அசோகன் முத்துசாமி
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் தமிழினத் துரோகிகள் என்பதால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது, 2009ல் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு இலங்கை அரசின் மீது போரை நிறுத்துமாறு நிர்ப்பந்தம் கொண்டு வராமல்,யுத்தம் நடந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தது, பண உதவி செய்தது-இதுவே அக்கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றபோதிலும், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மக்களுக்கு செய்த நன்மை தீமைகள் என்னவென்று பரிசீலிப்பதுதான் பிரதானம் என்ற போதிலும் ஒரு அந்நிய நாட்டுப் பிரச்சனையை இங்கு தேர்தல் பிரச்சனையாக ஆக்க முயற்சிப்பது எவ்வகையில் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அந்நிய நாட்டுப் பிரச்சனை இங்கு உள்நாட்டு அரசியல் பிரச்சனையாக மாறக் கூடாது என தடை எதுவும் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அது மட்டும்தான் பிரச்சனையாக ஆக்கப்பட வேண்டும் எனும் பொழுதுதான் சிக்கல் வருகின்றது. அல்லது நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
தாங்க முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல்கள், அராஜகம் என தமிழக மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. சாதி மோதல்கள், சாதி அடிப்படையில் தலித்துகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், தலித்துகள் தாக்கப்படுதல் என சமூகப் பிரச்சனைகளும் இருக்கின்றன. கல்வி தனியார்மயமாக்கப்பட்டு, வர்த்தகமயமாக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பல்வேறு விதமான இன்னல்களை மக்கள் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். விதிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக மாநிலமெங்கும் மக்கள் போராடிக் கொண்டே இருக்கின்றனர். இதன்றி பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவையன்றி, கொலை கொள்ளை, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் எனக் குற்றங்கள் அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இது வரை தமிழகத்தில் நடக்கவில்லை என்று கருதிக் கொண்டிருந்ததற்கு மாறாக, மற்ற பல மாநிலங்கள் போல் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நடந்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. (2009ல் தமிழகத்தில் 1100 விவசாயிகள் தற்ª£கலை செய்து கொண்டனர்).
இந்த காரணங்களுக்காக ஆளும் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது எமது நிலை. ஆனால், இதைச் சொன்னால் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துப் பேசும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் தமிழினத் துரோகிகளின் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை எல்லாம் அனுபவிப்பவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்களை எல்லாம் எந்த வகையில் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதைச் சுட்டிக் காட்டினால், மேலே குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உங்களுக்கு விலைவாசி, எங்களுக்கு தமிழின துரோகம் என்கிறார்கள்.
ஒன்று தெளிவாகின்றது. இந்த வாதத்தை முன்வைப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சனைகள், சாதிப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவை எல்லாம் இல்லாத ஒரு உயர்நிலையில் இவர்கள் இருக்கின்றனர். இருந்திருந்தால் அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்கள் அல்லவா? மேலும், திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு அதனிடத்தில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மக்களின் இந்த பற்றியெறியும் பிரச்சனைகளைக் களைய ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை; இலங்கைப் பிரச்சனையில் மூக்கை நுழைத்து ஏதாவது செய்து கொண்டிருந்தால் போதும் என்பதும் இதன் பொருளாகின்றது. மக்கள் விலை உயர்வால் வாடலாம், பட்டினியால் சாகலாம், வேலையின்மையால் தவிக்கலாம், சாதிக் கொடுமைகளால் துன்புறலாம், கல்விக் கொள்ளையால் ஓட்டாண்டிகளாகலாம். இவை எது பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு நிலை இயல்பாகவே இங்குள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேல்சாதி வெறியர்கள் ஆகியோருக்குச் சாதகமாக ஆகின்றது என்பது வெளிப்படை.
இனி இந்த விவாதத்தின் அடுத்த கட்டத்திற்குப் போவோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையில் தமிழினத்திற்கு துரோகம் என்பதை பார்ப்போம்.
