Wednesday, April 27, 2011

கடவுளின் மரணம்





அசோகன் முத்துசாமி


இதற்கு முன்னர் பூமியில் ‘அவதரித்த’ எல்லாக் ‘கடவுளர்களையும்’ போலவே சாய்பாபாவும் செத்துப் போய்விட்டார். இது பக்தர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இப்படிச் சொல்வதால் அவர்களுக்குக் கோபம் கூட வரலாம். ஆனால், என்ன செய்வது? பிறந்ததெல்லாம் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது  இயற்கையின் விதி.
அந்த விதியை சாய்பாபாவின் அற்புத ஆற்றல்கள் கூட மாற்ற முடியாது. வெறும் காற்றிலிருந்து சிவனையே அவரால் வரவழைக்க முடியும். அதாவது, சிவ லிங்கத்தையே. (பகுத்தறிவாளர்களே அதற்குள் அவசரப் படாதீர்கள்.) . ஆனால், அவரைக் காப்பாற்ற சிவன் வரமாட்டார். அல்லது வரவில்லை. காரணம் வெகு எளிமையானது. சிவலிங்கம் இருக்கின்றது. அது நம் அனைவருக்கும் தெரியும். அது வெறும் நம்பிக்கை அல்ல. அதனால் அது வருகின்றது. ஆனால், சிவன்?
சாய்பாபா அவரது பக்தர்கள் பலர் கூறுவது போல் தன்னலமற்றவர்தான். பொது நலம் பேணுபவர்தான். இல்லை என்றால் நித்தம் நித்தம் தன் அற்புத ஆற்றலால் சிவலிங்கங்களை உற்பத்தி செய்து நாடெங்கும் கடை போட்டு விற்றிருக்க மாட்டாரா?
வேறொரு வகையில் பார்த்தால் அவர் உலகின் மிகச் சாமர்த்தியமான வியாபாரிகளில் ஒருவர். வருடத்தில் சில நாட்கள், அதுவும் எப்போதாவது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களில் சிலருக்கு மட்டும் சிவலிங்கத்தை வரவழைத்துக் கொடுக்கின்றார். வெறும் சாம்பல் விபூதியை வரவழைத்துக் கொடுக்கின்றார்.
எங்கிருந்து வரவழைக்கின்றார் என்கிற கேள்வியை விட்டுத் தள்ளுங்கள். தன் சட்டைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டுதான் பக்தர்களுக்குத் தரிசனம் தரவே வருகின்றார் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? எத்தனை முறைதான் நிரூபிப்பது?எப்படியோ அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்பதையும்அவர் சாதாரண மனிதர்தான் என்பதை இயற்கை நிரூபித்து விட்டது.
அந்த சிவலிங்கங்கள் அவருக்கு அல்லது அவரது மடத்துக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றுத் தருகின்றன. பத்தோ, இருபதோ அல்லது நுhறோ பெறுமானமுள்ள சிவலிங்கத்தின் விலை பல கோடிகள். சாமர்த்தியமான வியாபாரி இல்லையா என்ன?
மேலும், சிவலிங்கமானாலும், வெறும் சாம்பலானாலும் அவற்றுக்கும் பிரான்ட் நேம் இருக்கிறது ஐயா. திருப்பூர் பனியனை விற்கிறவன் விற்றால்தான் நல்ல விலை வரும். ஆனால், அது தயாரித்தவனுக்கு வருமா வராதா என்பது வேறு விஷயம்.
சரி. இதையெல்லாம் விடுங்கள். அவரது தத்துவங்களில் ஏதாவது புதுமை இருக்கிறதா எனக் கேட்டீர்களானால் அதற்கும் இல்லை என்பதுதான் பதில். இந்திய மதச் சிந்தனை மரபில் பல நுhறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டவற்றைத்தான் அவர் திரும்பச் சொல்லியிருக்கின்றார். எல்லோர் மீதும் அன்பு செலுத்து என்பது புதிய தத்துவமா என்ன? மகிழ்ச்சியை வெளியே தேடாதே, அது உனக்குள்தான் இருக்கிறது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன போதனை அல்லவா? அவரது பொன் மொழிகளைப் படித்தால் தெரியும். புதிய சரக்கு ஒன்றுமில்லை என்பது.
சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்ட கீதையின் பல கருத்துக்களை இவர் தன்னுடையது போல் கூறியிருக்கின்றார். ஒரு சாம்பிள்: கடவுளே அனைத்தையும் செய்விக்கிறான். நீ வெறும் கருவி மட்டுமே.
கண்ணணே கொலை செய்கின்றான், நீ செய்யவில்லை என்று கண்ணன் அர்ஜீனனுக்குச் சொன்னது நினைவிற்கு வர வேண்டும்.
தத்துவம் புதிதில்லை என்றால், பழையதையே சொல்லும் அவர் பின்னால் மக்கள் ஏன் புதிதாகச் செல்ல வேண்டும்? பழைய நபர்கள் மீது மக்கள் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம். அல்லது பழைய சாமியார்கள் அல்லது மதகுருக்கள் சலித்துவிட்டார்கள் என்று அர்த்தம். அல்லது புதிய புதிய மொந்தைகள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று அர்த்தம்.
சாய்பாபா ஒரு மதச்சார்பற்ற சாமியார் என்று அவரது பக்தர்கள் புகழ்கின்றனர். சில பொது நோக்கர்களும் கூட சிலாகிக்கின்றனர். அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று சங்பரிவாரிகள் அவரிடம் பல முறை கேட்டிருக்கின்றனர். ஆனால், பாபா மறுத்துவிட்டார். நல்லது. ஆனால், மதவெறியர்களின் இயக்கத்தை அவர் கண்டிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்து, முஸ்லிம், கிறித்துவம் என பல மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரது பக்தர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களை அவர் இழக்க முடியாது. வகுப்புவாதிகளை ஆதரிக்காததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க முடியும். ஆனால், என்ன காரணத்திற்காக இது போல் நடுநிலை வகித்திருந்தாலும் அது இந்து மத வெறியர்களுக்கே சாதகமாகிப் போனது என்பதுதான் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து நாம் பெறும் முடிவு.
