பிரபாத் பட்நாயக்
தமிழில்: அசோகன் முத்துசாமி
முதலாம் உலகப் போர் துவங்கி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த வரையிலான காலகட்டம் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு கடுமையான நெருக்கடி காலகட்டமாகும். அந்த இரண்டு பயங்கரமான யுத்தங்கள் தவிர அந்த காலகட்டம் மாபெரும் பொருளாதார மந்த நிலையையும் சந்தித்தது; முதலாளித்துவம் தன் வரலாற்றில் அது வரையில் சந்தித்திருந்த நெருக்கடிகளில் மிகவும் கடுமையானது அதுதான். 'முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடி' காலகட்டத்திற்குள் உலகம் நுழைந்து விட்டது என்றும், அங்கிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது ஒன்று மட்டுமே நிகழும் என்றும் கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த அறிவுஜீவிகளில் மிகக் கணிசமானோர் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தக் காலகட்டம் முன்னேறிய நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கு மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கும் கடும் துன்பத்தைத் தந்தது. எடுத்துக் காட்டாக, மாபெரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக இந்தியாவில் விவசாயிகள் வரம்பற்ற வறுமையில் தள்ளப்பட்டார்கள்; காலனிய ஆட்சியில் நீண்ட காலமாக உணவு உற்பத்தித் தேக்கமடைந்திருந்ததும், அத்துடன் இரண்டாம் உலகப் போருக்கான செலவின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் மிகப் பெருமளவு உயர்ந்ததும் முப்பது லட்சம் மக்களைக் கொன்ற 1943ம் ஆண்டு வங்கப் பஞ்சத்தை துரிதப்படுத்தியது.
அது எதிர்ப்பியக்கங்களின் காலமும் ஆகும். கடும் துன்பத்தில் உழன்ற விவசாயிகளிடமிருந்து பெற்ற ஆதரவின் காரணமாக காலனிய எதிர்ப்பு இயக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உந்துதலையும், வீச்சையும் பெற்றது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த விழிப்புணர்ச்சி உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. ஆதலால், இந்த உலக முதலாளித்துவ நெருக்கடி காலகட்டம் உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சி அலை வீசியதையும் குறிக்கும் கட்டமாகும்; அது யுத்தம் முடிந்த பின்னரும் சில காலம் தொடர்ந்தது; ஆனால், நீண்ட காலம் தாமதமான வியட்நாம் புரட்சியின் வெற்றி அந்த எழுச்சியின் கடைசி அத்தியாயமாகும்.
இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் எழுந்த முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் இந்த புரட்சி அலைக்கு வலு சேர்க்கும் கூறுகளாக அதிலிருந்தே உருவானவையாகும். என்றபோதிலும், அது போலவே பழைய வடிவிலான கலாச்சார இயக்கம் 1950களிலும், அதற்கு அப்பாலும் தன்னுடைய அதே இயங்கு விசையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது அந்த புரட்சி அலை ஓய்ந்து விட்டது என்பதன் பிரதிபலிப்பாகும். ஐம்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புதிய புரட்சி அலையை உலகம் இப்போது கண்டு கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்; ஆம், அது தன்னுடைய வளர்ச்சிப் போக்கில், மக்களைத் திரட்டும் விதத்தில், முன்னேற்றம் குறித்த தன்னுடைய அளவுகோலில், முந்தைய அலையுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவும் தன்னுடைய சொந்த புரட்சிகர முற்போக்கு கலாச்சார இயக்கத்தை உருவாக்கும்; அதன் தன்மை இன்று நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் பழைய இயக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
இந்த புதிய கலாச்சார இயக்கத்தின் தன்மை என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது இங்கு என் நோக்கமல்ல. பழைய கலாச்சார இயக்கத்தைக் கொண்டாடும்போது முற்போக்கு கலாச்சார இயக்கங்களின் பணி பழைய இயக்கம் தனக்கான பணி என்று எதை விதித்துக் கொண்டதோ அதுவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிவிடக் கூடாது என்பதை நினைவுறுத்துவதுதான் என் நோக்கம்; அதாவது, சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் சுரண்டலை முடிவிற்குக் கொண்டு வரும் போராட்டத்திற்குப் பங்களிப்பதுதான் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் பணி என்ற நம்பிக்கையில் வீழ்ந்துவிடக் கூடாது. மக்கள் விடுதலை அடைவதற்கு நடப்பில் இருக்கும் ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிவதன் மூலம் சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவது மட்டும் போதாது; ஆனால், கலாச்சார நடவடிக்கைகளின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய சமூக அமைப்பைக் குறிக்கும் சமூகப் பழக்க வழக்கங்களையும், நிறுவனங்களையும் தாண்டிச் செல்லவும் வேண்டும்; அதற்காக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையிலான சுரண்டல் அமைப்பை வெற்றி கொள்வதை மட்டுமே தங்களது மாபெரும் குறிக்கோளாக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. சாதி அடிப்படையிலான ஆணாதிக்க சமூக அமைப்பு அதற்குத் தலைமை தாங்கும் குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கங்களை விடவும் மிகவும் நீடித்து நிற்கக் கூடியது என்பதால் அதற்கு எதிராக அன்றாடம் தொடர்ச்சியான போராட்டம் நடத்துவது பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், விடுதலை அடைவதற்கு நிரந்தரமான 'கலாச்சாரப் புரட்சி' தேவை. (லியோ டிராட்ஸ்கியின் 'நிரந்தரப் புரட்சி'யிலிருந்தும், சீனாவின் 'கலாச்சாரப் புரட்சி'யிலிருந்தும் இந்த சொற்றொடரை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்). முற்போக்கு இயக்கங்கள் இந்தக் கடமையையும் தங்களுடையதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை விளக்கமாகச் சொல்கிறேன்.
