Friday, June 10, 2011

சங்பரிவாரத்தின் பாபா முகமூடி









அசோகன் முத்துசாமி



மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைகளுக்காக அணி திரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்கு துணை போகின்றது-பிரபாத் பட்நாயக்

மாட்டுக் கறி சாப்பிடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றவர் ராம்தேவ். சங்பரிவாரம் அவரை ஏன் ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. ஆனாலும், அவர் தன்னுடைய லேகியங்களில் மாடுகள் உள்ளிட்ட பிராணிகளின் எலும்புகளைக் கலந்து விற்பவர். அதைவிட மனித எலும்புகளையும் கலந்து விற்பவராம். அதாவது, மனித எலும்பு கச்சாப் பொருளாகவும், மாட்டு எலும்பு லேகியத்திற்கு புனிதம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுத்துகிறார் போல. ஆதலால், அவர் சங் பரிவாரத்திற்கு இன்னும் நெருக்கமாக ஆகிவிடுகின்றார்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் சங்பரிவாரின் தலைவர்களுடைய குழந்தைகள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அது போலத்தான் பாபா மாட்டு எலும்புகளை மகத்தான லேகியங்களாக மாற்றுவதும். மாட்டு இறைச்சி உண்மையில் உடம்புக்கு நல்லதுதான். நிற்க.
ராம்தேவின் சொத்து மதிப்பு 1000 கோடியிலிருந்து 11000 கோடி வரை மதிப்பிடப்படுகின்றது. ‘விக்கிடாப்5’ என்கிற இணையதளம் 15000 கோடி என்கிறது. இதில் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவும், அமெரிக்காவில் உள்ள 85 ஏக்கர் நிலமும் அடங்கும் என்கிறார்கள். எப்படியாயினும் ஒரு பரதேசிக்கு இவ்வளவு சொத்து எதற்கு என்கிற கேள்வி (நன்றி:அன்பரசன் மா, முகநுhல்) எழுவதைத் தவிர்க்க முடியாது. சாமியார்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று எந்த ஆசையையும் துறக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். பூசாரிக்கு பயன்படாத எதுவும் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லை என்று அறிஞர் இங்கர்சால் கூறுவார். அமெரிக்க நிலமும், ஸ்காட்லாந்து தீவும் அவரது பக்தர்கள் வாங்கிக் கொடுத்ததாம்.
ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆடு திருடிய சுனா பானா கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு அவரே ‘யார்ரா ஆட்டை திருடியது’ என்று பஞ்சாயத்தில் ரவுசு பண்ணுவார். அதாவது, திருடியவரே ‘யார்ரா திருடியது’ என்று மிரட்டுவார். அதுதான் எனக்கு ராம்தேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டச் செய்திகளைப் படிக்கும்போது நினைவிற்கு வந்தது.
சாமியார்கள் என்றாலே போலிகள்தான் என்பதை நாம் அறிவோம். உண்மைச் சாமியார்கள், போலிச் சாமியார்கள் என்கிற பேதம் எதுவுமில்லை. இந்த நிலையில் சொத்து சுகம் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாபாவிற்கு நாட்டு நலனில் என்ன திடீர் அக்கறை? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மீதும், ஊழல் ஒழிப்பின் மீதும் என்ன கரிசனம்?
உண்மையில் அவருக்கு ஊழல் ஒழிப்பின் மீதோ அல்லது கருப்புப் பணத்தை கணக்கில் உள்ள பணமாக மீட்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறதா இல்லையா என்பதே சந்தேகத்திற்கு இடமானதாக இருக்கிறது. பிரதம மந்திரிகளை லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்.நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த ஒருவரை விசாரிக்கவே கூடாது என்பது எந்த வகையில் சரியென்றே தெரியவில்லை.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 18 கோடி ரூபாய் செலவழிப்பவர், தன்னுடைய யோகா வகுப்புகளுக்கு 1000 முதல் 50000 வரை கட்டணம் வசூலிக்கும் ஒருவர் எப்படி நியாயமானவராக இருக்க முடியும் என்றே தெரியவில்லை. (மாதம் வெறும் 500 ரூபாய்க்கு யோகா சொல்லிக் கொடுக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்).
திரை மறைவில் வேறு என்ன நடந்திருக்கிறது என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இந்து மதவெறி சங்பரிவாரம் அவருக்கு எல்லாவுமாக இருக்கிறது. சங்பரிவாரம் ஏன் இவர் பின்னால் போய் நிற்க வேண்டும்? அல்லது இவரை ஏன் துhண்ட வேண்டும்?
பாஜக மீண்டும் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு மேலும் மேலும் அருகிக் கொண்டே வருகின்றது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 5 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தனது அரசியல் அங்கமான பாஜக எல்லா வகையிலும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்பதால் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வேறு வழி தெரியததால் ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு வருகிறது.
பாஜக ஊழலைப் பற்றிப் பேசினால் யாரும் பொருட்படுத்துவதில்லை. நனைகிற ஆடும் கவலைப்படுகின்ற ஓநாயும்தான் எல்லோருக்கும் நினைவிற்கு வருகிறார்கள். அதிலும் எடியூரப்பா அதை நினைவூட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்.  பிடிவாதமாக ஊழல் செய்கிறார்.  அதற்காக பிடிவாதமாக பதவியைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.
