Wednesday, April 6, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 1


சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 அன்று நடத்திய 
'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
                   வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று





இந்திய வரைபடத்தில்
ஒரு தார்ப்பாலை மட்டும்தான்
எரிந்து கொண்டிருக்கின்றது....


ஆனால்,
வரைபடத்திலே சேர்க்கப்படாத
எத்தனையோ வயிறுகள்
தார்ப்பாலையாய் தினந்தினம்
எரிந்து கொண்டிருக்கின்றன...

எரிகின்ற வயிறுக்கு
எரிசாராயம் 
ஊத்துகிறார்கள்..

விழிக்காத அடுப்புக்கோ
தூக்க மாத்திரை 
ஊட்டுகிறார்கள்....


வாழ்க்கைக்கு எதிர்காலமாய்
தூக்கு மேடையைக் காட்டுகிறார்கள்...


விலைவாசி 
உறிஞ்சி உறிஞ்சி எங்களை
தீக்குச்சியாக்கியது
பரவாயில்லை
ஒரு துளி வெளிச்சமாவது
கிடைக்குமே?


ஆனால்,
உரசுவதற்கு வத்திப் பொட்டி கூட
வாங்க வக்கில்லாததாக
வாழ்க்கை ஆகிவிட்டதே? 


குபேரனே குழந்தையை
பள்ளியில் சேர்த்தால் கூட
குண்டி மூட 
கோவணம் கூட 
மிஞ்சாது...


குண்டி தெரியும்
கோவணம் வைத்துக் கொண்டு
குழந்தையை எப்படி
பள்ளியில் சேர்ப்பது?


அரசு போடும் அரிசி
அண்டை மாநிலத்தில்
அழகு சாயம் பூசி
வெளி மாநில நடிகை போல்
திக்கித் திக்கித் தமிழ் பேசி
திரும்பி வருகிறது
தொண்டையில் 
விக்கிக் கொள்ளும் விலையில்!


சிங்கத்தையும் புலியையும்
வென்றிட்ட என் வம்சம்
காக்கையையும் குருவியையும்
நாயையும் நரியையும்
வேட்டையாடுகிறது
சரித்திரம் செய்வதற்கு அல்ல;
சமைத்து சாப்பிடுவதற்கு...


அதுவும் கிடைக்காதபோது...


முதல் முழுங்கு தண்ணீரில் குழம்பையும்
மறு முழுங்கு தண்ணீரில் ரசத்தையும்
அடுத்த முழுங்கு தண்ணீரில் பாயாசத்தையும்
பிரித்து பார்க்கும் பகுத்தறிவு இருக்கிறது...


தண்ணீரை விட
வெளி மாநிலம் போல்
தொண்டையும் மறுக்கும் போது
பட்டினி கிடக்கும்
பட்டறிவு இருக்கிறது...


சோத்துக்கு வழியில்லை
சமைப்பதற்கு அடுப்பு இலவசம்
கரண்டு வாங்க வழியில்லை
கலர் டீவி இலவசம்
மாடு வாங்க வழியில்லை
சாட்டை இலவசம்...
இலவசங்களில் வாழ்க்கை
இளைத்துப் போய்விட்டது


ஒரு வழியாக
இலவச மாப்பிள்ளை கூட 
வாங்கி விட்டோம்
(மண)மகளுக்கு


மாட்டை விற்றும்
மாங்கல்யம் வாங்க முடியாமல்
மஞ்சளோடு 
வாழா வெட்டியாய்
நிற்கிறது கயிறு!


பருவத்தில் பூப்பெய்தும்
பெண்களின் உடலில்
பெண்ணின் வாசனையைத் தவிர 
எந்தப் பூவின் வாசனையும்
அடிப்பதே இல்லை
விலை கொடுத்து பூ
வாங்க முடியாததால்...


திருமண காலத்துப் பெண்களின்
கன்னம் சிவப்பதில்லை
ஆசை எண்ணங்களால்..
திருமணம் நடத்த முடியாத
அவதியில் சிவந்து கிடக்கின்றன
பெற்றோர்களின் கண்கள் மட்டும்


எப்படியோ திருமணம் முடிந்தாலும்
மசக்கை காலத்தில்
சாம்பலுக்குப் பதில்
பெண்கள்
மண்ணைத்தான் தின்கிறார்கள்..


சாம்பல் கிடைக்கவில்யை£?
கொஞ்ச காலமாய் அடுப்பு
மலடாகப் போனதா?


இல்லை


இலவச அரிசியை எண்ணி 
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதா? 


மானிற விலையில்
மண்ணென்ணை
மாதம் 200 லிட்டர்
அது உங்கள் கணக்கு

மானிய விலையில்
மரணம்
மாதம் 400
இது எங்கள் கணக்கு


இரைக்கு மீன் படிக்க 
கடலுக்குச் சென்றால்
மீன்களுக்கு அவனே 
இரையாகின்றான்....


அவர்கள் பிடித்த மீன்களை
சுட்டுப் பார்த்தைவிட
அவர்களைச் சுட்டுப் பார்த்த
குண்டுகளை நாங்கள்
தொட்டுப் பார்த்தே அதிகம்


உலகக் கோப்பையில் மட்டுமல்ல
ஊழல் கோப்பையிலும்
நமக்குத்தான் முதலிடம்

அதில் குறைந்தபட்சம்
ஒரு கோடி லாபம்
இதில் ஆளுக்கு 
ஆயிரம் கோடி
இல்லை இல்லை
லட்சம் கோடி லாபம்!


-சு.சரவணன்
கல்லூரி மாணவர், சேலம்

No comments:

Post a Comment