1
வரலாற்று மாற்றம் இரண்டு கட்டங்களாக நிகழ்வதாக மார்க்சியம் கருதுகிறது: பழைய சமூகம் அழிக்கப்படுதல் மற்றும் புதிய சமூகம் உருவாக்கப்படுதல். பழைய சமூகத்தை ஒழிப்பதற்கான கருவி முதலாளித்துவமாகும். முதலாளித்துவத்தின் கீழ் இருப்பிற்கு வரும் புதிய சமூகம் முதலாளித்துவத்தையே அழிக்கும் கருவியாக ஆகிறது. சோஷலிசம் நிறுவப்படுவதில் புதிய சமூகம் தன்னுடைய உச்ச நிலையை அடைகின்றது. பழைய சமூகத்து மக்கள் அதில் யதேச்சையாக பிறக்கிறார்கள்; அவர்களாக விரும்பி அதனுள் நுழைவதில்லை. புதிய சமூகத்தில் மக்கள் தாங்களாகவே விரும்பி நுழைகிறார்கள். ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறையில் அவர்கள் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதானது அவர்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்துகின்றது; முதலில் பொருளாதார கோரிக்கைகளுக்காகவும், ஆனால் அதைத் தொடர்ந்து, வரலாற்றுப் போக்கை அவர்கள் தத்துவார்த்த ரீதியாகப் புரிந்து கொள்வதால், அமைப்பையே மாற்றுவதற்காக ஒத்திசைவான அரசியல் செயல்பாட்டிற்காக ஒன்று சேர்கிறார்கள். பழைய சமூகம் அதற்கு வெளியே இருக்கும் ஒரு சக்தியான நிலப்பிரபுவால் சுரண்டப்படுகிறது என்கிற குணஇயல்பால் மட்டும் குறிக்கப்படுவதில்லை; ஆனால், அதற்கு உள்ளேயே சமூக அந்தஸ்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கிறது என்கிற குணஇயல்பாலும் அது குறிக்கப்படுகின்றது. மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அது தனிநபரை முடக்கிப் போடும் சமூகமாகும். முதலாளித்துவம் பெயரளவிற்கு தனிநபரை விடுவிக்கின்றது; ஆனால், தனிநபர் சாராத, சுயமாக இயங்கும் ஒரு அமைப்பின் வெறும் பல்சக்கரமாக தனிநபரை ஆக்குகின்ற வகையில் அவனையோ அல்லது அவளையோ தன்னுடைய உள்ளியல்பான போக்குகளுடன் பிணைத்து விடுகின்றது. இந்த 'தன்னிச்சையான' சமூக அமைப்பை தூக்கி எறிந்து, சோஷலிச சமூகத்தை உருவாக்குவதற்காக தனிநபர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியாகத் தலையிடும்போது புதிய சமூகத்தின் மூலம்தான் தனிநபரின் விடுதலை நிகழ்கின்றது. ஆதலால், தனிநபரின் விடுதலை கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே நிகழ்கின்றது.
ஆனால், முதலாளித்துவம் தாமதமாகத் தோன்றும் சமுதாயங்களில் பழைய சமுதாயத்தால் நேரடியாக புதிய சமுதாயமாக மாற்றமடையவும், அவ்வாறு முதலாளித்துவ கட்டத்தை முழுமையாக தவிர்க்கவும் முடியுமா? வேரா ஜாசுலிச் இந்தக் கேள்வியை மார்க்சிடம் கேட்டார். ரஷ்யாவின் பழைய கிராம சமுதாயமான மிர்-ரை அடிப்படையாகக் கொண்டு நேரடியாக சோஷலிசத்தைக் கட்டுவது சாத்தியமா என்று அவர் சந்தேகப்பட்டார். 1881ம் ஆண்டில் ஜாசுலிச்சுக்குப் பதிலாக நான்கு நகல் கடிதங்களை எழுதுகின்ற அளவிற்கு இந்தக் கேள்வி மார்க்சை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. அத்தகைய நேரடியான மாற்றத்திற்கான சாத்தியத்தை மார்க்ஸ் மறுக்கவில்லை; ஆனால், அதே வேளையில், ரஷ்ய கிராம சமுதாயத்தில் நிலத்தின் உடமை சமுதாயத்திடம் இருந்தாலும் நிலத்தைப் பயன்படுத்துவது தனித் தனிக் குடும்பங்களிடம் இருந்ததாலும், அக்குடும்பங்களின் அளவிற்கு ஏற்ப நிலம் அவ்வப்போது மறுவிநியோகம் செய்யப்பட்டாதாலும், அது தன்னுள்ளேயே ஒரு இரட்டைத் தன்மையை கொண்டிருந்தது; அது 'சமுதாய உடமையின் பொருளாதார மேல்நிலையைக்' குறைக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் உருவாக வழி வகுக்கக் கூடும் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். கிராம சமுதாயத்திற்குள் உள்ள வேறுபாடுகளிலிருந்து முதலாளித்துவம் வளரக் கூடும் என்பது மட்டுமல்ல, அது உண்மையில் அவ்வாறாக வளர்ந்து கொண்டிருந்தது என்று லெனின் 'ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி' என்கிற தன்னுடைய அற்புதமான நூலில் அழுத்தமாகக் கூறியிருந்தார். உண்மையில், ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் பதில் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டாலும், நூற்றாண்டின் முடிவில், ரஷ்யாவின் கிராமப்புறங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பபட்டிருந்தன; இந்த மாற்றங்களை லெனின் மிகக் கவனமாக ஆவணப்படுத்தியிருந்தார்.
ஆனால், இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர நிகழ்ச்சி நிரலுக்கு அடிப்படையை கொடுக்கவிருந்த லெனினின் ஆய்வும் கூட மற்றொரு விதமாக முதலாளித்துவத்தைத் தவிர்ப்பதை மனங்கண்டது. வரலாற்று களத்திற்கு தாமதமாக வருகின்ற முதலாளிகள், பிரான்சில் முழுமையான முதலாளித்துவப் புரட்சியின் போது முதலாளித்துவ வர்க்கம் செய்தது போல் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பை அடித்து நொறுக்காமல் அதனுடன் அணி சேர்ந்தது. நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் சிக்கியிருந்த விவசாயிகள் வர்க்கம் எண்ணி எண்ணி ஏங்கிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணி பாட்டாளி வர்க்கத்தின் மீது விழுந்தது; ஏனெனில், நிலப்பிரபுத்துவ சொத்துடமையின் மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்துடமையின் மீதான எதிர்த் தாக்குதலாக தன் மீது திரும்பக் கூடும் என்று அஞ்சிய முதலாளி வர்க்கம் அந்தப் பணிக்கு தகுதியானதாக இருக்கவில்லை. லெனின் மனங்கண்டது என்னவெனில், ஒரு தொழிலாளர்-விவசாயி கூட்டணி ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும்; அங்கிருந்து சோஷலிசப் புரட்சிக்கு முன்னேறும்; எனினும், இந்தப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்குள் இருக்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் அணி சேரும் வர்க்கம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த கண்ணோட்டத்தின் உள்பொருள் என்னவெனில், சோஷலிசத்திற்கான போராட்டம் முதலாளித்துவம் போதுமான அளவு வளருகின்ற வரையில் காத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு மறுக்கப்படுவதாகும். (இந்த வாதத்திற்குள் ஏகாதிபத்தியம் குறித்த தன்னுடைய கோட்பாட்டையும், ஏகாதிபத்தியச் சங்கிலியின் 'பலவீனமான கண்ணியை' நொறுக்க வேண்டிய தேவையையும் சேர்த்ததன் மூலம் 1907 வாக்கில் தான் வளர்த்த இந்த வாதத்திற்கு லெனின் பின்னர் வலு சேர்த்தார்).
