Tuesday, March 8, 2011

ஆதிசங்கரரும் அவரது தத்துவமும்-ஒரு மார்க்சியப் பார்வை


இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

தமிழில்: அசோகன் முத்துசாமி




1989ம் ஆண்டு ஆதிசங்கரரின் 1200வது ஆண்டாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அது கொண்டாடப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது சொந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றது. அந்த மாபெரும் துறவியின் பிறந்த ஊரான காலடியில் கேரளா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை கேரளாவின் பிரசித்தி பெற்ற மகனான அவருடைய போதனைகளின் சில அம்சங்கள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
மார்க்சிய தத்துவவாதிகளும், அறிவுஜீவிகளும், அரசியல் பணியாற்றுபவர்களும் அக்கருத்தரங்கில் பங்கேற்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்குச் செய்யும் துரோகமாக ஆகாதா?

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்


கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் இரு நேரெதிர் துருவங்கள் என்றும், அவை எங்கும், எப்போதும் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் இக்கேள்வி பாவித்துக் கொள்கின்றது. யதார்த்த வாழ்விலும், மனிதனின் சிந்தனையிலும் உள்ள மற்ற எதிரிடைகளைப் போல, கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளும், மீமெய்யில் (னீமீtணீஜீலீஹ்sவீநீs) ரீதியாக அல்லாமல், இயக்கவியல் ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதைக் கவனிக்கத் தவறுகின்றது. கருத்துமுதல்வாதமோ அல்லது பொருள்முதல்வாதமோ அசையாமல் ஒரே இடத்தில் இருப்பவை அல்ல; இரண்டுமே எப்போதும் ஒன்றையொன்று மறுத்தவண்ணம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன; இரண்டுக்கும் இடையில் புதுப்புது வடிவங்களில் நிகழும் போராட்டம் மனிதசிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆதலால், பொருள்முதல்வாதம் தன்னளவிலேயே கருத்துமுதல்வாதத்தை விட மேலானது அல்லது கருத்துமுதல்வாதம் தன்னளவிலேயே கீழானது என்கின்ற கேள்விக்கே இடமில்லை. லெனின் தன்னுடைய தத்துவார்த்தக் குறிப்பேடுகளில் பின்வருமாறு கூறுகின்றார்:
"பண்படாத, எளிமையான, மீமெய்யியல் நோக்கிலிருந்து தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது வெறும் அபத்தம் மட்டுமே. மறுபுறமோ, இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கிலிருந்து பார்த்தால், தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது ஞானத்தின் பல பரிமாணங்களில் ஒன்றின், அம்சங்களில் ஒன்றின், பக்கங்களில் ஒன்றின் ஒரு சார்பான அதீத வளர்ச்சியாகும் (வீக்கம், நீட்டம்); அது முழுமுற்றான உண்மையாக, பொருளிலிருந்தும் இயற்கையிலிருந்தும் பிரிக்கப்பட்டு, அனைத்துக்கும் மேலானதாக ஆக்கப்படும் அதீத வளர்ச்சியாகும். கருத்துமுதல்வாதம் என்பது மதகுருமார்களின் இருண்மைவாதம் என்பது உண்மைதான். ஆனால் தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது ('மிகச்சரியாக' மற்றும் 'அத்துடன்') எல்லயைற்ற சிக்கல் நிறைந்த ஞானத்தின் (மனிதனின் இயங்கியல்) ஒரு பரிமாணத்தின் மூலமாக மதகுருமார்களின் இருண்மைவாதத்திற்குச் செல்லும் பாதையாகும்."1
வரலாற்றின் மகத்தான தத்துவார்த்த கருத்துமுதல்வாதியான ஹெகலின் சீடர்களான மார்க்சையும், ஏங்கெல்சையும் போல, மனித அறிவிற்கு கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள கொடையை லெனின் மிக உயர்வாக மதித்தார். பல நு£ற்றாண்டுகளாக பரஸ்பர மோதலில் வளர்ந்த கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் அடுத்தடுத்து ஒன்றையொன்று மறுத்தவண்ணம் புதுப்புது வடிவங்களைப் பெற்றன; 19ம் நு£ற்றாண்டில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தோற்றத்தில் உச்சநிலையை அடைந்தன. திறன்மிக்க இளம் ஹெகலியவாதிகள் என்று அறியப்பட்ட மார்க்சும் ஏங்கெல்சும் நடப்பில் இருந்த பொருள்முதல்வாதத் தத்துவத்தின் சிறந்தவற்றை எல்லாம் உட்கிரகித்துக் கொண்டே ஹெகலிய இயக்கவியலை செழுமைப்படுத்தினர். ஆதலால், இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது ஹெகலிய கருத்துமுதல்வாதம் மற்றும் பாயர்பாக்கிய பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டின் மறுப்பாகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவத்தை லெனின் மேலும் செழுமைப்படுத்தினார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சித் தத்துவம்

