தமிழில்: அசோகன் முத்துசாமி
(இர்பான் ஹபீப், எஸ்ஸேய்ஸ் ஆன் இந்தியன் ஹிஸ்டரி: டுவேர்ட்ஸ் எ மார்க்சிஸ்ட் பர்ஸ்பெக்டிவ், நியூடெல்லி, துலிகா, 1995)
சோஷலிச-கம்யூனிச தத்துவம் நம்மக்களிடையே பரவத் துவங்கிய போது, அதன் எதிரிகள் அதற்கு எதிராக இரண்டு வாதங்களை முன்வைத்தனர். முதலாவதாக, இந்தியா ஒரு ஆன்மீக நாடு, இங்கு முதலாளித்துவ வகை அல்லது சோஷலிச-கம்யூனிச வகைப் பொருள்முதல்வாதம் எதுவுமே நிலைத்து நிற்காது என்றனர். இரண்டாவதாக, மார்க்சிய அரசியலின் சாராம்சமான வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் இந்திய மண்ணிற்கு அந்நியமானவை என்றனர். இந்தியாவில் என்ன சமூக மோதல்கள் உண்டானாலும் அவை சாதிய அல்லது மத-வகுப்புவாதத் தன்மை கொண்டவை.
இந்தியாவின் ஸ்து£லமான நிலைமைகளுக்கு மார்க்சியத்தைப் பொருத்திய தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி ஆகிய இரு முன்னோடிகளால் இந்திய கலாச்சாரம் பற்றிய இந்த கட்டுக்கதைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டது. லோகாயதம் என்கிற நு£லில் ஆரம்பித்து சட்டோபாத்யாயா தொடர்ச்சியாக எழுதிய தன்னுடைய சொந்தப் படைப்புகளில் ஆன்மீகத்திற்கும், பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் என்பது அய்ரோப்பாவில் கிரேக்கத்தில் நடந்தது போலவே பண்டைய இந்தியாவிலும் நடந்தது என்பதை நிறுவினார். மேலும், உண்மையில் மோதிக் கொண்டிருந்தது சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் ஆகிய இரண்டு எதிரெதிர் வர்க்கங்கள் என்பதையும், அவை முறையே ஆன்மீகத்தையும், பொருள்முதல்வாதத்தையும் ஆதரித்தன என்பதையும் அவர் நிலைநாட்டினார். சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சுரண்டப்படும் வர்க்கங்கள் கிளர்ந்தெழுந்ததையே பவுத்தத்தின் எழுச்சி குறிக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். பவுத்தத்திற்கு எதிரான உக்கிரமான தத்துவார்த்த யுத்தத்தில் சுரண்டும் வர்க்கங்கள் வேதாந்த தத்துவத்தைப் பயன்படுத்தின. பிராமணக் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களால் பொருள்முதல்வாதம் தோற்கடிக்கப்பட்டதானது கலைகள் மற்றும் விஞ்ஞானங்களின் சர்வாம்ச தேக்கநிலையைத் துவக்கி வைத்தது; அதனால் பண்டை காலத்தில் இந்தியாவை விட குறைவான நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த மேற்கு அய்ரோப்பாவை விட இந்தியா பின்தங்கும் நிலையை உருவாக்கியது. இவ்வாறாக, அவருடைய தத்துவார்த்தப் படைப்புகள் பிராமணீயக் கலாச்சாரத்திற்கு எதிரானப் போராட்ட அறைகூவலாக அமைந்தன.
பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதம் தொடர்பான தேவிப்பிரசாத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டுபிடிப்புகள், சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தைப் பிரதிபலித்தன; அதைத் தொடர்ந்து, கிரேக்கத்திலும் ரோமிலும் போலவே இந்தியாவிலும் சமூகக் கலாச்சார வளர்ச்சி என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைபலனே என்ற முடிவிற்கு டி.டி.கோசாம்பி வந்தடைந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மார்க்சிய அடிப்படையிலான தத்துவம் மற்றும் வரலாற்றியல் விஞ்ஞானங்களின் தோற்றத்திற்கு இட்டுச் சென்றனர்.
கோசாம்பியின் கண்டுபிடிப்புகளைக் கையிலெடுத்த ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் மற்றும் அவர்களது பல சகாக்கள் அடங்கிய ஒரு தலைமுறை மார்க்சிய அறிஞர்கள் அவற்றை மேலும் வளர்த்தனர். மார்க்சிய வரலாற்றியலின் வளர்ச்சிக்கு அவர்களில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களுடைய பங்களிப்பை செய்துள்ளனர்; அனைவரும் சேர்ந்து இந்திய வரலாற்றின் இருண்ட மூலைகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளனர்.