மேலும், யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சங்பரிவாரத்தின் உச்ச பட்சத் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவும். கட்சி சார்பற்ற வேடந்தரித்து பாஜகவை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான வழக்கமான உத்தி.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கூடிக் கூடி ஆலோசித்த சங்பரிவாரம் இந்த நிலையில் நேரடியாக பாஜக அடையாளம் இல்லாத ஒரு ‘கலகத்தைத்’ தூண்ட திட்டமிட்டிருக்க வேண்டும். தன்னுடைய பழைய உத்திகளில் ஒன்றையே மீண்டும் தேர்வு செய்கிறது. எந்த பழைய உத்தி?
1970களில் இந்திரா காந்தி அரசாங்கத்தின் ஊழலையும், அராஜகத்தையும் எதிர்த்து காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கத்திற்கு தொண்டர் பலத்தை வழங்கி, அதற்குள் ஊடுருவி, அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதாக் கட்சியின் ஒரு அங்கமாக தன்னுடைய ஜனசங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வைத்த அதே உத்தி.
அப்போதாவது மதச்சார்பற்ற அடையாளத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அதுவும் இல்லை. வெளிப்படையாகவே காவி அடையாளம் தரித்து வந்து விட்டார்கள். பாஜக ராம்தேவை ஆதரிக்கிறது. விஎச்பி ஆதரிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் இருப்பது ஒன்றும் இப்போதைய நிகழ்வல்ல. அது மிகப் பழைய விஷயம். ஆறு வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது அது பற்றி எதுவும் செய்யாத சங்பரிவார பாஜக இப்போது படோடபமாக ஆர்ப்பாட்டம் செய்கின்றது.
கருப்புப் பணத்தை எதற்கு மீட்க வேண்டும்? ஊழலை ஏன் ஒழிக்க வேண்டும்? கருப்புப் பணம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரி வருவாயை ஏய்க்கிறது. ஊழல் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணத்தைத் தின்கிறது. அதாவது ‘மக்களுக்கு’ வர வேண்டிய பணத்தை சில தனியார்கள் சுருட்டிக் கொண்டு போகிறார்கள்.
வரி ஏய்ப்பின் மூலம், ஊழல் மூலம் மட்டும்தான் மக்கள் பணத்தைப் பறிக்க முடியுமா? விலைகளை உயர்த்துவதன் மூலம் மக்களின் பணத்தை பறிக்கலாம். குறைவாகக் கூலி கொடுப்பதன் மூலம் மக்களின் பணத்தைப் பறிக்கலாம். கல்விக் கட்டணம் என்கிற பெயரில் பறிக்கலாம். மருத்துவ சேவைகள் என்கிற பெயரில் பறிக்கலாம்.  உணவுப் பொருட்களுக்கான மான்யங்களை வெட்டுவதன் மூலம் பறிக்கலாம். லட்சக்கணக்கில் மதிப்புள்ள மக்களின் நிலத்திற்கு ஆயிரக்கணக்கில் கொடுத்து விட்டு நிலத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் பறிக்கலாம். மக்கள் சொத்தை குறைவான விலைக்கு விற்பதன் மூலம் பறிக்கலாம். ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆயிரம் வழிகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பாபா இவற்றைப் பற்றியெல்லாம் எப்போதும் முணுமுணுத்தது கூட கிடையாது. ஊழல் பெருக்கத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் உலகமயத்தைப் பற்றி அவர் பேசியது கூட கிடையாது.
பாஜகவோ மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதும், இப்போது அதிகாரத்தில் இருக்கும் இடங்களிலும் இவற்றில் பலவற்றைச் செய்தது. செய்கின்றது. உதாரணம் வேண்டும் எனில், தனியார் மயத்தின் பெயரால் மும்பையில் பொதுத்துறை நிறுவனமான செந்தூர் ஹோட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதையும். அதை வாங்கியவர் சில மாதங்களிலேயே நுhறு கோடி ரூபாய்க்கு மேல் லாபத்திற்கு விற்றதையும் நினைவில் கொள்ளுங்கள். அது போல்தான் மாடர்ன் பிரட் நிறுவன விற்பனை ஊழலும். பால்கோ எனும் பெரிய பொதுத்துறை நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றது வாஜ்பாய் அரசு.  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு என வாங்கப்பட்ட சவப்பெட்டிகளுக்கு கூடுதல் விலை வைத்து வாங்கியதையும், அந்தக் கூடுதல் பணம் பாஜகவினரின் பாக்கெட்டுக்ளுக்குப் போனதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உலகமயம் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டது. வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை, கேஸ்விலையை இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே இருக்கும் அரசாங்கங்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்றன.  ஆனால், உண்மையான நோக்கம் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவது, சந்தைமயமாக்குவதுதான். விலைகளை சந்தை தீர்மானித்துக் கொளுமாம். சந்தைப் போட்டியில் விலைகள் குறைந்து   விடும் என்று அன்று சொன்னார்கள். ஆனால், அவை எப்போதுமே குறையவில்லை.
ஊழல் பணத்தை மீட்டால் மட்டும் அது மக்களுக்கு வந்துவிடப் போகின்றதா என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உணவு மான்யங்களை வெட்டி மக்களின் வயிற்றில் அடிக்கும் ஐமுகூ அரசாங்கம் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. ஊழல் மூலம் மட்டுமின்றி, சட்டப்படியாகவும் மக்கள் பணம் பெரு முதலாளிகளின் கல்லாப் பெட்டிகளுக்குத்தான் போகின்றது. ஊழல் பணத்தை மீட்டால் என்ன செய்வார்கள்? அதை சட்டப்படியாக அதே முதலாளிகளிடம் வரி விலக்கு என்கிற பெயரில் திரும்பவும் கொடுத்து விடுவார்கள். முதலாளித்துவ உலகமயக் கொள்கைகளை எதிர்க்காமல் ஊழலை எதிர்ப்பதாக ஐந்து நட்சத்திர ஆர்ப்பாட்டங்கள் செய்வதெல்லாம் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராது. ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டுமானால் பயன்படலாம்.
-------------------------------------------------10.6.11



