2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கோ, பிரதமருக்கோ சம்பந்தமில்லை என்கிற மாயையை உருவாக்க இடைவிடாமல் முயற்சிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதிதான் கடந்த டிசம்பர் 23ம் தேதி ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அமைச்சர் ராசாவிற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்து வேண்டுமென்றே அரசைச் சேர்ந்தவாகளால் கசியவிடப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகின்றது. கடிதங்கள் கசியவிடப்பட்ட நோக்கம் என்னவாக இருந்தாலும், மன்மோகன் சிங் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதையே அவை மீண்டும் மெய்ப்பிக்கின்றன.
2ஜி அலைக்கற்றை ஊழலில் மிக முக்கியமான குற்றச்சாட்டுகள் இரண்டு. முதலாவதாக, 3ஜி அலைக்கற்றைகளை ஏலம் விட்டது போல் அவை வெளிப்படையாக ஏலம் விடப்படவில்லை என்பது. இரண்டாவதாக, விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை 2007 அக்டோபர் 1லிருந்து 2007 செப்டம்பர் 25க்கு தன்னிச்சையாக மாற்றியது. அதன் மூலம் ‘வேண்டப்பட்ட’ நிறுவனங்கள் மட்டும் அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதை உறுதி செய்தது.
பிரதமர் நவம்பர் 2ம் தேதி ஒரு கடிதம் எழுதுகின்றார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலை தொடர்புத் துறை நிறுவனங்களாலும், சில ஊடகங்களாலும் பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன என்று அந்தப் பிரச்சனைகளைப் பற்றி குறிப்பிடுகின்றார். அலைக்கற்றை கையிருப்பு குறைவாக இருப்பது பற்றியும், புதிய உரிமங்களுக்கான விண்ணப்பங்களோ ஏராளமாக வந்திருப்பது பற்றியும் (22 சேவை வட்டங்களுக்கு 575 விண்ணப்பங்கள் வந்திருந்தன) எழுதியிருக்கின்றார்.
‘நியாயமான தன்மையையும், வெளிப்படையான தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளின் மீது உடனடி கவனம் செலுத்துமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றேன். இவ்விஷயத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னர் நிலைமை பற்றி எனக்கு தெரிவிக்கவும்’ என்று அக்கடிதம் முடிகின்றது.
கடிதத்தின் பின்னிணைப்பாக ஐந்து விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. அதிலும் அலைக்கற்றை பற்றாக்குறை பற்றியும் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்பிரச்சனையை சமாளிக்க இரண்டு ஆலோசனைகள் கூறுகின்றார். எங்கெங்கு சட்டப்படியும், துறை மரபுப்படியும் சாத்தியமோ அங்கெல்லாம் ஏலம் நடத்துவது ஒன்று. நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பது மற்றொன்று.
இரண்டுமே சரியான வழிமுறைகள்தான். சரக்கு குறைவாகவும், கேட்பு (டிமான்ட்) அதிகமாகவும் இருந்தால் அதைச் சமாளிக்க ஏலம் விட்டு, அதிக விலை கொடுப்பவர்களுக்கு விற்பது. இல்லை என்றால் கட்டணத்தை அல்லது விலையை அதிகரித்து போட்டியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது. ஆனால், ராசா இரண்டுமே செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதற்கு பிரதமருக்கு எழுதிய கடிதங்களில் விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.
‘அலைக்கற்றை ஏலம் விடும் பிரச்சனை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தாலும், தொலை தொடர்பு கமிஷனாலும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ஏலம் வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஏனெனில், இப்போது உரிமம் பெற்றுள்ளவர்கள் ஒரு வட்டத்திற்கு 10 மெகாஹெட்ஸ் வரை அலைக்கற்றை கட்டணம் எதுவும் இல்லாமல் பெற்றிருக்கின்றனர். ஆதலால், ஏலம் விடுவது புதிய விண்ணப்பதாரர்களிடம் அநியாயமாகவும், பாரபட்சமாகவும், கொடுங்கோன்மையாகவும், ஏறுமாறாகவும் நடந்து கொள்வதாக ஆகிவிடும். ஏனெனில், அது அவர்களுக்கு சமவாய்ப்பை அளிக்காது’ என்று அதே தேதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுள்ளார். நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதையும் அதே காரணத்தைக் கூறி தவிர்த்துள்ளார்.
அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய மாற்று நடைமுறைகள் பற்றி தனது தறையிலும், சில சட்ட வல்லுநர்களிடமும் விவாதித்ததாகவும், அது சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் பிரதமரின் கடிதம் வந்த அதே தேதியில் அது வருவதற்கு முன்பு அதே நாளில் இவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார். சட்ட அமைச்சகம் அதைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக மந்திரிகள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனை கூறியதாகவும், பொதுவாக முக்கியமான கொள்கை முடிவுகள் பற்றி மட்டுமே மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப்படும் என்பதால் இந்த விஷயத்தில் சட்ட அமைச்சகத்தின் யோசனை பொருத்தமற்றது என்றும் எழுதியிருக்கின்றார்.
அதே கடிதத்தில் ‘நடப்பில் இருக்கும்’ முதலில் வந்தவருக்கு முதலில் உரிமம் என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 1 என்று செப்டம்பர் 24ம் தேதி அறிவித்து, அந்த செய்தி செப்டம்பர் 25ம் தேதி செய்திதாள்களில் வருகின்றது. அதே செப்டம்பர் 25 ஐ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியதற்கான இறுதிநாளாக மாற்றி, அது வரையில் வந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அப்படிச் செய்யும்போது அந்த தேதிக்குப் பின்னர் வந்த பல விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அலைக்கற்றை பற்றாக்குறைப் பிரச்சனையை இப்படி ‘சமாளித்திருக்கின்றார்’.