அவர்களில் இர்பான் ஹபீப் 'இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள்: மார்க்சியக் கண்ணோட்டத்தை நோக்கி' என்று சரியாகத் தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக் கொணர்வது பொருத்தமாக இருக்கும் என்று இப்போது கருதியிருக்கின்றார். இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு தன்னளவிலேயே மார்க்சியக் கண்ணோட்டத்துடன் அமைந்ததாக ஆகாது என்றும், இது மார்க்சியக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிய ஒரு முயற்சியே என்று ஹபீப் இந்த உபதலைப்பு குறித்து விளக்குகின்றார்.
இந்திய வரலாறு குறித்த மார்க்சிய கண்ணோட்டம் என்பதே சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு வளர்ச்சிப் போக்காகும்; இந்த உண்மையைக் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவின் கீழ் தன்னுடைய சகாக்களின் ஆய்வு முடிவுகள் அனைத்தையும், தன்னுடைய சுயேச்சையான ஆய்வு முடிவுகளுடன் ஒன்றாகச் சேர்த்து, மார்க்சிய தத்துவார்த்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு முறையான இந்திய வரலாற்றைக் கொண்டுவர முயற்சித்திருப்பதற்காக வாசகர் நு£லாசிரியருக்கு நன்றி பாராட்டுவார். தன்னுடைய படைப்பு மார்க்சிய அணுகுமுறையை அடைந்து விட்டது அல்லது அத்தகைய அணுகுமுறையை அதன் முழுமையில் பிரயோகிக்கப்பட்டுவிட்டது என்பதைவிடவும், அத்தகைய அணுகுமுறையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமே என்று அந்த நு£லுக்கான முன்னுரையில் ஆசிரியர் தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கின்றார்.
'மார்க்சிய வரலாற்றியலின் பிரச்சனைகள்' என்கின்ற முதல் கட்டுரை, இந்திய வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறையின் தத்துவார்த்த கருத்துக்கள் பலவற்றை விவாதிக்க ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தேச விடுதலை இயக்க விஷயத்தில் மார்க்சிய அணுகுமுறையின் சாரம் குறித்தும் விவாதிக்கின்றார்.
ஆர்.பி.தத்தின் 'இன்றைய இந்தியா' மற்றும் 'இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு' ஆகிய நு£ல்களை மேற்கோள் காட்டும் ஆசிரியர், தேச விடுதலை இயக்கம் என்பது நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களைத் தவரித்து விவசாயிகள், குட்டிமுதலாளிகள், முதலாளிகள், தொழிலாளி வர்க்கம் என இந்திய மக்களின் அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி என்று இப்போது பொதுவாகக் கருதப்படுவதாகக் கூறுகின்றார். பிரதானமான தேசிய இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ் எல்லா நேரங்களிலும் ஐக்கிய முன்னணியைப் பிரதிபலிக்கவில்லை; 1930களின் பிற்பகுதியில் அது அந்த நிலைப்பாட்டிற்கு நெருக்கமாக வந்தபோதும்.
தேசிய இயக்கத்தின்போது இடதுசாரிகளின் சாதனைகளைக் குறைவாக மதிப்பிடும் மற்றொரு சிறந்த வரலாற்று அறிஞரான பிபின் சந்திராவிடமிருந்து ஹபீப் தன்னைத் தனியே வேறுபடுத்திக் கொள்கின்றார். விவசாயிகள் இயக்கம் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றை உண்டாக்கியது பிரதானமாக கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களது நேச சக்திகளின் கைங்கரியம் என்றும், அதை மறக்கலாகாது என்றும் ஹபீப் கூறுகின்றார்.
அவர் பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார்: 'தேசிய இயக்கத்தை (அது எப்போதுமே காங்கிரசைவிடப் பெரிதாக இருந்தது) நாம் ஒரு பொது மரபாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதில் தனிநபர்கள் வகித்த பாத்திரம் குறித்த அனைத்து மதிப்பீடுகளும் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள் என்கிற புரிதலால் பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சனையாக இந்திய மக்களின் வறுமையையும், அதன் ஒழிப்பையும் முன்னிறுத்தியபோது தாதாபாய் நௌரோஜி கோடிக்கணக்கான மக்களுக்காகப் பேசினார். காந்திஜி அந்த கோடிக்கணக்கான மக்களைத் திரட்டினார்; அந்த திரட்டலின் வடிவம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தபோதும். இவை இந்திய மக்களின் நலனுக்காக ஆற்றப்பட்ட மறக்க முடியாத சேவைகளாகும். இவற்றை மாயையாகவோ அல்லது முக்கியத்துவமற்றவையாகவோ கருதும் முயற்சிகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...இன்று, தேசிய இயக்கத்தின் சாதகமான அம்சங்களான, மதச்சார்பின்மை, பெண்ணுரிமைகள், தேச ஒற்றுமை, பத்திரிக்கை சுதந்திரம், பாராளுமன்ற ஜனநாயகம் போன்ற முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களுக்கு குறிப்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் ஆகியவற்றின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக அனைத்து வர்க்கங்களையும் இணைக்கக் கூடிய ஒரு மக்கள் முன்னணியின் துவக்கப் புள்ளிகளாக இவை அமையலாம். அத்தகைய ஒரு முன்னணி நமது தேசிய இயக்கத்திற்குத் தகுதியானதொரு வாரிசாக இருக்கும்.'
