Friday, March 2, 2012

தொண்டு நிறுவன அரசியலும் கூடங்குளமும்





      அசோகன் முத்துசாமி


      கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்கு இந்தியாவில் செயல்படும் அமெரிக்க மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளின் உதவியால் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகின்றது என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார். அநேகமாக அமெரிக்கா தொடர்பாக அதற்கு எதிராக ஒரு கருத்தை (அல்லது உண்மையை) மன்மோகன் கூறியிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும். இருக்கட்டும்.

      சொன்னவரின் நேர்மை கேள்விக்குறியானது என்பதால் சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் சுப.உதயகுமார் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் துhக்கில் தொங்கத் தயார் என்று சவால் விட்டிருக்கிறார். அரசியல் சார்பற்ற போராட்டம் என்னுடையது என்று கூறிக் கொள்ளும் அவர் ஒரு பக்கா அரசியல்வாதி போலவே பெரும்பாலான நேரங்களில் பேசுகிறார்.

      பெரும்பான்மை மக்கள் அணுஉலையை எதிர்க்கிறார்கள் என்று கொஞ்சமும் கூசாமல் மீண்டும் மீண்டும் கூறுகின்றார். திமுக, இரண்டு கம்யூனி°ட் கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு தொழில்களைச் சேர்ந்த முதலாளிகள், தொழிலாளர்கள் சங்கங்களும்,  விவசாயிகள் சங்கங்களும்  அணுஉலைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதிமுக இன்னும் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கவில்லை, அவ்வளவுதான். (மதிமுகவோ கடும் மின்வெட்டு வாட்டும் சூழலில், விசைத் தொழிலாளர்கள் நிறைய இருக்கும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலை மனதில் வைத்து கூடங்குள எதிர்ப்பிற்கு 'புரட்சிகரமான இடைக்கால விடுமுறை' விட்டுவிட்டது).  ஆனாலும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதைப் பார்த்தால் இவரது நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்குரியதாக ஆகின்றது. நிற்க.

      நாம் தொண்டு நிறுவனங்களுக்கு அந்நிய நிதி உதவி விஷயத்திற்கு வருவோம்.

      அந்நிய நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் அப்படி நிதி அளிக்கும் நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் என்றோ, அப்படிச் செயல்பட்டாலும் அந்நாடுகள் நிதியுதவி தொடர்ந்து அளிக்கும் என்றோ சொல்ல முடியாது. சொந்தச் செலவில் யாரும் சூன்யம் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

       பொதுவாக, பல்வேறு வகையான இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு சில தற்காலிக நிவாரணங்கள் வழங்குவதன் மூலம் அவர்கள் நடப்பில் இருக்கும் அரசமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் வேலையை அவை கச்சிதமாகச் செய்து வருகின்றன. அத்துடன் உலகமய அமலாக்கத்திற்குப் பின்னர் அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கைக்கான ஆதரவை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்து வருகின்றன.

      கடந்த சில வருடங்களாக ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இரண்டு குறும்படங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் (நிச்சயமாக தமிழ்நாட்டில்) திரையிட்டு வருகின்றது.

      அதில் ஒன்று தண்ணீர் பிரச்சனை சம்பந்தப்பட்டது. இந்திய மக்கள் அனுபவிக்கும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை மனதைத் தொடுகின்ற மாதிரி விவரிக்கும் அப்படம் மெல்ல மெல்ல தண்ணீர் விரயம் செய்யப்படுவதைப் பற்றிப் பேசுகின்றது. அருகி வரும் இயற்கை ஆதாரமான நீருக்குக் கட்டணம் விதிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லி முடிகிறது. இது பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களுக்கான படம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

      அதே போல் குறுங்கடன் திட்டம் பற்றி விளக்கும் படம் ஒன்றும் திரையிடப்படுகின்றது. குறிப்பாக, மராட்டியம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பருத்தி விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிச் சொல்லி பெண்கள் குழுக்களாகச் சேர்ந்து கடன் பெறுவது பற்றி விளக்கும் படம். இப்படிக் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்° நிறுவனங்களை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இயக்குகின்றன என்பதும், லாப நோக்கமற்ற என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் லாப நோக்கத்தாலும், கடன் வசூலிக்கும் முறைகளாலும் ஆந்திராவில் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பற்றியும், அது தொடர்வது பற்றியும் சமீபத்தில் 'ஹிந்து' நாளிதழ் (26.2.12) விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இவை உதாரணங்கள் மட்டுமே.

