Monday, January 2, 2012

சசிகலா நீக்கமும் சமூக நீதியும்




அசோகன் முத்துசாமி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், அவரது நீண்ட கால நண்பருமான சசிகலா அதிமுகவை விட்டு நீக்கப்பட்டதற்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களைக் கூறுகின்றனர்; அல்லது கற்பிக்கின்றனர். அதிகாரபூர்வமாகக் காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியும் வகிக்காத சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்ததுதான் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
ஆனால், உண்மையான காரணம் என்னவென்று ஆராய்வது நமது நோக்கமல்ல. இதுதான் காரணம் என்று சிலரால் கற்பிக்கப்படும் ஒரு காரணத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு நீண்ட கால உண்மையை வெளிப்படுத்துவதுதான் நமது நோக்கம்.
சசிகலா குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுடன் தங்களுக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி கட்சி விவகாரங்களில், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டார்கள்; ஊழல் செய்தார்கள்; மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். ஜெயலலிதாவின் மீது விசாரணையில் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும்; அப்போது தங்களுடைய ஆள் ஒருவரை முதல்வராக-தற்காலிக முதல்வராக ஆக்கிவிடலாம்- என்று சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டனர்; அதனால் கோபமடைந்த ஜெயலலிதா சசிகலா  குடும்பத்தினர், மற்றும் விசுவாசிகளை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்; நீக்கிக் கொண்டிருக்கிறார். இது ஒரு கருத்து. தேர்தல்களில் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், வெற்றிக்குப் பின்னர் யார் யார் மந்திரிகள், முக்கியமான பதவிகளில் யார் யார் அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரங்களிலும் சசிகலா கும்பல் தலையிட்டது என்கிற குற்றச்சாட்டும் இதனுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சரி, சசிகலாவும் அவரது உற்றத்தாரும் சுற்றத்தாரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டனர். உடனடியாக ஒரு கூட்டம் இது ஒரு பார்ப்பன சதி என்கிறது. சோ ராமசாமி இதற்குப் பின்னால் இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சசிகலா அன்ட் குடும்பத்தை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிப்பதன் மூலம் அந்த நிழல் அதிகார மையத்தை தானும் தன் சாதியைச் சேர்ந்தவர்களும் கைப்பற்ற அவர் தீட்டிய சதி என்று விமரிசிக்கிறார்கள். சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவரையில் ஏதோ சமூக நீதி காப்பாற்றப்பட்டு வந்தது என்பது போல் இருக்கிறது இந்த வாதம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது போல் இருக்கிறது இந்த வாதம். இவர்கள் சமூகநீதிக் கோட்பாட்டையே நகைப்பிடமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
சசிகலா கூட இருக்கும்போதுதான் ஜெயலலிதா பார்ப்பன ஆதரவு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தார். ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம், பாஜகவுடன் உறவு, நரபட்சிணி மோடியுடன் நட்பு போன்றவை சில உதாரணங்கள். சமச்சீர் கல்வியைப் பொருத்த வரையில் பாடத்திட்ட அடிப்படையிலான மாற்றங்கள் என்கிற வகையில் பார்ப்பன தன்மையும், பொதுவாக அதை ரத்து செய்வது அல்லது நிறுத்தி வைப்பது என்கிற அடிப்படையில் கல்வி வியாபாரிகளின் நலன் காக்கும் தன்மையும் கொண்டது அந்த முடிவு. ஏனெனில், கல்வி வியாபாரிகளில் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாத மேல்சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த முடிவுகள் எல்லாம் பார்ப்பன சோவின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்டன என்று யாரேனும் வாதிடலாம். நமது கேள்வி என்னவெனில் சசிகலா அதை ஒன்றும் தடுக்கவில்லையே என்பதுதான். சசிகலாவின் நோக்கம் சமூக நீதியைக் காப்பதல்ல என்பது கண்கூடு. ஆனால், அவரது நீக்கத்திற்கு சிலர் சமூக அநீதிச் சாயம் பூசுவது ஏன்?
