பரிந்துரைப்பார்கள். ஆளுநர் நியமிப்பார். இதுதான் நடைமுறை.
குஜராத்திற்கு லோகாயுக்தா நியமிக்கப்பட வேண்டும் என்கிற வேலை கடந்த டிசம்பர் மாதத்தில் வேகம் பிடித்தது. அம்மாதம் 31ம் தேதி தலைமை நீதிபதி எஸ்.டி.தாவே என்கிற ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். ஆனால் மோடி அதை ஏற்கவில்லை. அவர் ஏற்கனவே வோரா என்கிற நீதிபதியை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். இந்த வோரா யார் தெரியுமா? 2002ல் 14 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட பெ°ட் பேக்கரி வழக்கின் குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் என்று விடுவித்து தீர்ப்பு வழங்கியவர். மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்து, பின்னர் மோடியின் ஆட்களாலேயே ஹரேன் பாண்ட்யா என்பவர் கொல்லப்பட்டார். அவர் கொஞ்சம் உண்மை பேச ஆரம்பித்ததால் அவருக்கு இந்த தண்டனை. அந்த வழக்கிலும் கீழ் கோர்ட்டில் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. ஹரேனின் தந்தை விட்டல் பாண்ட்யா மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பு வழங்கியவரும் இந்த வோராதான். இவர் ஏன் மோடியின் ஆளாக இருக்கிறார் என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை.
அதுவும், மோடி அரசாங்கத்தின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்ற நிலைமையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எப், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்றதன் மூலம் மட்டும் சமார் 5197 கோடி ரூபாய் குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மட்டும் சுமார் 33000 கோடி அளவிற்குச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த திட்டத்தின் மொத்த செலவே 2200 கோடிதான். ஆனால், அதற்கு 9570 கோடி கடன் கொடுத்திருக்கிறது மோடி அரசாங்கம். வட்டி எவ்வளவு தெரியுமா? 0.10 சதவீதம். அந்தக் கடனையும் 20 வருடம் கழித்து அடைத்தால்போதும். இவை இரண்டு உதாரணங்கள் மட்டுமே. இது போல் பல முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சலுகை வழங்கப்பட்டு அதற்கு கைம்மாறும் பெறப்பட்டிருக்கின்றது. இது குறித்த புகார் மனு ஒன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கின்றது. நியாய உணர்வுள்ள எவரேனும் லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டுவிட்டால் தனக்கும் எடியூரப்பா கதிதான் என்று மோடி அஞ்சுவதில் அர்த்தம் இருக்கிறது.
தாவேவின் யெரை ஏற்காத மோடி தலைமை நீதிபதிக்குதன்னுடைய ஆள் வோராவை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகின்றார். நீதிபதிக்கோ ஆச்சரியம். தாவேவின் பெயரை ஏன் நிராகரிக்கிறீச்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் வோரா ஏற்கனவே குஜராத் மாநில ஜீடிசியல் அகாடமிக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் அவரை லோகாயுக்தாவாக நியமிப்பது சாத்தியமில்லை என  மோடிக்கு பதில் எழுதுகின்றார். ஆனால், இதற்குப் பின்னர் மர்மமான முறையில் ஒரு சம்பவம் நிகழ்கின்றது. தான் யோகாயுக்தா பதவியை ஏற்க விரும்பவில்லை என்றும், பரிசீலனையில் உள்ள பெயர்களின் பட்டியலில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கிவிடுமாறும் தாவே ஒரு பேக்ஸ் அனுப்பிவிடுகிறார். ஒரு வேளை இது மோடி நன்றி சொன்ன கடவுளின் கைங்கரியமாக இருக்கும்.
அதற்குப் பின்னர் மீண்டும் புதிதாக லோகாயுக்தாவை நியமிக்கும் நடைமுறை துவக்கப்படுகின்றது.  ஆளுநர் புதிய பெயரைக் கொடுக்குமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொள்கிறார். இம்முறை ஆர்.ஏ.மேத்தா என்கிற நீதிபதியின் பெயரை தலைமை நீதிபதி பரிந்துரைக்கின்றார். இவரையும் நிராகரிக்கும் மோடி அவர் மீது குற்றம் குறைகளைக் கூறுகிறார். இந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்கிறார். மீண்டும் தன்னுடைய ஆள் வோராவை நியமிக்குமாறு கடிதம் எழுதுகிறார். அதாவது ஒன்று வோராவை நியமிக்க வேண்டும். அல்லது லோகாயுக்தாவே தேவை இல்லை என்பது அவரது நிலை. இத்தனைக்கும் மேத்தா மிகவும் நேர்மையானவர் என்றும், அவர் மத்திய அல்லது மாநில அரசுப் பதவி எதற்கும் ஆசைப்பட்டவர் இல்லை என்றும், அவரைப் பற்றி நன்கு விசாரித்து அறிந்து கொள்வதற்காக 45 நாட்களைச் செலவிட்டதாகவும் தலைமை நீதிபதி முகோபாத்யாயா மோடிக்குப் பதில் எழுதுகிறார். மேத்தா பெயரை மீணடும் வலியுறுத்திய தலைமை நீதிபதி ஆளுநருக்கும் அது தொடர்பாகக் கடிதம் எழுதுகிறார். மேத்தாவை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் மாநில ஆளுநர் தன்னுடைய தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி மேத்தாவை நியமிக்கிறார். இதற்குத்தான் பாஜக நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டது. மாநில உரிமைகளில் மத்திய அரசாங்கம் தலையிடுகின்றது என்றெல்லாம் கூப்பாடு போட்டது.  ஆளுநர் மாநில அரசாங்கத்தின் கருத்தைக் கேட்காமலேயே நியமனம் செய்துவிட்டார் என்று புலம்பியது.
ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து மோடி அரசாங்கம் நீதிமன்றம் சென்றுள்ளது. அந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னர் செப்25ம் தேதி காந்திநகரில் ஒரு பெரும் பேரணியை நடத்தவிருக்கிறார். ஐந்து லட்சம் பேரைத் திரட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் விசாரத்துக் கொண்டிருக்கும்போது இப்படி எல்லாம் பேரணிகள் நடத்துவது நீதிமன்றத்தை மிரட்டுகின்ற செயலாகும். தீர்ப்பு எங்களுக்குச் சாதமகமாக வரவில்லை என்றால் என்ன செய்வோம் தெரியுமா, பார்த்துக் கொள்ளுங்கள் எங்கள் பலத்தை என்பதாகும்.

தகவல் ஆதாரங்கள்: அவுட்லுக், கம்யூனலிசம் காம்பேட், ரெடிப்.காம், தி ஹிந்து.  
(22.9.11 அன்று எழுதப்பட்டு 30.9.11 தீக்கதிர் நாளிதழில் வெளியானது.)
 

