Thursday, August 25, 2011

அன்னா ஹசாரே, காந்தி, அம்பேத்கர்



அசோகன் முத்துசாமி


அன்னா ஹசாரேயின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் மட்டுமே உண்மையான இந்தியர்கள், மற்றவர்கள் எல்லாம் போலிகள் என்று அவரை ஆதரிப்பவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் மற்றவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று இந்து மதவெறி சங்பரிவாரம் கூறுவது போல் இது இருக்கிறது. அது போலவே அவசர நிலை காலத்தில் ‘இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா’ என்று காங்கிரசார் அகம்பாவமாகக் கூறியது போல் ‘அன்னா என்றால் இந்தியா, இந்தியா என்றால் அன்னா’  என்று ஹசாரே கூட்டம் கூறுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தன்னை ஒரு காந்தியவாதி எனக் கூறிக் கொள்ளும் அன்னா தான் காந்திய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்கிறார். உண்மை என்னவென்றால், காந்தி தான் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கடைப்பிடித்த வழிமுறைகளை சுதந்திர இந்தியாவில் கடைப்பிடித்திருப்பாரா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில்.
1919ம் ஆண்டு காந்தியின் செயலாளராக இருந்தவரும், பின்னர் சுயராஜ்ஜியக் கட்சியின் துணைச் செயலாளராக இருந்தவரும், 1948ம் ஆண்டு சோஷலி°ட் கட்சியின் தலைவராக இருந்தவருமான பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புருஷோத்தம் திரிகம்தா° ஒரு பேட்டியில் பின்வரும் ஒரு அரிய செய்தியைக் கூறியிருக்கிறார்.
“நான் அவரை மறுநாள் சந்திக்கச் சென்றபோது, வை°ராய்க்கு அனுப்புவதற்காக அவர் தயாரித்து வைத்திருந்த கடிதம் ஒன்றை என்னிடம் காட்டினார். சத்தியாகிரகம் செய்வதை ஒரு அரசியல் சட்ட உரிமையாக ஆக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே நான் மிகுந்த மரியாதையுடன் காந்திஜியிடம் பின்வருமாறு கூறினேன். ’நமது அரசியல் சட்டத்தை வடிவமைப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாளை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சத்தியாகிரகம் செய்வது ஒரு அரசியல் சட்ட உரிமை என்று நீங்கள் சொல்வீர்களா, அதை சட்டத்தில் எழுதி வைப்பீர்களா என்று கேட்டேன். அப்படி நாம் செய்தால் அதன் பொருள் என்ன? தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி யார் வேண்டுமானாலும் சட்டத்தை மீறலாம், அது குறித்து எதுவும் செய்ய முடியாது என்றுதானே பொருள்?  உண்மையில் இது உங்கள் கருத்துக்களுக்கே முரணானதாகும். சத்தியாகிரகம் என்றால் அதிகாரத்திற்கு அடங்க மறுப்பது, அதன் விளைவுகளைச் சந்திப்பது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்போது, சத்தியாகிரகம் ஒரு அரசியல் சட்ட உரிமையானால், அது அனுமதிக்கப்பட்டால், என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’. அந்த மாபெரும் மனிதர் சிந்திக்க ஆரம்பித்தார். ‘நீங்கள் சொல்வதிலும் விஷயம் இருகிகறது’ என்று அவர் கூறினார். மறுநாள் அவர் என்னை அழைத்தார். ‘உங்கள் கருத்து சரியான கருத்து. அந்தக் கடிதத்தை அனுப்புவதில்லை என்று நான் தீர்மானித்து விட்டேன்.’அந்த மனிதரின் மகத்துவம் அத்தகையது. அவர் எப்போதுமே திறந்த மனதுடன் இருந்தார். உண்மையில் அவரே அந்தக் கடிதத்தை எழுதி இறுதிப்படுத்திவிட்டு , நான் அதை அனுப்பவில்லை என்றார்’’.  (ஏ.ஜி.நுhரனி, பிரன்ட்லைன், ஆகஸ்ட் 26, 2011).
கதர் சட்டை அணிந்திருப்பதாலேயே அன்னா ஹசாரே காந்தியவாதியாகிவிட மாட்டார். இப்பிரச்சனை தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் என்ன கூறியிருக்கிறார் என்பதையும் பார்த்துவிடுவோம். பின்னர் மீண்டும் ஹசாரேவிற்கு வருவோம்.
  “1949 நவம்பர் 25ம் தேதி அரசியல் சட்ட முன்வரைவைச் சமர்ப்பித்துவிட்டு டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய தொலைநோக்கு பார்வை மிக்க உரையில் அப்போதுதுhன் பிறந்துள்ள ஜனநாயகத்திற்கு ஏற்படக் கூடிய மூன்று அபாயங்கள் பற்றி எச்சரித்தார். சமூக மற்றும் பொருளாதார அசமத்துவங்கள், சட்ட விரோதமான வழிமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் வழிபாடு ஆகியவை சம்பந்தப்பட்டவை அந்த அபாயங்கள்.
