Tuesday, January 11, 2011

வெட்ட வெளியில் ஒளிந்து கொள்ள முடியுமா?



‘திமுகவில் எம்பிக்களுக்கு அமைச் சர் பதவி ஒதுக்கும்போது, கடந்த 2007 மே மாதம் முதலே தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அந்தத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது. அதில் திமுக பிடிவாதமாக இல்லை என் பதையும், யாரும் யாருக்கும் சிபாரிசு செய்திடவில்லை என்பதையும் அனை வரும் அறிவார்கள். இதில், ராசாவுக்கு இந்தத் துறை கிடைப்பதற்காக யாரோ ஒருவர் தொலை பேசியில் பேசினார். அவரிடம் யார் யாரோ பரிந்துரை செய் தார்கள். அதனால்தான் அவருக்கு அந்த இலாகா கிடைத்தது என்றெல்லாம் சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள விமர் சனங்கள் விஷமத்தனமன்றி வேறல்ல’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். (தினமணி, 21.12.10).

மக்கள் எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடுவார்கள் என்கிற தைரியத் தில்தான் அவர் இப்படிக் கூறியிருக்க வேண்டும். 

2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை 2009 மே 22ம் தேதி பதவி ஏற்றது. அப்போது திமுகவைச் சேர்ந்த யாரும் பதவி ஏற்கவில்லை. வெளியி லிருந்து ஆதரிக்கிறோம் என்றும் அறிவித் தார்கள். காரணம் மந்திரிசபையில் திமுக விற்கு எத்தனை இடங்கள், எந்தெந்த இலாக்காக்கள், அவற்றில் யாருக்கு எந்த இலாகா போன்ற விஷயங்களில் திமுக விற்கும் காங்கிரசிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான் என்பதை உலகமே அறியும். 

‘அடிப்படைக் கட்டமைப்பு இலாக் காக்களை (ரயில்வே, தொலைத்தொடர்பு, தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகள்) காங்கிரஸ் விட்டுக் கொடுக்க மறுப்பதே, காங்கிரசிற்கும் திமுகவிற்கும் இடையி லான பேச்சு வார்த்தையில் முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது; அதற்குப் பதிலாக தொழிலாளர் நலத் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றைத் தர காங்கிரஸ் தயாராக இருக்கின்றது’ (தி ஹிந்து, மே 22, 2009). 

‘முன்னர் எத்தனை மந்திரி பதவிகள் கொடுக்கப்பட்டனவோ, அதையே இப்போதும் தரத் தயாராக இருக்கின் றோம் என்று கூறினோம். அவர்கள் அதிக மாகக் கேட்கின்றார்கள். அவர்களது கோரிக்கைகள் அதீதமானவை என்று நாங்கள் கருதுகின்றோம்’ என்று காங் கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி பத்திரிகையார்களிடம் கூறினார். (மே.கு. இதழ்) 

திமுக ஐந்து கேபினெட் பதவிகளும், நான்கு துணை அமைச்சர் பதவிகளும் கேட்டது. முந்தைய ஆட்சியில் இரண்டு கேபினெட் பதவிகளும், மூன்று துணை அமைச்சர் பதவிகளும் அளிக்கப்பட் டிருந்தன. இதே செய்திகள் அப்போது வெவ்வேறு பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் வெளிவந்துள்ளன. வெறும் ஒரு நாளிதழில் மட்டும் வெளிவந்த தல்ல. 

மேலும், இறுதியில் ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் ஜவுளித் துறை, தொலை தொடர்புத்துறை இருந்ததையும், முந்தைய அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட வில்லை என்பதும் கண்கூடான உண்மை. 

‘முந்தைய அமைச்சரவையில் முக்கியமான இலாக்காக்களை வகித்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரை மீண்டும் மந்திரியாக நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் விரும்பியதாகத் தெரிகின்றது. இருவருமே ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்... எத்தனை இடங்கள் என்பதில் சற்று முன் பின் இருந்தாலும், கறை படிந்த அமைச் சர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று குலாம் நபி ஆசாத்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண னும் சுட்டிக் காட்டினார்கள்... பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் ஒரு கட்டத் தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் குற்றச் சாட்டுக்கு ஆளாகியுள்ள ஒரு அமைச் சரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று வலுவாக வாதிட்டனர். அதற்கு, காங் கிரசின் நண்பரும், கட்சியின் முதல் குடும்பத்தின் உறவினருமான குவாத் ரோச்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விட பெரியவை அல்ல என்று கருணாநிதி பதிலளித்தார்.’ (வெங்கிடேஷ் ராமகிருஷ் ணன். பிரன்ட்லைன், ஜுன் 19, 2009) 

கருணாநிதி அடித்த அடி நெத்தி அடிதான். 

