Wednesday, June 22, 2011

குடிமைச் சமுதாயமும் ஜனநாயகமும்



பி.சாய்நாத்
1990களில் உலகின் மிகப் பெரிய ஆங்கில தினசரியின் விற்பனைப் புலிகள் அப்போது பாலியல் ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கப்படும் மக்கள் மத்தியில் வழக்கிலிருந்த ஒரு சொற்றொடரைத் திருடிக் கொண்டார்கள்: 'நம்மைப் போன்ற மனிதர்கள்' (பீப்பிள் லைக் அஸ்-பிஎல்யு) . இனி மேற்கொண்டு ஊடகங்களின் உள்ளடக்கம் 'நம்மைப் போன்ற மனிதர்களுக்'கானதாக இருக்கும். இது விளம்பரதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது; தேவையற்றவற்றை மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைப்பதற்கும் இது உதவியது. செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் செய்தித்தாள்கள் வாங்குவதில்லை; தென் மும்பைக்காரர்கள் வாங்குவார்கள் என்று அந்த தினசரி தன்னுடைய செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தியது. எனவே, மராட்டியத்தில் ஒரு பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 40000 விவசாயிகள் செய்திகளில் எவ்வளவு இடத்தைப் பிடித்தார்களோ அதை விடவும் அதிகமான இடத்தை ஒன்றிரண்டு பேஷன் மாடல்களின் தற்கொலை மரணம் பிடித்தது.
கடந்த பல ஆண்டுகளில் நடந்த மிகப் பெரும் பேரணிகளில் ஒன்றை டெல்லி நகரம் 2011 பிப்ரவரியில் கண்டது. உணவுப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்பது மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கினர்; அவற்றில் காங்கிரஸ் தலைமையிலான ஐஎன்டியூசி-யும் அடங்கும். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மிக அளவான எண்ணிக்கையைவிட இது பல மடங்கு பெரிதாகும்; ராம்தேவின் களியாட்ட யோகா முகாமில் கலந்து கொண்ட எண்ணிக்கையைவிடப் பெரிதாகும். இவர்கள் தொழிலாளர்கள்; தொழிற்சங்கங்கள் அரசுடன் இணைக்கப்பட்டவை அல்ல. சந்தையால் வழிநடத்தப்படுபவையும் அல்ல. பெரும் நிறுவனங்களிடம் நிதி பெறுபவையும் அல்ல. அவை தங்களுடைய உறுப்பினர்களின் நலன்களையும், விழுமியங்களையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தின. உண்மையில், குடிமைச் சமுதாயம் என்பதற்கான சில முதல் தரமான வரையறைகளுக்குள் மிகக் கச்சிதமாகப் பொருந்துகின்றன. அந்தப் பேரணி குறித்த செய்திகள் பிபிசியிலும், ராய்டர்சிலும், ஏஎப்பியிலும் (பின் இரண்டும் சர்வதேச செய்தி நிறுவனங்கள்-மொர்) வெளிவந்தன. ஆனால், போக்குவரத்து நெரிசலை உருவாக்கியதற்காகக் கண்டிப்பதற்காகக் தவிர பெரும்பாலும் இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் இந்தப் பேரணி செய்தி கண்ணில் படவேயில்லை.
ஊடகப் புலிகள் தங்களுக்குத் தெரிந்ததைவிடப் பெரிய வேலை எதையோ செய்து கொண்டிருந்தார்கள். 1990களுக்குப் பின்னர் 'நம்மைப் போன்ற மனிதர்கள்' என்கிற சொற்றொடரை குறைந்த பட்சம் ஒரு அகராதியாவது சேர்த்திருந்தது: 'ஒரே சமூகப் பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் ஒரு நுட்பமான சொற்றொடர்'. இவ்விடத்தில் நுட்பம் எதுவுமில்லை. இந்திய மேட்டுக்குடியினர் இந்த பிஎல்யு ஆட்டத்தை மற்ற சிலரைப் போல் ஆடுகிறார்கள். இந்த சங்கத்தில் பிறப்பின் அடிப்படையில் அல்லது அழைப்பின் அடிப்படையில் மட்டுமே நுழைய முடியும். சம்பந்தப்பட்ட வர்க்கங்களிடம் இருந்து சான்றிதழ் பெறுவதற்குக் கொஞ்சம் பாடுபட வேண்டும். என்றபோதிலும், உங்களது சொந்த பின்னணியைச் சமாளித்துக் கொள்ளலாம்; உங்களைச் சுற்றிப் போதுமான அளவு வலுவான 'நம்மைப் போன்ற மனிதர்கள்' இருந்தால் அதை அனுகூலமாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம். அன்னா ஹசாரேவிடம் அது இருந்தது. பாபா ராம்தேவிடம் அது இருக்கவில்லை. இருவருமே 'குடிமைச் சமுதாயத்தின்' சார்பாகப் பேசுவதாகக் கூறிக் கொண்டனர். அன்னா ஹசாரேவைச் சுற்றியிருந்தவர்களின் விஷயத்தில் மிகுந்த மரியாதையுடன் அந்த வார்த்தையைப் பிரயோகித்த ஊடகங்கள், ராம்தேவைச் சுற்றியிருந்தவர்களுக்கு வெறுப்புடன் அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்தன; அவர்களை அவை ராம்தேவின் கும்பல் என்று கருதின.
