Saturday, April 9, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 3



சேலம் தமுஎகச 6.4.11 அன்று நடத்திய 'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.

 ஏழை வீட்டு அடுப்புகள்
நீர் குளிக்கின்றன
 வயிறுகள் தீக் குளிக்கின்றன
 வணிக சூதாடிகளால்
 எங்கெங்கோ பதுக்கப்பட்டிருந்தன
 உணவுப் பொருட்கள்

 வெங்காயத் தோலை உரிக்காமலேயே
 கண்ணீர் வடித்தனர் பெண்கள்

 இஞ்சி, மஞ்சள், தங்கம்
 மூன்றுக்கும் ஒரே நிறம்
 அதனால் ஒரே விலை

 பொங்கலுக்கு
 முந்திரியையும் ஏலத்தையும்
 முகர்ந்துதான் பார்த்தோம்
 கட்டணம் வசூலித்தார்கள்

 மன்னர்களின் ஆக்கிரமிப்புத் தீ 
 மனிதர்களை, வீடுகளை, விளைநிலங்களை
 பொசுக்கியது
 மனுவின் வர்ணத் தீ
 உழைக்கும் மக்களை
 இழிசனர் ஆக்கி எரித்தது

 வைதீக வேள்வித் தீ
 பகுத்தறிவைச் சுட்டது

 பண்ணைகளின் ஆதிக்கத் தீ
 கூலிகளைக் குடிசைகளோடு கொளுத்தியது

 ஆண் பிணங்களுக்கு வைத்த தீ
 உயிருடன் பெண்களையும்
 உடன்கட்டையில் வேகவைத்தது

 முதலாளிகளின் சுரண்டல் தீ
 தொழிலாளர்களின் குருதியை வறுத்தது

 ஊழல் தீ
 எங்கள் வளத்தையும் வாழ்வையும்
 சாம்பலாக்கியது

 பதவியேற்ற அமைச்சர்கள்
 ஓராண்டிற்குள் கொள்ளையடித்த பணத்திற்குக் 
கொள்ளி வைத்தால்
 சாம்பலாக ஐந்தாண்டுகளாகுமாம்

 தணியவில்லை சுதந்திர தாகம்
 கிடைக்கவில்லை உரிமை வாழ்வு

 உழைத்து உண்பதே
 தன்மானம்
 உழைக்காமல் தின்பது
 அவமானம்

 நாட்டின் செல்வத்தை
 பாடுபட்டோருடன் பகிர்ந்துகொள்வதே
 பகுத்தறிவு
 ஒரு சிலர் கவர்ந்து செல்வதோ
 திருட்டறிவு

 இரண்டாம் உலகப் போர் காலம்
 சேலத்தில் ஆங்காங்கே
 கஞ்சித் தொட்டிகள்
 'குடிக்க கஞ்சி வேண்டாம்
 நெசவுக்கு நூல் வேண்டும்'
 நெசவாளர் முழங்கிய
 பூமி இது

 நாங்கள் வேண்டுவது:
 தகுதிக்கேற்ற வேலை
 தேவைக் கேற்ற ஊதியம்
 ஊழலும் லஞ்சமும்
 இல்லா நிர்வாகம்
 -
இலா.வின்சென்ட் சேலம்









No comments:

Post a Comment