இப்போது கடுமையாகக் குற்றம் சாட்டப்படும் காங்கிரஸ் 1980களின் துவக்கத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும் கொடுத்த கட்சிதான். அதாவது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம்தான். பின்னர் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் அமைதி ஒப்பந்தம் போட்டது. அப்போது மாநிலத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது. அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற காரணத்திற்குள் இங்கு போகவில்லை. அது இக்கட்டுரையின் பொருளும் அல்ல. பின்னர் இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போனது, திரும்பி வந்தது. ராஜிவ்காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதன் நியாய அநியாயங்கள் பற்றியும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. (ஆனால், அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன தெரியுமா? சமூகநீதிக்காகப் பதவியைத் துறந்த வி.பி.சிங் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு பறிபோனது. ராஜிவ்காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபம் காங்கிரசுக்குச் சாதகமாக ஆனது). அப்போது திமுக ஆட்சியிலிருந்தது. விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரமே அத்தேர்தலில் பிரதானமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும். ஆக காங்கிரஸ் மட்டுமின்றி ஜெயலலிதாவும் 'தமிழினத் துரோகி' ஆனார். இப்போது திமுகவும் தமிழினத் துரோகி எனப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய அரசியல் கட்சிகளும் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று அரசியல் கட்சிகளும் சேர்ந்து கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் பதிவான வாக்குகளில் 67 சதவீதம்! இவர்களில் சிலர் விஜய்காந்தின் தலைமையிலான தேமுதிகவையும் தமிழினத் துரோகி பட்டியலில் சேர்க்கின்றனர் (தெலுங்கரான விஜய்காந்திற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கின்றனர்). அவர் பெற்ற வாக்குகள் 8 சதவீதம். அதையும் சேர்த்தால் 75 சதவீதம்! அதாவது நான்கில் மூன்று பங்கு மக்கள் தமிழினத் துரோகிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
இது பழைய கதை. இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடந்த 2009 பாராளுமன்றத் தேர்தல் நிலவரம் என்ன என்று யாரேனும் கேட்கலாம். அதையும் பார்ப்போம். தமிழகம், புதுவை இரண்டிலும் சேர்த்து மொத்தமிருந்த 40 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக, அதிமுக மூன்று கட்சிகளும் சேர்ந்து 37 தொகுதிகளில் வென்றன! (வாக்கு சதவீதம் இன்னும் தேர்தல் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை). ஆனால், நமக்கொன்றும் பிரம்மைகள் தேவையில்லை. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றிருக்கலாம். இதன் மூலம் நாம் சொல்ல வருவது என்ன?
இப்போதிருக்கும் நிலைமையிலும் சரி, முன்பிருந்த நிலைமையிலும் சரி தமிழகத்தின் பெரும்பகுதி மக்கள் 'தமிழினத் துரோகிகளுக்கே' வாக்களிக்கின்றார்கள் என்பதுதான். இவர்கள் எந்த இனத்தின் நலனுக்காக தாங்கள் பேசுவதாகச் சொல்கிறார்களோ அந்த இனத்திற்கு 'எதிராக' (?) தமிழக மக்கள் வாக்களிக்கின்றார்கள். அது எப்படி நடக்கும்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
பிரச்சனை மக்களிடம் இல்லை. மக்கள் எப்போதுமே அறிவாளிகள்தான். மக்களையும், அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது தங்களது விருப்பத்தை மக்கள் மீது திணிக்க விரும்புகின்றவர்கள் மக்களை முட்டாள்கள் என்கின்றனர். தமிழ்த் தேசியவாதிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆகியோரைப் பொருத்த வரையில், அவர்கள் அடிக்கடி புலம்பலாக வெளிப்படுத்தும் ஒரு கருத்து, உலகமே தமிழ் இனத்¬க் கைவிட்டு விட்டது என்பதாகும். ஆனால், எப்போதும் ஏன் உலகம் தங்கள் பிரச்சனையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. எங்களுக்குப் பிரச்சனை இருக்கின்றது, அது பற்றி அக்கறை கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேலை என்கிற அதிகார தோரணையிலிருந்து மட்டுமே இந்த கருத்து எழுகின்றது. ஆனால், இவர்கள் வேறு எந்த மக்களைப் பற்றியும், தமிழகத்தில் வாழும் மக்களைப் பற்றியும் கூடக் கவலைப்பட மாட்டார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு உலகில், இந்தியாவில் எந்தப் பிரிவு மக்களின், தமிழகத்தின் எந்தப் பிரிவு மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றது? எதற்கு ஆதராவாகவாவது ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கின்றதா? எவன் எக்கேடு கெட்டால் என்ன தங்களது அரசியல் வெற்றி பெற்றால் போதும் என்பதனால்தான் அவர்களால் காஞ்சி கொலைகாரன் ஜெயேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிகின்றது; மராட்டி இனவெறியன் பால் தாக்கரேயைப் புகழ முடிகின்றது; இங்கே தாமரை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என்று பாசிஸ்டுகளைப் புகழ முடிகின்றது; இவர்கள் மதச்சார்புள்ளவர்கள், தமிழ் சைவ மதப் பற்றுள்ளவர்கள் என்பதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட முடிகின்றது; முஸ்லிம்கள் தங்களது மதச் சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பதற்கு எதிராக அவர்களை விரட்டியடிக்க முடிகின்றது; அவர்கள் தங்களது மத நம்பிக்கை உரிமையைக் கைவிட்டு விட்டு தங்களைத் 'தமிழர்கள்' என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்த முடிகின்கின்றது.
