Thursday, March 8, 2012

கடவுளர்களால் கைவிடப்பட்ட பாஜக



அசோகன் முத்துசாமி

1991லிருந்து அயோத்தி சட்டமன்றத் தொகுதி பாஜக வசம்தான் இருந்தது. லல்லு சிங் என்பவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால், இம்முறை (2012 சட்டமன்றத் தேர்தல்) சமாஜவாதிக் கட்சியின் பாண்டே என்கிற இளைஞர் அவரையும், பாஜகவையும் தோற்கடித்துவிட்டார். தன்னுடைய ஜன்மபூமியிலிருந்து பாஜகவை ராமரே விரட்டியடித்து விட்டார்.
இத்தனைக்கும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்று அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். போங்கடா, நீங்களும் உங்கள் கோவிலும் என்று சீதாமணாளன் மறுத்துவிட்டார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உபி மாநில அயோத்தி சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பைசாபாத் பாராளுமன்றத் தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது மட்டுமின்றி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.
அது போல்  இந்துத்துவ சக்திகள் இடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த வேறு இரண்டு முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுராவிலும் கூட கடவுளர்கள் பாஜகவை தங்கள் தொகுதியை விட்டு வெளியேற்றி விட்டிருந்தனர். இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நிலைமை. மதுரா சட்டமன்றத் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவிற்கு இரண்டாவது இடம்.(ஆனால், காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கும் வாரணாசி நகரில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது).
சரி, கடவுளர்களைக் காட்டி நடத்திய அரசியல்தான் வெற்றி பெறவில்லை. வகுப்புவாதத்தை வேறு வகையில் பிரயோகித்துப் பார்த்தது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டிலிருந்து 4.5 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கூறியது. இட ஒதுக்கீட்டை எப்போதுமே எதிர்த்து வந்துள்ள பாஜக இதை தனக்கே உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டது.
பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்து காங்கிரஸ் முஸ்லிம்களுக்குக் கொடுக்கப் போகிறது என்று பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இந்துக்களின் வாக்குகளைக் கவர முயற்சித்தது. பாஜகவிற்கு அந்த வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது. அது போல் முஸ்லிம்களின் வாக்குகளும் காங்கிரசுக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இவ்விஷயத்தில் மாயாவதியின் கணிப்பு சரி போல்தான் தோன்றுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் வாக்குகள் பாஜகவிற்குப் போய்விடும் என்று முஸ்லிம்கள் பயந்தனர். ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக் கூடியநிலையில் இல்லை. எனவே, சுமார் 70 சதவீதம் முஸ்லிம்கள் சமாஜ்வாதிக் கட்சிக்கு வாக்கிளித்துவிட்டார்கள் என்பது அவரது கணிப்பு.
ஆக, இதுவும் பலிக்கவில்லை. கடவுளர்களும் கைவிட்டு விட்டார்கள். வழக்கம் போல் முஸ்லிம் வெறுப்பை உருவாக்க முயற்சித்ததும் பலிக்கவில்லை.
அடுத்து, காந்தியைக் கொன்ற ஆர்எஸ்எஸ்சின் அதரவு பெற்ற காந்தியவாதியான (?) ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு அஸ்திரத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார்கள். (அது அஸ்திரமா என்ன? கேளிக்கைக் கொண்டாட்டம் போல் அல்லவா இருந்தது?).
ஆனால், மக்கள் பாஜகவின் உத்தமர் வேடத்தை மக்கள் நம்பவில்லை. நம்பியிருந்தால் பாஜகவிற்கு அல்லவா வாக்களித்திருக்க வேண்டும். சமாஜ்வாதிக் கட்சியை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். இரண்டாம் இடத்தை பகுஜன் சமாஜீக்குக் கொடுத்துள்ளார்கள். பாஜகவிற்கு மூன்றாவது இடம்தான். காரணம் தெளிவு. சங்பரிவாரிகளும் ஊழலில் ஊறித் திளைப்பவர்கள் என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது.
ஆட்சியில் இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. அது தேர்தலுக்குச் சற்று முன்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு அமைச்சரை கட்சியை விட்டு நீக்குகிறது.  அவர் நேராக பாஜகவில் வந்து சேருகிறார். நம்ம ஆள் வந்துவிட்டார் என்று இவர்களும் அவரைச் சேர்த்தணைத்துக் கொண்டனர். போதாக்குறைக்கு எடியூரப்பா காண்டம் வேறு. (இவை சில சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே. பழைய உதாரணங்கள், புதிய உதாரணங்கள் என ஏராளம் இருக்கின்றன).
பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர வர அது தன்னை வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்வது வெறும் வார்த்தை ஜாலம்தான் என்று பல ஊடக அறிவாளிகள் கருத்துரைக்கிறார்கள். ஆனால், அது சரியான மதிப்பீடு அல்ல. ஏனெனில், அது உண்மையிலேயே வித்தியாசமான கட்சிதான். அது ஒரு வகுப்புவாத பாசிசக் கட்சி. சிவசேனையைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளிலிருந்தும் அது ஒரு வித்தியாசமான கட்சிதான்.
தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அது தன்னுடையக் கொள்கைகளைக் கைவிடப் போவதில்லை. தன்னுடைய மதவெறிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குத்தான் அது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.
எடுத்துக் காட்டாக, மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக பசுவதைத் தடுப்புச் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டங்களின்படி பசுக்களை வதைப்பது மட்டும் அல்ல, மாட்டிறைச்சி உண்பதே குற்றம். பசுவை வதைத்தாக நிரூபிக்கப்படும் எவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை உண்டு. முன்னர் இது வெறும் மன்று ஆண்டுகளாக இருந்தது.
கர்நாடகாவிலும் பசுவதைத் தடைச்சட்டத்தில் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பசுவதை என்பது கால்நடை வதை என்று திருத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை மாடுகளையும். கன்றுகளையும் கொல்வது, அவற்றின் இறைச்சியை விற்பது. சாப்பிடுவது அனைத்தும் குற்றம். தண்டனை காலம் அறு மாதங்களிலிருந்து ஏழு வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மோடி அரசாங்கம் கலவரம் நடந்த பகுதிகளில் சொத்து விற்பது வாங்குவது தொடர்பான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி சொத்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுவது எப்படி நடக்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்கும். மோடியின் ஆட்சியில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம்கள் சொத்துக்களை விற்க முடியாது. வாங்கவும் முடியாது.
இவை சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே.
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் ஒப்பீட்டளவில் காங்கிரசை விட பாஜக கூடுதல் வெற்றி பெற்றிருப்பது போல் தோன்றினாலும் உபியில் பெரும்பகுதி இடங்களை வெல்லாமல் அதனால் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி நினைத்து பார்க்க முடியாது. உபியில் அதற்கான வாய்ப்பு கண்டிப்பாக 2014 தேர்தலில் இருக்கப் போவதில்லை.
எப்படியாயினும் மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியின்றி மத்தியில் பாஜக 1998லிருந்து 2004 வரை அதிகாரத்தில் இருந்திருக்கவே முடியாது. ஏதேனும் ஒரு சால்ஜாப்பு சொல்லி பாஜகவுடன் கைகோர்ப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே இருக்கும்.
------------------------------------------------------------------8.3.12

No comments:

Post a Comment