Saturday, September 10, 2011

ஊழலின் மூலவேர்கள்



பிரபாத் பட்நாயக்
தமிழில்: அசோகன் முத்துசாமி

சமீபத்தில் ஊழல் மீது குவிந்துள்ள தனிப் பிரத்தியேகமான கவனம், அநேகமாக தன்னையறியாமலேயே, அதற்கு மிக அடிப்படையான காரணமான  ‘ஆதி மூலதனத் திரட்டலில்’ இருந்து கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம்தான் இன்றைய விவாதத்தின் துவக்கப் புள்ளியாகும். அதன்படி, ஊழல் என்பது ஒரு அரசு ஊழியர் தன்னுடைய சட்டபூர்வமான ஊதியத்திற்கும் மேலாக லஞ்சம் (பணமாகப் பெறும் லஞ்சம் மட்டுமின்றி இதர வகைகளையும் உள்ளடக்கியது) பெறுவது என்று வரையறுக்கப்படுகின்றது. என்றபோதிலும், இதற்கு ஒரு விசித்திரமான உட்பொருள் இருக்கின்றது. ஒரு அரசு ஊழியன் என்கிற முறையில் ஒரு தனியார் அல்லது ஒரு தனியார் நிறுவனம் பொதுச் சொத்தை தன்வசப்படுத்திக் கொள்ள அனுமதித்து, அதற்காக நான் லஞ்சம் எதுவும் பெறவில்லை என்றால், அப்போது அது ஊழலாகாது. ஆனால், அப்படிச் செய்வதற்கு நான் ஏதாவது லஞ்சம் பெற்றால் அப்போது அது ஊழல். இரண்டில் எது நடந்தாலும் அரசு கஜானாவிற்கு, அதனால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகின்றது. ஆனால், பொதுச் சொத்தைத் திருட தனியாரை அனுமதிக்கும் செயலுக்காக சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் லஞ்சம் எதுவும் பெற்றால் மட்டுமே அது ஊழலாகின்றது. இன்னும் என்னவென்றால், அரசு ஊழியர் நேரடியாக லஞ்சம் எதுவும் பெறாமல், மேலும் நுட்பமான வழிகளில் மறைமுகமாக லஞ்சம் பெற்றால், அப்போதும் அது ஊழலாகக் கருதப்படாது.
எடுத்துக் காட்டாக, யாராவது ஒரு அரசு ஊழியர் பொதுச் சொத்தை அடிமாட்டு விலைக்கு தனியார்மயப்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவர் நேரடியாக லஞ்சம் எதுவும் பெறவில்லை என்றாலும், அதற்காக அவர் கார்ப்பரேட் ஊடகங்களாலும், பிரெட்டன்வுட் அமைப்புகளாலும் (வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகள் தங்களது பொருளாதார நலன்களுக்காக அமைத்துக் கொண்ட, அமெரிக்க டாலரை உலகப் பரிவர்த்தனை நாணயமாக ஆக்கிய அமைப்புகள்-மொர்), உலக நிதி சமுதாயத்தாலும் ‘தீர்க்கதிரிசி’ என்றும், தொழில்முனைப்பைத் துணிச்சலாக ஆதரிப்பவர் என்றும், நவீன காலத்திற்கு ஏற்ற தாராளவாத சிந்தனையாளர் என்றும் போற்றி புகழப்படுகின்றார். இது தன் தொடர்ச்சியாக பல கைம்மாறுகளைக் கொணர்கின்றது. பல வகையான ‘ஆசியாவின் சிறந்த அமைச்சர்’ விருதுகள், பல்வேறு சபைகளில் உரையாற்றும் சுற்றுப் பயணங்கள், உலக வங்கிப் பொறுப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகம் கஷ்டப்படத் தேவையில்லாத எளிய வேலைகள், ஊதியமுள்ள பல்வேறு வகையான ஆலோசகர் வேலைகள்,மற்றும் ஓய்வுக் காலத்திற்குப் பின்னர் வேலையே இல்லாமல் சம்பளம் கிடைக்கும் பணிகள் ஆகியவை.  எனினும், இவற்றில் எதுவும் ஊழல் என்று கருதப்படுவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், பதிலுக்குப் பதில் நேரடியாகக் கைம்மாறு பெறுவது மட்டுமே ஊழல் என்று சுருக்கப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்த அமைப்பிலிருந்து கைம்மாறு பெறும், எங்கும் பரவியிருக்கும் ஊழல் இந்தச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆதலால், ஊழலுக்கு எதிராக தற்போது நடக்கும் யுத்தம் இந்த அமைப்பு முறையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால்,  மரங்களின் மீது மட்டும் கவனம் செலுத்தி அவை இருக்கும் வனத்தைப் பார்க்கத் தவறிவிடுகின்றது. ஆம், மரங்களையும் நாம் அலட்சியப்படுத்த முடியாதுதான். ஆதலால், இந்த வரம்பிற்கு உட்பட்ட பொருளிலும் கூட ஊழலுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதும் முக்கியமானதுதான். ஆனால், வனத்தைக் காணத் தவறுவது மன்னிக்க முடியாதது.