என்றபோதிலும், பழைய சமுதாய அமைப்பை முதலாளித்துவம் அழிப்பது என்பது இரண்டு கூறுகளைக் கொண்டதாகும்: நிலப்பிரபுத்துவச் சொத்துடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், சிறு சொத்துடமையை உருவாக்குவதும் முதலாவது கூறு; தனிநபரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனிச் சொத்தை அகற்றி, அதற்குப் பதிலாக மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுவதையும், கூலி உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத் தனிச் சொத்தை அதனிடத்தில் வைப்பதற்காக சிறு உடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், முதலாளித்துவ சொத்துடமையை உருவாக்குவதும் இரண்டாவது கூறு.1 பால் பாரன் பின்னர் குறிப்பிட்டபடி, முதலாளித்துவம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், நாட்டுப்புறத்தில் முதலில் விவசாயிகளுக்குச் சாதகமாக ஒரு புரட்சியும், பின்னர் அதற்கு எதிராக ஒரு எதிர்ப்புரட்சியும் தவிர்க்க முடியாதவை.2 இதற்கு மாறாக, ரஷ்யாவிலும் முதலாளித்துவம் தாமதமாக வரும் இதர சமுதாயங்களிலும் புரட்சிகர மாற்றம் பற்றிய லெனினியக் கருத்தாக்கம் நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதும், அது சிறு உடமையாக மாற்றப்படுவதும் தவிர்க்க முடியாதவை என்கிறது; ஆனால், சிறு உற்பத்தியாளரின் சொத்து பறிமுதல் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறவில்லை. அதாவது, அது இரண்டு கூறுகளில் முதலாமாவதை மனங்கண்டது, இரண்டாவதை அல்ல. அதற்குப் பதிலாக, கூட்டுறவு மற்றும் கூட்டுப் பண்ணைகள் அல்லது நிறுவனங்களை அமைப்பதற்காக சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்வதன் மூலம் சிறு சொத்துக்கள் பெரிய அளவிலான சொத்தாக மாற்றுவதுதான் திட்டமாகும்.
ஆதலால், பழைய சமூக அமைப்பின் மீது முதலாளித்துவம் நடத்திய தாக்குதலைப் போலவே மீண்டும் நடத்த வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட் தத்துவ ஆய்வு மனங்காணவில்லை; அது நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்கண்ட அதே வேளையில் சிறு சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்காணவில்லை; மாறாக, சிறு சொத்துடமை கூட்டுச் சொத்துடமையாக மாற்றமடைவதை மனங்கண்டது. ஆனால், கம்யூனிஸ்ட் தத்துவம் பழைய சமூகம் அழிக்கப்படுவதை மனங்காணவில்லை என்றும் இது பொருள் படும்; ஆனால், அதற்குப் பதிலாக, பல கட்டங்களின் வழியாகவும், மாறும் வர்க்கக் கூட்டணிகளின் அடிப்படையிலும், பழைய சமூகம் மற்றொன்றாக மாற்றமடைவதை மனங்கண்டது; அந்த மற்றொன்று சோஷலிசத் திட்டத்திற்கு பொருத்தமற்றதாக இருக்காது; அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான புதிய சமூகம் எதைச் சாதிக்கப் பாடுபடுகின்றதோ அதற்குப் பொருத்தமற்றதாக இருக்காது.
2
ஆனால், இது அனைத்திலும் முக்கியமான கேள்வியை எழுப்பியது: பழைய சமூகத்தை, அது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் நீக்கப்பட்டதாக இருந்தாலும் கூட, எந்த அளவிற்கு புதிய சமுகத்தின் தலைமையில் இருப்பிற்கு வரும் புதிய அமைப்பிற்கு இணக்கமானதாக ஆக்கப்பட முடியும்? ஏனெனில், அதை இணக்கமானதாக ஆக்க முடியவில்லை என்றால், அப்போது சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதே முற்றிலும் நிலைகுலைந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது; அது எந்தெந்த வழிகளில் நடக்கும் என்பதை பின்னர் விவாதிக்க நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
தன் பங்கிற்கு இந்தக் கேள்விக்கு இரு வேறுபட்ட பரிமாணங்கள் இருக்கின்றன; இது வரையில் அவற்றில் ஒன்று மட்டுமே ஓரளவிற்கு விரிவாக கம்யூனிஸ்ட் இலக்கியத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. சிறு சரக்கு உற்பத்தி தனக்குள்ளே நிகழும் ஒரு உள் வேறுபாட்டு போக்கின் மூலம் முதலாளித்துவத்தை உண்டாக்குவது சம்பந்தப்பட்டதாகும் இது. வேறு வார்த்தைகளில் கூறினால், சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் முதலாளித்துவம் மீண்டு வரவில்லை என்றாலும் கூட சிறு உற்பத்தியாளர்களின் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் மூலம் அது தோன்றக் கூடும்; மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டாலும் கூட இது நிகழக் கூடும்; ஏனெனில், வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் மனங்கண்டதைப் போல், உற்பத்தியாளர்களின் கூட்டமைப்புகளுக்கு இடையிலும் கூட வேறுபாடுகள் உண்டாகக் கூடும். (உற்பத்தியின் அளவில் வேறுபாடுகளும், அதனால் லாபத்தின் அளவில் வேறுபாடுகள் ஏற்படக் கூடும்; அதிக லாபம் ஈட்டுகிறவர்களிடம் மூலதனம் குவியக் கூடும்; அது முதலாளித்துவத்தின் மறுதோற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்-மொர்).
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மிகப் பெரிய தத்துவார்த்த விவாதமாக இது இருந்தது. சீனாவில் உள்ள மிகப் பெருமளவு சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருப்பதால் அவர்களுக்கிடையில் ஏற்படும் உள் வேறுபாடுகள் மூலம் முதலாளி வர்க்கம் உருவாவதற்கான நிலையை உருவாக்கும் என்கிற அச்சம் சாங்க் சுன் சியோ, வாங்க் ஹ§ன் வென், யாவோ வென் யுவான் மற்றும் சியாங்க் சிங்க் (நால்வர் கும்பல் எனப் பொருள்படும் 'கேங்க் ஆப் போர்') ஆகியோரைப் பீடித்திருந்தது. உண்மையில் இந்த அச்சம் ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளை எங்கெங்கும் நீண்ட காலம் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவை முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற அச்சத்தால் சிறு உற்பத்தியின் வாய்ப்பெல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின; உதவிக்கு சில வேலையாட்களை அமர்த்திக் கொண்டு குடும்பங்கள் ஈடுபடும் சிறு உற்பத்தியையும் அவை கண்டு அஞ்சியவற்றில் அடங்கும். இது பொருளாதாரத்தை கணிசமான அளவு சேதப்படுத்துவதற்கு மூலகாரணமாக இருந்தது. உண்மையில், கியூபாவில் மிகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இதைச் சரி செய்வதற்காகத்தான் (என்றபோதிலும், கியூப சீர்திருத்தத்தை அப்படியே ஆதரிக்கும் அளவிற்கு எனக்கு விவரம் தெரியாது).