வரலாற்றை மறுகட்டமைப்பதில் மார்க்சிஸ்டுகள் எடுக்க வேண்டிய அணுகுமுறை குறித்து சில முக்கியமான கருத்துக்களையும் இந்த நு£ல் கூறுகின்றது. 'ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள் குறித்த வரலாற்றை இருட்டடிப்பிலிருந்து மீட்பது மட்டுமல்ல, அந்த கலகங்களின் வர்க்க இயல்பு குறித்தும், தங்களது உண்மையான வர்க்கச் சார்பு குறித்து அதில் பங்கேற்ற மக்கள் எந்த அளவிற்கு அறிந்திருந்தார்கள் என்பது குறித்து ஆராய்வதும் முக்கியமாகும். ஏனெனில், தாங்கள் செய்வது வர்க்கப் போராட்டம் என்பது தெரியாமலேயே அதில் பங்கேற்பவர்களால் வர்க்கப் போராட்டம் நடத்தப்படலாம். துர்பாக்கியமாக, பெரும்பாலான எழுச்சிகள் குறித்து ஆளும் வர்க்கச் சார்புடைய அதன் எதிரிகளே எழுதியுள்ளதால், கலகக்காரர்கள் உண்மையில் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ள பெரும்பாலும் நமக்கு வழியில்லை. அப்படி இருந்தபோதும், 17ம் நு£ற்றாண்டில் இந்திய விவசாயிகளின் எழுச்சிகளில் இருந்த வர்க்க உணர்வை விடவும், சீன விவசாயிகளின் எழுச்சி அல்லது 1881ம் ஆண்டு இங்கிலாந்து விவசாயிகளின் எழுச்சிகளில் கூடுதலான வர்க்க உணர்வு இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். இந்தப் பின்தங்கிய நிலைக்கான காரணங்களை, சாதி அமைப்பு அவற்றில் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியத்தை, ஆராய வேண்டும். இன்று அவற்றில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கக் கூடும்.'
'இந்தியா பற்றிய மார்க்சின் பார்வை' என்பது இரண்டாவது கட்டுரையின் தலைப்பு. ஒரு அமெரிக்கப் பத்திரிக்கைக்காக 1853ம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், 1857 கலகம் குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் எழுத்துக்கள் போன்ற முக்கயி படைப்புகள் மட்டுமின்றி, மூலதனம் நு£லிலும், எண்ணற்ற கடிதங்களிலும், குறிப்புகளிலும் மார்க்ஸ் இந்தியா பற்றி கூறியிருக்கும் கருத்துக்களையும் அந்தக் கட்டுரை ஆராய்கின்றது. இன்று அவை நமக்கு மதிப்பு மிக்கவை; ஆனால், இந்தியா குறித்த இறுதி உண்மைகளாக இருப்பதால் அல்ல.
இந்திய வரலாற்று உண்மைகள் குறித்த தன்னுடைய பல கருத்துக்களில் மார்க்ஸ் உண்மையில் தவறு செய்திருக்கின்றார். அவர் ஒன்றும் இந்தியா குறித்த நிபுணரல்ல. அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கிய பொருள் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகும். அந்த நிகழ்முறையை விவரித்து, ஆராயும்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த முதலாளித்துவத்திற்கு முந்தைய வளர்ச்சிப் போக்குகள் குறித்தும் அவர் ஆராய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும்போது, ஆய்விற்குப் பின்னர் அவர் கைவிட்ட பல அனுமானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது இந்தியாவிற்கு மட்டும் பொருந்துவதல்ல என்பதையும் இத்தருணத்தில் சொல்ல வேண்டும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தங்களுடைய தத்துவார்த்தப் பணியின் போக்கில், பின்னர் தவறென்று கண்ட முடிவுகளில் பலவற்றை, அவர்கள் கைவிட்டனர் அல்லது அதற்குப் பதிலாகச் சரியான முடிவை வைத்தனர்.
