அடையாள அரசியலின் உள்முரண்பாடுகள் பற்றிய கட்டுரைத் தொடரின் இந்தக் கட்டுரையிலும் நாம் முக்கியமாக இரண்டு வகையான அடையாள அரசியலைப் பற்றி விவாதிக்கின்றோம்.
1. பார்ப்பனர்களை எதிர்ப்பதே சமூகநீதி என்கிற 'அடையாள அரசியல்'.
2. விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது பொதுவாக இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பது, அல்லது குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைமையிலான தனிநாடு என்கிற கோரிக்கையை ஆதரிப்பது இதுவே சமூகநீதி அல்லது தமிழ் இனப்பற்று என்கிற 'அடையாள அரசியல்'.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்கிற விருப்பு வெறுப்பற்ற அரசியலுக்குப் பதிலாக பார்ப்பனர்களை எதிர்ப்பதே சமூகநீதி என்று சிலர் கருதுகின்றனர். அதாவது, எந்தவொரு பொதுப்பிரச்சனையிலும் கோட்பாட்டு அடிப்படையிலாக அல்லாமல், தனிநபரின் பிறப்பு அடிப்படையிலாக முடிவிற்கு வருவது.
(தனிநபரின் பிறப்பு அடிப்படையில் முடிவிற்கு அனைத்து மதவாதிகளும்கூட செய்கிற காரியம்தான் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளவும். இந்து மதவாதிகள், இஸ்லாமிய மதவாதிகள், இன்னபிற மதவாதிகள். எனினும், இது தனிக்கதை ).
இவர்கள் என்ன செய்கிறார்கள்?
ஒரு உதாரணம்.
#சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனரான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வருவதற்குப் பதிலாக சூத்திரரான கருணாநிதி தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் கருதினர்; கருதிக் கொண்டிருக்கின்றனர். விரும்பினர்; விரும்பியது நடக்காத வருத்தத்தில் இருக்கின்றனர்.
கருணாநிதியின் தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவே கூடாது என்று விடுதலைப் புலி ஆதரவு தமிழ்தேசியவாதிகளில் பெரும்பாலோர் விரும்பினர். அதற்கு 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு உதவியது காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இவர்களில் பெரும்பாலோர் தங்களை பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, பார்ப்பனீயத்தை அல்லாமல் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள்.
பர்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் பார்ப்பனரான ஜெயலலிதாவை எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால், ஆதரித்தார்கள். இது, இந்த இரண்டு அடையாள அரசியல்களுக்கு இடையிலான முதல் முரண்பாடு. எப்படியேனும் தனிஈழம் அமைய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு முரண்பாடாகவே தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் சைவ மதத்தை ஆதரிப்பவர்களாகவும், அதன் மூலம் இந்து மதத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள்தான், இந்துத்துவவாதிகளான அத்வானி, அசோக் சிங்கால், ஜெயேந்திரன் போன்றவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டவர்கள். அவர்கள் பால் தாக்கரேயைப் பாராட்டினார்கள். நரேந்திர மோடியைப் பாராட்டுகிறார்கள். இந்துத்துவத்துடன் அவர்களுக்கு உண்மையிலேயே முரண்பாடு எதுவும் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது; அந்த அளவிற்கு இப்போது இந்துத்துவவாதிகள் 'இலங்கைத் தமிழர்' பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் மொழி உணர்வு பகுத்தறிவின் அடிப்படையிலனதாகவும், பொதுவுடமையின் அடிப்படையிலானதாகவும் இல்லை என்றால் அது மதவாதத் தன்மை கொண்டதாக ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. தமிழ் மொழி உணர்வு அல்லது தமிழ் மொழியின் அடிப்படையிலான இன உணர்வு இயல்பாகவே இந்து மதம் தவிர்த்த பிற மதங்களுக்கு எதிரான உணர்வாக சீர் கெடுகின்றது; இலங்கையிலும் (இலங்கையில் விடுதலைப் புலி ஆதரவு தமிழ்தேசியத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு அல்லது சைவ தமிழ் தேசியத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு) இந்தியாவிலும் இதற்கு ஏராளமான சான்றுகளைக் காட்ட முடியும். வரலாற்றிலும் கூட இதற்குச் சான்றுகள் இருக்கின்றன; தமிழகத்தில் சமண, பவுத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கழுவில் ஏற்றப்பட்டதை இன்றும் நியாயப்படுத்தும் 'தமிழ் தேசியவாதிகள்' இருக்கின்றார்கள். இஸ்லாமியத்தை, பவுத்தத்தை, கிறித்துவத்தை 'தமிழ்க்' கலாச்சார அடிப்படையில் எதிர்ப்பவர்கள் இருக்கின்றார்கள்.