என்றபோதிலும், சிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற இந்த அச்சம் மிகப் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும்; முதலாளித்துவம் மணிக்கணக்கில், நாள்கணக்கில் தனக்குள் வளர்கிறது என்று உற்பத்தி குறித்து லெனின் நெத்தியில் அடித்தாற்போல் கூறியிருந்தபோதிலும் இந்த அச்சம் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும் (லெனினின் கூற்று வழக்கமாக சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்படுகின்றது). நடைமுறையில் கம்யூனிஸ்ட் ஆட்சிகளில் ஏற்பட்ட பெரும்பாலான அதி தீவிர இடதுசாரி திரிபு என்கிற எதிர்மறையான விளைவுக்கு இந்த அச்சமே மூலகாரணமாகும். இது மிகைப்படுத்தப்பட்டது என்று நான் கருதுவதற்குக் காரணம் இந்த வழியில் முதலாளித்துவம் தோன்றுவதென்பது மிக நீண்ட நெடுங்காலம் நீடிக்கக் கூடிய ஒரு போக்காகும்; அதாவது, முற்றிலும் பொருளாதார நோக்கில் பார்த்தால், அதனால் தன்னளவிலேயே சோஷலிச அமைப்பிற்கு உண்மையிலேயே ஒரு ஆபத்தாக ஆகமுடியாது.
மாரிஸ் டோப்பும் கூட, 'முதலாளித்துவ வளர்ச்சி குறித்த ஆய்வுகள்' (ஸ்டடிஸ் இன் தி டெவலப்மென்ட் ஆப் கேபிடலிசம்) என்கிற தன்னுடைய பிரசித்தி பெற்ற நூலில் ஆதி மூலதனத் திரட்டல் வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, இந்த குறிப்பிட்ட வழிக்கு அழுத்தம் கொடுத்தார்; அதாவது, மரபான முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான தோற்றமே சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும் வேறுபாடுகளிலிருந்து நிகழ்ந்தது என்றார்; கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்த மொத்த நிகழ்போக்கும் நடந்தது என்று கருதினார்! நமது சொந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக, ஏன் ஆயிரம் ஆண்டுகளாக, சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருந்து வருகிறார்கள்; ஆனால், அத்தகைய உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும் வேறுபாடுகளின் மூலம் முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிய குறிப்பிடத்தக்க வரலாற்று ரீதியான போக்கு எதுவும் இல்லாமலேயே, அதாவது 'கீழிருந்து முதலாளித்துவம்' தோன்றும் போக்கு எதுவும் இல்லாமலேயே, இருந்து வருகிறார்கள்.
சொத்துறவுகள் மாற்றப்பட்டிருந்த போதிலும் அதற்குள் பழைய சமூகம் தொடர்ந்து நீடித்து இருப்பதால் சமூக மாற்றத்திற்கு ஏற்படக் கூடிய ஆபத்து இப்பிரச்சனையின் மற்றொரு பரிமாணமாகும்; குறைவான கவனத்தையே பெற்றுள்ள இது மொத்த தத்துவார்த்த நம்பிக்கைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகள் (அல்லது பழக்க வழக்கங்கள்-மொர்) சம்பந்தப்பட்டதாகும். சோஷலிசத்தை நோக்கிய பயணத்தில் அவை பெரிய தடைகளாக இருப்பது மட்டுமின்றி, அத்துடன் முதலாளி வர்க்க அல்லது முதலாளித்துவ வர்க்கமாக ஆகக் கூடிய சக்திகளை உண்டாக்கக் கூடிய சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகளை உண்டாக்கும் போக்கையும் சேர்த்துக் கொண்டால், அவை கிட்டத்தட்ட கடந்து செல்ல முடியாத தடைகளாக ஆக முடியும். அதனினும் கூடுதலாக, முதலாளித்துவம் தாமதமாக வளரும் சமுதாயங்களில் தோன்றும் புதிய சமூகம் பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இருப்பதில்லை; இந்த பார்வைகளைத் தகர்க்கும் புதிய சமூகத்தின் ஆற்றல் அதற்கேற்றவகையில் வலுவிழந்து விடுகின்றது; இது, எடுத்துக் காட்டாக, பாட்டாளி வர்க்கத் தலைமையின் மிகவும் முன்னேறிய பிரிவினர் மத்தியிலும் கூட நிலப்பிரபுத்துவ பண்புகள் தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. இதன் நிகர விளைவு முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கும் சமூக தேக்க நிலையாக இருக்கலாம். ஆனால், அதி தீவிர இடதுசாரிகள் அச்சப்படுவதைப் போல் முதலாளித்துவம் கீழிருந்து மீளாது; ஆனால், ஏகாதிபத்தியம் தலையிடுவதற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உண்டாக்கும்.
இந்தக் கருத்தை விளக்க ஒரு கற்பிதமான விஷயத்தை பரிசீலிப்போம். சாதி அமைப்பு நிலப்புரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செள்கிறது என்றபோதிலும், நாட்டுப்புறத்தில் சொத்துறவுகளை மாற்றும் ஒரு புரட்சியின் மூலம் இந்த ஆளும் வர்க்கம் அகற்றப்பட்டாலும், அதன் காரணமாகவே சாதி அமைப்பு அகற்றப்பட்டுவிடாது. பழைய சமூகத்தை வரையறுக்கும் ஒரு பண்பியல்பாக அமைந்திருக்கும் சாதி அமைப்பின் முந்தைய பாதுகாவலர்களாக இருந்த பிரதான ஆளும் வர்க்கமான நிலப்பிரபுக்கள் (அல்லது முதலாளி வர்க்கமாக ஆகக் கூடியவர்கள்) அகற்றப்பட்டாலும் அந்த அமைப்பு தொடருகின்றது. சாதி அமைப்பின் விஷயத்தில், பழைய சமூகத்தைச் சேர்ந்த ஒப்பீட்டளவில் வளமான சிறு சரக்கு உற்பத்தியாளர்களின் மத்தியிலிருந்துதான் பெரும்பாலும் புதிய பாதுகாவலர்கள் தோன்றுகிறார்கள்; தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த முந்தைய சுரண்டும் வர்க்கம் ஒழிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் அவர்களுக்குத் தங்களது நிலைமையைப் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கிறது; நாட்டுப்புறத்தில் உள்ள சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஏற்படும் போக்கு அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவர்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவார்த்த பார்வைகளையும், கலாச்சார நடைமுறைகளையும் அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற சொத்துறவுகளுக்கு நேரடியாக உட்பட்டவையாக ஆக்க முடியாது என்கிற சந்தேகத்திற்கு இடமற்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவற்றுக்கென்று சொந்தமாக ஒரு வாழ்வு இருக்கிறது இருக்கின்றது; இந்த சொத்துறவுகளையும் தாண்டி வெகு காலம் நீடித்திருக்கும் தன்மையும் அவற்றுக்கு இருக்கின்றது; அத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பொருயாளத வேர்களே முந்தைய சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட்ட பின்னரும் ஊட்டம் பெறுவது உண்டு; சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட பின்னரும் என்பது மட்டுமின்றி, அப்படி அகற்றப்படுவதனாலேயே ஊட்டம் பெறுவது உண்டு. பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றமடைந்த தலைமை அத்தகைய ஊட்டம் பெறுதலுக்கு எதிராகச் செயல்படுவதற்காகத் தலையிடும் என்கிற நம்பிக்கையும் பல்வேறு காரணங்களால் பொய்த்துப் போகலாம்: முதலாவதாக, அந்த முன்னேறிய தலைமையே இத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இல்லாமல் இருக்கலாம். புரட்சியை நடத்தும் முதல் தலைமுறை தலைமை இத்தகைய பார்வைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றதாக இருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து வரும் தலைமுறைகள் விஷயத்தில் அது உண்மையாக இல்லாமல் போகலாம்; குறிப்பாக, வேறு எங்கும் இது போல் புரட்சியைத் துண்டாமல் புரட்சி தனிமைப்படுத்தப்பட்டதாக இருந்தால் இப்படி ஆகலாம். இரண்டாவதாக, அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட, சுற்றி சூழப்பட்ட நிலைமைகளில் மேலும் சிக்கலை உண்டாக்காமல் இருக்க வேண்டிய காரணத்தால், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுடன் ஒரு வகையான சமரசத்திற்கு வரவேண்டிய நடைமுறைத் திட்ட நிர்ப்பந்தம் (tணீநீtவீநீணீறீ ஜீக்ஷீமீssuக்ஷீமீ) மிக அதிகமாக இருக்கும்; எதிரிகளால் சூழப்பட்ட தலைமை அத்தகைய நிர்பபந்தங்களுக்கு பலியாகும் சாத்தியம் மிக அதிகம்.
