கே.என்.பணிக்கர்
தமிழில்: அசோகன் முத்துசாமி
இந்தியாவில் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஊழலுக்கு எதிராக 42 ஆண்டு கால தயக்கத்திற்கும், நிச்சயமின்மைக்கும் பின்னர் ஒரு சட்ட ரீதியான ஏற்பாடு கண்ணில் தென்படுகின்றது. அன்னா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டம்தான் அரசு இயந்திரத்தை அசைத்தது என்பது வெளிப்படை; அந்தப் போராட்டத்திற்கு பிரதானமாக பெருநகரங்களில் ஆதரவு கிடைத்தது. புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே ஆரம்பித்த ஐந்தே நாட்களில் மத்திய அனவில் ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்காக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்கிற அவருடய கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
இந்திய அரசின் கடந்த கால நடைமுறைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட உண்ணாவிரதத்தின் முடிவில் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவை நினைவிருக்கும். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பத்து வருடங்களுக்கும் மேலாக இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இருந்தபோதிலும், லோக்பால் சட்ட முன்வரைவைத் தயாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளும், நகல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள விதிகளும் இந்திய ஜனநாயகம் செயல்படும் விதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு விடப்படும் முன்னர் இந்தக் கேள்விகளில் சிலவற்றை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
அந்தக் குழுவில் யார் யாரெல்லாம் இருக்கலாம் என்கிற விஷயத்திலும், அதன் அதிகார விஷயத்திலும் அன்னா ஹசாரே தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. 'குடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகளை அவர் தேர்வு' செய்திருக்கிறார்; அரசாங்கம் அவருடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தக் குழுவில் குடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக ஐந்து பேரும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்தத் துவக்கத்தை வரவேற்ற பிரதமர் மன்மோகன்சிங் 'அரசாங்கமும் குடிமைச் சமுதாயமும் இணைந்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறியாகும்' என்று கூறியுள்ளார். ஆனால், இந்தக் குழுவை அமைப்பதில் ஜனநாயகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது வெளிப்படை. குடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகள் அன்னாவால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள்; அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் நிலவும் பல்வேறு அரசியல் கருத்துக்களைப் பிரதிபலிப்பவர்களாக இல்லை.
அன்னா ஹசாரே ஒரு மாகசாசே விருது பெற்றவர்; மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி என்கிற கிராமத்தில் அவர் செய்த சமூக சேவைகளிலிருந்து பெறப்பட்ட தார்மீக பலத்தையும், கணிசமான புகழையும் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்த அவர் பிரயோகித்த வழிமுறைகள் பல புருவங்களை உயர்த்தியிருக்கின்றன. அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமும், அவர் விதித்த காலக் கெடுவும் இயல்பில் கட்டாயப்படுத்தும் தன்மை கொண்டதாகும்; அதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. அவரைப் பின்பற்றுபவர்களில் சிலர் அவரை காந்திக்கு இணையாகச் சித்தரிக்க முயன்றதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை; ஏனெனில், அவரது கருத்துக்களோ அல்லது அவரது வழிமுறைகளோ அத்தகைய கூற்றை சரியென்று நிரூபிப்பதாக இல்லை. என்றபோதிலும், அவரது காந்தியத் தகுதிகள் அரசிடமிருந்தும், குடிமைச் சமுதாயத்திடமிருந்தும் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அவர் தன்னை அரசியல் சார்பற்றவர் என்று சொல்லிக் கொண்ட போதிலும், அரசியலின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் ஆழமான வெறுப்பைக் கொண்டுள்ளார்.
முரண் என்னவெனில், ஊழல் நோயை ஒழிப்பதற்கு அரசியல் அமைப்பின் உதவியை அவர் நாடியிருக்கிறார். அவர் தார்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் ஊழலைச் சாத்தியமாக்கிய சமூக நிலைமைகள் மீது அவர் கவனம் செலுத்தியிருப்பார். எனினும், குடிமைச் சமுதாயச் செயல் வீரர்கள் சிலரின் ஆதரவுடனும், ஆங்கில ஊடகங்களின் ஒரு பகுதியால் தேசத்தைக் காக்க வந்த ரட்சகர் என முன்னிறுத்தப்பட்ட அன்னாவின் சிறப்பு ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அது அரசாங்கத்தின் சுய உறுதியை பலவீனப்படுத்திவிட்டது போல் தெரிகின்றது.
அவரது போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சிலரால் புகழப்பட்டது. எனினும், எவ்வித பிரதிநிதித்துவத் தன்மையும் அல்லாமல் வெகு சிலர் தங்களை பெரும்பான்மையோரின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வது அடிப்படையில் ஜனநாயகத் தன்மையற்றது. அரசியல் தலைவர்களும், அதிகார வர்க்கமும் பரவலாக ஊழல் செய்யும் சூழலில் அன்னா ஹசாரேவுக்கு உணர்ச்சிகரமான, முன்பின் சிந்திக்காத ஆதரவு கிடைத்ததைப் புரிந்து கொள்ளலாம்.
