2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திமுக அமைச்சரான ஆ.ராசா மீது முதன் முதலில் குற்றச்சாட்டு எழுந்த போது திமுக தலைவர் கருணாநிதி என்ன சொன்னார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். ராசா ஒரு தலித் என்பதால்தான் இப்படி பழி சுமத்துகிறார்கள் என்றார். சமூகநீதியின் மொத்த குத்தகைதாரர் என தன்னை அழைத்துக் கொள்பவர் அவர். அவரது சப்காண்டிராக்டர்களான கி.வீரமணியும், சுப.வீரபாண்டியனும் இது ஒரு பார்ப்பன சதி என்று வழிமொழிந்தனர். இது கிட்டத்தட்ட ஊழல் செய்வதிலும் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார்களோ என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது என்லாம். அதாவது, அதிகாரம் எப்படி மேல்சாதியினருக்கு மட்டும் உரித்ததில்லையோ அது போல, ஊழல் செய்வதும் மேல்சாதியினரின் பிறப்புரிமை அல்ல என்று திமுக தலைமை வாதிடுவது போல் இருந்தது. நிற்க. ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம் என்பது பரவலான மக்கள் கருத்தாக ஆன பின்னர் ராசா ராஜினாமா செய்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராசா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிரச்சனை அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. ஊழல் பணம் எங்கே சென்றது? யாரெல்லாம் அதனால் பயன் பெற்றார்கள்? என. கலைஞர் தொலைக்காட்சிக்கு சில வடமாநில நிறுவனங்கள் மூலம் வந்த 200 கோடி ரூபாய் பணம் 2ஜி ஊழல் பணம்தான் என்கிற சந்தேகத்தின் அல்லது குற்றச்சாட்டின் அடிப்படையில்கலைஞர் டிவியின் இயக்குனர்களில் ஒருவரான திமுக எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் குற்றவாளி என்று மத்தியப் புலனாய்வுத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கனிமொழியையும் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கோரியது. அதற்கு எதிராக வாதாடிய கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி 'அலைக்கற்றை ஊழலில் அனைத்தையும் செய்தது ராசாதான் அவர்தான் பொறுப்பு. கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்று வாதிட்டார். மொத்த பழியையும் ராசா மீது ஜெத்மலானி சுமத்துகிறார். ஆனால், கருணாநிதியோ, அவரது சப் காண்டிராக்டர்களோ ஜெத்மலானியை விமரிசிக்கவில்லை. ராசா தலித் என்பதால்தான் அவர் இப்படிக் குற்றம் சாட்டுகிறார் என்று சொல்லைவில்லை. இப்போது ராசா ஒரு தலித் என்பதையே மறந்து விட்டார்களா என்ன? காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கனிமொழி கருணாநிதியின் மகள். அவர்ழிக் காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் பலியிட அவர்கள் தயார். எந்தக் கோட்பாட்டை வேண்டுமானாலும் பலியிடத் தயார். சமூக நீதி கருணாநிதியின் வீட்டு வாசல் வரைதான் வரலாம். சமூக நீதி-அது பெரியார் சொன்னதாக இருந்தாலும், அம்பேத்கர் கொன்னதாக இருந்தாலும்-அவரது வீட்டிற்குள் நுழைய முடியாது. அது சமூக நீதி நுழைய முடியாத, நுழையக் கூடாத பார்ப்பன கர்ப்பக்கிருகம் போலும். வர்க்கப் பார்வையை மறுக்கும், வர்க்கங்களின் இருப்பை மறுக்கும் அடையாள அரசியலின் அடிப்படையான முரண்பாட்டிற்கு இதுவும் ஒரு உதாரணம். வெறும் அடையாளம் அந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்மை செய்வதில்லை. அதற்குள்ளும் பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை.
No comments:
Post a Comment