இன்னும் நுட்பமான மூன்றாவது காரணம் ஒன்றும் உண்டு. பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்திற்கு மாறிச் செல்வதன் பயனாக தனிநபர் விடுதலை அடையும் போக்கும் நிகழ வேண்டும். வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிந்திக்கும் ஒரு தனிநபராக தன்னுணர்வுடன் அவர் புதிய சமூகத்திற்குள் நுழைகிறார். புரிதல் அதிகரிக்க, அதிகரிக்க புதிய சமூகத்தின் தேவை பற்றிய தனிநபரின் புரிதலும், அதன் மீதான பற்றுறுதியும் அதிகரிக்கின்றது. ஆதலால், பழைய சமூகத்திற்கும் புதிய சமூகத்திற்கும் இடையில் ஒரு அடிப்படையான வித்தியாசம் இதில் இருக்கின்றது: பழைய சமூகம் தனிநபரை நசுக்குகிறது, புதிய சமூகம் தனிநபரை விடுதலை செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், சுற்றி வளைக்கப்பட்ட ஒரு சோஷலிச ஆட்சியில், மீண்டும் நடைமுறைத் திட்ட காரணங்களுக்காக, தலைமை எடுக்கும் முடிவுகள் எளிதில் சட்டமாவதை உறுதிப்படுத்துவதற்காக தனிநபரைக் கட்டுப்படுத்தி வைக்கும் போக்கு வலுவாக இருக்கும். புதிய சமூகத்திற்குள்ளும் இப்படி தனிநபரைக் கட்டுப்படுத்தி வைப்பது, அனைத்து வகையிலும் பிற்போக்குத்தனத்திற்குக் கீழ்ப்படியும் தன்மையை உண்டாக்குவதற்காக பழைய சமூகம் தனிநபரை அடக்கி வைக்கிறதே அதற்கு வலு சேர்க்கக் கூடும்; இது புரட்சியின் முன்னேற்றத்திற்கு தீங்கு செய்யும்.
ஒரு பக்கம் 'ஜனநாயக மத்தியத்துவக்' கட்சியில் கலப்பற்ற மத்தியத்துவத்தை நோக்கிச் செல்லும் போக்கும், மறுபக்கம் மக்கள் அரசியல் நீக்கம் மற்றும் செயல் நீக்கம் செய்யப்படும் போக்கும் உள்ளார்ந்த இயல்பாக அமையப் பெற்றிருப்பது பற்றி பலர், குறிப்பாக ரோசா லக்சம்பர்க், குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யார் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளும், கலாச்சார நடைமுறைகளும் பலவீனப்படுத்தப்படாமல் இருக்கும் வரலாற்றுச் சூழலில் இது நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரிக்கும் என்கிற உண்மையை சந்தேகிக்க முடியாது. சிறு உற்பத்தியில் உள்ளார்ந்ததாக இருக்கின்ற முதலாளித்துவப் போக்கு பற்றியும், அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும் என்பது பற்றியும் சீனக் கலாச்சாரப் புரட்சிக்குள் விவாதம் நடந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம் (அதனால்தான் 'முதலாளிகள் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்கள்' என்றும், 'தலைமையகத்தின் மீது குண்டு வீசு' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன). கலாச்சாரப் புரட்சி பற்றி நால்வர் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கண்ணோட்டத்திற்கு மாறாக ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை எட்கர் ஸ்நோவிற்கு அளித்த பேட்டியன்றில் சூ என் லாய் தெளிவாக விளக்கியிருந்தார்; பழைய பாரம்பரிய சீனாவிலிருந்து எஞ்சியிருந்த மூடநம்பிக்கைகள், சமூக பிற்போக்குத்தனம், பண்டைய பழக்க வழக்கங்கள், அதாவது 'தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள்' என்று நான் அழைத்தவற்றின் அச்சுறுத்தல் காரணமாக கலாச்சாரப் புரட்சி எழுகின்றது என்றார்.
இந்த இரண்டு கண்ணோட்டங்களும் தனித்தனியானவையும் அல்ல; ஒன்றுக்கொன்று ஒவ்வாதவையும் அல்ல; அதற்கு மாறாக, ஏற்கனவே குறிப்பிட்டபடி, பழைய சமூகம் நீடித்திருப்பதும் புதிய சமூகம் உருத் திரிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இவற்றில் எதுவும் செம்படையினர் பயனற்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதை நியாயப்படுத்தும் வாதம் இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை; பிற்போக்குத்தனமான கீழ்ப்படிதலைப் போலவே அதற்கு ஒரு மாற்றாக தனிநபர் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை நிறுவுவதற்காக தனி நபரை விடுதலை செய்யும் திறன் செம்படைக்கும் இல்லை; பழைய சமூகத்தின் அடிப்படையான சில தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளிலிருந்து முறித்துக் கொள்ளாமல் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது சாத்தியமில்லை என்பதை மட்டுமே இங்கே வலியுறுத்துகிறோம். மரபான முதலாளித்துவத்தின் கீழ் நிகழ்ந்ததைப் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதன் மூலம் இந்த முறிவு தற்செயலாக நிகழ்த்தப்படாத ஒரு உலகில், புதிய சமூகத்தின் அங்கக அறிவுஜீவிகளின் கலாச்சாரத் தலையீட்டின் மூலம் அது முயற்சிக்கப்பட வேண்டும்.