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் புரட்சிகர நடவடிக்கைக்கான தத்துவமாகும். 'தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகைகளில் விளக்கியுள்ளார்கள். ஆனால், உலகை மாற்றுவதுதான் விஷயம்' என்றார் மார்க்ஸ். என்றபோதும், அவர்களது தத்துவம் ஏதேனும் ஒரு புரட்சியின் தத்துவமல்ல; பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தத்துவமாகும். 'தத்துவம் தன்னுடைய பொருண்மையான ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மீக ஆயுதத்தை தத்துவத்தில் காண்கின்றது' என்று 'ஹெகலின் வலதுசாரி தத்துவ விமரிசனத்திற்கு ஒரு பங்களிப்பு' என்கின்ற நு£லில் மார்க்ஸ் கூறுகின்றார்.
இயக்கவியல் பொருள்முதல்வாதமான மார்க்சிய-லெனினயம் இந்திய கருத்துமுதல்வாத தத்துவத்தின் உச்சமான சங்கரரின் தத்துவத்திற்கு எதிரானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும், இந்திய சிந்தனையின் வளர்ச்சியில் அந்த தத்துவத்தின் தோற்றம் ஒரு முக்கியமான கட்டம் என்பதை மார்க்சியர் எவராலும் பார்க்காமல் இருக்க முடியாது. அது போல், அது தன் பங்கிற்கு இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியுடன் முற்றிலும் தொடர்புடையதாக இருந்தது. 'பொருளுற்பத்தியில் ஏற்படும்  மாற்றத்திற்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துக்களாகவே எப்போதுமே இருந்திருக்கின்றன' என்று மார்க்சும், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சுட்டிக் காட்டினார்கள்.
ஆதலால், ஆதிசங்கரரின் தத்துவத்தை விமரிசிக்க வேண்டுமானால் இந்திய சமுதாயம் பற்றியும், இந்திய சிந்தனை பற்றியும் ஒரு பார்வை பார்க்க வேண்டும். ஏனெனில், மற்ற எந்த இந்திய தத்துவஞானியையும் போல சங்கரரும் இந்திய சமுதாயத்தின் உற்பத்தியாவார். அவரது சிந்தனைகள் அவரது காலத்தில் இருந்த சிந்தனை மேலும் பெற்ற வளர்ச்சியாகும். தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி எனும் கிராமத்தில் பிறந்தபோதும், மிக உயர்ந்த இந்திய அறிஞர் என்கிற பெயரையும், புகழையும் பெற்றார்; இந்திய கருத்துமுதல்வாதத் தத்துவத்தில் சிறந்தவற்றை முன்னெடுத்துச் சென்றார். அவரது வாழ்வையும், சிந்தனையையும் மொத்த இந்தியாவே வடிவமைத்தது; கேரளா மட்டுமல்ல.

வர்க்கப் போராட்டம்

அப்படியானால் இந்திய சமுதாயம் என்பது என்ன? சமுதாயமும் சிந்தனையும் இங்கு எப்படி வளர்கின்றது?
'இதுவரையிலான ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே' என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை). கட்சி அறிக்கை அய்ரோப்பா பற்றிக் கூறுவது போல இது இந்தியாவிற்கும் பொருந்தும்.
எனினும், இந்தியாவில் வர்க்கப் போராட்டம் (அய்ரோப்பியாவில் போல) 'சுதந்திரமுடையான்-அடிமை, உயர்குலச் சீமான்-பாமரக் குடியோன், நிலப்பிரபு-பண்ணையடிமை, கைவினைச் சங்க ஆண்டான்-கைவினைப் பணியாளன், இத்யாதி' ஆகியோருக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் போல் வளரவில்லை. நான்கு வர்ணங்களில் முதல் இரண்டு வர்ணங்களான பிராமணர்-சத்திரியருக்கும், கடைசி இரண்டு வர்ணங்களான வைஸ்யர்-சூத்திரருக்கும் இடையில் தான் பண்டைய இந்திய சமுதாயத்தில் முதல் பிரிவினை தோன்றியது. யுத்தம் செய்வோர் பிரிவு மற்றும் நிஜப்போரில் வெற்றி பெறுவதற்கு சண்டையிடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமான சடங்குகளைச் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பிரிவு ஆகியவை தோன்றியதிலிருந்து இதன் துவக்கத்தைக் காணமுடியும்.
முன்னேறிக் கொண்டிருந்த ஆரியர்கள் தங்களது எதிரிகளை வெற்றி கொள்வதற்கு இந்த முதல் இரண்டு பிரிவினரின் சேவைகள் அத்தியாவசியமாக இருந்தன; அவர்கள் முதலில் தங்களை எஞ்சியிருந்த மக்களைவிட உயர்வாக, இருபிறப்பாளர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். பின்னர் அந்த எஞ்சியிருந்த மக்கள் வைஸ்யர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் மேலும் பிரிக்கப்பட்டனர். காலப்போக்கில், இந்த நான்கு வர்ணங்களும் எண்ணற்ற சாதிகளாகவும், உப சாதிகளாகவும் பல்கிப் பெருகின; அவை எல்லாவற்றிற்கும் உச்சத்தில் இருபிறப்பாளர்கள், குறிப்பாக பிராமணர்கள், இருந்தனர்.
ஆதலால், இயற்கையாகவே பிராமண, சத்திரிய வர்ணங்கள் இந்திய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பெரும்பாலும் அவர்கள் அறிவு, கலை, அறிவியல், தத்துவம் மற்றும் இதர வகை ஆன்மீகச் செல்வங்களை உற்பத்தி செய்தனர்; சமுதாயத்தின் எஞ்சியிருந்த பகுதி பொருட்செல்வத்தை உற்பத்தி செய்தது. இவ்வாறாக, சமுதாயத்தில் ஏற்பட்ட ஒடுக்குவோர் மற்றும் ஒடுக்கப்படுவோர் என்கின்ற பிரிவினை மூளை உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான பிரிவினை தொடர்புடையது. ஆன்மீக வாழ்க்கைக்கும், இகலோக வாழ்க்கைக்கும் இடையிலான பிரிவினை. அறிவுசார் வாழ்க்கை மற்றும் பௌதீக வாழ்க்கை ஆகியவற்றின் முழுமையாக இந்த இரண்டு எதிரிடைகளுக்கு இடையிலான இயக்வியல் ரீதியான உறவு அமைந்திருக்கின்றது.