   







Sunday, June 5, 2011

மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் ஊழலை சேர்த்துக் கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்




பிரபாத் பட்நாயக்

தமிழில்: அசோகன் முத்துசாமி

முதலாளித்துவம் நவீனத்துவத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது; அதில் பாபாக்களுக்கும், சுவாமிகளுக்கும், அரை பாபாக்களுக்கும் அரை சுவாமிகளுக்கும் பாத்திரம் எதுவும் இல்லாத மதச்சார்பற்ற அரசியலும் அடங்கும். புதிய தாராயமய சீர்திருத்தங்கள் முதலாளித்துவ வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன, அதனால் நவீனத்துவத்தை நோக்கிய நமது பயணமும் வேகமடைகிறது என்று சீர்திருத்தங்களை பலர் ஆதரித்தனர். இடதுசாரிகள் எப்போதுமே இந்த நிலையை மறுத்து வந்துள்ளனர். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தாமதமாக மேற்கொள்ளும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடன் கூட்டு சேர்கின்றது; ஆதலால், இன்றியமையாத வகையில் பழைய சமூக அமைப்பிற்கு பலத்த அடி கொடுப்பதற்குப் பதிலாக அதனுடன் சமரசம் செய்து கொள்கிறது; அது நவீனத்துவத்தை நோக்கிய பயணத்திற்குத் தடையாக இருக்கின்றது என்று இடதுசாரிகள் வாதிட்டனர். முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கும் சமூக சக்திகளால் மட்டுமே (இடதுசாரிகள்-மொர்) நாட்டை நவீனத்துவத்திற்கு  அழைத்துச் செல்லவும் முடியும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதும், சர்வதேச அரங்கில் நாட்டிற்குப் புதிதாகக் கிடைத்துள்ள 'கவுரமும்', மேட்டுக்குடியினர் உலகமயமாக்கப்பட்டிருப்பதும் இடதுசாரிகளின் நிலைப்பாடு தவறு என்கிற எண்ணத்தை உருவாக்கியிருந்தால், கருப்புப் பணத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டிய பாபா ராம்தேவிடம் நான்கு மத்திய அமைச்சர்கள் மிகக் கேவலமான முறையில் மன்றாடிய சம்பவம் அந்த எண்ணத்தைப் போக்கியிருக்க வேண்டும். இந்த சம்பவம் இன்னும் நம்மிடையே பழமை நீடித்திருக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறுவது மட்டுமின்றி, எல்லையற்ற கலக்கத்தை உண்டாக்கும் ஒன்றை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறது; அது, புதிய தாராளமய இந்தியா பழமையை எதிர்ப்பதற்குப் பதிலாக உண்மையில் அதைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கப் பஞ்சாயத்துகள் புத்துயிர் பெற்றிருப்பதை நாம் பார்த்தோம்; இப்போது, சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெரும் மிரட்டலுடன் ஒரு பாபா தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோருகிறார். நம்முஐடய வளர்ச்சி சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் இன்றைய அரசாங்கம் ஓடோடிச் சென்று அத்தகைய ஒரு சாமியாரை தாஜா செய்கின்றது. அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று களியாட்டம் போடுகின்ற ஒரு பாபாவை தாஜா செய்ய ஜவஹர்லால் நேருவோ, அல்லது இந்திரா காந்தியோ கூட, நான்கு காபினெட் அமைச்சர்களை அனுப்பியிருப்பார்களா?
பொருளாதார ரீதியாக 'வெற்றி' அடைந்திருந்தபோதிலும் அரசாங்கம் இவ்வளவு கீழான நிலைக்கு வீழ்ந்து விடவில்லை;  உண்மை என்னவெனில், அந்தப் பொருளாதார வெற்றியால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. பின்பற்றப்படும் பொருளாதாரப் பாதை தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ அரசியல் வர்க்கம் முழுவதையும் ஊழலில் சிக்க வைக்கின்றது. அது அரசியலை மதிப்பிழக்கச் செய்கிறது; ஆதலால், அனைத்து வகையான பாபாக்களுக்கும், சாமியார்களுக்கும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களுக்கும் களத்தைத் திறந்து விடுகின்றது; அவர்கள் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை; அவர்களே ஊழலற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை; களத்தில் நுழையும் அவர்கள் சமூக ஒப்புதல் எதுவும் இல்லாத தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை அரசின் மீது திணிக்கிறார்கள். அரசியலை மதிப்பிழக்கச் செய்வது என்பது தவிர்க்கவியலாத வகையில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகும்; எந்தப் பழமைக்கு எதிராக நாம் சுதந்திரப் போராட்டம் நடத்தினோமோ அந்தப் பழைய காலத்திற்கு நம்மை பின்னோக்கி தூக்கி எறிவதாகும்.
ஆனால், ஊழலும் பொருளாதாரப் பாதையும் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது? சட்ட விரோதமாக வழங்கப்பட்ட சேவைகளுக்காக பணம் கொடுக்கப்படுவதையே ஊழல் என்கிறோம்; அதாவது, அவை விலை கொடுத்து வாங்கக் கூடிய சரக்குகள் இல்லை; அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே விற்கப்படும் ரேஷன் முறையில் வழங்கப்படுவதைவிடக் கூடுதலாக சில பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாகப் பணம் கொடுப்பதை ஊழல் என்கிறோம். ஒரு தொலை பேசி இணைப்புக்காக சட்டப்படி என்ன கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை நான் ஏற்கனவே செலுத்தியிருந்த போதிலும், அதற்காக நான் லஞ்சம் கொடுத்தால் அது முதல் வகை ஊழலாகும்; எனது குழந்தைக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை எனில் (கல்லூரி இடங்களின் எண்ணிக்கையும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதே), நுழைவுக் கட்டணத்தைவிட அதிகமான பணம் கொடுத்து இடம் வாங்கினால் அது இரண்டாவது வகை ஊழலாகும். பெரும்பாலான ஊழல்களை இந்த இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தி விடலாம். ஆனால், அடிப்படையான விஷயம் இதுதான்: ஊழல் எனும் கருத்துருவாக்கத்தின் அடிப்படையாக இரண்டு செயல் களங்களுக்கு (அல்லது செயல் பரப்பு) இடையிலான வேறுபாடு இருக்கின்றது; ஒன்று தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களம்; மற்றொன்று அதற்கு வெளியே இருக்கும் களம். தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தில் (sஜீலீமீக்ஷீமீ)  ஊழலைப் பற்றி நாம் பேசுவதில்லை; தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கு வெளியே இருக்கின்ற களத்தில் தடையற்ற சரக்கு பரிவர்த்தனைக் களத்தில் போல் ஒரு விலை வாங்கப்படும்போதுதான் ஊழல் நிகழ்கின்றது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு களங்களின் எல்லைகள் தாண்டப்படக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும், அவ்வளவுதான். இது சாத்தியமா?

