Wednesday, March 23, 2011

தேர்தல் கூட்டணிகளும் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்



அசோகன் முத்துசாமி


தேர்தல் கூட்டணிகள் மற்றும் இடதுசாரிகள் பற்றி பல்வேறு விதமான தப்பெண்ணங்கள் திட்டமிட்டே சிலரால் பரப்பப்படுகின்றன. சிலர் அதை நம்பவும் செய்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் இந்த தப்பெண்ணங்கள் தொற்றிக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியது இடதுசாரிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறுகின்றார்கள் என்கிற கருத்தாகும். ஏன் அணி மாறுகின்றார்கள் என்பதற்கு மிக அபாரமான கற்பனை வளத்துடன் தங்களது இயல்புக்கு ஏற்ப காரணம் கற்பிக்கின்றனர். என்ன காரணம்? சில தொகுதிகள் அதிகமாகக் கொடுக்கின்றார்கள் என்பதற்காக இடதுசாரிகள் அணி மாறுகின்றார்கள் என்பது. அதை முதலில் பார்த்து விடுவோம்.
சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு காங்கிரஸ் எதிர்ப்பு என்பதுதான். காங்கிரசை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும், அதனிடத்தில் ஒரு இடது ஜனநாயக மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் குறிக்கோள்.
முதலாளித்துவ நிலப்புரபுத்துவ நலன்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட காங்கிரசை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்கிற நிலையை எடுத்துவிட்டால் அதைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற தேர்தல் உத்திகளை வகுத்தாக வேண்டும். இந்த கட்டுரையில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த கூட்டணி நிலைப்பாடுகளை மட்டும் பார்க்கலாம்.
1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி தனியாக அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நாட்டில் நடந்துள்ள அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரசுக்கு எதிராகவே, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ, போட்டியிட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஒரேயொரு விதிவிலக்கு. காங்கிரசைவிட பெரிய அபாயமான பாஜகவை காங்கிரசின் உதவியின்றி அதிகாரத்திலிருந்து வீழ்த்தியிருக்க முடியாது. ஏனெனில், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளில் சில மதவாத பாஜகவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்தன. அதாவது அந்த அணியில் இருந்தன. (அந்த மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியின்றி பாஜக அதிகாரத்திற்கு வந்திருக்கவே முடியாது என்பது தனிக்கதை). எனவே இடதுசாரிகள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காங்கிரசும் இடம் பெற்றிருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடதுசாரிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் போட்டியே காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமயிலான இடதுசாரிகளுக்கும்தான். மற்றொரு புறம் இடதுசாரிகள் பலவீனமாக உள்ள, ஆனால் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தனியாகவே பாஜகவை எதிர்த்து நின்றது. அங்கும் கூட தாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் தவிர பிற இடங்களில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் காங்கிரசை ஆதரித்தார்கள். ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொகுதிகள் பிரித்துக் கொள்ளப்பட்டன. மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகள் போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது; காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகள் போட்டியிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர் அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தையும் மார்க்சிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரித்தனர்.
சுருக்கமாகச் சொன்னால் 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சில மாநிலங்களில் காங்கிரசை நேரடியாகவோ, மறைமுகமாகவோ (ரகசியமாக அல்ல) ஆதரித்தது தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் மார்க்சிஸ்டுகள் காங்கிரசை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.
இனி குறிப்பாக தமிழக தேர்தல் அரசியலுக்கு வருவோம்.
சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இடதுசாரிகள் காங்கிரசை எதிர்த்தே போட்டியிட்டு வருகின்றனர். அதற்காக காங்கிரசுக்கு எதிராக எந்தக் கட்சி நின்றாலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடுவதில்லை.
1967ல் காங்கிரசுக்கு எதிராக திமுகவை ஆதரித்தார்கள். அதே திமுக 1972 தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது. எதிர்த்து நின்றதோ ராஜாஜியின் சுதந்திரா கட்சி அங்கம் வகித்த வலதுசாரி பிற்போக்குவாதக் கூட்டணி.  எனவே மார்க்சிஸ்டுகள் தனியே போட்டியிட்டனர். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச கொள்கை கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இடதுசாரிகள் தொகுதிப் பங்கீடுகள் செய்து கொள்வதில்லை.
அடுத்து ஒரு முக்கியமான உண்மையையும் நினைவுறுத்த வேண்டியிருக்கின்றது. 1972ல் எம்ஜிஆர் அதிமுகவைத் துவக்குகிறார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வருகின்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் என்.சங்கரய்யா வேட்பு மனு தாக்கல் செய்கின்றார். புதிதாகத் துவக்கப்பட்ட கட்சியான அதிமுக கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தக் கட்சியின் வேட்பாளர் மாயத் தேவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிலிருந்து விலகுகின்றது. இது எதை உணர்த்துகின்றது என்பதை சற்று யோசித்து பார்க்க வேண்டும். மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் நோக்கமாக இருந்ததே தவிர சீட்டு அல்ல.
அதிமுக தேர்தல் களத்திற்கு வந்த பின்னர் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தன. கம்யூனிஸ்டுகள் காங்கிரசுக்கு எதிரான கூட்டணியிலேயே தொடர்ந்து இடம் பெற்றனர். 1996ல் மதிமுக கூட்டணியில் இடம் பெற்றனர். அதாவது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஒரு மாற்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்பதைக் குறித்துக் கொள்ளவும். ஆனால், பின்னர் 1998 மக்களவைத் தேர்தலில் மதிமுக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது.
இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்டுகள் எடுத்த நிலை மிகுந்த கவனத்திற்கு உரியது. ஒரு பக்கம் அதிமுக-பாஜக-மதிமுக கூட்டணி. மறுபக்கம் திமுக கூட்டணி. பாஜக எதிர்ப்பு நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டுக்கு மார்க்சிஸ்டுகள் முயற்சித்தனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. மார்க்சிஸ்டுகள் என்ன செய்தனர்? மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் தனியாகப் போட்டியிட்டனர். மற்ற தொகுதிகளில் திமுகவை ஆதரித்து தனியே பிரச்சாரம் செய்தனர்.
இன்னுமொரு முக்கியமான செய்தி தோழர் லீலாவதி படுகொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகியிருந்தது. கொலை செய்தது திமுகவினர். ஆனால், அதே திமுகவை சிபிஎம் ஆதரித்த்து!
பொதுவான அரசியல் போராட்டம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் களத்தில் அன்றாடம் நடக்கும் போராட்டம். இரண்டும் முரண்படும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படக் கூடும். அவற்றில் ஒன்றுதான் 1998 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நாம் சந்தித்த நிலைமை. நமக்கு ஏற்பட்ட கொடுமையை பிரதானமாகக் கருதி திமுகவையும் எதிர்ப்பது என்று முடிவெடுத்திருந்தால் அது பாஜகவிற்கு இன்னும் சாதகமாக ஆகியிருக்கக் கூடும்.
இது போன்ற நிலைமைகள் நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலேயே பல முறை ஏற்பட்டிருக்கின்றது. மார்க்சிஸ்ட் தோழர்களை கொலை செய்த திமுக, அதிமுக கட்சிகளை அக்கட்சி வெவ்வேறு தேர்தல்களில்  பொதுவான அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆதரித்திருக்கின்றது. மற்ற கட்சிகளை விடுங்கள். மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் மோதல்கள் நடப்பதும், அவற்றில் இரு கட்சியினரும் உயிரிழப்பதும் நடந்திருக்கின்றன. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டால் அது எதிரிகளுக்கே மேலும் சாதகமாகும். எனவே அத்தகைய சம்பவங்களையும், அரசியல் தேவைகளையும் தனித்தனியே பிரித்தே பார்க்க வேண்டும். வேறு வழியில்லை.
மேலும், கம்யூனிஸ்டுகள் வளர்ந்து விடாமல் நான் பார்த்துக் கொண்டேன் என்று 1999 மக்களவைத் தேர்தலில் மதுரையின் வீதிவீதியாகச் சென்று கருணாநிதி விஷம் கக்கினார். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவர் பாஜக கூட்டணியில் இருக்கும்போது இப்படிப் பேசினார். எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலையிலிருக்கும் மதவாத பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் கொடுத்து வளர்க்க முயற்சித்தவர். (இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அதிமுகவும் தப்ப முடியாது). ஆனால், கம்யூனிஸ்டுகள் வளரக் கூடாதாம். இது அவரது வர்க்க குணத்தை, முதலாளித்துவ குணத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. அப்படிப் பேசியருடனேயே பின்னர் 2004ல் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக இடதுசாரிகள் அணி சேர்ந்தார்கள். 2006ல் அதிமுகவின் அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டவும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். மக்களுக்கு உடனடியாக எது நன்மை பயக்கும் என்று கட்சி கருதுகிறதோ அந்த அரசியல் நிலைப்பாட்டிற்கே முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் நினைவூட்டவே இவ்விடத்தில் இந்த சிறு விளக்கம்.
1998க்குப் பின்னர் 2004 வரையிலும் பாஜகவே நமது முதன்மையான எதிரியாக இருந்தது. அதை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும், மற்ற கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதும் மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகளின் உடனடி இலக்காக ஆனது. ஆதலால், காங்கிரசுடனும் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரித்தனர் இடதுசாரிகள். அந்த திட்டத்திற்கு மாறாகவும், தேச நலனுக்கு எதிராகவும் மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதை எதிர்த்து தங்களது ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.
2009 தேர்தல் நடந்தது. காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்துப் போட்டியிட்டனர் இடதுசாரிகள். ஏனெனில், மதவாத பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயம் இருக்கவில்லை. இடதுசாரிகளின் அந்தக் கணிப்பு மிகச் சரியாக இருந்தது என்பதற்கு தேர்தல் முடிவுகளே சாட்சி. பாஜகவின் பலம் மேலும் குறைந்திருந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற இடதுசாரிகளின் முயற்சியால், நிர்ப்பந்தத்தால் ஐமுகூ அரசாங்கம் இயற்றிய சட்டங்களும், திட்டங்களும் முக்கிய காரணமாக இருந்தன.
இப்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை பார்ப்போம்.
திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி என இரண்டிலுமே ஏகப்பட்ட குழப்பம். அதிமுக தலைமை ஏடாகூடமாகத்தான் நடந்து கொண்டது. இடதுசாரிகளைப் பொருத்த வரையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பது என்பது அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே வந்துவிட்டன. அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடக்கின்றது. பிரச்சனைகள் வருகின்றன. அதன் அணுகுமுறை சரியில்லை என்பதனால் மூன்றாவது அணி அமைப்பது குறித்த யோசனை வருகின்றது. பின்னர் அது ஆளும் கூட்டணிக்கே சாதகமாகும் என்பதனாலும், அதிமுக மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்ததானாலும் அந்த யோசனை கைவிடப்படுகின்றது. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுகின்றது.
மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் இறுதியாக 18 தொகுதிகள் கேட்டதாகவும், அதிமுக இறுதியில் 12 தொகுதிகள் தர முன்வந்த அடிப்படையிலும் கூட்டணி அமைக்கப்படுகின்றது. (கூட்டணி என்ற சொல் இக்கட்டுரை முழுவதும் ஒரு வசதிக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் தொகுதிப் பங்கீடு மட்டுமே எப்போதும் செய்து கொள்ளப்படுகின்றது). உண்மையில் சில தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின், மார்க்சிஸ்டுகளின் நோக்கமாக இருந்திருந்தால் அதை எதிர்க் கூட்டணி கொடுத்திருந்தாலும் அங்கு போய் அவர்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், எப்போதும் அப்படி அவர்கள் நடந்து கொண்டதில்லை. தமிழகத்தைப் பொருத்த வரையில் அப்படி நடந்து கொள்ளும் ஒரே முக்கிய அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். யார் அதிக தொகுதிகள் கொடுக்கின்றார்களோ அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள்.
தங்களது அரசியல் நிலைப்பாட்டை தாங்களே தனியாக சாதிக்கப் போதுமான பலம் இல்லாத காரணத்தினாலேயே இடதுசாரிகள் மற்றவர்களின் உதவியையும் பெறுகின்றார்கள். அதற்காக அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து விடுவதில்லை. திமுக, அதிமுக, மதிமுக, பாமக போன்ற பகுத்தறிவு பேசும் கட்சிகள் தங்களது லாபத்திற்காக மதவாத பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்கியதே இல்லை. அந்த பாவத்தைச் செய்யாதவர்கள் இடதுசாரிகளும், தலித் கட்சிகளும் மட்டுமே.
ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும், பேசாமல் தனியாகப் போட்டியிட்டு விடலாமே என்றும், தேர்தலையே புறக்கணித்துவிடலாமே என்றும் சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர். நக்சலைட்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றார்கள்; வைகோ தேர்தலைப் புறக்கணித்துள்ளார். நக்சலைட்டுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் விளைந்ததில்லை. வைகோவின் தற்போதைய முடிவினாலும் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை (ஒரு வேளை அவரது வாக்காளர்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களிக்காததனால் அது ஆளும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவுகின்ற தீமையை வேண்டுமானால் தரலாம்). தன்னுடைய அல்லது தன்னுரடய கட்சியான மதிமுகவின் தன்மானத்தைக் காப்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டதாக வைகோ தெரிவிக்கின்றார். ஆனால், இந்தப் போக்கில் அவர் மக்களை மறந்து விட்டார்.
'அரசியலில் பங்கேற்க மறுப்பதற்கு நீங்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளில் ஒன்று, உங்களைவிடக் கீழானவர்களால் நீங்கள் ஆளப்படுவதாகும்' என்பது கிரேக்க தத்துவ மேதை பிளோட்டோவின் கூற்றாகும். இதை சம்பந்தப்பட்ட அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

