திராவிட சமூகநீதி அரசியல் அல்லது தமிழர் சமூக நீதி அரசியல் பார்ப்பனர்கள் வகிக்கும் சமூக மேலாதிக்க நிலையை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக நக்கீரன் ஏடு 'மாட்டிறைச்சி உண்ணும் மாமி நான்' என்கிற கட்டுரை இருக்கிறது.
அதாவது சாதி அமைப்பு பற்றியும், அதன் கொடுமைகள் பற்றியும் வாய்கிழியப் பேசும் இவர்கள் பார்ப்பனர்களின் இடத்தை தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உயர்ந்த நோக்கங்களும் கொண்டவர்கள் அல்ல. உயர் நிலையை தாங்கள் அடைந்தால் போதும், சாதி அமைப்பு அப்படியே நீடிக்க வேண்டும், அதில் வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
இல்லை என்றால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாகச் சித்தரிப்பார்களா? பார்ப்பனரான ஜெயலலிதா மாட்டிறைச்சி சாப்பிடுவார் என்பதை ஒரு இழிவு போல் இவர்கள் சித்தரிக்கிறார்கள் என்றால் மாட்டிறைச்சி உண்பவர்களை இவர்கள் இழிவாகக் கருதுகிறார்கள் என்றுதானே பொருள்?
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் யார்? தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினர், பழங்குடியினரில் ஒரு பகுதியினர், பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பகுதியினர். அதாவது இந்துத்துவம் எதை இழிவு என்கிறதோ அதை இவர்களும் இழிவு என்கின்றனர்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் பெரியார் விருது பெற்றவர். (நக்கீரன் வெளியீடாக பாலஜோதிடம் எனும் மூடநம்பிக்கை இதழ் வெளிவருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). அவரது இதழில் வெளிவந்திருக்கும் இக்கருத்தை ஆத்ரிப்பவர்களில் பலர் பெரியார் பெயரை அடிக்கடி உச்சரிப்பவர்கள். பகிரங்கமாக மாட்டுக்கறி சாப்பிடும் இயக்கங்களை நடத்தியவர் பெரியார்.
உண்மையிலேயே இவர்கள் பகுத்தறிவுவாதிகளாகவும் சாதி ஒழிப்புவாதிகளாகவும் இருந்திருந்தால் மாட்டுக் கறி தின்பதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்க வேண்டும். (ஜெயலலிதாவோ இதைத் தன் மீதான அவதூறாகக் கருதியிருக்கிறார். வழ்க்குகளும் போராட்டங்களும் அதைத்தான் சுட்டுகின்றன). ஆனால், இதை அவருக்கு எதிரான ஒரு அரசியல் கருத்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்களும் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை இழிவானவர்களாகவே தாங்களும் கருதுவதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சாதியப் படிநிலையில் மேல் நிலையை அடைவதற்கான போராட்டம் உடமை சாதிகளிடையே பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒன்றுதான். சில சமயம் பார்ப்பனர்கள் மேலாதிக்க நிலயை தக்க வைத்துக் கொள்வதும், சில சமயம் இதர மேல்சாதிகள் அதைக் கைப்பற்றுவதும் என வரலாறு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களையும், மதச் சிறுபான்மையினரையும் பொருத்த வரையில் இந்த மேல்சாதிகள் ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்த வரையில் அதைப் பார்ப்பனீயம் என்றோ அல்லது சாதியம் என்றோ அல்லது சைவம் என்றோ அழைக்கலாம்?
அதைப் பார்ப்பனீயம் என்றே கூறினாலும் அதை இந்த சமூக நீதி மோசடிக்காரர்கள் பின்பற்றுகிறார்கள் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆம், உடமை வர்க்கங்களுக்கு-அவை எந்த சாதியைச் சேர்ந்தவையாக இருந்தாலும்-சாதீயம் உகந்ததாக இருக்கிறது. மூட நம்பிக்கை உகந்த்தாக இருக்கிறது. திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சாய்ப்பாவின் காலில் விழுவதும், அவர்கள் நடத்தும் ஊடகங்கள் ராசி பலன், ஜோதிடம் ஆகியவற்றைப் பரப்புவதும் அதைத்தான் உறுதி செய்கின்றன.
நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி.
ReplyDelete