Thursday, September 22, 2011

நரபட்சிணியின் விரதம்





அசோகன் முத்துசாமி

'நீதி இல்லை என்றால் அமைதி இருக்க முடியாது'. 2002ம் ஆண்டு குஜராத் மதப் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட 100 பேர் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் கூறியுள்ளனர்.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? நீதியில்லாத அமைதி மயான அமைதி.
1200 பேர் விதம் விதமாகக் கொல்லப்பட்டனர். ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. வழக்குகள் பல நடக்கின்றன. உடனே பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த அனைத்து புகார்களும் வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்கிற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். பல புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. புகார் கொடுக்க வந்தவர்கள் அடித்து விரட்டப்படாத அல்லது பிடித்து உள்ளே போடப்படாத குறைதான். அவையெல்லாம் போக எஞ்சிய புகார்களின் மீதான வழக்குகள்தான்.
ஆனால், மோடி தான் செய்யவில்லை என்கிறார். தன்னுடைய கட்சிக்காரர்கள் செய்யவில்லை என்கிறார். தங்களது வழிகாட்டிகளான சுயம் சேவக்குகளும் செய்யவில்லை என்கிறார். சங்பரிவாரிகள் யாரும் செய்யவில்லை என்கிறார். அப்புறம் யார்தான் இவ்வளவு பேரைக் கொன்றது? இந்துக்கள் என்கிறது சங்பரிவாரம். ஆனால், அவர்களுக்குப் பெயர்கள் கிடையாது; ஊர் கிடையாது; விலாசம் கிடையாது; வானத்திலிருந்து குதித்தார்கள் போலும். கொலை வெறியாடிவிட்டுப் பறந்துவிட்டார்கள் போலும். நிற்க.
குல்பர்க் சொசைட்டி என்கிற இடத்தில் 68 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அதில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி. மனிதர் உயிரைப் பறிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து காவல்துறைக்கு அபயக் குரல் எழுப்பியிருக்கிறார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறியிருக்கிறார். மதபோதையில் காவல்துறை வேண்டுமென்றே உறங்கிவிட்டிருந்தது.
இஷான் ஜாப்ரியின் மனைவி 2006ம் ஆண்டு இக்கொலைக் குற்றச்சாட்டில் மோடியின் மீது புகார் கொடுக்கின்றார். ஏன் நாலு வருடங்கள் இடைவெளி என்று கேட்டால், புகார் கொடுக்கப்படப் போவது முதலமைச்சருக்கு எதிராக; எனவே போதுமான ஆதாரங்களை சமூகநல ஊழியர் தீஸ்தா செதால்வத்துடன் சேர்ந்து திரட்டிக் கொண்டு புகார் கொடுக்கின்றார். காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. மாநில உயர்நீதிமன்றத்தை 2007ல் அணுகுகிறார். அதுவும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து விடுகின்றது. பின்னர் இந்த வழக்கை எடுத்துக் கொள்கிற உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவிடம் இந்த புகாரை விசாரிக்குமாறு உத்தரவிடுகின்றது. பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் 'நடுநிலையாளராக' (அமிகஸ் கூரி) நியமிக்கப்படுகிறார். 2010ல் சிறப்பு விசாரணைக் குழு தன்னுடைய அறிக்கையை அவரிடம் அளிக்கின்றது. பூஷன் அப்போது தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகுகின்றார். (காரணம் தெரியவில்லை). புதிதாக நியமிக்கப்படுகின்ற ராஜீ ராமச்சந்திரன் அந்த அறிக்கையில் குறைகளைக் காண்கிறார். எனவே இவ்வருடம் மார்ச் மாதம் மீண்டும் விசாரிக்குமாறு எஸ்ஐடிக்கு உத்தரவிடப்படுகிறது. ஏப்ரல் மாதம் அது தன்னுடைய இறுதி அறிக்கையை அளிக்கின்றது. அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ராமச்சந்திரனிடம் அளிக்கின்றது. அவர் தன்னுடைய அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் அளித்த பின்னர் 2011 செப்டம்பர் 12 அன்று உச்சநீதிமன்றம் மோடியின் மீதான புகாரை விசாரிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகின்றது.
நடந்தது இதுதான். மோடி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறவில்லை. புகாரையும் தானே ஏற்றுக் கொண்டு விடவும் இல்லை. குற்றம் நடந்த பகுதியில் உள்ள நீதிமன்றம்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளது. முறையும் அதுதான். அங்கு நீதி கிடைக்கவில்லை என்றால் பின்னர் மீண்டும் மேல் நீதிமன்றங்களுக்கு வரலாம். அதுவும் காவல்துறை புகாரை ஏற்க மறுத்த பின்னணியில், மாநில உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் மனுவை நிராகரித்துள்ள பின்னணியில், கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்ஐடி தன்னுடைய அறிக்கையை அங்கே அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் 'நடுநிலையாளர்' ராமச்சந்திரனின் அறிக்கையையும் அவரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது உண்மையில் மோடிக்கும் சங்பரிவாரத்திற்கும் விழுந்த அடிதான். ஆனால் அவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிட்டது என்பது போல் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன என்பதைப் பார்க்கும் முன் உச்சநீதிமன்ற ஆணையின் உண்மையான பொருள் என்னவென்பது பற்றி மேலும் சில விவரங்களைப் பார்க்கலாம்.
'உண்மையில், இதன் பொருள், மோடிக்கு எதிராக முதல் தகவல் ஆறிக்கை பதிவு செய்வது குறித்து மட்டுமின்றி, விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது, நீதிமன்ற உதவியாளரால் சுயேச்சையான ஒரு மதிப்பீடும் செய்யப்பட்டுவிட்டது, சட்டத்தின்படி கீழமை நீதிமன்றமே இந்த வழக்கை தீர்மானிப்பதற்குப் பொருத்தமான அமைப்பு என்று கூறியுள்ளது. மோடியும் மற்றவர்களும் இப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். வழக்கிலிருந்து எவரையும் விடுவிக்கும் முன் புகார் கொடுத்தவர்களின் கருத்துக்களைக் கேட்டாக வேண்டும். இது உண்மையிலேயே ஒரு நல்ல உத்தரவு எஙனறு கொல்லப்பட்ட ஜாப்ரியின் மகன் கூறுகிறார்' (ஸ்மிருதி கோப்பிகர், அவுட்லுக், செப்.26, 2011).
'நாங்கள் விரும்பியதைவிட ஐந்து படிகள் இப்போது முன்னே இருக்கிறோம்' என்கிறார் இந்த வழக்கில் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரியுடன் சேர்ந்து வழக்கு தொடுத்திருக்கும் தீஸ்தா. (அவுட்லுக்)
படுகொலைகள் துவங்குவதற்கு முதல் நாள் (2002 பிப்ரவரி 27) மோடியின் வீட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் சஞ்சீவ் பட் என்கிற காவல்துறை அதிகாரி. மறுநாள் நடக்கப் போகும் நரவேட்டையை முன்னரே சங்பரிவாரத்துடன் திட்டமிட்டிருந்த மோடி 'இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டுகொள்ளாதீர்கள்' என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அம்பலப்படுத்தியவர். அதற்காக அவரை இடைநீக்கம் செய்தது நரபட்சிணியின் அரசாங்கம். அவர் எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்தில் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்.
'2002 படுகொலைகளை நடத்தியவர்களையும், அதற்கு உதவியவர்களையும் மேலும் சில படிகள் தண்டனைக்கு அருகில் எடுத்துச் சென்றிருக்கிறது மிகுந்த மதி நுட்பத்துடன் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உச்சநீதிமன்ற உத்தரவு'. (அவுட்லுக்).
நீதிமன்றத்தின் 'நடுநிலையாளர்' ராஜீ ராமச்சந்திரன் என்ன கூறியிருக்கிறார் என்பதையும் பார்த்து விடுவோம்.
'உச்சநீதிமன்ற உத்தரவு மாசு மருவற்றது. அது சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப் பிடிக்கிறது. புகார் கொடுத்தவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்படக் கூடியவர்கள் ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளையும் அது பாது£கக்கின்றது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யும். என்னிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட சாட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சுயேச்சையாக மதிப்பிட்டு நான் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறேன். எஸ்ஐடியின் அறிக்கையும் என்னுடைய அறிக்கையும் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த நீதிமன்றம் சட்டப்படி செயல்படும் என்பதிலும், நீதி நிலைநாட்டப்படும் என்பதிலும் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. யாரையும் குற்றமற்றவர் என்றோ குற்றவாளி என்றோ இப்போது கூறமுடியாது'. (டெகல்கா, செப்டம்பர் 13, 2011).
'இது மோடியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது என்ற கட்டத்தினையும் தாண்டிய நிலைமை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரகின்றன என்பதே இதன் பொருள்' என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார். (தீக்கதிர், 22.9.11).
உண்மை இவ்வாறு இருக்கையில் மோடி அன்ட் கம்பெனி தங்களைக் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று வியாக்கியானம் செய்வது, கொண்டாடுவதற்கு ஒரு முக்கியமான உள்ளர்த்தம் இருக்கிறது. எங்களை விடுவித்தால் அமைதி நிலவும்; இல்லை என்றால், மீண்டும் நரவேட்டைதான் என்பது. 'நீதிமன்ற உத்தரவின் தன்மை வேறு விதமாக இருந்திருந்தால் அது பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்' என்று ஜாப்ரியின் மகன் தன்வீர் மிகச் சரியாகவே கூறியுள்ளார்.
கீழமை நீதிமன்றத்தில் மோடி குற்றவாளி என்று தீர்ப்பானாலும் இதுதானே நடக்கும் என்கிற கேள்வி எழலாம். அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மோடி விசாரிக்கப்படவே இல்லை. விசாரிக்கப்படாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாக ஆகிவிடும். எப்படியாயினும் மோடி குற்றவாளி என்று  தீ£ப்பானாலும் அதைக் கலரவங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயச்க்கும் சங்பரிவாரம். குற்றமற்றவர் என்று தீர்ப்பானால் சொல்ல வேண்டியதில்லை; புதிய மகாத்மா என்று மோடிக்கு பட்டம் சூட்டினாலும் சூட்டுவார்கள்.

மேலும், மோடி குற்றமற்றவர் என்று இப்படியொரு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கும் நீதிபதியின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள். அவர் சற்று உறுதி குறைந்தவராக இருந்தால் மோடியின் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதற்கு மாறாக தீர்ப்பு வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அதாவது தீர்ப்பு எங்களுக்குச் சாதமாகத் தவிர வேறு மாதிரி இருக்கக் கூடாது என்று மறைமுகமாக மிரட்டுகிற உத்தி இது.

சங்பரிவாரம் ஏககாலத்தில் ஒன்றுக் கொன்று முரணான பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தும். அதில் எது வெற்றி பெற்றாலும் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும். நிற்க.
தனக்கு எதிரான தீர்ப்பை தனக்குச் சாதகமானதாகச் சித்தரிப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கும்?  
முதலாவதாக, பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக அவர் இதைச் செய்கிறார் என்பது வெளிப்படை. 2002ல் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியலிருந்தே மோடியைப் பிரதமராக்க வேண்டும் (?) என்கிற குரல்கள் சங்பரிவார வட்டாரங்களில் எழுந்து கொண்டிருக்கின்றன. பின்னே சிறுபான்மையினரைப் படுகொலைகள் செய்வதுதானே சங்பரிவாரத்தில் தலைவராவதற்கான உச்சபட்சத் தகுதி?
ஆனால், 2004ல் பாஜக தோல்வியுற்றதற்கு குஜராத் நரவேட்டை முக்கியமான காரணங்களில் ஒன்றாகிவிட்டது. அதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த, அதன் மூலம் அது ஆட்சிக்கு வருவதற்கு உதவிய 'மதச்சார்பற்ற' கட்சிகள் பல கூட்டணியை விட்டு விலகிவிட்டன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பின் மீது விழுந்த மரண அடியாக அது ஆனது.
இப்போதும் கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐக்கிய ஜனதாதளம் மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் தான் கூட்டணியிலிருந்து விலகி விடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மோடி கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பீகாருக்குப் பிரச்சாரத்திற்கு வரக் கூடாது என்று அக்கட்சி வலியுறுத்தியது அனைவரும் அறிந்ததே.
எனவே, மோடிக்கு நல்ல பிள்ளை வேடம் தேவைப்படுகிறது. 'மதவெறி அரக்கன் என்கிற வார்ப்படத்திலிருந்து வெளிவரவேண்டும் என்பது ஒரு தெளிவான காரணமாகத் தோன்றுகின்றது' (சித்தாராம் யெச்சூரி, தீக்கதிர்).
மோடிக்கு அப்படியொரு பிம்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கும் இருக்கிறது. ஏனெனில், பாஜகவின் வாக்கு வங்கி ஒரு கட்டத்திற்கு மேல் (சுமார் 19-20%) வளராதது மட்டுமின்றி தேயவும் தொடங்கிய நிலையில் புதிய கட்சிகள் கூட்டணியில் சேராமல் அதனால் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது பற்றி கனவு மட்டுமே காண முடியும்.
இந்த நாடகம் உடனடியாக பலன் கொடுக்கத் துவங்கிவிட்டது என்பதை மதச்சார்பற்ற கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மோடிக்கும் அவரது  உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்திருப்பதிலிருந்து காணலாம். ஜெயலலிதாவிற்கு இந்துத்துவ அரசியலின் சில அம்சங்கள் உவப்பானவை என்பது தெரிந்த விஷயம்.  ஆனால், மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட தன் கட்சியை தன்னிஷ்டம் போல் மதவாதிகளுடன் கைகோர்க்கும்படிச் செய்துவிட முடியாது என்பது அவருக்கும் தெரியும். எனவே பாருங்கள் மோடி நல்லவர், குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டது என்றெல்லாம் கற்பித்து பாஜக கூட்டணிக்கு தன் அணிகளைத் தயார் செய்கிறார். 'மோசமான கட்சியில் இருக்கும் நல்லவர்' என்று வாஜ்பாயைச் சித்தரித்து தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை கருணாநிதியும் திமுகவும் நியாயப்படுத்தியது நினைவிருக்கும். அது போலத்தான் இதுவும். எனினும், மதவாதிகளுடன் இணைந்தால் ஜெயலலிதா தோல்வியைத் தவிர வேறு எதையும் சந்திக்கப் போவதில்லை.
மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் வலியுறுத்தி (?) மோடி உண்ணாவிரதம் இருப்பது புலி பசுந்தோல் போர்த்திக் கொள்வது போலத்தான். ஆனால், அந்தத் தோல் அது அடித்துத் தின்ற பசுவினுடையதுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தியைச் சுட்டுக் கொன்றது ஆர்எஸ்எஸ். பின்னர் தங்களது அமைப்பின் கட்டுக் கோப்பையும், ஒழுக்கத்தையும் காந்தி வியந்து பாராட்டினார் என்று நா கூசாமல் தம்பட்டமும் அடித்தது. அது போல் மதநல்லிணக்கத்தைக் கொன்றுவிட்டு அதைக் காப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறது நரபட்சிணி.
இறுதியாக ஒரு விஷயம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக குஜராத்தில் மதக் கலவரங்களே நடக்கவில்லை என்கிறார் மோடி. பெரும்பாலும் எப்போதுமே ஒடுக்குபவர்கள்தான் கலவரங்களை ஆரம்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட மொத்த அரசு எந்திரத்தையும் இந்துத்துவமயமாக்கப் பட்டுவிட்டது; மக்கள் சமூகத்தின் மிகக் கணிசமான பகுதி இந்துத்துவமயமாக்கப் பட்டுவிட்டது; எஞ்சிய பகுதியின் பெரும்பகுதி இந்துத்துவத்தின் மௌன ஆதரவாளர்களாகவோ அல்லது கையாலாகாத்தனமானவர்களாகவோ (காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளித்துவக் கட்சிகள்) இருக்கின்றனர்; சிறுபான்மையினரின் பொருளாதார அடித்தளம் அடித்து நொறுக்கப்பட்டு கிட்டத்தட்ட முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுவிட்டனர் (மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம்கள் போரா என்கிற பிரிவைச் சோந்தவர்கள். அவர்கள் எப்போதுமே இதர முஸ்லிம்களுடன் சேர்ந்து இருந்ததில்லை); தலித்துகள் போல் முஸ்லிம்களும் சேரிகள் எனும் பகிரங்க சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்; முஸ்லிம்கள் மீதும் கிறித்துவர்கள் மீதும் எழுதப்படாத முழுமையான பொருளாதாரத் தடை அமலில் இருக்கிறது; தாங்கள் உயிரோடு இருப்பதே அதிசயம் என்கிற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியுமா என்ன? மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ ஒடுக்கப்படும் மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும்போது ஒடுக்குபவர்கள் கலவரங்களை நடத்தி அவர்களை அடக்குகிறார்கள். மதவாதம் தலைவிரித்தாடும் குஜராத்தில் மதக்கலவரங்களே நடக்கவில்லை என்றால் அங்கே சிறுபான்மையினர் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிலையில் என்று பொருள்.