------------------------------------------------------------------- 23.3.11
       


Wednesday, March 16, 2011

அத்வானியின் நரம்பில்லா நாக்கு




அசோகன் முத்துசாமி


பாபர் மசூதி இடிப்பைப் பற்றி இன்னும் எத்தனை விதமாகப் பேசி பாஜக பரிவாரம் மக்களைக் குழப்பும் என்பது தெரியவில்லை. பாபர் மசூதி இடிப்பால் பாஜக மக்களது ஆதரவை இழந்தது என்றும், மசூதி இடிக்கப்பட்டது பெரிய சோகம் என்றும், மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று நடந்த நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்றும் அத்வானி கூறியுள்ளார். அத்துடன் அயோத்தி இயக்கத்தில் தான் பங்கு பெற்றதைப் பெருமையாகவேக் கருதுவதாகவும் திருவாய் மலர்ந்துள்ளார். (ஆதாரம்: தினமணி, மார்ச் 13, 2011).
இம்மாதிரி பேச்சுக்கள் சம்பவம் நடந்து அல்லது குற்றம் நடந்து இருபது வருடங்களுக்குப் பின்னர் பேசப்படுகின்றது என்பதை நினைவில் கொள்வோம். ஏனெனில், ரத யாத்திரை நடத்தியது இவர்தான். அது சென்ற பாதையெல்லாம் தனக்குத் தானே மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்து கொண்டவரும் இவர்தான். (அப்போது நடந்த கலவரங்களில் மட்டும் 564 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று விக்கிபீடியா இணையதளம் கூறுகின்றது). இனி இந்திய வரலாற்றை எழுதும்போது 1947க்கு முன் பின் என்று எழுதாமல் '1992 டிசம்பர் 6க்கு முன், அதற்குப் பின்' என்று எழுத வேண்டும் என்றவரும் இவர்தான். மேற்கொண்டு பார்க்கும் முன் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சதி வழக்கு இன்னும் அத்வானி மீது நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் கொள்வோம்.
இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு மே 20ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ இருக்கை ஒரு தீர்ப்பு வழங்கியது. கடந்த 2001ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் அத்வானியையும் மற்ற 21 பேரையும் விடுவித்திருந்தது. அதாவது அவர்கள் எதுவும் சதி செய்யவில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை முறையீடு செய்திருந்தது. அந்த முறையீட்டு மனுவின் மீது லக்னோ உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிராக சிபிஐ மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இப்போது முறையீடு செய்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் அத்வானி இப்படிப் பேசியிருக்கின்றார். வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
மசூதி இடிக்கப்பட்டவுடன் அத்வானி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தார், உற்சாகமாக இருந்தார் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதன்றி பல்வேறு சாட்சியங்களும் இருக்கின்றன.
''அத்வானி உற்சாகமாகக் காட்சியளித்தது மட்டுமின்றி 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் திரண்டிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தினிடம் சர்ச்சைக்குரிய அந்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவிக்கவும் செய்தார்' என்று அஞ்சு குர்தா என்கிற மூத்த ஐபிஎஸ் அதிகாரி சிறப்பு நீதிமன்றத்திடம் சாட்சியளித்தார்.'' (மார்ச் 26, 2010. ஜீ நியூஸ்).
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் (லக்னோ) நீதிமன்றம் மசூதி இடிப்பு வழக்கில் சங்பரிவாருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தபோது தான் ரதயாத்திரை நடத்தியது சரிதான் என்று தீர்ப்பு மெய்ப்பிக்கின்றது என்று அத்வானி குதூகலமாகத் தெரிவித்தார். (ஆதாரம்: ரிடிப்.காம்). தற்போது தற்காலிகக் கோவில் இருக்கும் இடத்தில் பேச்சு வார்த்தைகளின் மூலமாக ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.
பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியாருடன் சேர்ந்து மசூதியை இடிப்பதற்கு அத்வானி சதி செய்ததாக அத்வானியின் மருமகள் கௌரி அத்வானி லிபரான் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது நடந்தது 2001ம் ஆண்டு.
'டிசம்பர் 1, 1992 அன்று ரதயாத்திரை புறப்படுவதற்கு முன்னர் வினய் கத்தியார் அத்வானியைச் சந்திக்க வந்தார். அந்த சந்திப்பில் நானும் உடனிருந்தேன். இந்தக் கூட்டத்தில்தான் அத்வானியும், கத்தியாரும் பாபர் மசூதியை இடிக்கச் சதித் திட்டம் தீட்டினர். ரதயாத்திரையின் இறுதி நோக்கம் கரசேவை செய்து இந்துக்களை தாஜா செய்வது மட்டுமல்ல, வாக்குகளைத் திரட்டி மத்தியில் அதிகாரத்திற்கு வருவதும்தான் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்.........பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும், அதாவது மத்தியில் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அத்வானி கத்தியாரிடம் கூறினார்; பாபர் மசூதியை இடித்தால்தான் அது சாத்தியமாகும்; ஏனெனில், அதுதான் இந்துக்களை பாஜகவிற்கு ஆதரவாக ஒன்று திரட்டும்' என்று கௌரி தன்னுடைய லிபரான் கமிஷன் முன்பு அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். (ஆதாரம்: விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்கள்).
அத்வானி இப்படி மாற்றி மாற்றிப் பேசுவது இது முதல் முறையல்ல. மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானி செய்தது என்னவென்று பாருங்கள்;
'மத்தியப் படைகள் அயோத்திக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நகரின் அனைத்து நுழைவாயில்களையும் மூடுங்கள் என்று அத்வானி உத்தரவிட்டார். இது பிற்பகல் 2 மணிக்கு நடந்தது. அப்போது கரசேவகர்கள் மசூதியின் கவிகை மாடத்தை இடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் றாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தி ஹிந்து பத்திரிக்கையும் அமு போலவே செய்தி வெளியிட்டிருந்தது. முதல் கவிகை மாடம் 2.45 அணி அளவில் தரைமட்டமாக்கப்பட்டது. மற்ற இரண்டும் 4.30 மணிக்கு நிலைகுலைந்து வீழ்ந்தன. 12.30 மணியளவில் உத்திரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங் ராஜினாமா செய்வதற்கு அத்வானி அனுமதிக்கவில்லை. 2 மணிக்கும் கூட அனுமதி மறுத்தார். அவர் 5.30 மணிக்குத்தான் ராஜினாமா செய்தார். இரட்டை வேடத்திற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக சில மணி நேரங்களுக்குப் பின்னர் 'இன்று அயோத்தியில் நடந்தவைகளுக்காக நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்.....என்னால் இந்த சம்பவத்தைத் தடுக்க முடியவில்லையே என்பதற்காக வருந்துகின்றேன்' என்று மக்களவை சபாநாயகருக்கு லக்னோவிலிருந்து கடிதம் எழுதினார். (ஏஜி.நூரனி, தி ஆர்எஸ்எஸ் அன்ட் தி பிஜேபி, பக்.74).
இவை எல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்து வாக்கு வங்கியைக் குறி வைத்தே சங்பரிவாரம் ராமர் கோவில் இயக்கத்தை திட்டமிட்டது. அத்வானி ரதயாத்திரை நடத்தினார். ராமருக்குக் கோவில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாமே என்று பலர் கூறியபோது, மசூதி இருக்கும் இடத்தில்தான் கோவில் கட்டுவோம் என்றனர். மசூதியை இடித்ததால்தான் இந்துக்களிடையே மதவெறியைக் கிளப்பி அதைத் தங்களது கட்சிக்குச் சாதகமாக ஆக்க முடியும் என்று திட்டமிட்டுத்தான் இடித்தார்கள். அத்வானியின் மருமகள் சொல்வது போல் அது முதல் நாள் திட்டமிடப்பட்டிருக்க முடியாது. ஏனெனில், அவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிக்கத் தேவையான கருவிகளை அல்லது ஆயுதங்களை முன் கூட்டியே திட்டமிட்டிருந்தால்தான் கரசேவகர்கள் அவற்றை எடுத்து வந்திருக்க முடியும். நிற்க.
மசூதி இடிக்கப்பட்டதால் பாஜக மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்பது ஒரு வகையில் உண்மைதான். மசூதி இடிக்கப்பட்டதும் உபி, மபி, இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில பாஜக அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன. மீண்டும் நடந்த தேர்தலில் பாஜக ராஜஸ்தான் தவிர வேறு எங்கும் ஆட்சிக்கு வரவில்லை. அங்கும் கூட அதற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உதிரி எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தார்கள். அதாவது அவர்களது கணக்கு பொய்த்துப் போய்விட்டது. பின்னர் 1996ல் அவர்கள் மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்ததும், அதற்குப் பின்னர் 1998லிருந்து 2004 வரை ஆட்சியிலிருந்ததும் வேறு பல காரணிகளும் சம்பந்தப்பட்டது. ஆனால், வரலாற்று அறிஞர் பணிக்கர் கூறுவது போல் மசூதி இடிக்கப்பட்டதால் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்று அது வரை அதைக் கருதிக் கொண்டிருந்த அதன் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை அது இழந்தது. ஏற்கனவே அக்கட்சியிடமிருந்து விலகியிருந்தவர்கள் மேலும் தூரமாக விலகிப் போனார்கள். ஆனால், அது அத்வானிக்கு இப்போதுதான், அதுவும் சதி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்யப் போகிறது என்றவுடன்தான் உறைக்கிறது. வழக்கிலிருந்து தப்பிக்க அத்வானி என்னென்னவோ செய்து பார்க்கின்றார். சொல்லிப் பார்க்கின்றார். ஒரு வேளை வழக்கிலிருந்து தப்பிவிட்டால் அவரது பேச்சே வேறு மாதிரி இருக்கும். ரதயாத்திரை நடத்தியபோது எப்படி வெறியைக் கிளப்பினரோ அப்படி இருக்கும். ஏனெனில், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை அவர்கள் இன்னும் கைவிடவில்லை. போதாக்குறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வேறு சாதகமான தீர்ப்பு அளித்திருக்கின்றது. அதை சங்பரிவாரம் எவ்வளவு உற்சாகமாக வரவேற்றது என்பது நமக்குத் தெரியும்.
ஆறு வருடங்கள் மத்தியில் அதிகாரத்திலிருந்தபோது ஏன் அவர்கள் கோவில் கட்ட முயற்சிக்கவில்லை என்ற கேள்வி இன்னும் சிலருக்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் அதற்காக முயற்சித்தார்கள் என்பதுதான் உண்மை. கூட்டணி நிர்ப்பந்தத்தின் காரணமாக தந்திரமான, அவ்வளவு வெளிப்படையாக இல்லாத முயற்சிகளை எடுத்தார்கள். மசூதி இருந்த இடத்திற்குக் கீழே கோவில் எதுவும் முன்னர் இருந்ததா என்கிற ஆராய்ச்சி அதில் ஒன்று. ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் அவர்களது ஆட்கள் நிறைய இருந்தார்கள் என்பது ஆராய்ச்சி குறித்த முடிவுகளிலேயே தெரிந்தது. இதன்றி தங்களது இதர வகுப்புவாதத் திட்டங்களைச் செயல்படுத்தினார்கள்; சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என்றது, அரசியல் சட்டத்தைத் திருத்த குழு அமைத்தது, சாவர்க்கரை விடுதலைப் போராட்ட நாயகனாகச் சித்தரித்தது, பாடத்திட்டங்களை இந்துத்துவமயமாக்கியது இப்படிப் பலவற்றைப் பட்டியல் போடலாம். சாதாரண அரசு எழுத்தரிலிருந்து நீதிபதிகள் வரையிலும் தங்களது ஆட்களை நியமித்தது என்பதையும் முக்கியமாக இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வகுப்புவாதிகளைப் பொறுத்த வரையில் எதையாவது சொல்லி, எதையாவது செய்து அதிகாரத்திற்கு வர முயற்சிப்பார்கள். அவர்கள் என்ன சொல்லியிருந்த போதிலும் அதிகாரத்திற்கு வந்ததால் தங்கள் நிகழ்ச்சி நிரலைத்தான் செயல்படுத்துவார்கள். வெறுமனே அதிகாரத்திற்கு வருவது அவர்களது நோக்கமல்ல. காங்கிரசைப் போலவோ, ஜனதா தளத்தைப் போலவோ அது மற்றொரு முதலாளித்துவ அரசியல் கட்சியல்ல. தங்களது வகுப்புவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காகத்தான் அவர்களுக்கு அதிகாரம் வேண்டும். குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் போதும். இது புரியும். மக்களுக்கும் அது தெரிந்திருக்கின்றது. அதனால்தான் அவர்களது அரசியலை விரும்பாத மக்கள் பாஜகவை அதிகாரத்திலிருந்து தூரத்திலேயே வைத்திருக்கின்றார்கள்.

---------------------------------------------------------15.3.11  




Sunday, March 13, 2011

அடையாள அரசியலின் உள் முரண்பாடுகள் 1 -அசோகன் முத்துசாமி




அடையாள அரசியல் இயல்பாகவே உள் முரண்பாடுகள் நிறைந்தது என்பது மட்டுமின்றி அது அடிக்கடி மனிதாபிமானமற்ற தன்மையையும் பெறுகின்றது. ஒரு சமீபத்திய உதாரணம்:
ஜப்பானில் சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டதில் முகநூலில் சிலர் மனநிறைவு அடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியாக இருக்கின்றதா? ஆம், இதுதான் உண்மை. சரி, எதற்காக மனநிறைவு? தமிழினத்தை அழிக்க சிங்களர்களுக்கு உதவி செய்ததாம் ஜப்பான் அரசு! அதற்காக இயற்கை பழிவாங்கிவிட்டதாம். இதற்கு அறம் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்...என்றெல்லாம் மேற்கோள்கள் வேறு.
இந்த குறிப்பில் கருத்து தெரிவித்த சிலர் ஜப்பானியனும் பவுத்தன் சிங்களனும் பவுத்தன் அதனால் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று பதிந்திருந்தனர். இந்தக் கொடுமையை என்னென்று சொல்வது?
ஜப்பானிய அரசு ஒரு அரசியல் நிலைப்பாடு எடுக்கின்றது. அந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பதானதாக இல்லை என்பதற்காக மொத்த ஜப்பான் மக்களும் செத்து மடியட்டும் என்று ஆசைப்படுவது எவ்வளவு கொடூரமான எண்ணம்? இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உலகில் வேறு எந்தவொரு இயக்கமும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதற்கான காரணம் இப்போது புரிகின்றது. ஏனெனில் அவர்கள் வேறு எந்த மக்களின் நலன் பற்றியும் கவலைப்பட்டதில்லை.
மேலும், 'உலகையே சேர்த்துக் கொண்டு வந்து சிங்களன் இலங்கைத் தமிழினத்தை அழித்தான் (?)' என்றெல்லாம் பேசுகன்றார்கள், எழுதுகின்றார்கள். ஆனால், இவர்கள் ஒரு முறை கூட ஏன் உலகமே தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதைப் பற்றி ஒரு கணமும் யோசிக்கவில்லை!
இதில் வேடிக்கை என்னவென்றால் 2004ல் ஆழிப்பேரலை இலங்கையைத் தாக்கிய பொழுது தமிழர்கள் வாழும் பகுதியான ஈழமும் அழிவைச் சந்தித்தது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இயற்கை எதற்காக தமிழர்களைப் பழிவாங்கியது என்று அவர்களைப் போன்றவர்களால் பதில் சொல்ல முடியுமா?
சிங்களர்களை பவுத்தர்களாகப் பார்ப்பதே அடையாளம் என்பது ஒரு படித்தானதாக இருக்க முடியாது என்பதற்கும், அடையாள அரசியல் தனக்கு எதிரான கருத்துக்களை தானே உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கும் மற்றொரு உதாரணமாகும். ஏனெனில், மொழியின் அடிப்படையில் சிங்களன் என்று வகைப்படுத்துகின்றவர்கள், கூடவே அவனுடைய மதத்தையும் பார்த்து அவன் பவுத்தன் என்றும் வகைப்படுத்துகின்றார்கள். இதுவே ஒரு முரண்பாடாகும். ஏனெனில், சிங்களர் பவுத்தர் என்றால், அவர்கள் தமிழர்களை ஒடுக்குகின்றார்கள் என்று மட்டும் சொல்லக் கூடாது, தமிழர்களின் மதத்தையும் சேர்த்து '....இந்த மதத்தவரை ஒடுக்குகின்றார்கள்' என்றும் கூற வேண்டியதாகின்றது.
இலங்கைத் தமிழர்களின் மதம் என்ன? சைவ மதமா? இந்து மதமா? இஸ்லாமிய மதமா? கிறிஸ்துவ மதமா? அல்லது மதமற்றவர்களா? இந்த மதம் என்றால், சைவ மதமா? ஆம் என்றால் அதற்குள் சாதி இருக்கின்றதா, இல்லையா? இப்படி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.
ஈழத் தமிழர்கள் பெரும்பகுதி தற்போது இந்து மதம் என்று பொதுவாக அழைக்கப்படுவதின் சைவ மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம். இன்றும் ஈழத்தில் இருப்பவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் தங்களது மதம் என்று பெரும்பாலும் இந்து மதத்தையே குறிப்பிடுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளும் அதையே செய்தார்கள் என்று கருதுவதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன. இலங்கையில் முஸ்லிம்களை அவர்கள் விரட்டியடித்தது, சில இடங்களில் படுகொலை செய்தது போன்ற தகவல்கள் இருக்கின்றன. அதை அவர்கள் மறுக்கவும் இல்லை. (தமிழன் என்கிற அடையாளத்தை வைத்து விடுதலைப் புலிகளை ஆதரித்த திராவிடர் கழகங்களுக்கு இது அவ்வளவு உவப்பான செய்தியாக இருக்காது. இது மத மறுப்பு திராவிட இயக்கங்களுடைய அடையாள அரசியலின் மற்றொரு முரண்பாடு.)
முஸ்லிம்கள் மீது அவர்கள் காட்டிய வெறுப்பிற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்று கூறிக் கொண்டார்கள். விடுதலைப் புலிகளை இலங்கை அரசுக்குக் காட்டிக் கொடுத்தார்கள், இத்யாதி.
இரண்டாவது காரணத்தை பரிசீலிக்கவே முடியாது. ஏனெனில், தமிழர்களும் காட்டிக் கொடுத்ததாக விடுதலைப் புலிகள் பழி போடுகின்றனர். அப்படிக் காட்டிக் கொடுத்ததாக இவர்கள் நினைத்தவர்களை எல்லாம் இவர்கள் கொன்று போட்டார்கள். ஆக, வெறும் அடையாளம் எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவதில்லை. இது மற்றொரு முரண்பாடு.
முஸ்லிம்கள் அடித்து விரட்டப்பட்டதற்கு அவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டதும் ஒரு காரணம் என்றால் அடையாள அரசியல் தன்னுடைய அடையாளத்தை, பண்பாட்டை, அரசியலை மற்றவர்கள் மீது திணிக்க முற்படுகின்றது என்று பொருள். இது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இது இயல்பாகவே ஒரு மதவாதத் தன்மையும், பாசிசத் தன்மையையும் பெற்று விடுகின்றது. பெற்றிருக்கின்றது. அதாவது, ஒரு வகையில் பார்க்கப் போனால், தமிழர்கள் இந்துக்கள், இந்துக்கள் தவிர மற்ற மதத்தினரைச் சகித்துக் கொள்ள முடியாது என்கிற நிலையைத் தான் இது காட்டுகின்றது.
இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது, இங்கே தாமரை மலர்ந்தால் (பாஜக வெற்றி பெற்றால்) அங்கே ஈழம் மலரும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது நினைவிற்கு வருகின்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழு ஒன்று கொலைகாரன் காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்து ஆதரவு கேட்டதும், மராட்டிய இனவெறியன்-மதவெறியன் பால் தாக்கரே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்ததும், பதிலுக்கு இங்கே சில விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தாக்கரேயைப் புகழ்ந்ததும் (மராட்டியம் மராட்டியருக்கே என்கிற முழக்கத்தை வைத்து தமிழர்களை அடித்து விரட்டியவன் தாக்கரே) நாடறியும். ஆக இனவாத தன்மை பெற்றுவிட்ட அடையாள அரசியல், எந்த மக்களின் பெயரால் அரசியல் செய்கின்றதோ அந்த மக்களின் எதிரிகளுடனும் கொஞ்சிக் கூலாவுகின்றது. எதிரிகளைப் போற்றுகின்றது. இந்த நிலைக்குக் காரணம் தமிழர்கள் இந்துக்கள் என்கிற பார்வையிலிருந்து வருகின்றது.
பவுத்தத்தைப் பொருத்த வரையில் இந்தியாவில் அது வைதீக இந்து மதத்திற்கு எதிரானது. சாதிக் கொடுமையை அனுபவித்த அம்பேத்கர் அதன் பிடியிலிருந்து தலித்துகள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் பவுத்தத்தைத் தழுவ வேண்டும் என்கிற தீர்வை முன் மொழிந்து, அதைத் தன்னளவில் செயல்படுத்தியும் காட்டியவர். ஆனால், அவரது பெயரால் கட்சி நடத்துகின்றவர்கள் 'பவுத்த சிங்களனை' எதிர்க்கின்றனர். இது இன்னுமொரு முரண்பாடு. இன்னும் சொல்லப் போனால் பவுத்தத்தைத் தழுவ வேண்டும் என்று அது மறந்தும் தலித்துகளைக் கேட்டுக் கொள்வதில்லை.
எப்படியாயினும் மதம் ஒடுக்குமுறையின் கருவியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றது. அது இந்து, பவுத்தம், இஸ்லாம், கிறித்துவம், சைவம், சீக்கியம் என்று எந்த மதமாக இருந்தாலும் சரி. இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு எதிரான மதமாக இருந்த, இருக்கின்ற பவுத்தம் இலங்கையில் ஒடுக்கும் மதமாக இருக்கின்றது. (இந்த லட்சணத்தில் சிலர் ராஜபட்சேவை பார்ப்பனர் என்று கூறுகின்றனர்!).
சுனாமியைப் பொருத்தவரையில், அதாவது இயற்கையைப் பொருத்த வரையில், அதற்கு சாதி, மத, இன, மொழி பேதம் எதுவும் கிடையாது; வர்க்க பேதத்தைத் தவிர. பணக்காரர்கள் கிட்டத்தட்ட பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும். சாமான்யர்களும்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியே பாதிக்கப்பட்டிருந்தாலும் பணக்காரர்கள் விரைவில் மீண்டு விடுவார்கள்; மற்றவர்களின் கதை கேள்விக்குறிதான்.
(பிற பின்னர்)

