Saturday, February 26, 2011

சாதிக் காலாச்சாரமும் பொருளாதர அடித்தளமும்


மனித மாண்புகள், சட்டங்கள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் கூடி பகிரங்கமாகக் கலாச்சாரக் காரணங்களுக்காகப படுகொலைகள் செய்யும் சம்பவங்கள் நிறைந்த ஹரியானாashok_womanமாநிலத்தில் (இது பொதுவாக செழிப்பான மாநிலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது) சாதித் தாண்டியும், மதம் தாண்டியும் நடக்கும் திருமணங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இதற்குக் காரணம் சாதி மறுப்பு இயக்கம் எதுவும் அல்ல. ஏனெனில், அப்படி பிரத்தியேகமாக எதுவும் அங்கு இல்லை. பின், வேறு எதுதான் காரணம்?
பெண் சிசுக் கொலை. அதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து விட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு வெறும் 881 பெண்களே இருந்தனர். சில மாவட்டங்களில் 800க்கும் கீழே விழுந்து கிடக்கின்றது இந்த எண்ணிக்கை. இது ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் ஆண், பெண் விகிதாச்சாரக் கணக்கு. இப்படி பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனால் ஏராளமான சமூகப் பிரச்சனைகள் வரும் என்பதை அறிஞர்கள் பலர் உணர்த்தியிருக்கின்றார்கள்.
மணந்து கொள்ள பெண் கிடைக்காமல் ஆண்கள் பலர் திருமணமாகாதவர்களாகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கும். அது இருக்கும் பெண்களின் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும். பெண்கள் வல்லாங்கு செய்யப்படுவது, பாலியல் தொழில் பெருகுவது, ஆண் பெண் உறவில் பதட்டமும், இறுக்கமும் அதிகரிப்பது, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் அதிகரிப்பது, அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது. ஆனால், யாரும் முற்றிலும் எதிர்பாராத இரு விளைவுகளை இப்பிரச்சனை உண்டாக்கியிருக்கின்றது.
ஜாட் சாதியைச் சேர்ந்த பல்ஜித் சிங் ஒரு லாரி ஓட்டுநர். 35 வயது வரை திருமணம் ஆகவில்லை. ஏனெனில், பெண்ணே கிடைக்கவில்லை. இனி வேறு வழியில்லை என்று அசாமைச் சேர்ந்த 16 வயது ஏழை முஸ்லிம் பெண் சோனா காதும்மை மணந்து கொள்கிறார். அவர்கள் இருவருக்கும் இப்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது.
இப்போது ஹரியானாவில் இத்தகைய திருமணங்கள் சகஜம். ஹரியானா மாப்பிள்ளை, அசாமியப் பெண் (அல்லது சத்தீஸ்கர். ஆந்திரப்பிரதேசப் பழங்குடியினப் பெண்கள்). அவர் எந்த சாதியாக இருந்தாலும் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஏழைப் பழங்குடியினப் பெண்கள், ஏழை இஸ்லாமியப் பெண்கள்தான் இப்படித் தேர்வு செய்யப்படுகின்றார்கள். தலித் பெண்கள் மணம் செய்து கொள்ளப்படுகிறார்களா, இல்லையா என்பது குறித்து விவரம் இல்லை.
பெண் சிசுக் கொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ரெட் கிராஸ் சொசைட்டி பிவாண்டி மாவட்டத்தில் மட்டும் இது போல் 100 மணமகள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர் என்கின்றது. இதற்கென்றே பிரத்தியேகமாக தரகர்கள் இருக்கின்றார்கள். இத்திருமணத்திற்காக சிங் பெண் வீட்டாருக்கு நல்ல தொகையும் கொடுத்திருக்கின்றார். வரதட்சணை போய் பரிசம் போடுவது வந்து விட்டது. தான் இப்போது சௌகரியமாக இருப்பதாக அவர் கூறுகின்றார். அவரது நண்பர்களெல்லாம் அவரைப் பார்த்து பொறாமைப்படுகின்றார்களாம். எங்களுக்கும் இதுபோல் பெண் கிடைக்க என்ன வழி என்று அவரைக் கேட்கிறார்களாம். (ஆதாரம்:தி எகனாமிஸ்ட், மார்ச் 4, 2010).
ஒரு பக்கம் சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவை என்கின்ற பெருமை இத்திருமணங்களுக்கு இருந்தபோதும், சாதி, மத, ஆணாதிக்கம் என்பது வெறொரு ரூபத்தில் வெளிப்படுகின்றது. முஸ்லிமான சோனா இப்போது ’இந்து’வாகிவிட்டார். அல்லது இந்துவாக்கப்பட்டுவிட்டார். அவர் ஜாட் சாதியின் கலாச்சாரத்தையே கடைப்பிடிக்க வேண்டியவராகவும் இருக்கின்றார். அவரது ஏழ்மையை அவரது மதம் போக்கவில்லை. இந்துக்களின் ஏழ்மையையும் அல்லது வேறு எந்த மதத்தவரின் ஏழ்மையையும் அவர்களது மதம் போக்குவதில்லை. ஒன்று அதை நியாயப்படுத்தும் அல்லது வெற்றுச் சமாதானம் கூறும். இதுதானே உண்மை நடப்பு?
இன்னொரு பக்கம் ஆண்களைப் பொருத்த வரையில் அவர்களது சாதியோ அல்லது மதமோ தங்களது தனிமைப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. ஆனால் தங்களது சாதியையும், மதத்தையும் விடாமல் வைத்துக் கொள்ள முடிகின்றது. அதே போல் ஆணாதிக்கத்தையும் தொடர முடிகின்றது. காதல் திருமணங்களிலேயே இதுதான் நடக்கின்றது. மேலும், இப்படி இறக்குமதி செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் பிராணிகளைப் போல்தான் நடத்தப்படுகின்றார்கள். சொந்த சாதி, சொந்த மதப் பெண்களுக்கே அதுதான் நிலைமை எனும்போது, இப்படி விலைக்கு வாங்கப்பட்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த இடத்தில்தான் கலாச்சாரக் காவலர்களான ’கப் பஞ்சாயத்துகள்’ (ஜாட் சாதிப் பஞ்சாயத்துகள்) நடத்தும் ஆதிக்க சாதி அல்லது சாதிகளின் ஆதிக்க வர்க்கங்கள் ஒழுக்கம் என்பதை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவது அம்பலமாகின்றது. கப் பஞ்சாயத்துகள் என்பது என்ன? ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கும் அல்லது அப்படிச் செய்து கொண்டவர்களைத் தண்டிக்கும் ஒரு நிறுவனம். நிறுவனம் என்ற உடனேயே எங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள் என்று தேட வேண்டாம். எங்கேயும் கிடைக்காது. அரசியல்வாதிகள்தான் வாக்குகளுக்காக இவர்களைத் தேடி வருவார்கள். அரசாங்கம் இவர்களைத் தேடி வராது. இவர்கள் மீது கை வைக்கவும் பயந்து கொள்ளும். இதற்கு வெறும் சாதி குணம் மட்டும் இருக்கின்றதா அல்லது வர்க்க குணமும் இருக்கின்றதா?
ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வதை தடுக்கும் இந்த சபையால் உண்டாக்கப்பட்ட பிரச்சனைகள் பற்றி ’அவுட்லுக்’ இதழ் (ஏப்ரல் 26, 2010)நடத்திய ஆய்வு பின்வரும் முடிவுகளைத் தருகின்றது. ’’பிவானி. ஜஜ்ஜார், ரோடக் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவை. கப் பஞ்சாயத்துகளால் சமீபத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளில் பெரும்பாலானவைற்றிற்கு ஆதாரமாக இருப்பது தனிப்பட்ட தகராறுகள் அல்லது நில அபகரிப்பு முயற்சிகளாகும். அப்படி இல்லை எனில், அவை பஞ்சாயத்து அரசியல் தொடர்பானவையாக இருக்கின்றன. ‘சட்டத்திற்குக் கட்டுப்படாத இந்த பஞ்சாயத்துகள் (கங்காரு கோர்ட்ஸ்) ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களையே தாக்குகின்றன. செல்வாக்கு மிக்க குடும்பங்களை எப்போதுமே குறி வைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்’ என்று ஹரியானா நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் உறுப்பினரும், கப் பஞ்சாயத்துகளின் சித்திரவதைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவருமான டாக்டர்.டி.ஆர்.சௌத்ரி கூறுகின்றார். பிரச்சனைகள் வசதிக்கு ஏற்றபடி பொறுக்கி எடுத்துதான் எழுப்பப்படுகின்றன. பெரும்பலான சமீபத்திய பிரச்சனைகளில் சமூகக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது என்பதைவிட மற்ற அம்சங்களே அவை எழுப்பப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன’’
“’இந்நாட்களில் கப் பஞ்சாயத்துகள் எங்களது பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை. ஆனால், ரகசியமான உள்நோக்கங்களுக்காக அழித்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் கிராமப்புற ஹரியானாவில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்கிக் கொண்டிருக்கின்றன’’ என்கிறார் டாக்டர் சதீஷ் கெலாவட்.