என்றபோதிலும், போராட்டத்தின் தார்மீக உள்ளடக்கத்தை விடவும் அது நடத்தப்பட்ட நேரம்தான் மக்களின் எதிர்வினையைத் தீர்மானித்தது. ஆளும் மேட்டுக்குடியினரால் கடைப்பிடிக்கப்படும் புதிய தாரளமயக் கொள்கைகள் அரசியல் ஆதரவின் மூலம் பெருமளவில் பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுடையதாக மாற்றுவதன் மூலம், தனியார் முதலாளிகளின் நலன்களை ஊக்குவிப்பதன் மூலமும் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகளைத் திறந்து விட்டன. பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுமே தனியார்மயத்தை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை நவீனப்படுத்துவதற்காக அந்நிய மூலதனத்தை அழைப்பதிலும் பங்காளிகள். தாராளமயத்தால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார நிலைமைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சமீப காலங்களில் ஊழல் நடந்திருப்பதும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே இருப்பவை.
அதிகார வர்க்கத்தின் இறுகிப் போன தன்மையிலும், பொருளாதார பலம் மற்றும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும் பதிந்துள்ள ஒரு சிக்கலான பிரச்சனையாகும் ஊழல். அதை வெறும் அறநெறி சம்பந்தப்பட்ட பிரச்சனையாகக் குறுக்கி விடமுடியாது; ஊழலைத் தடுப்பதற்காகக் தனிநபர்களைத் தண்டிப்பதன் மூலம் அதற்குத் தீர்வு காணவும் முடியாது. அத்தகைய ஒரு தீர்வை (தனிநபர்களைத் தண்டிப்பது) அரசும், அரசை நடத்துபவர்களும், ஏன் தாராளவாத அறிவுஜீவிகளும் கூட ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். ஊழல் ஒரு மகத்தான ஒன்றுபடுத்தும் சக்தி போல் தெரிகின்றது. ஏனெனில், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேடை ராம் மாதவ் போன்ற வகுப்புவாதிகளையும், ராம்தேவ் மற்றும் ஸ்ரீரவிசங்கர் போன்ற மத வியாபாரிகளையும், முன்னாள் காவல்துறை அதிகாரி கிரன்பேடி, ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோரையும் ஒரே மேடையில் ஈர்த்திருக்கின்றது. அவரது பரிவாரத்தில் வகுப்புவாதிகள் மற்றும் வலதுசாரி சக்திகளும் அங்கம் வகித்தது மட்டுமின்றி, குஜராத் மாதிரி வளர்ச்சியைப் பாராட்டி நரேந்திரமோடி போன்றோருக்கு அன்னா தன்னுடைய 'ஆசீர்வாதங்களையும்' வழங்கினார்; இந்தப் போக்கில் அவர் உயர்வாக மதிக்கும் தார்மீகப் பிரச்சனையை மறந்துவிட்டார்.
அறநெறி நடுநிலையானது என்பவரை அரசாங்கம் உள்பட சில தரப்பினர் தேசத்தைக் காக்க வந்தவர் கொண்டாடுவது வேதனையாகும். ஆனால், அன்னாவுக்குச் சாதகமாக அரசு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. ஹசாரேயோ அல்லது வேறு எவருமோ, அரசியலமைப்பு மற்றும் அடிப்படைச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கிளப்பாத வரையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மட்டும் ஆதரிக்கின்ற வரையில் அரசுக்கு அவர்களை ஊக்குவிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. உண்மையில், அரசு அவர்களைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
அதன் விளைவாக, அன்னா ஹசாரேவும் அவரது குழுவும் அரசால் இயக்கப்படும் ஊழல் இயந்திரத்திற்காகப் பரிந்து பேசுகிறவர்களாக ஆகக் கூடும். ஏனெனில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பது அதற்கான சட்டம் இல்லாமை அல்ல; அதற்கான அரசியல் உறுதி இல்லாமையே ஆகும். அரசாங்கத்திற்கு அன்னா போன்றவர்கள் அவ்வப்போது தோன்றுவதும், அவர்களது சீர்திருத்த திட்டங்களும் நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைக் காப்பாற்றும் சேப்டி வால்வுகள் போன்றவர்கள். இப்போது அன்னாவுடன் மேஜையில் அமர்ந்திருக்கும் அரசாங்க நிர்வாகிகள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் அரசு தன்னைச் சுற்றி மற்றுமொரு கோட்டையை உருவாக்கிக் கொள்ள உதவக் கூடும்.
அன்னாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தன்னுடைய ஆலோசனைகளைத் துவக்கியிருக்கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட நகல் மசோதாக்கள் முதல் கூட்டத்தில் விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படடன. ஆதலால், அதில் உள்ள ஷரத்துக்கள் பற்றி இப்போதே விவாதிக்கக் கூடாது. எனினும், சில திசை வழிகள் கண்கூடாகத் தெரிகின்றன. ராலேகான் சித்தியில் வெளிப்படையாகத் தெரிவது போல் சமூகப் பிரச்சனைகள் விஷயத்தில் அன்னா ஹசாரேவின் எதேச்சாதிகார அணுகுமுறையும், அதிகாரத்தை மத்தியத்துவப்படுத்தும் அரசின் கொள்கையும் நகல்களில் (உதாரணமாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழுச் சட்டம்) பொதுவாக எதிரொலிக்கின்றன. நடப்பிலிருக்கும் நீதி அமைப்பு முறையை வலுவிழக்கச் செய்த ஒரு சமூக வெற்றிடத்தில் அதி உச்ச அதிகாரம் படைத்த நீதி அமைப்பாக லோக்பால் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நடப்பிலிருக்கும் நீதி அமைப்பின் மீது எவ்வளவு விமரிசனங்கள் இருந்தபோதிலும் குடிமக்களின் உரிமைகளை அது பாதுகாத்து வந்திருக்கின்றது. இப்போதுள்ள அமைப்பு முறையால் சாதிக்கப்பட்டுள்ளதைவிடக் கூடுதலான வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் கொண்டதாக லோக்பால் இருக்கும் என்பதைக் குறிப்பது போல் நகல் மசோதாவில் எதுவும் இல்லை.
மசோதாவின் நோக்கம் ஊழலைத் தடுப்பது அல்ல; ஊழல் செய்பவர்களைத் தண்டிப்பது ஆகும். இந்த விஷயத்தில், தற்போது இருக்கும் அரசு அமைப்புகளிலிருந்து வித்தியாசமான ஒரு அணுகுமுறை எதையும் நகல் மசோதா அளிக்கவில்லை. ஒளிவு மறைவற்ற ஒரு அமைப்பு உரிய இடத்தில் நிறுவப்பட்டால்தான் ஊழல் தடுப்பு என்பது சாத்தியமாகும். சமூகத் தணிக்கை அத்தகைய வெளிப்படைத் தன்மையை நிச்சயம் உருவாக்கும் என்று கூற முடியாது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டுமானால் முடிவுகள் எடுக்கும் நடைமுறை அடிப்படையான மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ஊழலைச் சாத்தியமாக்கும் நிலைமைகளே அதன் இலக்காக இருக்க வேண்டும்; அதற்கு தற்போது உள்ள அரசாங்க நிர்வாக முறை முழுமையாக பழுது பார்க்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஊழலின் அளவையும், அதன் செல்வாக்கையும் வைத்து பார்க்கும்போது மக்கள் லோக்பால் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன் முயற்சியாகும். ஆனால், உத்தேசிக்கப்பட்டுள்ள லோக்பால் ஒரு சூப்பர் பூதத்திற்கு உரிய பண்புகளைக் கொண்டுள்ளது. தற்போது உள்ள அனைத்து ஊழல் தடுப்பு அமைப்புகளையும் உட்கிரகித்துக் கொள்வதன் மூலம் சுயேச்சையாக விசாரிப்பதற்கும், தண்டிப்பதற்கும் முழு அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாக ஜன் லோக்பால் இருக்கும். மிதமிஞ்சிய அதிகாரம் கொண்ட, ஆனால் யாராலும் கேள்வி கேட்க முடியாத, ஒரு அமைப்பாக அது இருக்கும். அந்த வகையில் இது அனைத்து ஜனநாயக நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். மக்கள் லோக்பால் அதனுடைய 'மக்கள்' என்கிற சொல் குறிக்கின்ற இயல்பிற்கேற்ப இருக்க வேண்டுமானால் அதன் எதேச்சாதிகார மற்றும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்டமைப்பு விட்டொழிக்க வேண்டும்; மக்கள் கைகளில் அதிகாரம் அளிக்கும் ஒரு சாதனமாக அது மாற்றப்பட வேண்டும். தேசத்தின் மனசாட்சியை உண்மையிலேயே தட்டி எழுப்புகின்ற வகையில், ஆரம்ப கட்டத்திலேயே இந்த நகல் மசோதாவை ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் விவாதத்திற்காக அனுப்புவதன் மூலம் இதை நோக்கிய ஒரு துவக்கத்தை உண்டாக்க வேண்டும்.
நன்றி: தி ஹிந்து 19.4.11
No comments:
Post a Comment