தத்துவத்தின் வேர்கள்

இந்திய வரலாற்றில் கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளின் தோற்றத்தை இந்தப் பகுதி விளக்குகின்றது. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா பின்வருமாறு கூறுகின்றார்:
"வாழ்க்கையை நிந்தித்து, நிராகரித்த தத்துவார்த்தக் கண்ணோட்டம் வாழ்க்கையிலிருந்தே விலகிச் சென்ற தத்துவத் தேடலின் விளைவாக மட்டுமே இருக்க முடியும். கிரேக்கத்தில் அடிமைமுறையின் வளர்ச்சியுடன், அதுபோல் உபநிஷ காலத்து இந்தியாவிலும், சேர்ந்தே இடையறாது மாறிக் கொண்டிருக்கும் பொருள் உலகின் மீதான வெறுப்பு என்கின்ற 'உன்னதக்' கோட்பாடு 'து£ய அறிவு' என்கின்ற வெளிக்குள் தத்துவார்த்த விசாரணை தடையின்றிச் சென்றதன் விளைவாகும். அதாவது, மற்றவர்களால் உற்பத்தி செய்யப்படும் உபரியைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த பிரிவினர் நேரடி உடலுழைப்பிலிருந்து விலகிக் கொள்ளும்போது மட்டுமே உண்டாகும் அறிவு. நேரடி உடலுழைப்பிலிருந்து விலகிக் கொண்டதன் மூலம் பொருள் உலக யதார்த்தத்திலிருந்தும் அவர்கள் விலகிக் கொண்டனர். ஏனெனில், உழைப்பால் மட்டுமே அறிவுணர்வின் (நீஷீஸீsநீவீஷீus tலீமீஷீக்ஷீஹ்) மீது ஒரு வகையான புறவகை நிர்ப்பந்தத்தைச் செலுத்தமுடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவம் நடைமுறையிலிருந்து பிரிக்கப்பட்டு து£ய தத்துவமாக்கப்பட்டுவிட்டது. சிந்திக்கப்பட்ட விஷயங்கள் வெறும் கருத்துக்களாக ஆகிவிடுகின்றன. அவ்வறாக, அறிந்தவர் அறியப்பட்டதன் தடைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறார்; மற்றும் பிந்தையதை அறியாமையின் அல்லது கல்வின்மையின் விளைபொருளாக மட்டுமே பார்க்கின்றார்.2
 ஆதிசங்கரரின் தத்துவம் அத்வைத வேதாந்தமாகும்; இந்த இந்திய கருத்துமுதல்வாதத் தத்துவத்தை மிகச்சிறப்பாக விளக்கிக் கூறுபவராரக இருந்தார். (பிரம்மத்தைத் தவிர மற்ற அனைத்தையும்) கடவுளையும் கூட மறுக்கின்ற வகையில் பொருள்படும் அளவிற்கு அவர் பிரம்மம் பற்றிய தன்னுடைய போதனைகளை வளர்த்தார். இதற்காக அவர் மாறுவேடத்தில் இருக்கும் புத்தர் (பிரச்சன்ன புத்தர்) என்று அவரது எதிரிகளால் கண்டனம் செய்யப்பட்டார். இப்படிப் பட்டம் சூட்டப்படுவதே புத்தரின் போதனைகளுக்கும் பிராமண ஆதிக்கத்திற்கும், கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான மோதல் எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதையும், இரு தரப்பும் இந்திய தத்துவத்தில் எவ்வளவு து£ரம் சென்றிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றது. உபநிஷ கருத்துமுதல்வாதத்தின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்டதற்கு எதிராக சங்கரர் சக்திமிக்க போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியபோதும், பிராமணியத்திற்கு பெரும் சவால் விட்ட அந்த தத்துவார்த்தப் போக்கிற்கு (பவுத்தம்) சலுகைகள் வழங்கியதாகக் கண்டிக்கப்பட்டார். என்றாலும், பவுத்த தத்துவார்த்தப் போக்கை தோற்கடித்த அவரது புலமைக்காக அன்றும் இன்றும் போற்றப்படுகின்றார்.
பண்டைய இந்தியாவின் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் வேர்களைக் கண்டுபிடித்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா இந்திய தத்துவத்தில் பொருள்முதல்வாதம் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார். 'பண்டைய இந்தியாவில் அறிவியல்' என்கிற அவரது புகழ்பெற்ற நு£லில், 'சாரக்க சம்ஹிதை' மற்றும் 'சுஸ்ருத சம்ஹிதை' என்கின்ற இந்திய மருத்துவம் குறித்த இரு செவ்வியல் நு£ல்களை ஆராய்கிறார். மனித உடல் தொடர்பான பிரச்சனைகளை, அதன் நோய்களை, அதற்கான நிவாரணங்களை விளக்கும்போதும், மனித வாழ்வின் பொருண்மையான அம்சங்களை விளக்கும்போதும் அந்த நு£ல்களின் ஆசிரியர்கள் ஆன்மா என்பதை இம்மியளவும் காணவில்லை. இதைச் செய்தபின்னர், நோயுற்ற உடலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கடவுளை வணங்குவதன் மூலம் அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கருத்தியலுக்கு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