ஹரியானா கிராமங்களில் பல்வேறு வகையான தடைகள் நடப்பில் இருக்கின்றன. ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வது அண்ணன் தங்கை திருமணம் செய்து கொள்வதைப் போல என்று தடுக்கப்பட்டிருக்கின்றது, அதே போல் ஒரு கிராமத்திற்குள் வாழும் ஆண் பெண்களுக்கு இடையிலான திருமணங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி சில கிராமங்கள் சகோதர கிராமங்களாகக் கருதப்பட்டு அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணமும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், அனைவரும் அல்ல. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
“’ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் இருக்கின்றது பாய்னி பாத்ஷாபூர் என்கிற ஊர். அந்த ஊரைச் சேர்ந்த பல்வந்த் சிகாக் ஒரு பணக்கார விவசாயி. ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குள் திருமண உறவு கூடாது என்கின்ற கடுமையான சட்டதிட்டங்களை மீறி அவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்பாலா கோதாரா என்கின்ற பெண்ணை 1997ல் மணந்து கொண்டார். “நான் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பதால் கப்பின் ஆட்சேபணையை என்னால் எதிர்க்க நிற்க முடிந்தது. எனக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாலும், சட்டம் தெரியும் என்பதாலும், அடித்தால் பதிலடி கொடுக்க முடியும் என்பதாலும் எங்கள் திருமணத்திற்கு எதிராக ஆரம்பத்தில் வெளிப்பட்ட முணுமுணுப்புகள் மெல்ல அடங்கிவிட்டன’’ என்கின்றார்.
ஆனால், பிவானி அருகிலுள்ள சமாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபகவான். லேகா கோத்திரத்தைச் சேர்ந்த இவர் ராஜஸ்தான் காவல்துறையில் பணிபுரிகின்றார். அவர் தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அனிதா ஜீத்ராவை மணந்தார். அவர்கள் இருவரும் வெவ்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்ற போதும், தங்களுக்கிடையில் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிககும் 12 கிராமங்களில் இரண்டைச் சேர்ந்தவர்கள் என்கிற பெயரில் கப் பஞ்சாயத்து அத்திருமணத்தை எதிர்த்தது. அதாவது எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாத அதுவும் அண்ணன் தங்கைக்கு இடையில் நடந்த திருணமாம். நாசமாப் போச்சு. ஆனால், உண்மையில் அந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் சார்ந்த, அதிகாரம் சார்ந்த காரணங்கள் இருந்தன.
பகவானின் தந்தை ரண்பீர்சிங் ஒன்று அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவருக்குச் சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தை பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்று கப் உத்தரவிட்டது. அவர்கள் மறுத்தபோது, சாதிப் பஞ்சாயத்து குண்டர்கள் அவர்களது நிலங்களைத் தாக்கினர். இரண்டு ஆழ்துளை கிணறுகளை அழித்தனர். பகவான் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவும். சட்டத்தை அமல்படுத்தும் துறையைச் சேர்ந்தவருக்கே இந்தக் கதி.
பகவானின் குடும்பம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. எப்படியாயினும், கலாச்சாரக் காவலர்கள் கலாச்சார விஷயங்களில் மட்டும் தலையிடுவதில்லை, கலாச்சாரத்தை நிலைநாட்ட பொருளாதார விஷயங்களிலும் தலையிடுகின்றனர். நிலத்தைப் பறிக்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இந்த பயத்திலேயே பலர் உரிய வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் தவிக்கின்றனர்.
ரண்பீர் சிங் விஷயத்தில் இன்னொரு கோணமும் இருக்கின்றது. கிராமத் தலைவர் (சர்பஞ்ச்) தேர்தலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் வேறொரு பெண் வேட்பாளரை ஆதரித்தார்களாம். ஆனால் அவர் தோற்றுவிட்டார். வெற்றி பெற்ற தலைவர் தன்னைப் பழிவாங்க தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று கூறும் சிங் “தன்னைக் கிராமத்தைவிட்டு தூக்கி எறிந்து விடுவோம் என்று மிரட்டியதால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியதாயிற்று’ என்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி அவரது குடும்பத்தையும். வயலையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரண்பீர் சிங்கிற்கு அரசு நிர்வாகத்தின் ஆதரவு இருக்கின்றது என்று தெரிந்ததும் இப்போது அந்தக் கலாச்சாரக் காவலர்கள் சமரசத்திற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்களாம்.
மற்றொரு உதாரணம். ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் பேத்தி சுருதி சௌத்ரி, பிவானி தொகுதியின் மக்களவை உறுப்பினர். அவர் ஒரு அசாமிய இளைஞரை மணந்து கொண்டபோது யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அவர்களது ஜாட் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எந்தப் பிரச்சனையையும் யாரும் எழுப்பவில்லை. (செல்வந்தர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று பெரியார் ஒரு முறை கூறியிருப்பதை இவ்விடத்தில் கவனப்படுத்தலாம். அதாவது பொருளாதார அல்லது வர்க்கக் காரணிகளையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் அல்லது எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்).
ஆனால், அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள கார்காடி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான சுரேந்தர் ஜாட் சாதியைச் சேர்ந்த பூனம் என்கின்ற பெண்ணை மணந்தபோது பெரும் ரகளையாகிவிட்டது. கப் அவர்களைப் பலவந்தமாகப் பிரித்து, பூனத்திற்கு வேறிடத்தில் திருமணம் செய்து வைத்தது. அதிலிருந்து தப்பிய அவர், ஏற்கனவே தப்பியோடியிருந்த சுரேந்தருடன் மீண்டும் இணைந்தார். அவர்கள் பல மாதங்கள் தலைமறைவாகத்தான் வாழ்ந்தார்கள். எம்பி சுருதியின் திருமணத்தை எதிர்க்காத நீங்கள் ஏன் எங்களது திருமணத்தை எதிர்க்கின்றீர்கள் என்று பூனமும், சுரேந்தரும் கேட்டபோது ’’அவர்கள் பெரிய மனிதர்கள்’’ என்று கலாச்சாரக் காவலர்கள் பதில் சொன்னார்களாம். பணம் இருந்தால் சாதியாவது, மதமாவது, மண்ணாவது.
நல்லது. இது மாதிரி ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். ஆங்கில ஊடகங்கள் அவற்றை பெருமளவில் வெளிக் கொண்டு வந்துள்ளன. சாதியோ, கலாச்சாரமோ பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியும், ஏழைகளுக்கு ஒரு மாதிரியும்தான் செயல்படுகின்றன. இம்மாதிரிப் பஞ்சாயத்துகளால் ஏழைகள் பலர் கொல்லப்பட்டு விட்டனர். அதாவது, ஏழைகள் சாதிக் கலாச்சாரத்தைக் கறாராகப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் தொலைத்துக் கட்டிவிடுவார்கள். அல்லது இழித்து ஒதுக்கிவிடுவார்கள்.
ஆனால் பணத்தின் முன் கலாச்சாரம் நாய் போல் வாலாட்டும். பணக்காரர்கள் அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுக்கு ஆதாயம் என்றால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்த முதலாளியும் சொந்த சாதிக்காரனை வேலைக்கு வைத்துக் கொள்வது சாதிப் பாசத்தினால் அல்ல. தன்னுடைய சுரண்டலுக்கு சாதி ஒரு கவசமாகப் பயன்படும் என்றுதான். சாதியின் பொருளாதார அடித்தளம், கலாச்சாரத்தின் பொருளாதார அடித்தளம் என்ன என்பது இப்போது புரிந்திருக்க வேண்டும்.
