Wednesday, April 6, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' 2


சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 நடத்திய
'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்
                  வாசிக்கப்பட்ட கவிதைகளில் ஒன்று.







வானளந்து பறக்கின்ற
வர்ணக் கொடிகளில்
ஏன் திடீரென்று தலைகுனிவு


கந்தலுக்குள் மானம் மறைத்த
சோழனின் வாரிசு பார்த்தா


இல்லை


இரு கைகளில் பசி மறைத்த
பாண்டியன் பரம்பரை பார்த்தா


வான் தொட்டார் என்பார்
வான் கடந்து
சொர்க்கமும் தொடுவார் என்பார்
என்னையும் 
உன்னையும் போல்
கைகட்டி வாய் பொத்தி நின்றால்
சொர்க்கம் கடந்து
புது உலகு அமைப்போம் 
என்பார்


கைவசம் கொண்ட 
காணி நிலத்திலேயே
காணவில்லை பசுமையை
பிறகு நமக்கென்ன கேடு
சொர்க்கத்துக்கு


வானமும் பொழியவில்லை
பூமியும் விளையவில்லை
கேட்ட கட்டபொம்மனும்
இருந்திருந்தால்
விதித்திருப்பானோ வரியை-
வெங்காயத்துக்கும் வெள்ளைப் பூண்டுக்கும்


அன்று 
வெள்ளையன் போட்டான் வரியை
நாம் பிடித்தோம் கொடியை

இன்று
இவரே விதிக்கிறார் வரியை
இவரே பிடிக்கிறார் கொடியை

என்ன வேடிக்கை


கடல் கடந்த தமிழ் மறவன்
மண்ணளந்தான்
பொன்னளந்தான்
முன்னின்ற எதிரியின் பயத்தில்
இவன் நெஞ்சுரம் அளந்தான்


இன்று 
ஒரு சாண் வயிற்றுக்காக
கடலளந்தான்
தன் உயிர் அளக்கின்றான்
ஒவ்வொரு நொடியும்


கைகூட அளந்துதான்
எடுத்தது சோற்றை
அழுத குழந்தைக்கு ஊட்ட


என்ன மாயமோ மந்திரமோ
கை சிறுத்து விட்டதோ-
இல்லை இல்லை
கை சிறுக்கவில்லை
உலைதான் பெருகவில்லை


வேறு திக்கில்லை
ஆண்டவனைத் தவிர

அவனையும் அடைத்துவிட்டார்
கூண்டுக்குள்
முன்பதிவுக்கும் நுழைவுச் சீட்டுக்கும்


உணவுக்காய் ஏங்கும்
ஏழைக் குழந்தைக்கு
உமது வாங்கு வங்கியின் நிதி
மூன்று நாள் சோறு-
மீதி நாள் எங்கு போகும்
வீதிக்கா?


புரிகிறது
இது என்ன புதிதா
என்று கேட்கிறீர்
புதிதல்லைதான் உமக்கு

கண்ணீருக்குள்
உயிர் உறைந்து
துடிக்கிறதே தாயுள்ளம்
பழையதை மாற்ற
என்ன செய்யும் அது?


அவள் வயிறு எரிகின்றது
அடுப்பு உறங்குகின்றது.


-விஜயங்கா முருகதாஸ்
கல்லூரி மாணவி, சேலம்

No comments:

Post a Comment