Thursday, March 24, 2011

வாக்களிக்கும் முன் யோசியுங்கள். மன்மோகன்சிங் எச்சரிக்கை.





அசோகன் முத்துசாமி

2008ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசு-திமுக கூட்டணி அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது தன்னுடைய அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக திருவாளர் பரிசுத்தம் (கழிசடை அல்லது ஆபத்து) என்று அழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், அவரது கட்சியும் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றி விக்கிலீக்சு இணையதளம் சில உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றது. அதாவது, எம்பிக்களுக்குக் கொடுப்பதற்காக சுமார் 50, 60 கோடி ரூபாய்கள் வைக்கப்பட்டிருந்த சூட்கேசுகளை காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சதீஷ் சர்மாவின் உதவியாளர் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரிடம் காட்டினார் என்று விக்கிலீக்சு தெரிவிக்கின்றது. அதற்கு ஆதாரம் அந்த தூதரக அதிகாரி தன்னுடைய அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம்.
பிரதமர் மன்மேகன்சிங் இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் மறுத்துள்ளார். அலை அலையாக எழும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி, அவற்றை மறுக்காமல், ஆனால் தனக்கு எதுவுமே தெரியாது என்று இதுவரை சாமர்த்தியமாகச் சொல்லி வந்த மன்மோகன் முதல் முறையாக இந்த ஊழல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. நிற்க,.
அத்துடன் அவர் நிற்கவில்லை. இக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது என்றும், அந்தக் கமிட்டி குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமான சான்றுகள் இல்லை என்றும் அறிக்கை அளித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், மக்களவை உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படவே இல்லை என்று அந்த அறிக்கை கூறவேயில்லை. தேவைப்பட்டால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியிருந்தது. போகட்டும். அது நமது கட்டுரையின் பொருளல்ல.
அதற்கும் மேலாக அவர் சொன்ன கருத்துக்கள்தான் கவனத்திற்கு உரியவை.
இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்தன, ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சரி, இடதுசாரிகளும் சரி முந்தைய தேர்தலில் வென்றதைவிடக் குறைவான தொகுதிகளிலேயே வென்றன. காங்கிரசு கட்சி மட்டும்தான் தன்னுடைய பலத்தை கணிசமாக அதிகரித்துக் கொண்டது என்றும், அதனால் இக்குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் நல்லவர் என்று இட்டுக்கட்டப்பட்ட மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகள் எந்தவொரு இயக்கத்தினுடைய கொள்கைகளின் அல்லது பிரச்சாரத்தின் நியாய அநியாயங்களைத் தீர்மானித்துவிடாது. அப்படி தீர்மானிக்கப்படுகிறது என்றால் இந்த நாட்டில் 1952ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடந்தவுடனேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது அமைப்புகளைக் கலைத்து விட்டிருக்க வேண்டும். அதுதான் காங்கிரசின் கொள்கைகள்தான் நியாயமானவை என்று மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்களே?
ஜனநாயகம் என்பது அப்படிச் செயல்படுவதில்லை. ஒரு முறை ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடத்திவிட்டால் அத்தேர்தலில் வெற்றி பெறுகின்றவர்களை நியாயவான்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்வது என்றால் பின்னர் அவர்கள் செய்வது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, அவர்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரிகள் என்று பொருள். அதற்குப் பெயர் ஜனநாயகமல்ல என்பதைக் கூற வேண்டியது இல்லை.
மன்மோகன்சிங்கின் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் என்னென்ன அபாயம் காத்திருக்கின்றது என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1,76,000 கோடி ஊழல் நடந்து சிபிஐ விசாரித்து வருகின்றது. சிலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் மீது குற்றச்சாட்டு இருக்கின்றது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக-காங்சிரசு கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் அதற்கு என்ன பொருள்? அலைக்கற்றை ஊழலே நடக்கவில்லை என்று அர்த்தம். ‘பரிசுத்தத்தின்’ தர்க்கம் அதுதானே?
நடைபெறவிருக்கும் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரசு கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து விட்டால் மன்மோகன் என்ன சொல்வார்? காமன்வெல்த் கேம் ஊழல் நடக்கவே இல்லை என்பார். ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் நடக்கவே இல்லை என்பார்.
அத்துடன் முடியவில்லை, விஷயம். அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதையும், அரிசி, பருப்பு, வெங்காயம் என்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவதையும் மக்கள் ஏற்றுக் கொண்டு பாராட்டியுள்ளார்கள் என்பார்.
அன்றாடம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை மக்கள் ஏற்றுக் கொண்டு, அந்த சாதனைக்காக தன்னுடைய அரசை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பார்.
உத்தபுரம் தலித்துள் மீது பொய் வழக்குப் போட்டதையும், ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தலித்துகள் மீது தடியடி நடத்திதையும் மக்கள் மனமகிழ்ந்து மெச்சியுள்ளார்கள் என்று கருணாநிதி நியாயப்படுத்துவார். சமூகநீதி காத்த திமுக கூட்டணியை மக்கள் ஆதரித்துள்ளார்கள் என்று ராம்தாசு, திருமாவளவன், கி.வீரமணி போன்றோர் அறிக்கை விட்டு ஆனந்தப்படுவார்கள்.
முதல்வரிடம் மனு கொடுக்க ஊர்வலம் போன அரசு ஊழியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியதற்காக அரசு ஊழியர்கள் அளித்த பரிசு என்று கருணாநிதி கவிதை எழுதுவார்.
இன்னும் இப்படிப் பல வியாக்கியனங்கள் வரும். அதன் உண்மையான பொருள் வெறும் கடந்த காலம் சார்ந்ததல்ல. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களில், அராஜகங்களில், காட்டுமிராண்டித்தனங்களில் திமுக-காங்கிரசு கூட்டணி ஈடுபடலாம் என்று மக்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் வியாக்கியானம் செய்யப்படும். நடைமுறைப்படுத்தப்படும்.
எனவே, வாக்களிக்கும் முன் இதையும் சொஞ்சம் யோசிப்பார்கள் மக்கள்.

------------------------------------------24.3.11




No comments:

Post a Comment