-----------------------------------------------------------------22.9.11

(அக்டோபர் 2011 DYFI இளைஞர் முழக்கத்தில் வெளியாகியுள்ளது). 

Saturday, September 10, 2011

ஊழலின் மூலவேர்கள்



பிரபாத் பட்நாயக்
தமிழில்: அசோகன் முத்துசாமி

சமீபத்தில் ஊழல் மீது குவிந்துள்ள தனிப் பிரத்தியேகமான கவனம், அநேகமாக தன்னையறியாமலேயே, அதற்கு மிக அடிப்படையான காரணமான  ‘ஆதி மூலதனத் திரட்டலில்’ இருந்து கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம்தான் இன்றைய விவாதத்தின் துவக்கப் புள்ளியாகும். அதன்படி, ஊழல் என்பது ஒரு அரசு ஊழியர் தன்னுடைய சட்டபூர்வமான ஊதியத்திற்கும் மேலாக லஞ்சம் (பணமாகப் பெறும் லஞ்சம் மட்டுமின்றி இதர வகைகளையும் உள்ளடக்கியது) பெறுவது என்று வரையறுக்கப்படுகின்றது. என்றபோதிலும், இதற்கு ஒரு விசித்திரமான உட்பொருள் இருக்கின்றது. ஒரு அரசு ஊழியன் என்கிற முறையில் ஒரு தனியார் அல்லது ஒரு தனியார் நிறுவனம் பொதுச் சொத்தை தன்வசப்படுத்திக் கொள்ள அனுமதித்து, அதற்காக நான் லஞ்சம் எதுவும் பெறவில்லை என்றால், அப்போது அது ஊழலாகாது. ஆனால், அப்படிச் செய்வதற்கு நான் ஏதாவது லஞ்சம் பெற்றால் அப்போது அது ஊழல். இரண்டில் எது நடந்தாலும் அரசு கஜானாவிற்கு, அதனால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகின்றது. ஆனால், பொதுச் சொத்தைத் திருட தனியாரை அனுமதிக்கும் செயலுக்காக சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் லஞ்சம் எதுவும் பெற்றால் மட்டுமே அது ஊழலாகின்றது. இன்னும் என்னவென்றால், அரசு ஊழியர் நேரடியாக லஞ்சம் எதுவும் பெறாமல், மேலும் நுட்பமான வழிகளில் மறைமுகமாக லஞ்சம் பெற்றால், அப்போதும் அது ஊழலாகக் கருதப்படாது.
எடுத்துக் காட்டாக, யாராவது ஒரு அரசு ஊழியர் பொதுச் சொத்தை அடிமாட்டு விலைக்கு தனியார்மயப்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவர் நேரடியாக லஞ்சம் எதுவும் பெறவில்லை என்றாலும், அதற்காக அவர் கார்ப்பரேட் ஊடகங்களாலும், பிரெட்டன்வுட் அமைப்புகளாலும் (வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகள் தங்களது பொருளாதார நலன்களுக்காக அமைத்துக் கொண்ட, அமெரிக்க டாலரை உலகப் பரிவர்த்தனை நாணயமாக ஆக்கிய அமைப்புகள்-மொர்), உலக நிதி சமுதாயத்தாலும் ‘தீர்க்கதிரிசி’ என்றும், தொழில்முனைப்பைத் துணிச்சலாக ஆதரிப்பவர் என்றும், நவீன காலத்திற்கு ஏற்ற தாராளவாத சிந்தனையாளர் என்றும் போற்றி புகழப்படுகின்றார். இது தன் தொடர்ச்சியாக பல கைம்மாறுகளைக் கொணர்கின்றது. பல வகையான ‘ஆசியாவின் சிறந்த அமைச்சர்’ விருதுகள், பல்வேறு சபைகளில் உரையாற்றும் சுற்றுப் பயணங்கள், உலக வங்கிப் பொறுப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகம் கஷ்டப்படத் தேவையில்லாத எளிய வேலைகள், ஊதியமுள்ள பல்வேறு வகையான ஆலோசகர் வேலைகள்,மற்றும் ஓய்வுக் காலத்திற்குப் பின்னர் வேலையே இல்லாமல் சம்பளம் கிடைக்கும் பணிகள் ஆகியவை.  எனினும், இவற்றில் எதுவும் ஊழல் என்று கருதப்படுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், பதிலுக்குப் பதில் நேரடியாகக் கைம்மாறு பெறுவது மட்டுமே ஊழல் என்று சுருக்கப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்த அமைப்பிலிருந்து கைம்மாறு பெறும், எங்கும் பரவியிருக்கும் ஊழல் இந்தச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆதலால், ஊழலுக்கு எதிராக தற்போது நடக்கும் யுத்தம் இந்த அமைப்பு முறையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால்,  மரங்களின் மீது மட்டும் கவனம் செலுத்தி அவை இருக்கும் வனத்தைப் பார்க்கத் தவறிவிடுகின்றது. ஆம், மரங்களையும் நாம் அலட்சியப்படுத்த முடியாதுதான். ஆதலால், இந்த வரம்பிற்கு உட்பட்ட பொருளிலும் கூட ஊழலுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதும் முக்கியமானதுதான். ஆனால், வனத்தைக் காணத் தவறுவது மன்னிக்க முடியாதது.
அந்த வனத்தைத்தான் மார்க்ஸ் ‘ஆதி மூலதனத் திரட்டல்’ என்று அழைத்தார். ஆதி மூலதனத் திரட்டல் என்பது சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுவாக மக்கள் ஆகியோரின் சொத்துக்களை முதலாளிகளும் அல்லது முதலாளிகளாக ஆகிக் கொண்டிருப்பவர்களும் பறித்துக் கொள்வதைக் குறிக்கின்றது (எடுத்துக் காட்டாக, பொதுச் சொத்தை ஆக்கிரமித்தல் அல்லது பட்ஜெட் வளங்களை தமதாக்கிக் கொள்ளுதல் அல்லது அரசுச் சொத்துக்களை அற்ப விலைக்கு வாங்கிக் கொள்ளுதல் போன்றவை மூலமாக). முதலாளித்துவத்தின் கீழ் வழக்கமாக நடக்கும் மூலதனத் திரட்டலில் இருந்து வேறுபட்ட இது ஆதி மூலதனத் திரட்டல் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியாகும் பொருளாதார உபரியை மறுமுதலீடு செய்வது சம்பந்தப்பட்டதல்ல இது. ஆனால், விவசாயிகள், சிறுஉற்பத்தியாளர்கள்,அரசு மற்றும் பொது மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் ஒரு நிகழ்முறையாகும். இப்போது, ஊழலும் மற்றவர்கள் சொத்துக்களைத் திருடுவது சம்பந்தப்பட்டது. ஊழலே ஒரு வகையான ஆதிமூலதனத் திரட்டலாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு அரசு ஊழியர் சாமான்ய மனிதரிடமிருந்து லஞ்சம் கேட்கும்போது அதுதான் நடக்கிறது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள பெரிய அளவிலான ஊழல் என்பது அதுவே ஆதி மூலதனத் திரட்டலாகிவிடாது. அதைவிடவும், நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆதி மூலதனத் திரட்டலின் மீது விதிக்கப்படும் லெவி (வரி அல்லது கட்டணம்)யாக அது இருக்கின்றது.