அந்த வனத்தைத்தான் மார்க்ஸ் ‘ஆதி மூலதனத் திரட்டல்’ என்று அழைத்தார். ஆதி மூலதனத் திரட்டல் என்பது சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுவாக மக்கள் ஆகியோரின் சொத்துக்களை முதலாளிகளும் அல்லது முதலாளிகளாக ஆகிக் கொண்டிருப்பவர்களும் பறித்துக் கொள்வதைக் குறிக்கின்றது (எடுத்துக் காட்டாக, பொதுச் சொத்தை ஆக்கிரமித்தல் அல்லது பட்ஜெட் வளங்களை தமதாக்கிக் கொள்ளுதல் அல்லது அரசுச் சொத்துக்களை அற்ப விலைக்கு வாங்கிக் கொள்ளுதல் போன்றவை மூலமாக). முதலாளித்துவத்தின் கீழ் வழக்கமாக நடக்கும் மூலதனத் திரட்டலில் இருந்து வேறுபட்ட இது ஆதி மூலதனத் திரட்டல் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியாகும் பொருளாதார உபரியை மறுமுதலீடு செய்வது சம்பந்தப்பட்டதல்ல இது. ஆனால், விவசாயிகள், சிறுஉற்பத்தியாளர்கள்,அரசு மற்றும் பொது மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் ஒரு நிகழ்முறையாகும். இப்போது, ஊழலும் மற்றவர்கள் சொத்துக்களைத் திருடுவது சம்பந்தப்பட்டது. ஊழலே ஒரு வகையான ஆதிமூலதனத் திரட்டலாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு அரசு ஊழியர் சாமான்ய மனிதரிடமிருந்து லஞ்சம் கேட்கும்போது அதுதான் நடக்கிறது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள பெரிய அளவிலான ஊழல் என்பது அதுவே ஆதி மூலதனத் திரட்டலாகிவிடாது. அதைவிடவும், நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆதி மூலதனத் திரட்டலின் மீது விதிக்கப்படும் லெவி (வரி அல்லது கட்டணம்)யாக அது இருக்கின்றது.

சட்டவிரோதமான சுரங்கத் தொழில்

கர்நாடகாவில் நடைபெறும் சட்ட விரோதமான கனிமத் தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள். கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும், அரசு கஜானாவை ஏமாற்றும் சுரங்க முதலாளிகளே ஆதிமூலதனத் திரட்டலில் ஈடுபட்டுள்ளவர்கள். கர்நாடாகாவின் முன்னாள் முதலமைச்சர் சட்ட விரோத சுரங்க முதலாளிகளிடமிருந்து தான் பெற்ற லஞ்சத்திற்காக அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, அவர் ஒரு ஊழல் செயலில் ஈடுபட்டிருக்கிறார். சுரங்க முதலாளிகள் அடிக்கும் கொள்ளையில் ஒரு பகுதியை தனதாக்கிக் கொண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டலாம். அதாவது, சுரங்க முதலாளிகளின் ஆதி மூலதனத் திரட்டலில் இருந்து கிடைத்த வருவாயில் தனக்காக ஒரு கட்டணத்தை அவர் விதித்தார்.
