Wednesday, April 27, 2011

கடவுளின் மரணம்





அசோகன் முத்துசாமி


இதற்கு முன்னர் பூமியில் ‘அவதரித்த’ எல்லாக் ‘கடவுளர்களையும்’ போலவே சாய்பாபாவும் செத்துப் போய்விட்டார். இது பக்தர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இப்படிச் சொல்வதால் அவர்களுக்குக் கோபம் கூட வரலாம். ஆனால், என்ன செய்வது? பிறந்ததெல்லாம் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது  இயற்கையின் விதி.
அந்த விதியை சாய்பாபாவின் அற்புத ஆற்றல்கள் கூட மாற்ற முடியாது. வெறும் காற்றிலிருந்து சிவனையே அவரால் வரவழைக்க முடியும். அதாவது, சிவ லிங்கத்தையே. (பகுத்தறிவாளர்களே அதற்குள் அவசரப் படாதீர்கள்.) . ஆனால், அவரைக் காப்பாற்ற சிவன் வரமாட்டார். அல்லது வரவில்லை. காரணம் வெகு எளிமையானது. சிவலிங்கம் இருக்கின்றது. அது நம் அனைவருக்கும் தெரியும். அது வெறும் நம்பிக்கை அல்ல. அதனால் அது வருகின்றது. ஆனால், சிவன்?
சாய்பாபா அவரது பக்தர்கள் பலர் கூறுவது போல் தன்னலமற்றவர்தான். பொது நலம் பேணுபவர்தான். இல்லை என்றால் நித்தம் நித்தம் தன் அற்புத ஆற்றலால் சிவலிங்கங்களை உற்பத்தி செய்து நாடெங்கும் கடை போட்டு விற்றிருக்க மாட்டாரா?
வேறொரு வகையில் பார்த்தால் அவர் உலகின் மிகச் சாமர்த்தியமான வியாபாரிகளில் ஒருவர். வருடத்தில் சில நாட்கள், அதுவும் எப்போதாவது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களில் சிலருக்கு மட்டும் சிவலிங்கத்தை வரவழைத்துக் கொடுக்கின்றார். வெறும் சாம்பல் விபூதியை வரவழைத்துக் கொடுக்கின்றார்.
எங்கிருந்து வரவழைக்கின்றார் என்கிற கேள்வியை விட்டுத் தள்ளுங்கள். தன் சட்டைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டுதான் பக்தர்களுக்குத் தரிசனம் தரவே வருகின்றார் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? எத்தனை முறைதான் நிரூபிப்பது?எப்படியோ அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்பதையும்அவர் சாதாரண மனிதர்தான் என்பதை இயற்கை நிரூபித்து விட்டது.
அந்த சிவலிங்கங்கள் அவருக்கு அல்லது அவரது மடத்துக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றுத் தருகின்றன. பத்தோ, இருபதோ அல்லது நுhறோ பெறுமானமுள்ள சிவலிங்கத்தின் விலை பல கோடிகள். சாமர்த்தியமான வியாபாரி இல்லையா என்ன?
மேலும், சிவலிங்கமானாலும், வெறும் சாம்பலானாலும் அவற்றுக்கும் பிரான்ட் நேம் இருக்கிறது ஐயா. திருப்பூர் பனியனை விற்கிறவன் விற்றால்தான் நல்ல விலை வரும். ஆனால், அது தயாரித்தவனுக்கு வருமா வராதா என்பது வேறு விஷயம்.
சரி. இதையெல்லாம் விடுங்கள். அவரது தத்துவங்களில் ஏதாவது புதுமை இருக்கிறதா எனக் கேட்டீர்களானால் அதற்கும் இல்லை என்பதுதான் பதில். இந்திய மதச் சிந்தனை மரபில் பல நுhறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டவற்றைத்தான் அவர் திரும்பச் சொல்லியிருக்கின்றார். எல்லோர் மீதும் அன்பு செலுத்து என்பது புதிய தத்துவமா என்ன? மகிழ்ச்சியை வெளியே தேடாதே, அது உனக்குள்தான் இருக்கிறது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன போதனை அல்லவா? அவரது பொன் மொழிகளைப் படித்தால் தெரியும். புதிய சரக்கு ஒன்றுமில்லை என்பது.
சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்ட கீதையின் பல கருத்துக்களை இவர் தன்னுடையது போல் கூறியிருக்கின்றார். ஒரு சாம்பிள்: கடவுளே அனைத்தையும் செய்விக்கிறான். நீ வெறும் கருவி மட்டுமே.
கண்ணணே கொலை செய்கின்றான், நீ செய்யவில்லை என்று கண்ணன் அர்ஜீனனுக்குச் சொன்னது நினைவிற்கு வர வேண்டும்.
தத்துவம் புதிதில்லை என்றால், பழையதையே சொல்லும் அவர் பின்னால் மக்கள் ஏன் புதிதாகச் செல்ல வேண்டும்? பழைய நபர்கள் மீது மக்கள் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம். அல்லது பழைய சாமியார்கள் அல்லது மதகுருக்கள் சலித்துவிட்டார்கள் என்று அர்த்தம். அல்லது புதிய புதிய மொந்தைகள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று அர்த்தம்.
சாய்பாபா ஒரு மதச்சார்பற்ற சாமியார் என்று அவரது பக்தர்கள் புகழ்கின்றனர். சில பொது நோக்கர்களும் கூட சிலாகிக்கின்றனர். அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று சங்பரிவாரிகள் அவரிடம் பல முறை கேட்டிருக்கின்றனர். ஆனால், பாபா மறுத்துவிட்டார். நல்லது. ஆனால், மதவெறியர்களின் இயக்கத்தை அவர் கண்டிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்து, முஸ்லிம், கிறித்துவம் என பல மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரது பக்தர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களை அவர் இழக்க முடியாது. வகுப்புவாதிகளை ஆதரிக்காததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க முடியும். ஆனால், என்ன காரணத்திற்காக இது போல் நடுநிலை வகித்திருந்தாலும் அது இந்து மத வெறியர்களுக்கே சாதகமாகிப் போனது என்பதுதான் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து நாம் பெறும் முடிவு.