’அவுட்லுக்’ இதழின் சந்தர் சுதா தோக்ரா இந்த விவரங்கள் அடங்கிய தன்னுடைய கட்டுரையை பின்வருமாறு முடிக்கின்றார். “’அசாம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வறிய பழங்குடியினப் பெண்களை ஜாட்டுகள் திருமணம் செய்து கொள்ளும் சமீபத்திய நடைமுறையை ஏன் கப் பஞ்சாயத்துகள் ஆட்சேபிப்பதில்லை ஜனவாதி மகிளா சமிதியின் (ஜனநாயக மாதர் சங்கத்தின்) மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான் என்று கேள்வி எழுப்புகின்றார். ’இங்கே போதுமான பெண்கள் இல்லை. ஆதலால், வாரிசுகளை உற்பத்தி செய்யும் வேலையைச் செய்யும் இந்தப் பெண்கள் பிராணிகளைப் போல் நடத்தப்படுகின்றார்கள். இத்தகைய திருமணங்களை அல்லது நடைமுறைகளை எந்த சாதிப் பஞ்சாயத்தும் ஆட்சேபித்ததில்லை’ என்கிறார் அவர்.
“கிராமப்புற ஹரியானாவில் இது போன்ற குரல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. போதுமான பெண்கள் இல்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்களின் திருமண விஷயத்தில் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும், காட்டுமிராண்டித்தனமான செயல்களைப் புரிவோர் என்று அபகீர்த்தி பெற்ற ஜாட் சாதியினரின் கப் பஞ்சாயத்துகள் வெகு விரைவில் அடங்கும்படி நிர்ப்பந்திக்கப்படலாம். தங்களுடைய ’சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில்’ தனிப்பட்ட மோதல்களும், அரசியலும் ஊடுருவவது அவற்றின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதை மட்டுமே செய்யும்’’.
இன்னும் சரியாகச் சொன்னால், பொருளாதார அடித்தளம் இல்லாமல், அதனால் உண்டாக்கப்படும் அல்லது உருவாகும் அதிகார அடித்தளம் இல்லாமல். சாதியோ, அல்லது அது போன்ற கலாச்சார பிற்போக்குத்தனங்களோ நீடிக்க முடியாது.
-அசோகன் முத்துசாமி ( masokansudha@gmail.com) நன்றி:கீற்று.காம். மார்ச் 2010

Wednesday, February 23, 2011

கோத்ரா:காரணமும் காரியமும்










அசோகன் முத்துசாமி

கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது சதியா விபத்தா என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. காரணம், அகமதாபாத் விரைவு நீதிமன்றம் அந்த எரிப்பு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு.
எரிப்பு சம்பவம் நடந்து, அதைக் காரணம் காட்டி சுமார் 1200க்கும் மேற்பட்ட மு°லிம்கள் வேட்டையாடப்பட்ட சில மாதங்களில் ரயில்வே துறை ஒரு விசாரணை நடத்தியது. அது அமைத்த பானர்ஜி கமிஷன் ரயில் எரிப்பு ஒரு விபத்து என்று அறிக்கை அளித்தது. ஆனால், நரபட்சிணி நரேந்திர மோடி அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏன் ஒப்புக் கொள்ளவில்லை?
2002 பிப்ரவரி 27ம் தேதி ரயில் எரிகின்றது. 28ம் தேதி சங் பரிவாரம் பந்த் நடத்துகின்றது. அன்றிலிருந்து தொடர்ந்து பல நாட்கள் விட்டு விட்டு குஜராத் மாநிலமெங்கும் கலவரங்கள் நடக்கின்றன. மன்னிக்கவும். கலவரங்கள் அல்ல, மு°லிம்கள் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. மோடி அதை நியாயப்படுத்துகின்றார். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச் செயல் உண்டு என்கிறார். ‘மு°லிம்கள்’ 59 இந்துக்களை, பெரும்பாலும் கரசேவகர்களை, கொழுத்தினார்கள். பதிலுக்கு நாங்கள் அவர்களை கொன்று குவிக்கிறோம். இதுதான் அவரது வாதம்.
இப்படிச் சொன்ன பிறகு ரயில் எரிந்தது விபத்தினால்தான் என்றால், படுகொலைகளை நியாயப்படுத்த முடியாது அல்லவா? ஆதலால், அவர் இது கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிக்னல் பாலியா என்கிற அரைச் சேரியைச் சேர்ந்த மு°லிம்கள்தான் ரயிலுக்கு திட்டமிட்டு தீ வைத்தார்கள் என்றார். அதற்கான சதியை அவர்கள் முதல் நாளே தீட்டி விட்டார்கள் என்றார். அவரது கட்சியும், அவரது அரசாங்கமும் அதையே சொன்னது. நியூட்டனின் விதிப்படி வேட்டையாடியது போதாதென்று இப்போது மேலும் 31 மு°லிம்களை சட்டபூர்வமாக வேட்டையாடப் போகின்றார்கள். நிற்க.
தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன.
மவுலானா உமர்ஜி என்பவர்தான் பிரதான சதிகாரர் என்று காவல்துறை கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது. குற்றப் பத்திரிக்கையில் அவரும், கோத்ரா நகராட்சியின் தலைவராக இருந்த பிலால் ஹீசேன் என்பவரும் முக்கிய சதிகாரர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். ஆனால், அவர்கள் இருவரையும் சான்றுகளே இல்லை என்று நீதிமன்றம்  விடுவித்து விட்டது. எப்படி இருக்கிறது கதை? முக்கிய சதிகாரர்கள் என்னப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்குமாம். ஆனால், சதிதான் நடந்தது என்று தீர்ப்பு வழங்குமாம்.
அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு போலவே இருக்கின்றது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக உள்ளே கொண்டு வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளுமாம். ஆனால், ராமர் அங்குதான் பிறந்தார் என்கிற சங்பரிவாரத்தின் வாதத்தையும் ஏற்றுக் கொள்ளுமாம், நிலத்தைப் பகிர்ந்தளிக்குமாம். அதாவது உண்மைகள் எப்படி இருந்தபோதிலும், வாதங்கள் எப்படி இருந்த போதிலும் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற முன் முடிவுடன் வழங்கப்பட்டது போல் இருக்கிறது அந்த தீர்ப்பு.
இந்த இருவர் மீது சாட்டப்படும் முக்கிய குற்றம் என்ன தெரியுமா? உமர்ஜி ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த மசூதியிலிருந்த ஒலிபெருக்கியின் மூலம் கோத்ரா மக்களை ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று சபர்மதி ரயில் பெட்டியில் உள்ள கரசேவகர்களைக் கொல்லுமாறு கத்தினார் என்பது குற்றச்சாட்டு. ரயில் நின்றிருந்த நடைமேடையியினருகில் தீ வைப்பதற்காக ஆட்களைத் திரட்டி வைத்திருந்தார் என்பது பிலால் மீதான குற்றச்சாட்டு. அவர்கள் இருவரையும் விடுவித்து விட்டு சதி என்று சொல்வதற்குக் காரணம் வேறு மாதிரி சொல்லக் கூடாது என்கிற முன் முடிவாகத்தான் இருக்க முடியும்.
நீதிமன்றம் முக்கிய ஆதாரமாகக் கொண்ட சாட்சிகள் அனைத்துமே சந்தேகத்திற்குரியவை. அஜய் பாரியா என்கிற கோத்ரா ரயில் நிலைய டீக்கடைக்காரர், மசூதியின் அருகே வசிக்கும் சிக்கந்தர் முகம்மது, தீ வைப்பதற்கு பெட்ரோல் வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பங்கில் வேலை பார்க்கும் பிரபாத்சிங் சவுகான், ரஞ்ஜித் ஜோதா ஆகியோர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சலீம் பெஹ்ரா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையே நீதிமன்றம் தனது தீர்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், இவற்றை நம்ப முடியாது, ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்ஷி.
ஏனெனில், இவர்கள் ஐந்து பேரும்  தங்களது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர். அஜய் பாரியா மற்றும் சிக்கந்தர் ஆகியோரிடம் சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்தே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முதலில் தாங்கள் வாகனங்களுக்குத் தவிர தனியாக பெட்ரோல் விற்கவே இல்லை என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நோயல் பார்மர் என்கிற கிரைம் பிராஞ்ச் அதிகாரிக்கு மாற்றப்பட்ட பின்னரே சங் பரிவாரத்திற்குச் சாதகமான வாக்குமூலங்கள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன என்கிறார் முன்ஷி. மேலும்,   சலீமின் ஒப்புதல் வாக்குமூலமம் பொடா சட்டம் அமலில் இருந்தபோது பெறப்பட்டதாகும். பொடாச் சட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் அவர். (ஆதாரம்: மான° தா°குப்தா, தி ஹிந்து, 23.2.11).