குறிப்பாக, ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்து மார்க்ஸ் உருவாக்கியிருந்த கருதுகோள்களுக்கு இது நேர்ந்தது. ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்த மார்க்சின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், குறிப்பிட்ட ஒரு சமயத்தில் மார்க்ஸ் கைகொண்டு, விரிவான ஆய்விற்குப் பின்னர் கைவிட்ட அனுமானங்களில் ஆசியபாணி உற்பத்தி முறையும் ஒன்று என்கிற முடிவிற்கு ஹபீப் வருகின்றார். இது ஏன் நிகழ்ந்தது?
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த, ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்திலிருந்து வர்க்க சமுதாயம் முதலில் அடிமைச் சமுதாயமாகவும், பின்னர் அதிலிருந்து நிலவுடமைச் சமுதாயமாகவும், கடைசியாக முதலாளித்துவ சமுதாயமாகவும் வளர்ச்சி அடைந்தது என்கின்ற சூத்திரம், இந்தியா, சீனா மற்றும் இதர ஆசிய சமுதாயங்களுக்குப் பொருந்தாது. அதைத் தொடர்ந்து அவரும் ஏங்கெல்சும் மேற்கொண்ட ஆய்வுகள் பல்வேறு ஆசிய நாடுகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் இருந்தன என்பதைக் காட்டின. ஒவ்வொரு ஆசிய நாட்டிலும் இருந்த ஸ்து£லமான நிலைமைகளும், வளர்ச்சிப்போக்குகளும் ஆராயப்பட வேண்டியிருந்தது. எனவே, ஒரு காலத்தில் மார்க்ஸ் கையாண்ட 'ஆசியபாணி சமுதாயம்' என்பது கைவிடப்பட்டது.
இந்திய மார்க்சியர்களுக்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். ஏனெனில், நான் உள்பட நம்மில் பலர், ஆசியபாணி சமுதாயம் என்கின்ற மார்க்சின் கருதுகோள்தான் இந்திய சமுதாயத்தையும், அதன் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் என்பதை எங்களது சில எழுத்துக்களுக்கு அடிப்படையாகக் கொண்டிருந்தோம். இந்தியாவிற்கு ஆசிய பாணி சமுதாயம் என்கிற கருதுகோளைப் பிரயோகிப்பது அல்ல பிரச்சனை என்பதையும், இந்தியாவின் வரலாறு, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஸ்து£லமாக ஆராய வேண்டும் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டோம். ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்த்தப்பட்ட கூட்டு விவாதத்தில், இந்திய மார்க்சியர்கள் ரஷ்ய அல்லது சீன அல்லது வேறு எந்த முன்மாதிரியையும் பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், இந்திய மாதிரியை உருவாக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொல்லப்பட்டது. அரசியல் அரங்கிற்காகச் சொல்லப்பட்ட இந்த அறிவுரை இந்திய வரலாறு பற்றிய கல்விசார் ஆய்விற்கும் அதே அளவு பொருந்தும்.
மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்கின்ற மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரின் வரையறுப்பு இந்தியாவிற்குப் பொருந்தாது என்பது போல, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காலம் வரையிலான இந்திய சமுதாயம் மாற்றத்திற்கு உள்ளாகவே இல்லை என்று மார்க்ஸ் கருதியதும் தவறு என்பதை ஹபீப் சுட்டிக் காட்டுகிறார். முகலாயர் காலத்து இந்தியாவின் சமூகப் பொருளாதர, அரசியல் நிலைமைகள் குறித்த தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் நின்று, பண்டைய இந்தியா குறித்த தன்னுடைய சகாக்களின் ஆராய்ச்சிகளைச் சார்ந்து, மிகப் புராதன காலத்திலிருந்தே இந்தியா மாறிக் கொண்டே இருக்கின்றது என்றும், ஒன்றல்லா மற்றொரு வடிவத்தில் வர்க்கப் போராட்டம் மற்ற எந்த நாட்டையும் போலவே இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றது என்றும் ஹபீப் முடிவிற்கு வருகின்றார். 'இந்திய வரலாற்றில் விவசாயி', 'இந்திய வரலாற்றில் சாதி', 'முகலாயர் கால இந்தியாவில் வர்க்கப் போராட்ட வடிவங்கள்' ஆகிய தலைப்புள்ள கட்டுரைகள், அய்ரோப்பிய சமுதாயங்கள் போலவே இந்திய சமுதாயமும் மாறிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.
'பிரிட்டிசாருக்கு முந்தைய இந்தியாவில் நிலச் சொத்துடமையின் சமூக விநியோகம்: ஒரு வரலாற்றுப் பார்வை' மற்றும் 'முகாலய இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான உள்ளுறை ஆற்றல்கள்' என்கின்ற வேறு இரண்டு கட்டுரைகள், சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து முகலாய ஆட்சியின் முடிவு வரை, இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களின் ஸ்து£லமான அடிப்படையை விளக்குகின்றன. இந்தத் தொகுப்பில் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள், இந்திய வரலாற்றை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய விரும்பும் எவருக்கும் உண்மையிலேயே அறிவொளி ஊட்டக் கூடியதாக இருக்கும்.