அன்னா ஹசாரேவைச் சுற்றி 'பல அருமையான மனிதர்கள்' இருக்கிறார்கள் என்று கருதிய ஒரு பகுதி ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக ராம்தேவைச் சுற்றியிருந்தவர்களைக் கண்டு திகைப்படைந்திருந்தன. அன்னா ஹசாரேவுடன் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லியின் படித்த மேட்டுக்குடியினர்; உண்மையிலேயே அவர்கள் தங்களது பணியில் மாசற்றவர்களாக விளங்கியவர்கள். எனினும், கோட்பாட்டளவில் ராம்தேவின் அணுகுமுறையிலிருந்து அவர்களது அணுகுமுறை எவ்விதம் வேறுபட்டதாக இருந்தது?
இரண்டுமே தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட குழுக்களாகும்; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்பவை. தேசத்திற்கு எது நல்லது என்பது தங்களுக்குத் தெரியும் என்று அவை வலியுறுத்தின. (ஒரு புட்டி சாராயத்திற்கு அல்லது ஒரு நூறு ரூபாய் நோட்டிற்கு தங்களை விற்றுக் கொண்டவர்கள் என்று அவற்றால் இகழப்படும் வாக்காளர்களைவிட தங்களுக்குத் தெரியும்). அரசு நிறுவனங்களுக்கு (அமைப்புகளுக்கு) இடையிலான சுவர்களை இடிப்பது குறித்த இரு தரப்பிற்குமே மனசாட்சி உறுத்தல் எதுவுமில்லை. அரசியல் சட்டத்தைப் பொருட்படுத்தாத அவை ஒரு அமைப்பை உருவாக்க விரும்பின; அதன் உறுப்பினர்களை அவையே பெரும்பாலும் நியமிக்கும். பாராளுமன்றம், நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு மேலான ஒரு சூப்பர் அமைப்பு. லோக்பால் சட்டத்தை வரைவதற்கான குழு குறித்த அரசாங்கத்தின் அறிவிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ''அன்னா ஹசாரே உள்பட அவரால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள்.....'' என்கிற சொற்களை அது பயன்படுத்துகின்றது. ஒரு தனி நபரால், அவரது பெயரால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தபோதிலும், முன் எப்போதாவது இவ்வளவு முக்கியமான நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா?
ஊழலை எதிர்த்துப் போராட்ட மிகச் சிறந்த தீர்வுகள் தங்கள் வசம் இருப்பதாக இருவருமே கூறிக் கொண்டனர்; அது சரிதான். எனினும், தங்களது உத்தரவுகளை சட்டமாக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். அதாவது, சட்டத்தை எழுதுவதில் அவர்களது விருப்பம் மேலோங்கயிருக்க வேண்டும். அரசியல் சட்டம் இந்த உரிமையை பாராளுமன்றத்திற்கு அளித்திருக்கின்றது என்பது ஒரு விஷயமே அல்ல. தேசத்தை அதன் மக்களை விடக் கூடுதலாகப் பிரநிதித்துவப்படுத்துவது தாங்களே என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். 62 ஆண்டுகளில் தேசம் செய்யத் தவறியதை சில மாதங்களில் தங்களால் செய்து விட முடியும் என்று கருதினர்.
