Sunday, March 13, 2011

அடையாள அரசியலின் உள் முரண்பாடுகள் 1 -அசோகன் முத்துசாமி




அடையாள அரசியல் இயல்பாகவே உள் முரண்பாடுகள் நிறைந்தது என்பது மட்டுமின்றி அது அடிக்கடி மனிதாபிமானமற்ற தன்மையையும் பெறுகின்றது. ஒரு சமீபத்திய உதாரணம்:
ஜப்பானில் சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டதில் முகநூலில் சிலர் மனநிறைவு அடைந்திருக்கின்றனர். அதிர்ச்சியாக இருக்கின்றதா? ஆம், இதுதான் உண்மை. சரி, எதற்காக மனநிறைவு? தமிழினத்தை அழிக்க சிங்களர்களுக்கு உதவி செய்ததாம் ஜப்பான் அரசு! அதற்காக இயற்கை பழிவாங்கிவிட்டதாம். இதற்கு அறம் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்...என்றெல்லாம் மேற்கோள்கள் வேறு.
இந்த குறிப்பில் கருத்து தெரிவித்த சிலர் ஜப்பானியனும் பவுத்தன் சிங்களனும் பவுத்தன் அதனால் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று பதிந்திருந்தனர். இந்தக் கொடுமையை என்னென்று சொல்வது?
ஜப்பானிய அரசு ஒரு அரசியல் நிலைப்பாடு எடுக்கின்றது. அந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பதானதாக இல்லை என்பதற்காக மொத்த ஜப்பான் மக்களும் செத்து மடியட்டும் என்று ஆசைப்படுவது எவ்வளவு கொடூரமான எண்ணம்? இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உலகில் வேறு எந்தவொரு இயக்கமும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதற்கான காரணம் இப்போது புரிகின்றது. ஏனெனில் அவர்கள் வேறு எந்த மக்களின் நலன் பற்றியும் கவலைப்பட்டதில்லை.
மேலும், 'உலகையே சேர்த்துக் கொண்டு வந்து சிங்களன் இலங்கைத் தமிழினத்தை அழித்தான் (?)' என்றெல்லாம் பேசுகன்றார்கள், எழுதுகின்றார்கள். ஆனால், இவர்கள் ஒரு முறை கூட ஏன் உலகமே தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதைப் பற்றி ஒரு கணமும் யோசிக்கவில்லை!
இதில் வேடிக்கை என்னவென்றால் 2004ல் ஆழிப்பேரலை இலங்கையைத் தாக்கிய பொழுது தமிழர்கள் வாழும் பகுதியான ஈழமும் அழிவைச் சந்தித்தது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இயற்கை எதற்காக தமிழர்களைப் பழிவாங்கியது என்று அவர்களைப் போன்றவர்களால் பதில் சொல்ல முடியுமா?
சிங்களர்களை பவுத்தர்களாகப் பார்ப்பதே அடையாளம் என்பது ஒரு படித்தானதாக இருக்க முடியாது என்பதற்கும், அடையாள அரசியல் தனக்கு எதிரான கருத்துக்களை தானே உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கும் மற்றொரு உதாரணமாகும். ஏனெனில், மொழியின் அடிப்படையில் சிங்களன் என்று வகைப்படுத்துகின்றவர்கள், கூடவே அவனுடைய மதத்தையும் பார்த்து அவன் பவுத்தன் என்றும் வகைப்படுத்துகின்றார்கள். இதுவே ஒரு முரண்பாடாகும். ஏனெனில், சிங்களர் பவுத்தர் என்றால், அவர்கள் தமிழர்களை ஒடுக்குகின்றார்கள் என்று மட்டும் சொல்லக் கூடாது, தமிழர்களின் மதத்தையும் சேர்த்து '....இந்த மதத்தவரை ஒடுக்குகின்றார்கள்' என்றும் கூற வேண்டியதாகின்றது.
இலங்கைத் தமிழர்களின் மதம் என்ன? சைவ மதமா? இந்து மதமா? இஸ்லாமிய மதமா? கிறிஸ்துவ மதமா? அல்லது மதமற்றவர்களா? இந்த மதம் என்றால், சைவ மதமா? ஆம் என்றால் அதற்குள் சாதி இருக்கின்றதா, இல்லையா? இப்படி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.
ஈழத் தமிழர்கள் பெரும்பகுதி தற்போது இந்து மதம் என்று பொதுவாக அழைக்கப்படுவதின் சைவ மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம். இன்றும் ஈழத்தில் இருப்பவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் தங்களது மதம் என்று பெரும்பாலும் இந்து மதத்தையே குறிப்பிடுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளும் அதையே செய்தார்கள் என்று கருதுவதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன. இலங்கையில் முஸ்லிம்களை அவர்கள் விரட்டியடித்தது, சில இடங்களில் படுகொலை செய்தது போன்ற தகவல்கள் இருக்கின்றன. அதை அவர்கள் மறுக்கவும் இல்லை. (தமிழன் என்கிற அடையாளத்தை வைத்து விடுதலைப் புலிகளை ஆதரித்த திராவிடர் கழகங்களுக்கு இது அவ்வளவு உவப்பான செய்தியாக இருக்காது. இது மத மறுப்பு திராவிட இயக்கங்களுடைய அடையாள அரசியலின் மற்றொரு முரண்பாடு.)