முகலாயப் பேரரசை ஆய்வு செய்த ஹபீப், மதம் மற்றும் இதர தத்துவங்களின் போர்வையில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அளவு வலுவாக இருந்தன என்கின்ற முடிவிற்கு வருகின்றார் என்பதைக் காண்பது சுவாரஸ்யமானது. மா சே துங் நம்மைக் கவனப்படுத்திய சீன வரலாற்றில் நடந்த வர்க்கப் போராட்டங்களையும், முகலாயர் கால இந்தியாவில் நடந்த வர்க்கப் போராட்டங்களையும் அவர் ஒப்பிடுகின்றார். இவை அனைத்தும் இந்திய, சீன, மற்ற ஆசிய சமுதாயங்கள் மாறவே இல்லை என்கின்ற கருத்தை செல்லத்தகாததாக ஆக்குகின்றன. 'பொருளாதாரத்தில் பொதிந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சிக்கான உள்ளுறை ஆற்றல்கள்' என்று ஹபீப் கூறுவது இந்தியாவிலும், சீனாவிலும், மற்ற பல்வேறு ஆசிய நாடுகளிலும் இருந்தன. எனினும், இந்த உள்ளுறை ஆற்றல்கள் நடைமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லை. இதற்கான காரணத்தை கல்வியாளர்களும், அரசியல் பணியாளர்களும் ஆராய வேண்டும். பேராசிரியர் ஹபீப்பும், அவரது சகாக்களும், வரலாற்று அறிஞர்களும் மேலும் ஆய்வுகளை நடத்தி, திட்டவட்டமான முடிவிற்கு வருவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இதற்கிடையே, ஆரியர்களின் படையெடுப்பின் விளைவுகள் மற்றும் உள்நாட்டு இனக்குழுக்களுக்கு எதிராக ஆரியர்கள் நடத்திய போராட்டமும் 'பிரபுத்துவ அதிகாரமும்' (சத்திரியர்கள்), 'புரோகித அதிகாரமும்' (பிராமணர்கள்) தோன்றுவதற்கு இட்டுச் சென்றன என்கின்ற தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயாவின் முறைப்படுத்தலின் பால் நான் கவனத்தை ஈர்க்கிறேன். அரசு அதிகாரத்தின் இந்த இரண்டு வெளிப்பாடுகள் இருப்பிற்கு வந்ததானது ரிக் வேத காலத்திலிருந்து பிரிட்டிசார் இந்தியாவை வெற்றி கொண்ட காலம் வரையிலான இந்திய சமுதாயத்தின் சாராம்சமாகும். 'பிரபுத்துவ அதிகாரம் மற்றும் புரோகித அதிகாரம்' ஆகியவற்றின் இணைப்பு இந்தியாவில் அரசு அதிகாரத்தின் ஸ்து£லமான வடிவமாக இருந்தது; அதற்கு எதிராக சாமான்ய மக்கள் போராட வேண்டியிருந்தது; நாட்டை பிரிட்டிசார் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வரும்வரை மக்கள் போராடினார்கள். 1947ம் ஆண்டு கேரள வரலாறு பற்றி நான் எழுதிய நு£லில் பிரிட்டிசாருக்கு முந்தைய சமுதாயத்தை வர்ணிக்க நான் 'நிலப்பிரபுத்துவம்' என்கிற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பது இவ்விஷயத்தில் கவனிக்கத்தக்கதாகும்; ஏனெனில், கேரள சமுதாயத்தின் நிலைமையை வர்ணிக்க அது பொருத்தமான சொல்லாகத் தெரியவில்லை. ஆதலால், 'உயர்சாதிகள், நிலப்பிரபுக்கள், மன்னர்கள் மற்றும் உள்ளுர் நாட்டாண்மைக்காரர்களின் ஆதிக்கம்' என்கிற சொற்றொடரைப் பயன்படுத்தினேன். ஒடுக்குபவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டம், சாதியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக தேசியவாதிகள் நடத்திய அரசியல் போராட்டம் ஆகியவற்றை விடுதலைப் போராட்டத்தின்போது சாதீய சக்திகளையும், மதவாத சக்திகளையும் விரிவாகத் திரட்டியதன் மூலம் பிரிட்டிசார் எதிர்கொண்டனர். இன்று நமது முதலாளித்தவ ஆட்சியாளர்களால் அதே தந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. ஆதலால், சாதி எதிர்ப்பு மற்றும் வகுப்புவாத எதிர்ப்புப் பதாகையை பாட்டாளி வர்க்கம் கையிலெடுக்கவில்லை என்றால், இந்தியாவில் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி அடைய முடியாது என்பது கண்கூடு.