“அவரது இரண்டாவதும், தற்போதைய சூழலில் மிக முக்கியமானதுமான எச்சரிக்கை சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான போராட்ட வழிமுறைகள் தொடர்புடையவை. மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக வன்முறையான மற்றும் பலாத்காரமான வழிமுறைகளைக் கைவிடுமாறு அவர் மக்களை வலியுறுத்தினார். அதாவது, கீழ்ப்படிய மறுப்பது, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் மற்றும் உண்ணாவிரதம் இருத்தல் போன்ற கட்டாயப்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றைக் கைவிடுதல். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்: “பொருளாதார மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு சட்டப்படியான வழிமுறைகள் இல்லாதபோது, சட்ட விரோதமான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு பெருமளவு நியாயம் இருந்தது.’’ஆனால், அவற்றை அந்தக் காலத்திற்குப் பிறகு பயன்படுத்துவது அராஜகத்தின் இலக்கணம் அன்றி வேறில்லை. ‘அவற்றை எவ்வளவு விரைவாகக் கைவிடுகிறோமோ அவ்வளவு நமது தேசத்திற்கு நன்மை’ என்றார்.’’.(சுகதேவ் தோரட், தி ஹிந்து, ஆக°ட் 23, 2011).
அதாவது அம்பேத்கரும் அன்னாவின் வழிமுறையை ஆதரித்திருக்கமாட்டார். காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் பற்றி பலருக்கு பல கருத்துக்கள் இருக்கலாம். ஆட்சியில் இருப்பவர்களின் அணுகுமுறைக்கு ஏற்ப மக்களின் போராட்ட வடிவங்கள் மாறாலாம். தீவிரமடையலாம். ஆனால், ஹசாரே தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொள்வதுதான் பொருத்தமில்லை.  
ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் தான் சொல்கிற லோக்பால் மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றாவிட்டால்....என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மிரட்டுகிறார். அப்படிக் கட்டாயப்படுத்துவது காந்திய வழிமுறையுமல்ல. ஜனநாயகமுமல்ல. மார்க்சீய அறிஞர் பிரபாத் பட்நாயக்கின் வார்த்தைகளில் சொல்வதானால் இது பாராளுமன்றத்தின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதற்குச் சமம். (தி ஹிந்து, 24.8.11).
அனைத்துக் கட்சிகளாலும் விவாதிப்படாமல் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஆனால், அன்னாவின் குழு முன்வைக்கும் ஜன்லோக்பால் வரைவுச் சட்டத்தில் சில அடிப்படையான குறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மாநில ஊழல் தடுப்பு லோகாயுக்தா தொடர்புடையது. லோகாயுக்தா இல்லாத மாநிலங்களுக்கு அதை அமைக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்பதாகும்.
‘அன்னா குழுவின் இந்த கோரிக்கை பிரச்சனைகள் நிறைந்தது. லோகாயுக்தாக்களை உருவாக்குவது தற்போது மாநில சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. பாராளுமன்றம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கும், அரசியல் சட்டத்தில் உள்ள மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது’. (தி ஹிந்து தலையங்கம், 23.8.11).
விஷயம் இத்துடன் முடியவில்லை. ஊழல் புகார்களைப் பெறவும், விசாரிக்கவும், தண்டிக்கவும் முழு அதிகாரம் படைத்ததாக லோக்பால் உருவாக்குப்படுவது குறித்து தலித்துகள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
‘ஜனநாயகமற்ற சாதி அமைப்பின் சட்டகத்திற்குள் செயல்படும் நம்முடையது போன்ற ஒரு புதிய ஜனநாயகத்தில் அரசியல் சட்ட வழிமுறைகள் மற்றும் சமூக ஒழுக்கம் போன்றவை ஒரு குறிக்கோளுடன் பேணி வளர்க்கப்பட வேண்டும். ஊக்குவிக்கப்பட வேண்டும். லோக்பால் போன்ற ஒரு மிக முக்கியமான சட்டத்தை மிரட்டலுக்குப் பணிந்தும், நியாயமற்ற காலக் கெடுவிற்குள்ளும் நிறைவேற்றக் கூடாது. அதன் அனைத்து அம்சங்களும் மிகவும் கவனமாகவும், அனைத்துப் பிரிவினரின் ஒப்புதலுடனும் விவாதிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தினால் தங்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி தலித்துகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார்கள். குறிப்பிட்ட சாதிக்கு எதிரான உணர்வும், பாரபட்சமும் அளவின்றி நிலவும் ஒரு சமுதாயத்தில்,மிகப் பரந்த அதிகாரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிற இச்சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.’ (சுகதேவ் தோரட், மேகு கட்டுரை).
எப்படியாயினும் இப்படியொரு சிக்கலான நிலைமையை உருவானதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் பொறுப்பேற்க வேண்டும்.
   ----------------------------------------------24.8.11