முஸ்லிம்கள் மீது அவர்கள் காட்டிய வெறுப்பிற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. அவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்று கூறிக் கொண்டார்கள். விடுதலைப் புலிகளை இலங்கை அரசுக்குக் காட்டிக் கொடுத்தார்கள், இத்யாதி.
இரண்டாவது காரணத்தை பரிசீலிக்கவே முடியாது. ஏனெனில், தமிழர்களும் காட்டிக் கொடுத்ததாக விடுதலைப் புலிகள் பழி போடுகின்றனர். அப்படிக் காட்டிக் கொடுத்ததாக இவர்கள் நினைத்தவர்களை எல்லாம் இவர்கள் கொன்று போட்டார்கள். ஆக, வெறும் அடையாளம் எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவதில்லை. இது மற்றொரு முரண்பாடு.
முஸ்லிம்கள் அடித்து விரட்டப்பட்டதற்கு அவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டதும் ஒரு காரணம் என்றால் அடையாள அரசியல் தன்னுடைய அடையாளத்தை, பண்பாட்டை, அரசியலை மற்றவர்கள் மீது திணிக்க முற்படுகின்றது என்று பொருள். இது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இது இயல்பாகவே ஒரு மதவாதத் தன்மையும், பாசிசத் தன்மையையும் பெற்று விடுகின்றது. பெற்றிருக்கின்றது. அதாவது, ஒரு வகையில் பார்க்கப் போனால், தமிழர்கள் இந்துக்கள், இந்துக்கள் தவிர மற்ற மதத்தினரைச் சகித்துக் கொள்ள முடியாது என்கிற நிலையைத் தான் இது காட்டுகின்றது.
இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது, இங்கே தாமரை மலர்ந்தால் (பாஜக வெற்றி பெற்றால்) அங்கே ஈழம் மலரும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது நினைவிற்கு வருகின்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழு ஒன்று கொலைகாரன் காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்து ஆதரவு கேட்டதும், மராட்டிய இனவெறியன்-மதவெறியன் பால் தாக்கரே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்ததும், பதிலுக்கு இங்கே சில விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தாக்கரேயைப் புகழ்ந்ததும் (மராட்டியம் மராட்டியருக்கே என்கிற முழக்கத்தை வைத்து தமிழர்களை அடித்து விரட்டியவன் தாக்கரே) நாடறியும். ஆக இனவாத தன்மை பெற்றுவிட்ட அடையாள அரசியல், எந்த மக்களின் பெயரால் அரசியல் செய்கின்றதோ அந்த மக்களின் எதிரிகளுடனும் கொஞ்சிக் கூலாவுகின்றது. எதிரிகளைப் போற்றுகின்றது. இந்த நிலைக்குக் காரணம் தமிழர்கள் இந்துக்கள் என்கிற பார்வையிலிருந்து வருகின்றது.
பவுத்தத்தைப் பொருத்த வரையில் இந்தியாவில் அது வைதீக இந்து மதத்திற்கு எதிரானது. சாதிக் கொடுமையை அனுபவித்த அம்பேத்கர் அதன் பிடியிலிருந்து தலித்துகள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் பவுத்தத்தைத் தழுவ வேண்டும் என்கிற தீர்வை முன் மொழிந்து, அதைத் தன்னளவில் செயல்படுத்தியும் காட்டியவர். ஆனால், அவரது பெயரால் கட்சி நடத்துகின்றவர்கள் 'பவுத்த சிங்களனை' எதிர்க்கின்றனர். இது இன்னுமொரு முரண்பாடு. இன்னும் சொல்லப் போனால் பவுத்தத்தைத் தழுவ வேண்டும் என்று அது மறந்தும் தலித்துகளைக் கேட்டுக் கொள்வதில்லை.
எப்படியாயினும் மதம் ஒடுக்குமுறையின் கருவியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றது. அது இந்து, பவுத்தம், இஸ்லாம், கிறித்துவம், சைவம், சீக்கியம் என்று எந்த மதமாக இருந்தாலும் சரி. இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு எதிரான மதமாக இருந்த, இருக்கின்ற பவுத்தம் இலங்கையில் ஒடுக்கும் மதமாக இருக்கின்றது. (இந்த லட்சணத்தில் சிலர் ராஜபட்சேவை பார்ப்பனர் என்று கூறுகின்றனர்!).
சுனாமியைப் பொருத்தவரையில், அதாவது இயற்கையைப் பொருத்த வரையில், அதற்கு சாதி, மத, இன, மொழி பேதம் எதுவும் கிடையாது; வர்க்க பேதத்தைத் தவிர. பணக்காரர்கள் கிட்டத்தட்ட பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும். சாமான்யர்களும்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியே பாதிக்கப்பட்டிருந்தாலும் பணக்காரர்கள் விரைவில் மீண்டு விடுவார்கள்; மற்றவர்களின் கதை கேள்விக்குறிதான்.
(பிற பின்னர்)

-----------------------------------------------  13.3.11


No comments:

Post a Comment