பிரதமர் எழுதிய கடிதத்தில் அமைச்சரிடமிருந்து இப்படியொரு கடிதம் வந்ததாக குறிப்பு எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆக இவர் ஒரு பக்கம் கடிதம் எழுதியிருக்கின்றார். அவர் ஒரு பக்கம் கிட்டத்தட்ட ஏககாலத்தில் கடிதம் எழுதியிருக்கின்றார்.
ராசா அக்கடிதத்திற்கு அன்றே எழுதிய பதில் கடிதத்தில்தான் மேலே கூறியபடி தான் கடைப்பிடித்த நடைமுறையை நியாயப்படுத்தியிருக்கின்றார். தொலை தொடர்பு நிறுவனங்கள் எழுப்பிய பிரச்சனை குறித்து பதில் சொல்லும்போது, தன்னுடைய விளக்கத்திற்குப் பின்னர் ஏர்செல் மற்றும் ஸ்பைஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் தாங்கள் எழுப்பிய பிரச்சனைகள் தொடர்பாக தாங்கள் சம்பந்தப்பட்ட துறையில் போட்டிருந்த மனுக்களை திரும்பப் பெற்றுவிட்டனர் என்று கூறியிருக்கின்றார்.
அதற்குப் பின்னர் 2007 டிசம்பர் 26ம் தேதி ராசா ஐந்து பக்கக் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதுகின்றார். அதில் பிரதமருடனும், மந்திரிகள் குழுவின் தலைவரான வெளியுறவுத் துறை அமைச்சருடன் தன்னுடைய துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி கலந்தாலோசனை நடத்தியதாகவும் பிரதமருக்கு நினைவூட்டி, தான் எடுத்த நடவடிக்கைகள் பற்றி நீண்ட விளக்கம் கொடுத்திருக்கின்றார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் 2008 ஜனவரி 3ம் தேதி பதில் கடிதம் எழுதியிருக்கின்றார்.
"அன்புடைய திரு ராசா அவர்களுக்கு, தொலை தொடர்புத் துறையில் நிகழ்ந்த சில சமீபத்திய வளர்ச்சிப் போக்குகள் குறித்து தாங்கள் எழுதிய 2007 டிசம்பர் 26ம் தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது. வாழ்த்துக்களுடன், மன்மோகன் சிங்."
அவ்வளவுதான். வேறு ஒரு வார்த்தை இல்லை. அலைக்கற்றை பற்றாக்குறையைப் பயன்படுத்தி, தனக்கு முன்னர் அத்துறையின் அமைச்சர்கள் கடைப்பிடித்த அதே நடைமுறையையே தான் பின்பற்றியதாகக் கூறி, பழைய விலைக்கே தனக்கு வேண்டியவர்களுக்கு (தனக்கும்) உரிமங்கள் கொடுத்திருக்கின்றார்.
(பொருட்கள் அல்லது சேவைகளின் பற்றாக்குறையே ஊழல் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றது என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளவும். ஆதலால் எப்போதும் பற்றாக்குறை இருக்கும்படி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது முடியவில்லை என்றால் என்றால் செயற்கையாக பற்றாக்குறை உருவாக்கப்படும். சினிமா டிக்கெட், அவசியப் பொருட்கள், பண்டிகைக் கால போக்குவரத்து வசதிகள் போன்ற இதரவை விஷயத்தில் செயற்கையாக பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, விலைகளை உயர்த்தி கொள்ளையடிப்பார்கள். இதுதானே நடக்கின்றது?).
திருவாளர் பரிசுத்தம் அன்றிலிருந்து-ஜனவரி3, 2008- 2ஜி ஊழல் பற்றி வாயே திறக்கவில்லை. ராசா எழுதிய கடிதத்தை அப்படியே மறுசொல் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டார். மன்மோகன் எழுதிய கடிதத்தின்படியே நியாயமான தன்மையும், வெளிப்படை தன்மையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இல்லாத போதிலும் அவர் அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அதைத் தடுக்க அவர் ஏன் எதுவும் செய்யவில்லை? அவருக்கு பங்கு இருக்கின்றதா?
இல்லை, நடவடிக்கை எடுத்தால் திமுக ஆதரவை வாபஸ் வாங்கிவிடும், அரசாங்கம் கவிழ்ந்துவிடும், அதனால் சகித்துக் கொண்டார் என்று சப்பைக் கட்டு கட்டப்படுகின்றது. அப்படி அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கவும், அமெரிக்காவிற்கு வாலாட்டவும், விலைவாசி-வேலையின்மை-பட்டினி என்று மக்கள் மீது பல முனைகளில் தாக்குதல் நடத்துவதற்கா?
ஒரு வாதத்திற்காக அவர் குற்றம் செய்யவில்லை என்றாலும், குற்றம் நிகழும்போது அதைத் தடுக்கும் அதிகாரம் இருந்தும் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர், பார்த்துக் கொண்டிருப்பவர் காவல் துறை அதிகாரியாக இருந்தால் மக்களின் கதி என்னாவது?
- அசோகன் முத்துசாமி
அலைக்கற்றை விலையைக் குறைத்தும் ,விலைவாசியை ஏற்றியும் தங்கள் முதலாளிகளைத் திருப்திபடுதுவதில் காங்கிரசும்,மதவாத பி.ஜே.பி யும் மிக விசுவாசமாய் உள்ளனர்.இடது சாரி களுடைய பலத்துடன் , மீண்டும் முன்றாவது அணியின் தேவையை மக்கள் உணர்ந்து கொண்டால் நன்று.
ReplyDelete