சரக்குமயமாக்கல்

முதலாளித்துவத்தின் கீழ் எல்லாவற்றையும் சரக்குகளாக்கும் ஒரு போக்கு எங்கும் ஊடுருவிப் பரவுகின்றது; அதாவது, எல்லாவற்றையும் சரக்காக ஆக்கும் ஒரு போக்கு என்பதைக் கண்டுபிடித்தது கார்ல் மார்க்சின் மிக ஆழமான அறிவுக் கூர்மையாகும். தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கும் அதற்கு வெளியே இருக்கும் களத்திற்கும் இடையிலான எல்லை எப்போதும் வெளி நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. (அதாவது, தடையற்ற சரக்கு பரிவர்த்தனை நிகழும் பரப்பின் எல்லை விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது-மொர்). ஆனால், இந்த எல்லை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், பின்னர் அதை வெளி நோக்கி தள்ளுவது சட்டத்தை மீறுவதாகிவிடும். அதாவது, அது ஊழலாகிவிடுகின்றது. புதிய தாராளமய சகாப்தத்திற்கு முன்னர், அதாவது 'லைசன்ஸ்-கோட்டா-பெர்மிட் ராஜ்' என்றழைக்கப்பட்ட முறை இருந்த காலத்தில் அத்தகைய ஒரு எல்லை வெளிப்படையான வகையில் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஊழலுக்கு ஒரு சுலபமான விளக்கத்தை அளித்தது (இந்த எல்லை தவறாகவும், தன்னிச்சையாகவும் நிர்ணயிக்கப்பட்டது என்கிற வாதத்தின் அடிப்படையில்); மற்றும் புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மூலம் இந்த எல்லையை வெளியே தள்ளினால் ஊழல் மறைந்து விடும்; அல்லது குறைந்தபட்சம் குறைந்துவிடும் என்கிற ஒரு தோற்றத்தையும் உண்டாக்கியது.
இரண்டு கண்கூடான விஷயங்களை இந்த வாதம் தவறவிட்டுவிட்டது. முதலாவதாக, இந்த எல்லையை நாம் எவ்வளவு தூரம் வெளி நோக்கி தள்ளினாலும், சட்டபூர்வமான எல்லை ஒன்று எப்போதும் இருக்க வேண்டும்; ஏனெனில், அனைத்துமே விற்பனைக்கு உரிய ஒரு சமுதாயத்தை கற்பனையே செய்து பார்க்க முடியாது (தேர்வு முடிவுகள் ஒரு சரக்காக ஆகிவிட்டால் என்ன நிகழும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்); அத்தகைய ஒரு சட்டபூர்வமான எல்லை இருந்தாலும் கூட, முதலாளித்துவத்தின் உள்ளியல்பாக இருக்கும் அதை வெளி நோக்கி தள்ளுகிற போக்கு ஊழலை உற்பத்தி செய்யும். இரண்டாவதாக, இந்த சட்டபூர்வ எல்லைக் கோடு எந்த அளவு ஆற்றலுடன் வெளிநோக்கித் தள்ளப்படுகின்றது என்பது பணம் பண்ணுவது எந்த அளவிற்கு மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகின்றதோ அதைப் பொருத்தே அமைகின்றது. அதாவது முதலாளித்துவ விழுமியங்கள் எந்த அளவிற்குப் பரவியிருக்கின்றது என்பதைப் பொருத்தே அமைகின்றது. புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் அத்தகைய விழுமியங்களை எங்கும் ஊடுருவிப் பரவச் செய்துவிட்டன; நம்முடைய பொது வாழ்வில் ஊழல் எந்த அளவு சக்தியுடன் நுழைகின்றதோ அந்த சக்தி  அதற்கேற்ற அளவு பெருகியுள்ளது. தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தின் சட்டபூர்வ எல்லையை அமல்படுத்தும் இறுதிப் பொறுப்பு எப்போதுமே அரசின் அரசியல் ஊழியர்களிடம் இருப்பதால், முதலாளித்துவ தர்க்க நியாயம் முதலாளித்துவ அரசியல் வர்க்கத்தவர்களை ஊழல் செய்பவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக ஆக்குகின்றது.
ஊழலை சட்டபூர்வமானதாக ஆக்குவதன் மூலம் அதை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து பிழையானதாகும். தார்மீக ரீதியாக மட்டுமின்றி பகுத்தாயும் அறிவு ரீதியாகவும்; ஏனெனில், தடையற்ற சரக்கு பரிவர்த்தனைப் பரப்பிற்கு ஒரு எல்லை எப்போதுமே இருக்க வேண்டும்; முதலாளித்துவ விழுமியங்கள் எங்கும் பரவியிருக்கும் ஒரு உலகில் அப்போதும் கூட அது ஊழலை உற்பத்தி செய்யும்: எடுத்துக் காட்டாக, மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான இடம் ஒரு சரக்காக ஆக்கப்பட்டு, அதிக விலை கொடுப்பவருக்கு விற்கப்பட்டாலும் கூட, அது மருத்துவக் கல்லூரிகளில் ஊழலை முடிவிற்குக் கொண்டு வந்து விடாது; ஏனெனில், அப்போது தேர்வு முடிவுகள் திருட்டுத்தனமாக வாங்கி விற்கப்படும். லோக்பால் சட்டம் கொண்டு வந்துவிட்டால் போதும் ஊழல் ஒழிந்து விடும் என்கிற எண்ணம் பிழையானது; எங்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பரவியிருக்கும் ஒரு உலகில் லோக்பால் அலுவலகமே ஊழலின் உறைவிடமாக ஆகிவிடும். ஒரு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் விளக்கியது போல், பணி ஓய்வுப் புகலிடங்களுக்கான ஆசையில் (அவற்றை அளிப்பது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உரியது) பணியிலிருக்கும் நீதிபதிகள் அரசாங்கத்திற்குச் சாதகமான தீ£ப்புகளை வழங்குவதன் மூலம் அதன் தயவைப் பெற முயற்சிக்கின்றனர்.
எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஊழலின் அளவை மாற்ற முடியாது என்பதோ, அதை எப்போதும் குறைக்க முடியாது என்பதோ விஷயமல்ல. நமது தற்போதைய பொருளாதார பாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பணம் பண்ணுவதற்கான பேராவல், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் சரக்குமயமாக்கலின் ஊடுருவல் ஆகியவை எங்கும் ஊடுருவிப் பரவிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பற்றிய விவாதம் முழுவதையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதுதான் விஷயம்; அதனிடத்தில் அனைத்து வகையான சுலபமான உடனடித் தீர்வுகளும் சாமியார்களாலும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களாலும் தேசத்தின் தொண்டைக் குழிக்குள் திணிக்க முயற்சிக்கப்படுகின்றது; சந்தர்ப்பவாத அரசியல் வர்க்கம் ஜனநாயகத்திற்குக் கேடான வகையில் அவர்களது செயல்களுக்குப் பணிந்து போகின்றது.
ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாமியார்கள், துறவிகள், ரட்சகர்கள் உள்பட அனைவருக்குமே தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து கருத்துக்கள் சொல்வதற்கும் அவற்றுக்காகப் போராடுவதற்கும் நிச்சயமாக உரிமை உண்டு. ஆனால், இரண்டு எச்சரிக்கைகள் அவசியம். முதலாவதாக, ஒரு தனிநபர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கு பரிகாரம் பெறுவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் அதில் நியாயம் உண்டு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றபோதிலும், ஒரு ஜனநாயக சமுதாயத்தில் குறிப்பிட்ட பொதுக் கொள்கைகளைக் கோருகிற விஷயத்தில் அது ஒரு முறையான போராட்ட ஆயுதமல்ல; ஏனெனில், ஜனநாயக சமுதாயத்தில் அத்தகைய கொள்கைகளை தீர்மானிப்பதற்கு அரசியல் சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட வகையான பொதுக் கொள்கைகளைக் கோருவது போன்ற ஒரு அரசியல் நோக்கத்திற்கான அணி திரட்டல் அரசியலற்ற பற்றுகளின் அடிப்படையில் செய்யப்பட முடியாது. மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைளுக்காக அணிதிரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்குத் துணை போகின்றது.
அத்தகைய ஒரு சீர்குலைவு அபாயம் சமகால இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிகழ்வுகள் மற்ற சாமியார்களும், பாபாக்களும் தங்களது சொந்த கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு களமிறங்குவதற்கான துணிச்சலை அளிக்கும். அந்த கோரிக்கைகள் எவ்வளவு நல்லவை போல் தெரிந்த போதிலும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நமது மிகப் பெரிய சாதனைகளான நமது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் அத்தகைய போக்கு மெல்ல மெல்ல அழித்துவிடும்.          

ஆதாரம்: நீயூஸ்கிளிக் (newsclick.in) 4.6.11
--------------------------------------------------------------
நன்றி: கீற்று.காம்

Saturday, May 21, 2011

அடையாள அரசியலின் உள்முரண்பாடுகள் 3.