போதாக்குறைக்கு, இறைச்சி உணவைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவர் வன்முறை உணர்வையும்,  மிருக நோய்களையும் வளர்க்கிறார் என்றும் அவர் ‘பொன் மொழிந்திருக்கிறார்’. எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் இருக்கின்றார். எனவே, நீங்கள் ஒரு மிருகத்தை அல்லது பிராணியைக் கொல்லும்போது கடவுளுக்கு துன்பத்தையும், வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்துகின்றீர்கள் என்பதும் அவரது கூற்றுகளில் ஒன்று. (அப்படியா, கடவுளுக்கு இது போன்ற உணர்ச்சிகள் உண்டா?). ஆக, அவரது கடவுள் சைவக் கடவுள்.
மேலை நாடுகளில் சைவம், அசைவம் என்பது வெறும் உணவுப் பழக்கம்தான். இந்தியாவில் அது மதம் சம்பந்தப்பட்ட விவகாரம். சாய்பாபாவின் கருத்துக்களில் பல வகுப்புவாதிகள் பயன்படுத்திக் கொள்ள ஏற்றவையாக இருக்கின்றன.
போகட்டும்.
சாய்பாபா கல்வி நிலையங்களை நடத்துகின்றார். மருத்துவ மனைகள் கட்டி இலவசமாக சிகிச்சை வழங்குகின்றார்.  சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வரும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் கொடுத்து உதவினார். அதே போல் ஆந்திராவிற்கும் உதவி செய்துள்ளார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, செய்யாததை எல்லாம் அவர் செய்தார். இப்படியாக அவரது புகழ் பாடப்படுகின்றது.
எடுத்த எடுப்பில் எழும் கேள்வி இதுதான். அரசாங்கம் ஏன் செய்யவில்லை?
அரசாங்கம் செய்ய வேண்டியதை எல்லாம் இவர் ஏன் செய்கிறார்?
கல்வியையும்,மருத்துவத்தையும் ஆடம்பரமான சேவைகளாக ஆக்கியது அரசாங்கம்தான். அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணற்றோர். பாபா அறக்கட்டளை அவர்களில் விரல் விட்டு எண்ணத்தகுந்தவர்களுக்கு இலவச சேவை வழங்குகின்றது. இது போல்தான் கல்வி நிலையங்கள் போன்ற இதர உதவிகள் மற்றும் சேவைகள்.  
இந்தியாவில் உள்ள சாய்பாபா அறக்கட்டறையின் சொத்து மதிப்பு மட்டும் 40,000 கோடிகள். உலகெங்கும் உள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் 1,45,000 கோடிகள்.  இவ்வளவு பெரிய சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? பக்தர்களின் காணிக்கைகளின் மூலம் வந்தன. பக்தர்கள் என்றால் பணக்கார பக்தர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், கள்ளக்கடத்தல் காரர்கள் இன்னும் இது போன்றோர் ஆகியோரின் கருப்புப் பணம். இந்த தனவந்தர்கள் யாரை எவ்வளவு சுரண்டினார்களோ, எத்தனை ஊர்களை அடித்து உலையில் போட்டார்களோ தெரியாது.
கூலி சற்று அதிகமாகக் கொடுக்க மறுப்பவர்கள், அரசாங்கத்திற்கு வரி கட்ட மறுப்பவர்கள் பாபாவிற்கு மட்டும் வாரிக் கொடுக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? மனசாட்சியின் உறுத்தலா? இதயமற்ற உலகத்தின் இதயமா அல்லது இதயமற்ற உலகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டமா?
அல்லது நேர்மையானவர்கள் கொடுக்கும் பணம் என்றால் அவர்கள் ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். நேரடியாக தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவதை விட்டு விட்டு ஏன் பாபா மூலம், அவருக்கு ஒரு தரகர் கமிஷனும் கொடுத்து, தர்மம் செய்ய வேண்டும்?
எப்படியாயினும் சகல தரப்பு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பாபாவைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிரதமர், முதல் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் குடியரசுத் தலைவர்கள் என்று இரங்கல் தெரிவிப்பதைப் பார்த்தால் ஒன்று தெளிவாகின்றது.
பாபாவுடைய பணக்கார பக்தர்களின் சொத்தை பறிக்க வேண்டாம். வரியை ஒழுங்காக வசூல் செய்தால் போதும். எத்தனையோ கோடி பேருக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கலாம். கல்வியை இலவசமாக வழங்கலாம். இன்னும் பல நகரங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கலாம்.
பாபா இந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகின்றார். தன்னுடைய போதனைகள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், தன்னுடைய சேவைகள் மூலம் அவர்களது சிந்தனையை திசைதிருப்பவும்  பாபாக்கள் தேவைப்படுகின்றனர். அதனால்தான் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வருகின்றனர். அதனால்தான் அவருக்கு அரச மரியாதை.
----------------------------27.4.11