முகலாயப் பேரரசு காலத்தில், புரட்சியை நிறைவேற்றத் தேவையான சக்தியான நவீன பாட்டாளி வர்க்கம் இருக்கவில்லை. ஆதலால்தான், மதச்சார்பற்ற ஜனநாயகம் மலராமலேயே முகலாயப் பேரரசு அழிந்து போனது. விடுதலைப் போராட்டத்தின்போது கூட, மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு முயற்சி செய்யத் தேவையான அளவிற்கு பலம் படைத்ததாக நவீன பாட்டாளி வர்க்கம் இருக்கவில்லை. ஆதலால்தான் இந்திய ஆளும் வர்க்கங்களால் நாட்டை மதரீதியாகப் பிரிப்பது என்கின்ற அடிப்படையில் பிரிட்டிசாருடன் ஒரு சமரசத்திற்கு வரமுடிந்தது.
வரலாற்றில் இந்திய மக்கள் நடத்திய வர்க்கப் போராட்ட வடிவங்களில் ஒன்று, முதலில் இந்து மதத்திலிருந்து பவுத்தத்திற்கும், சமணத்திற்கும், பின்னர் இஸ்லாமிற்கும், கிறித்துவத்திற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறியதாகும். பவுத்த, சமண மதங்களின் எழுச்சியானது ஒடுக்கப்பட்ட சாதிகள் நடத்திய வர்க்கப் போராட்டத்தின் ஒரு வடிவம் என்றும், வேதாந்த தத்துவத்தின் ஆதரவாளர்களால் பவுத்தத்திற்கும் சமணத்திற்கும் ஏற்பட்ட தோல்வியானது, மேல்சாதிகள் தங்களது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தோற்கடித்ததாகும் என்றும் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா சுட்டிக் காட்டும்போது இதை (மதமாற்றம்-ஒரு வர்க்கப் போராட்ட வடிவம்) ஒரு ஆரம்ப கட்ட கருத்தாகக் குறிப்பிடுகின்றார்.
முகலாய ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் எப்படிப் போராடினார்கள் என்பதற்கு பேராசிரியர் ஹபீப் ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கின்றார். புதிய மதப்பிரிவுகளின் உருவாக்கமும், முகலாயர்களின் அரசியல் எதிரிகளாக மராத்தியர்களின் தோற்றமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். முகலாயப் பேரரசில் வர்ககப் போராட்டம் பற்றிய ஒரு விவரணை என்கிற வகையில் இது போதுமானதே என்றபோதும், இந்த சக்திகள் வகித்த பாத்திரத்தை மட்டும் விவரிப்பது போதுமானதல்ல எனத் தோன்றுகின்றது. முகலாயப் பேரரசின் அழிவு ஒரு ஜனநாயக ஆட்சி நிறுவப்படுவதற்கு இட்டுச் செல்வதைத் தடுத்தது இது இல்லையா? வர்க்கப் போராட்டத்தின் அனைத்து வடிவங்கள் பற்றியும், வெளிப்பாடுகள் பற்றியும்-பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்த-ஆசிரியர் விரிவாக ஆராய்ந்திருந்திருக்க வேண்டும் என்பது என் அவா.
இது எளிதல்லதான். இதை எந்த ஒரு அறிஞராலும் தனியாகச் செய்ய முடியாது; இந்திய சமுதாய வளர்ச்சியின் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் எண்ணற்ற அறிஞர்களின் கூட்டு முயற்சி இதற்குத் தேவைப்படுகின்றது. பேராசியர் ஹபீப் வரலாற்றின் எந்த அம்சத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றரோ அது தவிர்த்த வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் அவருக்கு உதவியிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால், இந்தத் தொகுப்பில் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுரைகளைவிடவும் இந்திய வரலாற்றில் வர்க்கப் போராட்டங்கள் பற்றிய ஒரு இணைக்கப்பட்ட வரலாற்றை மிக முழுமையான வகையில் உருவாக்குவதற்கு அது உதவியிருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் சேகரிக்கப்பட்டுள்ள பேராசியர் ஹபீப்பின் கட்டுரைகள் காட்டுகின்றன. இத்திசை வழியில் பேராசிரியர் ஹபீப் முன்முயற்சி எடுப்பார் என்று நம்புகின்றேன்.