விபத்து, சதி தவிர மற்றொரு கோணமும் இந்த கொடுமைக்குக் கூறப்படுகின்றது.
டைம்° ஆப் இந்தியாவின் கிங்சுக் நாக் தன்னுடைய வலைத்தளத்தில் கடந்த 23ம் தேதி பின்வருமாறு எழுதியள்ளார்.
‘பிப்ரவரி 27க்குப் பிறகு ஒரு மாத காலம் நானும் மற்ற பலரைப் போல் சபர்மதி எக்°பிர°  ரயிலின் எ°-6 பெட்டி வேண்டுமென்றே கொளுத்தப்பட்டது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் நான் கோத்ராவிற்கு சென்றிருக்கவில்லை. மார்ச் 2002 இறுதியில் நான் கோத்ரா சென்றபோதுவழக்கை விசாரித்துக் கொண்டிருந்த பாவா என்கிற டிஎ°பி மற்றும் அவரது மேலதிகாரி ஐஜி அக்ஜா ஆகியோரைச் சந்தித்தேன். கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த புறக் காவல் நிலையத்தில் அவர்கள் இருவரும் இருந்தனர். சதி முடிச்சை விடுவிப்பதில் எவ்வளவு துhரம் முன்னேறியிருக்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்டேன். ஒரு வேளை சதி நடந்திருந்தால் இன்று வரை அதற்கான சான்று தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றனர். அவர்கள் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு ‘சான்று எதுவும் இல்லை என்றால் பெட்டி எப்படி எரிந்தது?’ என்று அவர்களைக் கேட்டேன். நிச்சயமாகச் சொல்ல முடியாது என்ற அக்ஜா , நடைமேடையில் எப்போதும் டீ விற்பவர்கள் 20,30 பேர் இருப்பார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் சிறு கே° சிலிண்டரும் அடுப்பும் கைககளில் வைத்திருப்பார்கள் என்றும், டீ விற்பவர்களுக்கும் கரசேவகர்களுக்கும் இடையில் அப்போது நடந்த மோதல் மோசமடைந்து டீ விற்பவர்கள் சிலர் எரியும் அழுக்குத் துணிகளை பெட்டிக்குள் வீசியிருக்கலாம் என்றார். இதனால் நெருப்பு பற்றியிருக்கலாம் என்றும், இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறதேயொழிய, தான் உறுதியாகச் சொல்லவில்லை என்றும் மேலும் கூறினார். நான் ஐஜியிடம் அவரது பெயரைக் குறிப்பிட்டு இந்த செய்தியை வெளியிடலாமா என்று கேட்டேன். ஆம் என்று சொன்ன அவர் உணர்ச்சிவசப்பட்டார். தான் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ஓய்வு பெறப்போவதால் உண்மையைத் தவிர வேறு எதைப் பற்றியும் தான் கவலைப்படப் போவதில்லை என்றார். பாவாவைப் பார்த்தபடி அவர் கூறினார்: ‘இவருக்கு இன்னும் ஒரு மாதம்தான் சேவை பாக்கியிருக்கின்றது. அவரும் ஏன் கவலைப்பட வேண்டும்?’. (டைம் °ஆப் இந்தியா வலைப்புள்ளிகள்).
செய்தி அப்படியே டைம்° ஆப் இந்தியாவின் அனைத்து பதிப்புகளிலும் வெளியிடப்பட்டது. செய்தி வெளியான அன்று பிற்பகலில் அக்ஜா அவருக்கு போன் செய்து புலம்பியிருக்கின்றார். அவருக்கு தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. மாலையில் காவல்துறையின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் நாக்-கை தொடர்பு கொண்டிருக்கின்றார். நீங்கள் வெளியிட்டிருக்கும் செய்திதான் உண்மை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாங்கள் ஒரு மறுப்பு வெளியிட வேண்டுமென்று அக்ஜா விரும்புகின்றார். நான் அனப்பி வைக்கிறேன். நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றிருக்கின்றார். வழ வழா கொழ கொழா என்று முழுப்பலாக இருந்த அதை நாக் குப்பையில் தாக்கி வீசிவிட்டார். பின்னர் அக்ஜா பதவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிக்னல் பாலியா பகுதியைச் சேர்ந்த மு°லிம்கள் செய்த சதி என்கிற மோடியின் கூற்றுக்கு ஏற்ப காவல்துறை வழக்கை ஜோடிக்க ஆரம்பித்தது என்று எழுதுகின்ற நாக் மேலும் ஒரு தகவைலக் கூறுகின்றார். காவல்துறை தாங்கள் விசாரித்த நேரடியாகப் பார்த்த சாட்சியங்களில் ஒருவர் சம்பவம் நடந்தபோது கோத்ராவிலிருந்து 25 கிமீ தொலைவில்   பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
மொத்தத்தில் சதி என ஒன்று நடக்கவேயில்லை என்பதுதான் இதுவரையிலும் கிடைக்கும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை சதி என ஒன்று நடந்திருந்தால் அதைச் செய்தது சங் பரிவாரமாகத் தான் இருக்க முடியும். ஏனெனில், கோத்ரா சம்பவத்திற்கு மன்னரே மு°லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் பட்டியல், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மு°லிம் மாணவர்களின் பட்டியல், அவர்களது வீட்டு விலாசங்கள்,  இந்துக்களும் மு°லிம்களும் கலந்து வாழும் பகுதிகளில் மு°லிம்களுடைய வீடுகளின் பட்டியல் ஆகியவற்றை வி°வ இந்த பரிசத் கோத்ராவிற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்திருக்கின்றது. கோத்ரா நிகழவில்லை என்றாலும் மு°லிம்களுக்கு எதிரான படுகொலைகள் என்பது நிகழ்ந்திருக்கும். ஏனெனில், 50, 100 கடைகள் இருக்கும் வணிக வளாகங்களில் மு°லிம்களின் கடைகள் மட்டுமே சரியாகக் குறி வைத்து நாசம் செய்யப்பட்டன. உரிமையாளர் யார் என்றே தெரியாத சில நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர்தான் அவற்றின் உரிமையாளர்கள் மு°லிம்கள் என்பதே வெளி உலகிற்குத் தெரியவந்தது. (இதே கட்டுரையாளர் எழுதிய ‘நரபலியும் நரவேட்டையும்’ நூல்.)
காரியத்தைத் தீர்மானித்துக் கொண்டு காரணத்தை உருவாக்குவது உலகெங்கும் உள்ள பாசி°டுகளின் வழக்கமான பாணி. ஹிட்லர் கம்யூனி°டுகள் மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் பழி போடுவதற்காக ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்தான். ஹிட்லரின் நம்மூர் வாரிசுகள் சம்ஜாதா எக்°பிர°, மாலேகான் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வைத்து விட்டு மு°லிம்கள் மீது பழி போடுகிறார்கள். கோத்ரா விஷயத்திலும் அவர்களே செய்து விட்டு ஏன் மு°லிம்களின் மீது பழி போட்டிருக்கக் கூடாது? அப்படி இல்லை என்றால் அது வெறும் விபத்தாகவோ அல்லது பிளாட்பாரச் சண்டையின் விளைவாகோவாகத்தான் இருக்க முடியும்.
எப்படியாயினும் நாக் கூறுகின்றபடி, கோத்ரா  ரயில் எரிப்பு வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு சொல்லப்படவில்லை.
------------------------------------------------------------24.2.11  

சாதியமும் மார்க்சிஸ்டுகளும்-ஒரு சுருக்கமான பார்வை




-அசோகன் முத்துசாமி

கார்ல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும்போது அதை பொருளாதாரப் புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்லவில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றே கூறுவார்.