அடையாள அரசியலின் உள்முரண்பாடுகள் பற்றிய கட்டுரைத் தொடரின் இந்தக் கட்டுரையிலும் நாம் முக்கியமாக இரண்டு வகையான அடையாள அரசியலைப் பற்றி விவாதிக்கின்றோம்.
1. பார்ப்பனர்களை எதிர்ப்பதே சமூகநீதி என்கிற 'அடையாள அரசியல்'.
2. விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது பொதுவாக இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பது, அல்லது குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைமையிலான தனிநாடு என்கிற கோரிக்கையை ஆதரிப்பது இதுவே சமூகநீதி அல்லது தமிழ் இனப்பற்று என்கிற 'அடையாள அரசியல்'.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்கிற விருப்பு வெறுப்பற்ற அரசியலுக்குப் பதிலாக பார்ப்பனர்களை எதிர்ப்பதே சமூகநீதி என்று சிலர் கருதுகின்றனர். அதாவது, எந்தவொரு பொதுப்பிரச்சனையிலும் கோட்பாட்டு அடிப்படையிலாக அல்லாமல், தனிநபரின் பிறப்பு அடிப்படையிலாக முடிவிற்கு வருவது.
(தனிநபரின் பிறப்பு அடிப்படையில் முடிவிற்கு அனைத்து மதவாதிகளும்கூட செய்கிற காரியம்தான் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளவும். இந்து மதவாதிகள், இஸ்லாமிய மதவாதிகள், இன்னபிற மதவாதிகள். எனினும், இது தனிக்கதை ).
இவர்கள் என்ன செய்கிறார்கள்?
ஒரு உதாரணம்.
#சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனரான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வருவதற்குப் பதிலாக சூத்திரரான கருணாநிதி தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் கருதினர்; கருதிக் கொண்டிருக்கின்றனர். விரும்பினர்; விரும்பியது நடக்காத வருத்தத்தில் இருக்கின்றனர்.
கருணாநிதியின் தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவே கூடாது என்று விடுதலைப் புலி ஆதரவு தமிழ்தேசியவாதிகளில் பெரும்பாலோர் விரும்பினர். அதற்கு 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு உதவியது காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இவர்களில் பெரும்பாலோர் தங்களை பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, பார்ப்பனீயத்தை அல்லாமல் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள்.
பர்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் பார்ப்பனரான ஜெயலலிதாவை எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால், ஆதரித்தார்கள். இது, இந்த இரண்டு அடையாள அரசியல்களுக்கு இடையிலான முதல் முரண்பாடு. எப்படியேனும் தனிஈழம் அமைய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு முரண்பாடாகவே தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் சைவ மதத்தை ஆதரிப்பவர்களாகவும், அதன் மூலம் இந்து மதத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள்தான், இந்துத்துவவாதிகளான அத்வானி, அசோக் சிங்கால், ஜெயேந்திரன் போன்றவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டவர்கள். அவர்கள் பால் தாக்கரேயைப் பாராட்டினார்கள். நரேந்திர மோடியைப் பாராட்டுகிறார்கள். இந்துத்துவத்துடன் அவர்களுக்கு உண்மையிலேயே முரண்பாடு எதுவும் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது; அந்த அளவிற்கு இப்போது இந்துத்துவவாதிகள் 'இலங்கைத் தமிழர்' பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் மொழி உணர்வு பகுத்தறிவின் அடிப்படையிலனதாகவும், பொதுவுடமையின் அடிப்படையிலானதாகவும் இல்லை என்றால் அது மதவாதத் தன்மை கொண்டதாக ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. தமிழ் மொழி உணர்வு அல்லது தமிழ் மொழியின் அடிப்படையிலான இன உணர்வு இயல்பாகவே இந்து மதம் தவிர்த்த பிற மதங்களுக்கு எதிரான உணர்வாக சீர் கெடுகின்றது; இலங்கையிலும் (இலங்கையில் விடுதலைப் புலி ஆதரவு தமிழ்தேசியத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு அல்லது சைவ தமிழ் தேசியத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு) இந்தியாவிலும் இதற்கு ஏராளமான சான்றுகளைக் காட்ட முடியும். வரலாற்றிலும் கூட இதற்குச் சான்றுகள் இருக்கின்றன; தமிழகத்தில் சமண, பவுத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கழுவில் ஏற்றப்பட்டதை இன்றும் நியாயப்படுத்தும் 'தமிழ் தேசியவாதிகள்' இருக்கின்றார்கள். இஸ்லாமியத்தை, பவுத்தத்தை, கிறித்துவத்தை 'தமிழ்க்' கலாச்சார அடிப்படையில் எதிர்ப்பவர்கள் இருக்கின்றார்கள்.
கருணாநிதி சூத்திரர் என்றும், அதனால் அவர் தமிழர் என்றும், அதனால் அவர் என்ன செய்தாலும் ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர் என்று ஏற்கனவே கூறினோம். கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்தன; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது; திரைத்துறை, பத்திரிக்கை, தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் கருணாநிதியின் குடும்பத்தினர் செலுத்திய ஆதிக்கம் சொல்லி மாளாது; மாவட்டந்தோறும் திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும்  நடத்திய அராஜகங்களும், அட்டூழியங்களும், ரியல் எஸ்டேம் உள்ளிட்ட பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளை அவர்கள் ஆக்கிரமித்ததும் பெரிய வரலாறு; இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் பரலோகம் என்பதுதான் நிலைமை. ஒரு பாவமும் அறியாத தினகரன் பத்திரிக்கை ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டது, அமைச்சர் கேட்டும் நிலத்தைக் கொடுக்கவில்லை என்பதற்காக சேலத்தில் முன்னாள் காவல்துறை ஆய்வாளர் குப்புராஜ் உள்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டது, கோரிக்கைகளுக்காக ஊர்வலம் போன அரசு ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீது காவல்துறையின் தாக்குதல் என்று பட்டியல் மிகப் பெரியது. இதன்றி சிறுதொழில்கள் பலவற்றை முடங்கச் செய்த மின்வெட்டு. இதற்குக் காரணமே நிலக்கரி இறக்குமதி உரிமம் பெற்ற திமுக தலைவர்களும் அவர்களது குடும்பத்தாரும் என்று சொல்லப்படுகின்றது; மின்வெட்டு இருந்தால்தான் மின் உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று சொல்லி கோடி கோடியாக கொள்ளையடித்தது மட்டுமின்றி கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை இருள் சூழச் செய்தனர். கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை நடந்து கொண்டிருக்க, அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி நாகூசாமல் பொய் பேசிக் கொண்டிருந்தார்; போதாக்குறைக்கு திமுக அமைச்சர்களும், கருணாநிதி குடும்பத்தினரும் மாவட்டந்தோறும் கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தனர்; புதிது புதிதாகத் துவக்கினர்; கல்வி வியாபாரத்தில் ஏகபோகம் செலுத்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்; மக்கள் ஆத்திரம் தாளாமல் ஒரேயடியாக அடித்து துவைத்துவிட்டனர். ஆனாலும், பார்ப்பன எதிர்ப்பே சமூக நீதி என்கிற சிந்தனை உடையவர்கள் கருணாநிதிதான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்று ஏதோ புரட்சியாளர்கள் போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் உண்மையிலேயே சமூகநீதிக் காவலர்களா அல்லது ஊரை அடித்து உலையில் போடுவதில் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று போட்டியிடுகிறவர்களா, அல்லது, பார்ப்பனர் வகித்த அல்லது ஓரளவிற்கு இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்ற ஆதிக்க இடத்தை தாங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறு நோக்கம் இல்லாதவர்களா என்கிற சந்தேகம் இயற்கையாகவே எழுகின்றது. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் பிரச்சனைகள் பற்றி இவர்களுக்குக் கவலையே இல்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் அது சூத்திரன் ஆட்சியாக இருந்தால் போதும் என்பவர்கள். சமூகநீதிக்குக் குழி பறிக்க இவர்களைத் தவிர வேறு யாரும் தேவையே இல்லை.
---------------------------
.  