அது போல 2ஜி அலைக்கற்றை ஊழலில் நடந்த ஆதி மூலதனத் திரட்டல் என்பது ஒரு முறையான ஏலம் நடத்தப்பட்டிருந்தால் அரசு கஜானாவிற்கு, அதன் மூலம் மக்களுக்கு வந்திருக்க வேண்டிய பணத்தை ‘முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை’ என்கிற அடிப்படையில் ஒரு முதலாளிகள் குழுவிற்கு துhக்கிக் கொடுத்ததாகும். அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் அதிலிருந்து ஒரு பகுதியை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது (அப்படிக் குற்றம் சாட்டப்படுள்ளார்), அவ்வறாக ஒரு ஊழல் செயலில் ஈடுபட்டபோது, ஆதி மூலதன் திரட்டலில் இருந்து கிடைக்கும் வருவாயின் மீது அவர் தனக்காகவும் தனக்கு வேண்டியவர்களுக்காகவும் ஒரு லெவியை விதிக்கிறார். என்றபோதிலும், ஆதி மூலதனத் திரட்டலின் மூலமே மக்களின் சொத்து பறிக்கப்படுகின்றது. ஊழலில் மூலம் அல்ல. தொலை தொடர்பு அமைச்சர் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறாமல் முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியிருந்தாலும் அரசு கஜானா அதே அளவிற்கு வஞ்சிக்கப்பட்டிருக்கும். திருடப்பட்ட மக்களின் சொத்து (முறையாக ஏலம் விட்டிருந்தால் என்ன விலை கிடைத்திருக்குமோ அந்த விலைக்கும் உண்மையாக விற்கபட்ட விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை) என்பது மிகச் சரியாக அதே அளவு இருந்திருக்கும். இந்தக் கொள்ளையின் மூலம் பயனடைந்தவர்கள் யார் என்பதையும், இந்தக் கொள்ளையின் மூலம் கிடைத்த வருவாயின் ஒரு பகுதியை தனதாக்கிக் கொண்டவர்கள் யார் என்பதையும் மட்டுமே ஊழல் தீர்மானிக்கிறது.

ஊழலின் மீது மட்டும் கவனம்

இது மிக எளிமையான, கண் கூடான விஷயம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அதை இருட்டடிப்பு செய்வதற்கு மிகவும் கபடமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.  மக்களின் சொத்தைத் திருடுவதற்குக் கடைப்பிடிக்கப்பட்ட செயல்முறை ‘முதலில் வந்தவர்களுக்கு முதல் உரிமை’ என்பதால், இந்தச் செயல்முறையைப் பின்பற்றிய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அவர்கள் ஒரு பைசா கூட நேரடியாக லஞ்சமாகப் பெறவில்லை என்றாலும் கூட, இந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்கு உரியவர்கள் ஆகின்றார்கள். இது ஆ. ராசாவிற்கு முன்னர் அந்தத் துறையின் பொறுப்பில் இருந்தவர்களும், இந்த வழிமுறையை (முதலில் வந்தவர்களுக்கு......) ஆதரித்தவர்களுமான காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் இந்த வழியைப் பின்பற்றும் முடிவை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே தனியார் முதலாளிகள் அரசு கஜானாவை ஏமாற்ற வழி செய்தவர்கள் என்று குற்றம் சாட்டத்தக்கவர்கள். இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காக ‘கொள்கை சரியானதுதான், ஆனால் அதைச் (ராசா) சரியாக அமல்படுத்தவில்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் கோரஸாகக் கூறுகிறார்கள்.  பல ‘ஊழல் எதிர்ப்புப் போராளிகள்’ போல இவர்களது கவனமும் பிரத்தியேகமாக ஊழலின் மீது மட்டுமே இருக்கிறது. ஆதிமூலதனத்திரட்டலின் மீது அல்ல. அதாவது, மக்கள் வஞ்சிக்கப்படுவது பற்றி அவர்களது கவனம் இல்லை. ஏனெனில், மக்கள் வஞ்சிக்கப்படுவதற்கு அவர்களே பொறுப்பு. அப்படித் திரட்டப்பட்ட பணத்திலிருந்துதான் லஞ்சம் பெறப்படுகின்றது.