-பிரகாஷ் காரத்,
சிபிஐ (எம்) பொதுச் செயலாளர்
(மே 29, 2010 அன்று புதுக்கோட்டையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டுப் பேரணியில் பேசியது)


சில வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த கீற்றுநந்தனின் கட்டுரையில் (எல்லோருக்குமான இனிப்பு எங்களிடம் இல்லை) பொதுவாக இடதுசாரிகள் குறித்தும், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் குறித்தும் பல தப்பெண்ணங்கள் வெளிப்பட்டுள்ளது. அக்கட்டுரையிலும், அதற்கான எதிர்வினைகளிலும் எழுந்துள்ள அல்லது எழுப்பப்பட்டுள்ள சில தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து வாசகர்களுடன் உரையாடுவது இக்கட்டுரையின் நோக்கம்.
#இந்திய சமுதாய அமைப்பின் (மற்றும் அரசமைப்பின்) அடிப்படை எது சாதியா, வர்க்கமா என்கின்ற கேள்வி முதலில் எழுகின்றது. அதற்கு விடை காண சாதி பற்றியும், வர்க்கம் பற்றியும் சுருக்கமாகவேனும் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.
சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. வர்க்கம் செய்யும் தொழிலின் அடிப்படையில், சமூக உற்பத்தியில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. மூலதனம் (உற்பத்திக் கருவிகள், தொழில் மூலதனம்) வைத்திருப்பவர் முதலாளி. உழைப்பைக் கொடுத்து உற்பத்தி செய்பவர் தொழிலாளி. அது போல் நில உடமையாளர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். இவற்றில் பெரிய, நடுத்தர, சிறிய என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுக்குள் நாம் இப்போது போகவில்லை.
இன்னின்ன வர்ணங்களுக்கு இன்னின்ன வேலைகள் என்று வர்ணாசிரமம் வகுத்தது. அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உழைப்பவர்கள், உழைப்பின் பலன்களை அனுபவிப்பவர்கள். இதற்குள்ளும் பல வகையான உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுக்குள்ளும் நாம் இப்போது போகவில்லை.
வர்க்கம் சமூக உற்பத்தியில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தை வைத்து தீர்மானிக்கப்படுவது. சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, இன்னின்ன சாதியில் பிறந்தவர்கள் இன்னின்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று தீர்மரினிக்கப்பட்டது. அதாவது தாங்கள் மட்டுமல்ல, தங்களது சந்ததிகளும் உடமையாளர்களாகவே இருக்க வேண்டும் என்று உடமையாளர்கள் சதி செய்ததன் விளைவே சாதி. இன்னின்ன சாதிகள் இன்னின்ன வேலைகள்தான் செய்ய வேண்டும் என்றும், இன்னின்ன சாதிகளுக்கு மட்டும்தான் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்றும், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது என்றும், கூடவே எந்த சாதியினராயினும் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது என்றும், பார்ப்பனர்-சத்திரியர்-வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்கும் சேவை செய்வதே சூத்திரர்களின், பஞ்சமர்களின் கடமை என்றும் மனு எழுதி வைத்ததற்கு அடிப்படையே பொருளாதாரக் காரணிகள்தான் என்பது வெளிப்படை. இல்லை என்றால், பார்ப்பனர் பட்டினி கிடந்தாலும், வேறு எந்த சாதியைச் சேர்ந்த எவரும், அவர் பணக்காரனரராக இருந்தாலும், அவரை வணங்க வேண்டும் என்று மட்டும், நன்றாகக் கவனிக்கவும், வணங்க வேண்டும் என்று மட்டும், மனு எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால், மனு சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும், பெண்களுக்கும் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையே கிடையாது என்றும் எழுதிவைத்தான்.
மனு செய்ததன் சாராம்சம், வர்க்கத்தை சாதிக்குள் மறைத்து வைத்ததுதான். அதன் மூலம் கடவுளின் பெயராலும், 'கடவுள் படைத்த' சாதியின் பெயராலும், சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும் 'புனிதப்படுத்தினான்'. 'அற்பப்' பொருளியல் காரணிகளை 'புனித' ஆன்மீகத்திற்குள் ஒளித்து வைத்தான். இந்த இடத்தில், ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கின்றது என்கின்ற கார்ல் மார்க்சின் கூற்றை என்னால் மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை.
உலகில் உள்ள எந்தவொரு சமுதாயத்தையும் போலவே இந்திய சமுதாய அமைப்பின் (மற்றும் அரசமைப்பின்) அடிப்படை வர்க்கம்தான். உற்பத்தி உறவுகள்தான். அரசியல் சட்டத்தில் இன்ன சாதியினர்தான் நாடாள வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா என்ன? எந்தச் சாதியைச் சேர்ந்தவர் பிரதமரானாலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், ஒடுக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு சுதந்திர வர்த்தகம் என்கின்ற பெயரில் அரசியல் சட்டம் அனுமதியும் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், தலித்துகள் விஷயத்தில் சாதி ரீதியான ஒடுக்குமுறையும், சுரண்டலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தலித் மக்கள் சமூகரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
சாதியும் வர்க்கமும் ஒன்றாக இருந்த நிலைமையில் வர்க்கம் சாதிக்குள் ஒளிந்திருப்பதால் இது சாதிய சமுதாயம் என்று அழைக்கப்பட்டதில் பிழையில்லை. ஏனெனில், அந்நிலையில் அப்படிச் சொன்னாலும் அது வர்க்க சமுதாயத்தைத்தான் குறிக்கின்றது. ஆனால், சாதிகளுக்குள் வர்க்கப் பிளவுகள் தோன்றி, அது மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கும்போது இதை சாதிய சமுதாயம் என்று மட்டும் அழைப்பது பொருத்தமாக இருக்காது. அது சரியுமல்ல.
ஏனெனில், இதை சாதிய சமுதாயம் என்று மட்டும் நாம் இப்போது வரையறுத்தால், இதை மாற்றுவதற்கான போராட்டத்தை சாதி அடிப்படையில்தான் நடத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு எதிராகப் போராடக் கூடாது என்று அவர்களது நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கூற வேண்டியிருக்கும். சாதி அடுக்கில் பார்ப்பனர்கள் உச்சத்தில் இருப்பதால், பார்ப்பன முதலாளிகளிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டும் அவர்களை எதிர்த்துப் போராடுங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படியொரு முரண்பாடான நிலை எடுத்தால் அது எந்த வகையிலும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வழிவகுக்கப் போவதில்லை. மாறாக, கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் இன்னபிற பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் சாதகமாக இருக்கும். அதனால்தான், இந்தியாவில் சாதி மட்டும்தான் இருக்கின்றது, வர்க்கங்களே இல்லை என்று இவர்களும், இவர்களது நண்பர்களான கி.வீரமணி போன்றவர்களுக்கும் (அவரும் இப்போது ஒரு முதலாளிதான் என்கிறார்கள்) ஆவேசமாகக் கூறுகின்றார்கள்.
இதுபோன்ற கருத்தின் அடிப்படையில்தான் மேற்குறிப்பிட்ட கட்டுரைக்கான எதிர்வினையில் கந்தசாமி என்பவர், சாதிப் பிரச்சனையை ஒழித்துவிட்டு சம்பளப் பிரச்சனையைப் பேசலாம் என்கிறார், அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுவிட்டு உற்பத்தியில் பங்கு கேட்கலாம் என்கிறார். அவர் எந்த சாதி முதலாளி என்று கூட வகை பிரிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக சம்பளப் பிரச்சனையையும், உற்பத்தியில் பங்கு கேட்கும் பிரச்சனையையும் ஒத்திப் போடலாம் என்கிறார். இது பார்ப்பன முதலாளிகளுக்கும் கூட ஆதாயம்தான்.
இடையே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். உற்பத்தியில் பங்கு கேட்பதல்ல கம்யூனிஸ்டுகளின் நோக்கம். மனித உழைப்பின்றி இவ்வுலகில் எதுவும் உற்பத்தி ஆவதில்லை. உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களே (முதலாளிகளையே நமது அரசாங்கங்கங்கள் உற்பத்தியாளர்கள் என்று தங்கள் வர்க்க குணத்திற்கு ஏற்ப வகைப்படுத்துகின்றன) உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் நியாயமான உடமையாளர்கள். எனவே உற்பத்தி அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே உரியதாக, அதை விநியோகிக்கும் உரிமை¬யையும் அவர்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்குவதுதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.  
மேலும், சாதி அடிப்படையில் மட்டும் போராட்டம் நடத்துவது சாதியை ஒழிக்குமா என்கின்ற கேள்வியும் இருக்கின்றது.