      தொண்டு வேலைக்காக தங்களுக்கு வந்த பணத்தை இப்படி கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் திருப்பி விட்டதாக மத்திய அரசாங்கத்தால் மூன்று என்ஜிஓக்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. துhத்துக்குடி டையோசிஸ் அசோஷியேசன், குட் விஷன், பீப்பிள்ஸ்  எஜீகேஷன் பார் ஆக்ஷன் அன்ட் கம்யூனிட்டி எம்பவர்மென்ட் ஆகிய அந்த மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பை நடத்துவதே சுப.உதயகுமார்தான்.

      2010-2011ல்  ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிய நிதி பெற்ற தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 958. அவற்றில் 186 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.   அவை அந்த ஆண்டு மட்டும் 800 கோடிக்கும் மேல் அந்நிய நிதி பெற்றன. இவற்றில் உதயகுமாரின் நிறுவனம் மட்டும் 2010-11ல் 2, 64,05,409 ரூபாய் பெற்றிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்ற இதர அமைப்புகள் பலவும் இது போல் கோடிக்கணக்கில் அந்நிய நிதியுதவி பெறுகின்றiவைதான். தங்களுக்கு வரும் நிதியில் வெறும் 10 விழுக்காட்டை போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பி விட்டாலும் போதும். வருடம் முழுவதும் போராட்டம் நடத்தலாம்.

      இதற்கிடையே ஒரு விஷயத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் சில சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூச இந்துத்துவ சக்திகள் முயலுகின்றன. (இதை கிறித்துவ மத அமைப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்). ஆனால், 2010-11ல் 10 கோடிக்கும் மேல் அந்நிய நிதியுதவி பெற்ற 'தொண்டு நிறுவனங்களின்' பட்டியலில் காஞ்சி காமகோடி மருத்துவ அறக்கட்டளையும் ஒன்று.  (perspectives on pan asian-website). கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, கூடங்குள எதிர்ப்பு குழுக்கள் கவனிக்கவும்.

      அந்நிய நாடுகள் இந்திய மக்களை வாழவைப்பதற்காக நிதியுதவி செய்யப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் ஒன்றும் அப்படி தங்கள் நாட்டு சாமானிய மக்களை வாழ வைத்துவிடவில்லை.
            ---------------------------------------2.3.12

     


     

     

Wednesday, February 29, 2012

சில கவிதைகள்




பந்து போல்
திரும்பி வரும்
என்பது தெரியாதவர்கள்
நிலைக் கண்ணாடிகள் மீது
கல் வீசுகிறார்கள்
.
ஆள்பாதி ஆடைபாதி
மற்றவருக்குத்தான்

எப்போதும்
ஆள்தான் எல்லாமே
மனசாட்சிக்கு.
.
சொல்லாத சொல்லுக்கு
விலையேதுமில்லை

அவதூறுகளை நீங்கள்
அள்ளி வீசும்போது தெரிகிறது

உங்கள் மொழியின்
விலையும்

என் மௌனத்தின்
மதிப்பும்
.
மனிதர்கள் வெறும்
மரங்களல்ல

காய்த்தால்
கல் வீசுவதற்கும்

காய்க்காவிட்டால்
வெட்டிச் சாய்ப்பதற்கும்
.
வரிசைகளை மீறி
நீண்டன கைகள்

உடலை வளர்த்தவன்
அறிவை வளர்க்கவில்லை.
-அசோகன் முத்துசாமி