ஆதி மூலதன திரட்டல் மக்கள் சொத்து திருடப்படுவதை இன்றியமையாததாக்குகின்றது. ஆதலால், சொத்து நிர்வாக முறைகளை மாற்றுவதற்காக முயற்சி எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது தழைத் தோங்குகின்றது. நவீன யுகத்தின் மிகவும் அப்பட்டமான ஆதி மூலதனத் திரட்டல் சோவியத் யூனியன் வீழ்ச்சியின்போது ஏற்பட்டது. பொதுவுடமைச் சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்ட போது மிகப் பெருமளவு பொதுவுடமைச் சொத்துக்கள் திருடப்பட்டன. ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் உதித்தெழுந்தார்கள்.  முற்றிலும் புதிய ஒரு முதலாளித்துவ வர்க்கம் மாயமந்திர வித்தை போல் வெறும் காற்றிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. அது போல் இந்தியாவில், புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக வந்த தனியார்மயமாக்கல் மிகப் பெருமளவிலான ஆதி மூலதனத்திரட்டல் போக்குடன் சேர்ந்தே வந்தது. அதற்கான நிலைமைகளை உருவாக்கியது. அத்தகைய திரட்டலில் தழைத்தோங்கும் ஊழல் பல்கிப் பெருகுவதுடனும் சேர்ந்தே வந்தது. அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு செலுத்தும் முந்தைய ஆட்சி முறையின் பண்பாக இருந்த கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக சுதந்திரச் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முந்தைய ஆட்சி முறை ‘லைசன்ஸ்-பெர்மிட் ராஜ்’ என்று பெரும்பாலும் இகழப்பட்டது. சுதந்திரச் சந்தைக் கோட்பாட்டின் அறிமுகம் ஊழலை ஒழிக்கும் என்று கருதப்பட்டது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்றும் சொல்ல முடியாது. எந்த ரேஷன் முறையிலும் சந்தை விலைகளை விட பொருட்களின் விலைகள் கட்டாயம் குறைவாகவே இருக்கும். இது லஞ்சம் கொடுத்து அப்பொருட்களின் விநியோகத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வசதி மிக்கவர்கள் அப்படிச் செய்து கொள்வதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றது. சந்தைகளை சுதந்திரமாக்குவதும், அதனால் ரேஷன் முறை அகற்றப்படுவதும் ரேஷனில் வழங்கப்பட்டு வந்த பொருட்களை (எந்தப் பொருளெல்லாம் ரேஷன் முறையிலிருந்து நீக்கப்படுகின்றதோ அவையெல்லாம் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு விலைகள் அதிகமாகிவிடுகின்றன-மொர்) வாங்குவதிலிருந்து ஏழைகளை ஒதுக்கி வைப்பதால் வெறுக்கத்தக்கதாக இருந்தபோதிலும், லஞ்சம் கொடுப்பதற்கான தேவையை அது நிச்சயம் குறைக்கும், அதனால் ஊழலின் அளவும் குறையும் என்றும் கருதப்பட்டது. இந்தக் காரணத்திற்காக ஊழலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தாரளமயக் கொள்கைகள், அதற்கு மாறாக வரலாறு காணாத அளவிற்கு ஊழல் செங்குத்தாக அதிகரித்திருப்பதுடன் சேர்ந்தே வந்திருக்கிறது என்றால், சந்தைகள் சுதந்திரமாக்கப்பட்டதுடன் சேர்ந்தே வந்திருக்கும் சொத்து நிர்வாக முறைகளின் மாற்றத்தில் இருக்கிறது காரணம். ஆதி மூலதனத் திரட்டலுக்கு ஊக்கம் அளித்த தனியார்மயத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும், அதனால் அது பேணி வளர்க்கும் ஊழலுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்திலும் இருக்கிறது காரணம்.
