Wednesday, March 9, 2011

‘இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது’ -







    அசோகன் முத்துசாமி

அலைக்கற்றை ஊழலில் நடந்தது தனக்கு எதுவுமே தெரியாது என்றார். எல்லாம் அமைச்சர் ராசா செய்த வேலை,ராசாவை மந்திரியாக்கியது கூட்டணி நிர்ப்பந்தம், என்ன செய்வது என்று கைவிரித்தார்.
அடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சம்பந்தப்பட்ட எஸ்-பேன்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெறவிருந்த ஊழல். பல லட்சம் கோடி ரூபாய் பெறுமான அலைகற்றைகளை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்க ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதுவும் தனக்குத் தெரியாது என்றார். அந்த ஒப்பந்தத்திற்கு 2005ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் இல்லாத அமைச்சரவைக் கூட்டம் ஏதாவது நடந்ததா என்ன?  நடக்குமா என்ன?
இப்போது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இன்னும் வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை நியமித்ததற்காக மத்திய அரசை நீதிமன்றம் கண்டித்தும் உள்ளது. அவரை நியமனம் செய்த குழுவின் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங் (உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மற்ற இரண்டு உறுப்பினர்கள்).
ஒரு ஊழல்வாதியை ஊழல் தடுப்பு ஆணையராக எப்படி நியமித்தீர்கள் என்று கேட்டால் அவர் மீது வழக்கு இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். அந்தக் குழுவின் உறுப்பினராக இருந்த சுஷ்மா சுவராஜ் தாமச் மீது வழக்கு இருப்பது பற்றி சொல்லியிருக்கின்றார். அதையும் மீறி நியமித்து விட்டு இப்போது கேட்டால் என்ன சொல்கிறார், தனக்கு தெரியாது. அமைச்சர் பிருதிவிராஜ் சவுகான் தனக்குக் கொடுத்த குறிப்பில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மீது பழி போடுகின்றார். சுவராஜ் சொல்லியிருக்கின்றாரே என்று கேட்டால் தாமஸ் கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர். மத்திய தொலை தொடர்புத் துறையின் செயலாளராக இருந்திருக்கிறார். ஆதலால் அவர் மீது ஊழல் வழக்கு எதுவும் நிலுவையில் இருக்காது என்று நினைத்தேன் என்கிறார். அதாவது இத்தகைய பதவிகளுக்கு ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் மீது வழக்கு எதுவும் இருக்கவில்லை என்றால்தான் நியமிப்பார்கள். நினைத்தாராம். மாட்டிக் கொண்ட திருடர்கள் இப்படித்தான் பதில் சொல்வார்கள் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகளுக்கும், ஏன் சாமான்ய மக்களுக்கும் கூடத் தெரியும்.
கடைசியாக தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இந்தப் பதிலும் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் கூட வரவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்ட பின்னர்தான் வருகின்றது. அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே இடதுசாரிகளும், பாஜக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்போதெல்லாம் தாமஸை நியமித்தது சரிதான் என்று சாதித்தார். அவரது கட்சியும் சாதித்தது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றார்கள். தாமசுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் அதை ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர். இப்போது திருவாளர் பரிசுத்தம் முழுப் பொறுப்பேற்கிறாராம். ஒரு வேளை யாரும் நீதிமன்றத்திற்கே போகாமல் இருந்திருந்தால், யாரும் கேள்வியே எழுப்பாமல் இருந்திருந்தால் பாமாயில் ஊழல் வழக்கில் குற்றவாளியான தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராகத் தொடர்ந்திருப்பார். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்த நேரத்தில் தொலைதொடர்புத் துறையின் செயலாளராக இருந்தவரை, ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமித்தால், அவர் ஊழலைத் தடுப்பாரா என்ன? குற்றம் செய்தவர்களைக் கூண்டில் நிறுத்துவாரா என்ன?    
ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் என்று சொல்லிக் கொண்டே போய் புதிய புதிய உண்மைகளைக் கக்குகின்றார். 1992ல் தொடரப்பட்ட ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்வோம். அவர் எப்படி கேரள மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்? அவர் எப்படி தொலைதொடர்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்?
மன்மோகனைப் பொறுத்த வரையில் தாமஸ் விஷயத்தில் இரண்டு முறை குற்றம் செய்திருக்கின்றார். தன்னுடைய அமைச்சரவையின் ஒரு துறைக்கு அவரை செயலாளராக நியமித்திருக்கின்றார். பின்னர் மீண்டும் அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்திருக்கின்றார்.
கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களுக்கு அளித்த பேட்டியில் தான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் பதவியிலிருந்து விலகும் எண்ணமே தனக்கு வந்ததில்லை என்றார் மன்மோகன். அவை இப்படிப்பட்ட வேலைகள்தானோ என்னவோ? தன்னை இந்த ஊர் இன்னும் நம்புவதாக அவர் உறுதியாக நம்புகின்றார்.  ‘இன்னுமா நம்மள இந்த ஊர் நம்புது’ என்று அவராகவே கேட்டாலும் நம் ஊடக மேதாவிகள் அவரை திருவாளர் பரிசுத்தம் என்று இட்டுக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.

1 comment:

  1. பி.ஜே.பி க்கு வாஜ்பாய் எப்படி ஒரு முகமூடியோ ,அது போல சோனியாவிற்கு மன்மோகன் சிங் ,இந்த திருவாளர் பரிசுத்தங்களின் அசுத்தங்களை கழுவினால் நீளமான நைல் நதி கூட கூவமாகிவிடும்.

    ReplyDelete