சட்டவிரோதமான சுரங்கத் தொழில்

கர்நாடகாவில் நடைபெறும் சட்ட விரோதமான கனிமத் தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள். கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும், அரசு கஜானாவை ஏமாற்றும் சுரங்க முதலாளிகளே ஆதிமூலதனத் திரட்டலில் ஈடுபட்டுள்ளவர்கள். கர்நாடாகாவின் முன்னாள் முதலமைச்சர் சட்ட விரோத சுரங்க முதலாளிகளிடமிருந்து தான் பெற்ற லஞ்சத்திற்காக அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, அவர் ஒரு ஊழல் செயலில் ஈடுபட்டிருக்கிறார். சுரங்க முதலாளிகள் அடிக்கும் கொள்ளையில் ஒரு பகுதியை தனதாக்கிக் கொண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டலாம். அதாவது, சுரங்க முதலாளிகளின் ஆதி மூலதனத் திரட்டலில் இருந்து கிடைத்த வருவாயில் தனக்காக ஒரு கட்டணத்தை அவர் விதித்தார்.
அது போல 2ஜி அலைக்கற்றை ஊழலில் நடந்த ஆதி மூலதனத் திரட்டல் என்பது ஒரு முறையான ஏலம் நடத்தப்பட்டிருந்தால் அரசு கஜானாவிற்கு, அதன் மூலம் மக்களுக்கு வந்திருக்க வேண்டிய பணத்தை ‘முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை’ என்கிற அடிப்படையில் ஒரு முதலாளிகள் குழுவிற்கு துhக்கிக் கொடுத்ததாகும். அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் அதிலிருந்து ஒரு பகுதியை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது (அப்படிக் குற்றம் சாட்டப்படுள்ளார்), அவ்வறாக ஒரு ஊழல் செயலில் ஈடுபட்டபோது, ஆதி மூலதன் திரட்டலில் இருந்து கிடைக்கும் வருவாயின் மீது அவர் தனக்காகவும் தனக்கு வேண்டியவர்களுக்காகவும் ஒரு லெவியை விதிக்கிறார். என்றபோதிலும், ஆதி மூலதனத் திரட்டலின் மூலமே மக்களின் சொத்து பறிக்கப்படுகின்றது. ஊழலில் மூலம் அல்ல. தொலை தொடர்பு அமைச்சர் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறாமல் முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியிருந்தாலும் அரசு கஜானா அதே அளவிற்கு வஞ்சிக்கப்பட்டிருக்கும். திருடப்பட்ட மக்களின் சொத்து (முறையாக ஏலம் விட்டிருந்தால் என்ன விலை கிடைத்திருக்குமோ அந்த விலைக்கும் உண்மையாக விற்கபட்ட விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை) என்பது மிகச் சரியாக அதே அளவு இருந்திருக்கும். இந்தக் கொள்ளையின் மூலம் பயனடைந்தவர்கள் யார் என்பதையும், இந்தக் கொள்ளையின் மூலம் கிடைத்த வருவாயின் ஒரு பகுதியை தனதாக்கிக் கொண்டவர்கள் யார் என்பதையும் மட்டுமே ஊழல் தீர்மானிக்கிறது.

ஊழலின் மீது மட்டும் கவனம்

இது மிக எளிமையான, கண் கூடான விஷயம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அதை இருட்டடிப்பு செய்வதற்கு மிகவும் கபடமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.  மக்களின் சொத்தைத் திருடுவதற்குக் கடைப்பிடிக்கப்பட்ட செயல்முறை ‘முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை’ என்பதால், இந்தச் செயல்முறையைப் பின்பற்றிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அவர்கள் ஒரு பைசா கூட நேரடியாக லஞ்சமாகப் பெறவில்லை என்றாலும் கூட, இந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்கு உரியவர்கள் ஆகின்றார்கள். இது ஆ. ராசாவிற்கு முன்னர் அந்தத் துறையின் பொறுப்பில் இருந்தவர்களும், இந்த வழிமுறையை (முதலில் வந்தவர்களுக்கு......) ஆதரித்தவர்களுமான காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் இந்த வழியைப் பின்பற்றும் முடிவை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே தனியார் முதலாளிகள் அரசு கஜானாவை ஏமாற்ற வழி செய்தவர்கள் என்று குற்றம் சாட்டத்தக்கவர்கள். இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காக ‘கொள்கை சரியானதுதான், ஆனால் அதைச் (ராசா) சரியாக அமல்படுத்தவில்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் கோரஸாகக் கூறுகிறார்கள்.  பல ‘ஊழல் எதிர்ப்புப் போராளிகள்’ போல இவர்களது கவனமும் பிரத்தியேகமாக ஊழலின் மீது மட்டுமே இருக்கிறது. ஆதிமூலதனத்திரட்டலின் மீது அல்ல. அதாவது, மக்கள் வஞ்சிக்கப்படுவது பற்றி அவர்களது கவனம் இல்லை. ஏனெனில், மக்கள் வஞ்சிக்கப்படுவதற்கு அவர்களே பொறுப்பு. அப்படித் திரட்டப்பட்ட பணத்திலிருந்துதான் லஞ்சம் பெறப்படுகின்றது.
ஆதி மூலதன திரட்டல் மக்கள் சொத்து திருடப்படுவதை இன்றியமையாததாக்குகின்றது. ஆதலால், சொத்து நிர்வாக முறைகளை மாற்றுவதற்காக முயற்சி எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது தழைத் தோங்குகின்றது. நவீன யுகத்தின் மிகவும் அப்பட்டமான ஆதி மூலதனத் திரட்டல் சோவியத் யூனியன் வீழ்ச்சியின்போது ஏற்பட்டது. பொதுவுடமைச் சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்ட போது மிகப் பெருமளவு பொதுவுடமைச் சொத்துக்கள் திருடப்பட்டன. ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் உதித்தெழுந்தார்கள்.  முற்றிலும் புதிய ஒரு முதலாளித்துவ வர்க்கம் மாயமந்திர வித்தை போல் வெறும் காற்றிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. அது போல் இந்தியாவில், புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக வந்த தனியார்மயமாக்கல் மிகப் பெருமளவிலான ஆதி மூலதனத்திரட்டல் போக்குடன் சேர்ந்தே வந்தது. அதற்கான நிலைமைகளை உருவாக்கியது. அத்தகைய திரட்டலில் தழைத்தோங்கும் ஊழல் பல்கிப் பெருகுவதுடனும் சேர்ந்தே வந்தது. அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு செலுத்தும் முந்தைய ஆட்சி முறையின் பண்பாக இருந்த கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக சுதந்திரச் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முந்தைய ஆட்சி முறை ‘லைசன்ஸ்-பெர்மிட் ராஜ்’ என்று பெரும்பாலும் இகழப்பட்டது. சுதந்திரச் சந்தைக் கோட்பாட்டின் அறிமுகம் ஊழலை ஒழிக்கும் என்று கருதப்பட்டது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்றும் சொல்ல முடியாது. எந்த ரேஷன் முறையிலும் சந்தை விலைகளை விட பொருட்களின் விலைகள் கட்டாயம் குறைவாகவே இருக்கும். இது லஞ்சம் கொடுத்து அப்பொருட்களின் விநியோகத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வசதி மிக்கவர்கள் அப்படிச் செய்து கொள்வதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றது. சந்தைகளை சுதந்திரமாக்குவதும், அதனால் ரேஷன் முறை அகற்றப்படுவதும் ரேஷனில் வழங்கப்பட்டு வந்த பொருட்களை (எந்தப் பொருளெல்லாம் ரேஷன் முறையிலிருந்து நீக்கப்படுகின்றதோ அவையெல்லாம் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு விலைகள் அதிகமாகிவிடுகின்றன-மொர்) வாங்குவதிலிருந்து ஏழைகளை ஒதுக்கி வைப்பதால் வெறுக்கத்தக்கதாக இருந்தபோதிலும், லஞ்சம் கொடுப்பதற்கான தேவையை அது நிச்சயம் குறைக்கும், அதனால் ஊழலின் அளவும் குறையும் என்றும் கருதப்பட்டது. இந்தக் காரணத்திற்காக ஊழலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தாரளமயக் கொள்கைகள், அதற்கு மாறாக வரலாறு காணாத அளவிற்கு ஊழல் செங்குத்தாக அதிகரித்திருப்பதுடன் சேர்ந்தே வந்திருக்கிறது என்றால், சந்தைகள் சுதந்திரமாக்கப்பட்டதுடன் சேர்ந்தே வந்திருக்கும் சொத்து நிர்வாக முறைகளின் மாற்றத்தில் இருக்கிறது காரணம். ஆதி மூலதனத் திரட்டலுக்கு ஊக்கம் அளித்த தனியார்மயத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும், அதனால் அது பேணி வளர்க்கும் ஊழலுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்திலும் இருக்கிறது காரணம்.
புதிய தாராளமயத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆதி மூலதனத் திரட்டலில் இருந்து கிடைக்கும் வருமானம் அரசியல் வர்க்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுவதையே சமீப காலத்தில் ஊழல் அதிகரித்திருப்பதைக் குறிக்கின்றது. ஏகபோக முதலாளிகள், நிதித்துறை ஒற்றை ஏகபோகங்கள், நிலத்திமிங்கிலங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் ஆதி மூலதனத்திரட்டலின் வருமானத்தை வாரிக்கொள்வதில்லை. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகார மையங்களில் இருக்கும் அரசியல்வாதிகளும் வாரிக் கொள்கிறார்கள். ஆனால், விஷயங்கள் இன்னும் மோசமாக இருக்கின்றன. அந்த அரசியல்வாதிகளில் நேரடியாக லஞ்சம் பெறாத குறிப்பிடத்தகுந்த பிரிவினரும் கூட இந்த ஆதி மூலதனத் திரட்டல் போக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆதி மூலதனத் திரட்டலை ஊக்குவிக்கும் அதே அமைப்பு முறையைச் சேர்ந்தவர்கள். முன்னர் குறிப்பிட்டது போல் இந்த அமைப்புக்கே உரிய மறைமுகமான கைம்மாறு மூலம் பயனடைகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறைக்குள் அரசியல் வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதியை (மரியாதைக்குரிய சில விதிவிலக்குகள் தவிர,குறிப்பாக இடதுசாரிகள்) இணைத்துக் கொள்வதன் மூலம் ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறையை நாம் நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அரசியலின் முக்கியத்துவம்