புதிய தாராளமயத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆதி மூலதனத் திரட்டலில் இருந்து கிடைக்கும் வருமானம் அரசியல் வர்க்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுவதையே சமீப காலத்தில் ஊழல் அதிகரித்திருப்பதைக் குறிக்கின்றது. ஏகபோக முதலாளிகள், நிதித்துறை ஒற்றை ஏகபோகங்கள், நிலத்திமிங்கிலங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் ஆதி மூலதனத்திரட்டலின் வருமானத்தை வாரிக்கொள்வதில்லை. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகார மையங்களில் இருக்கும் அரசியல்வாதிகளும் வாரிக் கொள்கிறார்கள். ஆனால், விஷயங்கள் இன்னும் மோசமாக இருக்கின்றன. அந்த அரசியல்வாதிகளில் நேரடியாக லஞ்சம் பெறாத குறிப்பிடத்தகுந்த பிரிவினரும் கூட இந்த ஆதி மூலதனத் திரட்டல் போக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆதி மூலதனத் திரட்டலை ஊக்குவிக்கும் அதே அமைப்பு முறையைச் சேர்ந்தவர்கள். முன்னர் குறிப்பிட்டது போல் இந்த அமைப்புக்கே உரிய மறைமுகமான கைம்மாறு மூலம் பயனடைகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறைக்குள் அரசியல் வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதியை (மரியாதைக்குரிய சில விதிவிலக்குகள் தவிர,குறிப்பாக இடதுசாரிகள்) இணைத்துக் கொள்வதன் மூலம் ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறையை நாம் நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அரசியலின் முக்கியத்துவம்

இது ஜனநாயகத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை தன்னுள்ளே கொண்டிருக்கின்றது. உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் பொருளாதாரத்தைவிடவும் அரசியல் முதன்மையானதாக இருப்பது அவசியமான முன் நிபந்தனையாகும். அப்போதுதான் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து தோன்றும் உள்ளியல்பான போக்குகளினால் பாதிக்கப்பட்டும் ஏதும் செய்வதறியாத துர்பாக்கியவாதிகளாக ஆகாமல், அத்தகைய போக்குகளுக்கு எதிராக அரசியல் நடைமுறையின் மூலம் மக்கள் கூட்டாக தலையிட முடியும். (உண்மையான ஜனநாயகமும் முதலாளித்துவமும் உடனொத்து வாழ முடியாது என்பதற்கும் இதுதான் காரணம். ஏனெனில், முதலாளித்துவத்தின் உள்ளியல்பாக போக்குகள் இத்தகைய வெகுமக்கள் ஜனநாயகத் தலையீட்டின் மூலம் முறியடிக்கப்பட்டால் முதலாளித்துவம் தன்னுடைய இயல்பை இழந்து விடும். யுத்தத்திற்குப் பின்னர் சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்திய கெய்ன்சிய பரிசோதனை முயற்சியின் தோல்வி இதைத்தான் நிரூபிக்கிறது). அரசியலின் முதன்மை அரசியல் மற்றும் பொருளாதார செயற்களங்கள் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது. அரசியல் செயற்களம் பொருளாதார செயற்களத்திற்குள் ஒன்றிணைக்கப்படக் கூடாது என்பதையும் முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில், அப்போதுதான் பொருளாதார அமைப்பின் தற்செயலான தன்மையினால்மக்களுக்கு இழைக்கப்படும் தவறுகளை அதனால் (அரசியலால்) சுதந்திரமாகச் சரி செய்ய முடியும். ஆனால், அரசியல் செயற்களமும் பொருளாதாரச் செயற்களத்திற்குள் இணைக்கப்பட்டுவிட்டால், எங்கும் பரவியிருக்கும் ஆதி மூலதனத்திரட்டல் நடைமுறையில் இரண்டுக்கும் இடையிலான எல்லை மறைந்து விட்டால், ஜனநாயகம் மிகக் கடுமையாகப் பலவீனப்பட்டுவிடும்.
ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் ருடால்ப் ஹில்பெர்டிங்கைத் தொடர்ந்து லெனினும் ஏகபோக மூலதன சகாப்தத்தில் நிதி மற்றும் தொழில்துறை பெருமுதலாளிகளும் அரசில் உயர்பதவி வகிப்போரும் தனிப்பட்ட முறையில் இணைவதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆதி மூலதனத் திரட்டல் நடைமுறையைப் பாதுகாப்பதற்காக இந்த தனிப்பட்ட இணைப்பு பல கட்டங்கள் முன்னே எடுத்துச் செல்லப்படுகின்றது. அத்தகைய தனிப்பட்ட இணைப்பு அரசியலில் ஜனநாயக உள்ளடக்கத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இதை எதிர்த்து நாம் எப்படிப் போராடுவது என்பது கேள்வி?
