Saturday, July 16, 2011

நாத்திகம் ஏன் மதத்தின் இடத்தைப் பிடிக்கும்-புதிய சான்றுகள்


நிகெல் பார்பர் (உளவியல் பரிணாம நிபுணர்)

தமிழில்: அசோகன் முத்துசாமி

பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவின் சமூக ஜனநாயக நாடுகளில், நாத்திகவாதிகள் மிக அதிகமாக இருக்கிறார்கள். வளர்ச்சி குன்றிய நாடுகளில் கிட்டத்தட்ட நாத்திகவாதிகள் இல்லவே இல்லை. நாத்திகவாதம் நவீன காலத்திற்கே உரிய ஒரு நிகழ்வு. (இது கேள்விக்குரியது-மொர்). நவீன நிலைமைகள் ஏன் நாத்திகத்தை உண்டாக்குகின்றன? வரும் 1.8.11 ல் வெளியிடப்படவிருக்கும் என்னுடைய ஒரு புதிய ஆய்வில், வாழ்க்கைத் தரம் உயர உயர நாத்திகமும் அதிகரிக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளை நான் அளிக்கிறேன்.
முதலாவதாக, நாத்திகம் உலகில் பரவிக் கிடக்கும் விதத்திலிருந்து ஒரு தெளிவான உருமாதிரியை நாம் காணலாம். சகாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட கடவுள் மறுப்பு என்பதே கிடையாது. கடவுள் நம்பிக்கை அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளில் குறைகின்றது. ஸ்வீடன் (64சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்), டென்மார்க் (48 சதவீதம்), பிரான்ஸ் (44 சதவீதம்) மற்றும் ஜெர்மனி (42 சதவீதம்) போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடவுள் மறுப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு நேர்மாறாக, பெரும்பாலான சகாரா பாலைவன நாடுகளில்கடவுள் மறுப்பு என்பது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.
பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏன் அதிகமானவர்கள் நாத்திகவாதிகளாக மாறுகிறார்கள் என்கிற கேள்வி கடந்த என்பது வருடங்களாக மானுடவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது. நமது வாழ்வின் நிச்சமற்ற தன்மைகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக மதத்தை அகற்றி விட்டு அதன் இடத்தை அறிவியல் ரீதியாக முன்னறியும் ஆற்றலும், இயற்கையின் மீதான ஆளுமையும் பிடித்துக் கொள்வதுதான் காரணம் என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் பிரேசர் குறிப்பிட்டார். அதிக கல்வியறிவு பெற்ற நாடுகளில் கடவுள் நம்பிக்கையின்மையின் அளவு அதிகமாக இருக்கிறது என்கிற உண்மைத் தரவுகள் இந்த உள்ளுணர்வுக்கு ஆதாரமாக இருக்கின்றன. நாத்திகத்திற்கும் அறிவாற்றலுக்கும் பரஸ்பரம் வலுவான  தொடர்பு இருக்கின்றது என்பதையும் அந்தத் தரவுகள் காட்டுகின்றன.
நாத்திகவாதிகள் பெரும்பாலும் கல்லூரியில் படித்தவர்கள். பெரும்பாலும் நகரங்களில் வாழ்கிறார்கள்.  ஐரோப்பாவின் சமூக ஜனநாயக நாடுகளில் அதிகமாக இருக்கிறார்கள். இவ்வாறாக, பெரும் பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக உணரும் செழிப்பின் நடுவே நாத்திகவாதம் மலர்கின்றது. ஆனால், ஏன்?
தங்கள் வாழ்க்கையின் இன்னல்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும் என்று மக்கள் மதத்திடம் தஞ்சம் அடைவது போல் தோன்றுகிறது. சமூக ஜனநாயக நாடுகளில் எதிர்காலம் பற்றிய அச்சமும், நிச்சயமற்ற தன்மையும் குறைவாக இருக்கின்றது. ஏனெனில், சமூக நலத் திட்டங்கள் ஒரு பாதுகாப்பு வலையத்தை அளிக்கின்றன. சிறந்த ஆரோக்கிய பாதுகாப்பு என்பதன் பொருள், இளம் வயதிலேயே இறந்து போவோம் என்கிற அச்சத்தைக் குறைகின்றது என்பதாகும். இயற்கையின்  மனிதனுக்கு விரோதமான சக்திகளினால் குறைவாக பாதிக்கப்படும் நிலையில் உள்ள மக்கள் தங்களது வாழ்க்கை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகமாக உணர்கிறார்கள். ஆதலால், அவர்களுக்கு மதத்தின் தேவை குறைவாக இருக்கிறது. தொற்று நோய்கள் மிக அதிகமாக உள்ள நாடுகளில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது என்பதை நான் இதனால் கண்டறிந்தேன்.