இது ஜனநாயகத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை தன்னுள்ளே கொண்டிருக்கின்றது. உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் பொருளாதாரத்தைவிடவும் அரசியல் முதன்மையானதாக இருப்பது அவசியமான முன் நிபந்தனையாகும். அப்போதுதான் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து தோன்றும் உள்ளியல்பான போக்குகளினால் பாதிக்கப்பட்டும் ஏதும் செய்வதறியாத துர்பாக்கியவாதிகளாக ஆகாமல், அத்தகைய போக்குகளுக்கு எதிராக அரசியல் நடைமுறையின் மூலம் மக்கள் கூட்டாக தலையிட முடியும். (உண்மையான ஜனநாயகமும் முதலாளித்துவமும் உடனொத்து வாழ முடியாது என்பதற்கும் இதுதான் காரணம். ஏனெனில், முதலாளித்துவத்தின் உள்ளியல்பாக போக்குகள் இத்தகைய வெகுமக்கள் ஜனநாயகத் தலையீட்டின் மூலம் முறியடிக்கப்பட்டால் முதலாளித்துவம் தன்னுடைய இயல்பை இழந்து விடும். யுத்தத்திற்குப் பின்னர் சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்திய கெய்ன்சிய பரிசோதனை முயற்சியின் தோல்வி இதைத்தான் நிரூபிக்கிறது). அரசியலின் முதன்மை அரசியல் மற்றும் பொருளாதார செயற்களங்கள் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது. அரசியல் செயற்களம் பொருளாதார செயற்களத்திற்குள் ஒன்றிணைக்கப்படக் கூடாது என்பதையும் முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில், அப்போதுதான் பொருளாதார அமைப்பின் தற்செயலான தன்மையினால்மக்களுக்கு இழைக்கப்படும் தவறுகளை அதனால் (அரசியலால்) சுதந்திரமாகச் சரி செய்ய முடியும். ஆனால், அரசியல் செயற்களமும் பொருளாதாரச் செயற்களத்திற்குள் இணைக்கப்பட்டுவிட்டால், எங்கும் பரவியிருக்கும் ஆதி மூலதனத்திரட்டல் நடைமுறையில் இரண்டுக்கும் இடையிலான எல்லை மறைந்து விட்டால், ஜனநாயகம் மிகக் கடுமையாகப் பலவீனப்பட்டுவிடும்.
ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் ருடால்ப் ஹில்பெர்டிங்கைத் தொடர்ந்து லெனினும் ஏகபோக மூலதன சகாப்தத்தில் நிதி மற்றும் தொழில்துறை பெருமுதலாளிகளும் அரசில் உயர்பதவி வகிப்போரும் தனிப்பட்ட முறையில் இணைவதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறையைப் பாதுகாப்பதற்காக இந்த தனிப்பட்ட இணைப்பு பல கட்டங்கள் முன்னே எடுத்துச் செல்லப்படுகின்றது. அத்தகைய தனிப்பட்ட இணைப்பு அரசியலில் ஜனநாயக உள்ளடக்கத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இதை எதிர்த்து நாம் எப்படிப் போராடுவது என்பது கேள்வி?
ஊழலுக்கு எதிரான போராட்டம் முக்கியமானது. ஆனால், போதுமானதில்லை. ஏனெனில், ஏனெனில், அது ஊழலை ஆதிமூலதனத்திரட்டலுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கிறது. ஆதலால், ஊழல் என்பது நேரடியாக லஞ்சம் பெறுவது மட்டும்தான் என்று சுருக்கிவிடுகின்றது.  இந்த அமைப்புக்கு உரிய மறைமுக ஊழலை  அலட்சியப்படுத்துகின்றது. இன்னும் என்னவென்றால், இது ஊழல் செய்பவர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஆதி மூலதனத் திரட்டல் போக்கிற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்றால், இந்தக் குறுகிய அர்த்தத்திலும் கூட இந்தப் போராட்டம் வெற்றி பெறாது. பொதுச் சொத்தின் செல்வாக்கு மிகப் பெருமளவு இருக்கும் சீனாவிலும் கூட ஒரு ஆதி மூலதனத்திரட்டல் போக்கு தலைகாட்டியுள்ளது. அடிக்கடி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படும் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுக்கும் தொழில் அதன் கண்கூடான வெளிப்பாடு. அத்தகைய மூலதனத் திரட்டலுடன் இணைந்து வரும் ஊழல், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டும் கூட இன்னும் ஒழிக்கப்படவில்லை. தண்டிப்பது மட்டுமே எப்போதும் போதுமானதில்லை. ஊழலைத் துடக்க வேண்டுமானால் ஆதி மூலதனத் திரட்டலே முறியடிக்கப்பட வேண்டும்.
முதலில் மூன்று நடவடிக்கைகள் இதற்கு அவசியமாகும். முதலாவதாக, ஊழலுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் பதவியிலிருக்கும் பிரதமருக்கோ அல்லது உயர்மட்ட நீதிபதிகளுக்கோ ஏன் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், அவர்களையும் உள்ளடக்கும் வழிமுறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட வேண்டும் (எடுத்துக் காட்டாக, நீதிபதிகள் லோக்பாலின் வரம்பிற்கு உட்படுத்தப்பட வேண்டுமா அல்லது தனியே ஒரு நீதித்துறை ஆணையம் உருவாக்கப்பட வேண்டுமா). இரண்டாவதாக, பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதன் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். மிகவும் அரிதாக மட்டுமே அரசுச் சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். அவ்வாறு தனியாமயமாக்கும் ஒவ்வொரு முறையும் அதன் அனைத்து விவரங்களும் பாராளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  நியாயமான ஏல முறையைத் தவிர, முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையிலோ அல்லது அது போன்ற கோட்பாடுகளின் அடிப்படையிலோ தனியாமயமாக்குவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற ஆய்வின் மூலம் அத்தகைய தடை அமல்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தீர்ந்து போகக் கூடிய அனைத்து செல்வாதாரங்களின் உடமையும் பயன்பாடும் அரசின் வசமே இருக்க வேண்டும். உதாரணமாக, கனிம வளங்களின் அரசு உடமை மட்டுமே போதுமானதல்ல. அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களின் நிர்வாகம் தனியார் வசம் கொடுக்கப்பட்டால், சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. இதைத் தடுப்பதற்காக அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களின் நிர்வாகமும் கூட அரசின் வசமே இருக்க வேண்டும். இதுதான் அரசின் அதிகாரபூர்வ கொள்கையாக மிகச் சமீப காலம் வரையிலும் இருந்தது. அது போல், நிலம் போன்ற அரிய வளங்களைப் பயன்படுத்துவதில் சமூகக் கட்டுப்பாடு மட்டும் போதாது, அரிய வளமான நிலப் பரிமாற்றத்தின் போது அதை முதலில் வாங்கும் உரிமை அரசின் ஏகபோக உரிமையாக (பொருத்தமான ஒரு அரசு நிறுவனம் மூலம்) இருக்க வேண்டும். முன்னரே வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும். ஊழலுக்கு முக்கியமான மூல காரணங்களில் ஒன்றாக இருக்கும் நிலத்தில் ஊகபேரத்தை முறிக்க இது உதவும். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பதன் மூலம் நிகழும் ஆதி மூலதனத் திரட்டலுக்கு ஒரு தடையாகவும் இது இருக்கும்.
நிலத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஒரு நீண்ட மரபு உள்ளது. ஹென்றி ஜார்ஜின் (19ம் நுhற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்காவின் பொருளாதார நிபுணர், நிலச்சீர்திருத்தவாதி-மொர்)செல்வாக்கிற்கு ஆட்பட்டு ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அதை ஆதரித்தார். பேபியன் திட்டத்தின்(புரட்சி மூலம் அன்றி படிப்படியாக பொதுவுடமைக் கோட்பாடுகளைப் பரவச் செய்ய வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் பேபியன்கள்-மொர்) ஒரு முக்கியமான உட்கூறாக அது இருந்தது. பேபியன்கள் அதைத் தாண்டிச் செல்லாததற்காக பிரெட்ரிக் ஏங்கெல்° அவர்களை விமரிசித்தார்.  ஆனால், நிலத்தின் ஒரு பகுதியாவது தேசியமாக்கப்படுவது முற்போக்கான சமூக மாற்றத்திற்கான திட்டம் எதுவாயினும் அதன் இன்றியமையாத உட்கூறாக இருக்க வேண்டும். என்றபோதிலும், ஆதி மூலதனத் திரட்டலைக் கட்டுப்படுத்துவதந்கு இதற்கு அவசியமில்லாமல் இருக்கலாம். நிலப் பயன்பாட்டை அரசு ஒழுங்குபடுத்துவதும், நிலப் பரிமாற்றங்களின் மீது அரசுக் கட்டுப்பாடு இருப்பதும் அதற்குப் போதுமானதாக இருக்கும். மற்ற விஷயங்களுடன் கூட நிலம் வாங்குவதில் அரசுக்கு இருக்கும் முதல் உரிமையின் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.
ஒரு கேள்வி எழலாம்: ஆதி மூலதனத் திரட்டலுக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்தால் அத்தகைய நடவடிக்கைகளை அரசு எந்திரத்தின் மூலம் எப்படிச் செயல்படுத்த முடியும்?  குறிப்பாக, அரசுக் கட்டுப்பாடு மற்றும் அரசால் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை முன் வைப்பது ஏற்கனவே ஊழலில் மூழ்கியிருக்கும் அதே அரசியல் வர்க்கத்தையே ஊழலை எதிர்க்கும் வேலைக்குப் பொறுப்பாக்குவது விநோதமாகத் தோன்றக் கூடும். ஆனால், நாம் இங்கு பல நடவடிக்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஊழல் தடுப்புச் சட்டமும் ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், அரசு ஊழியர்களின் ஊழல் நடைமுறைகளின் மீதான கட்டுப்பாட்டுடன் சேர்த்தே அரசுக் கட்டுப்பாடு வேண்டும் என்றே இங்கு ஆலோசனை கூறப்படுகின்றது.
என்றபோதிலும், இறுதியாக, மக்கள் தலையீட்டின் மூலம் மட்டுமே ஆதி மூலதனத் திரட்டலையும், அது பெருக்கும் ஊழலையும் தடுக்க முடியும்.  அரசியல் வர்க்கத்தை தன்னால் ஆதாயம் அடைவோர் வட்டத்திற்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ஆதி மூலதனத் திரட்டலால் பலவீனப்படுத்தப்படும் ஜனநாயகம் மக்கள் தலையீட்டின் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.
ஆதி மூலதனத் திரட்டலுக்கு எதிராக ஒரு வலுவான மக்கள் இயக்கம் கட்டப்பட வேண்டும். அது மட்டுமே ஜனநாயகத்தைக் காக்கும் அரணாக இருக்க முடியும். மக்களுக்குப் பதிலாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், மக்களின் தலையீட்டின் தேவையைத் தவிர்க்கும் ஊழல் எதிர்ப்பு ரட்சகர்களின் சாகும் வரை உண்ணாவிரதங்கள், அவர்களின் நோக்கம் எவ்வளவு நல்லதாக இருந்தபோதிலும், ஒரு முழுமையான சட்டத்தை உருவாக்குவதில் அவர்களது உண்ணாவிரதம் எவ்வளவு வெற்றிகரமானதாக ஆன போதிலும், ஊழலை அல்லது ஆதி மூலதனத் திரட்டலை முறியடிப்பதில் அவர்கள் வெற்றி பெற முடியாது.

-------------------------நன்றி: பிரன்ட்லைன், ஆகஸ்ட் 26, 2011.    
 
 (மார்க்சிஸ்ட், செப்டம்பர் 2011 இதழில் வெளியானது).






