சபர்மதி நதி
அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது
செவிக்கு இனிய
சலசலப்பும் இன்றி
கங்கையினும் புனிதமாகிவிட்டது
சபர்மதி- ஆற்றில்
ஆயிரக்கணக்கில் மிதந்து
சென்று கொண்டிருந்தன
எரித்துக் கொல்லப்பட்டவர்களின்
பிணங்கள்
இன்னும் எரிந்தபடி
இளையோரும் முதியோரும்
இன்னும் பிறக்காத கருக்களும்....
கொல்லப்படுவதற்கென்ன வயதிருக்கிறது?
அவற்றின்
உற்றாரும் உறவினரும்
உயிருக்குப் பயந்து
ஓடிக் கொண்டிருந்தனர்
மான்கள்போல.
'சதி'காரர்கள்
விரட்டிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை
உடன்கட்டை ஏற்றுவதற்கு.
மரண ஓலமோ
உயிர்ப்பிச்சைக் கதறலோ
கொலை வெறிக் கூச்சலோ
எல்லாம் மூழ்கிவிட்டன
நதியின் அமைதியில்.
நகருக்குள்ளிருந்து
பெருக்கெடுத்து வந்த
நரகுருதி வெள்ளம்
நதியில் கலந்து
நீரை அடர்த்தியாக்கிவிட்டது
போலும்.
சபர்மதி சலசலப்பின்றி
அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது
நதியில் மிதந்துசெல்லும்
பிணங்களின் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்துவிட்டதிப்போது
ஆனால், நாட்டுக்குள்
நடைபிணங்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருக்கிறது
பினந்திண்ணிகள் இப்போது
உண்ட களைப்பில்தான்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன
செரித்த பின் அவை
மீண்டும் வேட்டைக்குக் கிளம்பும்
நடக்கும் பிணங்கள்
நடக்காத பிணங்களென்ற
பேதமில்லை அவற்றுக்கு.
அவர்கள் கூறுவது போல்
அமைதிதான் நிலவுகிறது
ஆம்; அமைதி
மயான அமைதி
நதிகள் நாகரீகத்தின்
தொட்டில் என்பார்கள்
சபர்மதி நதிதீரமோ
சுடுகாடு ஆகிவிட்டது
நாகரீகத்தின் சுடுகாடு.
-அசோகன் முத்துசாமி (எம்.அசோகன்)
(குஜராத் மதப்படுகொலைகளையொட்டி 2002ல் எழுதப்பட்ட கவிதை. 11.8.2002 தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது.).
No comments:
Post a Comment