அத்தகைய தலையீட்டின் நோக்கம் ஆணாதிக்கம், ஒதுக்கிவைத்தல், சிறுபான்மையினர் எதிர்ப்பு (நம்முடைய விஷயத்தில் வகுப்புவாதமும் இதற்குள் அடக்கம்), சாதி அமைப்பு மற்றும் அது போன்றவையும், 'பிறரின்' மீது கடும் வெறுப்பு (பிற நாட்டவர்-இனத்தவர்-மதத்தவர்-இன்னபிற), மற்றும் அனைத்து வகையான குறுகிய உள்ளூர்வாதங்கள் ஆகியவற்றிலிருந்து முறித்துக் கொள்வதாக மட்டுமின்றி, எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய சமூகத்தில் முடக்கிப் போடப்பட்டிருக்கும் தனிநபரை விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களை அவர்களது இக்கட்டான உண்மை நிலைமையை உணரச் செய்வதன் மூலம் சுரண்டலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவது கலாச்சார தலையிட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அத்துடன், அடக்குறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதற்காகவும், மற்றும் அந்தக் காரணத்தால் மதம், சாதி, பாலின ஒடுக்குமுறைகளை உண்டாக்கும் இயங்குமுறைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்ற வகையில் தத்துவார்த்தப் புரிதலை தனிநபர் பெறுவதற்கும் பழைய அமைப்பின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய பணியும் அதற்கு இருக்கிறது.
3
முதல் பார்வைக்கு இந்த வாதம் விநோதமாகத் தோன்றலாம். சோஷலிசத்திற்கு மாறிச் செல்ல முயற்சிக்கும் ஒரு சமுதாயத்தின் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் நோக்கம் நிச்சயமாக சோஷலிசக் கலாச்சார விழுமியங்களை அறிமுகப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும். இந்த அம்சத்தை நான் ஏன் இன்னும் குறிப்பிடவில்லை? இந்தப் புரிதலை கேள்விக்குள்ளாக்கவே இக்கட்டுரை முயற்சிக்கிறது என்பதுதான் காரணம்.
முந்தைய உற்பத்தி முறைகளை ஒத்தது அல்ல சோஷலிச உற்பத்தி முறை; ஆதலால், சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது மற்ற உற்பத்தி முறைகளுக்கு மாறிச் சென்ற வரலாற்று அனுபவத்தை மறு பிரதி எடுப்பதாக மட்டும் இருக்க முடியாது. முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளும் அவை நடப்பிற்கு வந்தபோது மக்கள் எந்த நோக்கத்திற்காக முந்தைய அமைப்பிற்கு எதிராகப் போராடினார்களோ அதற்கும், உண்மையில் அவர்கள் என்ன சாதித்தார்களோ அதற்கும் இடையில் நேரெதிர் வேறுபாடு இருந்ததே அவற்றின் தன்மையாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளின் பலனாக மனிதகுலம் தன்னால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு வரலாற்று இயக்கத்திற்குள் சிக்கிக் கொண்டது. அதற்கு மாறாக, சோஷலிசம் வரலாற்று வலையில் மனிதகுலம் சிக்காமல் தப்பிப்பதை உறுதிப்படுத்துகிறது; மக்கள் கூட்டாக மேற்கொள்ளும் வரலாற்றுச் செயல்களின் நோக்கத்திற்கும், அத்தகைய செயல்களின் உண்மையான விளைவுகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவும், மேலும் மேலும் அதிகரிக்கும் அளவும் நிகழ்வுப் பொருத்தம் இருக்கின்றது. மனிதனின் நிலை பற்றிய சரியான தத்துவார்த்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அது தன்னிச்சையான தன்மையை முடிவற்குக் கொண்டு வருகின்றது. இந்தக் காரணத்திற்காக, சோஷலிசம் தவிர்க்க முடியாதது அல்ல; வரலாறு தன்னுடைய சொந்த இயக்கத்தால் தானே மனிதகுலத்தை சோஷலிசத்தை நோக்கித் தள்ளுவதும் இல்லை. சரியான தத்துவார்த்தப் புரிதலை ஆதாரமாகக் கொண்ட நடைமுறையின் அடிப்படையில் அது திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, சோஷலிசத்திற்கான போராட்டம் என்பது ஒவ்வொரு தனிநபரும் மேற்கொள்ளும் தீவிரமான தத்துவார்த்த முயற்சியால் குறிக்கப்படுகிறது; சோஷலிச விழுமியங்கள் அல்லது சோஷலிசக் கலாச்சாரம் என்று அழைக்கப்படும் கூழாங்கற்களால் அவர்களது மனங்கள் நிரப்பப்படுவதைக் குறிக்கவில்லை. 'சோஷலிசக் கலாச்சாரம்' அல்லது 'சோஷலிச விழுமியங்கள்' என்று கொடுக்கப்படுபவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது உழைக்கும் மக்கள் தாங்களே சமூக மாற்றத்தில் நேரடி பாத்திரம் வகிப்பதற்கு எதிரானதாக இருக்கின்றது; அவர்களை செயலாற்றுபவர்களாக இல்லாமல் செயலின் இலக்குகளாகக் கருதும் அர்த்தம் இதில் தொக்கி நிற்கிறது; இது சோஷலிசத்தின் நோக்கத்தையே தோற்கடிக்கின்றது.
வேறு விதமாகக் கூறினால், சோஷலிசக் கலாச்சாரம் அல்லது சோஷலிச விழுமியங்கள் என்பவை தத்துவார்த்த நடைமுறைகள் மூலம் மக்கள் வந்தடைகிறவையாகும்; இதற்காக இந்த சொற்களின் உள்ளடக்கம் என்னவென்பது பற்றி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக் கூறுகளாலும், தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபட்டுள்ள அரசியல் அமைப்புகளாலும் விவாதங்கள் துவங்கப்பட வேண்டும். ஆனால் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய விஷயங்களாக அவற்றைப் பார்ப்பது ஒரு கருத்தை பொருளாக மாற்றுவதற்கு ஒப்பாகும். சோஷலிசத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்கிற பெயரில் அது சோஷலிசத்தை வழிமறித்து தாக்கும். ஆதலால், சோஷலிசக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படுவது என்னவென்றால், மக்கள் தன்னுணர்வுடன் தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபடுகின்ற வகையில் பழைய சமூகத்தின் பிண கனத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாகும்; முன்னர் விவாதிக்கப்பட்டபடி, பழைய சமூகத்தின் ஒடுக்குமுறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதும், பாரம்பரியத்தின் பிண கனத்திலிருந்து பகுத்தறிவு விடுவிக்கப்படுவதும் அதற்குத் தேவைப்படுகிறது.