இது ஒரு பக்கம். இவர்களின் வாதப்படி, மக்களின் மிகப் பெரும் பகுதியினர் தமிழினத் துரோகிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். திமுக கூட்டணி தோற்று அதிமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்றாலும் இதுதான் முடிவு. இதுதான் பொருள். அப்படி எனில் பிரச்சனை எங்கே இருக்கின்றது?
அடையாள அரசியல் கோட்பாட்டில் இருக்கின்றது. அடையாளமே எல்லாம் என்று முன் வைக்கப்படுவதால் தமிழகத்தின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியார் தமிழர் இல்லை என்று பழிக்கப்படுகின்றார்; பழிக்கின்றார்கள். (தலித் அடையாள அரசியல் செய்பவர்கள் அவரை தலித் இல்லை என்றும் பழிக்கின்றார்கள்.) அடையாள அரசியல் செய்கிறவர்களிடமாவது ஒத்த கருத்து இருக்கின்றதா என்றால் இல்லை. இருக்காது; இருக்கவும் முடியாது. ஏனெனில், அரசியலில் வேறு பல சக்திகள், காரணிகள் செயல்படுகின்றன. ஆனால் இவர்கள் மீண்டும் அடையாளத்திலேயே அவற்றிற்கு விடை தேட முயல்வதால் அவர்களது அரசியல் நாகரீகமற்றதாகவும், பாசிசத் தன்மை கொண்டதாகவும் ஆகி விடுகின்றது.
தமிழினத் துரோகிகள் என்கிறார்கள்; தமிழனே இல்லை என்கிறார்கள்; தமிழனுக்கே பிறக்கவில்லை என்கிறார்கள்; அப்படியே சீர் கெட்டு சீர் கெட்டு மரபணுப் பரிசோதனையில் மூழ்கிவிடுகின்றனர். அப்புறமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை என்றால் மரபணுக்களை மேலும் மேலும் பிளப்பதில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில் பாசிச ரத்தத் தூய்மை கோட்பாட்டில் சரண் அடைகின்றனர். தமிழகத்தில் சங்பரிவாரிகளைப் போலவே காதலர் தினத்தை எதிர்த்த தமிழ் இனவாதம் பேசும் கட்சிகள் இருக்கின்றன (பாமக காதலர் தினத்தை எதிர்த்ததை நினைவில் கொள்க). அது வர்த்தகமயமாக்கப்படுவதற்கான எதிர்ப்பு அல்ல அது; காதல் ரத்தக் கலப்பிற்கு இட்டுச் செல்கின்றது என்பதனால் காட்டப்பட்ட எதிர்ப்பு.
மொத்தத்தில் இந்த ஆராய்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு, உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகள் தங்களது கொள்ளையை நடத்த முயற்சிக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு முதன்மையான காரணமாக அதன் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளும், சமூகக் கொள்கைகளுமே இருக்க வேண்டும். இல்லை என்றால் அக்கூட்டணி தோற்கடிக்கப்பட்டாலும் மக்களின் வாழ்க்க¬ நிலைமையில் குறிப்பிடத்தகந்த எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.
--------------------------------------------------------27.2.11
No comments:
Post a Comment