ஸ்பெக்ட்ரம் ஊழல் - சாதியா, அரசியலா, வர்க்கமா?
இவர்கள் ஒரு விஷயத்தை மிக வசதியாக மறந்துவிட்டார்கள். தலித்தான ராசாவை வளம் கொழிக்கும் இந்தத் துறையின் அமைச்சராக ஆக்கியதே வடநாட்டு மேல்சாதி முதலாளிகள்தான். (டாடா ஒரு பார்சி. அம்பானி பனியா சாதி. ராடியா பஞ்சாபைச் சேர்ந்த உயர்சாதிப் பெண்மணி.). ராசா அமைச்சராக ஆகக் கூடாது என்று விரும்பிய தயாநிதி மாறன் சூத்திரர். அவர் தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆக வேண்டும் விரும்பிய சுனில் மிட்டல் உயர்சாதிக்காரர். ராசாவின் சார்பாக இடையில் புகுந்து காங்கிரஸ்காரர்களிடம் உப தரகர்களாக வேலை பார்த்த பர்கா தத் மற்றும் வீர் சிங்க்வி போன்றோரும் மேல்சாதிக்காரர்கள்தான். ஆக, குறைந்த பட்சம் இந்த விவகாரத்தில் சாதிக்கு எந்தப் பாத்திரமும் இல்லை.
பார்ப்பன பத்திரிக்கைகள்தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றன என்றொரு வாதமும் முன் வைக்கப்படுகின்றது. அதுவும் சுத்த அபத்தம். ஊழல் விஷயங்களை அம்பலப்படுத்துவதைப் பொருத்த வரையில், அரசியலும் வர்க்க கணக்குகளும்தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கின்றன. காஷ்மீர் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்ட போபர்ஸ் ஊழலை வெளிக் கொணர்ந்ததில் ஹிந்து நாளிதழுக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கும் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது. அப்பத்திரிக்கைகளின் முதலாளிகள் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது போல் அவரது தாய் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நகர்வாலா ஊழலை அம்பலப்படுத்தியதும் வடநாட்டு பார்ப்பன ஊடகங்கள்தான்.
மேலும், தமிழகத்தில் உள்ள ஊடகங்களைப் பொருத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேறு எதைக் காட்டிலும் திமுகவைச் சேர்ந்த சூத்திர முதலாளிகளால் நடத்தப்படும் சன் தொலைக்காட்சிதான் அலைக்கற்றை ஊழலைப் பற்றி இடைவிடாமல் செய்திகள் கூறிவந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இப்படியெல்லாம் எழுதுவதன் நோக்கம் இந்த நாட்டில் பார்ப்பனீய ஆதிக்கமே இல்லை என்பதல்ல. 2ஜி ஊழல் அதையும் தாண்டிய பெரிய விஷயம்.
உண்மையைச் சொல்லப் போனால் இப்போதும் கூட ராடியா ஒலிநாடாக்கள் 2010 மே மாத வாக்கிலேயே கசிந்துவிட்டன. அது குறித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சிகளில் அரை வரி, ஒரு வரிச் செய்திகளும் சொல்லப்பட்டன. அப்புறம் அப்படியே அமுக்கி விட்டன இதே ஊடகங்கள்.
"டெல்லியில் இந்த ஒலிநாடாக்கள் பல மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால், அவுட்லுக் மற்றும் ஓபன் ஆங்கில போன்ற வார இதழ்கள் அந்த உரையாடல்களின் எழுத்து வடிவத்தை பிரசுரித்த பின்னர்தான் அவை மக்களின் கவனத்திற்கே வந்தன. இதற்குப் பின்னரும் கூட மற்ற ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடுவதற்கு சில காலம் பிடித்தது" (சத்ய சாகர், எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி.டிசம்பர் 25, 2010).
இப்போதும் கூட இந்த ஒலிநாடாக்கள் விஷயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் கண்டும் காணாமல்தான் இருக்கின்றன. பல பெரிய முதலாளிகள் சங்கடப்படுகின்ற விவகாரம் என்பதால் விளம்பர வருமானம் போய்விடுமோ என்று அஞ்சுகின்றன. பாராளுமன்றமே ஸ்தம்பிக்கமால் இருந்திருந்தால் இந்த விவகாரமே இந்த அளவிற்கு மக்களின் கவனத்தைப் பிடித்திருக்குமா என்பதே சந்தேகம்தான். பாராளுமன்றம் இயங்க முடியாது என்கிற நிலை வந்தபோதுதான் ராசாவே பதவி விலகினார்.