4
இது வரை சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதில் ஈடுபடாத, ஆனால் அதற்குப் பதிலாக மிகத் தீவிரமாக முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் குறித்து என்ன சொல்ல முடியும்?
இங்கும், இதர மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தில் வழக்கத்திற்கு மாறான முரண்பாடு இருக்கின்றது. சிறு உற்பத்தியாளர்கள் மீது இந்த முதலாளித்துவம் திணிக்கும் நெருக்கடி ஈவிரக்கமற்றதாக இருக்கும் அதே வேளையில் (கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்), கிட்டத்தட்ட மார்க்ஸ் வகுத்தது போலவே, பணியில் அமர்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களின் படையை பெரிதாக்கும் அதன் ஆற்றல் மிகவும் வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதன் விளைவாக, சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று இன்னும் கடுமையான துன்பத்திலும், பரிதாப நிலையிலும் தங்களது பாரம்பரிய தொழிலில் நீடித்திருக்க வேண்டும் அல்லது நகரங்களுக்குக் குடிபெயர்ந்து உதிரி கூலித் தொழிலாளர்கள் படையில் சேர்ந்து, 'முறைசாராத் துறை' என்று நயமாக அழைக்கப்படும் துறையில் பல்வேறு வகையான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
முதலாளித்துவத் துறையில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவல நிலையில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள் தங்களது பாரம்பரியமான தொழில்களில் நீடித்திருக்கும் வரையில், பழைய சமூகத்தை அழிக்க முடியாது. சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் அபகரித்துக் கொள்வதும், தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு கூட மறுஉற்பத்தி செய்ய முடியாத நிலைமைக்கு அது சிறு உற்பத்தியாளர்களைத் தள்ளுவதும், மரபான முதலாளித்துவத்தில் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதற்கு இட்டுச் செல்வதில்லை. முதலாளித்துவத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்ற வரையில், புதிய சமூகம் உருவாவது தடைப்பட்டிருக்கும்; அதுவும் பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் தொடர்வதற்கு உதவும்.
சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ வளர்ச்சி தீவிரமாக இருந்த போதிலும், சிறு உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாகக் கசக்கிப் பிழியப்பட்ட போதிலும், பழைய சமூகத்தின் தத்துவமும், கலாச்சார நடைமுறைகளும் போதுமான அளவு அழிக்கப்பட்டிருக்காது. இறுதியாக, 'முறைசாராத் துறை வேலை வாய்ப்பு' (இன்பார்மல் செக்டர் எம்பிளாய்மென்ட்) அல்லது 'எப்போதாவது வேலை' (கேஷீவல் ஒர்க்) என்கிற பெயரில் உதிரித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, ஒரு கீழ் வர்க்கம் அல்லது பொறுக்கி வர்க்கம் உருவாக்கப்படுகின்றது; அது இனவாத மற்றும் வகுப்புவாத பாசிச தத்துவங்களுக்கு எளிதில் பலியாகிவிடுகின்றது; அல்லது அவர்களை அத்தகைய தத்துவங்களைக் கொண்டுள்ள இயக்கங்களின் முன்னணி தொண்டர்களாக எளிதில் மாற்றிவிட முடியும். ஒரு வகையில் இந்த தத்துவங்கள் 'நவீனமானவையாக' (நிதி மூலதனத்தின் நேரடி ஆதரவைப் பெற்றுள்ள தத்துவங்கள் என்கிற வகையில் அவை நிச்சயமாக நவீனமானவைதான்) இருந்தபோதிலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளின் வழிமரபாக வந்தவையாக இருக்கின்றன.
எனவே, முதலாளித்துவம் பாரம்பரியமாக செய்து வந்து கொண்டிருந்த வேலையான, தனிநபரை அவரது சாதி அல்லது மதக் குழுவின் வேர்களிலிருந்து விடுவிப்பதும் கூட இந்தியா போன்ற நாடுகளில் வளரும் முதலாளித்துவத்தால் செய்து முடிக்கப்படாமல் இருக்கின்றது; அதிகமான உள்நாட்டு உற்பத்தியால் அந்த வளர்ச்சியின் தீவிரம் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் இதுதான் நிலைமை. பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டடிருப்பதிலிருந்து தனிநபர் இப்படி முறையாக விடுவிக்கப்படுவது 'நவீனத்துவத்தின்' அடையாளமாக இருப்பதனால், இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி அது எவ்வளவு வேகமானதாக இருந்தபோதிலும், அது 'நவீனத்துவத்தைக்' கொணரத் தவறுகின்றது. ஒரு பக்கம் பகட்டான மாபெரும் பேரங்காடிகளும் (சூப்பர் மால்கள்), தேவையைவிடப் பெரிதான வாகனங்களும் மறுபுறம் கப் பஞ்சாயத்துகளும், பெண் கருக் கொலைகளும் அக்கம் பக்கமாக வாழ்கின்ற ஒரு விநோதமான நிலைமையை அது உண்டாக்குகின்றது; அந்த பேரங்காடிகளுக்கு அடிக்கடி வருகிற அல்லது அந்த வாகனங்களை வைத்திருக்கிற அதே நபர்கள் கப் பஞ்சாயத்துகள் மற்றும் பெண் கருக்கொலைகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள்.
அத்தகைய நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் மரபான முதலாளித்துவத்தின் ஆற்றல் அது பழைய சமூகத்தை அழிக்கும்போது அதன் விளைவாக வேலையின்மையும், போதுமான வேலையின்மையும் (அன்டர் எம்பியாய்மென்ட்) பெருகிவிடாமல் உறுதிப்படுத்துவதற்கான அதன் ஆற்றலைப் பொருத்தே இருக்கின்றது; இந்த ஆற்றல் முதலாளித்துவத்தின் உள்ளியல்பான இயங்குவிசையில் அமையப் பெற்றிருக்கிறது என்று வழக்கமாக மார்க்சிஸ்டுகளால் கூறப்படுகின்றது. ஆனால், இந்தக் கருத்து வரலாற்று நிலைமை சரியாகப் புரிந்து கொள்ள்ளப்பட்டதைச் சுட்டவில்லை என்பது என் கருத்து. சிறு உற்பத்தி அழிக்கப்படுவதாலேயே கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிவிடவில்லை என்பதற்குக் காரணம் மரபான முதலாளித்துவம் வளச்சியடைந்த நாடுகளிலிருந்து 'புதிய உலகைச்' சேர்ந்த நாடுகளுக்கு மிகப் பெருமளவு மக்கள் குடியேறியதாகும். எடுத்துக் காட்டாக, முதலாம் உலகப் போர் வரையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் மிதமான தட்பவெப்ப நிலையுள்ள வெள்ளைக் குடியேற்றங்களான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் அதிகரிக்கும் மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் குடிபெயர்ந்தனர். 19ம் நூற்றாண்டு மத்தியிலிருந்து முதலாம் உலகப் போர் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து ஐந்து கோடி பேர் இந்த மிதமான தட்பவெப்ப நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்; அங்கு பூர்வகுடிகளை அவர்களது நிலங்களை விட்டு விரட்டி விட்டு, அந்த நிலங்களில் விவசாயம் செய்யத் துவங்கினர்.