-----------------------------------------------  13.3.11


Saturday, March 12, 2011

இந்திய வரலாற்றில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும்-இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்



தமிழில்: அசோகன் முத்துசாமி




(இர்பான் ஹபீப், எஸ்ஸேய்ஸ் ஆன் இந்தியன் ஹிஸ்டரி: டுவேர்ட்ஸ் எ மார்க்சிஸ்ட் பர்ஸ்பெக்டிவ், நியூடெல்லி, துலிகா, 1995)

சோஷலிச-கம்யூனிச தத்துவம் நம்மக்களிடையே பரவத் துவங்கிய போது, அதன் எதிரிகள் அதற்கு எதிராக இரண்டு வாதங்களை முன்வைத்தனர். முதலாவதாக, இந்தியா ஒரு ஆன்மீக நாடு, இங்கு முதலாளித்துவ வகை அல்லது சோஷலிச-கம்யூனிச வகைப் பொருள்முதல்வாதம் எதுவுமே நிலைத்து நிற்காது என்றனர். இரண்டாவதாக, மார்க்சிய அரசியலின் சாராம்சமான வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் இந்திய மண்ணிற்கு அந்நியமானவை என்றனர். இந்தியாவில் என்ன சமூக மோதல்கள் உண்டானாலும் அவை சாதிய அல்லது மத-வகுப்புவாதத் தன்மை கொண்டவை.
இந்தியாவின் ஸ்து£லமான நிலைமைகளுக்கு மார்க்சியத்தைப் பொருத்திய தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி ஆகிய இரு முன்னோடிகளால் இந்திய கலாச்சாரம் பற்றிய இந்த கட்டுக்கதைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டது. லோகாயதம் என்கிற நு£லில் ஆரம்பித்து சட்டோபாத்யாயா தொடர்ச்சியாக எழுதிய தன்னுடைய சொந்தப் படைப்புகளில் ஆன்மீகத்திற்கும், பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் என்பது அய்ரோப்பாவில் கிரேக்கத்தில் நடந்தது போலவே பண்டைய இந்தியாவிலும் நடந்தது என்பதை நிறுவினார். மேலும், உண்மையில் மோதிக் கொண்டிருந்தது சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்கள் ஆகிய இரண்டு எதிரெதிர் வர்க்கங்கள் என்பதையும், அவை முறையே ஆன்மீகத்தையும், பொருள்முதல்வாதத்தையும் ஆதரித்தன என்பதையும் அவர் நிலைநாட்டினார். சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக சுரண்டப்படும் வர்க்கங்கள் கிளர்ந்தெழுந்ததையே பவுத்தத்தின் எழுச்சி குறிக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். பவுத்தத்திற்கு எதிரான உக்கிரமான தத்துவார்த்த யுத்தத்தில் சுரண்டும் வர்க்கங்கள் வேதாந்த தத்துவத்தைப் பயன்படுத்தின. பிராமணக் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களால் பொருள்முதல்வாதம் தோற்கடிக்கப்பட்டதானது கலைகள் மற்றும் விஞ்ஞானங்களின் சர்வாம்ச தேக்கநிலையைத் துவக்கி வைத்தது; அதனால் பண்டை காலத்தில் இந்தியாவை விட குறைவான நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த மேற்கு அய்ரோப்பாவை விட இந்தியா பின்தங்கும் நிலையை உருவாக்கியது. இவ்வாறாக, அவருடைய தத்துவார்த்தப் படைப்புகள் பிராமணீயக் கலாச்சாரத்திற்கு எதிரானப் போராட்ட அறைகூவலாக அமைந்தன.
பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதம் தொடர்பான  தேவிப்பிரசாத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டுபிடிப்புகள், சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தைப் பிரதிபலித்தன; அதைத் தொடர்ந்து, கிரேக்கத்திலும் ரோமிலும் போலவே இந்தியாவிலும் சமூகக் கலாச்சார வளர்ச்சி என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைபலனே என்ற முடிவிற்கு டி.டி.கோசாம்பி வந்தடைந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மார்க்சிய அடிப்படையிலான தத்துவம் மற்றும் வரலாற்றியல் விஞ்ஞானங்களின் தோற்றத்திற்கு இட்டுச் சென்றனர்.
கோசாம்பியின் கண்டுபிடிப்புகளைக் கையிலெடுத்த ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் மற்றும் அவர்களது பல சகாக்கள் அடங்கிய ஒரு தலைமுறை மார்க்சிய அறிஞர்கள் அவற்றை மேலும் வளர்த்தனர். மார்க்சிய வரலாற்றியலின் வளர்ச்சிக்கு அவர்களில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களுடைய பங்களிப்பை செய்துள்ளனர்; அனைவரும் சேர்ந்து இந்திய வரலாற்றின் இருண்ட மூலைகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளனர்.
அவர்களில் இர்பான் ஹபீப் 'இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள்: மார்க்சியக்  கண்ணோட்டத்தை நோக்கி' என்று சரியாகத் தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளிக் கொணர்வது பொருத்தமாக இருக்கும் என்று இப்போது கருதியிருக்கின்றார். இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு தன்னளவிலேயே மார்க்சியக் கண்ணோட்டத்துடன் அமைந்ததாக ஆகாது என்றும், இது மார்க்சியக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிய ஒரு முயற்சியே என்று ஹபீப் இந்த உபதலைப்பு குறித்து விளக்குகின்றார்.
இந்திய வரலாறு குறித்த மார்க்சிய கண்ணோட்டம் என்பதே சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு வளர்ச்சிப் போக்காகும்; இந்த உண்மையைக் கருத்தில் கொண்டால், இந்தப் பிரிவின் கீழ் தன்னுடைய சகாக்களின் ஆய்வு முடிவுகள் அனைத்தையும், தன்னுடைய சுயேச்சையான ஆய்வு முடிவுகளுடன் ஒன்றாகச் சேர்த்து, மார்க்சிய தத்துவார்த்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு முறையான இந்திய வரலாற்றைக் கொண்டுவர முயற்சித்திருப்பதற்காக வாசகர் நு£லாசிரியருக்கு நன்றி பாராட்டுவார். தன்னுடைய படைப்பு மார்க்சிய அணுகுமுறையை அடைந்து விட்டது அல்லது அத்தகைய அணுகுமுறையை அதன் முழுமையில் பிரயோகிக்கப்பட்டுவிட்டது என்பதைவிடவும்,   அத்தகைய அணுகுமுறையை நோக்கிய ஒரு முயற்சி மட்டுமே என்று அந்த நு£லுக்கான முன்னுரையில் ஆசிரியர் தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கின்றார்.
'மார்க்சிய வரலாற்றியலின் பிரச்சனைகள்' என்கின்ற முதல் கட்டுரை, இந்திய வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறையின் தத்துவார்த்த கருத்துக்கள் பலவற்றை விவாதிக்க ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தேச விடுதலை இயக்க விஷயத்தில் மார்க்சிய அணுகுமுறையின் சாரம் குறித்தும் விவாதிக்கின்றார்.
ஆர்.பி.தத்தின் 'இன்றைய இந்தியா' மற்றும் 'இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு' ஆகிய நு£ல்களை மேற்கோள் காட்டும் ஆசிரியர், தேச விடுதலை இயக்கம் என்பது நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களைத் தவரித்து விவசாயிகள், குட்டிமுதலாளிகள், முதலாளிகள், தொழிலாளி வர்க்கம் என இந்திய மக்களின் அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி என்று இப்போது பொதுவாகக் கருதப்படுவதாகக் கூறுகின்றார். பிரதானமான தேசிய இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ் எல்லா நேரங்களிலும் ஐக்கிய முன்னணியைப் பிரதிபலிக்கவில்லை; 1930களின் பிற்பகுதியில் அது அந்த நிலைப்பாட்டிற்கு நெருக்கமாக வந்தபோதும்.
தேசிய இயக்கத்தின்போது இடதுசாரிகளின் சாதனைகளைக் குறைவாக மதிப்பிடும் மற்றொரு சிறந்த வரலாற்று அறிஞரான பிபின் சந்திராவிடமிருந்து ஹபீப் தன்னைத் தனியே வேறுபடுத்திக் கொள்கின்றார். விவசாயிகள் இயக்கம் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றை உண்டாக்கியது பிரதானமாக கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களது நேச சக்திகளின் கைங்கரியம் என்றும், அதை மறக்கலாகாது என்றும் ஹபீப் கூறுகின்றார்.
அவர் பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார்: 'தேசிய இயக்கத்தை (அது எப்போதுமே காங்கிரசைவிடப் பெரிதாக இருந்தது) நாம் ஒரு பொது மரபாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதில் தனிநபர்கள் வகித்த பாத்திரம் குறித்த அனைத்து மதிப்பீடுகளும் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள் என்கிற புரிதலால் பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முக்கியப் பிரச்சனையாக இந்திய மக்களின் வறுமையையும், அதன் ஒழிப்பையும் முன்னிறுத்தியபோது தாதாபாய் நௌரோஜி கோடிக்கணக்கான மக்களுக்காகப் பேசினார். காந்திஜி அந்த கோடிக்கணக்கான மக்களைத் திரட்டினார்; அந்த திரட்டலின் வடிவம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தபோதும். இவை இந்திய மக்களின் நலனுக்காக ஆற்றப்பட்ட மறக்க முடியாத சேவைகளாகும். இவற்றை மாயையாகவோ அல்லது முக்கியத்துவமற்றவையாகவோ கருதும் முயற்சிகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...இன்று, தேசிய இயக்கத்தின் சாதகமான அம்சங்களான, மதச்சார்பின்மை, பெண்ணுரிமைகள், தேச ஒற்றுமை, பத்திரிக்கை சுதந்திரம், பாராளுமன்ற ஜனநாயகம் போன்ற முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களுக்கு குறிப்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் ஆகியவற்றின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக அனைத்து வர்க்கங்களையும் இணைக்கக் கூடிய ஒரு மக்கள் முன்னணியின் துவக்கப் புள்ளிகளாக இவை அமையலாம். அத்தகைய ஒரு முன்னணி நமது தேசிய இயக்கத்திற்குத் தகுதியானதொரு வாரிசாக இருக்கும்.'
வரலாற்றை மறுகட்டமைப்பதில் மார்க்சிஸ்டுகள் எடுக்க வேண்டிய அணுகுமுறை குறித்து சில முக்கியமான கருத்துக்களையும் இந்த நு£ல் கூறுகின்றது. 'ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள் குறித்த வரலாற்றை இருட்டடிப்பிலிருந்து மீட்பது மட்டுமல்ல, அந்த கலகங்களின் வர்க்க இயல்பு குறித்தும், தங்களது உண்மையான வர்க்கச் சார்பு குறித்து அதில் பங்கேற்ற மக்கள் எந்த அளவிற்கு அறிந்திருந்தார்கள் என்பது குறித்து ஆராய்வதும் முக்கியமாகும். ஏனெனில், தாங்கள் செய்வது வர்க்கப் போராட்டம் என்பது தெரியாமலேயே அதில் பங்கேற்பவர்களால் வர்க்கப் போராட்டம் நடத்தப்படலாம். துர்பாக்கியமாக, பெரும்பாலான எழுச்சிகள் குறித்து ஆளும் வர்க்கச் சார்புடைய அதன் எதிரிகளே எழுதியுள்ளதால், கலகக்காரர்கள் உண்மையில் என்ன நினைத்தார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ள பெரும்பாலும் நமக்கு வழியில்லை. அப்படி இருந்தபோதும், 17ம் நு£ற்றாண்டில் இந்திய விவசாயிகளின் எழுச்சிகளில் இருந்த வர்க்க உணர்வை விடவும், சீன விவசாயிகளின் எழுச்சி அல்லது 1881ம் ஆண்டு இங்கிலாந்து விவசாயிகளின் எழுச்சிகளில் கூடுதலான வர்க்க உணர்வு இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். இந்தப் பின்தங்கிய நிலைக்கான காரணங்களை, சாதி அமைப்பு அவற்றில் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியத்தை, ஆராய வேண்டும். இன்று அவற்றில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கக் கூடும்.'
'இந்தியா பற்றிய மார்க்சின் பார்வை' என்பது இரண்டாவது கட்டுரையின் தலைப்பு. ஒரு அமெரிக்கப் பத்திரிக்கைக்காக 1853ம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், 1857 கலகம் குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் எழுத்துக்கள் போன்ற முக்கயி படைப்புகள் மட்டுமின்றி, மூலதனம் நு£லிலும், எண்ணற்ற கடிதங்களிலும், குறிப்புகளிலும் மார்க்ஸ் இந்தியா பற்றி கூறியிருக்கும் கருத்துக்களையும் அந்தக் கட்டுரை ஆராய்கின்றது. இன்று அவை நமக்கு மதிப்பு மிக்கவை; ஆனால், இந்தியா குறித்த இறுதி உண்மைகளாக இருப்பதால் அல்ல.
இந்திய வரலாற்று உண்மைகள் குறித்த தன்னுடைய பல கருத்துக்களில் மார்க்ஸ் உண்மையில் தவறு செய்திருக்கின்றார். அவர் ஒன்றும் இந்தியா குறித்த நிபுணரல்ல. அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கிய பொருள் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகும். அந்த நிகழ்முறையை விவரித்து, ஆராயும்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த முதலாளித்துவத்திற்கு முந்தைய வளர்ச்சிப் போக்குகள் குறித்தும் அவர் ஆராய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும்போது, ஆய்விற்குப் பின்னர் அவர் கைவிட்ட பல அனுமானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது இந்தியாவிற்கு மட்டும் பொருந்துவதல்ல என்பதையும் இத்தருணத்தில் சொல்ல வேண்டும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தங்களுடைய தத்துவார்த்தப் பணியின் போக்கில், பின்னர் தவறென்று கண்ட முடிவுகளில் பலவற்றை, அவர்கள் கைவிட்டனர் அல்லது அதற்குப் பதிலாகச் சரியான முடிவை வைத்தனர்.
குறிப்பாக, ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்து மார்க்ஸ் உருவாக்கியிருந்த கருதுகோள்களுக்கு இது நேர்ந்தது. ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்த மார்க்சின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், குறிப்பிட்ட ஒரு சமயத்தில் மார்க்ஸ் கைகொண்டு, விரிவான ஆய்விற்குப் பின்னர் கைவிட்ட அனுமானங்களில் ஆசியபாணி உற்பத்தி முறையும் ஒன்று என்கிற முடிவிற்கு ஹபீப் வருகின்றார். இது ஏன் நிகழ்ந்தது?
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த, ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்திலிருந்து வர்க்க சமுதாயம் முதலில் அடிமைச் சமுதாயமாகவும், பின்னர் அதிலிருந்து நிலவுடமைச் சமுதாயமாகவும், கடைசியாக முதலாளித்துவ சமுதாயமாகவும் வளர்ச்சி அடைந்தது என்கின்ற சூத்திரம், இந்தியா, சீனா மற்றும் இதர ஆசிய சமுதாயங்களுக்குப் பொருந்தாது. அதைத் தொடர்ந்து அவரும் ஏங்கெல்சும் மேற்கொண்ட ஆய்வுகள் பல்வேறு ஆசிய நாடுகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் இருந்தன என்பதைக் காட்டின. ஒவ்வொரு ஆசிய நாட்டிலும் இருந்த ஸ்து£லமான நிலைமைகளும், வளர்ச்சிப்போக்குகளும் ஆராயப்பட வேண்டியிருந்தது. எனவே, ஒரு காலத்தில் மார்க்ஸ் கையாண்ட 'ஆசியபாணி சமுதாயம்' என்பது கைவிடப்பட்டது.
இந்திய மார்க்சியர்களுக்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். ஏனெனில், நான் உள்பட நம்மில் பலர், ஆசியபாணி சமுதாயம் என்கின்ற மார்க்சின் கருதுகோள்தான் இந்திய சமுதாயத்தையும், அதன் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் என்பதை எங்களது சில எழுத்துக்களுக்கு அடிப்படையாகக் கொண்டிருந்தோம். இந்தியாவிற்கு ஆசிய பாணி சமுதாயம் என்கிற கருதுகோளைப் பிரயோகிப்பது அல்ல பிரச்சனை என்பதையும், இந்தியாவின் வரலாறு, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஸ்து£லமாக ஆராய வேண்டும் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டோம். ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்த்தப்பட்ட கூட்டு விவாதத்தில், இந்திய மார்க்சியர்கள் ரஷ்ய அல்லது சீன அல்லது வேறு எந்த முன்மாதிரியையும் பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், இந்திய மாதிரியை உருவாக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொல்லப்பட்டது. அரசியல் அரங்கிற்காகச் சொல்லப்பட்ட இந்த அறிவுரை இந்திய வரலாறு பற்றிய கல்விசார் ஆய்விற்கும் அதே அளவு பொருந்தும்.
மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்கின்ற மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரின் வரையறுப்பு இந்தியாவிற்குப் பொருந்தாது என்பது போல, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காலம் வரையிலான இந்திய சமுதாயம் மாற்றத்திற்கு உள்ளாகவே இல்லை என்று மார்க்ஸ் கருதியதும் தவறு என்பதை ஹபீப் சுட்டிக் காட்டுகிறார். முகலாயர் காலத்து இந்தியாவின் சமூகப் பொருளாதர, அரசியல் நிலைமைகள் குறித்த தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் நின்று, பண்டைய இந்தியா குறித்த தன்னுடைய சகாக்களின் ஆராய்ச்சிகளைச் சார்ந்து, மிகப் புராதன காலத்திலிருந்தே இந்தியா மாறிக் கொண்டே இருக்கின்றது என்றும், ஒன்றல்லா மற்றொரு வடிவத்தில் வர்க்கப் போராட்டம் மற்ற எந்த நாட்டையும் போலவே இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றது என்றும் ஹபீப் முடிவிற்கு வருகின்றார். 'இந்திய வரலாற்றில் விவசாயி', 'இந்திய வரலாற்றில் சாதி', 'முகலாயர் கால இந்தியாவில் வர்க்கப் போராட்ட வடிவங்கள்' ஆகிய தலைப்புள்ள கட்டுரைகள், அய்ரோப்பிய சமுதாயங்கள் போலவே இந்திய சமுதாயமும் மாறிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.