சாதிப் படிநிலை வரிசையில் உச்சத்தில் பார்ப்பனர் இருக்கின்றனர். அவர்களுக்கு மேலே எந்த சாதியும் இல்லை. அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருக்கும் தலித்துகளுக்குக் கீழே எந்த சாதியும் இல்லை. மற்ற எல்லா சாதிகளும் தங்களுக்கு மேலே உள்ள சாதிகள் மீது அதிருப்தி கொள்கின்றன. மேல்சாதிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்புகின்றன. அதே நேரத்தில் தமக்குக் கீழே உள்ள சாதிகளை ஆதிக்கம் செய்யவே விரும்புகின்றன. எனவே, அனைத்து பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரும் சாதியத்தை ஒழிக்க ஒன்றுசேர்வது என்பது சாத்தியமில்லாமல் போகின்றது. ஏனெனில், தங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இருப்பவர்கள் முற்றிலும் சாதியத்தை ஒழிக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தால், தங்களுக்குக் கீழே இருக்கும் சாதிகளைத் தாங்கள் ஒடுக்க முடியாதே? எடுத்துக் காட்டாக, சமூக நீதி இயக்கங்கள் மூலம் மேலேறி வந்த சூத்திர சாதிகள் தலித் சாதிகள் மேலெழுந்து வருவதைத் தடுக்கவே, தலித்துகள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒவ்வொரு முறை முயற்சி எடுக்கும்போதும் அவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன. இப்போது சாதிக் கலவரம் என்பது இவ்விரண்டு பிரிவினருக்கு இடையில்தான் நடந்து கொண்டிருக்கின்றது.
இதன்றி தலித்துகளிலேயே ஆதிக்க சாதிகள் இருக்கின்றன என்பதும், அச்சாதிகளாலும் பிற தலித் சாதிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அருந்ததியருக்கும் இதர சில தலித் சாதிகளுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் சிறு மோதல்கள் அதைத்தானே சுட்டுகின்றன?
பொருளாதாரம்தான் அடிப்படை என்பதால் மேல்கட்டுமானங்களில் ஒன்றான  சாதிக் கலாச்சாரத்திற்கு அல்லது பொதுவாகக் கலாச்சாரத்திற்கு எந்த பாத்திரமும் இல்லை என்பதல்ல மார்க்சிஸ்டுகளின் வாதம். பொருளாதாரவாதம் என்று அதை  ஒதுக்க வேண்டும் என்கின்றனர், மார்க்சிஸ்டுகள். அத்தகைய போக்கை கைவிட வேண்டும் என்கின்றனர்.
#பொருளாதாரம் எப்படி கலாச்சாரத்தின் மீது வினையாற்றுகின்றதோ அதுபோல கலாச்சார அம்சங்களும் பொருளாதார விவகாரங்களின் மீது வினையாற்றுகின்றன. இரண்டும் பரஸ்பரம் வினையாற்றிக் கொள்கின்றன. வேலை வாய்ப்பும், அதற்குத் தேவையான கல்வியும் சாதியின் பெயரால் மறுக்கப்பட்டது ஒரு உதாரணம். அதனால்தான் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோரிக்கையும், இயக்கங்களும் எழுந்தன. இன்றும் தொடர்ந்து நடத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இடஒதுக்கீடு கோரிக்கைகள் சாராம்சத்தில் பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளே என்பதை சாதி முதன்மைவாதிகளுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இடஒதுக்கீட்டின் ஒரு பக்க விளைவாக சாதி அடிப்படையில் அணிதிரள்வது நடந்து வருகின்றது என்றொரு கவலை சமூக மாற்றத்திற்காகப் பாடுபடுவோர் மத்தியில்  இருக்கின்றது. ஆனால், அதே வேளையில் அது சாதி ஒழிப்பை நோக்கிய விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சாதி வாரியாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இடஒதுக்கீட்டின் காரணமாக ஒரே இடத்தில் சேர்ந்து படிப்பதால், சேர்ந்து வேலை பார்ப்பதால், ஏன் தொழிலாளர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் சேர்ந்து வாழ்வதால் பல சாதியினரும் கூடிப்பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் வெவ்வேறு சாதி ஆண்-பெண்களுக்கு இடையில் காதல் உண்டாவதும், அவை காதல் திருமணங்களாகப் பரிணமிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்விதம் சாதியத்தைக் கட்டிக்காக்கும் கூறுகளில் ஒன்றான அகமணமுறையில் உடைப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.    
 இருக்கின்ற வேலை வாய்ப்புகளில் எங்களுக்கு இவ்வளவு கொடு என்றுதான் சாதிச் சங்கங்கள் கோருகின்றனவே ஒழிய, எல்லோருக்கும் வேலையும், கல்வியும் கொடு என்று கேட்பதில்லை. மற்ற சாதிக்காரர்களும் நாங்களும் ஒன்றா என்கின்ற அகங்காரமும், சொந்த சாதியிலேயே எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டால் 'என்னை' யார் மதிப்பார்கள் என்கின்ற தலைமையின் அகங்காரமும் இதற்குக் காரணம் இல்லை என்றால், வர்க்க குணம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
உலகமயத்தையும், தனியார்மயத்தையும், தாரனமயத்தையும் ஆதரித்துக் கொண்டே, செயல்படுத்திக் கொண்டே சமூகநீதி பேசுவதைவிடவும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. பெரியாரின் வாரிசுகள் என்றும், அம்பேத்கரின் வாரிசுகள் என்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் தனியார்மயமாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது கல்வி, மருத்துவம், தொழில்துறை, தண்ணீர், எல்லாம் தனியார்மயம். தனியார் துறையிலோ இடஒதுக்கீட்டுக்கு இடமில்லை. வேலைகளை எல்லாம் ஒழித்துவிட்டு, வெறும் டப்பாவிற்குள்ளிருந்து எதைப் பங்கு போடப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.
இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமி லேயர் பகுதியினரை விலக்கி வைக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு குறித்து பலரும் தேவையற்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
இடஒதுக்கீட்டின் பலன்களை அந்தந்த சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே அனுபவித்து வருகின்றனர், எனவே அச்சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பது கிரீமி லேயர் கோட்பாடு.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில், இன்னும் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளுக்கு இது பொருந்தாது என்பது அதன் நிலைப்பாடுகளில் ஒன்று.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இது பொருந்தும். ஆனால், ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்புகின்ற அளவு ஏழை மாணவர்களோ, வேலை கோருபவர்களோ அப்பிரிவுகளில் இருந்து வரவில்லை எனில், அவை பொதுப்பட்டியலில் இருந்து நிரப்பப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக, போதுமான எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகள் கிடைக்கவில்லை என்றாலும், அந்த இடங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும், அவர்கள் கிரீமி லேயர் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். முன்னுரிமை ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும், எப்படியாயினும் எந்தெந்த பிரிவினருக்கென்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்களைக் கொண்டே அந்த இடங்கள் நிரப்பப்பட் வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டு கட்சியின் நிலைப்பாடு.
#எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கின்றது என்று கீற்றுநந்தன் கூறுவது பிழையான கருத்தாகும். இப்படி எதற்கெடுத்தாலும் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் போக்கு பலரிடம் இருக்கின்றது. இது அவர்களது நிலைப்பாடுகளுடன் முரண்படும் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
முதலாவதாக, பிறப்பைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை தீர்மானிப்பது என்பது பார்ப்பனீய பாணி சிந்தனை. இது சாதி எதிர்ப்பாளர்களையும் விட்டு வைக்கவில்லை.
இரண்டாவதாக, எடுத்த எடுப்பிலேயே இது அடிபட்டுப் போகின்றது. பெரியார், பிரபாகரன், கி.வீரமணி, கொளத்து£ர் மணி ஆகிய அனைவருமே சாதி இந்துக்கள்தான். அவர்களையும் சாதிவாதிகள் என்று கருத முடியுமா? இந்தப் பட்டியல் இத்துடன் நிற்பதில்லை. இன்னும் நீளும்.
அடுத்து, விடுதலைப் புலி ஆதரவாளர்களில் பலர் பார்ப்பன எதிர்ப்பு பேசுகின்றனர். ஆனால், பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆனந்தவிகடன் அப்பட்டமாக விடுதலைப்பு புலி ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்கும், இன்றும் கூட இடைவிடாமல் பிரச்சாரம் செய்வதற்கும் என்ன காரணம் கூறுவார்கள்? தினமணி உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் சில சமயம் பட்டும் படாமலும், சில சமயம் வெளிப்படையாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகத்தான் எழுதுகின்றன. ஒரு வேளை அதனால்தான், விடுதலைப்புலி  ஆதரவாளர்கள் காஞ்சி காமகோடி பீடத்தையும், இந்துத்துவ பயங்கரவாதிகள் அசோக் சிங்கால், அத்வானி போன்றவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார்களோ? அவர்களில் சிலர் மராட்டிய இனவெறியன் பால் தாக்கரேயைப் புகழ்ந்து தள்ளுகிறார்களோ? அவரும் இவர்களைப் புகழ்கிறாரோ?
ஒருவர் தன்னைப் பற்றி என்ன கூறிக் கொள்கிறார் என்பதை வைத்தோ, அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை வைத்தோ அவரை மதிப்பிடுவது மார்க்சிய வழக்கமல்ல. உண்மையில் அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை மதிப்பிடுவோம்.
மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவே அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்று எண்ணுவது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒடுக்குமுறையாளர்களாக இருப்பார்கள் என்று எண்ணுவதும். முதலாவது எண்ணம்  சரி என்றால், எவரும் கருணாநிதி, வைகோ, ராம்தாஸ், திருமாவளவன், மாயாவதி ஆகியோருக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. இரண்டாவது எண்ணம் சரி என்றால், காஞ்சி காமகோடி பீடத்தையும், அசோக் சிங்காலையும் ஏன் சந்தித்தார்கள் என்று விளக்கமளிக்க வேண்டும். ஆனந்தவிகடனையும், தினமணியையும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதாதே என்று அவற்றைக் கண்டிக்க வேண்டும். அல்லது அந்த இதழ்களைப் புறக்கணிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று புறந்தள்ளியிருக்க வேண்டும். இரண்டுமே சுயமுரணின்றி செய்ய முடியாது என்றால், மேற்குறிப்பிட்ட பார்வையில் கோளாறு இருக்கின்றது என்று பொருள். அதுதான் உண்மையும் கூட.
#தஞ்சையில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக தலித்துகளையும், இன்னபிறரையும் இணைத்துப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீனிவாசராவ் பிறப்பால் பிராமணர்.
மேற்கு வங்கத்தில், கேரளத்தில் கிட்டத்தட்ட சாதிக்கலவரங்களே இல்லையே, ஏன் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த்தின் மூலம் 2006 வரை 10.69 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 26.43 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 56% பேர் தலித் மற்றும் பழங்குடியினர். இது மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரத்தைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இதன்றி 15 லட்சம் குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 42% பேர் தலித்துகள், பழங்குடியினர். இது ஒரு பகுதிதான். மேற்கு வங்கத்தில் வருடத்திற்கு 1.1 லட்சம் தலித் மாணவர்களுக்கும், 80,000 அதிவாசி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் குடிசைத் தொழிலாக சுய தொழில் துவங்குவதற்கு எஸ்சி/எஸ்டி டெவலப்மென்ட் அன்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற கடன் உதவி செய்யும் வங்கி துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் 26% பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 29% பேர் தலித்துகளாவர். பழங்குடியினரைப் பொருத்தவைரயில் இது முறையே 9 மற்றும் 11 சதவீதமாக இருக்கின்றது.
பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எவரும் இணையில்லை. மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும், கேரளத்திலும் மக்களவை, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இது சாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் ஒதுக்கீட்டைவிடக் கூடுதலான பதவிகளில் தலித்துகள் பழங்குடியினர் இருக்கின்றனர். இவ்வளவு ஏன், தமிழகத்தில் தலித் பெண்ணான ஜி.லதா அவர்கள் வேலு£ர் பொதுத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த மாநிலங்களில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் சிலர் மார்க்சிஸ்ட் கட்சியில் தலைவர்களாக இருக்கின்றார்கள்.
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சாதிக்கலவரங்களே இல்லை. சாதிய ஒடுக்குமுறையும் கிடையாது. இத்தனைக்கும் இந்தியாவில் சாதி ஒழிப்புதான் முதலில் செய்ய வேண்டியது, மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற இயக்கங்கள் அம்மாநிலங்களில் எதுவும் கிடையாது. ஆனால், சாதியை மட்டுமே முன்வைத்து மாபெரும் இயக்கங்களைக் கட்டமைத்த பெரியார் பிறந்த தமிழகத்திலும், அம்பேத்கரின் மராட்டியத்திலும் இன்றும் சாதிக்கலவரங்கள் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வுகள்தான். பெரியாரின் காலத்தில்தான் கீழவெண்மனி நடந்தது; உத்தபுரங்களும், திண்ணியங்களும் தொடர்கதை. இன்றும் மராட்டியத்தில் ஒரு கல்வி நிறுவனத்திற்கோ அல்லது ஒரு இடத்திற்கோ அம்பேத்கரின் பெயரைவைப்பது கூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. கயர்லாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. இதன் பொருள் அவர்களது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல. அந்தப் பெரியவர்களும் இல்லை என்றால் தலித்துகளின் வாழ்க்கை நிலைமை 19ம் நு£ற்றாண்டிலேயே இருந்திருக்கும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பிரச்சனை கோட்பாட்டில் இருக்கின்றது. வர்க்க அடித்தளத்தை நொறுக்காமல் சாதியை முற்றிலும் ஒழித்துவிட முடியாது.
# இதற்கு எதிராக பொதுவாக முன்வைக்கப்படும் வாதம், பொருளாதார நிலையில் மேம்பட்டுள்ள தலித்துகளும் சாதி அடிப்படையிலான ஒதுக்கலையும், தீண்டாமையையும் சந்திக்க வேண்டியிருக்கின்றதே என்பது. உண்மைதான். இதை விளக்கும் முன் ஒரு விஷயம்.
சாதி என்பது மேல்கட்டுமானத்தின் ஒரு பகுதிதான் என்பதற்கு இந்த உண்மை ஒன்றே போதும். ஏனெனில், முன்னர் இத்தகைய ஒதுக்கலையும், தீண்டாமையையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகள் வேலைக்கும், கூலிக்கும் மேல்சாதியினரை அண்டி வாழ வேண்டியிருந்தது. மேல்சாதினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக வாய் திறந்தால் போதும், வயலில் வேலை கொடுக்க மாட்டார்கள்; சேரிக்கு தண்ணீர் வராது; பால் வராது; பட்டினி போட்டு வழிக்குக் கொண்டு வருவார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல்சாதியினரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை மறைந்த பின்னர், அவர்களது அட்டூழியங்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம் வேலையை நம் இஷ்டத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். வலிய வம்பிற்கு வந்தால் எதிர்த்து நிற்கலாம். சாதி மோதல்களில் தலித்துகளின் உடமைகளை, அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தபோதும் கூட, நாசம் செய்வதில் மேல்சாதியினர் குறியாக இருப்பார்கள். அதே போல் பொருளாதார ரீதியாக கொஞ்சம் வலுவாக தலித்துகள் இருக்கும் பகுதிகளில் எதிர்த்தாக்குதலும் வலுவாக இருக்கும். ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகிய இரண்டிற்கும் தலித்துகளின் பொருளாதார நிலைமைக்கும் தொடர்பு இருக்கின்றது.