ஏதோ பார்ப்பனரான சுப்பிரமணியம் சுவாமிதான் இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் போல் இதை பார்ப்பன சூழ்ச்சி என்பது பெரியார் முகமூடியைப் போட்டு தப்பித்துவிடும் முயற்சிதான். மேலும் இந்த ஊழலை அம்பலப்படுத்திய புகழையும் ஒரு பார்ப்பனருக்கே அளிக்க திமுகவும், அதன் திராவிட நண்பர்களும் விரும்பிகின்றனர் போலும். சுமார் இரண்டரை வருடங்களாக இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பி வருகின்றது. இப்போது இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்ற பாஜக தயங்கி தயங்கித்தான் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தது. பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர்தான் முழு வேகத்தில் இதைக் கையில் எடுத்தது.
இறுதியாக ஒரு கேள்வி மிச்சம் இருக்கின்றது. யார் இந்த ஒலிநாடாக்களை கசிய விட்டது? இந்த உரையாடல்களைப் பதிவு செய்ததே மத்தியஅரசுதான். மொத்தம் 5851 ஒலிநாடாக்கள். அதில் முதலில் ஒரு 140ம் பின்னர் ஒரு 800ம் வெளிவந்திருக்கின்றன. மீதியுள்ள நாடாக்களில் என்ன இருக்கின்றது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தேர்வு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் மட்டும்தான் திட்டமிட்டு கசிய விடப்படுகின்றன.
அத்துடன் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு இந்த உரையாடல்களை ஆய்வு செய்த பின்னர் தன்னுடைய மேலிடத்திற்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் அனுப்பிய ரகசிய அறிக்கை அப்படியே ஸ்கேன் செய்யப்பட்ட நகலாக வெளிவருகின்றது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அமைச்சர் ராசாவிற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதே போல் வெளிவருகின்றது. அரசாங்கத்திலிருப்பவர்களின் உதவியில்லாமல், அல்லது விருப்பமில்லாமல் இவை வெளிவந்திருக்க முடியாது.
யாராக இருக்கும் என்பது குறித்து ஐந்து ஊகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரதமராகும் ஆசையில் உள்ள பிரனாப் முகர்ஜி இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அவரது நிதித்துறையின் கீழ்தான் வருகின்றன. நாட்டிலேயே மிக நேர்மையான அரசியல்வாதி ஏ.கே.அந்தோனிதான் என்று ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியது இவருக்குப் பிடிக்கவில்லை. இவர் முகேஷ் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் பிரதமராகும் கனவு இருக்கின்றது. ஒரு குழப்பத்தை உருவாக்குவதன் மூலம் அரசைக் கவிழ்த்து, ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி, அதில் தான் பிரதமராகிவிடலாம் என்று திட்டமிடுவதாகச் சிலர் கூறுகின்றனர். இவர் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த ரகசியம்.
அனில் அம்பானி இதைச் செய்திருக்கலாம். ஒலிநாடாக்களைக் கசிய விடுவதன் மூலம் முகேசுக்கும், அவரது தரகர் ராடியாவிற்கும் சிக்கலை உண்டு பண்ணுவது. மேலும், அனில் பெரும் பணச்சிக்கலில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதையும், தன்னுடைய இதர முறைகேடுகளையும் மறைப்பதற்காக இப்படிச் செய்தார் என்பது வாதம்.
தயாநிதி மாறன் இதைச் செய்திருக்கலாம். தன்னிடமிருந்து தொலை தொடர்புத் துறையைப் பறித்த ராசா, ராடியா, கனிமொழி போன்றவர்களைப் பழி வாங்க இப்படிச் செய்திருக்கலாம்.
ஏர்டெல் முதலாளி சுனில் மிட்டல் டேப்புகள் கசிவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். மாறன் மந்திரியாக வேண்டும் என்று அவர் விரும்பியது இப்போது அனைவரும் அறிந்த விஷயம். செல்போன் சேவையில் கிட்டத்தட்ட ஒரு ஏகபோகமாக இருந்த அவரது நிறுவனம் ராசாவின் கொள்கையால் அந்த நிலையை இழந்துவிட்டது என்று காரணம் கூறப்படுகின்றது. (ஆதாரம்: டெகல்கா, ஜனவரி 1, 2011).
இன்றைய அரசியல் சூழலில் இது ஐந்தில் ஏதேனும் ஒன்று சாத்தியம்தான். எது என்பது நமக்குத் தெரியாது. எனினும், ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் அவரது சாதிக்கும் சம்பந்தமில்லை என்பது மட்டும் நிச்சயம். அரசியல் போட்டிகளும், முதலாளிகளுக்கு இடையிலான போட்டிகளும்தான் காரணம்.
No comments:
Post a Comment