Tuesday, May 17, 2011

நாகரீகத்தின் சுடுகாடு






சபர்மதி நதி
அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது

செவிக்கு இனிய
சலசலப்பும் இன்றி

கங்கையினும் புனிதமாகிவிட்டது
சபர்மதி- ஆற்றில்
ஆயிரக்கணக்கில் மிதந்து
சென்று கொண்டிருந்தன
எரித்துக் கொல்லப்பட்டவர்களின்
பிணங்கள்
இன்னும் எரிந்தபடி


இளையோரும் முதியோரும்
இன்னும் பிறக்காத கருக்களும்....
கொல்லப்படுவதற்கென்ன வயதிருக்கிறது?

அவற்றின்
உற்றாரும் உறவினரும்
உயிருக்குப் பயந்து
ஓடிக் கொண்டிருந்தனர்
மான்கள்போல.

'சதி'காரர்கள்
விரட்டிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை
உடன்கட்டை ஏற்றுவதற்கு.

மரண ஓலமோ
உயிர்ப்பிச்சைக் கதறலோ
கொலை வெறிக் கூச்சலோ
எல்லாம் மூழ்கிவிட்டன
நதியின் அமைதியில்.

நகருக்குள்ளிருந்து
பெருக்கெடுத்து வந்த
நரகுருதி வெள்ளம்
நதியில் கலந்து
நீரை அடர்த்தியாக்கிவிட்டது
போலும்.

சபர்மதி சலசலப்பின்றி
அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது

நதியில் மிதந்துசெல்லும்
பிணங்களின் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்துவிட்டதிப்போது

ஆனால், நாட்டுக்குள்
நடைபிணங்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருக்கிறது

பினந்திண்ணிகள் இப்போது
உண்ட களைப்பில்தான்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன

செரித்த பின் அவை
மீண்டும் வேட்டைக்குக் கிளம்பும்
நடக்கும் பிணங்கள்
நடக்காத பிணங்களென்ற
பேதமில்லை அவற்றுக்கு.

அவர்கள் கூறுவது போல்
அமைதிதான் நிலவுகிறது
ஆம்; அமைதி
மயான அமைதி

நதிகள் நாகரீகத்தின்
தொட்டில் என்பார்கள்
சபர்மதி நதிதீரமோ
சுடுகாடு ஆகிவிட்டது
நாகரீகத்தின் சுடுகாடு.


   -அசோகன் முத்துசாமி (எம்.அசோகன்)

(குஜராத் மதப்படுகொலைகளையொட்டி 2002ல் எழுதப்பட்ட கவிதை. 11.8.2002 தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது.).






Saturday, May 14, 2011

புத்தன் அழுதான் - அசோகன் முத்துசாமி (எம்.அசோகன்)




எல்லாம் முடிந்துவிட்டது

அனைவரும் எரிந்து
கருகிச் சாம்பலாயினர்

அனைத்தும் உருகிக்
கரைந்து மறைந்தன

பூமிப்பெண்ணை சூரியன்
கட்டித் தழுவிக் கொண்டான்

அகலிகை கர்ப்பமுறவில்லை
இனி என்றென்றும்
தாயாகப் போவதில்லை

எல்லாம் முடிந்துவிட்டது

சாகாவரம் பெற்ற வள்ளுவன்
சமாதியின் சுவடில்லை

மீளாத்துயர் மீட்கும் பாரதியைப்
பார்த்தவரில்லை படித்தவரில்லை

அழியாக் காவியம் படைக்க
கம்பனில்லை காளிதாசனில்லை

எல்லாம் முடிந்து விட்டது

ஆர்க்கமிடீஸ் குளிக்க
தண்ணீருமில்லை தொட்டியுமில்லை

நியூட்டன் இளைப்பாற
மரமுமில்லை பழமுமில்லை

ஐன்ஸ்டீன் விளக்கிச் சொல்ல
தெருவுமில்லை திசையுமில்லை

எல்லாம் முடிந்து விட்டது

கெட்ட போரிட்ட உலகம்
வேரோடு சாய்ந்துவிட்டது

புதிதாய்ச் செய்வதற்கு
மண்ணில் ஈரமில்லை

செவ்வாயிலிருக்கும்
நீரைக் கண்டுபிடிக்க

மனிதன் மீண்டுமொரு முறை
குரங்காய்ப் பிறந்து
டார்வின் வழியில்
நடையாய் நடந்து
...............

புத்தன் அழுதான்
போதி மரத்தையாவது
விட்டு வைத்திருக்கக் கூடாதாவென்று!

(1998ல் பாஜக அரசாங்கம் அணுவெடிப்பு சோதனை நடத்தியபோது எழுதிய கவிதை. தீக்கதிர்-வண்ணக்கதிரில் வெளிவந்தது.)