137 நாடுகளை நான் ஆராய்ந்ததில் நன்கு வளர்ச்சி அடைந்த சமூக நல அரசைக் கொண்ட நாடுகளில் நாத்திகவாதம் அதிகமாக இருப்பதைக் கண்டேன். மேலும், வருமானம் சமமாகப் பிரிக்கப்படுவது அதிகமாக உள்ள நாடுகளில் அதிகமான கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.  ஒரு நாடு பெரும்பாலும் முஸ்லிம் நாடாக இருக்கிறதா (அந்நாடுகளில் நாத்திகவாதியாக இருப்பது குற்றமாக்கப்பட்டிருக்கும்) அல்லது முன்னாளில் கம்யூனிஸ்ட் நாடாக இருந்ததா (அங்கு மதம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது)என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டும், நாத்திகத்தில் வேறுபாடு கொண்டுள்ள நாடுகளில் நான்கில் மூன்று பங்கு நாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டும் மேற்கொள்ளப்பட்ட என்னுடைய ஆய்வு முந்தைய ஆய்விலிருந்து மேம்படுத்தப்பட்டதாகும்.
மக்களின் அபினியாக இருப்பதோடு கூடவே (மார்க்° வெறுப்புடன் குறிப்பிட்டது போல), மதம் இனப்பெருக்கத்திற்கும் ஊக்கமளிக்கலாம். குறிப்பாக, திருமணங்களின் மூலம். விவசாய நாடுகளில் இலவசமாக உழைப்பாளர்கள் கிடைப்hர்கள் என்பதற்காக பெரிய குடும்பங்கள் விரும்பப்படுகின்றன. அதற்கு மாறாக, வளர்ந்த நாடுகளில் பெண்கள் மிக மிகச் சிறிய குடும்பங்களைக் கொண்டிருக்கின்றனர். நிலத்தில் ஏராளமான மக்கள் உழைக்கும் நாடுகளில் கடவுள் மறுப்பு மிகக் குறைவாக இருப்பதை நான் கண்டேன்.
மதத்தின் உளவியல் செயல்பாடுகள் கூட இன்று கடும் போட்டியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நவீன சமுதாயங்களில் மக்கள் உளவியல் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அவர்கள் உளவியல் மருத்துவர்களை நாடுகிறார்கள். அவர்கள் அறிவியல் ரீதியான தீர்வை விரும்புகிறார்கள். மதம் அளிக்கும் பூடகமான அபினி போன்ற தீர்வுகளுக்குப் பதிலாக அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையே தேர்வு செய்கிறார்கள். உயர்கல்வி படிப்புடன் கூடவே நாத்திகவாதம் அதிகரிப்பதில் ஆச்சரியம் இல்லை.
வளர்ந்த நாடுகளில் தேவாலயங்கள் தங்கள் தளத்தை இழந்து கொண்டிருப்பதற்கான காரணங்களை சந்தைப் பதங்களில் தொகுத்துவிடலாம். முதலில், சிறந்த அறிவியலாலும், மற்றும் அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களாலும், மற்றும் குடும்பங்கள் சிறியவையாக இருப்பதாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அச்சமும், நிச்சயமற்ற தன்மையும் குறைவாக இருக்கிறது. ஆதலால், மதத்திற்கான சந்தையும் குறைகிறது. அதே நேரத்தில், அதிக நிபந்தனைகள் இல்லாத உளவியல் மருந்துகள் மற்றும் மின்னணு ஊடகப் பொழுது போக்கு போன்றவையும் (நம் நாட்டில் அவை மூட நம்பிக்கைகளைப் பரப்புவதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன-மொர்), மற்றும் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளுக்கு அடிமைத்தனமாகக் கீழ்ப்பட வேண்டிய தேவையும் அற்ற பல மாற்றுகளும் வழங்கப்படுகின்றன.    

(கட்டுரை ஆசிரியர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். சைக்கலாஜி டுடே என்கிற இணையதளத்தில் எழுதிய கட்டுரை. 14.7.11) www.psychologytoday.com