Sunday, March 27, 2011

மோடிக்கு விசா கேட்ட அருண் ஜெட்லி




அசோகன் முத்துசாமி

பாஜக இந்து தேசியவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்பவே பயன்படுத்துகிறது என்று தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி 2005ம் ஆண்டு அமெரிக்கத் துhதரக அதிகாரி ராபர்ட் பிளேக்கிடம் கூறியதாக விக்கிலீக்சஸ்  இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. (தி ஹிந்து, 26.3.11).
அதாவது வாக்குகளைப் பெறுவதற்காகவே அவர்கள் இந்து தேசியவாதத்தை, இந்துத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று பொருள். உடனடியாக அருண் ஜெட்லி தான் சந்தர்ப்பவாதம் என்கிற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை என்றும், தன்னுடைய கூற்றை திரித்துவிட்டார்கள் என்று பறுத்துள்ளார். பாஜகவும் அதன தலைவர்களும் அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று மறுத்துவிட்டார்கள். அதாவது இந்து மதவெறிதான் எங்களது கொள்கை என்றுள்ளார்கள். ஆனால், காங்கிரசஸ்  கட்சியோ பாருங்கள் நாங்கள் பாஜக பற்றிக் கூறியது சரியாகப் போய்விட்டது என்று குதூகலிக்கின்றது.
‘பாஜகவும் இந்து மதத் தத்துவ அமைப்புகளான ஆர்எஸ் எஸ்  போன்றவையும் தங்களது சுயநலனிற்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றன. விக்கிலீக்ஸ்  வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைப் போலவே இருக்கின்றன. பாஜகவும், ஆர்எஸ் எஸ் சும் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்று நாங்கள் கூறி வருகின்றோம்.’ என்று காங்கிரஸ்  கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியுள்ளார்.
இன்னும் பல காங்கிரஸ்  தலைவர்கள் அமைச்சர்கள் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். கபில் சிபல், அஸ் வானி குமார் போன்றோர்.
‘ பல வருடங்களாக அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் பற்றி நாங்கள் கூறி வருகின்றோம். இப்போது மக்கள் பாஜகவின் உண்மையான முகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பது கபில்சிபலின் கருத்து.
அருண் ஜெட்லி என்ன காரணத்திற்காக அப்படியொரு கருத்தைச் சொன்னார் என்பது தனி விஷயம். ஆனால், அவர் சந்தர்ப்பத்திற்காகத்தான் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறோம் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது மடமையாகும். வெறும் வாக்குகளுக்காகத்தான் அவர்கள் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அன்று அவர்கள் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்ய வேண்டும்? முஸ்லிம்கள், கிறிஸ் துவர்கள்,கம்யூனிஸ்டுகள் எங்களது முதல் மூன்று எதிரிகள் என்று ஏன் குறி வைக்க வேண்டும்? ஏன் மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடைச்சட்டம் போன்றவற்றை அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும்? மற்ற மாநிலங்களிலும் அத்தகைய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்? (தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அவை இடம் பெற்றிருக்கின்றன). ஏன் ராமரின் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்க வேண்டும்? கல்விப் பாடநூல்களில் ஏன் இந்துத்துவக் கருத்துக்களைப் புகுத்த வேண்டும்? விதவை சோனியா நாடாளக் கூடாது என்று ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? செத்த மாட்டின் தோலை உரித்தற்காக தலித்துகளை ஏன் அடித்துக் கொல்ல வேண்டும்? தங்களது மதவெளிக் கருத்துக்கு மாற்றாக கருத்து தெரிவிப்பவர்களை ஏன் தாக்க வேண்டும்? மதச்சார்பற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று ஏன் மிரட்ட வேண்டும்?
இப்படி எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாஜக பரிவாரம் வாக்குகளுக்காக இந்துத்துவத்தை கையில் எடுக்கவில்லை. இந்துத்துவத்தை அமல் படுத்துவதற்காகத்தான் அது வாக்குகளைக் கேட்கின்றது. இந்து  ராஷ்டிரத்தை அமைப்பதற்காகத்தான் அது  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றது. அதே கொள்கைகளின் அடிப்படையில்தான் அது மத உணர்வுகளைத் தூண்டுகின்றது. சுருக்கமாகச் சொன்னால், மத உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் நோக்கம் மதச்சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்துவதற்காகத்தான்.
குஜராத் படுகொலைகளை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டே மறுபக்கம் அதற்காக வருந்துவது போல் வாஜ்பாய் வார்த்தை ஜாலம் செய்தபோது அவரை வேடம் போடுகிறார் என்று காங்கிரஸ்  உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் விமரிசித்ததை மறந்துவிட்டார்கள். பாஜகவின் மதவாதத்தை மறைக்கும் மிதவாத முகமூடி என்று வாஜ்பாய் வர்ணிக்கப்பட்டதையும் மறந்து விட்டார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால் காங்கிரஸ்  கட்சிதான் தேர்தல் ஆதாயத்திற்காக  அவ்வப்போது இந்து மதவாதத்துடன் சமசரசம் செய்து கொள்ளும். பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்காதது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட மும்பை கலவரங்கள் வழக்கில் முதல் குற்றவாளியான பால் தாக்கரே உள்ளிட்ட இதர குற்றவாளிகள் மீது மராட்டிய மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்காதது,  குஜராத்தில் படுகொலைகள் நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்தது என்று பல உதாரணங்களைக் கூறலாம். 1984ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது அதைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக சீக்கியர்களுக்கு எதிரானக் கலவரங்களை நடத்தியது காங்கிரஸ் . அதற்கு முன்னர் எழுபதுகளின் பிற்பகுதியில் ஜனதாக் கட்சி ஆட்சிக்குத் தலைவலி கொடுப்பதற்காக மறைமுகமாக பிந்தரன்வாலேயே ஆதரித்ததாக ஒரு குற்றச்சாட்டும் காங்கிரசின் மேல் உள்ளது.
எனினும், இந்து மதவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரையில் காங்கிரஸ்  அதை அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவ்வலவுதான். (தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளையும், சீக்கிய மத அடிப்படைவாதிகளையும் கூட தாஜா செய்யும்). ஆனால், பாஜகவின் திட்டமும், லட்சியமும், கொள்கையும் இந்துத்துவம்தான். இந்துத்துவ ஆட்சி அமைப்பதற்காகத்தான் அக்கட்சியே நடத்தப்படுகின்றது.
நரபட்சிணி நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட பின்னணியில் ‘நாங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும்தான் இந்து மதவாதத்தைப் பயன்படுத்துகின்றோம்’ என்று ஜெட்லி சொல்லியிருப்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அருண் ஜெட்லி மோடிக்கு விசா கேட்டிருக்கின்றார். அவ்வளவுதான்.
------------------------------------28.3.11



No comments:

Post a Comment