'பிரிட்டிசாருக்கு முந்தைய இந்தியாவில் நிலச் சொத்துடமையின் சமூக விநியோகம்: ஒரு வரலாற்றுப் பார்வை' மற்றும் 'முகாலய இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான உள்ளுறை ஆற்றல்கள்' என்கின்ற வேறு இரண்டு கட்டுரைகள், சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து முகலாய ஆட்சியின் முடிவு வரை, இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களின் ஸ்து£லமான அடிப்படையை விளக்குகின்றன. இந்தத் தொகுப்பில் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள், இந்திய வரலாற்றை இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய விரும்பும் எவருக்கும் உண்மையிலேயே அறிவொளி ஊட்டக் கூடியதாக இருக்கும்.          
முகலாயப் பேரரசை ஆய்வு செய்த ஹபீப், மதம் மற்றும் இதர தத்துவங்களின் போர்வையில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அளவு வலுவாக இருந்தன என்கின்ற முடிவிற்கு வருகின்றார் என்பதைக் காண்பது சுவாரஸ்யமானது. மா சே துங் நம்மைக் கவனப்படுத்திய சீன வரலாற்றில் நடந்த வர்க்கப் போராட்டங்களையும், முகலாயர் கால இந்தியாவில் நடந்த வர்க்கப் போராட்டங்களையும் அவர் ஒப்பிடுகின்றார். இவை அனைத்தும் இந்திய, சீன, மற்ற ஆசிய சமுதாயங்கள் மாறவே இல்லை என்கின்ற கருத்தை செல்லத்தகாததாக ஆக்குகின்றன. 'பொருளாதாரத்தில் பொதிந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சிக்கான உள்ளுறை ஆற்றல்கள்' என்று ஹபீப் கூறுவது இந்தியாவிலும், சீனாவிலும், மற்ற பல்வேறு ஆசிய நாடுகளிலும் இருந்தன. எனினும், இந்த உள்ளுறை ஆற்றல்கள் நடைமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லை. இதற்கான காரணத்தை கல்வியாளர்களும், அரசியல் பணியாளர்களும் ஆராய வேண்டும். பேராசிரியர் ஹபீப்பும், அவரது சகாக்களும், வரலாற்று அறிஞர்களும் மேலும் ஆய்வுகளை நடத்தி, திட்டவட்டமான முடிவிற்கு வருவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இதற்கிடையே, ஆரியர்களின் படையெடுப்பின் விளைவுகள் மற்றும் உள்நாட்டு இனக்குழுக்களுக்கு எதிராக ஆரியர்கள் நடத்திய போராட்டமும் 'பிரபுத்துவ அதிகாரமும்' (சத்திரியர்கள்), 'புரோகித அதிகாரமும்' (பிராமணர்கள்) தோன்றுவதற்கு இட்டுச் சென்றன என்கின்ற தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயாவின் முறைப்படுத்தலின் பால் நான் கவனத்தை ஈர்க்கிறேன். அரசு அதிகாரத்தின் இந்த இரண்டு வெளிப்பாடுகள் இருப்பிற்கு வந்ததானது ரிக் வேத காலத்திலிருந்து பிரிட்டிசார் இந்தியாவை வெற்றி கொண்ட காலம் வரையிலான இந்திய சமுதாயத்தின் சாராம்சமாகும். 'பிரபுத்துவ அதிகாரம் மற்றும் புரோகித அதிகாரம்' ஆகியவற்றின் இணைப்பு இந்தியாவில் அரசு அதிகாரத்தின் ஸ்து£லமான வடிவமாக இருந்தது; அதற்கு எதிராக சாமான்ய மக்கள் போராட வேண்டியிருந்தது; நாட்டை பிரிட்டிசார் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வரும்வரை மக்கள் போராடினார்கள். 1947ம் ஆண்டு கேரள வரலாறு பற்றி நான் எழுதிய நு£லில் பிரிட்டிசாருக்கு முந்தைய சமுதாயத்தை வர்ணிக்க நான் 'நிலப்பிரபுத்துவம்' என்கிற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பது இவ்விஷயத்தில் கவனிக்கத்தக்கதாகும்; ஏனெனில், கேரள சமுதாயத்தின் நிலைமையை வர்ணிக்க அது பொருத்தமான சொல்லாகத் தெரியவில்லை. ஆதலால், 'உயர்சாதிகள், நிலப்பிரபுக்கள், மன்னர்கள் மற்றும் உள்ளுர் நாட்டாண்மைக்காரர்களின் ஆதிக்கம்' என்கிற சொற்றொடரைப் பயன்படுத்தினேன். ஒடுக்குபவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டம், சாதியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக தேசியவாதிகள் நடத்திய அரசியல் போராட்டம் ஆகியவற்றை விடுதலைப் போராட்டத்தின்போது சாதீய சக்திகளையும், மதவாத சக்திகளையும் விரிவாகத் திரட்டியதன் மூலம் பிரிட்டிசார் எதிர்கொண்டனர். இன்று நமது முதலாளித்தவ ஆட்சியாளர்களால் அதே தந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. ஆதலால், சாதி எதிர்ப்பு மற்றும் வகுப்புவாத எதிர்ப்புப் பதாகையை பாட்டாளி வர்க்கம் கையிலெடுக்கவில்லை என்றால், இந்தியாவில் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி அடைய முடியாது என்பது கண்கூடு.
முகலாயப் பேரரசு காலத்தில், புரட்சியை நிறைவேற்றத் தேவையான சக்தியான நவீன பாட்டாளி வர்க்கம் இருக்கவில்லை. ஆதலால்தான், மதச்சார்பற்ற ஜனநாயகம் மலராமலேயே முகலாயப் பேரரசு அழிந்து போனது. விடுதலைப் போராட்டத்தின்போது கூட, மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு முயற்சி செய்யத் தேவையான அளவிற்கு பலம் படைத்ததாக நவீன பாட்டாளி வர்க்கம் இருக்கவில்லை. ஆதலால்தான் இந்திய ஆளும் வர்க்கங்களால் நாட்டை மதரீதியாகப் பிரிப்பது என்கின்ற அடிப்படையில் பிரிட்டிசாருடன் ஒரு சமரசத்திற்கு வரமுடிந்தது.
வரலாற்றில் இந்திய மக்கள் நடத்திய வர்க்கப் போராட்ட வடிவங்களில் ஒன்று, முதலில் இந்து மதத்திலிருந்து பவுத்தத்திற்கும், சமணத்திற்கும், பின்னர் இஸ்லாமிற்கும், கிறித்துவத்திற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறியதாகும். பவுத்த, சமண மதங்களின் எழுச்சியானது ஒடுக்கப்பட்ட சாதிகள் நடத்திய வர்க்கப் போராட்டத்தின் ஒரு வடிவம் என்றும், வேதாந்த தத்துவத்தின் ஆதரவாளர்களால் பவுத்தத்திற்கும் சமணத்திற்கும் ஏற்பட்ட தோல்வியானது, மேல்சாதிகள் தங்களது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தோற்கடித்ததாகும் என்றும் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா சுட்டிக் காட்டும்போது இதை (மதமாற்றம்-ஒரு வர்க்கப் போராட்ட வடிவம்) ஒரு ஆரம்ப கட்ட கருத்தாகக் குறிப்பிடுகின்றார்.
முகலாய ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் எப்படிப் போராடினார்கள் என்பதற்கு பேராசிரியர் ஹபீப் ஏராளமான உதாரணங்களைக் கொடுக்கின்றார். புதிய மதப்பிரிவுகளின் உருவாக்கமும், முகலாயர்களின் அரசியல் எதிரிகளாக மராத்தியர்களின் தோற்றமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். முகலாயப் பேரரசில் வர்ககப் போராட்டம் பற்றிய ஒரு விவரணை என்கிற வகையில் இது போதுமானதே என்றபோதும், இந்த சக்திகள் வகித்த பாத்திரத்தை மட்டும் விவரிப்பது போதுமானதல்ல எனத் தோன்றுகின்றது. முகலாயப் பேரரசின் அழிவு ஒரு ஜனநாயக ஆட்சி நிறுவப்படுவதற்கு இட்டுச் செல்வதைத் தடுத்தது இது இல்லையா? வர்க்கப் போராட்டத்தின் அனைத்து வடிவங்கள் பற்றியும், வெளிப்பாடுகள் பற்றியும்-பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்த-ஆசிரியர் விரிவாக ஆராய்ந்திருந்திருக்க வேண்டும் என்பது என் அவா.
இது எளிதல்லதான். இதை எந்த ஒரு அறிஞராலும் தனியாகச் செய்ய முடியாது; இந்திய சமுதாய வளர்ச்சியின் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் எண்ணற்ற அறிஞர்களின் கூட்டு முயற்சி இதற்குத் தேவைப்படுகின்றது. பேராசியர் ஹபீப் வரலாற்றின் எந்த அம்சத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றரோ அது தவிர்த்த வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் அவருக்கு உதவியிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால், இந்தத் தொகுப்பில் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுரைகளைவிடவும் இந்திய வரலாற்றில் வர்க்கப் போராட்டங்கள் பற்றிய ஒரு இணைக்கப்பட்ட வரலாற்றை மிக முழுமையான வகையில் உருவாக்குவதற்கு அது உதவியிருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் சேகரிக்கப்பட்டுள்ள பேராசியர் ஹபீப்பின் கட்டுரைகள் காட்டுகின்றன. இத்திசை வழியில் பேராசிரியர் ஹபீப் முன்முயற்சி எடுப்பார் என்று நம்புகின்றேன்.
இந்தப் பின்னணியில், பேராசிரியர் ஹபீப்பின் ஆய்விலும், அவர் சார்ந்திருந்த மற்ற அறிஞர்களின் ஆய்வுகளிலும் உள்ள ஒரு குறையை நான் சுட்டிக் காட்ட வேண்டும். அவை பொதுவாக ஆர்யவர்த்தம் எனப்படும் வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் இந்திய வரலாற்றின் வளர்ச்சி பற்றி மட்டுமே தங்களை சுருக்கிக் கொண்டுள்ளன. இந்திய வரலாற்றின் வளர்ச்சிக்கு இந்தப் பகுதி முக்கியமானது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை; ஏனெனில், சிந்து சமவெளி நாகரீகம் இங்குதான் நிலவியது; அதைத் தொடர்ந்து ஆரியர்கள் இந்தியாவை வென்றதையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் ஆட்சியாளர்களின் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் இப்பகுதி கண்டுள்ளது. என்றாலும், ஆரியவர்த்த எல்லைக்கு வெளியே பெரும் பகுதிகள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவின் நான்கு முக்கிய தேசிய இனங்களும் (கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்) தங்களுடையதே ஆன வரலாற்றை உடையவை; தங்களுக்கே உரித்தான அம்சங்களைக் கொண்ட சமூகப் பொருளாதார அமைப்பையும், அரசியல் அமைப்பையும், கலாச்சார முகத்தோற்றத்தையும், இன்னபிறவற்றையும் கொண்டவை. ஆர்யவர்த்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் செல்வாக்கிற்கு இந்த நான்கு தேசிய இனங்களுமே ஆட்பட்டன என்பது உண்மைதான் என்றபோதும், ஆரியவர்த்தத்தின் சமூகக் கலாச்சார, அரசியல் கூறுகளை அவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய வகையில் உள்வாங்கிக் கொண்டன. ஆதலால், ஆரியவர்த்தத்தின் பொதுவான அம்சங்களையும், அந்த ஒவ்வொரு தேசிய இனத்தின் தனிப்பட்ட அம்சங்களையும் முறையாக சீர்து£க்கிப் பார்ப்பது அவசியமாகும்.
உதாரணத்திற்கு, கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது வட இந்தியாவின், வேதக் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தாலும், சமண மற்றும் பவுத்த மதங்களாலும் வலுவான செல்வாக்கிற்கு ஆட்பட்டது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் கேரளா, ஒரு பக்கம் வேதக் கலாச்சாரத்திற்கும், மறுபக்கம் சமண, பவுத்தக் கலாச்சாரங்களுக்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக நடந்த யுத்த பூமியாகும். கேரள வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் பல குறிப்பான அம்சங்கள் தத்துவார்த்தப் போராட்டத்திலிருந்தே தோன்றியது போல் எனக்குத் தோன்றுகின்றது. என்றாலும், துரதிருஷ்டவசமாக அறிஞர்கள் இந்த மோதல்களுக்குப் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை. இருந்தாலும், இன்றைய ஹிந்துக் கோவில்களில் பல ஒரு காலத்தில் சமண அல்லது பவுத்த விஹாரங்களாக இருந்தன என்பதற்குப் போதுமான அளவு உண்மைத் தரவுகள் இருக்கின்றன. வேத கலாச்சாரத்திற்கும், சமண, பவுத்தக் கலாச்சாரங்களுக்கும் இடையில் உக்கிரமான யுத்தம் நடந்துள்ளது போல் தெரிகின்றது. இன்றைய உயர்சாதி, தாழ்ந்த சாதியினரில் பெரும்பாலோர் அநேகமாக அந்த உக்கிரமான யுத்தத்தில் வென்றவர்கள் மற்றும் தோற்றவர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம்; வென்றவர்கள் இன்றைய உயர்சாதிகளாகவும், தோற்றவர்கள் தாழ்ந்த சாதிகளாகவும் ஆக்கப்பட்டுவிட்டனர். ஆம், இது என்னைப் போன்ற அறிஞரல்லாத கேரள வரலாற்று மாணவரால் முன்வைக்கப்படும் ஒரு அனுமானம்தான். ஆனால், இது உண்மை எனில், பண்டைக்கால மற்றும் மத்திய கால கேரளாவில் நடந்த வர்க்கப் போராட்டங்கள் குறித்த பிரச்சனை ஒரு புதிய வெளிச்சத்தில் காணப்படும்.
ஹபீப்பின் நு£லில் மற்றொரு முக்கியமான குறை இருக்கின்றது. அவரது நு£ல் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் தோற்றத்துடன் முடிவடைகின்றது. காலனியாதிக்கத்தின்போதும், விடுதலைப் போராட்டத்தின்போதும் நடந்த மிக முக்கியமான வர்க்கப் போராட்டங்களின் போக்கில் சுயேச்சையான சக்திகளாக முதலாளித்துவ மற்றும் தொழிலாளி வர்க்கங்கள் புதிய எதிரெதிர் வர்க்கங்களாக எழுந்தது பற்றி அந்நு£ல் ஆராயவில்லை.
புனருத்தாரண போக்கு துவங்கியதன் விளைவாக, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் பற்றி மார்க்ஸ் தன்னுடைய 1853ம் ஆண்டு எழுத்துக்களில் கவனப்படுத்தியிருக்கிறார் என்பது நினைவிருக்கும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கல்விக் கூடங்களில் நவீன கலை மற்றும் அறிவியல் பயின்ற, சுதந்திர ஊடகம் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் அப்போதுதான் பிறந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அணிகளாக ஆகினர். தொழிலாளி வர்க்கத்தின் தோற்றத்தை அவர் இதுவரை காணவில்லை என்றபோதிலும், இந்தப் போக்கு தொடரும் என்பதை மார்க்ஸ் மனங்கண்டார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு லெனினிடம் அந்தப் பணி விடப்பட்டது; தொ£ளி வர்க்கம் தன்னை உருவாக்கிக் கொண்டுவிட்டது என்பதை மட்டுமின்றி, லோகமான்ய திலகர் போன்ற ஜனாநயகத் தலைவருக்கு ஆதரவாக செயலிலும் இறங்கிவிட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த இரண்டு வர்க்கங்களின் தோற்றம், அவற்றுக்கிடையிலான மோதல்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவற்றின் ஒற்றுமை ஆகிய விஷயங்கள் ஹபீப் நு£லின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாளிகளின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்து வர்க்கத்தினரையும் கொண்ட, ஆனால் மேலும் மேலும் தொழிலாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டதாக ஆகும் தேசிய இயக்கம் மார்க்சிய முன்னணியின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போக்கு எப்படி முன்னேறியது, விடுதலைப் போராட்டத்தின் கண்ணோட்டத்தில் இந்த இரண்டு வர்க்கங்களும் எப்படி முரண்பட்டன என்பது இந்தக் கட்டுரைகளில் விளக்கப்படவில்லை; ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் வளர்ந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாளி வர்க்கம் எப்படி ஆக்கபூர்வமான பாத்திரம் வகித்தது ஆகியவை பற்றிய ஒரு பொதுவான குறிப்பைத் தவிர.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்துடன் இணைந்திருக்கின்ற அதே வேளையில், முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடவும் செய்கின்ற கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த ஒற்றுமை-போராட்டம் முறை எப்படி வளர்ந்தது, முதலாளித்துவ வர்க்கம் எப்படி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பதாகையைத் து£க்கி எறிந்தது, அரசியல் அதிகார கைமாற்ற விஷயத்தில் பிரிட்டிசாருடன் முதலாளி வர்க்கம் எப்படி சமரசம் செய்து கொண்டது, அந்தப் போக்கில் முதலாளித்துவ வர்க்கம் எப்படி இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்கின்ற முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது, விடுதலைக்குப் பிந்தைய பல பத்தாண்டுகளில் தொழிலாளி வர்க்கம் எப்படி முதலாளி வர்க்கத்திடமிருந்து தன்னைத் தனியே பிரித்துக் கொண்டு, அதற்கு எதிராகப் போராடியது என்பன போன்றவை இந்நு£லில் ஆராயப்படவில்லை.
இந்தப் போக்கு இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்திய முதலாளி வர்க்கத்தின் இன்றைய தலைமை, 1950களில் மேற்கொள்ளப்பட்ட நேரு பாதையில் இடம் பெற்றிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டக் கொள்கைகள் சிலவற்றை இப்போது கைவிட்டுவிட்டது. இதனிடத்தில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை (அரசியல் தளத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதனையொத்த அரசாங்கங்களுடன்) வந்துவிட்டது. அது இந்தியாவை உலக முதலாளித்துவத்தின் துணைக்கிரகமாக ஆக்குகின்ற அளவிற்குச் சென்றுவிட்டது.
என்றாலும், நாம் அஞ்சுகின்ற அளவு நிலைமை மோசமாக இல்லை. ஏனெனில், நரசிம்மராவ் அரசாங்கம் கைகொண்டுள்ள பாதைக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்றது. இந்த எதிர்ப்பியக்கத்தில் தொழிலாளி-விவசாயி வர்க்கமக்கள் தீர்மானகரமான பாத்திரம் வகித்து வருகின்றனர். உண்மையில், இதுதான் இன்றைய தேசிய அரசியல் நிலைமையின் சாரம்.
பேராசிரியர் ஹபீப் மற்ற மார்க்சிய வரலாற்று அறிஞர்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றை வளர்த்தெடுப்பார் என்று நான் நம்புகின்றேன். 
----------------------------------------------(வரலா று,சமூகம், நிலஉறவுகள் -இ எம் எஸ் நம்பூதிரிபாட், பாரதி புத்தகாலயம்  .