தேர்தல் ஜனநாயகத்தின் மீது தனி வெறுப்பு காட்டப்படுகின்றது. 'நம்மைப் போன்ற மனிதர்கள்' குழுவின் மேல் அடுக்கைச் சேர்ந்தவர்களும் இவர்களும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது பிரபலமொருவர் 'யார் அதை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள்?' என்று கேட்டார். நல்லது, மக்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். 2001 மே தேர்தலில் அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு 75%ஐத் தாண்டியது. மேற்கு வங்கத்திலும் புதுச்சேரியிலும் அது 85% நோக்கி முன்னேறியது. 2011 மே மாதத் தேர்தலில் தமிழகம் கடந்த 44 வருடங்களிலேயே மிக அதிகமான வாக்குப் பதிவைக் கண்டது. ஊழல் பிரச்சனையை தாங்கள் எவ்வளவு முக்கியமானதாகக் கருதுகிறோம் என்பதை அம்மாநில வாக்காளர்கள் காட்டினர். பணபலம் நிச்சயமாக தேர்தல் முறையை மிகக் கடுமையாகக் களங்கப்படுத்திவிட்டது. ஆனால், மக்கள் மீது 'குடிமைச் சமுதாயம்' இவ்வளவு வெறுப்பை கக்க வேண்டுமா? இந்தக் 'குடிமைச் சமுதாயப்' பிரதிநிதிகளுக்கு ஏதேனும் ஆதரவு கிடைத்திருக்கிறது என்றால் அது மக்களுக்கு இருக்கும் ஆழமான கவலையின் காரணமாகத்தான்.
இந்தியக் 'குடிமைச் சமுதாயத்தின்' இந்த வகைமாதிரிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன? உலக வங்கியின் வரையறையை நாம் எடுத்துக் கொள்கிறோமா? அப்படி என்றால் குடிமைச் சமுதாயம் என்பது 'பொது வாழ்வில் இடம் பெற்றுள்ள அரசு சாரா அமைப்புகள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகளின் ஒரு பரந்த அணி' என்று ஆகும். 'அது ஒழுக்க நெறி, கலாச்சாரம், அரசியல், அறிவியல், மதம் மற்றும் சமுதாயத் தொண்டு ஆகியவற்றின் அடிப்படையில் தன்னுடைய உறுப்பினர்கள் மற்றும் இதரர்களின் நலன்களையும், விழுமியங்களையும் வெளிப்படுத்துவதும் ஆகும்'. குடிமைச் சமுதாயம் என்கிற பதத்திற்கு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது சட்டபூர்வமான வரையறை எதுவும் இல்லை என்று ஐரோப்பிய ஆணையம் தட்டையாகக் கூறுகின்றது. குடிமைச் சமுதாய அமைப்புகளையும், இதர நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களையும் அது வேறுபடுத்தியும் பார்ப்பதில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த சிவில் சொசைட்டி இண்டர்நேஷனல் என்கிற அமைப்பு ஊடகங்களை குடிமைச் சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்புகின்றது. அவை தனியாரின் உடமையாக, அதீத வர்த்தக குணம் கொண்டதாக இருந்தால் அவை பெரும்பாலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. சில கற்பிதங்கள் பெண் வாக்காளர்களின் அமைப்பு மற்றும் கு கிளக்ஸ் கிளான் அமைப்பு (ளீu ளீறீuஜ் ளீறீணீஸீ கருப்பின மக்கள், யூதர்கள், மற்ற சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் புரோட்டஸ்டென்ட் பிரிவைச் சேர்ந்த வெள்ளையர்களின் ரகசிய அமைப்பு. அமெரிக்காவில் இயங்குகிறது-மொர்) ஆகிய இரண்டையுமே குடிமைச் சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்றாக்கிவிடும் என்பதையும் அது சுட்டிக் காட்டுகின்றது. இந்தியாவில் தன்னை ஒரு கலாச்சார அமைப்பென்றும், அரசியல் சார்பற்ற அமைப்பென்றும் கூறிக் கொள்ளும் ஒரு பெரிய அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருக்கிறது. ஆதலால், அது குடிமைச் சமுதாயம் என்றாகி விடுமோ?
கோட்பாட்டை விட்டுவிட்டுப் பார்த்தால், இந்தியாவில் குடிமைச் சமுதாயம் என்பது விலக்கி வைக்கப்படுவதை வைத்து வரையறுக்கப்படுவது போல் தோன்றுகிறது. இந்தியாவில் மனித உரிமை வழக்குரைஞர்கள், செயல்வீரர்கள், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பிரபல பத்திரிக்கையாளர்கள், பிரபலங்கள், காசுக்காக யாருக்காக வேண்டுமானாலும் சிந்திக்கும் 'அறிவாளிகள்' ஆகியோரால் குடிமைச் சமுதாயம் நிறைந்திருக்கிறது. வெகுஜன ஊடக விவாதங்களில் நிலமற்ற தொழிலாளர்கள், வாழ்விடமிழந்த மக்கள், செவிலியர்கள், பேருந்து நடத்துனர்கள் ஆகியோர் குடிமைச் சமுதாயத்தின் சார்ப்£கப் பேசும்படி அழைக்கப்பட்டதே இல்லை. ஆனால், உண்மையில் அவர்கள் அழைக்கப்பட வேண்டும்.