இந்தப் பின்னணியில், பேராசிரியர் ஹபீப்பின் ஆய்விலும், அவர் சார்ந்திருந்த மற்ற அறிஞர்களின் ஆய்வுகளிலும் உள்ள ஒரு குறையை நான் சுட்டிக் காட்ட வேண்டும். அவை பொதுவாக ஆர்யவர்த்தம் எனப்படும் வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் இந்திய வரலாற்றின் வளர்ச்சி பற்றி மட்டுமே தங்களை சுருக்கிக் கொண்டுள்ளன. இந்திய வரலாற்றின் வளர்ச்சிக்கு இந்தப் பகுதி முக்கியமானது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை; ஏனெனில், சிந்து சமவெளி நாகரீகம் இங்குதான் நிலவியது; அதைத் தொடர்ந்து ஆரியர்கள் இந்தியாவை வென்றதையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் ஆட்சியாளர்களின் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் இப்பகுதி கண்டுள்ளது. என்றாலும், ஆரியவர்த்த எல்லைக்கு வெளியே பெரும் பகுதிகள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவின் நான்கு முக்கிய தேசிய இனங்களும் (கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்) தங்களுடையதே ஆன வரலாற்றை உடையவை; தங்களுக்கே உரித்தான அம்சங்களைக் கொண்ட சமூகப் பொருளாதார அமைப்பையும், அரசியல் அமைப்பையும், கலாச்சார முகத்தோற்றத்தையும், இன்னபிறவற்றையும் கொண்டவை. ஆர்யவர்த்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் செல்வாக்கிற்கு இந்த நான்கு தேசிய இனங்களுமே ஆட்பட்டன என்பது உண்மைதான் என்றபோதும், ஆரியவர்த்தத்தின் சமூகக் கலாச்சார, அரசியல் கூறுகளை அவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய வகையில் உள்வாங்கிக் கொண்டன. ஆதலால், ஆரியவர்த்தத்தின் பொதுவான அம்சங்களையும், அந்த ஒவ்வொரு தேசிய இனத்தின் தனிப்பட்ட அம்சங்களையும் முறையாக சீர்து£க்கிப் பார்ப்பது அவசியமாகும்.
உதாரணத்திற்கு, கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது வட இந்தியாவின், வேதக் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தாலும், சமண மற்றும் பவுத்த மதங்களாலும் வலுவான செல்வாக்கிற்கு ஆட்பட்டது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் கேரளா, ஒரு பக்கம் வேதக் கலாச்சாரத்திற்கும், மறுபக்கம் சமண, பவுத்தக் கலாச்சாரங்களுக்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக நடந்த யுத்த பூமியாகும். கேரள வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் பல குறிப்பான அம்சங்கள் தத்துவார்த்தப் போராட்டத்திலிருந்தே தோன்றியது போல் எனக்குத் தோன்றுகின்றது. என்றாலும், துரதிருஷ்டவசமாக அறிஞர்கள் இந்த மோதல்களுக்குப் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை. இருந்தாலும், இன்றைய ஹிந்துக் கோவில்களில் பல ஒரு காலத்தில் சமண அல்லது பவுத்த விஹாரங்களாக இருந்தன என்பதற்குப் போதுமான அளவு உண்மைத் தரவுகள் இருக்கின்றன. வேத கலாச்சாரத்திற்கும், சமண, பவுத்தக் கலாச்சாரங்களுக்கும் இடையில் உக்கிரமான யுத்தம் நடந்துள்ளது போல் தெரிகின்றது. இன்றைய உயர்சாதி, தாழ்ந்த சாதியினரில் பெரும்பாலோர் அநேகமாக அந்த உக்கிரமான யுத்தத்தில் வென்றவர்கள் மற்றும் தோற்றவர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம்; வென்றவர்கள் இன்றைய உயர்சாதிகளாகவும், தோற்றவர்கள் தாழ்ந்த சாதிகளாகவும் ஆக்கப்பட்டுவிட்டனர். ஆம், இது என்னைப் போன்ற அறிஞரல்லாத கேரள வரலாற்று மாணவரால் முன்வைக்கப்படும் ஒரு அனுமானம்தான். ஆனால், இது உண்மை எனில், பண்டைக்கால மற்றும் மத்திய கால கேரளாவில் நடந்த வர்க்கப் போராட்டங்கள் குறித்த பிரச்சனை ஒரு புதிய வெளிச்சத்தில் காணப்படும்.
ஹபீப்பின் நு£லில் மற்றொரு முக்கியமான குறை இருக்கின்றது. அவரது நு£ல் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் தோற்றத்துடன் முடிவடைகின்றது. காலனியாதிக்கத்தின்போதும், விடுதலைப் போராட்டத்தின்போதும் நடந்த மிக முக்கியமான வர்க்கப் போராட்டங்களின் போக்கில் சுயேச்சையான சக்திகளாக முதலாளித்துவ மற்றும் தொழிலாளி வர்க்கங்கள் புதிய எதிரெதிர் வர்க்கங்களாக எழுந்தது பற்றி அந்நு£ல் ஆராயவில்லை.