      



Wednesday, March 9, 2011

‘இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது’ -







    அசோகன் முத்துசாமி

அலைக்கற்றை ஊழலில் நடந்தது தனக்கு எதுவுமே தெரியாது என்றார். எல்லாம் அமைச்சர் ராசா செய்த வேலை,ராசாவை மந்திரியாக்கியது கூட்டணி நிர்ப்பந்தம், என்ன செய்வது என்று கைவிரித்தார்.
அடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சம்பந்தப்பட்ட எஸ்-பேன்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெறவிருந்த ஊழல். பல லட்சம் கோடி ரூபாய் பெறுமான அலைகற்றைகளை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்க ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதுவும் தனக்குத் தெரியாது என்றார். அந்த ஒப்பந்தத்திற்கு 2005ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் இல்லாத அமைச்சரவைக் கூட்டம் ஏதாவது நடந்ததா என்ன?  நடக்குமா என்ன?
இப்போது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இன்னும் வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை நியமித்ததற்காக மத்திய அரசை நீதிமன்றம் கண்டித்தும் உள்ளது. அவரை நியமனம் செய்த குழுவின் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங் (உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மற்ற இரண்டு உறுப்பினர்கள்).
ஒரு ஊழல்வாதியை ஊழல் தடுப்பு ஆணையராக எப்படி நியமித்தீர்கள் என்று கேட்டால் அவர் மீது வழக்கு இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். அந்தக் குழுவின் உறுப்பினராக இருந்த சுஷ்மா சுவராஜ் தாமச் மீது வழக்கு இருப்பது பற்றி சொல்லியிருக்கின்றார். அதையும் மீறி நியமித்து விட்டு இப்போது கேட்டால் என்ன சொல்கிறார், தனக்கு தெரியாது. அமைச்சர் பிருதிவிராஜ் சவுகான் தனக்குக் கொடுத்த குறிப்பில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மீது பழி போடுகின்றார். சுவராஜ் சொல்லியிருக்கின்றாரே என்று கேட்டால் தாமஸ் கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர். மத்திய தொலை தொடர்புத் துறையின் செயலாளராக இருந்திருக்கிறார். ஆதலால் அவர் மீது ஊழல் வழக்கு எதுவும் நிலுவையில் இருக்காது என்று நினைத்தேன் என்கிறார். அதாவது இத்தகைய பதவிகளுக்கு ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் மீது வழக்கு எதுவும் இருக்கவில்லை என்றால்தான் நியமிப்பார்கள். நினைத்தாராம். மாட்டிக் கொண்ட திருடர்கள் இப்படித்தான் பதில் சொல்வார்கள் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகளுக்கும், ஏன் சாமான்ய மக்களுக்கும் கூடத் தெரியும்.
கடைசியாக தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இந்தப் பதிலும் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் கூட வரவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்ட பின்னர்தான் வருகின்றது. அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே இடதுசாரிகளும், பாஜக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்போதெல்லாம் தாமஸை நியமித்தது சரிதான் என்று சாதித்தார். அவரது கட்சியும் சாதித்தது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றார்கள். தாமசுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் அதை ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர். இப்போது திருவாளர் பரிசுத்தம் முழுப் பொறுப்பேற்கிறாராம். ஒரு வேளை யாரும் நீதிமன்றத்திற்கே போகாமல் இருந்திருந்தால், யாரும் கேள்வியே எழுப்பாமல் இருந்திருந்தால் பாமாயில் ஊழல் வழக்கில் குற்றவாளியான தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராகத் தொடர்ந்திருப்பார். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்த நேரத்தில் தொலைதொடர்புத் துறையின் செயலாளராக இருந்தவரை, ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமித்தால், அவர் ஊழலைத் தடுப்பாரா என்ன? குற்றம் செய்தவர்களைக் கூண்டில் நிறுத்துவாரா என்ன?    
ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் என்று சொல்லிக் கொண்டே போய் புதிய புதிய உண்மைகளைக் கக்குகின்றார். 1992ல் தொடரப்பட்ட ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்வோம். அவர் எப்படி கேரள மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்? அவர் எப்படி தொலைதொடர்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்?
மன்மோகனைப் பொறுத்த வரையில் தாமஸ் விஷயத்தில் இரண்டு முறை குற்றம் செய்திருக்கின்றார். தன்னுடைய அமைச்சரவையின் ஒரு துறைக்கு அவரை செயலாளராக நியமித்திருக்கின்றார். பின்னர் மீண்டும் அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்திருக்கின்றார்.
கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களுக்கு அளித்த பேட்டியில் தான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் பதவியிலிருந்து விலகும் எண்ணமே தனக்கு வந்ததில்லை என்றார் மன்மோகன். அவை இப்படிப்பட்ட வேலைகள்தானோ என்னவோ? தன்னை இந்த ஊர் இன்னும் நம்புவதாக அவர் உறுதியாக நம்புகின்றார்.  ‘இன்னுமா நம்மள இந்த ஊர் நம்புது’ என்று அவராகவே கேட்டாலும் நம் ஊடக மேதாவிகள் அவரை திருவாளர் பரிசுத்தம் என்று இட்டுக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.

Tuesday, March 8, 2011

ஆதிசங்கரரும் அவரது தத்துவமும்-ஒரு மார்க்சியப் பார்வை


இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

தமிழில்: அசோகன் முத்துசாமி




1989ம் ஆண்டு ஆதிசங்கரரின் 1200வது ஆண்டாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அது கொண்டாடப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது சொந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றது. அந்த மாபெரும் துறவியின் பிறந்த ஊரான காலடியில் கேரளா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை கேரளாவின் பிரசித்தி பெற்ற மகனான அவருடைய போதனைகளின் சில அம்சங்கள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
மார்க்சிய தத்துவவாதிகளும், அறிவுஜீவிகளும், அரசியல் பணியாற்றுபவர்களும் அக்கருத்தரங்கில் பங்கேற்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்குச் செய்யும் துரோகமாக ஆகாதா?

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்


கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் இரு நேரெதிர் துருவங்கள் என்றும், அவை எங்கும், எப்போதும் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் இக்கேள்வி பாவித்துக் கொள்கின்றது. யதார்த்த வாழ்விலும், மனிதனின் சிந்தனையிலும் உள்ள மற்ற எதிரிடைகளைப் போல, கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளும், மீமெய்யில் (னீமீtணீஜீலீஹ்sவீநீs) ரீதியாக அல்லாமல், இயக்கவியல் ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதைக் கவனிக்கத் தவறுகின்றது. கருத்துமுதல்வாதமோ அல்லது பொருள்முதல்வாதமோ அசையாமல் ஒரே இடத்தில் இருப்பவை அல்ல; இரண்டுமே எப்போதும் ஒன்றையொன்று மறுத்தவண்ணம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன; இரண்டுக்கும் இடையில் புதுப்புது வடிவங்களில் நிகழும் போராட்டம் மனிதசிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆதலால், பொருள்முதல்வாதம் தன்னளவிலேயே கருத்துமுதல்வாதத்தை விட மேலானது அல்லது கருத்துமுதல்வாதம் தன்னளவிலேயே கீழானது என்கின்ற கேள்விக்கே இடமில்லை. லெனின் தன்னுடைய தத்துவார்த்தக் குறிப்பேடுகளில் பின்வருமாறு கூறுகின்றார்:
"பண்படாத, எளிமையான, மீமெய்யியல் நோக்கிலிருந்து தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது வெறும் அபத்தம் மட்டுமே. மறுபுறமோ, இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கிலிருந்து பார்த்தால், தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது ஞானத்தின் பல பரிமாணங்களில் ஒன்றின், அம்சங்களில் ஒன்றின், பக்கங்களில் ஒன்றின் ஒரு சார்பான அதீத வளர்ச்சியாகும் (வீக்கம், நீட்டம்); அது முழுமுற்றான உண்மையாக, பொருளிலிருந்தும் இயற்கையிலிருந்தும் பிரிக்கப்பட்டு, அனைத்துக்கும் மேலானதாக ஆக்கப்படும் அதீத வளர்ச்சியாகும். கருத்துமுதல்வாதம் என்பது மதகுருமார்களின் இருண்மைவாதம் என்பது உண்மைதான். ஆனால் தத்துவார்த்த கருத்துமுதல்வாதம் என்பது ('மிகச்சரியாக' மற்றும் 'அத்துடன்') எல்லயைற்ற சிக்கல் நிறைந்த ஞானத்தின் (மனிதனின் இயங்கியல்) ஒரு பரிமாணத்தின் மூலமாக மதகுருமார்களின் இருண்மைவாதத்திற்குச் செல்லும் பாதையாகும்."1
வரலாற்றின் மகத்தான தத்துவார்த்த கருத்துமுதல்வாதியான ஹெகலின் சீடர்களான மார்க்சையும், ஏங்கெல்சையும் போல, மனித அறிவிற்கு கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள கொடையை லெனின் மிக உயர்வாக மதித்தார். பல நு£ற்றாண்டுகளாக பரஸ்பர மோதலில் வளர்ந்த கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் அடுத்தடுத்து ஒன்றையொன்று மறுத்தவண்ணம் புதுப்புது வடிவங்களைப் பெற்றன; 19ம் நு£ற்றாண்டில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தோற்றத்தில் உச்சநிலையை அடைந்தன. திறன்மிக்க இளம் ஹெகலியவாதிகள் என்று அறியப்பட்ட மார்க்சும் ஏங்கெல்சும் நடப்பில் இருந்த பொருள்முதல்வாதத் தத்துவத்தின் சிறந்தவற்றை எல்லாம் உட்கிரகித்துக் கொண்டே ஹெகலிய இயக்கவியலை செழுமைப்படுத்தினர். ஆதலால், இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது ஹெகலிய கருத்துமுதல்வாதம் மற்றும் பாயர்பாக்கிய பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டின் மறுப்பாகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவத்தை லெனின் மேலும் செழுமைப்படுத்தினார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சித் தத்துவம்

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் புரட்சிகர நடவடிக்கைக்கான தத்துவமாகும். 'தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகைகளில் விளக்கியுள்ளார்கள். ஆனால், உலகை மாற்றுவதுதான் விஷயம்' என்றார் மார்க்ஸ். என்றபோதும், அவர்களது தத்துவம் ஏதேனும் ஒரு புரட்சியின் தத்துவமல்ல; பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தத்துவமாகும். 'தத்துவம் தன்னுடைய பொருண்மையான ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மீக ஆயுதத்தை தத்துவத்தில் காண்கின்றது' என்று 'ஹெகலின் வலதுசாரி தத்துவ விமரிசனத்திற்கு ஒரு பங்களிப்பு' என்கின்ற நு£லில் மார்க்ஸ் கூறுகின்றார்.
இயக்கவியல் பொருள்முதல்வாதமான மார்க்சிய-லெனினயம் இந்திய கருத்துமுதல்வாத தத்துவத்தின் உச்சமான சங்கரரின் தத்துவத்திற்கு எதிரானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும், இந்திய சிந்தனையின் வளர்ச்சியில் அந்த தத்துவத்தின் தோற்றம் ஒரு முக்கியமான கட்டம் என்பதை மார்க்சியர் எவராலும் பார்க்காமல் இருக்க முடியாது. அது போல், அது தன் பங்கிற்கு இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியுடன் முற்றிலும் தொடர்புடையதாக இருந்தது. 'பொருளுற்பத்தியில் ஏற்படும்  மாற்றத்திற்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள் அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துக்களாகவே எப்போதுமே இருந்திருக்கின்றன' என்று மார்க்சும், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சுட்டிக் காட்டினார்கள்.
ஆதலால், ஆதிசங்கரரின் தத்துவத்தை விமரிசிக்க வேண்டுமானால் இந்திய சமுதாயம் பற்றியும், இந்திய சிந்தனை பற்றியும் ஒரு பார்வை பார்க்க வேண்டும். ஏனெனில், மற்ற எந்த இந்திய தத்துவஞானியையும் போல சங்கரரும் இந்திய சமுதாயத்தின் உற்பத்தியாவார். அவரது சிந்தனைகள் அவரது காலத்தில் இருந்த சிந்தனை மேலும் பெற்ற வளர்ச்சியாகும். தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடி எனும் கிராமத்தில் பிறந்தபோதும், மிக உயர்ந்த இந்திய அறிஞர் என்கிற பெயரையும், புகழையும் பெற்றார்; இந்திய கருத்துமுதல்வாதத் தத்துவத்தில் சிறந்தவற்றை முன்னெடுத்துச் சென்றார். அவரது வாழ்வையும், சிந்தனையையும் மொத்த இந்தியாவே வடிவமைத்தது; கேரளா மட்டுமல்ல.