அப்படி நிலங்கள் கிடைத்ததும், அதனால் குடிபெயர்வதன் மூலம் ஒப்பீட்டளவில் உயர்வான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கலாம் என்பதும் தாய்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து ஊதிய உயர்வு பெற்றதற்குக் காரணமாகும். மற்றும், ஆம், அது பழைய சமூகத்தை அழிப்பதையும், தனிநபரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதையும் சாத்தியமாக்கியது. முதலாளித்துவத்தின் உள்ளியல்பான வரலாற்று இயங்குவிசை என்று சொல்லப்படுவதன் காரணமாக நடந்தது என்று கூறப்படுவதை சற்று நெருக்கமாகப் பார்த்தால் அது எஞ்சிய உலகின் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவும் முதலாளித்துவத்தின் ஆற்றலினால் நிகழ்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இப்போது நாம் விவாதிக்கும் விஷயமும் அத்தகைய ஒரு நிகழ்வின் எடுத்துக் காட்டாகும்.
ஆதலால், இந்தியா போன்ற நாடுகளில் பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டு இருக்கும் தனிநபரை முதலாளித்துவத்தால் விடுதலை செய்ய முடியாமல் இருப்பது, உலகத்தை காலனிமயப்படுத்துவதில் முதலாளித்துவத்திற்கு மேற்கொண்டு வாய்ப்புகள் இல்லை என்கிற உண்மையுடன் தொடர்புடையதாகும். நிலப்புரபுத்துவ சொத்துடமையை மட்டுமின்றி பழைய சமூகத்தையே அழித்த முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுக் கடமையை முதலாளித்துவம் பொருளாதார ரீதியாக எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் அதனால் இந்த நாடுகளில் சாதிக்க முடியாது. இந்த இரட்டைக் கடமையை சோஷலிசத்திற்காகப் போராடும் சக்திகள் செய்து முடிக்க வேண்டும்.
ஆதலால், இந்த சக்திகளுடன் தொடர்புள்ள முற்போக்கு கலாச்சார இயக்கம் தன்னுடைய தளத்தில் பணக்கார நிலவுடமை நலன்களுடன் அணி சேர்ந்துள்ள முதலாளிகள் தலைமை வகிக்கும் சுரண்டல் அமைப்பிற்கு எதிராக மட்டுமின்றி, பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்; சாதி, ஆணாதிக்கம், வகுப்புவாதம் மற்றும் பழைய சமூகத்தின் பாரம்பரியங்கள் என்றழைக்கப்படுபவற்றினால் நடக்கும் அனைத்து வகையான தனிநபர் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து போராட வேண்டும். இந்த பிந்தைய போராட்டம் இன்றிலிருந்து புதிய சமூகம் நிலைநிறுத்தப்படும் வரையில் நீடிக்கும் நிரந்தரமான போராட்டமாகும். ஆனால் அத்தகைய ஒரு சமூக அமைப்பு நிறுவப்படுவது முடிவுற்ற ஒரு விஷயமல்ல என்பதாலும், ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவுறுவதில்லை என்பதாலும், ஆனால் அது ஒரு முடிவற்ற நிகழ்போக்கு என்பதாலும், இந்த தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியாக அமைகிறது.
சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் புரட்சிகர போக்கின் ஒரு பகுதியாக ஒரு நாடு தற்கால உலக ஒழுங்கமைப்பிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வது என்கிற எண்ணத்தையே பல மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அத்தகைய துண்டித்துக் கொள்ளலுக்கு தத்துவார்த்த அடிப்படையாக இருக்க வேண்டிய தேசியவாதம் சம்பந்தப்பட்ட தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் என்பதாலும், அதனால் பிற்போக்குத்தனமானதாக இருக்கக் கூடும் என்பதாலும் அவர்களது பார்வையில் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. (இந்தக் கருத்தை வலியுறுத்த ஸ்லோபடான் மிலோசவிச்-முன்னாள் செர்பிய ஜனாதிபதி-மற்றும் இதரர்கள் வழக்கமாக உதாரணம் காட்டப்படுகிறார்கள்). ஆனால், சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழான உலகமயம் (இதைச் சுருக்கமாகக் கூறுவதற்கு 'ஏகாதிபத்திய உலகமயமாக்கல்' என்கிற சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது) எதிர்க்கப்பட வேண்டுமானால், உழைக்கும் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசப் போராட்டம் இல்லாத நிலையில், அத்தகைய போராட்டங்கள் ஒரு தேசத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதைத் தவிர வேறு மாற்று ஏதுவும் இல்லை; அதனால், உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்வது நிகழ்ச்சி திட்டத்தின் முக்கிய பகுதியாக இருப்பதற்கும் வேறு மாற்று இல்லை. உண்மையில், பல்வேறு நாடுகளில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களில் சிறிதும் ஒருங்கிணைப்பு இல்லை; விவசாயிகளுடைய போராட்டங்களுடனான ஒருங்கிணைப்பு என்கிற கேள்வி எழவே இல்லை.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும், அதன் அடிப்படையான சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டுமானால் அதற்காக இருக்கும் ஒரே ஆயுதம் தனித்தனி நாடுகளில் தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் மூலம், அந்தந்த நாடுகளுக்குள் சொத்துறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்ளும் திட்டத்துடன் போராட்டங்களை நடத்துவதுதான். என்றபோதிலும், இதைக் கூறுவதனால், மேற்கத்திய மார்க்சிஸ்டுகள் எழுப்பிய அச்சங்களை புறந்தள்ளுகிறோம் என்று அர்த்தமல்ல. ஒரு நாட்டின் தனிமையால் அதன் புரட்சிகர மாற்றம் மூழ்கடிக்கப்படும் சாத்தியத்தை அத்தகைய துண்டித்துக் கொள்ளும் நிகழ்போக்கு தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றது. அதாவது, அது பழைய சமுதாயத்தில் வேர் கொண்டுள்ள பிற்போக்குச் சார்புகளை பலப்படுத்துவதில் முடியலாம். இதை வெற்றி கொள்வது சுலபமல்ல; ஆனால், அத்தகைய எந்த ஒரு புரட்சிகர நடைமுறையிலும், நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக, முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் ஒரு முக்கிய கூறாக அமைகின்றன.
குறிப்புகள்:
1. வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதம், முதல் நகல்.
2. பால் ஏ. பாரன், பொலிடிக்கல் எகானமி ஆப் குரோத், மன்த்லி ரிவீவ்யூ பிரஸ், நியூயார்க், 1957.
(நன்றி: சோஷியல் சயின்டிஸ்ட், இதழ் எண்: 462-463)
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment