Saturday, January 15, 2011

கபில் சிபலின் தப்புக் கணக்கு


2ஜி அலைக்கற்றை ஊழலில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை பொதுத் தணிக்கை ஆணையம் மிக அதிகமாக மதிப்பிட்டுள்ளது என்று தொலை தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். மேலும், உண்மையில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்றும், மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகின்றது என்றும் ஒரே போடாகப் போட்டுள்ளார்.
திமுகவினரும் இதைத்தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறைந்த விலைக்கு ஏலம் விட்டதனால் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குகின்றன என்றும், அதனால் மக்கள் பயன் பெறுகின்றனர் என்றும் வாதிடுகின்றனர். இந்த விலைக்கு கொடுத்தாலும் தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் வருகின்றது என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடுகின்றனர். இல்லை என்றால் ஏலம் எடுத்த உடனேயே சில நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்திற்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றிருக்கின்றன. அப்படி பல்லாயிரம் கோடி லாபம் கொடுத்து வாங்கிய பின்னரும் அந்நிறுவனங்கள் இப்போது என்ன கட்டணத்தில் சேவை வழங்கிக் கொண்டிருக்கின்றனவோ அதே கட்டணத்தில்தானே சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அலைக்கற்றை ஊழல் ஆதரவாளர்கள் அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்?
இப்போது நமது கேள்வி என்னவென்றால், ஏலம் எடுத்து வேறு நிறுவனங்களுக்கு என்ன லாபத்திற்கு விற்றார்களோ அந்த லாபத்தை மட்டும் கணக்கு போட்டால் கூட அதுவே இப்போது மதிப்பிடப்படும் தொகையை எட்டும். தாண்டினாலும் தாண்டும்.
அலைக்கற்றை உரிமங்கள் ஒரு சேவை வட்டத்திற்கு 2001ம் ஆண்டு விலையான ரூ1658 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு வாங்கிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளின் ஒரு பகுதியை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றுள்ளன (யுனிடெக் நிறுவனம் தன்னுடைய 60 சதவீத பங்குகளை ரூ6000 கோடிக்கு டெலிநார் எனும் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. °வான் டெலிகாம் தன்னுடைய 45 சதவீத பங்குகளை எலி°டாட் என்கிற எமிரேட்° நிறுவனத்திற்கு 6000 கோடிக்கு விற்றுள்ளது. °வான் நிறுவனத்தில் அமைச்சர் ராசாவிற்கும், அதிகாரத் தரகர் நிரா ராடியாவிற்கும் பங்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவை போல் ஜப்பானின் டொகோமோ நிறுவனத்திற்கு தன் பங்குகளை விற்ற டாடா நிறுவனம் உள்பட வேறு பல நிறுவனங்களும் விற்றுள்ளன.).  அதை ஒப்பிட்டால் மட்டும் ஒரு உரிமம் ரூ 7758 கோடியிலிருந்து 9100 கோடி வரையிலான மதிப்பைப் பெறுகின்றது. அந்த கணக்கின் படியே அரசாங்க கஜானாவிற்கு 58,000 கோடி ரூபாயிலிருந்து 68,000 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கும் என்று பொதுத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகின்றது.
அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பணம் தனியார் முதலாளிகளின் மூலதனமாக மாறிவிட்டது. அதனால்தான் பிரபாத் பட்நாயக், சி.பி. சந்திரசேகர் உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்கள் இதை மார்க்° குறிப்பிட்ட ஆதிமூலதனத் திரட்டலுடன் ஒப்பிடுகின்றனர்.
தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ஆகிய கொள்கைகள் செயல்படுத்தப்பட துவங்கியதிலிருந்து இப்படி மூலதனத் திரட்டல் என்பது படுவேகமாக பல்வேறு வழிகளின் மூலம் நடந்து வருகின்றது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரிலம், மற்ற காரணங்களின் பெயரிலும் விவசாயிகளின் நிலங்களும், அரசு நிலங்களும் பெருமுதலாளிகளுக்குக் குறைந்த விலையில் தாரை வார்க்கப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சிறுஉடமைகள் ஒரு சில முதலாளிகளின் பெரும் மூலதனமாக ஆக்கப்படுகின்றன. பழங்குடியினரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, கனிம வளங்கள் மீது பெரு முதலாளிகளுக்கு உரிமம் வழங்குவதன் மூலம்  அவர்களது மூலதனப் பெருக்கத்திற்கு வழிவகுக்கப்படுகின்றது. தொலை தொடர்புக்கு ஆதாரமாக இருக்கும் காற்றிலுள்ள மின்காந்த அலைகளும் ஒரு இயற்கை வளம்தான். அவற்றை அடிமாட்டு விலைக்கு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலம் அவர்களது மூலதனத் திரட்டலுக்கு அரசாங்கம் உதவி செய்கின்றது. ஆட்சியிலிருப்போரும், அதிகாரிகளும் அதில் ஒரு பங்கைப் பெறுகின்றார்கள். தொலை தொடர்புத் துறை அரசாங்கத்தின் வசமே முற்றிலும் இருந்திருந்தால் இப்படி ஒரு ஊழல் நடக்க வாய்ப்பு இருந்திருக்குமா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.  
முன்னர் அரசுத் துறையாக இருந்த போது இதில் ஊழல் நடக்கவேயில்லையா என்றொரு கேள்வி எழலாம். அதிகபட்சமாக என்ன நடந்திருக்கும் என்றால், இந்தத் துறைக்குத் தேவையான உதிரிபாகங்கள், உதிரி சேவைகள் வாங்குவது போன்றவற்றில் ஊழல் நடந்திருக்கும். அதாவது கமிஷன் அடித்திருப்பார்கள். அதிகபட்சமாக அவ்வளவுதான்.  போபர்° பீரங்கி வாங்கியதில் ராஜீவ்காந்தி 65 கோடி கமிஷன் வாங்கினார் அல்லவா, அது போல.
ஆனால் மும்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின்பு ஊழல்களின் அளவும், எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. 65 கோடி எங்கே, 1,76,000 கோடி எங்கே? (இந்த 1,76,000 கோடி என்பது சாதாரண தொகை அல்ல என்பதை அனைவரும் அறிவோம். அதன் இன்னொரு முக்கிய பரிமாணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 2008-09ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக உருவான மொத்த மூலதனத்தில் 10 விழுக்காடு இந்தத் தொகை என்கிறார் சி.பி.சந்திரசேகர்.ஆதாரம்:iனேயை உரசசநவே யககயசைள இணையதளம்).
இன்னுமொரு முக்கிய உதாரணத்தையும் பார்க்க வேண்டும். எ° டெல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அலைக்கற்றை உரிமத்திற்கு கூடுதல் விலை கொடுக்கத் தயாராக இருந்தன. அந்த நிறுவனம் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூடுதலாக 6000 கோடி ரூபாய் தரத் தயராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பின்னர் அதையும் ரூ13, 752 கோடியாக அதிகரித்து அமைச்சர் ராசாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. ஒரு வேளை இதே தொகையை வேறு எதுவும் நிறுவனங்கள் கொடுத்திருந்தால் இன்னும் அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. (ஆதாரம்:சந்தீப் தீட்சித், தி ஹிந்து, 11.1.11).
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது ராசாவோ கண்டு கொள்ளவில்லை. 13000 கோடி அல்ல, 20000 கோடி கொடுத்தாலும் நாங்கள் 1658 கோடி என்று தீர்மானித்துவிட்டோம், அந்த விலைக்கு எல்லாவற்றையும் விற்றுவிட்டோம் என்று கொள்கைக் குன்றுகளாக இருந்துள்ளனர். பிரதமரின் ஆலோசனையை ராசா மீறிவிட்டார், அதைப் பார்த்துக் கொண்டு பிரதமர் சும்மா இருந்தார் என்பதெல்லாம் கட்டுக்கதை. அவருக்கே ஒரு நிறுவனம் நேரடியாகக் கடிதம் எழுதியிருக்கின்றது. அப்போதும் மனிதர் ஒன்றும் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்?
1980களில் நிதி வருவாய் சம்பந்தப்பட்ட ஊழல்கள் மொத்தம் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் (1991 முதல் 1996 வரை) மட்டும் 26 ஊழல்கள் நடந்துள்ளன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டுகளில் சிறு நாடுகளின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அளவிற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010). இன்னும் என்னென்ன வரவிருக்கின்றதோ நமக்குத் தெரியாது.  அதாவது புதிய தாரளமயக் கொள்கைகள் அமலாக்கப்படும் காலத்தில்.  
எல்லாவற்றுக்கும் மேலாக 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் சில மாதங்கள் நிரா ராடியாவின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டு உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2009 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடந்தபோதும் சரி, நடந்து முடிந்து அரசாங்கம் அமைக்கப்பட்ட போதும் சரி ராடியா டேப்புகள் இருக்கின்றன என்பது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் தெரியும். முன்னர் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும், பின்னர் நிதியமைச்சராக ஆன பிரனாப் முகர்ஜிக்கும் தெரியும். ஆ.ராசாதான் தொலை தொடர்புத் துறைக்கு அமைச்சராக வேண்டும் என்று டாடா உள்ளிட்ட முதலாளிகளும், அவர்களது சார்பாக நிரா ராடியாவும் லாபி செய்ததும் தெரியும். ஆனாலும் ராசாவை அந்த இலாக்காவின் அமைச்சராக ஆக்கியுள்ளார்கள். இத்தனைக்கும் பின்னர் இப்போது ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதோ அல்லது ராசா குற்றமே செய்யவில்லை என்பதோ காதில் பூ சுற்றும் வேலையாகும். பிரதமர் நல்லவர் என்பது முழுப் பூசணிக்காயைக் கையளவு சோற்றில் மறைக்க முயற்சிப்பதாகும்.

----------------------------------------அசோகன் முத்துசாமி


Tuesday, January 11, 2011

குஜராத்தின் மருமகள்




நாடாளுமன்றத்திலும், வெளியிலும் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் பற்றி பெரும் குரல் எழுப்புகின்றது, பாஜக. ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நீரா ராடியா டேப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏன்?

பதில் அந்த டேப்புகளிலேயே இருக்கின்றது. அவருக்கு முதன்முதலில் பழக்கமான இந்திய அரசியல்வாதி பாஜகவின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் தான். சற்று பின்னோக்கி போவோம்.

கென்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர் நீரா ராடியா. அவரது தந்தை சர்மா விமான உப கரணங்கள் விற்பனையாளர். 1970களில் அவர் லண்டனுக்குக் குடிபெயர்கின்றார். லண்டனில் இளங்கலை பட்டம் பெற்ற ராடியா அங்கு நிதி வர்த்தகம் செய்து வந்த ஜனக் ராடியா என்கிற குஜராத்தியை மணம் முடிக்கின்றார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். பின்னர் 1995ல் விவகாரத்து ஆகின்றது. அப்போது தான் அவர் இந்தியாவிற்குக் குடிபெயர்கின்றார்.

இந்தியாவில் பல்வேறு விமான சேவை நிறுவனங்களில் பிரதிநிதியாக, அவற்றின் மக்கள் தொடர்பைக் கவனித்துக் கொள்பவராகச்செயல்பட்டார். சகாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுகே ஏர், கேஎல்எம் எனப்படும் கொரிய விமான நிறுவனம் ஆகியவை. ஏர்பஸ் என்கிற விமான தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆலோசகராக ஆகின்றார்.

பின்னர் இரண்டு முறை சொந்தமாக விமான சேவை நிறுவனம் துவங்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். 2000மாவது ஆண்டு முதலில் துவங்க நினைத்த நிறுவனத்தின் பெயர் கிரவுன் எக்ஸ்பிரஸ். முதலீடு 100 கோடி. (சிங்கப் பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனம்). மீண்டும் 2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்கிற விமான சேவை நிறு வனத்தைத் துவங்க முயற்சித்தார். அது வும் தோல்வியடைந்தது. இரண்டுக்குமே முக்கியமான காரணம் அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டு இல்லை என்பதும், அந்த வகையில் அவர் பிரிட்டன் குடிமகள் என் பதும்தான். உள்நாட்டு விமான சேவை யில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்ப தில்லை என்பது இன்று வரையிலும் அரசின் கொள்கையாக இருந்து வருகின்றது. இந்தக் கொள்கை அப்படியே மாறாமல் இருப்பதற்கு இந்திய விமான சேவை நிறுவன முதலாளிகள் நரேஷ் கோயல், விஜய் மல்லையா போன்றோர் காரணம். அதனால்தான் டாடா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாகத் துவக்க விரும்பிய விமான நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நிரா ராடியா 2001ல் வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்கிற ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்குகின்றார். நோயசிஸ், விக்டோம், நியோகாம் ஆகிய நிறுவனங்களையும் பின்னர் துவக்குகின்றார். டாடா குழுமத்தின் 90 நிறுவனங்களுக் கும் மக்கள் தொடர்பு சேவைகள் வழங் கும் உரிமையைப் பெறுகின்றார். பின்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்சும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் சேருகின்றது.

அவர் 1998-99களில் விமான சேவை நிறுவனங்களின் ஆலோசகர் என்கிற வகையில் அவருக்கு அப்போதைய விமான போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் அனந்தகுமாருடன் பரிச்சயம் ஏற்படுகின்றது. நெருங்கிய நண்பராகின்றார். இதைப் பயன்படுத்தி அவர் அதிகார வட்டாரங்களில் செல்வாக்கு மிக்கவராக தன்னை வளர்த்துக் கொள்கின்றார். அவர் மூலம் கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க மடாதிபதிகளில் ஒருவரான பெஜாவர் மடாதிபதியுடன் அறிமுகம் ஏற்படுகின் றது. 2003ம் ஆண்டு ‘தவறான கட்சியில் இருக்கும் நல்லவர்’ வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் பெஜாவர் மடாதிபதி யைச் சந்திக்கிறார். அப்போது வாஜ்பாயு டன் நீரா ராடியாவும் இருக்கும் புகைப்ப டம் ஒன்றை அப்போதே ‘லங்கேஷ் பத் திரிகா’ எனப்படும் கன்னட இதழ் வெளி யிட்டது. மேற்குறிப்பிட்ட விவரங்களுடன் அதை அவுட்லுக் இதழ் (டிசம்பர் 6, 2010) மறுபிரசுரம் செய்துள்ளது.

வாஜ்பாயின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவும் ராடியாவின் நண் பர். முகேஷ் அம்பானியின் சார்பாக அவர் ராடியாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலும் வருமானவரித்துறையின் அம லாக்கப் பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அமைச்சராகலாம், கூடாது என் பது குறித்த இந்த உரையாடலின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு தரு கின்றோம்.

‘ரஞ்சன்: ஆக, முகேஷ் மகிழ்ச்சியாக இருக்கின்றார்?

ராடியா: மிகவும் மகிழ்ச்சியாக இருக் கின்றார்.

ரஞ்சன்: (சிரிக்கின்றார்) அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

ராடியா: என்ன?

ரஞ்சன்: அவர் தன்னுடைய வழக்க மான பாணியில் சொன்னார்... நீங்கள் எப் படி இருக்கிறீர்கள் என்றார்... என்னை விடுங்கள்... நீங்கள் எப்படி இருக் கிறீர்கள் என்று நான் கேட்டேன்..

ராடியா: ம்..ம்..

ரஞ்சன்: ஓகே என்றார்..எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சியை வெளிப் படுத்துங்கள் என்றேன்... உங்கள் வேலை எல்லாம் செய்தாகிவிட்டது என்றேன்..

ராடியா: ம்ம்..ம்ம்.

ரஞ்சன்: ...ரஞ்சன் நீங்கள் சொன்னது சரி. காங்கிரஸ் இப்போது நமது கடை என்று முகேஷ் கூறினார்.

ராடியா: (சிரிக்கின்றார்)

(ஆதாரம்: ஓபன் ஆங்கில வார இதழ், நவம்பர்20, 2010).

அம்பானி சகோதரர்களுக்கு இடை யில் இயற்கை எரிவாயு உரிமம் குறித்து நடந்த சண்டை குறித்து நாடாளுமன்றம் விவாதித்ததும், அந்த விவாதத்தில் பாஜக சார்பாக முதலில் அருண்ஷோரி பேசுவதாக இருந்ததும், அவர் பேசினால் அனில் அம்பானிக்குச் சாதகமாகப் பேசி விடுவார் என்பதனால், முகேஷ் அம் பானியின் ஆலோசகராக இருந்த ராடியா பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் என்.கே.சிங் மூலமாக அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு விவாதத்தைத் துவக் குவதாக மாற்றியது குறித்து ஷோரி வெளிப்படையாகப் புலம்புவதும் நாட றிந்த கதை.

இத்தோடு முடியவில்லை, ராடியா வின் பாஜக தொடர்பு. எந்த பாஜக தலை வரை பீகாரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று ஐக்கிய ஜனதாதளம் சொன்னதோ அந்த நரேந்திர மோடிக்கும் அவருக்கும் கூட தொடர்பு இருக்கின்றது.

“டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அகமதாபாத் பதிப்பு சிறப்பாசிரியராக அந் நாளில் இருந்த கிங்சுக் நாக் தன்னுடைய வலைதளத்தில் அந்நாட்கள் குறித்த நம்முடைய நினைவுகளைக் கிளறிவிடு கின்றார். மோடி விஷயத்தில் இணக்க மாக நடந்து கொள்ளுமாறு ராடியா தன்னிடம் இரண்டு முறை கேட்டுக் கொண்டதாக நாக் எழுதுகின்றார். உங் களைப் போன்ற ஆட்கள் நரேந்திர மோடிக்கு வாழ்க்கையை நரகமாக்கிவிட் டீர்கள். நீங்கள் ஏன் அவரையும், அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்கிறவர் களாக இருக்கக் கூடாது? என்று ராடியா கேட்டதாக தன்னுடைய கட்டுரையில் மேற்கோள் காட்டுகின்றார். மோடி உங் களது வாடிக்கையாளராக ஆகிவிட்டாரா என்று நாக் அவரிடம் கேட்ட போது, குஜராத்தின் மருமகள் என்கிற வகையில் மட்டுமே அம்மாநிலத்தின் விஷயத்தில் தனக்கு பொறுப்பு இருப்பதாக ராடியா கூறியிருக்கின்றார்.

“வேறு ஒருவர் மூலமாக ராடியா மோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது போல் தெரிகின்றது. வெகுவிரைவிலேயே குஜராத் முதலமைச்சருடன் தன்னு டைய நட்பைப் பலப்படுத்திக் கொண் டார் ராடியா. டாடா மோட்டார்ஸ் தன்னு டைய நானோ தொழிற்சாலையை குஜ ராத்திற்கு மாற்றியபோது அது பலன ளித்திருக்கும். பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்கள் அந்த தொழிற் சாலைக்காக போட்டியிட்டுக் கொண்டி ருக்கும்போது திடீரென்று குஜராத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஐதராபாத் பதிப்பின் சிறப்பாசிரியராக இருக்கும் நாக் ‘டாடாவிற்கு நிலம் கிடைத்த வேகம்... மோடிக்கு முன்னரேயே தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கின்றது. புத்திசாலி என்கிற வனையில் அவர் நிலத்தைத் தயாராக வைத்திருந்திருக்கக் கூடும்’ என்று அவுட்லுக்கிடம் கூறினார்.” (டிசம்பர் 6, 2010).

இவ்வளவு பழக்கம் இருந்தும் ‘உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக் கின்றதே’ என்று கூட பாஜக ராடியா பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறதே, அது கவனிக்கப்பட வேண்டியது.(நன்றி;தீக்கதிர் மற்றும் 'மாற்று')

விஸ்வரூபம் எடுக்கும் டேப் விவகாரம்


பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் உள்நாட்டு விமான சேவை துவங்க நினைத்ததாகவும், மத்திய அமைச்சர் ரூ.15 கோடி லஞ்சம் கேட்ட தால், லஞ்சம் கொடுத்தால் அவமானம் என்று கருதி அந்த தொழில் துவங்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டதாக வும் ரத்தன் டாடா கூறியிருக்கின்றார். டாடா இத்தனை நாளாக சொல்லா மல் இருந்துவிட்டு இப்போது ஏன் சொல்ல வேண்டும்? தொகையை எண் ணால் எழுதி முடிப்பதற்குள் ஒரு நாளே கழிந்துவிடும் அளவிற்கு மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டை யும் நாடாளுமன்றத்தையும் உலுக்கி, ராசாவை அமைச்சர் பதவி இழக்க வைத்த நேரத்தில் இதைப் பேசியிருக் கின்றார். அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா என்கிற ஐயம் இயல்பாகவே எழுகின்றது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்த லுக்குப் பின்னர் ஐ.மு.கூட்டணி அமைச் சரவை மீண்டும் அமைந்தபோது அதில் மீண்டும் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக வந்ததில் ரத்தன் டாடா விற்கும், முகேஷ் அம்பானிக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. அவர்களுடன் அதிகார தரகரான நீரா ராடியா என்கிற பெண்மணிக்கும் பங்கிருக்கின்றது. இந்த விஷயம் கடந்த மே மாதம் பயோனிர் மற்றும் அவுட்லுக் ஆகிய பத்திரிகை களால் அம்பலப்படுத்தப்பட்டது. (கிரிஷ் நிகாம் இணையதளம்.இன்டியாஸ் ரிப் போர்ட்.காம்). டாடா, அம்பானி இருவருக்குமே தயா நிதி மாறன் மீண்டும் தொலைத் தொடர் புத் துறையின் அமைச்சராக வருவதில் விருப்பமில்லை. மூட்டைப் பூச்சி போல் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று கருதினார்களாம். அதா வது, காசு ரொம்பக் கேட்பார் அல்லது பங்கே கேட்பார் என்று நினைத்திருக் கலாம். ஏற்கனவே அவர் அப்படி கேட்ட தாக டாடா முன்னர் ஒரு முறை குற்றம் சாட்டியிருக்கின்றார். இருக்கும். ஏனெ னில், தென்னாட்டு பெரு முதலாளிகளில் ஒருவர் கலாநிதி மாறன். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளி யானதிலிருந்தே அது பற்றி மத்திய புல னாய்வுத் துறை விசாரித்து வருகின்றது. அதற்காக அதிகார தரகரான நீரா ராடியா வின் தொலைபேசி ஒட்டு கேட்கப் பட்டது. இது குறித்து மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட சிபிஐ-ன் ரகசிய ஆவ ணம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம். * “ராடியா, தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவிற்கு நெருக்கமான வர். பின்வரும் நிறுவனங்களுக்கு உரிம மும், அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதிலும் காரணகர்த்தாவாக இருந்தவர். அ) ஸ்வான் டெலிகாம் ஆ) ஏர்செல் இ) யுனிடெக் வயர்லெஸ். ஈ) டேடாகாம் (சுருக்கமாக: இவற்றில் டேடா காம் நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானி யின் நிதியுதவி இருக்கின்றது. அந்நிறு வனத்தில் பணிபுரியும் மனோஜ் மோடி என்பவர் திருமதி ராடியாவுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். அதே போல் ஸ்வான் என்கிற நிறுவனத் திற்கு உரிமம் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராடியா எடுத்த முயற்சி களின் காரணமாக ராசா அந்நிறுவனத் திற்குச் சாதகமாக நடந்து கொண்டார். அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 200 கோடி டாலர். அதாவது, 10000 கோடி ரூபாய். துபாயின் எமிரேட்ஸ் டெலிகம் யூனிகேஷன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு 45 விழுக்காடு பங்குகள் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஆ.ராசா, திருமதி ராடியா ஆகியோருக்கும் பங்கு இருக்கின்றது என்று இந்த ரகசிய அறிக்கை கூறுகின் றது. யுனிடெக் நிறுவனத்திற்கு டாடா ரூ.250 கோடி கொடுத்திருக்கின்றார்)* ராடியாவிற்கும் ரத்தன் டாடாவிற் கும் இடையில் நீண்ட உரையாடல் நடந் திருக்கின்றது. தொலை தொடர்புத் துறை யின் அமைச்சராக தயாநிதி மாறன் வரு வதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று டாடா விரும்புகின்றார் என்பதை அந்த உரையாடல் நிரூபிக்கின்றது. மேக் சிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அப் பல்லோ ஆகிய நிறுவனங்களின் மூலம் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை டாடா கட்டுப்படுத்துகின்றார் என்பது தெளிவு.* வோல்டாஸ் நிறுவனம் மூலம் ராடியாவுடனும், ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் (சிஏ என்கிற ஆங்கிலச் சொல் லுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ட் என்று தானே பொருள்?) ரத்தினத்துடனும் தொடர்பு வைத்திருந்தார். மாறனை தொலை தொடர்பு அமைச்சராக ஆக்கா மல் இருப்பதற்கு கருணாநிதி குடும்பத் திற்கு லஞ்சமாக அவர்கள் ‘டிரில்’ என்கிற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டப் போகின்றார்கள் என்பது தெளிவு. * ராடியா மற்றும் கனிமொழி ஆகியோ ரின் சார்பாக திமுக எம்பிக்களுக்கான அமைச்சர் பதவிக்காக, குறிப்பாக ராசா அமைச்சராவதற்காக, பர்கா தத்தும் (எந்த பயமும் இல்லாமல் துணிச்சலாக செய்தி களைச் சொல்பவர் என்று கருதப்படும் அதே என்டிடிவி பர்காதான்) வீர் சிங்வி யும் காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். * ஏற்கனவே குறிப்பிட்டபடி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம், கனி மொழி, மற்றும் ஆ.ராசா ஆகியோருக்கு ராடியா நெருக்கமானவர். ஸ்வான் நிறு வனத்தில் தங்களது பொது முதலீடு பற்றி யும் இதர விஷயங்கள் பற்றியும் பேசு வதற்காக அவர் ஆ.ராசாவைச் சந்திக்க விருக்கின்றார். ’’இப்போது நாம் கூற வருவது மிகவும் எளிமையானது. மாறன் மந்திரியாகக் கூடாது என்பதற்காக டாடாவும், முகேஷ் அம்பானியும் ராசாவை மந்திரியாக்கி இருக்கின்றனர். அதன் மூலம் தங்களது நேரடி மற்றும் மறைமுக நிறுவனங்களுக்கு உரிமமும், அலைக்கற்றையும் பெற்றிருக் கின்றனர். அதன் மூலம் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய்கள் சுருட்டியிருக்கின் றனர். மற்ற பல முதலாளிகளும் போட்டி யில் இருக்கும்போது ராசா இதை சும்மா செய்திருப்பாரா? சும்மா செய்திருந்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட் டுக்கு நோட்டுக்கட்டு, வேட்டி சேலை என்றும், வ (அதான் சார் குவார்ட்டர் கட்டிங்) என்றும், இன்னபிறவாகவும் அள்ளி இறைத்தார்களே அது எப்படி? டாடாவும் அம்பானியும் கொடுத்த லஞ்சம் எவ்வளவு? ஏனெனில், மாறன் மீண்டும் அமைச் சராக ஆக வேண்டும் என்று மற்றொரு பெரு முதலாளியான சுனில் மிட்டல் விரும்பி யிருக்கின்றார். அதற்கு என்ன காரணம்? * “பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட் டல் ராசா தொலை தொடர்புத் துறை அமைச்சராவதைத் தடுக்க முயன்றதற்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் சிடிஎம்ஏ (சிம் கார்ட் இல்லாத செல்போன் சேவை) சேவையா ளர்களுக்குச் சாதகமாக நடந்து கொண் டதில் ஜிஎஸ்எம் (சிம் கார்ட் செல் சேவை) சேவையாளர்கள் பாதிக்கப்பட்டி ருந்தனர். இரண்டாவதாக, சுனில் மிட் டல், தயாநிதி மாறனுக்கு ஆதரவாக முயற்சிகள் மேற்கொண்டார். பாரதி ஏர் டெல் நிறுவனத்தில் வோடாபோன் நிறு வனம் பங்குகள் வாங்கியதில் சில முறை கேடுகள் நடந்திருப்பதாகத் தெரிகின்றது. அது குறித்து தனியாக அறிக்கை கொடுக் கப்பட்டுள்ளது. ராடியாவைத் தொடர்பு கொண்டு சம்பிரதாயமாக அல்லாமல் சாதாரணமான வகையில் (iகேடிசஅயட) தனக் காக காரியங்கள் ஆற்றித் தருமாறு சுனில் மிட்டல் கேட்டிருக்கின்றார். டாடாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாது என் றால் தான் செய்து தருவதாக ராடியா தெரி வித்திருக்கின்றார். ராசாவுடன் வேறுபாடு களைத் தீர்த்துக் கொள்ளவும் தான் உதவு வதாகவும் (கட்டணம் உண்டு) கூறியிருக் கின்றார்.’’ ராடியா, சுனில் மிட்டலுக்கு வேலை பார்ப்பதை விரும்பாத முகேஷ் அம்பானி அதை ராடியாவிடம் தெரிவித்துவிட்டார். ஆதலால், முறைப்படி ஒப்பந்தம் எதுவும் போட்டுக் கொள்ளாமல் ராடியா (நோய ஷிஸ் கன்சல்டன்சி உள்பட அவருக்கு நான்கு சேவை நிறுவனங்கள் இருக்கின் றன) தன்னுடைய சேவையை வழங்க யிருக்கின்றார். ஆக இதன்படி பின்னர் சுனில் மிட்டலுக்கும் ராசாவுக்கும் இடை யில் கசப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. மிட் டலின் நிறுவனத்திற்கும் பின்னர் சகாயங் கள் செய்யப்பட்டுள்ளன. ராசா அனில் அம்பானியின் நிறுவனத்திற்கும் கூடுதல் சகாயங்களைச் செய்துள்ளார் என்பது தனி விஷயம். தான் வலிந்து அமைச்சராக்கிய ஒரு வர் தனக்காக செய்த ஊழல் அம்பலமாகி, தன் பெயர் நாறிவிடுமோ என்கிற பயத் தில் (?) டாடா நல்ல பிள்ளை போல் பேசு கின்றார்.
நன்றி;தீக்கதிர், 21.11.10

பிரதமருக்கு தெரியாமல் நடந்த்ததா?

 பிரதமருக்கோ அல்லது நிதிய மைச்சருக்கோ என்ன நடக்கின் றது என்பது தெரியாமல் இருப் பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? அவர்கள் நிதித்துறையைச் சேர்ந்த வர்கள். அவர்கள் ஏன் எச்சரிக்கை அடையவில்லை? அவர்களுக்குத் தெரியாமல் இருப்ப தற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு கடிதப் போக்குவரத்து நிகழ்ந்துள்ளது.

தொலைத் தொடர்புத் துறைக்கு நிதிய மைச்சகத்திலிருந்து கடிதம் எழுதப் பட்டுள்ளது. அலைக்கற்றை ஏலம் விடப்படவேண்டும் என்று போட்டிகளுக் கான செயலாளர் வினோத் தால் தொலைத் தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஊடகங்களில் இது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றது. 2008 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் இரண்டு முறை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இது பற்றித் தெரியாது என்பது மித மிஞ்சிய கற்பனையாகத்தான் இருக்க முடியும். என்னென்ன சாக்குப் போக்குகள் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மற்ற வர்கள் என்ன செய்தார்களோ அதையே தான் செய்ததாகவும், ஒழுங்குமுறை ஆணையம் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்ன பரிந்துரைத் ததோ அதையே தான் செய்ததாகவும் ராசா கூறுகின்றார். இது உண்மை என்று ஒரு நிமிடம் கருதிக் கொள்வோம். (யாரையும் சாராமல்) சுயேச்சையாகச் செயல்படும் ஒழுங்குமுறை ஆணையம் அளவற்ற நஷ்டம் ஏற்படுத்தும் ஒரு செயலைப் பரிந்துரைத்திருக்கின்றது. அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? இரண்டாவது கேள்வி என்னவென்றால், கண்கூடாக அவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும்போது அரசாங்கம் ஏன் ஒழுங்குமுறை ஆணை யத்தின் பரிந்துரையை தன்னுடைய மேலதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யவில்லை? அது மீறமுடியாத உண்மையாக எப்போதும் இருந்த தில்லை. இதற்கு முன்னர் பலமுறை அப்படி ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. சந்தை விலைக்கு ஏன் புதிய உரி மங்கள் விற்கப்படவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. தான் விலையை அதிகரித்திருந்தால் புதிய நிறு வனங்களால் போட்டியிட்டிருக்க முடி யாது. ஏனெனில், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் அலைக்கற்றையை மலிவான விலையில் பெற்றிருந்தார்கள் என்று ராசா கூறுகின்றார். ஹட்ச் நிறு வனத்திற்கு 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) கொடுத்த பின்னரும் வோடாபோன் நிறுவனத்தால் நிமிடத் திற்கு வெறும் 60 பைசா மட்டும் கட் டணம் விதிக்க முடிகிறது என்றால், ஏராளமான லாப விகிதம் இருக்கின்றது என்று பொருள். எனவே இந்த வாதம் தவிடுபொடியாகின்றது.
கேள்வி கேட்டது டெகல்கா வார இத ழின் சோமா சௌத்ரி. பதில் சொன்னவர் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப் பின் முன்னாள் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர். (டெகல்கா, டிசம்பர் 4, 2010). அது மட்டுமில்லை, முன்னர் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தவர். இப்போது தகவல் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினர். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடக்கப் போகின்றது என்று 2007ம் ஆண்டே இவர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என டெகல்கா இதழ் தெரிவிக்கின்றது. திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ஏதோ தான்தான் இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் போலவும், யார் நல்லவர் அல்லது கெட் டவர் என்று தீர்மானிக்கிற தர முத்தி ரையை மக்கள் தன்னிடம்தான் தந் திருப்பது போலவும் பந்தா பண்ணிக் கொண்டிருக்கின்றார். சவடால் பேசிக் கொண்டிருக்கின்றார். பிரதமர் ரொம்ப நல்லவராம். அவருக்கு இதில் சம்பந்தம் இல்லையாம். முதலில் மார்க்சிஸ்ட் கட்சியாலும், பின்னர் மற்ற எதிர்க்கட்சிகளாலும் இரண்டு வருடங்களாக எழுப்பப்பட்டு வரும் ஒரு பிரச்சனையில், சர்வ வல்லமை படைத்த பிரதமர் இத்தனை நாள் வாயே திறக்காமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? கிட்டங்கிகளில் நாறும் உணவு தானியங்களைக் கொடுத் தாவது பட்டினி கிடக்கும் மக்களின் வயிற்றை நிரப்புங்களேன் என்று உச்சநீதிமன்றம் சொன்னால், கொள்கை விஷயத்தில் எல்லாம் நீங்கள் தலை யிடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றத் திற்கே சொல்கின்ற அளவிற்கு அதிகாரம் படைத்த (?)மன்மோகன் சிங் இந்தப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் அதற்கு என்ன பொருள்? மொத்த பழியையும் ராசா மீது போட்டு விட்டு அல்லது திமுக மீது போட்டு விட்டு தனக்கு இந்தக் கொள்ளையில் கூட்டே இல்லை என்று காங்கிரஸ் தப்பிக்கப் பார்க்கின்றது. உண்மையில் பிரதமருக்குத் தெரியாமல் இது நடந் திருக்க வாய்ப்பே இல்லை என்று கருது வதற்குப் போதுமான நியாயம் உண்டு. ஏனெனில் பிரதமருக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு. முன்னாள் அமைச்சரவைச் செயலா ளர் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இந்தியாவின் மொத்த அதிகார வர்க்க மும் இந்த நிகழ்வை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அரசாங் கத்தின் செயல்முறை விதிகள் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா? யாரை முட்டாளாக்குகின்றீர்கள்? எந்த அமைச் சகத்திடமிருந்தும் எந்த கோப்பையும், எந்த ஆவணத்தையும் எடுத்துக் கொள்ள பிரதமருக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது. நிதி சம்பந்தப்படவை என்றால் நிதியமைச்சருக்கும் எந்த கோப்பையும் கேட்டு வாங்கும் உரிமை இருக்கின்றது.’’ (சிக்பிலாசபி நெட்வொர்க் இணைய தளம் றறற.சநனகைக.உடிஅஞுநேறள). செயல்முறை விதிகளின்படி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான எந்த முடிவும் அமைச்சரவையின் மூலம் மட்டுமே எடுக்கப்பட முடியும். இந்த இணையதளம் மேலும் கூறுகின்றது. “2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது பிரதமர் அலுவலகத்தின் முழுத் தோல்வியாகும். இந்த அரசாங்கத்திற்குத் தலைவர் யார்? இந்திய மக்களுடைய நலன்களின் பாதுகாவலர் யார்? பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் அல்லது அமைச்சரவைச் செயலாளர் போன்றவர்களுக்கு ராசா அச்சம், நாணம் இன்றி மேற்கொண்டு செயல்படுவதிலிருந்து தடுப்பதற்கு பத்து நிமிடங்கள் தான் ஆகும். நாயர் தொலை பேசியை கையில் எடுத்து தொலைத் தொடர்புத் துறையின் செயலாளரை உடனடியாகப் பிரதமரைச் சந்திக்கும் படிச் சொல்ல வேண்டும், அவ்வளவு தான்” என்று அந்த முன்னாள் அதிகாரி மேலும் கூறுகின்றார்.ஆனால், அது நடக்கவில்லை. ஒரு வேளை அது நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தால்,“எந்த ஐஏஎஸ் அதிகாரியாவது பிரதமரின் அலுவலகத் திலிருந்து வரும் அழைப்பை புறக்க ணிக்க முடியுமா?’’என்று அதற்கும் அவரே பதில் கூறுகின்றார். யார் அமைச்சராக இருக்கலாம், கூடாது என்று தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் பிரதமருக்கு உரியது. ‘பிரதம ருக்கு இப்பிரச்சனையில் உண்மையி லேயே அக்கறை இருந்தது என்றால் அவர் நீண்ட காலத்திற்கு முன்னரே ராசாவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் மூத்த வழக்க றிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகின்றார். திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன் சிங் குறித்து ஊடகங்கள் கட் டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது.நன்றி:தீக்கதிர்.1.12.10

வெட்ட வெளியில் ஒளிந்து கொள்ள முடியுமா?



‘திமுகவில் எம்பிக்களுக்கு அமைச் சர் பதவி ஒதுக்கும்போது, கடந்த 2007 மே மாதம் முதலே தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அந்தத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது. அதில் திமுக பிடிவாதமாக இல்லை என் பதையும், யாரும் யாருக்கும் சிபாரிசு செய்திடவில்லை என்பதையும் அனை வரும் அறிவார்கள். இதில், ராசாவுக்கு இந்தத் துறை கிடைப்பதற்காக யாரோ ஒருவர் தொலை பேசியில் பேசினார். அவரிடம் யார் யாரோ பரிந்துரை செய் தார்கள். அதனால்தான் அவருக்கு அந்த இலாகா கிடைத்தது என்றெல்லாம் சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள விமர் சனங்கள் விஷமத்தனமன்றி வேறல்ல’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். (தினமணி, 21.12.10).

மக்கள் எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடுவார்கள் என்கிற தைரியத் தில்தான் அவர் இப்படிக் கூறியிருக்க வேண்டும். 

2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை 2009 மே 22ம் தேதி பதவி ஏற்றது. அப்போது திமுகவைச் சேர்ந்த யாரும் பதவி ஏற்கவில்லை. வெளியி லிருந்து ஆதரிக்கிறோம் என்றும் அறிவித் தார்கள். காரணம் மந்திரிசபையில் திமுக விற்கு எத்தனை இடங்கள், எந்தெந்த இலாக்காக்கள், அவற்றில் யாருக்கு எந்த இலாகா போன்ற விஷயங்களில் திமுக விற்கும் காங்கிரசிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான் என்பதை உலகமே அறியும். 

‘அடிப்படைக் கட்டமைப்பு இலாக் காக்களை (ரயில்வே, தொலைத்தொடர்பு, தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகள்) காங்கிரஸ் விட்டுக் கொடுக்க மறுப்பதே, காங்கிரசிற்கும் திமுகவிற்கும் இடையி லான பேச்சு வார்த்தையில் முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது; அதற்குப் பதிலாக தொழிலாளர் நலத் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றைத் தர காங்கிரஸ் தயாராக இருக்கின்றது’ (தி ஹிந்து, மே 22, 2009). 

‘முன்னர் எத்தனை மந்திரி பதவிகள் கொடுக்கப்பட்டனவோ, அதையே இப்போதும் தரத் தயாராக இருக்கின் றோம் என்று கூறினோம். அவர்கள் அதிக மாகக் கேட்கின்றார்கள். அவர்களது கோரிக்கைகள் அதீதமானவை என்று நாங்கள் கருதுகின்றோம்’ என்று காங் கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி பத்திரிகையார்களிடம் கூறினார். (மே.கு. இதழ்) 

திமுக ஐந்து கேபினெட் பதவிகளும், நான்கு துணை அமைச்சர் பதவிகளும் கேட்டது. முந்தைய ஆட்சியில் இரண்டு கேபினெட் பதவிகளும், மூன்று துணை அமைச்சர் பதவிகளும் அளிக்கப்பட் டிருந்தன. இதே செய்திகள் அப்போது வெவ்வேறு பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் வெளிவந்துள்ளன. வெறும் ஒரு நாளிதழில் மட்டும் வெளிவந்த தல்ல. 

மேலும், இறுதியில் ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் ஜவுளித் துறை, தொலை தொடர்புத்துறை இருந்ததையும், முந்தைய அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட வில்லை என்பதும் கண்கூடான உண்மை. 

‘முந்தைய அமைச்சரவையில் முக்கியமான இலாக்காக்களை வகித்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரை மீண்டும் மந்திரியாக நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் விரும்பியதாகத் தெரிகின்றது. இருவருமே ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்... எத்தனை இடங்கள் என்பதில் சற்று முன் பின் இருந்தாலும், கறை படிந்த அமைச் சர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று குலாம் நபி ஆசாத்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண னும் சுட்டிக் காட்டினார்கள்... பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் ஒரு கட்டத் தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் குற்றச் சாட்டுக்கு ஆளாகியுள்ள ஒரு அமைச் சரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று வலுவாக வாதிட்டனர். அதற்கு, காங் கிரசின் நண்பரும், கட்சியின் முதல் குடும்பத்தின் உறவினருமான குவாத் ரோச்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விட பெரியவை அல்ல என்று கருணாநிதி பதிலளித்தார்.’ (வெங்கிடேஷ் ராமகிருஷ் ணன். பிரன்ட்லைன், ஜுன் 19, 2009) 

கருணாநிதி அடித்த அடி நெத்தி அடிதான். 

‘முந்தைய அமைச்சர்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமரே விரும்பவில்லை என்கிற ஊகச் செய்தி குறித்து கேட்ட போது, பிரச்சனை தனிநபர்கள் சம்பந்தப் பட்டதில்லை என்றும், விருப்பமில்லை என்கிற பேச்சிற்கே இடமில்லை என்றும் மீண்டும் கூறினார். அதே நேரத்தில் அடிப் படைக் கட்டமைப்பின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.’ (தி ஹிந்து, மே 23, 2009).

இதன் பொருள் என்னவெனில், ராசா ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது பிரதமருக்குத் தெரி யும். தெரிந்தும் அவரை அமைச்சராக்கி யிருக்கின்றார். ஆனால், அவர் செய்த 2 ஜி ஊழல் பற்றி தனக்குத் தெரியாதது போல் நடிக்கின்றார். ஊழலே நடக்கவில்லை என்றும் சாதிக்கின்றார். பொதுத் தணிக் கை குழுவின் விசாரணைக்கு தானே நேரில் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக இப்போது வீராப்பு பேசுகின்றார். 

மேலும், காங்கிரஸ் தொலைதொடர்பு, தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளை தன்வசம் வைத்துக் கொள்ள விரும்பி யிருக்கின்றது. அதனால்தான் தொலை தொடர்புத் துறை தவிர மற்ற இரண்டு துறைகளும் திமுகவிற்கு கொடுக்கப்பட வில்லை. முந்தைய கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் பாலுவிற்கு அமைச்சரவையிலேயே இடம் அளிக்கப் படவில்லை. இந்தத் துறைகளை ஏன் காங்கிரஸ் தன் வசமே வைத்துக் கொண் டது? தொலைதொடர்புத் துறையையும் வைத்துக் கொள்ள விரும்பியது. 

காங்கிரஸ் அமைச்சர்கள்தான் அவற்றை நிர்வகிக்கும் திறமை உள்ள வர்கள் என்கிறாரா மன்மோகன்? அல் லது அந்தத் துறைகள் பணம் கொழிக்கும் துறைகள் என்பதனாலா? தொலை தொடர்புத் துறை பணம் கொழிக்கும் துறை என்பது நிரூபணமாகிவிட்டது. 

மேலும், பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போதும் பாலு கப்பல் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஐமுகூட்டணி அமைச்சரவையிலும் அதே பதவியில் இருந்தார். முன்னர் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தால்தான் ராசாவிற்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டது என்பது உண்மை யானால், பாலுவிற்கு கப்பல் துறை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுகவிற்கே அது வழங்கப்படவில்லை. அதிக பணம் கொழிக்கும் துறைகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரசிற்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடு, போட்டி. இப்போது கூட ராசா பதவி விலகச் செய் யப்பட்ட பின்னர் திமுகவிற்கு அந்த இலாகா ஒதுக்கப்படவில்லை. காங் கிரசே அதை எடுத்துக் கொண்டுவிட் டதும் இதை நிரூபிக்கின்றது. 

‘தொழிலதிபர் டாடா என்னை முதல் வர் என்கிற முறையிலேயே சந்தித்தார். அப்படி சந்தித்ததற்கு ஊழல்தானா கார ணம்? அப்போது ஏன் எழுப்பவில்லை’ என்றும் திமுக தலைவர் கேள்வி எழுப்பு கின்றார். அப்போது இந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் வெளிவர வில்லை. இப்போதுதான் ஏன் சந்தித்தார் என்பது தெரிகின்றது. 

இந்த உரையாடல்கள் வெளிப்படுத் தப்பட்டது தன்னுடைய அந்தரங்கத்தை மீறும் செயல் என்றுதான் ரத்தன் டாடா வழக்கு தொடுத்திருக்கிறாரே தவிர, அதன் உள்ளடக்கத்தை அவர் மறுக்க வில்லை. நீரா ராடியா, முகேஷ் அம்பானி, ராசா, கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மத்திய அரசாங்கம் என சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை மறுக்கவில்லை. யாருக்கு எந்த இலாகா என்பதில் பேரம் நடந்திருக் கின்றது என்பதை ராடியா டேப்புகளும், அன்றைய செய்திகளும் உறுதிப்படுத்து கின்றன. 

வெட்டவெளி பாலைவனத்தில் ஒளிந்து கொள்ள இடம் தேடுகின்றனர் காங்கிரசாரும், திமுகவினரும்.

தீக்கதிர்  22.12.10


Monday, January 10, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் - சாதியா, அரசியலா, வர்க்கமா?

மின்னஞ்சல்அச்சிடுகPDF


 முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படுகின்றது என்று திமுக தலைவரும், அக்கட்சியினரும், தலைவரது குடும்பத்திற்கு ஏற்ற வகையில் மட்டும் சமூக நீதி பேசும் சில ‘அறிவாளிகளும்’ இன்னும் தொடர்ந்து பேசி வருகின்றனர். மக்கள் யாரும் இந்த வாதத்தை நம்புகிற மாதிரித் தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் பிடிவாதமாகப் பேசுவது ஆச்சரியமளிக்கின்றது. பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றொரு மூடநம்பிக்கை தமிழக மக்களின் மத்தியில் திணிக்கப்பட்டது. அது இன்னும் ஒரு பிரிவினரிடம் இருக்கின்றது. பிறப்பை வைத்து மனிதர்களின் குணநலன்களை தீர்மானிக்க முடியாது. எல்லா சாதிகளிலும் நல்லவர்களும் இருக்கின்றனர், கெட்டவர்களும் இருக்கின்றனர்.
இவர்கள் ஒரு விஷயத்தை மிக வசதியாக மறந்துவிட்டார்கள். தலித்தான ராசாவை வளம் கொழிக்கும் இந்தத் துறையின் அமைச்சராக ஆக்கியதே வடநாட்டு மேல்சாதி முதலாளிகள்தான். (டாடா ஒரு பார்சி. அம்பானி பனியா சாதி. ராடியா பஞ்சாபைச் சேர்ந்த உயர்சாதிப் பெண்மணி.). ராசா அமைச்சராக ஆகக் கூடாது என்று விரும்பிய தயாநிதி மாறன் சூத்திரர். அவர் தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆக வேண்டும் விரும்பிய சுனில் மிட்டல் உயர்சாதிக்காரர். ராசாவின் சார்பாக இடையில் புகுந்து காங்கிரஸ்காரர்களிடம் உப தரகர்களாக வேலை பார்த்த பர்கா தத் மற்றும் வீர் சிங்க்வி போன்றோரும் மேல்சாதிக்காரர்கள்தான். ஆக, குறைந்த பட்சம் இந்த விவகாரத்தில் சாதிக்கு எந்தப் பாத்திரமும் இல்லை.
பார்ப்பன பத்திரிக்கைகள்தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றன என்றொரு வாதமும் முன் வைக்கப்படுகின்றது. அதுவும் சுத்த அபத்தம். ஊழல் விஷயங்களை அம்பலப்படுத்துவதைப் பொருத்த வரையில், அரசியலும் வர்க்க கணக்குகளும்தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கின்றன. காஷ்மீர் பார்ப்பன‌க் குடும்பத்தைச் சேர்ந்தவரான ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்ட போபர்ஸ் ஊழலை வெளிக் கொணர்ந்ததில் ஹிந்து நாளிதழுக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கும் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது. அப்பத்திரிக்கைகளின் முதலாளிகள் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது போல் அவரது தாய் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நகர்வாலா ஊழலை அம்பலப்படுத்தியதும் வடநாட்டு பார்ப்பன ஊடகங்கள்தான்.
மேலும், தமிழகத்தில் உள்ள ஊடகங்களைப் பொருத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேறு எதைக் காட்டிலும் திமுகவைச் சேர்ந்த சூத்திர முதலாளிகளால் நடத்தப்படும் சன் தொலைக்காட்சிதான் அலைக்கற்றை ஊழலைப் பற்றி இடைவிடாமல் செய்திகள் கூறிவந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இப்படியெல்லாம் எழுதுவதன் நோக்கம் இந்த நாட்டில் பார்ப்பனீய ஆதிக்கமே இல்லை என்பதல்ல. 2ஜி ஊழல் அதையும் தாண்டிய பெரிய விஷயம்.
உண்மையைச் சொல்லப் போனால் இப்போதும் கூட ராடியா ஒலிநாடாக்கள் 2010 மே மாத வாக்கிலேயே கசிந்துவிட்டன. அது குறித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சிகளில் அரை வரி, ஒரு வரிச் செய்திகளும் சொல்லப்பட்டன. அப்புறம் அப்படியே அமுக்கி விட்டன இதே ஊடகங்கள்.
"டெல்லியில் இந்த ஒலிநாடாக்கள் பல மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால், அவுட்லுக் மற்றும் ஓபன் ஆங்கில போன்ற வார இதழ்கள் அந்த உரையாடல்களின் எழுத்து வடிவத்தை பிரசுரித்த பின்னர்தான் அவை மக்களின் கவனத்திற்கே வந்தன. இதற்குப் பின்னரும் கூட மற்ற ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடுவதற்கு சில காலம் பிடித்தது" (சத்ய சாகர், எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி.டிசம்பர் 25, 2010).
இப்போதும் கூட இந்த ஒலிநாடாக்கள் விஷயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் கண்டும் காணாமல்தான் இருக்கின்றன. பல பெரிய முதலாளிகள் சங்கடப்படுகின்ற விவகாரம் என்பதால் விளம்பர வருமானம் போய்விடுமோ என்று அஞ்சுகின்றன. பாராளுமன்றமே ஸ்தம்பிக்கமால் இருந்திருந்தால் இந்த விவகாரமே இந்த அளவிற்கு மக்களின் கவனத்தைப் பிடித்திருக்குமா என்பதே சந்தேகம்தான். பாராளுமன்றம் இயங்க முடியாது என்கிற நிலை வந்தபோதுதான் ராசாவே பதவி விலகினார்.
ஏதோ பார்ப்பனரான சுப்பிரமணியம் சுவாமிதான் இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் போல் இதை பார்ப்பன சூழ்ச்சி என்பது பெரியார் முகமூடியைப் போட்டு தப்பித்துவிடும் முயற்சிதான். மேலும் இந்த ஊழலை அம்பலப்படுத்திய புகழையும் ஒரு பார்ப்பனருக்கே அளிக்க திமுகவும், அதன் திராவிட நண்பர்களும் விரும்பிகின்றனர் போலும். சுமார் இரண்டரை வருடங்களாக இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பி வருகின்றது. இப்போது இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்ற பாஜக தயங்கி தயங்கித்தான் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தது. பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர்தான் முழு வேகத்தில் இதைக் கையில் எடுத்தது.
இறுதியாக ஒரு கேள்வி மிச்சம் இருக்கின்றது. யார் இந்த ஒலிநாடாக்களை கசிய விட்டது? இந்த உரையாடல்களைப் பதிவு செய்ததே மத்தியஅரசுதான். மொத்தம் 5851 ஒலிநாடாக்கள். அதில் முதலில் ஒரு 140ம் பின்னர் ஒரு 800ம் வெளிவந்திருக்கின்றன. மீதியுள்ள நாடாக்களில் என்ன இருக்கின்றது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தேர்வு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் மட்டும்தான் திட்டமிட்டு கசிய விடப்படுகின்றன.
அத்துடன் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு இந்த உரையாடல்களை ஆய்வு செய்த பின்னர் தன்னுடைய மேலிடத்திற்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் அனுப்பிய ரகசிய அறிக்கை அப்படியே ஸ்கேன் செய்யப்பட்ட நகலாக வெளிவருகின்றது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அமைச்சர் ராசாவிற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதே போல் வெளிவருகின்றது. அரசாங்கத்திலிருப்பவர்களின் உதவியில்லாமல், அல்லது விருப்பமில்லாமல் இவை வெளிவந்திருக்க முடியாது.
யாராக இருக்கும் என்பது குறித்து ஐந்து ஊகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரதமராகும் ஆசையில் உள்ள பிரனாப் முகர்ஜி இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அவரது நிதித்துறையின் கீழ்தான் வருகின்றன. நாட்டிலேயே மிக நேர்மையான அரசியல்வாதி ஏ.கே.அந்தோனிதான் என்று ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியது இவருக்குப் பிடிக்கவில்லை. இவர் முகேஷ் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் பிரதமராகும் கனவு இருக்கின்றது. ஒரு குழப்பத்தை உருவாக்குவதன் மூலம் அரசைக் கவிழ்த்து, ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி, அதில் தான் பிரதமராகிவிடலாம் என்று திட்டமிடுவதாகச் சிலர் கூறுகின்றனர். இவர் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த ரகசியம்.
அனில் அம்பானி இதைச் செய்திருக்கலாம். ஒலிநாடாக்களைக் கசிய விடுவதன் மூலம் முகேசுக்கும், அவரது தரகர் ராடியாவிற்கும் சிக்கலை உண்டு பண்ணுவது. மேலும், அனில் பெரும் பணச்சிக்கலில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதையும், தன்னுடைய இதர முறைகேடுகளையும் மறைப்பதற்காக இப்படிச் செய்தார் என்பது வாதம்.
தயாநிதி மாறன் இதைச் செய்திருக்கலாம். தன்னிடமிருந்து தொலை தொடர்புத் துறையைப் பறித்த ராசா, ராடியா, கனிமொழி போன்றவர்களைப் பழி வாங்க இப்படிச் செய்திருக்கலாம்.
ஏர்டெல் முதலாளி சுனில் மிட்டல் டேப்புகள் கசிவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். மாறன் மந்திரியாக வேண்டும் என்று அவர் விரும்பியது இப்போது அனைவரும் அறிந்த விஷயம். செல்போன் சேவையில் கிட்டத்தட்ட ஒரு ஏகபோகமாக இருந்த அவரது நிறுவனம் ராசாவின் கொள்கையால் அந்த நிலையை இழந்துவிட்டது என்று காரணம் கூறப்படுகின்றது. (ஆதாரம்: டெகல்கா, ஜனவரி 1, 2011).
இன்றைய அரசியல் சூழலில் இது ஐந்தில் ஏதேனும் ஒன்று சாத்தியம்தான். எது என்பது நமக்குத் தெரியாது. எனினும், ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் அவரது சாதிக்கும் சம்பந்தமில்லை என்பது மட்டும் நிச்சயம். அரசியல் போட்டிகளும், முதலாளிகளுக்கு இடையிலான போட்டிகளும்தான் காரணம்.