அறிவியலும் பொருள்முதல்வாதமும்

மருத்துவ விஞ்ஞானம் போலவே மற்ற விஞ்ஞானங்களுக்கும் இது பொருந்தும். கைவினைஞர்களும், இதர ஏதேனும் ஒரு நடைமுறைச் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் மக்களும் தங்களது பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, நிகழ்வுகளைக் கையாளும்போது பொருள்முதல்வாதிகளாகவே இருக்கின்றனர். ஆனால், சமூக வாழ்வின் பொதுப் பிரச்சனைகள் என்று வந்தால், ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த கருத்தியலின் ஆதரவாளர்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர்; மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய தத்துவம், ஆன்மா, மோட்சம் என பேச ஆரம்பித்துவிடுகின்றனர். திறன்மிக்க கைவினைஞர்கள், மருத்துவம் போன்ற தொழில் செய்பவர்களிடமிருந்தே முற்றிலும் வேறான பொருள்முதல்வாதத் தத்துவம் தோன்றியது. இந்தப் போக்கைப் பின்பற்றியவர்கள் தங்களது கலை அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விளக்கும்போது பொருள்முதல்வாதிகளாக இருந்தனர். ஆனால், ஆளும் வர்க்கம்-வர்ணம்-சாதியின் கருத்தியலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்கின்ற வகையில், சாராம்சத்தில் கருத்துமுதல்வாதமாக அந்தக் கருத்தியல் இருந்ததனால், அவர்கள் கருத்துமுதல்வாதத்திற்கு தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
சட்டோபாத்யாயாவின் கருத்துப்படி பொருள்முதல்வாதத்திற்கு மிக நெருக்கமாக இருந்த நியாயவைசேஷிகர்கள் போன்ற பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகள் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது; அவர்கள் வேதங்களின் மேன்மையை முழுமையாக ஏற்றுக் கொண்டனர், ஆன்மாவை நிரூபிக்கவும், மரணத்திற்கு பின்னரும் அது இருப்பதை நிரூபிக்கவும் அவர்கள் விரிவாக விவாதித்தனர். என்றாலும், 'இவற்றையெல்லாம் மனப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கு நியாய வைசேஷிக இலக்கியத்தில் போதுமான அளவு மதிநுட்பமான, நுணுக்கமான குறிப்புகள் இருக்கின்றன' என்று சட்டோபாத்யாயா கூறுகின்றார்.3
என்றபோதிலும், ஆளும் வர்க்கத்தின் கருத்தியலுக்கு தலை வயங்க மறுத்த மற்ற பொருள்முதல்வாத முகாம்களும் இருந்தன; சார்வாகர்கள், லோகாயதர்கள் மற்றிதரர்கள். கருத்துமுதல்வாதத்திற்கு எதிரான தங்களது தத்துவத்தை விளக்குவதில் அவர்கள் எதையும் மென்று முழுங்கவில்லை. என்றாலும், அவர்களது எழுத்துக்களில் மிகச் சொற்பமானவை மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றது. மறுப்பதற்காக அவர்களது வாதங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பண்டைய இந்திய தத்துவத்தில் பொருள்முதல்வாத சிந்தனையின் வீச்சும், பரப்பும் பற்றி நாம் சூசகமாகத் தெரிந்து கொள்கின்றோம்.

அறிவியலும் அரசியலும்

இரண்டு தத்துவ முகாம்களுக்கும் இடையிலான போராட்டம் மிகக் கடுமையானதாக இருந்தது; அது மிக நீண்ட காலம் நீடித்தது. சட்டோபாத்யாயாவின் கூற்றுப்படி, அரசியல்தான் இறுதி முடிவைத் தீர்மானித்தது. இதன் பொருள் என்னவென்பது பின்வருமாறு விளக்கப்படுகின்றது:
"பாரம்பரிய இந்திய அரசியலின் பிரதிநிதிகளான நமக்கு சட்டம் வழங்குபவர்களது எழுத்துக்கள் பொதுவாக தர்மசாஸ்திரம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சட்டமியற்றுபவர்களின் முதன்மையான அக்கறை, தாங்கள் உயர்வானதாகக் கருதிய சமூக அமைப்பின் பாதுகாப்பு குறித்ததாகத்தான் இருந்தது. அத்தகைய சமூக அமைப்பு வர்ணாசிரமம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. அந்த சமூக அமைப்பில்  ஒவ்வொருவரின் நடத்தையும் அவர் பிறந்த சாதியின் அடிப்படையிலும், அவர் அடைந்திருக்கும் வாழ்க்கை நிலையையும் பொருத்து ஒழுங்கமைக்கப்படுகின்றது. எனினும், மக்கள் தொகையின் ஒரு சிறுபான்மையாகிய உயர்குலத்தோர், பூசாரிகள் மற்றும் வர்த்தகர்கள் மட்டுமே அனைத்து பொருளாதார சிறப்புரிமைகளுக்கும்-வெவ்வேறு அளவில் என்றபோதும்-உரியவர்கள் என்பதை விதியாகக் கொண்ட ஒரு சமுதாயம். மக்கள் தொகையில் எஞ்சியுள்ளவர்கள் நேரடி உற்பத்தியாளர்கள். அவர்களது உபரி உற்பத்தி மட்டுமே இருபிறப்பாளர்களுக்கான பொருளாதார ஆதாயங்களை உண்டாக்க முடியும். அந்த நேரடி உற்பத்தியாளர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்கின்ற பொதுப் பிரிவிற்குள் அடைக்கப்பட்டனர். இந்த நேரடி உற்பத்தியாளர்கள் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு அவசியமோ அதற்கு மேல் வேறு எதற்கும் உரிமையற்றவர்கள் என்று சட்டமியற்றியவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது ஒரே கடமை சமுதாயத்தின் மேல் தட்டினருக்குச் சேவை செய்வது மட்டும்தான். ஏனெனில், கடவுள் அவர்களை அதற்காகவே பிரத்யேகமாக படைத்திருக்கின்றார்."
வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தியாவில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் இந்திய வகை வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடாகும். சிறுபான்மை மேல்சாதியினருக்கும், பெரும்பான்மை சாமான்ய மக்களுக்கும் இடையிலான போராட்டம். தங்களின் வாழ்வாதாரத்திற்காக உடலுழைப்பில் ஈடுபடும் சாமான்ய மக்கள் இயற்கையின் பல்வேறு அம்சங்களுடன் இடையறாத தொடர்பில் இருக்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்து அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்து இயற்கையாகவே பொருள்முதல்வாதத் தன்மை கொண்டதாக இருக்கின்றது. மறுபுறமோ, சிறுபான்மையினரான மேட்டுக்குடியினர் அறிவுசார் பயிற்சியியையே சார்ந்திருந்தனர். ஆதலால், இயற்கை நிகழ்வுகளைவிடவும் அவர்கள் மனதளவில் ஏற்பட்ட கருத்துக்களாலேயே இயக்கப்பட்டனர். அவர்கள் இயற்கையைவிட கருத்துக்கள உயர்ந்தவை என்று வலியுறுத்துகின்ற கருத்துமுதல்வாதிகளாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இந்த கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு சங்கரரின் அத்வைத வேதாந்தமாகும்; பிரம்மத்தைத் (பரிபூரண உண்மை) தவிர மற்ற அனைத்தும் அறியாமை என்றும், வேறு எதுவும் இல்லை என்றும்  அது உறுதியாகக் கூறுகின்றது.
கைவினைஞர்கள், மற்றவர்கள் போன்ற உடலுழைப்பில் ஈடுபட்ட மிகப் பெரும்பாலான மக்களிலிருந்து பல்வேறு பொருள்முதல்வாத தத்துவப் போக்குகள் தோன்றின. என்றாலும், இந்த வர்க்கம் முழுமையும், அதன் தத்துவார்த்தப் பிரதிநிதிகளும் முற்றிலும் கருத்துமுதல்வாதிகளின் தயவைச் சாந்தே இருந்தனர். ஆதலால், அது தங்களுக்குள் இயற்யை£கவே அமையப் பெற்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்ட உழைக்கும் மக்களுக்கும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த கருத்துமுதல்வாதிகளுக்கும் இடையிலான அசமத்துவமான போராட்டமாக இருந்தது. பவுத்தர்களுக்கும் வேதாந்திகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் உண்மையில் இந்த இரு சக்திகளுக்கும் இடையில் நடந்த இறுதி யுத்தமாகும்; இறுதிக்கட்டத்தில் இருந்த யுத்தத்தில் கருத்துமுதல்வாதிகளின் தளபதியாக சங்கரர் இருந்தார்.
ஆதலால், பவுத்தர்கள் தோற்கடிக்கப்பட்டதானது தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாதத்தைத் து£க்கிப் பிடித்த மேல்சாதியினரின் வெற்றியாகும்.

