Saturday, May 14, 2011

புத்தன் அழுதான் - அசோகன் முத்துசாமி (எம்.அசோகன்)




எல்லாம் முடிந்துவிட்டது

அனைவரும் எரிந்து
கருகிச் சாம்பலாயினர்

அனைத்தும் உருகிக்
கரைந்து மறைந்தன

பூமிப்பெண்ணை சூரியன்
கட்டித் தழுவிக் கொண்டான்

அகலிகை கர்ப்பமுறவில்லை
இனி என்றென்றும்
தாயாகப் போவதில்லை

எல்லாம் முடிந்துவிட்டது

சாகாவரம் பெற்ற வள்ளுவன்
சமாதியின் சுவடில்லை

மீளாத்துயர் மீட்கும் பாரதியைப்
பார்த்தவரில்லை படித்தவரில்லை

அழியாக் காவியம் படைக்க
கம்பனில்லை காளிதாசனில்லை

எல்லாம் முடிந்து விட்டது

ஆர்க்கமிடீஸ் குளிக்க
தண்ணீருமில்லை தொட்டியுமில்லை

நியூட்டன் இளைப்பாற
மரமுமில்லை பழமுமில்லை

ஐன்ஸ்டீன் விளக்கிச் சொல்ல
தெருவுமில்லை திசையுமில்லை

எல்லாம் முடிந்து விட்டது

கெட்ட போரிட்ட உலகம்
வேரோடு சாய்ந்துவிட்டது

புதிதாய்ச் செய்வதற்கு
மண்ணில் ஈரமில்லை

செவ்வாயிலிருக்கும்
நீரைக் கண்டுபிடிக்க

மனிதன் மீண்டுமொரு முறை
குரங்காய்ப் பிறந்து
டார்வின் வழியில்
நடையாய் நடந்து
...............

புத்தன் அழுதான்
போதி மரத்தையாவது
விட்டு வைத்திருக்கக் கூடாதாவென்று!

(1998ல் பாஜக அரசாங்கம் அணுவெடிப்பு சோதனை நடத்தியபோது எழுதிய கவிதை. தீக்கதிர்-வண்ணக்கதிரில் வெளிவந்தது.)




1 comment:

  1. என்னை பாதித்த சில கவிதைகளில் இந்த கவிதையும் ஒன்று தோழரே மிகவும் சிறப்பாக இருக்கிறது ...வரும் நவினத்திற்கு பிறகான அச்சம் தரும் அந்த இருள் நிலை உலகத்தை மிகவும் அழகாக படம் பிடித்து இருக்கிறது உங்கள் கவிதை.
    நன்று

    ReplyDelete