போதாக்குறைக்கு, இறைச்சி உணவைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவர் வன்முறை உணர்வையும்,  மிருக நோய்களையும் வளர்க்கிறார் என்றும் அவர் ‘பொன் மொழிந்திருக்கிறார்’. எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் இருக்கின்றார். எனவே, நீங்கள் ஒரு மிருகத்தை அல்லது பிராணியைக் கொல்லும்போது கடவுளுக்கு துன்பத்தையும், வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்துகின்றீர்கள் என்பதும் அவரது கூற்றுகளில் ஒன்று. (அப்படியா, கடவுளுக்கு இது போன்ற உணர்ச்சிகள் உண்டா?). ஆக, அவரது கடவுள் சைவக் கடவுள்.
மேலை நாடுகளில் சைவம், அசைவம் என்பது வெறும் உணவுப் பழக்கம்தான். இந்தியாவில் அது மதம் சம்பந்தப்பட்ட விவகாரம். சாய்பாபாவின் கருத்துக்களில் பல வகுப்புவாதிகள் பயன்படுத்திக் கொள்ள ஏற்றவையாக இருக்கின்றன.
போகட்டும்.
சாய்பாபா கல்வி நிலையங்களை நடத்துகின்றார். மருத்துவ மனைகள் கட்டி இலவசமாக சிகிச்சை வழங்குகின்றார்.  சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வரும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் கொடுத்து உதவினார். அதே போல் ஆந்திராவிற்கும் உதவி செய்துள்ளார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, செய்யாததை எல்லாம் அவர் செய்தார். இப்படியாக அவரது புகழ் பாடப்படுகின்றது.
எடுத்த எடுப்பில் எழும் கேள்வி இதுதான். அரசாங்கம் ஏன் செய்யவில்லை?
அரசாங்கம் செய்ய வேண்டியதை எல்லாம் இவர் ஏன் செய்கிறார்?
கல்வியையும்,மருத்துவத்தையும் ஆடம்பரமான சேவைகளாக ஆக்கியது அரசாங்கம்தான். அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணற்றோர். பாபா அறக்கட்டளை அவர்களில் விரல் விட்டு எண்ணத்தகுந்தவர்களுக்கு இலவச சேவை வழங்குகின்றது. இது போல்தான் கல்வி நிலையங்கள் போன்ற இதர உதவிகள் மற்றும் சேவைகள்.  
இந்தியாவில் உள்ள சாய்பாபா அறக்கட்டறையின் சொத்து மதிப்பு மட்டும் 40,000 கோடிகள். உலகெங்கும் உள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் 1,45,000 கோடிகள்.  இவ்வளவு பெரிய சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? பக்தர்களின் காணிக்கைகளின் மூலம் வந்தன. பக்தர்கள் என்றால் பணக்கார பக்தர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், கள்ளக்கடத்தல் காரர்கள் இன்னும் இது போன்றோர் ஆகியோரின் கருப்புப் பணம். இந்த தனவந்தர்கள் யாரை எவ்வளவு சுரண்டினார்களோ, எத்தனை ஊர்களை அடித்து உலையில் போட்டார்களோ தெரியாது.
கூலி சற்று அதிகமாகக் கொடுக்க மறுப்பவர்கள், அரசாங்கத்திற்கு வரி கட்ட மறுப்பவர்கள் பாபாவிற்கு மட்டும் வாரிக் கொடுக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? மனசாட்சியின் உறுத்தலா? இதயமற்ற உலகத்தின் இதயமா அல்லது இதயமற்ற உலகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டமா?
அல்லது நேர்மையானவர்கள் கொடுக்கும் பணம் என்றால் அவர்கள் ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். நேரடியாக தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவதை விட்டு விட்டு ஏன் பாபா மூலம், அவருக்கு ஒரு தரகர் கமிஷனும் கொடுத்து, தர்மம் செய்ய வேண்டும்?
எப்படியாயினும் சகல தரப்பு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பாபாவைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர், முதல் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் குடியரசுத் தலைவர்கள் என்று இரங்கல் தெரிவிப்பதைப் பார்த்தால் ஒன்று தெளிவாகின்றது.
பாபாவுடைய பணக்கார பக்தர்களின் சொத்தை பறிக்க வேண்டாம். வரியை ஒழுங்காக வசூல் செய்தால் போதும். எத்தனையோ கோடி பேருக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கலாம். கல்வியை இலவசமாக வழங்கலாம். இன்னும் பல நகரங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கலாம்.
பாபா இந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகின்றார். தன்னுடைய போதனைகள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், தன்னுடைய சேவைகள் மூலம் அவர்களது சிந்தனையை திசைதிருப்பவும்  பாபாக்கள் தேவைப்படுகின்றனர். அதனால்தான் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வருகின்றனர். அதனால்தான் அவருக்கு அரச மரியாதை.
----------------------------27.4.11
 