ஊழலுக்கு எதிரான போராட்டம் முக்கியமானது. ஆனால், போதுமானதில்லை. ஏனெனில், ஏனெனில், அது ஊழலை ஆதிமூலதனத்திரட்டலுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கிறது. ஆதலால், ஊழல் என்பது நேரடியாக லஞ்சம் பெறுவது மட்டும்தான் என்று சுருக்கிவிடுகின்றது.  இந்த அமைப்புக்கு உரிய மறைமுக ஊழலை  அலட்சியப்படுத்துகின்றது. இன்னும் என்னவென்றால், இது ஊழல் செய்பவர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஆதி மூலதனத் திரட்டல் போக்கிற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்றால், இந்தக் குறுகிய அர்த்தத்திலும் கூட இந்தப் போராட்டம் வெற்றி பெறாது. பொதுச் சொத்தின் செல்வாக்கு மிகப் பெருமளவு இருக்கும் சீனாவிலும் கூட ஒரு ஆதி மூலதனத்திரட்டல் போக்கு தலைகாட்டியுள்ளது. அடிக்கடி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படும் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுக்கும் தொழில் அதன் கண்கூடான வெளிப்பாடு. அத்தகைய மூலதனத் திரட்டலுடன் இணைந்து வரும் ஊழல், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டும் கூட இன்னும் ஒழிக்கப்படவில்லை. தண்டிப்பது மட்டுமே எப்போதும் போதுமானதில்லை. ஊழலைத் துடக்க வேண்டுமானால் ஆதி மூலதனத் திரட்டலே முறியடிக்கப்பட வேண்டும்.
முதலில் மூன்று நடவடிக்கைகள் இதற்கு அவசியமாகும். முதலாவதாக, ஊழலுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் பதவியிலிருக்கும் பிரதமருக்கோ அல்லது உயர்மட்ட நீதிபதிகளுக்கோ ஏன் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், அவர்களையும் உள்ளடக்கும் வழிமுறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட வேண்டும் (எடுத்துக் காட்டாக, நீதிபதிகள் லோக்பாலின் வரம்பிற்கு உட்படுத்தப்பட வேண்டுமா அல்லது தனியே ஒரு நீதித்துறை ஆணையம் உருவாக்கப்பட வேண்டுமா). இரண்டாவதாக, பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதன் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். மிகவும் அரிதாக மட்டுமே அரசுச் சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். அவ்வாறு தனியாமயமாக்கும் ஒவ்வொரு முறையும் அதன் அனைத்து விவரங்களும் பாராளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  நியாயமான ஏல முறையைத் தவிர, முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையிலோ அல்லது அது போன்ற கோட்பாடுகளின் அடிப்படையிலோ தனியாமயமாக்குவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற ஆய்வின் மூலம் அத்தகைய தடை அமல்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தீர்ந்து போகக் கூடிய அனைத்து செல்வாதாரங்களின் உடமையும் பயன்பாடும் அரசின் வசமே இருக்க வேண்டும். உதாரணமாக, கனிம வளங்களின் அரசு உடமை மட்டுமே போதுமானதல்ல. அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களின் நிர்வாகம் தனியார் வசம் கொடுக்கப்பட்டால், சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. இதைத் தடுப்பதற்காக அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களின் நிர்வாகமும் கூட அரசின் வசமே இருக்க வேண்டும். இதுதான் அரசின் அதிகாரபூர்வ கொள்கையாக மிகச் சமீப காலம் வரையிலும் இருந்தது. அது போல், நிலம் போன்ற அரிய வளங்களைப் பயன்படுத்துவதில் சமூகக் கட்டுப்பாடு மட்டும் போதாது, அரிய வளமான நிலப் பரிமாற்றத்தின் போது அதை முதலில் வாங்கும் உரிமை அரசின் ஏகபோக உரிமையாக (பொருத்தமான ஒரு அரசு நிறுவனம் மூலம்) இருக்க வேண்டும். முன்னரே வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும். ஊழலுக்கு முக்கியமான மூல காரணங்களில் ஒன்றாக இருக்கும் நிலத்தில் ஊகபேரத்தை முறிக்க இது உதவும். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பதன் மூலம் நிகழும் ஆதி மூலதனத் திரட்டலுக்கு ஒரு தடையாகவும் இது இருக்கும்.