 



   

Thursday, September 1, 2011

தூக்கு


ஜார்ஜ் ஆர்வெல்


தமிழில்: அசோகன் முத்துசாமி

அது பர்மாவில் மழையில் நனைந்திருந்த ஒரு காலை நேரம். மஞ்சள் வெள்ளீயத்தாள் போன்ற மங்கலான மஞ்சள் ஒளி சிறையின் உயர்ந்த மதில்கள் மீது சாய்ந்திருந்தது. மரண தண்டனை கைதிகளின் அறைகளுக்கு வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம்; முன்புறம் இரட்டைக் கம்பிகள் கொண்ட, மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகள் போன்ற அறைகள் வரிசையாக இருந்தன. ஒவ்வொரு அறையும் பத்தடிக்கு பத்தடி அளவு கொண்டது; மரத்தாலான ஒரு படுக்கையும் தண்ணீர் குடமும் தவிர அவற்றுக்குள் வேறொன்றுமில்லை. அவற்றுள் சிலவற்றில் மாநிற மனிதர்கள் தங்கள் உடல்களை போர்வையால் சுற்றிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மரண தண்டனைக் கைதிகள்; இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்படப் போகிறவர்கள்.
எங்களுடைய கைதி அவரது அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு இந்து; உருவில் மிகச் சிறியவர்; குடுமி தவிர தலை முழுமையாக மழிக்கப்பட்டிருந்தது; தெளிவற்ற கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. பெரிய, கனமான மீசை வைத்திருந்தார்; திரைப்படங்களில் வரும் நகைச்சுவை நடிகரைப் போல அவரது உடலின் அளவிற்கு ஒவ்வாத வகையில் நகைப்பிற்கிடமான அளவு மிகப் பெரிய மீசை. உயரமாக வளர்ந்திருந்த ஆறு இந்திய சிறைக் காவலர்கள்  அவருக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்; அவரை தூக்கு மேடைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் அருகில் நின்றிருந்தனர்; மற்றவர்கள் அவருக்கு கைவிலங்கு மாட்டி, அதன் சங்கிலியை விலங்கிற்குள் சுற்றி, தங்களது இடுப்பு பெல்டுடன் பிணைத்துக் கொண்டனர்; அவரது கைகளை அவருடைய உடலுடன் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டினர். அவருக்கு மிக நெருக்கமாக முண்டியடித்துக் கொண்டிருந்த அவர்களது கைகள் எப்போதும் அவரது உடலின் மீதே இருந்தன; வருடிகொடுப்பது போலவும், எச்சரிக்கையாகவும் அவரைப்  பிடித்திருந்தன. அவரைத் தொட்டு உணர்ந்து கொண்டே இருப்பதன் மூலம் அவர் தங்கள் பிடியில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்வது போல பற்றியிருந்தனர். இன்னும் உயிருள்ள மீனை, தண்ணீருக்குள் தாவிவிடக் கூடிய மீனைப் பிடித்திருப்பது போல. ஆனால், அவர் எதிர்க்காமல் அமைதியாக நின்றிருந்தார்; என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் போல் தனது கைகளை தளர்ச்சியாகக் கயிற்றுக்குக் கொடுத்திருந்தார்.
கடிகாரம் எட்டு முறை ஒலித்தது; தூரத்தில் பாசறையிலிருந்து கொம்பொலி ஈரக்காற்றில் தனியே மிதந்து வந்தது. எதையோ யோசித்த வண்ணம் எங்களிடமிருந்து தனியே பிரிந்து நின்று தன்னிடமிருந்த கைத்தடியால் சரளைக் கற்களைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அந்த ஓசை கேட்டு நிமிர்ந்தார். அவர் ராணுவ மருத்துவராக இருந்தவர்; டூத் பிரஷ் போன்ற வெள்ளை மீசையும், கரகர குரலும் கொண்டவர். 'கடவுளே, பிரான்சிஸ் சீக்கிரம் சீக்கிரம்' என்றார், எரிச்சலுடன். 'இந்த மனிதன் இந்நேரம் செத்துப் போயிருக்க வேண்டும். இன்னுமா நீ தயாராகவில்லை?'.
தலைமை சிறைக் காவலரான பிரான்சிஸ் ஒரு திராவிடர்; குண்டாக இருந்த அவர் உடற்பயிற்சி ஆடையும், தங்க பிரேம் போட்ட கண்ணாடியும் அணிந்திருந்தார்; 'இதோ ஐயா, இதோ' என்று கையசைத்த வண்ணம் வெறுமையாகக் கூறினார். 'எல்லாம் திருப்திகரமான வகையில் தயாராக இருக்கிறது. தூக்கிலிடுபவர் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் போகலாம்'.
'நல்லது, அப்படியானால் வேகமாக நடந்து செல்லுங்கள். இந்த வேலை முடிகிற வரையில் கைதிகளுக்குக் காலைச் சிற்றுண்டி கொடுக்க முடியாது'.
நாங்கள் தூக்கு மேடையை நோக்கி நடந்தோம். கைதியின் இருபக்கமும் இரு சிறைக் காவலர்கள் தங்கள் தூப்பாக்கிகளை கீழ் நோக்கி சாய்த்துப் பிடித்த வண்ணம் நடந்து வந்தனர். மற்றும் இருவர் அவரது கைகளையும், தோள்பட்டைகளையும் இறுகப் பற்றிய வண்ணம் அவருக்கு மிக நெருக்கமாக நடந்து வந்தனர்; ஏககாலத்தில் அவரைத் தள்ளிக் கொண்டும், அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டும். மாஜிஸ்டிரேட்டுகளும் அவர்களைப் போன்றவர்களுமான எஞ்சிய நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தோம். ஒரு பத்து கெஜம் நடந்திருப்போம்; எங்களது ஊர்வலம் எவ்வித உத்தரவோ அல்லது எச்சரிக்கையோ இன்றி திடீரென்று நின்றது. ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது; எப்போது என்ன நடக்கும்  என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாய் சிறைச்சாலைக்குள் தோன்றியது. சத்தமாகக் குறைத்துக் கொண்டே எங்களுக்கு மத்தியில் வந்தது; அத்தனை மனிதர்களை ஒன்றாகப் பார்த்த மகிழ்ச்சியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே எங்களைச் சுற்றித் சுற்றித் தாவியது. அது ரோமங்கள் நிறைந்த பெரிய நாய்; ஏர்டேல் வகைக் கலப்பினம்......ஒரு கணம் எங்களைச் சுற்றி இறுமாப்புடன் நடந்தது; பின்னர், எவரும் அதைத் தடுக்கும் முன்னர், அது கைதியை நோக்கிப் பாய்ந்து அவரது முகத்தை நக்க முயற்சித்தது. நாயைப் பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் எல்லோரும் திகைத்துப் போய்விட்டோம்.
'இந்தக் கொடூரமான மிருகத்தை யார் உள்ளே விட்டது? யாராவது அதைப் பிடியுங்கள்' என்று கண்காணிப்பாளர் கோபமாகக் கூறினார்.
பாதுகாப்பிலிருந்து விலகிய ஒரு சிறைக் காவலர் அலங்கோலமாக நாயை விரட்டிக் கொண்டு ஓடினார். ஆனால், அது அவரது பிடிக்குள் சிக்காமல், எல்லாவற்றையும் விளையாட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டது போல், துள்ளிக் குதித்தாடியபடி ஓடியது. கை நிறைய கற்களை எடுத்துக் கொண்ட ஒரு இளம் யுரேசியக் காவலர் நாயைக் கல்லால் அடித்து விரட்டிவிட முயற்சித்தார்; ஆனால், அது கற்களிடமிருந்து தப்பித்து மீண்டும் எங்களை நோக்கி வந்தது. அதன் குரைப்புச் சத்தம் சிறைச் சுவர்களில் எதிரொலித்தது. இரண்டு சிறைக் காவலர்களின் பிடியில் இருந்த கைதி இதுவும் தூக்கிலிடுவது தொடர்பான ஒரு சம்பிரதாயம் என நினைத்துக் கொண்டவர் போல் ஆர்வமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிடங்களுக்குப் பின்னர் யாரோ ஒருவர் அந்த நாயைப் பிடித்துவிட்டார். பின்னர் நாங்கள் என்னுடைய கைக்குட்டையை அதன் கழுத்தில் சுற்றி இழுத்துக் கொண்டு மேலே நகர்ந்தோம். நாய் இன்னும் திமிறிக் கொண்டும், சிணுங்கிக் கொண்டும் இருந்தது.
தூக்கு மேடை இன்னும் நாற்பது கெஜம் தூரத்தில் இருந்தது. எனக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கைதியின் வெற்று முதுகைப் பார்த்தேன். கட்டப்பட்ட கைகளுடன் நயமின்றி, ஆனால் தடுமாறாமல் உறுதியாக நடந்தார்; எப்போதும் தன்னுடைய முழங்கால்களை நேராக வைக்காத இந்தியராக சற்று குலுங்கி குலுங்கி நடந்தார். அவர் ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அவரது தசைகள் மிகச் சரியான இடத்திற்குச் சரிந்து வந்தன, அவரது தலைக் குடுமி மேலும் கீழும் ஆடியது, ஈரமான சரளைக் கற்களில் அவரது கால்கள் தடம் பதித்தன. அவரது தோள்களை சிறைக்  காவலர்கள் இறுகப் பற்றியிருந்தபோதிலும் பாதையிலிருந்த சேற்றுக் குட்டையைத் தவிர்ப்பதற்காக அவர் ஒரு முறை சற்று விலகி நடந்தார்.
அது புதிர்தான்; ஆனால், ஆரோக்கியமான, சுயநினைவுள்ள ஒரு மனிதனை அழிப்பதென்றால் என்னவென்று அந்த கணம் வரையிலும் நான் உணர்ந்திருக்கவில்லை. சேற்றுக் குட்டையைத் தவிர்ப்பதற்காக அந்த மனிதர் சற்று விலகி நடந்ததைப் பார்த்தபோது, முழு வீச்சில் இருக்கும் ஒரு வாழ்க்கையை வெட்டிச் சுருக்குவதன் மர்மத்தையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவறையும் கண்டேன். இந்த மனிதர் செத்துக் கொண்டிருக்கவில்லை. நம்மைப் போலவே அவரும் உயிருடனே இருந்தார். அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கிக் கொண்டிருந்தன; குடல்கள் உணவைச் செரித்துக் கொண்டிருந்தன; தோல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருந்தது; நகங்கள் வளர்ந்து கொண்டிருந்தன; திசுக்கள் உருவாகிக் கொண்டிருந்தன; மனப்பூர்வமான முட்டாள்தனத்துடன் அனைத்தும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தன. தூக்கு மேடையில் அவர் நின்று கொண்டிருக்கும்போதும், வாழ்வதற்கு ஒரு நொடியில் பத்தில் ஒரு பாகம் நேரம் மட்டுமே இருக்கும் வகையில் மேடை விலகி அவர் கீழே விழும்போதும் அவரது நகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும். அவரது கண்களால் மஞ்சள் நிறக் கற்களையும், சாம்பல் நிறச் சுவர்களையும் பார்க்க முடிந்தது; அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது; அவரால் முன்னுணர முடிந்தது; அவரால் பகுத்தறிய முடிந்தது-சேற்றுக் குட்டைகளையும் பகுத்தறிய முடிந்தது. அவரும் நாங்களும் ஒன்றாக நடந்து கொண்டிருந்த, ஒரே உலகத்தை பார்த்துக் கொண்டிருந்த, கேட்டுக் கொண்டிருந்த, உணர்ந்து கொண்டிருந்த, புரிந்து கொண்டிருந்த ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு நிமிடங்களில், சொடக்கென்ற ஒரு அதிவிரைவான  முறிவில், 'இருவரில்' ஒருவர் இறந்திருப்போம்-ஒருவர் அறிவற்றவர், ஒருவர் உலகமற்றவர்.