 

8 comments:

  1. கடற்கரையில் அந்த சிறுவன் எதையோ எடுத்து கடலுக்குள் வீசுகிறான். அலையோரம் ஓடுகிறான். பொறுக்குகிறான். மீண்டும் வீசுகிறான்.தூரத்திலிருந்து இதனை கவனித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அருகில் வந்து என்னவென்று பார்க்கிறார். மீன்கள். அலைகளால் கரை ஒதுங்கிய மீன்கள், மீண்டும் கடல் சேர முடியாமல் துடித்துக் கொண்டிருக்க, அவற்றைத் தான் அச்சிறுவன் கையிலெடுத்து மீண்டும் கடலுக்குள் எறிந்து கொண்டிருக்கிறான். புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சற்று நேரத்திற்குள் சலிப்படைந்து சிறுவனை நெருங்கிக் கேட்கிறார், "நீ ஓடி ஓடி பத்து மீன்களை காப்பாற்றுகிறாய். அலையோ அதற்குள் நூறு மீன்களை கரை சேர்த்து விடுகிறது. எதற்காக இந்தப் பாடு? உன்னால் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி விட முடியும்?"
    ஓட்டத்தை நிறுத்தாமல் சிறுவன் பதிலுரைக்கிறான், "என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியாது. வேண்டுமானால் மீண்டும் கடல் சேர்ந்த அந்த மீன்களைக் கேட்டுப் பாருங்கள், அவற்றுக்குத் தெரிந்திருக்கலாம்"
    அப்படி ஒரு மீனை நானறிவேன். மூன்று வயது சிறுமி அவள். இதயத்தில் பிரச்சனை. ஒரே மகள். நடுத்தரக் குடும்பம். அப்படியும் தங்கள் சக்திக்கு மீறி சுமார் மூன்று லட்சம் வரை செலவு செய்து தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தார்கள்.சுகப்படவில்லை. கடைசியில், யாரோ ஒருவரின் ஆலோசனையின் பேரில் பெங்களூரில் சத்ய சாய் மருத்துவமனையில் காட்டினார்கள். உயர்தர சிகிச்சை.ஒரு பைசா செலவில்லை. உணவு, மருந்து, மாத்திரை, ஆப்பரேஷன் அத்தனையும் இலவசம். உயிர் பிழைத்தாள் சிறுமி. இது நானறிந்த சம்பவம். அறியாதது ஆயிரம். அவர்களிடம் போய் சொல்லுங்கள், 'பாபா ஒரு மோசடி பேர்வழி' என்று. உங்கள் யோக்கியதையை சந்தேகப் படுவார்கள்.
    அப்படியே ஒரு வாதத்திற்கு அவரை மோசடி பேர்வழி என்றே வைத்துக் கொள்வோம். அவர் யாரை மோசடி செய்கிறார்? பணக்காரர்களைத் தானே! அதுவும் உங்கள் கூற்றுப்படி , வரி ஏய்ப்பு செய்பவர்கள், ஊரையடித்து உலையில் போடுபவர்கள், கறுப்புப் பணக்காரர்கள் இப்படிப் பட்டவர்களைத் தானே! நமக்கென்ன நட்டம்? அதனால் ஊருக்குள் நாலு நல்லது நடந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே! காவி உடையில் ஒரு ராபின் ஹூட்.
    கல்வியும், மருத்துவமும் மற்றப் பிற சேவைகளும் அரசாங்கத்தின் கடமை தான். அரசு செய்யத் தவறியதை தனியொருவன் செய்வானாகின் அவன் குற்றவாளியா?
    பொதுநலத் தொண்டு என்ன உங்களின் தனியுடமையா? 'தோழர்களைத்' தவிர வேறு யாருக்கும் அதில் உரிமையில்லையா? கட்சிகளால் அல்ல, அன்னை தெரசா போன்ற தன்னலமற்ற ஆத்மாக்களால் வாழுகிறது இந்த பூமி. தோழர்களிலும் அத்தகைய ஆத்மாக்கள் இருப்பது இந்த பூமி செய்த புண்ணியம்