Wednesday, May 11, 2011

அடையாள அரசியலின் உள் முரண்பாடுகள் 2 -அசோகன் முத்துசாமி

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திமுக அமைச்சரான ஆ.ராசா மீது முதன் முதலில் குற்றச்சாட்டு எழுந்த போது திமுக தலைவர் கருணாநிதி என்ன சொன்னார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். ராசா ஒரு தலித் என்பதால்தான் இப்படி பழி சுமத்துகிறார்கள் என்றார். சமூகநீதியின் மொத்த குத்தகைதாரர் என தன்னை அழைத்துக் கொள்பவர் அவர். அவரது சப்காண்டிராக்டர்களான கி.வீரமணியும், சுப.வீரபாண்டியனும் இது ஒரு பார்ப்பன சதி என்று வழிமொழிந்தனர். இது கிட்டத்தட்ட ஊழல் செய்வதிலும் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார்களோ என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது என்லாம். அதாவது, அதிகாரம் எப்படி மேல்சாதியினருக்கு மட்டும் உரித்ததில்லையோ அது போல, ஊழல் செய்வதும் மேல்சாதியினரின் பிறப்புரிமை அல்ல என்று திமுக தலைமை வாதிடுவது போல் இருந்தது. நிற்க. ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம் என்பது பரவலான மக்கள் கருத்தாக ஆன பின்னர் ராசா ராஜினாமா செய்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராசா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிரச்சனை  அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. ஊழல் பணம் எங்கே சென்றது? யாரெல்லாம் அதனால் பயன் பெற்றார்கள்? என.  கலைஞர் தொலைக்காட்சிக்கு சில வடமாநில நிறுவனங்கள் மூலம் வந்த 200 கோடி ரூபாய் பணம் 2ஜி ஊழல் பணம்தான் என்கிற சந்தேகத்தின் அல்லது குற்றச்சாட்டின் அடிப்படையில்கலைஞர் டிவியின் இயக்குனர்களில் ஒருவரான திமுக எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் குற்றவாளி என்று மத்தியப் புலனாய்வுத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கனிமொழியையும் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கோரியது. அதற்கு எதிராக வாதாடிய கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி 'அலைக்கற்றை ஊழலில் அனைத்தையும் செய்தது ராசாதான் அவர்தான் பொறுப்பு. கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்று வாதிட்டார். மொத்த பழியையும் ராசா மீது ஜெத்மலானி சுமத்துகிறார். ஆனால், கருணாநிதியோ, அவரது சப் காண்டிராக்டர்களோ ஜெத்மலானியை விமரிசிக்கவில்லை. ராசா தலித் என்பதால்தான் அவர் இப்படிக் குற்றம் சாட்டுகிறார் என்று சொல்லைவில்லை. இப்போது ராசா ஒரு தலித் என்பதையே மறந்து விட்டார்களா என்ன? காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கனிமொழி கருணாநிதியின் மகள். அவர்ழிக் காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் பலியிட  அவர்கள் தயார். எந்தக் கோட்பாட்டை வேண்டுமானாலும் பலியிடத் தயார். சமூக நீதி கருணாநிதியின் வீட்டு வாசல் வரைதான் வரலாம்.  சமூக நீதி-அது பெரியார் சொன்னதாக இருந்தாலும், அம்பேத்கர் கொன்னதாக இருந்தாலும்-அவரது வீட்டிற்குள் நுழைய முடியாது. அது சமூக நீதி நுழைய முடியாத, நுழையக் கூடாத பார்ப்பன கர்ப்பக்கிருகம் போலும். வர்க்கப் பார்வையை மறுக்கும், வர்க்கங்களின் இருப்பை மறுக்கும் அடையாள அரசியலின் அடிப்படையான முரண்பாட்டிற்கு இதுவும் ஒரு உதாரணம். வெறும் அடையாளம் அந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்மை செய்வதில்லை. அதற்குள்ளும் பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை. 