குடிமைச் சமுதாயம் என்பது முதன்மையாக 'நம்மைப் போன்ற மனிதர்களின்' மேடை என்று ஊடக வர்த்தக மனங்கள் இன்னும் தெளிவாக வரையறுக்கும். அவர்களது கூற்று சரியாகவும் இருக்கலாம். வேறு யாரை நாம் அங்கு பார்க்கிறோம்? இந்த பிஎல்யு நோய் லோக்பால் மசோதாவையும் தாண்டி வெகு தூரம் செல்கின்றது. சில வகையான லஞ்சங்களை சட்டபூர்வமானவையாக ஆக்க வேண்டும் என்று நிதியமைச்சகத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு கூறியபோது 'குடிமைச் சமுதாயம்' தன்னுடைய கண்களையும், மூளையையும் மூடிக் கொண்டது. மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் (என்சிபிஆர்ஐ) எனப்படும் குடிமைச் சமுதாயத்தின் முன்னணி அமைப்பு உள்நோக்கத்துடன் வெட்கக் கேடான வகையில் மௌனம் காத்தது. பேராசிரியர் பாசு தன்னுடைய தனிப்பட்ட வலைத்தளத்தில் இந்தக் கருத்தை முன் வைக்கவில்லை. அதை அவர் இந்திய அரசாங்க வலைத்தளம் ஒன்றில் எழுதினார். ஆனால், அரசியல்வாதிகளைக் குத்திக் கிழித்து தொலைக்காட்சி பேட்டிகளில் முழங்குவோர் கீச்சிடக் கூட இல்லை. இந்த பைத்தியக்காரத்தனமான கருத்து 'நம்மைப் போன்ற மனிதர்கள்' என்கிற சான்றிதழ் பெற்றவரிடமிருந்து வராமல், ராம்தேவிடமிருந்து வந்திருந்தாலோ அல்லது லல்லுப் பிரசாத் யாதவிடமிருந்து வந்திருந்தாலோ, அதை அடித்து நொறுக்குவதில் ஊடகங்கள் எவ்வளவு சந்தோஷமடைந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தகவல் ஆறியும் உரிமைச் சட்டத்திற்கான தேசிய இயக்கத்தைப் பொருத்த வரையில், இந்தப் பிரச்சனையில் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு தனிப் பிரிவையே உருவாக்கியிருக்கும். பேராசிரியர் பாசுவின் பொருளாதார மூடத்தனத்தைப் பற்றி அந்த அமைப்புடன் தொடர்புள்ள ஒருவர் மென்மையாக ஒரு விமரிசனம் எழுதினார்தான்; ஆனால், அக்கருத்தின் தார்மீக இழிநிலை பற்றி ஒன்றும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். ஆனால், தன்னுடைய இழிவான மௌனத்தால் என்சிபிஆர்ஐ தன்னையும், தகவல் அறியும் உரிமைச் சட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களையும் கைவிட்டுவிட்டது.
ராம்தேவை இப்போது இழிவாகப் பேசும் இதே ஊடகங்கள் 2006ல் அவர் பிருந்தா காரத்துடன் மோதிய போது அவருக்கு (ராம்தேவ்) ஆதரவாக சீறிக் கொண்டு வந்தது. ராம்தேவின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட 113 தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றிய பிரச்சனை அது. அந்தப் பிரச்சனையைப் புறக்கணித்த ஊடகங்கள் பிருந்தா காரத்தைக் கடுமையாகத் தாக்கின. இந்த நம்மைப் போன்ற மளிதர்களின் உணவுச் சங்கிலியில் தொழிலாளர்கள் அழுக்கைத் தின்னும் இழி பிறவிகள். (ஓ, ஆமாம். இந்த பிஎல்யு நோய்க்கு வலுவான ஒரு சாதி அடிப்படையும் இருக்கினறது. ஆனால், அது தனிக்கதை).