    ஆயிரம் குற்றச்சாட்டுக்கள், ஆயிரமாயிரம் விமர்சனங்கள் ஆயினும் தோழர் ஸ்டாலினை தோழர் என்ற ஸ்தானத்திலிருந்து உங்களால் இறக்கி வைக்க முடியுமா? அப்படித் தான் பாபாக்களுக்கும். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அவரவர் விசுவாசம் அவரவர்க்கு.
    நிற்க, வக்காலத்து வாங்குவதால் என்னை பாபாவின் பக்தனென்றோ, அவரால் ஆதயம் அடைந்தவனென்றோ, அல்லது கறுப்புப் பணக்காரனென்றோ நினைக்க வேண்டாம். தங்களின் 'சாளர'ப் பார்வை குறுகலாக உள்ளது. வாசல் தாண்டி வருவீரேயாயின் பார்வை விசாலப் படும். முயற்சியுங்களேன்!

    ReplyDelete
  2. நண்பர் ராஜ்குமாருக்கு,1. கருப்புப் பணம் வைத்திருப்பவன், ஊரை அடித்து உலையில் போடுபவன், ஊழலில் திளப்பவன் காசில் ஒரு கமிஷ்னும் எடுத்துக் கொண்டு ஊருக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறவனை நல்லவன் என்று சொல்கிறவர்களின் யோக்கியதைதான் சந்தேகத்திற்குரியது. 2. கோடானு கோடி மக்கள் அடிப்படை மருத்துவ வசதிகளே இல்லாமல் அல்லலுறுவது பற்றி நாங்கள் பேசுகிறோம். நீங்கள் சில உதாரணங்களைக் காட்டி அவனைப் பாராட்டுங்கள் என்கிறீர்கள். அந்தக் கோடிக்கணக்கான மக்களிடம் போய் இதைச் சொல்லுங்கள், அவர்கள் சொல்வார்கள் உங்கள் யோக்கியதை என்னவென்று.3.சாய்பாபாவால் கொல்லப்பட்ட இளைஞர்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அவர்களது குடும்பத்தவர்களிடம் போய் இப்படிப் பேசிப் பாருங்கள். அப்போது தெரியும் உங்களது யோக்கியதை என்னவென்று.4. சாய்பாபா பணக்கரர்களை மோசடி செய்கிறாரா? நான் எங்கே அப்படிச் சொல்லியிருகிறேன்? சாய்பாபா உழைப்பவனுக்கு ஒழுங்காகக் கூலி கொடுக்காமல் ஏய்க்கிற பணக்காரர்களைப் பாதுகாக்கின்றார். அதனால்தான் அவர்கள் அவருக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். 5. இத்தகைய சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாபா போன்றவர்களைப் பாராட்டுவது சமூக விரோதிகளை ஊக்குவிப்பது போலாகும். நிச்சயமாக அது யோக்கியர்கள் செய்கிற வேலை அல்ல. 6. அரசைப் பொருத்த வரையில், பொது அமைப்புகளைப் பொருத்த வரையில்தான் மதமும், கடவுள் நம்பிக்கையும் தனிப்பட்ட விஷ்யம். மதகுருமார்கள் ஏழைகளையும், துன்பத்தில் உழல்பவர்களையும், அது அவர்களது விதிப்பயன்,கடவுளின் சித்தம், கெட்ட நேரம் என்றெல்லாம் சொல்லும் போது அது தனிப்பட்ட விஷ்யமல்ல. பொது விஷ்யம். அவர்கள் வாய் மூடிக் கொண்டிருந்தால் கடவுளை நம்புகிறவர்களே இந்த உலகில் இருக்க மாட்டார்கள் என்பதை அறிக. பிரச்சாரம் இல்லாமல் கடவுளும் இல்லை. மதமும் இல்லை.

