Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, February 24, 2012

பங்கரமான ஆயுதம்





 




அந்தக் குரங்கு
ஊமையாகவே இருந்திருக்கலாம்

யார் அழுதார்கள்
அது பேசவில்லை என்று?

அதன் நாக்கு
சுவைக்க மட்டுமே
தெரிந்ததாக இருந்திருக்கலாம்

சுழட்டத் தெரிந்திருக்க
வேண்டியதில்லை

அதன் பற்கள்
இரையை மட்டும் கடிக்கத்
தெரிந்தவையாக இருந்திருக்கலாம்

தொண்டையிலிருந்து எழுந்து
நாவால் வழிநடத்தப்படும்
காற்றோசையை
சொல்லாக மாற்றத்
தெரிந்திருக்க வேண்டியதில்லை

சுடும் நெருப்பாகவோ
வெட்டும் கத்தியாகவோ
துளைக்கும் அம்பாகவோ
தூக்கும் கயிறாகவோ

பயங்கரமான ஆயுதமாகவேதான்
எப்போதும் இருக்கிறது
பேசத் தெரிந்த 'மிருகத்தின்'
சொல்-
பேசத் தெரியாத 'மனிதர்களுக்கு!'

-அசோகன் முத்துசாமி












Friday, November 18, 2011

விலை உயர்வு




        அம்மா என்று
        இனி எந்த உயிரும்
       அழைக்கப்போவதில்லை
       வளைந்து நெளிந்து
       குனிந்து நெகிழும்
       ஜடங்களைத் தவிர.
       ஏனெனில்
       வாழ்வதற்கான தகுதிகள்
       உயர்த்தப்பட்டிருக்கின்றன

Saturday, May 14, 2011

புத்தன் அழுதான் - அசோகன் முத்துசாமி (எம்.அசோகன்)




எல்லாம் முடிந்துவிட்டது

அனைவரும் எரிந்து
கருகிச் சாம்பலாயினர்

அனைத்தும் உருகிக்
கரைந்து மறைந்தன

பூமிப்பெண்ணை சூரியன்
கட்டித் தழுவிக் கொண்டான்

அகலிகை கர்ப்பமுறவில்லை
இனி என்றென்றும்
தாயாகப் போவதில்லை

எல்லாம் முடிந்துவிட்டது

சாகாவரம் பெற்ற வள்ளுவன்
சமாதியின் சுவடில்லை

மீளாத்துயர் மீட்கும் பாரதியைப்
பார்த்தவரில்லை படித்தவரில்லை

அழியாக் காவியம் படைக்க
கம்பனில்லை காளிதாசனில்லை

எல்லாம் முடிந்து விட்டது

ஆர்க்கமிடீஸ் குளிக்க
தண்ணீருமில்லை தொட்டியுமில்லை

நியூட்டன் இளைப்பாற
மரமுமில்லை பழமுமில்லை

ஐன்ஸ்டீன் விளக்கிச் சொல்ல
தெருவுமில்லை திசையுமில்லை

எல்லாம் முடிந்து விட்டது

கெட்ட போரிட்ட உலகம்
வேரோடு சாய்ந்துவிட்டது

புதிதாய்ச் செய்வதற்கு
மண்ணில் ஈரமில்லை

செவ்வாயிலிருக்கும்
நீரைக் கண்டுபிடிக்க

மனிதன் மீண்டுமொரு முறை
குரங்காய்ப் பிறந்து
டார்வின் வழியில்
நடையாய் நடந்து
...............

புத்தன் அழுதான்
போதி மரத்தையாவது
விட்டு வைத்திருக்கக் கூடாதாவென்று!

(1998ல் பாஜக அரசாங்கம் அணுவெடிப்பு சோதனை நடத்தியபோது எழுதிய கவிதை. தீக்கதிர்-வண்ணக்கதிரில் வெளிவந்தது.)




Monday, April 11, 2011

எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 4




சேலம் தமுஎகச 6.4.11 நடத்திய 'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று


        தேகம் மெலிந்து
முகம் கருத்து
விழி அடியில்
கருவளையம் வளர்ந்து
என்னைக் காண சகிக்கவில்லை
எனக் கவலைப்பட்டான்-
ஐந்து வருடங்களுக்குப்
பின் வந்த நண்பன்

ஒரு கிண்ணம் சோறு
அரைக் கிண்ணமாச்சு
பருப்பில்லா சாம்பார்
பழகிப் போச்சு
இனிப்பில்லா காபிதான்
இப்பல்லாம் வீட்டில்
காயும் கூட்டும்
வாரம் இருமுறை
சுத்த சைவம் இல்லை
என்றாலும்
பெரும்பாலும் சைவம்தான்

எங்கு போவது என்றாலும்
எல்லாமே நடைதான்
என்றோ ஒரு நாள்
குடும்பத்திற்கு மட்டுமே
இரு சக்கர வாகனம்

ஏறினால் இறங்கவே
இறங்காததது இரண்டு
ஒன்று வயசு
மற்றொன்று 'பிரைசு'

மளிகைக் கடைப்
பட்டியலின் நீளம்
குறைந்து கொண்டே இருக்க
கொடுக்கும் பணமோ
நீண்டு கொண்டே இருந்தது

மீண்டும் அவன் வர
ஐந்தாண்டுகள் ஆகும்
அன்றைக்குத்தான் அவனறிவான்
அது வரை எரிந்தது
அடுப்புகளா அல்லது
வயிறுகளா என்று.

-நிறைமதி
 சேலம்