‘முந்தைய அமைச்சர்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமரே விரும்பவில்லை என்கிற ஊகச் செய்தி குறித்து கேட்ட போது, பிரச்சனை தனிநபர்கள் சம்பந்தப் பட்டதில்லை என்றும், விருப்பமில்லை என்கிற பேச்சிற்கே இடமில்லை என்றும் மீண்டும் கூறினார். அதே நேரத்தில் அடிப் படைக் கட்டமைப்பின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.’ (தி ஹிந்து, மே 23, 2009).

இதன் பொருள் என்னவெனில், ராசா ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது பிரதமருக்குத் தெரி யும். தெரிந்தும் அவரை அமைச்சராக்கி யிருக்கின்றார். ஆனால், அவர் செய்த 2 ஜி ஊழல் பற்றி தனக்குத் தெரியாதது போல் நடிக்கின்றார். ஊழலே நடக்கவில்லை என்றும் சாதிக்கின்றார். பொதுத் தணிக் கை குழுவின் விசாரணைக்கு தானே நேரில் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக இப்போது வீராப்பு பேசுகின்றார். 

மேலும், காங்கிரஸ் தொலைதொடர்பு, தரைவழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளை தன்வசம் வைத்துக் கொள்ள விரும்பி யிருக்கின்றது. அதனால்தான் தொலை தொடர்புத் துறை தவிர மற்ற இரண்டு துறைகளும் திமுகவிற்கு கொடுக்கப்பட வில்லை. முந்தைய கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் பாலுவிற்கு அமைச்சரவையிலேயே இடம் அளிக்கப் படவில்லை. இந்தத் துறைகளை ஏன் காங்கிரஸ் தன் வசமே வைத்துக் கொண் டது? தொலைதொடர்புத் துறையையும் வைத்துக் கொள்ள விரும்பியது. 

காங்கிரஸ் அமைச்சர்கள்தான் அவற்றை நிர்வகிக்கும் திறமை உள்ள வர்கள் என்கிறாரா மன்மோகன்? அல் லது அந்தத் துறைகள் பணம் கொழிக்கும் துறைகள் என்பதனாலா? தொலை தொடர்புத் துறை பணம் கொழிக்கும் துறை என்பது நிரூபணமாகிவிட்டது. 

மேலும், பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போதும் பாலு கப்பல் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஐமுகூட்டணி அமைச்சரவையிலும் அதே பதவியில் இருந்தார். முன்னர் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தால்தான் ராசாவிற்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டது என்பது உண்மை யானால், பாலுவிற்கு கப்பல் துறை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுகவிற்கே அது வழங்கப்படவில்லை. அதிக பணம் கொழிக்கும் துறைகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரசிற்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடு, போட்டி. இப்போது கூட ராசா பதவி விலகச் செய் யப்பட்ட பின்னர் திமுகவிற்கு அந்த இலாகா ஒதுக்கப்படவில்லை. காங் கிரசே அதை எடுத்துக் கொண்டுவிட் டதும் இதை நிரூபிக்கின்றது. 

‘தொழிலதிபர் டாடா என்னை முதல் வர் என்கிற முறையிலேயே சந்தித்தார். அப்படி சந்தித்ததற்கு ஊழல்தானா கார ணம்? அப்போது ஏன் எழுப்பவில்லை’ என்றும் திமுக தலைவர் கேள்வி எழுப்பு கின்றார். அப்போது இந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் வெளிவர வில்லை. இப்போதுதான் ஏன் சந்தித்தார் என்பது தெரிகின்றது. 

இந்த உரையாடல்கள் வெளிப்படுத் தப்பட்டது தன்னுடைய அந்தரங்கத்தை மீறும் செயல் என்றுதான் ரத்தன் டாடா வழக்கு தொடுத்திருக்கிறாரே தவிர, அதன் உள்ளடக்கத்தை அவர் மறுக்க வில்லை. நீரா ராடியா, முகேஷ் அம்பானி, ராசா, கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மத்திய அரசாங்கம் என சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை மறுக்கவில்லை. யாருக்கு எந்த இலாகா என்பதில் பேரம் நடந்திருக் கின்றது என்பதை ராடியா டேப்புகளும், அன்றைய செய்திகளும் உறுதிப்படுத்து கின்றன. 

வெட்டவெளி பாலைவனத்தில் ஒளிந்து கொள்ள இடம் தேடுகின்றனர் காங்கிரசாரும், திமுகவினரும்.

தீக்கதிர்  22.12.10


No comments:

Post a Comment