வர்க்கப் போராட்டம்

அப்படியானால் இந்திய சமுதாயம் என்பது என்ன? சமுதாயமும் சிந்தனையும் இங்கு எப்படி வளர்கின்றது?
'இதுவரையிலான ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே' என்று மார்க்சும் ஏங்கெல்சும் கூறுகின்றனர் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை). கட்சி அறிக்கை அய்ரோப்பா பற்றிக் கூறுவது போல இது இந்தியாவிற்கும் பொருந்தும்.
எனினும், இந்தியாவில் வர்க்கப் போராட்டம் (அய்ரோப்பியாவில் போல) 'சுதந்திரமுடையான்-அடிமை, உயர்குலச் சீமான்-பாமரக் குடியோன், நிலப்பிரபு-பண்ணையடிமை, கைவினைச் சங்க ஆண்டான்-கைவினைப் பணியாளன், இத்யாதி' ஆகியோருக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் போல் வளரவில்லை. நான்கு வர்ணங்களில் முதல் இரண்டு வர்ணங்களான பிராமணர்-சத்திரியருக்கும், கடைசி இரண்டு வர்ணங்களான வைஸ்யர்-சூத்திரருக்கும் இடையில் தான் பண்டைய இந்திய சமுதாயத்தில் முதல் பிரிவினை தோன்றியது. யுத்தம் செய்வோர் பிரிவு மற்றும் நிஜப்போரில் வெற்றி பெறுவதற்கு சண்டையிடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமான சடங்குகளைச் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பிரிவு ஆகியவை தோன்றியதிலிருந்து இதன் துவக்கத்தைக் காணமுடியும்.
முன்னேறிக் கொண்டிருந்த ஆரியர்கள் தங்களது எதிரிகளை வெற்றி கொள்வதற்கு இந்த முதல் இரண்டு பிரிவினரின் சேவைகள் அத்தியாவசியமாக இருந்தன; அவர்கள் முதலில் தங்களை எஞ்சியிருந்த மக்களைவிட உயர்வாக, இருபிறப்பாளர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். பின்னர் அந்த எஞ்சியிருந்த மக்கள் வைஸ்யர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் மேலும் பிரிக்கப்பட்டனர். காலப்போக்கில், இந்த நான்கு வர்ணங்களும் எண்ணற்ற சாதிகளாகவும், உப சாதிகளாகவும் பல்கிப் பெருகின; அவை எல்லாவற்றிற்கும் உச்சத்தில் இருபிறப்பாளர்கள், குறிப்பாக பிராமணர்கள், இருந்தனர்.
ஆதலால், இயற்கையாகவே பிராமண, சத்திரிய வர்ணங்கள் இந்திய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பெரும்பாலும் அவர்கள் அறிவு, கலை, அறிவியல், தத்துவம் மற்றும் இதர வகை ஆன்மீகச் செல்வங்களை உற்பத்தி செய்தனர்; சமுதாயத்தின் எஞ்சியிருந்த பகுதி பொருட்செல்வத்தை உற்பத்தி செய்தது. இவ்வாறாக, சமுதாயத்தில் ஏற்பட்ட ஒடுக்குவோர் மற்றும் ஒடுக்கப்படுவோர் என்கின்ற பிரிவினை மூளை உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான பிரிவினை தொடர்புடையது. ஆன்மீக வாழ்க்கைக்கும், இகலோக வாழ்க்கைக்கும் இடையிலான பிரிவினை. அறிவுசார் வாழ்க்கை மற்றும் பௌதீக வாழ்க்கை ஆகியவற்றின் முழுமையாக இந்த இரண்டு எதிரிடைகளுக்கு இடையிலான இயக்வியல் ரீதியான உறவு அமைந்திருக்கின்றது.

தத்துவத்தின் வேர்கள்

இந்திய வரலாற்றில் கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளின் தோற்றத்தை இந்தப் பகுதி விளக்குகின்றது. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா பின்வருமாறு கூறுகின்றார்:
"வாழ்க்கையை நிந்தித்து, நிராகரித்த தத்துவார்த்தக் கண்ணோட்டம் வாழ்க்கையிலிருந்தே விலகிச் சென்ற தத்துவத் தேடலின் விளைவாக மட்டுமே இருக்க முடியும். கிரேக்கத்தில் அடிமைமுறையின் வளர்ச்சியுடன், அதுபோல் உபநிஷ காலத்து இந்தியாவிலும், சேர்ந்தே இடையறாது மாறிக் கொண்டிருக்கும் பொருள் உலகின் மீதான வெறுப்பு என்கின்ற 'உன்னதக்' கோட்பாடு 'து£ய அறிவு' என்கின்ற வெளிக்குள் தத்துவார்த்த விசாரணை தடையின்றிச் சென்றதன் விளைவாகும். அதாவது, மற்றவர்களால் உற்பத்தி செய்யப்படும் உபரியைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த பிரிவினர் நேரடி உடலுழைப்பிலிருந்து விலகிக் கொள்ளும்போது மட்டுமே உண்டாகும் அறிவு. நேரடி உடலுழைப்பிலிருந்து விலகிக் கொண்டதன் மூலம் பொருள் உலக யதார்த்தத்திலிருந்தும் அவர்கள் விலகிக் கொண்டனர். ஏனெனில், உழைப்பால் மட்டுமே அறிவுணர்வின் (நீஷீஸீsநீவீஷீus tலீமீஷீக்ஷீஹ்) மீது ஒரு வகையான புறவகை நிர்ப்பந்தத்தைச் செலுத்தமுடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவம் நடைமுறையிலிருந்து பிரிக்கப்பட்டு து£ய தத்துவமாக்கப்பட்டுவிட்டது. சிந்திக்கப்பட்ட விஷயங்கள் வெறும் கருத்துக்களாக ஆகிவிடுகின்றன. அவ்வறாக, அறிந்தவர் அறியப்பட்டதன் தடைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறார்; மற்றும் பிந்தையதை அறியாமையின் அல்லது கல்வின்மையின் விளைபொருளாக மட்டுமே பார்க்கின்றார்.2
 ஆதிசங்கரரின் தத்துவம் அத்வைத வேதாந்தமாகும்; இந்த இந்திய கருத்துமுதல்வாதத் தத்துவத்தை மிகச்சிறப்பாக விளக்கிக் கூறுபவராரக இருந்தார். (பிரம்மத்தைத் தவிர மற்ற அனைத்தையும்) கடவுளையும் கூட மறுக்கின்ற வகையில் பொருள்படும் அளவிற்கு அவர் பிரம்மம் பற்றிய தன்னுடைய போதனைகளை வளர்த்தார். இதற்காக அவர் மாறுவேடத்தில் இருக்கும் புத்தர் (பிரச்சன்ன புத்தர்) என்று அவரது எதிரிகளால் கண்டனம் செய்யப்பட்டார். இப்படிப் பட்டம் சூட்டப்படுவதே புத்தரின் போதனைகளுக்கும் பிராமண ஆதிக்கத்திற்கும், கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான மோதல் எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதையும், இரு தரப்பும் இந்திய தத்துவத்தில் எவ்வளவு து£ரம் சென்றிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றது. உபநிஷ கருத்துமுதல்வாதத்தின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்டதற்கு எதிராக சங்கரர் சக்திமிக்க போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியபோதும், பிராமணியத்திற்கு பெரும் சவால் விட்ட அந்த தத்துவார்த்தப் போக்கிற்கு (பவுத்தம்) சலுகைகள் வழங்கியதாகக் கண்டிக்கப்பட்டார். என்றாலும், பவுத்த தத்துவார்த்தப் போக்கை தோற்கடித்த அவரது புலமைக்காக அன்றும் இன்றும் போற்றப்படுகின்றார்.
பண்டைய இந்தியாவின் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் வேர்களைக் கண்டுபிடித்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா இந்திய தத்துவத்தில் பொருள்முதல்வாதம் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார். 'பண்டைய இந்தியாவில் அறிவியல்' என்கிற அவரது புகழ்பெற்ற நு£லில், 'சாரக்க சம்ஹிதை' மற்றும் 'சுஸ்ருத சம்ஹிதை' என்கின்ற இந்திய மருத்துவம் குறித்த இரு செவ்வியல் நு£ல்களை ஆராய்கிறார். மனித உடல் தொடர்பான பிரச்சனைகளை, அதன் நோய்களை, அதற்கான நிவாரணங்களை விளக்கும்போதும், மனித வாழ்வின் பொருண்மையான அம்சங்களை விளக்கும்போதும் அந்த நு£ல்களின் ஆசிரியர்கள் ஆன்மா என்பதை இம்மியளவும் காணவில்லை. இதைச் செய்தபின்னர், நோயுற்ற உடலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கடவுளை வணங்குவதன் மூலம் அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கருத்தியலுக்கு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

அறிவியலும் பொருள்முதல்வாதமும்

மருத்துவ விஞ்ஞானம் போலவே மற்ற விஞ்ஞானங்களுக்கும் இது பொருந்தும். கைவினைஞர்களும், இதர ஏதேனும் ஒரு நடைமுறைச் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் மக்களும் தங்களது பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, நிகழ்வுகளைக் கையாளும்போது பொருள்முதல்வாதிகளாகவே இருக்கின்றனர். ஆனால், சமூக வாழ்வின் பொதுப் பிரச்சனைகள் என்று வந்தால், ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த கருத்தியலின் ஆதரவாளர்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர்; மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய தத்துவம், ஆன்மா, மோட்சம் என பேச ஆரம்பித்துவிடுகின்றனர். திறன்மிக்க கைவினைஞர்கள், மருத்துவம் போன்ற தொழில் செய்பவர்களிடமிருந்தே முற்றிலும் வேறான பொருள்முதல்வாதத் தத்துவம் தோன்றியது. இந்தப் போக்கைப் பின்பற்றியவர்கள் தங்களது கலை அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விளக்கும்போது பொருள்முதல்வாதிகளாக இருந்தனர். ஆனால், ஆளும் வர்க்கம்-வர்ணம்-சாதியின் கருத்தியலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்கின்ற வகையில், சாராம்சத்தில் கருத்துமுதல்வாதமாக அந்தக் கருத்தியல் இருந்ததனால், அவர்கள் கருத்துமுதல்வாதத்திற்கு தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
சட்டோபாத்யாயாவின் கருத்துப்படி பொருள்முதல்வாதத்திற்கு மிக நெருக்கமாக இருந்த நியாயவைசேஷிகர்கள் போன்ற பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகள் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது; அவர்கள் வேதங்களின் மேன்மையை முழுமையாக ஏற்றுக் கொண்டனர், ஆன்மாவை நிரூபிக்கவும், மரணத்திற்கு பின்னரும் அது இருப்பதை நிரூபிக்கவும் அவர்கள் விரிவாக விவாதித்தனர். என்றாலும், 'இவற்றையெல்லாம் மனப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கு நியாய வைசேஷிக இலக்கியத்தில் போதுமான அளவு மதிநுட்பமான, நுணுக்கமான குறிப்புகள் இருக்கின்றன' என்று சட்டோபாத்யாயா கூறுகின்றார்.3
என்றபோதிலும், ஆளும் வர்க்கத்தின் கருத்தியலுக்கு தலை வயங்க மறுத்த மற்ற பொருள்முதல்வாத முகாம்களும் இருந்தன; சார்வாகர்கள், லோகாயதர்கள் மற்றிதரர்கள். கருத்துமுதல்வாதத்திற்கு எதிரான தங்களது தத்துவத்தை விளக்குவதில் அவர்கள் எதையும் மென்று முழுங்கவில்லை. என்றாலும், அவர்களது எழுத்துக்களில் மிகச் சொற்பமானவை மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றது. மறுப்பதற்காக அவர்களது வாதங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பண்டைய இந்திய தத்துவத்தில் பொருள்முதல்வாத சிந்தனையின் வீச்சும், பரப்பும் பற்றி நாம் சூசகமாகத் தெரிந்து கொள்கின்றோம்.

அறிவியலும் அரசியலும்

இரண்டு தத்துவ முகாம்களுக்கும் இடையிலான போராட்டம் மிகக் கடுமையானதாக இருந்தது; அது மிக நீண்ட காலம் நீடித்தது. சட்டோபாத்யாயாவின் கூற்றுப்படி, அரசியல்தான் இறுதி முடிவைத் தீர்மானித்தது. இதன் பொருள் என்னவென்பது பின்வருமாறு விளக்கப்படுகின்றது:
"பாரம்பரிய இந்திய அரசியலின் பிரதிநிதிகளான நமக்கு சட்டம் வழங்குபவர்களது எழுத்துக்கள் பொதுவாக தர்மசாஸ்திரம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சட்டமியற்றுபவர்களின் முதன்மையான அக்கறை, தாங்கள் உயர்வானதாகக் கருதிய சமூக அமைப்பின் பாதுகாப்பு குறித்ததாகத்தான் இருந்தது. அத்தகைய சமூக அமைப்பு வர்ணாசிரமம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. அந்த சமூக அமைப்பில்  ஒவ்வொருவரின் நடத்தையும் அவர் பிறந்த சாதியின் அடிப்படையிலும், அவர் அடைந்திருக்கும் வாழ்க்கை நிலையையும் பொருத்து ஒழுங்கமைக்கப்படுகின்றது. எனினும், மக்கள் தொகையின் ஒரு சிறுபான்மையாகிய உயர்குலத்தோர், பூசாரிகள் மற்றும் வர்த்தகர்கள் மட்டுமே அனைத்து பொருளாதார சிறப்புரிமைகளுக்கும்-வெவ்வேறு அளவில் என்றபோதும்-உரியவர்கள் என்பதை விதியாகக் கொண்ட ஒரு சமுதாயம். மக்கள் தொகையில் எஞ்சியுள்ளவர்கள் நேரடி உற்பத்தியாளர்கள். அவர்களது உபரி உற்பத்தி மட்டுமே இருபிறப்பாளர்களுக்கான பொருளாதார ஆதாயங்களை உண்டாக்க முடியும். அந்த நேரடி உற்பத்தியாளர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்கின்ற பொதுப் பிரிவிற்குள் அடைக்கப்பட்டனர். இந்த நேரடி உற்பத்தியாளர்கள் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு அவசியமோ அதற்கு மேல் வேறு எதற்கும் உரிமையற்றவர்கள் என்று சட்டமியற்றியவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது ஒரே கடமை சமுதாயத்தின் மேல் தட்டினருக்குச் சேவை செய்வது மட்டும்தான். ஏனெனில், கடவுள் அவர்களை அதற்காகவே பிரத்யேகமாக படைத்திருக்கின்றார்."
வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தியாவில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் இந்திய வகை வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடாகும். சிறுபான்மை மேல்சாதியினருக்கும், பெரும்பான்மை சாமான்ய மக்களுக்கும் இடையிலான போராட்டம். தங்களின் வாழ்வாதாரத்திற்காக உடலுழைப்பில் ஈடுபடும் சாமான்ய மக்கள் இயற்கையின் பல்வேறு அம்சங்களுடன் இடையறாத தொடர்பில் இருக்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்து அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்து இயற்கையாகவே பொருள்முதல்வாதத் தன்மை கொண்டதாக இருக்கின்றது. மறுபுறமோ, சிறுபான்மையினரான மேட்டுக்குடியினர் அறிவுசார் பயிற்சியியையே சார்ந்திருந்தனர். ஆதலால், இயற்கை நிகழ்வுகளைவிடவும் அவர்கள் மனதளவில் ஏற்பட்ட கருத்துக்களாலேயே இயக்கப்பட்டனர். அவர்கள் இயற்கையைவிட கருத்துக்கள உயர்ந்தவை என்று வலியுறுத்துகின்ற கருத்துமுதல்வாதிகளாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இந்த கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு சங்கரரின் அத்வைத வேதாந்தமாகும்; பிரம்மத்தைத் (பரிபூரண உண்மை) தவிர மற்ற அனைத்தும் அறியாமை என்றும், வேறு எதுவும் இல்லை என்றும்  அது உறுதியாகக் கூறுகின்றது.
கைவினைஞர்கள், மற்றவர்கள் போன்ற உடலுழைப்பில் ஈடுபட்ட மிகப் பெரும்பாலான மக்களிலிருந்து பல்வேறு பொருள்முதல்வாத தத்துவப் போக்குகள் தோன்றின. என்றாலும், இந்த வர்க்கம் முழுமையும், அதன் தத்துவார்த்தப் பிரதிநிதிகளும் முற்றிலும் கருத்துமுதல்வாதிகளின் தயவைச் சாந்தே இருந்தனர். ஆதலால், அது தங்களுக்குள் இயற்யை£கவே அமையப் பெற்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்ட உழைக்கும் மக்களுக்கும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த கருத்துமுதல்வாதிகளுக்கும் இடையிலான அசமத்துவமான போராட்டமாக இருந்தது. பவுத்தர்களுக்கும் வேதாந்திகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் உண்மையில் இந்த இரு சக்திகளுக்கும் இடையில் நடந்த இறுதி யுத்தமாகும்; இறுதிக்கட்டத்தில் இருந்த யுத்தத்தில் கருத்துமுதல்வாதிகளின் தளபதியாக சங்கரர் இருந்தார்.
ஆதலால், பவுத்தர்கள் தோற்கடிக்கப்பட்டதானது தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாதத்தைத் து£க்கிப் பிடித்த மேல்சாதியினரின் வெற்றியாகும்.