விஞ்ஞானங்கள்: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

இந்த இரு தத்துவார்த்தப் போக்குகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் பல்வேறு இயற்கை விஞ்ஞானப் பிரிவுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. வானவியல், கணிதம், ரசாயணம், மருத்துவம் மற்றும் இதர விஞ்ஞானங்கள் பண்டைய இந்தியாவில் எவ்வளவு வளர்ந்திருந்தன என்றால், பண்டைய நாகரீக வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் இந்த நாடு மற்ற நாடுகளுக்கு இணையாக இருந்தது மட்டுமின்றி, அவற்றைவிட மேம்பட்டும் இருந்தது. என்றாலும், சங்கரரரால் பவுத்த பொருள்முதல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டது இந்திய விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக ஆனது. இந்திய விஞ்ஞானத்தின் முதன்மையான வரலாற்றாசிரியரான பி.சி.ராய் பின்வருமாறு கூறுகின்றார்:
"சங்கரரால் திருத்தி, விரிவாக்கப்பட்ட அத்வைதத் தத்துவம் உலகமே மாயை என்று போதித்தது; அந்த தத்துவம்தான் இயற்கை விஞ்ஞான ஆய்விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தது. கனதாவையும் அவரது முறையையும் தயவுதாட்சண்யமின்றி சங்கரர் கண்டனம் செய்தார்.
"வேதாந்த சூத்திரங்கள் குறித்த சங்கரரின் வினக்கங்களிலிருந்து ஒன்றிரண்டு குறிப்புகள் இதைத் தெளிவாக்கும்: 'இவ்வாறாக, அணுக் கொள்கை ஆதரவாக வைக்கப்படும் வாதங்கள் மிகப் பலவீனமாக இருக்கின்றன என்று தெரிகின்றது; கடவுளே உலகைப் படைத்தார் என்று பிரகடனம் செய்கின்ற வேதங்களின் கூற்றிற்கு எதிரானது அணுக் கொள்கை. வேதங்களுக்கு ஆதரவாக இருக்கும் மனு மற்றும் இதரர் போன்ற வல்லுநர்கள் எவரும் அக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தங்களது சொந்த ஆன்ம நலனில் அக்கறை கொண்டுள்ள உயர் எண்ணம் கொண்டவர்களால் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.' (மீண்டும்) 'வைசேஷிகர்களின் கோட்பாட்டை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கான காரணங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. அந்தக் கோட்பாட்டை அரை நாசகரத் தன்மை கொண்டது அழைக்கலாம்'."5
சங்கரரின் கூற்றை மேற்கோள் காட்டிய பின்னர், ராய் மேலும் கூறுகிறார்: 'சாதிகளால் பிளவுண்டு கிடக்கும், பழமைவாத எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள் ஆளப்படும், வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகளின் கட்டளைகளால் இவ்விதம் அறிவு தடுக்கப்பட்டும், முடக்கப்பட்டும் உள்ள மக்களின் மத்தியிலிருந்து வழிகாட்டும் கோட்பாடுகளை வகுக்க எந்த போய்லேவும் தோன்ற முடியாது.' (போய்லே: ராபர்ட் போய்லே என்பவர் 17ம் நு£ற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து ரசாயண விஞ்ஞானி; இயற்கை தத்துவவாதி -மொர்.)