சிறையின் பிரதானப் பகுதியிலிருந்து தனியாக ஒரு சிறு முற்றத்தில் தூக்கு மேடை இருந்தது. உயரமான முட்புதர்கள் அளவுக்கு மீறி வளர்ந்திருந்தன. அது ஒரு கொட்டகையின் மூன்று பக்கங்கள் போல செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது; மேலே மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது. அதன் மீது இரண்டு தூண்களும், அவற்றுக்குக் குறுக்கே ஒரு உத்தரமும் இருந்தது; அதில் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கிலிடுபவர் சிறையின் வெள்ளைச் சீருடை அணிந்திருந்த தண்டனைக் கைதி; தலை நரைத்திருந்த அவர் தன்னுடைய இயந்திரத்திற்குப் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் நுழைந்தபோது ஒரு அடிமை போல் குனிந்து எங்களை வரவேற்றார். பிரான்சிஸினுடைய உத்தரவின்படி கைதியை இறுகப் பிடித்திருந்த சிறைக்காவலர்கள் இருவரும் அவரைத் தூக்கு மேடைக்கு தள்ளிக் கொண்டு போயினர்; மேடைப் படிகளில் ஏறுவதற்கு உதவினர். பின்னர் தூக்கிலிடுபவரும் மேலே ஏறி கயிற்றை கைதியின் கழுத்தைச் சுற்றி மாட்டினார்.  
ஐந்து கெஜ தூரத்தில் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். தூக்கு மேடையைச் சுற்றி சிறைக் காவலர்கள் ஒரு வட்டமாக நின்றார்கள். சுருக்குக் கயிறு பொருத்தப் பட்ட பின்னர் கைதி கடவுளின் பெயரைச் சொல்லி கூக்குரலிடத் துவங்கினார். அது 'ராம்! ராம்! ராம்! ராம்!' என்று சத்தமாக, மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அழுகுரல். அது அவசர அவசரமாகக் கூறப்பட்டதோ, பயத்தில் கூறப்பட்ட பிரார்த்தனையோ அல்லது உதவி கோரும் ஓலமோ அல்ல; ஆனால், அது கிட்டத்தட்ட மணியோசை போல் ஒரு சீராக, லயமாக இருந்தது. அந்த ஓலிக்கு நாய் ஒரு சிணுங்கலைப் பதிலாகக் கூறியது. தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த தூக்கிலிடுபவர் மாவுப் பை போன்ற ஒரு சிறு பருத்திப் பையை எடுத்தார். அதை கைதியின் முகத்தில் போட்டு மூடினார். ஆனால், அந்தத் துணியால் கம்மிய அந்த குரல் இன்னும் தொடர்ந்து பிடிவாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. 'ராம்! ராம்! ராம்! ராம்!' என்று மீண்டும் மீண்டும் ஒலித்தது.
தூக்கிலிடுபவர் கீழே இறங்கி நெம்புகோலைப் பிடித்துக் கொண்டு விறைப்பாக நின்றார். நிமிடங்கள் கழிவது போல் தோன்றியது. கைதியின் கம்மிய அழுகுரல் ஒரு கணம் கூட தடுமாறாமல் 'ராம்! ராம்! ராம்!' என்று ஒலித்துக் கொண்டே இருந்தது. தலை குனிந்து நின்றிருந்த கண்காணிப்பாளர் தன் கைத்தடியால் மெல்ல தரையைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்தார். அநேகமாக அவர் அந்த கூக்குரல்களை எண்ணிக் கொண்டிருக்கலாம்; கைதி ஐம்பது அல்லது நூறு தடவை கூக்குரலிடலாம் என்று அவர் ஒரு எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கலாம். கெட்டுப் போன காபி போல் இந்தியர்கள் வெளிறிப் போயிருந்தார்கள். ஒன்றிரண்டு துப்பாக்கி முனைக் கத்திகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. முக்காடிடப்பட்டு தூக்கு மேடையில் நின்றிருந்த அந்த மனிதரைப் பார்த்தோம். அவரது கூக்குரல்களைக் கேட்டோம். ஒவ்வொரு கூக்குரலுக்கும் அவரது ஆயுள் இன்னுமொரு நொடி அதிகரிக்கிறது. எங்கள் எல்லோர் மனதிலும் இந்த சிந்தனைதான் இருந்தது: 'சீக்கிரமாக அவரைக் கொன்று காரியத்தை முடியுங்கள்; சகிக்க முடியாத அந்த சத்தத்தை நிறுத்துங்கள்!'
திடீரென்று கண்காணிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். தலையை நிமிர்த்தி தன்னுடைய கைத்தடியை வேகமாக ஆட்டினார். 'ஆகட்டும்' என்று கிட்டத்தட்ட மூர்க்கமாகக் கத்தினார்.
சலசலக்கும் ஓசை கேட்டது; பின்னர் மயான அமைதி. கைதி மறைந்து விட்டார். கயிறு தன்னைத் தானே முறுக்கிக் கொண்டிருந்தது. நான் நாயை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அது உடனடியாக தூக்கு மேடையின் பின்பக்கத்திற்குத் தாவி ஓடியது. ஆனால், அது அங்கு சென்றவுடன் சட்டென்று நின்றது; குரைத்தது; பின்னர் கொட்டடியின் ஒரு மூலைக்குப் பின்வாங்கியது; முட்புதர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, அஞ்சி நடுங்கியவாறு எங்களைப் பார்த்தது. கைதியின் உடலைப் பரிசோதிப்பதற்காக நாங்கள் மேடையைச் சுற்றிச் சென்றோம். கால் பெருவிரல்கள் நேராகக் கீழ் நோக்கிப் பார்த்திருக்க, ஒரு கல்லைப் போல் உயிரற்று, மெல்லச் சுழன்ற வண்ணம் அவர் தொங்கிக் கொண்டிருந்தார்.
கண்காணிப்பாளர் தன்னுடைய கைத்தடியை நீட்டி அந்த வெற்றுடம்பைக் குத்திப் பார்த்தார். அது சற்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆடியது. 'அவர் நன்றாக இருக்கிறார்' (லீமீ's ணீறீறீ க்ஷீவீரீலீt) என்றார் கண்காணிப்பாளர். தூக்கு மேடைக்குக் கீழே இருந்து வெளியே வந்தார்; ஆழமான பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் இருந்த ஆழ்ந்த யோசனை சட்டென்று விலகிவிட்டிருந்தது. அவர் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 'மணி எட்டு எட்டாகிவிட்டது. நல்லது, இன்று காலை வேலை முடிந்தது. கடவுளுக்கு நன்றி'.
சிறைக் காவலர்கள் தங்களது துப்பாக்கி முனைக் கத்திகளைக் கழற்றினர்; அவ்விடத்தைவிட்டுச் சென்றனர். தான் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்து அமைதியடைந்திருந்த நாய் அவர்கள் பின்னால் சந்தடியின்றிச் சென்றது. தூக்கு மேடைக் கொட்டடியைவிட்டு வெளியே வந்தோம்; மரண தண்டனைக் கைதிகள் இருந்த அறைகளைக் கடந்து, சிறையின் மையத்தில் இருந்த பெரிய முற்றத்திற்கு நடந்தோம். தடிகள் வைத்திருந்த சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டில் தண்டனைக் கைதிகள் ஏற்கனவே தங்களது காலை உணவைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்திருந்த அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தகரத் தட்டு இருந்தது; இரண்டு சிறைக் காவலர்கள் வாளிகளில் இருந்து அரிசிச் சோறு போட்டுக் கொண்டே வந்தார்கள்; தூக்கிலிடப்பட்டதைப் பார்த்த பிறகு அது ஒரு மிகவும் இனிமையான, மகிழ்ச்சியான காட்சி போல் இருந்தது. வேலை செய்து முடிக்கப்பட்டு விட்டதில் எங்களுக்கு ஒரு பெரும் சுமை இறக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. பாட வேண்டும் போல், வேகமாக ஓட வேண்டும் போல், உள்ளூறச் சிரிக்க வேண்டும் போல் ஒரு உந்துதல் ஏற்பட்டது. உடனே எல்லோரும் மகிழ்ச்சியாக வளவளவென்று பேசத் துவங்கினார்கள்.
என்னருகே நடந்து வந்து கொண்டிருந்த யுரேசிய இளைஞன் நாங்கள் வந்த வழியை நோக்கி தலையசைத்துக் கொண்டே வந்தான்; பரிச்சயமான புன்னகையுடன் கூறினான்: 'ஐயா, உங்களுக்குத் தெரியுமா, நம்முடைய நண்பர் (செத்துப் போன மனிதரைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) அவருடைய மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதைக் கேட்டவுடன் பயத்தால் தன்னுடைய அறையின் தரையில் சிறுநீர் கழித்துவிட்டார். -ஐயா, தயவு செய்து என்னுடைய சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஐயா, என்னுடைய புதிய வெள்ளி சிகரெட் பெட்டியை நீங்கள் மெச்ச மாட்டீர்களா? பாக்ஸ்வாலாவிடமிருந்து இரண்டு ரூபாய் எட்டணாவிற்கு வாங்கினேன். அற்பபுதமான ஐரோப்பிய பாணி பெட்டி'.
பலர் சிரித்தார்கள்; ஆனால், யாருக்கும் எதற்காகச் சிரிக்கிறோம் என்பது உறுதியாகத் தெரியாது.
கண்காணிப்பாளருடன் நடந்து வந்து கொண்டிருந்த பிரான்சிஸ் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார். 'ஐயா, நல்லது, எல்லாம் மிகவும் திருப்திகரமாக முடிந்தது. எல்லாம் இப்படி சொடக்கென்று முடிந்துவிட்டது. எப்போதுமே இப்படி இருப்பதில்லை. மருத்துவர்கள் தூக்குமேடைக்குக் கீழே குனிந்து சென்று கைதியின் காலை இழுத்துப் பார்த்து அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய வேண்டிய நிகழ்வுகள் பற்றி எனக்குத் தெரியும். மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது!'
'உடலை வளைத்து நெளிக்க வேண்டியிருப்பது? அது மோசம்' என்றார் கண்காணிப்பாளர்.
'ஆம் ஐயா, அவர்கள் சமாளிக்க முடியாதவர்களாக ஆகும் போது ரொம்ப மோசம். எனக்கு நினைவிருக்கிறது. ஒருவரை நாங்கள் வெளியே அழைத்து வரச் சென்ற போது அவரது கூண்டின் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டார். நீங்கள் நம்பமாட்டீர்கள் ஐயா, அவரைப் பெயர்த்து எடுப்பதற்கு ஆறு சிறைக் காவலர்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காலையும் மூன்று பேர் பிடித்து இழுத்தார்கள். நாங்கள் அவருக்குப் புரிய வைக்க முயற்சித்தோம். 'அன்பான நண்பரே, எங்களுக்கு எவ்வளவு வேதனையும் தொந்தரவும் கொடுக்கிறாய் என்று நினைத்துப் பார்' என்று கூறினோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. அவர் ரொம்பவும் தொந்தரவு கொடுத்துவிட்டார்!'.
நான் மிகவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கண்காணிப்பாளரும் கூட நடுவாந்திரமாகப் புன்னகைத்தார். 'நீங்கள் அனைவரும் என்னுடன் வெளியில் வாருங்கள், மது அருந்தலாம்' என்று மிகவும் நட்புடன் அழைத்தார். 'என்னுடைய காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'.
சிறையின் மிகப் பெரிய இரட்டைக் கதவுகளைத் தாண்டி சாலைக்குச் சென்றோம். 'அவருடைய கால்களை இழுத்துப் பார்ப்பது' என்று திடீரெனக் கூவிய பர்மா நீதிபதி ஒருவர் சத்தமாக வாய்விட்டுச் சிர்ததார். நாங்கள் அனைவரும் மீண்டும் சிரிக்கத் துவங்கினோம். அக்கணம் பிரான்சிஸ் கூறிய கதை மிக மிக வேடிக்கையானது போல் தோன்றியது. உள்நாட்டுக்காரர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என நாங்கள் அனைவரும் மிகவும் நட்புணர்வுடன் மது அருந்தினோம். செத்துப் போன மனிதர் நூறு கெஜங்களுக்கு அப்பால் இருந்தார்.