மேட்டுக்குடியினர் மத்தியில் தனக்கென ஒரு அடித்தளத்தை வெட்டி எடுத்துக் கொண்டார் ராம்தேவ். அவரது ஆதரவாளர்களில் சில ஊடக முதலாளிகளும் இருக்கின்றனர். இல்லை என்றாலும், அதிக ஆங்கிலமயமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கின்றனர். பாலிவுட்டிலும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமான பிரபலம் என்கிற அந்தஸ்தை அவர் பெற்றுவிட்டார். தன்னுடைய வகை யோகாவிற்கு தொலைக்காட்சியைப் பயன்படுத்தியே அந்த நிலையை அவர் அடைந்து விட்டார். ஆனால், அவர் விரும்பிய தெற்கு டெல்லி மேட்டுக்குடியினர் வழங்கும் 'முதல் தர சான்றிதழ்' இன்னும் நிலுவையில் இருக்கும் போதே அளவுக்கு மீறி ஆட்டம் போட்டு விட்டார். மற்றபடி குடிமைச் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் கூறிக் கொள்வது ஹசாரேவைச் சுற்றியுள்ளவர்கள் கூறிக் கொள்வதை விடவும் பலவீனமானது ஒன்றும் அல்ல. 'என்னுடைய குடிமைச் சமுதாயம் உன்னுடையதை விட நாகரீகமானது' என்கிற சச்சரவு ஆரம்பமாகிவிட்டது. ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதத்தை அலங்கோலமாகக் கையாண்ட ஊழல் நிறைந்த அரசாங்கத்தை கிடுக்கிப் போட்டு பணிய வைக்க இரு குழுக்களுமே தவறிவிட்டன.
ஆலோசனைக் குழுக்கள் வைத்துக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. அரசாங்கங்கள் அவர்களைக் கலந்தாலோசிப்பதிலும், குறிப்பாக தன்னுடைய முடிவுகளால் பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களுக்கு செவி மடுப்பதிலும் தவறொன்றும் இல்லை. சட்டபூர்வமாக அமைக்கப்படாத குழுக்கள் ஜனநாயகப் போராட்டக் கோரிக்கைகளின் எல்லைகளைத் தாண்டும்போதுதான் பிரச்சனை உண்டாகின்றது. அவர்களது நோக்கம் எவ்வளவு நல்லதாக இருந்தபோதிலும், அரசாங்கத்தையும் சட்டமியற்றுவதையும் தாங்களே நடத்த முயலும்போது பிரச்சனை உண்டாகின்றது. ஒத்திசைவான கருத்தை முன்வைப்பது நல்ல விஷயமாகும். அரசாங்கம் தன்னுடைய பணியைச் செய்ய வேண்டும் என்று கோருவதும் நல்ல விஷயமாகும். அதற்கப்பால் செல்லும்போதுதான் பிரச்சனை வருகின்றது.
இதற்கிடையே, பிளாட்டினம் பிரிவு பிஎல்யுக்கள் ('நம்மைப் போன்ற மனிதர்களில்' மிக உயர்ந்த அடுக்கினர்) எந்த பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கீழறுக்க கடந்து இருபது ஆண்டுகளாக நேரடியாக உதவினார்களோ அந்த ஜனநாயகத்தின் ஆதரவாளர்களாக ஆகிவிட்டனர். பாராளுமன்றத்தை புறக்கணித்து, பட்ஜெட்டிற்கு வெளியே பிரம்மாண்டமான பொருளாதார, நிதி முடிவுகள் எடுக்கப்பட்டபோது அவர்கள் ஆராவாரமாக கைதட்டி உற்சாகப்படுத்தினர். அரசு நிறுவன அமைப்புகளை அழிப்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கின்ற வரையில் அவர்கள் அதை வரவேற்றனர்; இப்போதைய அரசாங்கத்தைப் போன்ற ஊழல் அரசாங்கங்களுடன் உளப்பூர்வமாக ஒத்துழைத்தனர். காலப் போக்கில் பாபா பாதையும் அதையேதான் செய்திருக்கும்; பாபாவே ஒரு ஆன்மீக கார்ப்பரேஷன்தான். ஆனால் அவர் நம்மில் (நம்மைப் போன்ற மனிதர்கள்) ஒருவர் இல்லை, அவ்வளவுதான். சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு), எப்ஐசிசிஐ (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம்), அஸ்ஸோகாம் (இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்புகளின் சங்கம்) ஆகியவை அல்லது அவை போன்றவை அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிகள் போடும்போது ஜனநாயகத்தின் இந்தப் புதிய காவலர்களுக்கு எந்த உறுத்தலும் இருப்பதில்லை. திரு. ஹசாரே அரசு அமைப்புகளைப் புறக்கணித்தால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதே வேளையை ராம்தேவ் செய்தால் அதை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆம், ஜனநாயகத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது பிளாட்டினம் பிரிவு பிஎல்யுக்களின் சிறப்புரிமையாகும். 
------------------நன்றி: தி ஹிந்து. 17.6.11