உலக வரலாற்றில் அய்ரோப்பிய மறுமலர்ச்சி

கருத்துமுதல்வாதிகளால் பொருள்முதல்வாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்தியா தேக்கநிலையில் இருந்தபோது, பண்டைய நாட்களில் முன்னர் இந்தியாவை விட பின்தங்கியிருந்த அய்ரோப்பா அடிப்படையான சமூகக் கலாச்சார மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. 'மேட்டுக்குடி கோட்பாட்டிற்கும் சாமான்ய மக்களின் நடைமுறைக்கும் இடையில் இருந்த பிளவை ஓரளவிற்கு நீக்கி ஒற்றுமைப்படுத்தியது' என்று அய்ரோப்பிய மறுமலர்ச்சி குறித்து பிரசித்தி பெற்ற விஞ்ஞானியும், விஞ்ஞான வரலாற்றாசிரியருமான ஜே.டி.பர்னால் கூறுகின்றார். (சட்டோபாத்யாயா பக்.101). பர்னால் மேலும் பின்வருமாறு கூறுகின்றார் (சட்டோபாத்யாயா நு£ல்:பக்.101-102):
"நு£ல் நு£ற்வு, நெசவு, மண்பாண்டம், கண்ணதடி செய்தல் போன்ற நடைமுறைக் கலைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உண்மையிலேயே புதியது;  எல்லாவற்றையும் விட, செல்வ உற்பத்தி, யுத்தம் செய்தல் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்த கலைகளுக்கு, சுரங்கப் பணி மற்றும் உலோகப் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம். பண்டைய காலத்தைவிட மறுமலர்ச்சி காலத்தில் கலைகளின் நுட்பம் அதிகரித்திருந்தது. ஏனெனில், அவை இனியும் அடிமைகளின் கைகளில் இருக்கவில்லை; சுதந்திர மனிதனின் கைகளில் இருந்தன. புதிய சமுதாயத்தின் ஆட்சியாளர்களிடமிருந்து இவர்கள் மத்திய காலத்தைப் போல சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் விலக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. கைவினைஞரின் சமூகநிலை உயர்த்தப்பட்டதானது அவரது பாரம்பரியத்திற்கும், அறிஞர்களின் பாரம்பரியத்திற்கும் இடையிலான தொடர்பு புதுப்பித்துக் கொள்ளப்படுவதை சாத்தியமாக்கியது. அந்த தொடர்பு கிட்டத்தட்ட பண்டைய நாகரீகத்தின் துவக்கத்திலிருந்தே துண்டிக்கப்பட்டிருந்தது."

அரசியல் விளைவு

என்றபோதிலும், இந்திய வரலாற்றில் அறிவியலின் வீழ்ச்சி மட்டுமே பிரச்சனையல்ல. பிரிட்டிசாருக்கு முந்தைய இந்தியாவில் இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்ட 'பெருமை குலைந்த, அசைவற்ற, மந்தநிலை வாழ்க்கை' சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இந்தியாவின் கிராம சமுதாயங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமைத்தனத்தாலும் மாசுபட்டிருந்தன என்றார் மார்க்ஸ். 'இயற்கை மிருகத்தனமாக வழிபடப்பட்டது; இயற்கையின் உயர்படைப்பான மனிதன் அனுமான் என்று குரங்கையும், சபாலா என்கின்ற பசுவையும் மண்டியிட்டு வழிபட்டான் என்கின்ற உண்மையில் அது தன் தாழ்வை வெளிப்படுத்திக் கொண்டது' என்று மார்க்ஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.
அதன் அரசியல் விளைவிதான் நாடு சுதந்திரத்தை இழந்தது. மார்க்ஸ் பின்வருமாறு கூறுகின்றார்:
'மொகலாயர்களின் வானளாவிய அதிகாரத்தை மொகலாய வைஸ்ராய்கள் நொறுக்கினர். வைஸ்ராய்களின் அதிகாரத்தை மராத்தியர்கள் உடைத்தனர். மராத்தியர்களின் அதிகாரத்தை ஆப்கானியர்கள் முறித்தனர். எல்லோரும் எல்லோருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தபோது ஓடோடி வந்த பிரிட்டிசாரால் அனைவரையும் அடக்க முடிந்தது.'
மார்க்ஸ் கூறுகிறபடி, 'நமது (அய்ரோப்பிய) மொழிகளின், மதத்தின் தோற்றுவாயாக இருந்த ஒரு நாட்டிற்கு இது நேர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இயற்கையாகவே ஒரு கேள்வி எழுகின்றது: பொலிவு நிறைந்த பண்டை காலத்திலிருந்து பிரிட்டிசாருக்கு முந்தைய தாழ்நிலைக்கு நம் நாடு ஏன் வீழ்ந்தது? பிராமணிய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட சாதிகள் தோற்கடிக்கப்பட்டதும், பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் தோற்கடிக்கப்பட்டதும், நமது நாகரீக, கலாச்சார வீழ்ச்சியின் ஆரம்பமாகும்; இறுதியில் அது நாடு சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது.

