Wednesday, February 2, 2011

சீமான் என்ன காரணத்திற்காக திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டும்? -அசோகன் முத்துசாமி


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பதற்காக அதிமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தாலும் அறிவித்தார் அவர் மீது கடுமையான விமரிசனங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த விமரிசனங்கள் அனைத்திற்குமே காரணம், அவர் எதற்காக காங்கிரசைத் தோற்கடிக்க நினைக்கிறார் என்று அவரே கூறிய காரணத்தில்தான் இருக்கின்றது.
சுருக்கமாகச் சொன்னால், ஈழப்பிரச்சனையில் 'ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த' அல்லது 'ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த' (அல்லது கொன்று குவிக்கக் காரணமாக இருந்த) காங்கிரஸ் (திமுக) கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தான் அதிமுகவை ஆதரிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். உடனே என்ன மாதிரியான விமரிசனங்கள் எழுகின்றன? எழுந்துள்ளன? 'பார்ப்பன ஜெயலலிதா', 'பிரபாகரனைத் தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா'-அவரை ஆதரிப்பது எப்படி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க உதவும், ஓட்டு பொறுக்கி அரசியல் என்றெல்லாம் விமரிசனங்கள். அவதூறுகள். அவரது ஆதரவாளர்களும் தங்களது நிலையை எதிர்ப்பவர்கள் மீது தரக்குறைவான விமரிசனங்களைத் தான் வைக்கிறார்கள். என்ன விதைக்கின்றோமோ அது விளைகின்றது. அத்துடன், நாம் நெல்லை விதைத்தாலும் களையும் கூடவே சேர்ந்து விளைகின்றது. முன்னது மூடநம்பிக்கை என்றால், பின்னது இயற்கை. யாருடைய நம்பிக்கை, மூடநம்பிக்கை, விருப்பு வெறுப்பு, நலன் அல்லது இன்னபிற எதுவும் இயற்கைக்கு ஒரு பொருட்டல்ல. அது சில குறிப்பிட்ட விதிகளின் படி இயங்குகின்றது. இந்த விதி என்பது யாரும் வகுத்ததல்ல. இலக்கியம் கண்டது இலக்கணம். இலக்கணம் சொன்னது இலக்கியம் அல்ல. சீமான் மற்றும் அவரது இந்த நிலையை எதிர்ப்பவர்கள் என அனைவரும் காங்கிரஸ்-திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்பதில் இருக்கின்றது விஷயம். சீமான் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து ஆளும் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதால் இந்த அசிங்கத்திற்கு அவர் ஆளாக வேண்டியிருக்கின்றது. வரலாறு காணாத விலை உயர்வு, வேலையின்மை, வரலாறு காணாத ஊழல், திரைப்படம்-தொலைக்காட்சி-செய்தித்தாள்-வானொலி என சகல ஊடகத் துறைகளிலும் வேறு எவரும் தொழில் செய்ய முடியாத வகையில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம், இது போதாதென்று திமுகவினர் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செய்யும் அராஜகங்கள் என ஒரு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. தமிழக மக்களின் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கும் காரணங்கள்; அலைக்கற்றை ஊழல் செய்த ராசாவைக் குற்றம் சாட்டினால் அவர் தலித் என்பதால்தான் அவர் மீது ஊழல் பழி சாட்டப்படுகின்றது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, மறு பக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தும் தலித்துகள் மீது தடியடி நடத்தும், கைது செய்யும் கருணாநிதியைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. அதையும் மீறி சிலர் விமரிசனம் செய்யத்தான் செய்வார்கள். கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால் (அலைக்கற்றை ஊழலில் நக்கீரன் காமராஜ் விட்டில் சிபிஐ சோதனை நடத்தியதை நினைவில் கொள்ளவும்) போன்ற அலைக்கற்றை ஊழலில் சில முட்டைகளைப் பெற்றவர்கள் அல்லது பெற நினைத்தவர்கள் (முட்டை என்பது பறவை முட்டையல்ல; ஆசிரியர்கள் போடும் முட்டையும் அல்ல; 1,76,379 கோடியை எண்ணால் எழுதினால் முட்டை வருமே அந்த முட்டை) விமரிசனம் செய்வார்கள். ஆனால், மக்கள் தாராளமாக மதிப் பெண் போடுவார்கள். ஆக, திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க சீமான் என்ன காரணம் சொல்கிறாரோ அதில் இருக்கின்றது அவர் தான் கொண்ட குறிக்கோளில் வெற்றி பெறுவாரா இல்லையா என்கிற பிரச்சனை. எப்படியாயினும் அவர் என்ன காரணத்திற்காக திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தாலும், அல்லது சில மாமேதைகள் கடிதம் எழுதுகிறார்கள் என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்காமல் தனித்து நின்றாலும் அது காங்கிரஸ்-திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே முடியும். அதாவது தமிழகத் தமிழர், இந்தியத் தமிழர், உலகத் தமிழர், ஒட்டு மொத்தமாக சாதி, மத, இன பேதமின்றி மக்கள் அனைவருக்கும் பகைவனாக விளங்கும் ஆளும் கூட்டணிக்குச் சாதகமாகவே முடியும். 2.2.11

1 comment:

  1. Well..good note...to oppose dmk for all rightful reasons one cud hav...one has to align with aiadmk today...this is only option not only to seeman...but also to cpm...other parties...and importantly...our people...what future holds...no one cud say now...if dmk loses...u cud find a new voracious supporter of the elam tamils...that's how...politics works...and we all know....

    ReplyDelete