விஞ்ஞானங்கள்: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

இந்த இரு தத்துவார்த்தப் போக்குகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் பல்வேறு இயற்கை விஞ்ஞானப் பிரிவுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. வானவியல், கணிதம், ரசாயணம், மருத்துவம் மற்றும் இதர விஞ்ஞானங்கள் பண்டைய இந்தியாவில் எவ்வளவு வளர்ந்திருந்தன என்றால், பண்டைய நாகரீக வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் இந்த நாடு மற்ற நாடுகளுக்கு இணையாக இருந்தது மட்டுமின்றி, அவற்றைவிட மேம்பட்டும் இருந்தது. என்றாலும், சங்கரரரால் பவுத்த பொருள்முதல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டது இந்திய விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக ஆனது. இந்திய விஞ்ஞானத்தின் முதன்மையான வரலாற்றாசிரியரான பி.சி.ராய் பின்வருமாறு கூறுகின்றார்:
"சங்கரரால் திருத்தி, விரிவாக்கப்பட்ட அத்வைதத் தத்துவம் உலகமே மாயை என்று போதித்தது; அந்த தத்துவம்தான் இயற்கை விஞ்ஞான ஆய்விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தது. கனதாவையும் அவரது முறையையும் தயவுதாட்சண்யமின்றி சங்கரர் கண்டனம் செய்தார்.
"வேதாந்த சூத்திரங்கள் குறித்த சங்கரரின் வினக்கங்களிலிருந்து ஒன்றிரண்டு குறிப்புகள் இதைத் தெளிவாக்கும்: 'இவ்வாறாக, அணுக் கொள்கை ஆதரவாக வைக்கப்படும் வாதங்கள் மிகப் பலவீனமாக இருக்கின்றன என்று தெரிகின்றது; கடவுளே உலகைப் படைத்தார் என்று பிரகடனம் செய்கின்ற வேதங்களின் கூற்றிற்கு எதிரானது அணுக் கொள்கை. வேதங்களுக்கு ஆதரவாக இருக்கும் மனு மற்றும் இதரர் போன்ற வல்லுநர்கள் எவரும் அக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தங்களது சொந்த ஆன்ம நலனில் அக்கறை கொண்டுள்ள உயர் எண்ணம் கொண்டவர்களால் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.' (மீண்டும்) 'வைசேஷிகர்களின் கோட்பாட்டை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கான காரணங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. அந்தக் கோட்பாட்டை அரை நாசகரத் தன்மை கொண்டது அழைக்கலாம்'."5
சங்கரரின் கூற்றை மேற்கோள் காட்டிய பின்னர், ராய் மேலும் கூறுகிறார்: 'சாதிகளால் பிளவுண்டு கிடக்கும், பழமைவாத எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள் ஆளப்படும், வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகளின் கட்டளைகளால் இவ்விதம் அறிவு தடுக்கப்பட்டும், முடக்கப்பட்டும் உள்ள மக்களின் மத்தியிலிருந்து வழிகாட்டும் கோட்பாடுகளை வகுக்க எந்த போய்லேவும் தோன்ற முடியாது.' (போய்லே: ராபர்ட் போய்லே என்பவர் 17ம் நு£ற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து ரசாயண விஞ்ஞானி; இயற்கை தத்துவவாதி -மொர்.)

உலக வரலாற்றில் அய்ரோப்பிய மறுமலர்ச்சி

கருத்துமுதல்வாதிகளால் பொருள்முதல்வாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்தியா தேக்கநிலையில் இருந்தபோது, பண்டைய நாட்களில் முன்னர் இந்தியாவை விட பின்தங்கியிருந்த அய்ரோப்பா அடிப்படையான சமூகக் கலாச்சார மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. 'மேட்டுக்குடி கோட்பாட்டிற்கும் சாமான்ய மக்களின் நடைமுறைக்கும் இடையில் இருந்த பிளவை ஓரளவிற்கு நீக்கி ஒற்றுமைப்படுத்தியது' என்று அய்ரோப்பிய மறுமலர்ச்சி குறித்து பிரசித்தி பெற்ற விஞ்ஞானியும், விஞ்ஞான வரலாற்றாசிரியருமான ஜே.டி.பர்னால் கூறுகின்றார். (சட்டோபாத்யாயா பக்.101). பர்னால் மேலும் பின்வருமாறு கூறுகின்றார் (சட்டோபாத்யாயா நு£ல்:பக்.101-102):
"நு£ல் நு£ற்வு, நெசவு, மண்பாண்டம், கண்ணதடி செய்தல் போன்ற நடைமுறைக் கலைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உண்மையிலேயே புதியது;  எல்லாவற்றையும் விட, செல்வ உற்பத்தி, யுத்தம் செய்தல் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்த கலைகளுக்கு, சுரங்கப் பணி மற்றும் உலோகப் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம். பண்டைய காலத்தைவிட மறுமலர்ச்சி காலத்தில் கலைகளின் நுட்பம் அதிகரித்திருந்தது. ஏனெனில், அவை இனியும் அடிமைகளின் கைகளில் இருக்கவில்லை; சுதந்திர மனிதனின் கைகளில் இருந்தன. புதிய சமுதாயத்தின் ஆட்சியாளர்களிடமிருந்து இவர்கள் மத்திய காலத்தைப் போல சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் விலக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. கைவினைஞரின் சமூகநிலை உயர்த்தப்பட்டதானது அவரது பாரம்பரியத்திற்கும், அறிஞர்களின் பாரம்பரியத்திற்கும் இடையிலான தொடர்பு புதுப்பித்துக் கொள்ளப்படுவதை சாத்தியமாக்கியது. அந்த தொடர்பு கிட்டத்தட்ட பண்டைய நாகரீகத்தின் துவக்கத்திலிருந்தே துண்டிக்கப்பட்டிருந்தது."

அரசியல் விளைவு

என்றபோதிலும், இந்திய வரலாற்றில் அறிவியலின் வீழ்ச்சி மட்டுமே பிரச்சனையல்ல. பிரிட்டிசாருக்கு முந்தைய இந்தியாவில் இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்ட 'பெருமை குலைந்த, அசைவற்ற, மந்தநிலை வாழ்க்கை' சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இந்தியாவின் கிராம சமுதாயங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமைத்தனத்தாலும் மாசுபட்டிருந்தன என்றார் மார்க்ஸ். 'இயற்கை மிருகத்தனமாக வழிபடப்பட்டது; இயற்கையின் உயர்படைப்பான மனிதன் அனுமான் என்று குரங்கையும், சபாலா என்கின்ற பசுவையும் மண்டியிட்டு வழிபட்டான் என்கின்ற உண்மையில் அது தன் தாழ்வை வெளிப்படுத்திக் கொண்டது' என்று மார்க்ஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.
அதன் அரசியல் விளைவிதான் நாடு சுதந்திரத்தை இழந்தது. மார்க்ஸ் பின்வருமாறு கூறுகின்றார்:
'மொகலாயர்களின் வானளாவிய அதிகாரத்தை மொகலாய வைஸ்ராய்கள் நொறுக்கினர். வைஸ்ராய்களின் அதிகாரத்தை மராத்தியர்கள் உடைத்தனர். மராத்தியர்களின் அதிகாரத்தை ஆப்கானியர்கள் முறித்தனர். எல்லோரும் எல்லோருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தபோது ஓடோடி வந்த பிரிட்டிசாரால் அனைவரையும் அடக்க முடிந்தது.'
மார்க்ஸ் கூறுகிறபடி, 'நமது (அய்ரோப்பிய) மொழிகளின், மதத்தின் தோற்றுவாயாக இருந்த ஒரு நாட்டிற்கு இது நேர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இயற்கையாகவே ஒரு கேள்வி எழுகின்றது: பொலிவு நிறைந்த பண்டை காலத்திலிருந்து பிரிட்டிசாருக்கு முந்தைய தாழ்நிலைக்கு நம் நாடு ஏன் வீழ்ந்தது? பிராமணிய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட சாதிகள் தோற்கடிக்கப்பட்டதும், பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் தோற்கடிக்கப்பட்டதும், நமது நாகரீக, கலாச்சார வீழ்ச்சியின் ஆரம்பமாகும்; இறுதியில் அது நாடு சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது.

அய்ரோப்பாவும் இந்தியாவும்: வித்தியாசம்

சங்கரரின் தத்துவம் உருவாகி வளர்ந்தது பற்றியும், அதன் அரசியல் விளைவுகள் பற்றியும் மதிப்பிட்டோம்; இனி, பொதுவாக இன்றைய உலகிற்கு, குறிப்பாக இன்றைய இந்தியாவிற்கு, அந்தத் தத்துவத்தின் பொருத்தப்பாடு குறித்து விவாதிக்கலாம்.
உலகம் முழுவதும் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையில் உக்கிரமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு சகாப்தத்தில் சங்கரர் வாழ்ந்தார்; பணியாற்றினார். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றபோதிலும், ஒரு பெரும் வேறுபாடு இருந்தது. அய்ரோப்பாவில் எந்த தரப்பிற்கும் தீர்மானகரமான வெற்றியில் அந்த யுத்தம் முடியவில்லை; இரண்டு சக்திகளுமே பரஸ்பர முரண்பாடுகளுடன் இணையான சக்திகளாக வளர்ந்தன. அச்சமயம் இரண்டு தரப்பும் தத்தமது துறையில் மாபெரும் ஆளுமைகளை உண்டாக்கின. அது இறுதியில் ஹெகல் ஒரு பக்கமும், பாயர்பாக் மறுபக்கமும் என 19ம் நு£ற்றாண்டின் இரு மாபெரும் ஆளுமைகளின் உருவாக்கத்தில் முடிந்தது. ஹெகலின் கருத்துமுதல்வாதத்தையும், பாயர்பாக்கின் மீமெய்யிலையும் நிராகரித்து, ஹெகலின் இயக்கவியலையும், பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தையும் முன்னெடுத்துச் சென்ற உலக வரலாற்றில் ஒரு புதிய தத்துவ முகாமின் முன்னோடிகளாக மார்க்சும் ஏங்கெல்சும் விளங்கினர். அவ்வாறாக, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடு தோன்றியது. மார்க்சும் ஏங்கெல்சும் அதை விளக்கிக் கூறியவர்கள்; அது உலக தத்துவ வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது.
மறுபுறம், இந்த இரு தத்துவ முகாம்களுக்கு இடையிலான யுத்தம் ஒன்றின் (பொருள்முதல்வாதத்தின்) தோல்வியிலும், மற்றொன்றின் (கருத்துமுதல்வாதத்தின்) ஆதிக்கத்திலும் முடிவடைந்தது. என்றபோதிலும், இந்த யுத்தம் ஒரு சமத்துவமற்ற யுத்தமாகும்; சாதியம் எனும் சமூக அரசியல் நிறுவனத்தின் சக்தி முழுவதும்  கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவாகவும், பொருள்முதல்வாதத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. நமது நாட்டில் வென்றதும் தோற்றதும் இரண்டு தத்துவங்களின் சாரம் அல்ல; ஆனால், இரண்டு சமூக வர்க்கங்களாகும்; ஆதிக்கம் வெலுத்தும் மற்றும் ஒடுக்கப்படும் வர்க்கங்கள்; அவையிரண்டும் அந்த இரு தத்துவங்களையும் தங்களது படைக்கலனில் ஆயுதங்களாகப் பயன்படுத்தின. ஆதலால், சங்ரரிர் மற்றும் அவரது தத்துவத்தின் வெற்றி என்பது பிராமணர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதிகளின் வெற்றியும், எஞ்சியிருந்த இந்திய சமுதாயத்தின் தோல்வியுமாகும்.