    ReplyDelete
  3. ரோஜாவில் முள்ளைப் பார்க்கிறீர்கள். நான் முள்ளில் ரோஜாவைப் பார்க்கிறேன். பார்வைகள் மாறலாம்(எனக்கும் தான்). எல்லாமே மாற்றத்திற்குரியவை தானே! மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  4. கவித்துவமான உதாரணங்கள் எந்த அசிங்கத்தையும் புனிதப்படுத்திவிடாது.
    சாய்பாபா, ரவிசங்கர், ஜத்குரு போன்றவர்கள் செய்கின்ற சில
    'தானதருமங்களைப்' புகழ்கிறவர்கள் இதே வேலையை தாவூத் இபராகிம் செய்தால்
    ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். அவன் எப்படிச் சம்பாதித்தால் என்ன, நாலு
    பேருக்கு நல்லது செய்கிறானே என்று ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? எந்தக்
    காலமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் சாமியார்கள் அல்லது ஆன்மீக
    வியாபாரிகள் ஆளும் வர்க்கங்களை, சுரண்டும் வர்க்கங்களைப்
    பாதுகாக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை
    தணிக்கவே அல்லது மக்களின் கோபத்திலிருந்து ஆளும் வர்க்கங்களைக்
    காப்பற்றும் சேப்டி வால்வுகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான்
    அயோக்கிய அரசியல்வாதிகள் அனைவரும்-மன்மோகன், அத்வானி, சோனியா, ஸ்டாலின்,
    காரியக் கிறுக்கர் கலாம் உள்பட- சாமியார்களை அங்கீகரித்து
    உயர்த்துகிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து
    கொண்ட பின்பும் பெரும் வலியுறுத்தலுக்குப் பின்னரே ம்ராட்டியம்
    போகின்றார் மன்மோகன். அப்போது மக்களுக்கு அலவாதான் கொடுத்துவிட்டு
    வந்தார். ஆனால் சாய்பாபா செத்தவுடன் ஓடோடி வருகின்றார். ஆனால், இன்னும்
    அதே ஆந்திராவிற்கு விவசாயிகள் தற்கொலை பிரச்சனைக்காக ஒரு முறை கூட
    வரவில்லை. அன்னை தெரசாவைப் பொருத்தவரை அவர் மேற்கத்திய முதலாளி
    வர்க்கத்தின் கூட்டு மனசாட்சி. கோடானு கோடி மனிதர்களின் வாழ்க்கையைப்
    பறித்துவிட்டு சிலருக்கு நல்லது செய்வதால் தாங்கள் நல்லவர்கள் என்று
    பாசாங்கு செய்வதற்கு தெரசாவைப் பயன்படுத்துகிறார்கள். சாளரம்
    கோடிக்கணக்கான மக்கள் என்று பரந்த பார்வை கொண்டிருக்கிறது. அங்கொன்றும்
    இங்கொன்றுமாக பெயரளவிற்குச் செய்யப்படும் 'நல்ல' காரியங்கள்தான் உலகம்
    என்ற குறுகிய பார்வை அல்லது பார்வைக் கோளாறு அதற்குக் கிடையாது.

