Monday, April 11, 2011

எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 4




சேலம் தமுஎகச 6.4.11 நடத்திய 'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று


        தேகம் மெலிந்து
முகம் கருத்து
விழி அடியில்
கருவளையம் வளர்ந்து
என்னைக் காண சகிக்கவில்லை
எனக் கவலைப்பட்டான்-
ஐந்து வருடங்களுக்குப்
பின் வந்த நண்பன்

ஒரு கிண்ணம் சோறு
அரைக் கிண்ணமாச்சு
பருப்பில்லா சாம்பார்
பழகிப் போச்சு
இனிப்பில்லா காபிதான்
இப்பல்லாம் வீட்டில்
காயும் கூட்டும்
வாரம் இருமுறை
சுத்த சைவம் இல்லை
என்றாலும்
பெரும்பாலும் சைவம்தான்

எங்கு போவது என்றாலும்
எல்லாமே நடைதான்
என்றோ ஒரு நாள்
குடும்பத்திற்கு மட்டுமே
இரு சக்கர வாகனம்

ஏறினால் இறங்கவே
இறங்காததது இரண்டு
ஒன்று வயசு
மற்றொன்று 'பிரைசு'

மளிகைக் கடைப்
பட்டியலின் நீளம்
குறைந்து கொண்டே இருக்க
கொடுக்கும் பணமோ
நீண்டு கொண்டே இருந்தது

மீண்டும் அவன் வர
ஐந்தாண்டுகள் ஆகும்
அன்றைக்குத்தான் அவனறிவான்
அது வரை எரிந்தது
அடுப்புகளா அல்லது
வயிறுகளா என்று.

-நிறைமதி
 சேலம்


No comments:

Post a Comment