Wednesday, April 27, 2011

கடவுளின் மரணம்





அசோகன் முத்துசாமி


இதற்கு முன்னர் பூமியில் ‘அவதரித்த’ எல்லாக் ‘கடவுளர்களையும்’ போலவே சாய்பாபாவும் செத்துப் போய்விட்டார். இது பக்தர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இப்படிச் சொல்வதால் அவர்களுக்குக் கோபம் கூட வரலாம். ஆனால், என்ன செய்வது? பிறந்ததெல்லாம் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது  இயற்கையின் விதி.
அந்த விதியை சாய்பாபாவின் அற்புத ஆற்றல்கள் கூட மாற்ற முடியாது. வெறும் காற்றிலிருந்து சிவனையே அவரால் வரவழைக்க முடியும். அதாவது, சிவ லிங்கத்தையே. (பகுத்தறிவாளர்களே அதற்குள் அவசரப் படாதீர்கள்.) . ஆனால், அவரைக் காப்பாற்ற சிவன் வரமாட்டார். அல்லது வரவில்லை. காரணம் வெகு எளிமையானது. சிவலிங்கம் இருக்கின்றது. அது நம் அனைவருக்கும் தெரியும். அது வெறும் நம்பிக்கை அல்ல. அதனால் அது வருகின்றது. ஆனால், சிவன்?
சாய்பாபா அவரது பக்தர்கள் பலர் கூறுவது போல் தன்னலமற்றவர்தான். பொது நலம் பேணுபவர்தான். இல்லை என்றால் நித்தம் நித்தம் தன் அற்புத ஆற்றலால் சிவலிங்கங்களை உற்பத்தி செய்து நாடெங்கும் கடை போட்டு விற்றிருக்க மாட்டாரா?
வேறொரு வகையில் பார்த்தால் அவர் உலகின் மிகச் சாமர்த்தியமான வியாபாரிகளில் ஒருவர். வருடத்தில் சில நாட்கள், அதுவும் எப்போதாவது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களில் சிலருக்கு மட்டும் சிவலிங்கத்தை வரவழைத்துக் கொடுக்கின்றார். வெறும் சாம்பல் விபூதியை வரவழைத்துக் கொடுக்கின்றார்.
எங்கிருந்து வரவழைக்கின்றார் என்கிற கேள்வியை விட்டுத் தள்ளுங்கள். தன் சட்டைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டுதான் பக்தர்களுக்குத் தரிசனம் தரவே வருகின்றார் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? எத்தனை முறைதான் நிரூபிப்பது?எப்படியோ அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்பதையும்அவர் சாதாரண மனிதர்தான் என்பதை இயற்கை நிரூபித்து விட்டது.
அந்த சிவலிங்கங்கள் அவருக்கு அல்லது அவரது மடத்துக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றுத் தருகின்றன. பத்தோ, இருபதோ அல்லது நுhறோ பெறுமானமுள்ள சிவலிங்கத்தின் விலை பல கோடிகள். சாமர்த்தியமான வியாபாரி இல்லையா என்ன?
மேலும், சிவலிங்கமானாலும், வெறும் சாம்பலானாலும் அவற்றுக்கும் பிரான்ட் நேம் இருக்கிறது ஐயா. திருப்பூர் பனியனை விற்கிறவன் விற்றால்தான் நல்ல விலை வரும். ஆனால், அது தயாரித்தவனுக்கு வருமா வராதா என்பது வேறு விஷயம்.
சரி. இதையெல்லாம் விடுங்கள். அவரது தத்துவங்களில் ஏதாவது புதுமை இருக்கிறதா எனக் கேட்டீர்களானால் அதற்கும் இல்லை என்பதுதான் பதில். இந்திய மதச் சிந்தனை மரபில் பல நுhறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டவற்றைத்தான் அவர் திரும்பச் சொல்லியிருக்கின்றார். எல்லோர் மீதும் அன்பு செலுத்து என்பது புதிய தத்துவமா என்ன? மகிழ்ச்சியை வெளியே தேடாதே, அது உனக்குள்தான் இருக்கிறது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன போதனை அல்லவா? அவரது பொன் மொழிகளைப் படித்தால் தெரியும். புதிய சரக்கு ஒன்றுமில்லை என்பது.
சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்ட கீதையின் பல கருத்துக்களை இவர் தன்னுடையது போல் கூறியிருக்கின்றார். ஒரு சாம்பிள்: கடவுளே அனைத்தையும் செய்விக்கிறான். நீ வெறும் கருவி மட்டுமே.
கண்ணணே கொலை செய்கின்றான், நீ செய்யவில்லை என்று கண்ணன் அர்ஜீனனுக்குச் சொன்னது நினைவிற்கு வர வேண்டும்.
தத்துவம் புதிதில்லை என்றால், பழையதையே சொல்லும் அவர் பின்னால் மக்கள் ஏன் புதிதாகச் செல்ல வேண்டும்? பழைய நபர்கள் மீது மக்கள் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம். அல்லது பழைய சாமியார்கள் அல்லது மதகுருக்கள் சலித்துவிட்டார்கள் என்று அர்த்தம். அல்லது புதிய புதிய மொந்தைகள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று அர்த்தம்.
சாய்பாபா ஒரு மதச்சார்பற்ற சாமியார் என்று அவரது பக்தர்கள் புகழ்கின்றனர். சில பொது நோக்கர்களும் கூட சிலாகிக்கின்றனர். அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று சங்பரிவாரிகள் அவரிடம் பல முறை கேட்டிருக்கின்றனர். ஆனால், பாபா மறுத்துவிட்டார். நல்லது. ஆனால், மதவெறியர்களின் இயக்கத்தை அவர் கண்டிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்து, முஸ்லிம், கிறித்துவம் என பல மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரது பக்தர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களை அவர் இழக்க முடியாது. வகுப்புவாதிகளை ஆதரிக்காததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க முடியும். ஆனால், என்ன காரணத்திற்காக இது போல் நடுநிலை வகித்திருந்தாலும் அது இந்து மத வெறியர்களுக்கே சாதகமாகிப் போனது என்பதுதான் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து நாம் பெறும் முடிவு.
போதாக்குறைக்கு, இறைச்சி உணவைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவர் வன்முறை உணர்வையும்,  மிருக நோய்களையும் வளர்க்கிறார் என்றும் அவர் ‘பொன் மொழிந்திருக்கிறார்’. எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் இருக்கின்றார். எனவே, நீங்கள் ஒரு மிருகத்தை அல்லது பிராணியைக் கொல்லும்போது கடவுளுக்கு துன்பத்தையும், வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்துகின்றீர்கள் என்பதும் அவரது கூற்றுகளில் ஒன்று. (அப்படியா, கடவுளுக்கு இது போன்ற உணர்ச்சிகள் உண்டா?). ஆக, அவரது கடவுள் சைவக் கடவுள்.
மேலை நாடுகளில் சைவம், அசைவம் என்பது வெறும் உணவுப் பழக்கம்தான். இந்தியாவில் அது மதம் சம்பந்தப்பட்ட விவகாரம். சாய்பாபாவின் கருத்துக்களில் பல வகுப்புவாதிகள் பயன்படுத்திக் கொள்ள ஏற்றவையாக இருக்கின்றன.
போகட்டும்.
சாய்பாபா கல்வி நிலையங்களை நடத்துகின்றார். மருத்துவ மனைகள் கட்டி இலவசமாக சிகிச்சை வழங்குகின்றார்.  சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வரும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் கொடுத்து உதவினார். அதே போல் ஆந்திராவிற்கும் உதவி செய்துள்ளார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, செய்யாததை எல்லாம் அவர் செய்தார். இப்படியாக அவரது புகழ் பாடப்படுகின்றது.
எடுத்த எடுப்பில் எழும் கேள்வி இதுதான். அரசாங்கம் ஏன் செய்யவில்லை?
அரசாங்கம் செய்ய வேண்டியதை எல்லாம் இவர் ஏன் செய்கிறார்?
கல்வியையும்,மருத்துவத்தையும் ஆடம்பரமான சேவைகளாக ஆக்கியது அரசாங்கம்தான். அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணற்றோர். பாபா அறக்கட்டளை அவர்களில் விரல் விட்டு எண்ணத்தகுந்தவர்களுக்கு இலவச சேவை வழங்குகின்றது. இது போல்தான் கல்வி நிலையங்கள் போன்ற இதர உதவிகள் மற்றும் சேவைகள்.  
இந்தியாவில் உள்ள சாய்பாபா அறக்கட்டறையின் சொத்து மதிப்பு மட்டும் 40,000 கோடிகள். உலகெங்கும் உள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் 1,45,000 கோடிகள்.  இவ்வளவு பெரிய சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? பக்தர்களின் காணிக்கைகளின் மூலம் வந்தன. பக்தர்கள் என்றால் பணக்கார பக்தர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், கள்ளக்கடத்தல் காரர்கள் இன்னும் இது போன்றோர் ஆகியோரின் கருப்புப் பணம். இந்த தனவந்தர்கள் யாரை எவ்வளவு சுரண்டினார்களோ, எத்தனை ஊர்களை அடித்து உலையில் போட்டார்களோ தெரியாது.
கூலி சற்று அதிகமாகக் கொடுக்க மறுப்பவர்கள், அரசாங்கத்திற்கு வரி கட்ட மறுப்பவர்கள் பாபாவிற்கு மட்டும் வாரிக் கொடுக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? மனசாட்சியின் உறுத்தலா? இதயமற்ற உலகத்தின் இதயமா அல்லது இதயமற்ற உலகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டமா?
அல்லது நேர்மையானவர்கள் கொடுக்கும் பணம் என்றால் அவர்கள் ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். நேரடியாக தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவதை விட்டு விட்டு ஏன் பாபா மூலம், அவருக்கு ஒரு தரகர் கமிஷனும் கொடுத்து, தர்மம் செய்ய வேண்டும்?
எப்படியாயினும் சகல தரப்பு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பாபாவைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர், முதல் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் குடியரசுத் தலைவர்கள் என்று இரங்கல் தெரிவிப்பதைப் பார்த்தால் ஒன்று தெளிவாகின்றது.
பாபாவுடைய பணக்கார பக்தர்களின் சொத்தை பறிக்க வேண்டாம். வரியை ஒழுங்காக வசூல் செய்தால் போதும். எத்தனையோ கோடி பேருக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கலாம். கல்வியை இலவசமாக வழங்கலாம். இன்னும் பல நகரங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கலாம்.
பாபா இந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகின்றார். தன்னுடைய போதனைகள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், தன்னுடைய சேவைகள் மூலம் அவர்களது சிந்தனையை திசைதிருப்பவும்  பாபாக்கள் தேவைப்படுகின்றனர். அதனால்தான் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வருகின்றனர். அதனால்தான் அவருக்கு அரச மரியாதை.
----------------------------27.4.11