கருணாநிதி சூத்திரர் என்றும், அதனால் அவர் தமிழர் என்றும், அதனால் அவர் என்ன செய்தாலும் ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர் என்று ஏற்கனவே கூறினோம். கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்தன; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது; திரைத்துறை, பத்திரிக்கை, தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் கருணாநிதியின் குடும்பத்தினர் செலுத்திய ஆதிக்கம் சொல்லி மாளாது; மாவட்டந்தோறும் திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் நடத்திய அராஜகங்களும், அட்டூழியங்களும், ரியல் எஸ்டேம் உள்ளிட்ட பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளை அவர்கள் ஆக்கிரமித்ததும் பெரிய வரலாறு; இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் பரலோகம் என்பதுதான் நிலைமை. ஒரு பாவமும் அறியாத தினகரன் பத்திரிக்கை ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டது, அமைச்சர் கேட்டும் நிலத்தைக் கொடுக்கவில்லை என்பதற்காக சேலத்தில் முன்னாள் காவல்துறை ஆய்வாளர் குப்புராஜ் உள்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டது, கோரிக்கைகளுக்காக ஊர்வலம் போன அரசு ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீது காவல்துறையின் தாக்குதல் என்று பட்டியல் மிகப் பெரியது. இதன்றி சிறுதொழில்கள் பலவற்றை முடங்கச் செய்த மின்வெட்டு. இதற்குக் காரணமே நிலக்கரி இறக்குமதி உரிமம் பெற்ற திமுக தலைவர்களும் அவர்களது குடும்பத்தாரும் என்று சொல்லப்படுகின்றது; மின்வெட்டு இருந்தால்தான் மின் உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று சொல்லி கோடி கோடியாக கொள்ளையடித்தது மட்டுமின்றி கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை இருள் சூழச் செய்தனர். கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை நடந்து கொண்டிருக்க, அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி நாகூசாமல் பொய் பேசிக் கொண்டிருந்தார்; போதாக்குறைக்கு திமுக அமைச்சர்களும், கருணாநிதி குடும்பத்தினரும் மாவட்டந்தோறும் கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தனர்; புதிது புதிதாகத் துவக்கினர்; கல்வி வியாபாரத்தில் ஏகபோகம் செலுத்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்; மக்கள் ஆத்திரம் தாளாமல் ஒரேயடியாக அடித்து துவைத்துவிட்டனர். ஆனாலும், பார்ப்பன எதிர்ப்பே சமூக நீதி என்கிற சிந்தனை உடையவர்கள் கருணாநிதிதான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்று ஏதோ புரட்சியாளர்கள் போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் உண்மையிலேயே சமூகநீதிக் காவலர்களா அல்லது ஊரை அடித்து உலையில் போடுவதில் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று போட்டியிடுகிறவர்களா, அல்லது, பார்ப்பனர் வகித்த அல்லது ஓரளவிற்கு இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்ற ஆதிக்க இடத்தை தாங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறு நோக்கம் இல்லாதவர்களா என்கிற சந்தேகம் இயற்கையாகவே எழுகின்றது. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் பிரச்சனைகள் பற்றி இவர்களுக்குக் கவலையே இல்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் அது சூத்திரன் ஆட்சியாக இருந்தால் போதும் என்பவர்கள். சமூகநீதிக்குக் குழி பறிக்க இவர்களைத் தவிர வேறு யாரும் தேவையே இல்லை.
---------------------------
.
No comments:
Post a Comment