    ReplyDelete
  5. ராஜ்குமார் , நீங்க சொல்றது எப்படி தெர்யுமா இருக்கு ... 2gல அந்த குடும்பம் எவ்ளோ சம்பாதிச்சா என்ன ... எனக்கு வண்ண தொலைகாட்சி குடுத்த அந்த குடும்பம் வாழணும்னு சொல்ற மாதிரி இருக்கு .... இங்கு உங்கள் பார்வைதான் சுருங்கி இருபதாக நான் கருதுகிறேன் ... எனக்கு 100 ருபாய் குடுத்த மகா ராசன் நல்ல இருக்கணும்னு மக்கள் ஒட்டு போடுற மாதிரி ....நீங்க சாய்பாபாவுக்கு வக்காலத்து வாங்குறீங்க
    . -பொன்ராஜ்

    ReplyDelete
  6. தாவூத் இப்ராஹிம் தான,தருமங்கள் செய்ய வேண்டாம், எந்த நல்ல காரியங்களும் செய்ய வேண்டாம், வெறுமே முஷ்டியையுயர்த்தி 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழங்கியிருந்தால் அவரைத் 'தோழராக' ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். இங்கு புனிதமாக இருக்க வேண்டியவை மக்களும், அவர்தம் நம்பிக்கைகளும் தான். கட்சிகளுக்கு அந்த 'கருமாந்திரங்கள்' தேவையில்லை. எல்லா அசிங்கங்களையும் அலசி ஆராய்ந்து அதில் 'பராவாயில்லாமல்' இருக்கும் ஒரு அசிங்கத்தைத் தேர்ந்தெடுத்து.... விடுங்கள் தோழர்களே, எப்படியும் அடுத்த 'முற்போக்குக் கூட்டணி' 2ஜியோடு தான்.

    ReplyDelete
  7. தாவூத் இப்ராஹிமை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அல்ல
    பிரச்சனை. தாவூத் போன்ற நாயகன் ஸ்டைல் ரவுடிப் பயல்கள் 'நாலு பேருக்கு'
    நல்லது செய்தால் அவன் எத்தனை பழிபாவங்கள் செய்திருந்தாலும் உங்களைப்
    போன்றோர் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சனை. அவர்களது
    அயோக்கியத்தனங்களுக்கு அங்கீகாரம் வழ்ங்குவீர்கள் என்பதுதான் பிரச்சனை.
    வழங்குகிறீர்கள் என்பதுதான் சிக்கல். அதன் மூலம் நீங்கள் சமுதாயத்தின்
    தலையில் மண்ணை அள்ளிப் போடுகிறீர்கள். அப்புறம், நீங்கள் கட்சிகளை
    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் என்பது இருக்கும். அரசு
    என்பதும் இருக்கும். புனிதம் போன்ற'கருமாந்திரங்கள்' தேவையில்லாத
    கட்சிகள்தான் காங்கிரசும், பாஜகவும், இன்ன பிறவும்.சாய்பாபா புனிதராக
    இருந்திருந்தால் இந்தக் கட்சிகளை எல்லாம் வேண்டாம் என்று
    விரட்டியடித்திருக்க வேண்டும். என்ன, அவர் அப்படிச் செய்திருந்தால் அவர்
    பாபாவாக ஆகியிருக்கவே மாட்டார். அதாவது இந்தியாவில் 40000 கோடிகளும்,
    உலகெங்கும் 1,50,000 கோடிகளும் கொண்ட பெரும் முதலாளியாக ஆகியிருக்க
    மாட்டார். எங்காவது ஒரு மூலையில் குடுகுடுப்பை அடித்துக் கொண்டோ, ஜோஷியம்
    பார்த்துக் கொண்டோ இருந்திருப்பார். இடதுசாரிகளின் அரசியல்
    நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இதே பிளாக்கில் இருக்கும் 'தேர்தல்
    கூட்டணிகளும் இடதுசாரிகளும் ....'என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
    மதவாதிகளைப் பொருத்த வரை அவர்களுக்கு மனிதர்கள் எப்போதுமே புனிதமானவர்கள்
    அல்ல. பாவிகள். ஆடு, மாடுகள்தான் புனிதமானவை. அவற்றுக்காக மனிதர்களைக்
    கொல்வார்கள். அதாவது, மனித்க்கறி சாப்பிடுவார்கள்.

    ReplyDelete