நன்றி: தி ஹிந்து, 31.8.11
  ........................................
 

       

 

Thursday, August 25, 2011

அன்னா ஹசாரே, காந்தி, அம்பேத்கர்



அசோகன் முத்துசாமி


அன்னா ஹசாரேயின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே உண்மையான இந்தியர்கள், மற்றவர்கள் எல்லாம் போலிகள் என்று அவரை ஆதரிப்பவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் மற்றவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று இந்து மதவெறி சங்பரிவாரம் கூறுவது போல் இது இருக்கிறது. அது போலவே அவசர நிலை காலத்தில் ‘இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா’ என்று காங்கிரசார் அகம்பாவமாகக் கூறியது போல் ‘அன்னா என்றால் இந்தியா, இந்தியா என்றால் அன்னா’  என்று ஹசாரே கூட்டம் கூறுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தன்னை ஒரு காந்தியவாதி எனக் கூறிக் கொள்ளும் அன்னா தான் காந்திய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்கிறார். உண்மை என்னவென்றால், காந்தி தான் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கடைப்பிடித்த வழிமுறைகளை சுதந்திர இந்தியாவில் கடைப்பிடித்திருப்பாரா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில்.
1919ம் ஆண்டு காந்தியின் செயலாளராக இருந்தவரும், பின்னர் சுயராஜ்ஜியக் கட்சியின் துணைச் செயலாளராக இருந்தவரும், 1948ம் ஆண்டு சோஷலி°ட் கட்சியின் தலைவராக இருந்தவருமான பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புருஷோத்தம் திரிகம்தா° ஒரு பேட்டியில் பின்வரும் ஒரு அரிய செய்தியைக் கூறியிருக்கிறார்.
“நான் அவரை மறுநாள் சந்திக்கச் சென்றபோது, வை°ராய்க்கு அனுப்புவதற்காக அவர் தயாரித்து வைத்திருந்த கடிதம் ஒன்றை என்னிடம் காட்டினார். சத்தியாகிரகம் செய்வதை ஒரு அரசியல் சட்ட உரிமையாக ஆக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே நான் மிகுந்த மரியாதையுடன் காந்திஜியிடம் பின்வருமாறு கூறினேன். ’நமது அரசியல் சட்டத்தை வடிவமைப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாளை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சத்தியாகிரகம் செய்வது ஒரு அரசியல் சட்ட உரிமை என்று நீங்கள் சொல்வீர்களா, அதை சட்டத்தில் எழுதி வைப்பீர்களா என்று கேட்டேன். அப்படி நாம் செய்தால் அதன் பொருள் என்ன? தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி யார் வேண்டுமானாலும் சட்டத்தை மீறலாம், அது குறித்து எதுவும் செய்ய முடியாது என்றுதானே பொருள்?  உண்மையில் இது உங்கள் கருத்துக்களுக்கே முரணானதாகும். சத்தியாகிரகம் என்றால் அதிகாரத்திற்கு அடங்க மறுப்பது, அதன் விளைவுகளைச் சந்திப்பது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்போது, சத்தியாகிரகம் ஒரு அரசியல் சட்ட உரிமையானால், அது அனுமதிக்கப்பட்டால், என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’. அந்த மாபெரும் மனிதர் சிந்திக்க ஆரம்பித்தார். ‘நீங்கள் சொல்வதிலும் விஷயம் இருகிகறது’ என்று அவர் கூறினார். மறுநாள் அவர் என்னை அழைத்தார். ‘உங்கள் கருத்து சரியான கருத்து. அந்தக் கடிதத்தை அனுப்புவதில்லை என்று நான் தீர்மானித்து விட்டேன்.’அந்த மனிதரின் மகத்துவம் அத்தகையது. அவர் எப்போதுமே திறந்த மனதுடன் இருந்தார். உண்மையில் அவரே அந்தக் கடிதத்தை எழுதி இறுதிப்படுத்திவிட்டு , நான் அதை அனுப்பவில்லை என்றார்’’.  (ஏ.ஜி.நுhரனி, பிரன்ட்லைன், ஆகஸ்ட் 26, 2011).
கதர் சட்டை அணிந்திருப்பதாலேயே அன்னா ஹசாரே காந்தியவாதியாகிவிட மாட்டார். இப்பிரச்சனை தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் என்ன கூறியிருக்கிறார் என்பதையும் பார்த்துவிடுவோம். பின்னர் மீண்டும் ஹசாரேவிற்கு வருவோம்.
  “1949 நவம்பர் 25ம் தேதி அரசியல் சட்ட முன்வரைவைச் சமர்ப்பித்துவிட்டு டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய தொலைநோக்கு பார்வை மிக்க உரையில் அப்போதுதுhன் பிறந்துள்ள ஜனநாயகத்திற்கு ஏற்படக் கூடிய மூன்று அபாயங்கள் பற்றி எச்சரித்தார். சமூக மற்றும் பொருளாதார அசமத்துவங்கள், சட்ட விரோதமான வழிமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் வழிபாடு ஆகியவை சம்பந்தப்பட்டவை அந்த அபாயங்கள்.
“அவரது இரண்டாவதும், தற்போதைய சூழலில் மிக முக்கியமானதுமான எச்சரிக்கை சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான போராட்ட வழிமுறைகள் தொடர்புடையவை. மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக வன்முறையான மற்றும் பலாத்காரமான வழிமுறைகளைக் கைவிடுமாறு அவர் மக்களை வலியுறுத்தினார். அதாவது, கீழ்ப்படிய மறுப்பது, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் மற்றும் உண்ணாவிரதம் இருத்தல் போன்ற கட்டாயப்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றைக் கைவிடுதல். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்: “பொருளாதார மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு சட்டப்படியான வழிமுறைகள் இல்லாதபோது, சட்ட விரோதமான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு பெருமளவு நியாயம் இருந்தது.’’ஆனால், அவற்றை அந்தக் காலத்திற்குப் பிறகு பயன்படுத்துவது அராஜகத்தின் இலக்கணம் அன்றி வேறில்லை. ‘அவற்றை எவ்வளவு விரைவாகக் கைவிடுகிறோமோ அவ்வளவு நமது தேசத்திற்கு நன்மை’ என்றார்.’’.(சுகதேவ் தோரட், தி ஹிந்து, ஆக°ட் 23, 2011).
அதாவது அம்பேத்கரும் அன்னாவின் வழிமுறையை ஆதரித்திருக்கமாட்டார். காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் பற்றி பலருக்கு பல கருத்துக்கள் இருக்கலாம். ஆட்சியில் இருப்பவர்களின் அணுகுமுறைக்கு ஏற்ப மக்களின் போராட்ட வடிவங்கள் மாறாலாம். தீவிரமடையலாம். ஆனால், ஹசாரே தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொள்வதுதான் பொருத்தமில்லை.  
ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் தான் சொல்கிற லோக்பால் மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றாவிட்டால்....என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மிரட்டுகிறார். அப்படிக் கட்டாயப்படுத்துவது காந்திய வழிமுறையுமல்ல. ஜனநாயகமுமல்ல. மார்க்சீய அறிஞர் பிரபாத் பட்நாயக்கின் வார்த்தைகளில் சொல்வதானால் இது பாராளுமன்றத்தின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதற்குச் சமம். (தி ஹிந்து, 24.8.11).
அனைத்துக் கட்சிகளாலும் விவாதிப்படாமல் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஆனால், அன்னாவின் குழு முன்வைக்கும் ஜன்லோக்பால் வரைவுச் சட்டத்தில் சில அடிப்படையான குறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மாநில ஊழல் தடுப்பு லோகாயுக்தா தொடர்புடையது. லோகாயுக்தா இல்லாத மாநிலங்களுக்கு அதை அமைக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்பதாகும்.
‘அன்னா குழுவின் இந்த கோரிக்கை பிரச்சனைகள் நிறைந்தது. லோகாயுக்தாக்களை உருவாக்குவது தற்போது மாநில சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. பாராளுமன்றம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கும், அரசியல் சட்டத்தில் உள்ள மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது’. (தி ஹிந்து தலையங்கம், 23.8.11).
விஷயம் இத்துடன் முடியவில்லை. ஊழல் புகார்களைப் பெறவும், விசாரிக்கவும், தண்டிக்கவும் முழு அதிகாரம் படைத்ததாக லோக்பால் உருவாக்குப்படுவது குறித்து தலித்துகள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
‘ஜனநாயகமற்ற சாதி அமைப்பின் சட்டகத்திற்குள் செயல்படும் நம்முடையது போன்ற ஒரு புதிய ஜனநாயகத்தில் அரசியல் சட்ட வழிமுறைகள் மற்றும் சமூக ஒழுக்கம் போன்றவை ஒரு குறிக்கோளுடன் பேணி வளர்க்கப்பட வேண்டும். ஊக்குவிக்கப்பட வேண்டும். லோக்பால் போன்ற ஒரு மிக முக்கியமான சட்டத்தை மிரட்டலுக்குப் பணிந்தும், நியாயமற்ற காலக் கெடுவிற்குள்ளும் நிறைவேற்றக் கூடாது. அதன் அனைத்து அம்சங்களும் மிகவும் கவனமாகவும், அனைத்துப் பிரிவினரின் ஒப்புதலுடனும் விவாதிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தினால் தங்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி தலித்துகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார்கள். குறிப்பிட்ட சாதிக்கு எதிரான உணர்வும், பாரபட்சமும் அளவின்றி நிலவும் ஒரு சமுதாயத்தில்,மிகப் பரந்த அதிகாரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிற இச்சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.’ (சுகதேவ் தோரட், மேகு கட்டுரை).
எப்படியாயினும் இப்படியொரு சிக்கலான நிலைமையை உருவானதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் பொறுப்பேற்க வேண்டும்.
   ----------------------------------------------24.8.11