அய்ரோப்பாவும் இந்தியாவும்: வித்தியாசம்

சங்கரரின் தத்துவம் உருவாகி வளர்ந்தது பற்றியும், அதன் அரசியல் விளைவுகள் பற்றியும் மதிப்பிட்டோம்; இனி, பொதுவாக இன்றைய உலகிற்கு, குறிப்பாக இன்றைய இந்தியாவிற்கு, அந்தத் தத்துவத்தின் பொருத்தப்பாடு குறித்து விவாதிக்கலாம்.
உலகம் முழுவதும் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையில் உக்கிரமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு சகாப்தத்தில் சங்கரர் வாழ்ந்தார்; பணியாற்றினார். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றபோதிலும், ஒரு பெரும் வேறுபாடு இருந்தது. அய்ரோப்பாவில் எந்த தரப்பிற்கும் தீர்மானகரமான வெற்றியில் அந்த யுத்தம் முடியவில்லை; இரண்டு சக்திகளுமே பரஸ்பர முரண்பாடுகளுடன் இணையான சக்திகளாக வளர்ந்தன. அச்சமயம் இரண்டு தரப்பும் தத்தமது துறையில் மாபெரும் ஆளுமைகளை உண்டாக்கின. அது இறுதியில் ஹெகல் ஒரு பக்கமும், பாயர்பாக் மறுபக்கமும் என 19ம் நு£ற்றாண்டின் இரு மாபெரும் ஆளுமைகளின் உருவாக்கத்தில் முடிந்தது. ஹெகலின் கருத்துமுதல்வாதத்தையும், பாயர்பாக்கின் மீமெய்யிலையும் நிராகரித்து, ஹெகலின் இயக்கவியலையும், பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தையும் முன்னெடுத்துச் சென்ற உலக வரலாற்றில் ஒரு புதிய தத்துவ முகாமின் முன்னோடிகளாக மார்க்சும் ஏங்கெல்சும் விளங்கினர். அவ்வாறாக, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடு தோன்றியது. மார்க்சும் ஏங்கெல்சும் அதை விளக்கிக் கூறியவர்கள்; அது உலக தத்துவ வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது.
மறுபுறம், இந்த இரு தத்துவ முகாம்களுக்கு இடையிலான யுத்தம் ஒன்றின் (பொருள்முதல்வாதத்தின்) தோல்வியிலும், மற்றொன்றின் (கருத்துமுதல்வாதத்தின்) ஆதிக்கத்திலும் முடிவடைந்தது. என்றபோதிலும், இந்த யுத்தம் ஒரு சமத்துவமற்ற யுத்தமாகும்; சாதியம் எனும் சமூக அரசியல் நிறுவனத்தின் சக்தி முழுவதும்  கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவாகவும், பொருள்முதல்வாதத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. நமது நாட்டில் வென்றதும் தோற்றதும் இரண்டு தத்துவங்களின் சாரம் அல்ல; ஆனால், இரண்டு சமூக வர்க்கங்களாகும்; ஆதிக்கம் வெலுத்தும் மற்றும் ஒடுக்கப்படும் வர்க்கங்கள்; அவையிரண்டும் அந்த இரு தத்துவங்களையும் தங்களது படைக்கலனில் ஆயுதங்களாகப் பயன்படுத்தின. ஆதலால், சங்ரரிர் மற்றும் அவரது தத்துவத்தின் வெற்றி என்பது பிராமணர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதிகளின் வெற்றியும், எஞ்சியிருந்த இந்திய சமுதாயத்தின் தோல்வியுமாகும்.