நிலத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஒரு நீண்ட மரபு உள்ளது. ஹென்றி ஜார்ஜின் (19ம் நுhற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்காவின் பொருளாதார நிபுணர், நிலச்சீர்திருத்தவாதி-மொர்)செல்வாக்கிற்கு ஆட்பட்டு ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அதை ஆதரித்தார். பேபியன் திட்டத்தின்(புரட்சி மூலம் அன்றி படிப்படியாக பொதுவுடமைக் கோட்பாடுகளைப் பரவச் செய்ய வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் பேபியன்கள்-மொர்) ஒரு முக்கியமான உட்கூறாக அது இருந்தது. பேபியன்கள் அதைத் தாண்டிச் செல்லாததற்காக பிரெட்ரிக் ஏங்கெல்° அவர்களை விமரிசித்தார்.  ஆனால், நிலத்தின் ஒரு பகுதியாவது தேசியமாக்கப்படுவது முற்போக்கான சமூக மாற்றத்திற்கான திட்டம் எதுவாயினும் அதன் இன்றியமையாத உட்கூறாக இருக்க வேண்டும். என்றபோதிலும், ஆதி மூலதனத் திரட்டலைக் கட்டுப்படுத்துவதந்கு இதற்கு அவசியமில்லாமல் இருக்கலாம். நிலப் பயன்பாட்டை அரசு ஒழுங்குபடுத்துவதும், நிலப் பரிமாற்றங்களின் மீது அரசுக் கட்டுப்பாடு இருப்பதும் அதற்குப் போதுமானதாக இருக்கும். மற்ற விஷயங்களுடன் கூட நிலம் வாங்குவதில் அரசுக்கு இருக்கும் முதல் உரிமையின் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.
ஒரு கேள்வி எழலாம்: ஆதி மூலதனத் திரட்டலுக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்தால் அத்தகைய நடவடிக்கைகளை அரசு எந்திரத்தின் மூலம் எப்படிச் செயல்படுத்த முடியும்?  குறிப்பாக, அரசுக் கட்டுப்பாடு மற்றும் அரசால் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை முன் வைப்பது ஏற்கனவே ஊழலில் மூழ்கியிருக்கும் அதே அரசியல் வர்க்கத்தையே ஊழலை எதிர்க்கும் வேலைக்குப் பொறுப்பாக்குவது விநோதமாகத் தோன்றக் கூடும். ஆனால், நாம் இங்கு பல நடவடிக்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஊழல் தடுப்புச் சட்டமும் ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், அரசு ஊழியர்களின் ஊழல் நடைமுறைகளின் மீதான கட்டுப்பாட்டுடன் சேர்த்தே அரசுக் கட்டுப்பாடு வேண்டும் என்றே இங்கு ஆலோசனை கூறப்படுகின்றது.
என்றபோதிலும், இறுதியாக, மக்கள் தலையீட்டின் மூலம் மட்டுமே ஆதி மூலதனத் திரட்டலையும், அது பெருக்கும் ஊழலையும் தடுக்க முடியும்.  அரசியல் வர்க்கத்தை தன்னால் ஆதாயம் அடைவோர் வட்டத்திற்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ஆதி மூலதனத் திரட்டலால் பலவீனப்படுத்தப்படும் ஜனநாயகம் மக்கள் தலையீட்டின் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.
ஆதி மூலதனத் திரட்டலுக்கு எதிராக ஒரு வலுவான மக்கள் இயக்கம் கட்டப்பட வேண்டும். அது மட்டுமே ஜனநாயகத்தைக் காக்கும் அரணாக இருக்க முடியும். மக்களுக்குப் பதிலாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், மக்களின் தலையீட்டின் தேவையைத் தவிர்க்கும் ஊழல் எதிர்ப்பு ரட்சகர்களின் சாகும் வரை உண்ணாவிரதங்கள், அவர்களின் நோக்கம் எவ்வளவு நல்லதாக இருந்தபோதிலும், ஒரு முழுமையான சட்டத்தை உருவாக்குவதில் அவர்களது உண்ணாவிரதம் எவ்வளவு வெற்றிகரமானதாக ஆன போதிலும், ஊழலை அல்லது ஆதி மூலதனத் திரட்டலை முறியடிப்பதில் அவர்கள் வெற்றி பெற முடியாது.

-------------------------நன்றி: பிரன்ட்லைன், ஆகஸ்ட் 26, 2011.    
 
 (மார்க்சிஸ்ட், செப்டம்பர் 2011 இதழில் வெளியானது).