மேலும், இந்தியாவில் இன்னும் நிலப்பிரபுத்துவம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அரசியல் மொழியில் கூறினால், ஜனநாயகப் புரட்சி இன்னும் முழுமையடையவில்லை. நிலப்பிரபுத்துவம் இன்னும் உயிருடன் இருக்கும்போது அதன் மேல்கட்டுமானம் எப்படி இல்லாமல் போய்விடும்? இன்று உண்மையில் மக்கள் முதலாளித்துவ விழுமியங்களுக்கும், நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கும் இடையில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்ட உடன் சாதி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. மார்க்சிஸ்டுகளும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், எந்த ஒரு கலாச்சார மேற்கட்டுமானமும் அது இருப்பதற்கான பொருளாதார அடித்தளத்தை இழந்தவுடன் மறைந்துவிடுவதில்லை. எப்படி ஒரு சமூக அமைப்பு யதார்த்தமாவதற்கு முன்னர் அது குறித்த சிந்தனைகள் தோன்றிவிடுகின்றனவோ, அது போல அந்த சமூக அமைப்பு மறைந்த பின்னரும் சில காலத்திற்கு அதற்குரிய கருத்துக்கள் மக்கள் சிந்தனையில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு, மன்னராட்சி மறைந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றைய பல அரசியல் தலைவர்கள் தங்களை மன்னர்களாகவே கருதிக் கொள்கின்றார்கள். மன்னர், மாமன்னர், வேந்தர் என்று அடைமொழி சூட்டிக் கொள்கின்றார்கள். தங்களுக்குப் பின் தங்களது குடும்ப வாரிசுகளே நாடாள வேண்டும் என்று உரிமை கொண்டாடுகின்றார்கள். அரசியல் கட்சியல்லாத இயக்கமான திராவிடர் கழகமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்று ஆகிவிட்டது. இதை மக்களில் ஒரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
சாதி சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இருக்கின்றது. பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அளவு தீவிரத்துடன் அது இயங்கியுள்ளது. இன்றும் கூட கிராமப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும், நகர்ப்புற மக்களுடைய சாதி உணர்வின் அளவிற்கும் வித்தியாசம் உள்ளது. அகமணமுறையில்தான் அது தன்னை வெகு உக்கிரமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது. சாதி உணர்வை முற்றிலுமாக இல்லாமல் போகச் செய்வதற்கு மிகப் பெரிய அளவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு புரட்சிக்கு முன்னும் பின்னரும் அத்தகைய இயக்கங்கள் நடக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அவை மகத்தானவையாகவும் இருக்கும். அம்பேத்கரும், பெரியாரும் செய்ததை இன்று மார்க்சிஸ்டுகளும் தொடர்கிறார்கள்.  
# சாதி ஒரு பிரச்சனை என்கிற தெளிவு 70 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் மார்க்சிஸ்டுகளுக்கு வருகிறது என்றொரு வாக்கியம் கீற்றுநந்தனின் கட்டுரையில் இருக்கின்றது. சாதிப் பிரச்சனையில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், சாதியை ஒரு பிரச்சனையாகவே பார்க்காமல் ஒரு இயக்கம் இந்தியாவில் இருக்க முடியாது. 60 வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக நடந்த போராட்டம் சாதிக்கு எதிரான போராட்டமா, இல்லையா? சாதியை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லை என்றால் 60 வருடங்களுக்கு முன்பு நடந்த தெலுங்கானா போராட்டத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் மூலமும் கைப்பற்றப்பட்ட நிலத்தின் பெரும்பகுதி தலித்துகளுக்கு கொடுக்கப்பட்டிருக்காது. 34 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் அதிகாரத்திற்கு வந்த இடதுமுன்னணி நிலச்சீர்திருத்தம் செய்து, உபரி நிலத்தின் பெரும்பகுதியை தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் பகிர்ந்து கொடுத்திருப்பது சாதியை ஒரு பிரச்சனையாகப் பார்க்காதவர்கள் செய்கின்ற வேலையா? மறுபுறம் மற்ற கட்சிகள் ஆண்ட, ஆள்கின்ற மாநிலங்களில் ஒப்புக்கு நடந்த நிலச்சீர்திருத்தத்தின் பலன்களையும் பெரும்பாலும் சாதி இந்துக்கள்தான் அனுபவித்தனர். இப்படி சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
எனினும், சாதிப் பிரச்சனை விஷயத்தில் போதுமான அளவு கவனம் செலுத்தப்படவில்லை என்று மார்க்சிஸ்டுகளே தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்கிறார்கள். அப்படிக் கவனம் செலுத்த முடியாமல் போனதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. கட்சிக்குள் 1950, 60 களில் நடந்த தத்துவப் போராட்டங்கள்; கட்சியின் சக்தி முழுவதையும் கோரிய அரசியல், வர்க்கப் போராட்டங்கள் என பல காரணங்கள் உண்டு. ஆனால், சாதியை ஒரு பிரச்சனையாகப் பார்க்கும் தெளிவு இல்லாதது நிச்சயமாகக் காரணமல்ல.
எப்படியாயினும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்கு என்று தனியே ஒரு அமைப்பை உருவாக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகின்றது. அதற்கு முன்பிருந்தே அருந்ததியர் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக அருந்ததிய அமைப்புகளோடு இணைந்து போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றது.
தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் தவிர்த்து வேறு எந்த அமைப்பு, தலித்துகள் அமைப்பு உள்பட, தீண்டாமை ஒழிப்புக்குத் தனிக்கவனம் செலுத்தி வருகின்றது என்று யாராவது கூறுங்களேன். பெரியார் திராவிடக் கழகம் தவிர வேறு யாரும் கிடையாது. பெரியாரின் கையைப் பிடித்து வளர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியின் தலைமையிலான திமுக தன் அணிகளை இரட்டைக் குவளை முறைக்கும், ஆலய நுழைவுத் தடைக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் எதிராக களத்தில் இறக்கிவிட்டால் தமிழகத்தின் சாதிய நிலமையில் பெரிய தாக்கம் ஏற்படாதா? இத்தனைக்கும் இப்போது அதிகாரம் இருக்கின்றது. கூடவே விடுதலைச் சிறுத்தை திருமாவளவன் வேறு இருக்கிறார். அவருக்கு தமிழகத்தில் தீண்டாமை நிலவுவது ஒரு பெரிய விஷயமில்லை. அவர் ஆலய நுழைவுப் போராட்டங்கள«£, இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்களையோ கூட்டங்களையோ நடத்தியதைக் காட்டிலும் ஈழப்பிரச்சனை பற்றித்தான் மீசையை முறுக்குகின்றார். கருணாநிதி தயவில் பதவிகளை அனுபவித்து வரும்போது கருணாநிதி ஆட்சியில் தீண்டாமை இருக்கிறது என்று கூறமுடியுமா என்ன? பதவியும் இல்லாத, எந்தக் கூட்டணியிலும் இல்லாத புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கூட தீண்டாமைப் பிரச்சனைக்காக என்ன செய்திருக்கிறார் அல்லது என்ன செய்கிறார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்
அதிமுகவின் இன்றைய தலைமை செய்யப் போவதில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. முந்தைய தலைமையும் செய்ததில்லை. காங்கிரஸ் கதையும் அப்படியே. வைகோவிற்கு வேறு வேலை யாரோ கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களை பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக எடுத்துக் கட்டும் வேலை. அதைச் செவ்வனே செய்து வருகின்றார். அவர் தீண்டாமை பிரச்சனையைப் பற்றி என்றைக்குப் பேசினார் அல்லது என்றைக்காவது பேசினாரா என்பது பற்றி ஏதாவது புலனாய்வுத் துறையிடம் சொல்லித்தான் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். பாமகவை விடுங்கள். அன்புமணிக்கு எம்பி பதவிதான் அதன் இப்போதைய குறிக்கோள். எப்போதும் பதவிதான் அதன் முக்கிய லட்சியம். திக வீரமணி வாய்திறக்கமாட்டார். கருணாநிதியின் ஆட்சியில் தீண்டாமை இருக்கிறது என்று யாராவது சொன்னால் அது சமூகநீதிக்கும், தமிழினத்திற்கும் எதிரான செயல். பாஜகவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மனுவின் சட்டங்களே இந்தியாவின் அரசியல் சட்டமாக வேண்டும் என்கின்ற சங்பரிவாரத்தின் அரசியல் அங்கத்தை இந்தப் பட்டியலில் வைத்துப் பரிசீலிப்பதே தவறு.
இறுதியாக, ஒரு விஷயம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமைக்கு என்று ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, அதில் கட்சிக்கு அப்பாற்பட்ட பலரையும் இணைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் போராடி வரும் வேலையில் முன்னர் இப்படி ஏன் செய்யவில்லை என்கிற ரீதியில் கேள்வி கேட்பது, ஏன் செய்கிறாய் என்று கேட்பதற்குச் சமம் என்று இக்கட்டுரையாளர் கருதுகின்றார். எனினும், கீற்றுநந்தனை 'ஏன் செய்கிறாய்' வகையில் சேர்த்த முடியாது என்றும் இக்கட்டுரையாளர் கருதுகின்றார்.
---------------------------------------------------------------------2.6.10 கீற்று இணய தளத்தில் சிறி திருத்தங்களுடன் வெளியானது.