கருத்துமுதல்வாதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை


ஆதலால், இன்றைய உலகிற்கும், இன்றைய இந்தியாவிற்கும் சங்கரரின் தத்துவம் பொருந்தும் என்று சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவராலும் கற்பனையும் செய்ய முடியாது. உலகைக் குலுக்கும் இன்றைய தின மாறுதல்கள் அல்லது வளர்ச்சிகளை எட்டிப் பிடிக்க வேண்டுமானால் பொதுவாக உலகமும், நமது நாடும் எந்தக் கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் போலவே, இந்த கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். குறிப்பாக இந்தியாவைப் பொருத்த வரையில், இந்து மறுமலர்ச்சி மற்றும் வேத, உடநிஷ உணர்வுகளுக்குப் புத்துயிரூட்டுதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் என்பது நாம் கட்டமைக்க விரும்பும் ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, புது இந்தியாவிற்கான முன்நிபந்தனையாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் பாஜக போன்ற அரசியல் கட்சிகளாலும், ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்துப் பரிசத் போன்ற 'சமூகக் கலாச்சார' அமைப்புகளாலும் குறிக்கப்படும் இந்து மறுமலர்ச்சி அரசியல் கொள்கைகளின் பிரச்சாரத்தால் நமது தேசத்தின் ஒற்றுமைக்கு இழைக்கப்பட்டுள்ள அளவிடமுடியாத தீங்கு பற்றி இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். நமது விடுதலை இயக்கத்தின்  பகுதிகளாக இருந்த தேச ஒற்றுமை, மதநல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளை சீர்குலைக்கக் கூடியவையாக ராமஜன்மபூமி மற்றும் அது போன்ற இதர இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கங்களின் அமைப்பாளர்கள் தங்களது சீர்குலைவு வேலைகளுக்கு ஆதரவாக வேத, உபநிஷ கால முனிவர்களின் பெயர்களையும், சங்கரர் போன்ற அவர்களது வாரிசுகளின் பெயர்களையும் மேற்கோள்  காட்டுகின்றனர். ஆதலால், இந்த தேசவிரோதிகளின் நாசகர வேலைகளை எதிர்த்துப் போராடுவது நாட்டின் இடதுசாரி, மதச்சார்பற்ற அரசியல் சக்திகளின் முழுமுதல் கடமைகளில் ஒன்றாகும்.
என்றபோதிலும், மார்க்சிய-லெனினியவாதிகளான நாம் எப்போதும் கருத்துமுதல்வாத சிந்தனை விஷயத்தில்-சங்கரர் அதன் பிரசித்தி பெற்ற பிரதிநிதி-எதிலும் நம்பிக்கையற்ற அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள மார்க்சிய அறிஞர்கள் பலரால் இந்தத் தவறு செய்யப்படுகின்றது. 'அடிப்படையில் பொருள்முதல்வாதமல்லாத கோட்பாடுகளான பிராமண எதிர்ப்பு அணுகுமுறை அல்லது மோட்சக் கோட்பாட்டை நிராகரிப்பது போன்றவற்றை சில மார்க்சிய அறிஞர்கள் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவையாக அடையாளப்படுத்துகின்றார்கள்....லோகாயத தத்துவம் தன்னிச்சையாக முன்னிலைக்குத் தள்ளப்படுகின்றது; வேதாந்த ஏழாவதாகக் கடைசி இடத்தில் வைக்கப்படுகின்றது' என்று  சோவியத் அறிஞர் ஒருவர் கூறுகின்றார்.
இந்தியாவில் இன்னும் செல்வாக்கு மிகுந்த தத்துவமாக வேதாந்தமே இருக்கிறது என்றும், மேற்கு அய்ரோப்பிய தத்துவத்தில் பிளேட்டோவிற்கு என்ன இடம் இருக்கின்றதோ கிட்டத்தட்ட அதே இடத்தை இந்திய தத்துவத்தில் சங்கரர் வகிக்கின்றார் என்றும் அந்த ஆசிரியர் கருதுகின்றார்.
நான் இவ்விதமாகத் தொகுக்கின்றேன்: இந்தியாவின் (உலகின்) தலைசிறந்த கருத்துமுதல்வாதத் தத்துவவாதிகளில் சங்கரரும் ஒருவர். மனித அறிவுக் கருவூலத்திற்கு இந்தியா அளித்துள்ள வளமான கொடையில் வேதாந்தமும் ஒன்று. ஆனால், பொருள்முதல்வாதத்தின் கூறுகள் அடங்கியிருந்த நியாயவாதம், வைசேஷிகம், சாங்கியம், மீமாம்சம், லோகாயதம் போன்ற தத்துவவாதிகளும் அவர்களது படைப்புகளும் அதுபோலத்தான்; ஒடுக்கப்பட்ட மனிதகுலத்தைக் கவ்விப் பிடித்த புத்தரின் கிட்டத்தட்ட பொருள்முதல்வாதத் தத்துவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்திய தத்துவத்தின் இரண்டு முகாம்களும் அறிவுலக மேதைகளை உண்டாக்கின என்று நாம் பெருமை கொண்டாலும், பொருள்முதல்வாத முகாம் ஒரு சமத்துவமற்ற யுத்தத்தை நடத்த வேண்டியிருந்தது; ஆதலால், தோற்கடிக்கப்பட்டது. இன்னும் துர்பாக்கியம் என்னவென்றால், இந்த சமமற்ற யுதத்தில் பொருள்முதல்வாதம் தோற்கடிக்கப்பட்டதானது அறிவு வளர்ச்சி மற்றும் சமூக-அரசியல் வளர்ச்சி ஆயிரம் ஆண்டு காலம் பின்தங்கியிருந்ததன் துவக்கமாகும்; அது நமது மண்ணில் பிரிட்டிசார் ஆட்சி நிறுவப்படுவதில் சென்று முடிந்தது.
என்றாலும், நான் நம்பிக்கை இழந்துவிடவில்லை. சர்வாம்ச பின்தங்கிய நிலையின் இருண்டகாலம் மெல்ல மெல்ல ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றது. உழைக்கும் மக்களை அடக்கி வைத்திருக்கும் சமூக-அரசியல் சக்திகளுக்கு பலத்த அடிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பழையதை அழிக்கும் இந்த வேலையைச் செய்த அந்நியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜனநாயக சக்திகள் விடுதலைக்காகப் போராடும் ஒரு ஒன்றுபட்ட ராணுவம் போல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டம் அமைதி, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்கான சர்வதேச புரட்சிகர சக்திகளுடன் இணைக்கப்பட்டது.
இந்த வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியில், ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, சோஷலிசம் ஆகியவற்றுக்கான போராட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கம் மெல்ல மெல்ல ஒரு முன்னணிப் படையாக அணிதிரண்டு கொண்டிருக்கின்றது. அரசியல் விழிப்புணர்ச்சி பெற்ற இந்திய மக்களின் முக்கியத்துவம் மிக்க சக்திகளின் முன்னணி தத்துவமாக இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இயற்கையாகவே ஆகிக் கொண்டிருக்கின்றது. மார்க்ஸ் ஒரு ஒன்றரை நு£ற்றாண்டுக்கு முன்னர் 'தத்துவம் தன்னுடைய பொருண்மையான ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்தில் காண்கின்றது; பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மீக ஆயுதத்தை தத்துவத்தில் காண்கின்றது' என்று குறிப்பிட்டாரே, அந்த நிலைதான் இது.

குறிப்புகள்:
1. வி.இ.லெனின், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 38, பக்:363.
2. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, இந்திய தத்துவம்: ஒரு சுருக்கமான அறிமுகம், பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ், 1986, பக்: 85-86.
3. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, 'பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்திற்கு ஆதரவாக', 1989, பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ், பக்:16-17.
4. மேகு நு£ல், பக்: 16-17
5. மேகு நு£ல், பக்: 103-04
6. மேகு நு£ல்
7. சோவியத் ஒன்றியத்தில் சமூக விஞ்ஞானங்கள், எண்:1, 1989, பக்:19(அ)          

  --------------------------------------------------------           (இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், 'வரலாறு-சமூகம்-நில உறவுகள்', பாரதி புத்தகாலயம் வெளியீடு).                            

No comments:

Post a Comment