கருத்துமுதல்வாதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை


ஆதலால், இன்றைய உலகிற்கும், இன்றைய இந்தியாவிற்கும் சங்கரரின் தத்துவம் பொருந்தும் என்று சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவராலும் கற்பனையும் செய்ய முடியாது. உலகைக் குலுக்கும் இன்றைய தின மாறுதல்கள் அல்லது வளர்ச்சிகளை எட்டிப் பிடிக்க வேண்டுமானால் பொதுவாக உலகமும், நமது நாடும் எந்தக் கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் போலவே, இந்த கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். குறிப்பாக இந்தியாவைப் பொருத்த வரையில், இந்து மறுமலர்ச்சி மற்றும் வேத, உடநிஷ உணர்வுகளுக்குப் புத்துயிரூட்டுதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் என்பது நாம் கட்டமைக்க விரும்பும் ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, புது இந்தியாவிற்கான முன்நிபந்தனையாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் பாஜக போன்ற அரசியல் கட்சிகளாலும், ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்துப் பரிசத் போன்ற 'சமூகக் கலாச்சார' அமைப்புகளாலும் குறிக்கப்படும் இந்து மறுமலர்ச்சி அரசியல் கொள்கைகளின் பிரச்சாரத்தால் நமது தேசத்தின் ஒற்றுமைக்கு இழைக்கப்பட்டுள்ள அளவிடமுடியாத தீங்கு பற்றி இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். நமது விடுதலை இயக்கத்தின்  பகுதிகளாக இருந்த தேச ஒற்றுமை, மதநல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளை சீர்குலைக்கக் கூடியவையாக ராமஜன்மபூமி மற்றும் அது போன்ற இதர இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கங்களின் அமைப்பாளர்கள் தங்களது சீர்குலைவு வேலைகளுக்கு ஆதரவாக வேத, உபநிஷ கால முனிவர்களின் பெயர்களையும், சங்கரர் போன்ற அவர்களது வாரிசுகளின் பெயர்களையும் மேற்கோள்  காட்டுகின்றனர். ஆதலால், இந்த தேசவிரோதிகளின் நாசகர வேலைகளை எதிர்த்துப் போராடுவது நாட்டின் இடதுசாரி, மதச்சார்பற்ற அரசியல் சக்திகளின் முழுமுதல் கடமைகளில் ஒன்றாகும்.
என்றபோதிலும், மார்க்சிய-லெனினியவாதிகளான நாம் எப்போதும் கருத்துமுதல்வாத சிந்தனை விஷயத்தில்-சங்கரர் அதன் பிரசித்தி பெற்ற பிரதிநிதி-எதிலும் நம்பிக்கையற்ற அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள மார்க்சிய அறிஞர்கள் பலரால் இந்தத் தவறு செய்யப்படுகின்றது. 'அடிப்படையில் பொருள்முதல்வாதமல்லாத கோட்பாடுகளான பிராமண எதிர்ப்பு அணுகுமுறை அல்லது மோட்சக் கோட்பாட்டை நிராகரிப்பது போன்றவற்றை சில மார்க்சிய அறிஞர்கள் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவையாக அடையாளப்படுத்துகின்றார்கள்....லோகாயத தத்துவம் தன்னிச்சையாக முன்னிலைக்குத் தள்ளப்படுகின்றது; வேதாந்த ஏழாவதாகக் கடைசி இடத்தில் வைக்கப்படுகின்றது' என்று  சோவியத் அறிஞர் ஒருவர் கூறுகின்றார்.
இந்தியாவில் இன்னும் செல்வாக்கு மிகுந்த தத்துவமாக வேதாந்தமே இருக்கிறது என்றும், மேற்கு அய்ரோப்பிய தத்துவத்தில் பிளேட்டோவிற்கு என்ன இடம் இருக்கின்றதோ கிட்டத்தட்ட அதே இடத்தை இந்திய தத்துவத்தில் சங்கரர் வகிக்கின்றார் என்றும் அந்த ஆசிரியர் கருதுகின்றார்.
நான் இவ்விதமாகத் தொகுக்கின்றேன்: இந்தியாவின் (உலகின்) தலைசிறந்த கருத்துமுதல்வாதத் தத்துவவாதிகளில் சங்கரரும் ஒருவர். மனித அறிவுக் கருவூலத்திற்கு இந்தியா அளித்துள்ள வளமான கொடையில் வேதாந்தமும் ஒன்று. ஆனால், பொருள்முதல்வாதத்தின் கூறுகள் அடங்கியிருந்த நியாயவாதம், வைசேஷிகம், சாங்கியம், மீமாம்சம், லோகாயதம் போன்ற தத்துவவாதிகளும் அவர்களது படைப்புகளும் அதுபோலத்தான்; ஒடுக்கப்பட்ட மனிதகுலத்தைக் கவ்விப் பிடித்த புத்தரின் கிட்டத்தட்ட பொருள்முதல்வாதத் தத்துவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்திய தத்துவத்தின் இரண்டு முகாம்களும் அறிவுலக மேதைகளை உண்டாக்கின என்று நாம் பெருமை கொண்டாலும், பொருள்முதல்வாத முகாம் ஒரு சமத்துவமற்ற யுத்தத்தை நடத்த வேண்டியிருந்தது; ஆதலால், தோற்கடிக்கப்பட்டது. இன்னும் துர்பாக்கியம் என்னவென்றால், இந்த சமமற்ற யுதத்தில் பொருள்முதல்வாதம் தோற்கடிக்கப்பட்டதானது அறிவு வளர்ச்சி மற்றும் சமூக-அரசியல் வளர்ச்சி ஆயிரம் ஆண்டு காலம் பின்தங்கியிருந்ததன் துவக்கமாகும்; அது நமது மண்ணில் பிரிட்டிசார் ஆட்சி நிறுவப்படுவதில் சென்று முடிந்தது.
என்றாலும், நான் நம்பிக்கை இழந்துவிடவில்லை. சர்வாம்ச பின்தங்கிய நிலையின் இருண்டகாலம் மெல்ல மெல்ல ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருக்கின்றது. உழைக்கும் மக்களை அடக்கி வைத்திருக்கும் சமூக-அரசியல் சக்திகளுக்கு பலத்த அடிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பழையதை அழிக்கும் இந்த வேலையைச் செய்த அந்நியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜனநாயக சக்திகள் விடுதலைக்காகப் போராடும் ஒரு ஒன்றுபட்ட ராணுவம் போல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டம் அமைதி, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்கான சர்வதேச புரட்சிகர சக்திகளுடன் இணைக்கப்பட்டது.
இந்த வளர்ச்சிப் போக்குகளின் பின்னணியில், ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, சோஷலிசம் ஆகியவற்றுக்கான போராட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கம் மெல்ல மெல்ல ஒரு முன்னணிப் படையாக அணிதிரண்டு கொண்டிருக்கின்றது. அரசியல் விழிப்புணர்ச்சி பெற்ற இந்திய மக்களின் முக்கியத்துவம் மிக்க சக்திகளின் முன்னணி தத்துவமாக இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இயற்கையாகவே ஆகிக் கொண்டிருக்கின்றது. மார்க்ஸ் ஒரு ஒன்றரை நு£ற்றாண்டுக்கு முன்னர் 'தத்துவம் தன்னுடைய பொருண்மையான ஆயுதத்தை பாட்டாளி வர்க்கத்தில் காண்கின்றது; பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மீக ஆயுதத்தை தத்துவத்தில் காண்கின்றது' என்று குறிப்பிட்டாரே, அந்த நிலைதான் இது.

குறிப்புகள்:
1. வி.இ.லெனின், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 38, பக்:363.
2. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, இந்திய தத்துவம்: ஒரு சுருக்கமான அறிமுகம், பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ், 1986, பக்: 85-86.
3. தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா, 'பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்திற்கு ஆதரவாக', 1989, பீப்பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ், பக்:16-17.
4. மேகு நு£ல், பக்: 16-17
5. மேகு நு£ல், பக்: 103-04
6. மேகு நு£ல்
7. சோவியத் ஒன்றியத்தில் சமூக விஞ்ஞானங்கள், எண்:1, 1989, பக்:19(அ)          

  --------------------------------------------------------           (இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், 'வரலாறு-சமூகம்-நில உறவுகள்', பாரதி புத்தகாலயம் வெளியீடு).                            

Sunday, February 27, 2011

அடையாள அரசியலும் சட்டமன்றத் தேர்தலும்



அசோகன் முத்துசாமி

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் தமிழினத் துரோகிகள் என்பதால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது, 2009ல் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு இலங்கை அரசின் மீது போரை நிறுத்துமாறு நிர்ப்பந்தம் கொண்டு வராமல்,யுத்தம் நடந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தது, பண உதவி செய்தது-இதுவே அக்கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றபோதிலும், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மக்களுக்கு செய்த நன்மை தீமைகள் என்னவென்று பரிசீலிப்பதுதான் பிரதானம் என்ற போதிலும் ஒரு அந்நிய நாட்டுப் பிரச்சனையை இங்கு தேர்தல் பிரச்சனையாக ஆக்க முயற்சிப்பது எவ்வகையில் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அந்நிய நாட்டுப் பிரச்சனை இங்கு உள்நாட்டு அரசியல் பிரச்சனையாக மாறக் கூடாது என தடை எதுவும் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அது மட்டும்தான் பிரச்சனையாக ஆக்கப்பட வேண்டும் எனும் பொழுதுதான் சிக்கல் வருகின்றது. அல்லது நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
தாங்க முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல்கள், அராஜகம் என தமிழக மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. சாதி மோதல்கள், சாதி அடிப்படையில் தலித்துகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், தலித்துகள் தாக்கப்படுதல் என சமூகப் பிரச்சனைகளும் இருக்கின்றன. கல்வி தனியார்மயமாக்கப்பட்டு, வர்த்தகமயமாக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பல்வேறு விதமான இன்னல்களை மக்கள் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். விதிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக மாநிலமெங்கும் மக்கள் போராடிக் கொண்டே இருக்கின்றனர். இதன்றி பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவையன்றி, கொலை கொள்ளை, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் எனக் குற்றங்கள் அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இது வரை தமிழகத்தில் நடக்கவில்லை என்று கருதிக் கொண்டிருந்ததற்கு மாறாக, மற்ற பல மாநிலங்கள் போல் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நடந்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. (2009ல் தமிழகத்தில் 1100 விவசாயிகள் தற்ª£கலை செய்து கொண்டனர்).
இந்த காரணங்களுக்காக ஆளும் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது எமது நிலை. ஆனால், இதைச் சொன்னால் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துப் பேசும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் தமிழினத் துரோகிகளின் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை எல்லாம் அனுபவிப்பவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்களை எல்லாம் எந்த வகையில் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதைச் சுட்டிக் காட்டினால், மேலே குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உங்களுக்கு விலைவாசி, எங்களுக்கு தமிழின துரோகம் என்கிறார்கள்.
ஒன்று தெளிவாகின்றது.  இந்த வாதத்தை முன்வைப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சனைகள், சாதிப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவை எல்லாம் இல்லாத ஒரு உயர்நிலையில் இவர்கள் இருக்கின்றனர். இருந்திருந்தால் அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்கள் அல்லவா? மேலும், திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு அதனிடத்தில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மக்களின் இந்த பற்றியெறியும் பிரச்சனைகளைக் களைய ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை; இலங்கைப் பிரச்சனையில் மூக்கை நுழைத்து ஏதாவது செய்து கொண்டிருந்தால் போதும் என்பதும் இதன் பொருளாகின்றது. மக்கள் விலை உயர்வால் வாடலாம், பட்டினியால் சாகலாம், வேலையின்மையால் தவிக்கலாம், சாதிக் கொடுமைகளால் துன்புறலாம், கல்விக் கொள்ளையால் ஓட்டாண்டிகளாகலாம். இவை எது பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு நிலை இயல்பாகவே இங்குள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேல்சாதி வெறியர்கள் ஆகியோருக்குச் சாதகமாக ஆகின்றது என்பது வெளிப்படை.
இனி இந்த விவாதத்தின் அடுத்த கட்டத்திற்குப் போவோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையில் தமிழினத்திற்கு துரோகம் என்பதை பார்ப்போம்.
இப்போது கடுமையாகக் குற்றம் சாட்டப்படும் காங்கிரஸ் 1980களின் துவக்கத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும் கொடுத்த கட்சிதான். அதாவது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம்தான். பின்னர் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் அமைதி ஒப்பந்தம் போட்டது. அப்போது மாநிலத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது. அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற காரணத்திற்குள் இங்கு போகவில்லை. அது இக்கட்டுரையின் பொருளும் அல்ல. பின்னர் இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போனது, திரும்பி வந்தது. ராஜிவ்காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதன் நியாய அநியாயங்கள் பற்றியும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. (ஆனால், அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன தெரியுமா? சமூகநீதிக்காகப் பதவியைத் துறந்த வி.பி.சிங் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு பறிபோனது. ராஜிவ்காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபம் காங்கிரசுக்குச் சாதகமாக ஆனது). அப்போது திமுக ஆட்சியிலிருந்தது. விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரமே அத்தேர்தலில் பிரதானமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும். ஆக காங்கிரஸ் மட்டுமின்றி ஜெயலலிதாவும் 'தமிழினத் துரோகி' ஆனார். இப்போது திமுகவும் தமிழினத் துரோகி எனப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய அரசியல் கட்சிகளும் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று அரசியல் கட்சிகளும் சேர்ந்து கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் பதிவான வாக்குகளில் 67 சதவீதம்! இவர்களில் சிலர் விஜய்காந்தின் தலைமையிலான தேமுதிகவையும் தமிழினத் துரோகி பட்டியலில் சேர்க்கின்றனர் (தெலுங்கரான விஜய்காந்திற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கின்றனர்). அவர் பெற்ற வாக்குகள் 8 சதவீதம். அதையும் சேர்த்தால் 75 சதவீதம்! அதாவது நான்கில் மூன்று பங்கு மக்கள் தமிழினத் துரோகிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
இது பழைய கதை. இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடந்த 2009 பாராளுமன்றத் தேர்தல் நிலவரம் என்ன என்று யாரேனும் கேட்கலாம். அதையும் பார்ப்போம். தமிழகம், புதுவை இரண்டிலும் சேர்த்து மொத்தமிருந்த 40 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக, அதிமுக மூன்று கட்சிகளும் சேர்ந்து 37 தொகுதிகளில் வென்றன! (வாக்கு சதவீதம் இன்னும் தேர்தல் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை). ஆனால், நமக்கொன்றும் பிரம்மைகள் தேவையில்லை. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றிருக்கலாம். இதன் மூலம் நாம் சொல்ல வருவது என்ன?
இப்போதிருக்கும் நிலைமையிலும் சரி, முன்பிருந்த நிலைமையிலும் சரி தமிழகத்தின் பெரும்பகுதி மக்கள் 'தமிழினத் துரோகிகளுக்கே' வாக்களிக்கின்றார்கள் என்பதுதான். இவர்கள் எந்த இனத்தின் நலனுக்காக தாங்கள் பேசுவதாகச் சொல்கிறார்களோ அந்த இனத்திற்கு 'எதிராக' (?) தமிழக மக்கள் வாக்களிக்கின்றார்கள். அது எப்படி நடக்கும்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
பிரச்சனை மக்களிடம் இல்லை. மக்கள் எப்போதுமே அறிவாளிகள்தான். மக்களையும், அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது தங்களது விருப்பத்தை மக்கள் மீது திணிக்க விரும்புகின்றவர்கள் மக்களை முட்டாள்கள் என்கின்றனர். தமிழ்த் தேசியவாதிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆகியோரைப் பொருத்த வரையில், அவர்கள் அடிக்கடி புலம்பலாக வெளிப்படுத்தும் ஒரு கருத்து, உலகமே தமிழ் இனத்¬க் கைவிட்டு விட்டது என்பதாகும். ஆனால், எப்போதும் ஏன் உலகம் தங்கள் பிரச்சனையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. எங்களுக்குப் பிரச்சனை இருக்கின்றது, அது பற்றி அக்கறை கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேலை என்கிற அதிகார தோரணையிலிருந்து மட்டுமே இந்த கருத்து எழுகின்றது. ஆனால், இவர்கள் வேறு எந்த மக்களைப் பற்றியும், தமிழகத்தில் வாழும் மக்களைப் பற்றியும் கூடக் கவலைப்பட மாட்டார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு உலகில், இந்தியாவில் எந்தப் பிரிவு மக்களின், தமிழகத்தின் எந்தப் பிரிவு மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றது? எதற்கு ஆதராவாகவாவது ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கின்றதா? எவன் எக்கேடு கெட்டால் என்ன தங்களது அரசியல் வெற்றி பெற்றால் போதும் என்பதனால்தான் அவர்களால் காஞ்சி கொலைகாரன் ஜெயேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிகின்றது; மராட்டி இனவெறியன் பால் தாக்கரேயைப் புகழ முடிகின்றது; இங்கே தாமரை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என்று பாசிஸ்டுகளைப் புகழ முடிகின்றது; இவர்கள் மதச்சார்புள்ளவர்கள், தமிழ் சைவ மதப் பற்றுள்ளவர்கள் என்பதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட முடிகின்றது; முஸ்லிம்கள் தங்களது மதச் சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பதற்கு எதிராக அவர்களை விரட்டியடிக்க முடிகின்றது; அவர்கள் தங்களது மத நம்பிக்கை உரிமையைக் கைவிட்டு விட்டு தங்களைத் 'தமிழர்கள்' என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்த முடிகின்கின்றது.
இது ஒரு பக்கம். இவர்களின் வாதப்படி, மக்களின் மிகப் பெரும் பகுதியினர் தமிழினத் துரோகிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். திமுக கூட்டணி தோற்று அதிமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்றாலும் இதுதான் முடிவு. இதுதான் பொருள். அப்படி எனில் பிரச்சனை எங்கே இருக்கின்றது?
அடையாள அரசியல் கோட்பாட்டில் இருக்கின்றது. அடையாளமே எல்லாம் என்று முன் வைக்கப்படுவதால் தமிழகத்தின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியார் தமிழர் இல்லை என்று பழிக்கப்படுகின்றார்; பழிக்கின்றார்கள். (தலித் அடையாள அரசியல் செய்பவர்கள் அவரை தலித் இல்லை என்றும் பழிக்கின்றார்கள்.) அடையாள அரசியல் செய்கிறவர்களிடமாவது ஒத்த கருத்து இருக்கின்றதா என்றால் இல்லை. இருக்காது; இருக்கவும் முடியாது. ஏனெனில், அரசியலில் வேறு பல சக்திகள், காரணிகள் செயல்படுகின்றன. ஆனால் இவர்கள் மீண்டும் அடையாளத்திலேயே அவற்றிற்கு விடை தேட முயல்வதால் அவர்களது அரசியல் நாகரீகமற்றதாகவும், பாசிசத் தன்மை கொண்டதாகவும் ஆகி விடுகின்றது.
தமிழினத் துரோகிகள் என்கிறார்கள்; தமிழனே இல்லை என்கிறார்கள்; தமிழனுக்கே பிறக்கவில்லை என்கிறார்கள்; அப்படியே சீர் கெட்டு சீர் கெட்டு மரபணுப் பரிசோதனையில் மூழ்கிவிடுகின்றனர். அப்புறமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை என்றால் மரபணுக்களை மேலும் மேலும் பிளப்பதில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில் பாசிச ரத்தத் தூய்மை கோட்பாட்டில் சரண் அடைகின்றனர். தமிழகத்தில் சங்பரிவாரிகளைப் போலவே காதலர் தினத்தை எதிர்த்த தமிழ் இனவாதம் பேசும் கட்சிகள் இருக்கின்றன (பாமக காதலர் தினத்தை எதிர்த்ததை நினைவில் கொள்க). அது வர்த்தகமயமாக்கப்படுவதற்கான எதிர்ப்பு அல்ல அது; காதல் ரத்தக் கலப்பிற்கு இட்டுச் செல்கின்றது என்பதனால் காட்டப்பட்ட எதிர்ப்பு.




மொத்தத்தில் இந்த ஆராய்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு, உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகள் தங்களது கொள்ளையை நடத்த முயற்சிக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு முதன்மையான காரணமாக அதன் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளும், சமூகக் கொள்கைகளுமே இருக்க வேண்டும். இல்லை என்றால் அக்கூட்டணி தோற்கடிக்கப்பட்டாலும் மக்களின் வாழ்க்க¬ நிலைமையில் குறிப்பிடத்தகந்த எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

--------------------------------------------------------27.2.11