வேட்பாளர் தேர்வு, மந்திரிகள் நியமனம், அதிகாரிகள் நியமனம் போன்ற எதையும் காசு வாங்காமல் செய்ததில்லை சசிகலா. அதன்றி சொத்துக்களை மிரட்டி வாங்குவது போன்ற அராஜகங்கள் தனிக்கதை. அப்படிப்பட்ட சசிகலா நீக்கப்பட்டதற்கு அக்கட்சியின் சாமானியத் தொண்டர்களோ, பொது மக்களோ எள்ளளவும் வருத்தப்படவில்லை. கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது சசிகலா நீக்கப்பட்டிருப்பதால் அதிமுக அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளில் மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.
இப்போது அந்த நிழல் அதிகார மையத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்கிறா£கள் என்றே வைத்துக் கொள்வோம். பார்ப்பனர்களை அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக ஆக்குகிறார்கள், மந்திரிகளாக ஆக்குகிறார்கள், அதிகாரிகளாக ஆக்குகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதிமுக அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. அது புதிதாக மக்கள் விரோத அரசாங்கமாக ஆகிவிடப் போவதில்லை. அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. அதிகபட்சமாக அதிகாரிகள் அளவில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். அவ்வளவுதான். அரசியல் ரீதியாக ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டு வைக்கலாம். சசிகலா இருக்கும்போதே கூட்டு வைத்தவர்தான். சசிகலா இருக்கும்போதுதான் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்.
எப்படியாயினும் அடிப்படை மாற்றம் எதுவுமில்லை எனும் நிலையில் சசிகலாவின் நீக்கத்தை பார்ப்பன சூழ்ச்சி என்று எதிர்ப்பதன் மூலம் இவர்கள் தங்களுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த அதிகார மையம் தங்கள் கையைவிட்டு போய்விட்டதே என்று புலம்புகிறார்கள். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சமூகநீதிக் கோட்பாட்டை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் பயன்படுத்திக் கொள்வது பார்ப்பனர்கள் வகிக்கும் ஆதிக்க நிலையைக் கைப்பற்றுவதற்குத்தானே தவிர, அதற்கு சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற உயரிய நோக்கங்கள் வேறு எதுவுமில்லை. இது புதிய விஷயமும் அல்ல.
இடஒதுக்கீடு கோரிக்கைக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும், அதில் காட்டப்படும் தீவிரமும் சாதி ஒழிப்பிற்கோ, தீண்டாமை ஒழிப்பிற்கோ காட்டப்படுவதில்லை. வெறும் உதட்டுச் சேவை செய்தோடு சரி. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலித்துகளின் மீதான வன்கொடுமையும், அடக்குமுறையும் தொடர்கதையாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அக்கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும்போது அரசு இயந்திரங்களே அத்தகைய அடக்குமுறைகளில் ஈடுபடுகின்றன. 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த தாமிரபரணி படுகொலையும், 2011 பரமக்குடி படுகொலையும் இரு உதாரணங்கள். (பரமக்குடி படுகொலைகள் பற்றி திமுக, பாமக, மதிமுக போன்ற பார்ப்பனரல்லாத மேல்சாதியினரின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை). இன்றும் கூட தலித்துகள் வழிபாட்டு உரிமைக்காக ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கின்றது. அவை சில சமயம் வன்முறை கொண்டு அடக்கவும் படுகின்றன. ஆனால், இத்தகை போராட்டங்களில் தலித் கட்சிகளின் பங்கு சொற்பமே.
சற்று யோசித்து பாருங்கள். திமுக, மதிமுக, பாமக போன்ற சமூக நீதி பேசும் கட்சிகள் சாதி ஒழிப்பிற்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் தலித் கட்சிகளையும், இடதுசாரிகளையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்கினால் அது நிச்சயமாக சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா இல்லையா? (ஆனால், இடதுசாரிக் கட்சிகள்தான்-குறிப்பாக, மார்க்சிஸ்டுகள்- தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன).
சுருக்கமாகச் சொன்னால், பெரியாரின், மற்ற தலைவர்களின் இடஒதுக்கீடு கோரிக்கைகளை ஆதரித்த பார்ப்பனரல்லாத மேல்சாயினர் அவர்களது சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கோரிக்கைகள் அல்லது இலட்சியங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவர்களது நோக்கம் அதிகாரத்தை, ஆதிக்க நிலையைக் கைப்பற்றுவது என்பதைத் தவிர வேறில்லை.

--------------------------------------------------------3.1.12
   


2 comments:

  1. மார்க்சிஸ்டுகள் கூட இன்றைக்குப் பெரியாரைத் தந்தை பெரியார் எனவும், அண்ணாதுரையை அண்ணா எனவும், கருணாநிதியைக் கலைஞர் எனவும், ஜெயலலிதாவை அம்மா எனவும் அழைக்கக் கூடிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ! தேர்தல் நேரத்தில் கூட்டணிப் பிரசாரத்தில் இது உச்சகட்டத்தை எட்டும் ; அப்படி அழைக்காவிட்டால் அன்புத் தம்பிகளின் அர்ச்சனையிலிருந்து தப்பவே முடியாது ! அத்தகைய பகுத்தறிவுக் கொழுந்துகள் ! சுயமரியாதைச் சிங்கங்கள் !
    ஜெ.வைத் தவிர மேற்சொன்ன அத்தனை பேர்களையும் நேரடியாக அறிந்தவன் என்ற முறையில் அவர்களில் எவரும் அன்றுகூட உண்மையில் சாதி ஒழிப்பாளர்கள் இல்லை , மாறாகப் பார்ப்பன எதிர்ப்பாளர்களே என்பதைக் கண்கூடாகக் கண்டவன்; அவர்களின் பின்னால் சுற்றித் திரிந்த எனது பள்ளிப் படிப்பு காலத்தில் அந்த நாணயமற்ற திராவிட[?]த் தலைவர்களைப் பின்பற்றி சாதி ஒழிப்புக்காக உண்மையிலேயே பாடுபட்ட பார்ப்பன[?] கம்யூனிஸ்டுகளைப் பூணூல் அணீயாத பார்ப்பனர் என்று நாக்கூசாமல் நையாண்டி செய்தவன்;நிற்க.
    என்னைப் போன்ற இளைஞர்களைச் சாமி பக்தியிலிருந்து விடுவித்து அதைவிடப் படுமுட்டாள்தனமான ஆசாமி பக்தியில் தள்ளியவர்கள் இவர்கள் ; இதெல்லாவற்றையும் விட சாதிக் கொடுமைக்கு ஆளாகிச் சகலவிதமான அவமானங்களையும் தாங்கி அதிலிருந்து விடுபட அரசியல் சட்டப் பாதையில் பெருமுயற்சி மேற்கொண்ட மிகச் சிறந்த இந்தியச் சமூகவியாளாளரும் , கல்விமானுமான அம்பேத்கரைத் தமிழகத்தில் பெயரளவுக்கே அறியப்பட்டவராகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சாதி ஒழிப்புக்கு எதுவுமே செய்யாத இவர்கள் தங்களைப் பெரிய சாதி மறுப்பு வீரர்களாகப் பிரபலப்படுத்திக் கொண்டவர்கள் ; சாதாரண தலித்துகளைத் தமது சமூக-அரசியல் மேலாதிக்கத்திற்கு வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி வந்தவர்கள், வருபவர்கள் ; தங்களின் சொந்த விவகாரம் என்று வருகிறபோது பார்ப்பனர் , வடவர் என்றெல்லாம் பார்க்காமல் அவர்களை நாடுபவர்கள் ; கொள்ளைத் தொழில்களில் கூட்டு சேர்த்துக் கொள்பவர்கள்; இதே சோவன்னா உதவியால் கடந்த காலத்தில் மத்தியில் காவிக் கூட்டத்தின் அரசில் இளைய பங்காளிகளாக ஆனவர்கள் ; அடுத்த தேர்தலில் காற்று மாறி அடித்தால் இதே குல்லுகபட்டரைத் தான் நாளையும் நாடுவார்கள் இந்த வெட்கங்கெட்ட வாய் வீறாப்புப் பேர்வழிகள் !

    ReplyDelete