புனருத்தாரண போக்கு துவங்கியதன் விளைவாக, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் பற்றி மார்க்ஸ் தன்னுடைய 1853ம் ஆண்டு எழுத்துக்களில் கவனப்படுத்தியிருக்கிறார் என்பது நினைவிருக்கும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கல்விக் கூடங்களில் நவீன கலை மற்றும் அறிவியல் பயின்ற, சுதந்திர ஊடகம் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் அப்போதுதான் பிறந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அணிகளாக ஆகினர். தொழிலாளி வர்க்கத்தின் தோற்றத்தை அவர் இதுவரை காணவில்லை என்றபோதிலும், இந்தப் போக்கு தொடரும் என்பதை மார்க்ஸ் மனங்கண்டார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு லெனினிடம் அந்தப் பணி விடப்பட்டது; தொ£ளி வர்க்கம் தன்னை உருவாக்கிக் கொண்டுவிட்டது என்பதை மட்டுமின்றி, லோகமான்ய திலகர் போன்ற ஜனாநயகத் தலைவருக்கு ஆதரவாக செயலிலும் இறங்கிவிட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இரண்டு வர்க்கங்களின் தோற்றம், அவற்றுக்கிடையிலான மோதல்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவற்றின் ஒற்றுமை ஆகிய விஷயங்கள் ஹபீப் நு£லின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாளிகளின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்து வர்க்கத்தினரையும் கொண்ட, ஆனால் மேலும் மேலும் தொழிலாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டதாக ஆகும் தேசிய இயக்கம் மார்க்சிய முன்னணியின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போக்கு எப்படி முன்னேறியது, விடுதலைப் போராட்டத்தின் கண்ணோட்டத்தில் இந்த இரண்டு வர்க்கங்களும் எப்படி முரண்பட்டன என்பது இந்தக் கட்டுரைகளில் விளக்கப்படவில்லை; ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் வளர்ந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாளி வர்க்கம் எப்படி ஆக்கபூர்வமான பாத்திரம் வகித்தது ஆகியவை பற்றிய ஒரு பொதுவான குறிப்பைத் தவிர.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்துடன் இணைந்திருக்கின்ற அதே வேளையில், முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடவும் செய்கின்ற கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த ஒற்றுமை-போராட்டம் முறை எப்படி வளர்ந்தது, முதலாளித்துவ வர்க்கம் எப்படி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பதாகையைத் து£க்கி எறிந்தது, அரசியல் அதிகார கைமாற்ற விஷயத்தில் பிரிட்டிசாருடன் முதலாளி வர்க்கம் எப்படி சமரசம் செய்து கொண்டது, அந்தப் போக்கில் முதலாளித்துவ வர்க்கம் எப்படி இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்கின்ற முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது, விடுதலைக்குப் பிந்தைய பல பத்தாண்டுகளில் தொழிலாளி வர்க்கம் எப்படி முதலாளி வர்க்கத்திடமிருந்து தன்னைத் தனியே பிரித்துக் கொண்டு, அதற்கு எதிராகப் போராடியது என்பன போன்றவை இந்நு£லில் ஆராயப்படவில்லை.
இந்தப் போக்கு இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்திய முதலாளி வர்க்கத்தின் இன்றைய தலைமை, 1950களில் மேற்கொள்ளப்பட்ட நேரு பாதையில் இடம் பெற்றிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டக் கொள்கைகள் சிலவற்றை இப்போது கைவிட்டுவிட்டது. இதனிடத்தில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை (அரசியல் தளத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதனையொத்த அரசாங்கங்களுடன்) வந்துவிட்டது. அது இந்தியாவை உலக முதலாளித்துவத்தின் துணைக்கிரகமாக ஆக்குகின்ற அளவிற்குச் சென்றுவிட்டது.
என்றாலும், நாம் அஞ்சுகின்ற அளவு நிலைமை மோசமாக இல்லை. ஏனெனில், நரசிம்மராவ் அரசாங்கம் கைகொண்டுள்ள பாதைக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்றது. இந்த எதிர்ப்பியக்கத்தில் தொழிலாளி-விவசாயி வர்க்கமக்கள் தீர்மானகரமான பாத்திரம் வகித்து வருகின்றனர். உண்மையில், இதுதான் இன்றைய தேசிய அரசியல் நிலைமையின் சாரம்.
பேராசிரியர் ஹபீப் மற்ற மார்க்சிய வரலாற்று அறிஞர்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றை வளர்த்தெடுப்பார் என்று நான் நம்புகின்றேன்.
----------------------------------------------(வரலா று,சமூகம், நிலஉறவுகள் -இ எம் எஸ் நம்பூதிரிபாட், பாரதி புத்தகாலயம் .
No comments:
Post a Comment