Monday, April 9, 2012

அடையாள அரசியலின் உள் முரண்பாடுகள்-4


 கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் மெல்ல வடிந்து வறண்டு கொண்டிருக்கையில் தென்னிந்தியாவில் உள்ள அணுஉலைகளால் தங்களுக்கு ஆபத்து என்று சர்வதேச அணுசக்தி முகமையிடம் புகார் தெரிவிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. உலைகளில் ஏதேனும் ஒன்றில் விபத்து ஏற்பட்டால் கூட கதிர் வீச்சு பல நூறு மைல்களுக்கு அப்பாலும் பாதிப்பை உண்டாக்கும் என்கிற அடிப்படையில், இந்தியாவின் கரையிலிருந்து வெறும் இரண்டு டஜன் மைல்கள் தொலைவில் இருக்கும் தங்களது நாடும் பாதிப்பு எல்லைக்குள் வருகின்றது என்பது இலங்கையின் வாதம். இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறல் நடந்தது குறித்து இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு தன்னுடைய கண்டனத்தை இலங்கை தெரிவிக்கிறது அல்லது பழிக்குப் பழி வாங்குகிறது என்று இலங்கையின் இந்தச் செயல் குறித்து ஒரு கருத்து கூறப்படுகிறது. இருக்கலாம். ஏனெனில், இத்தனை காலம் இல்லாமல், தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்த பல மாதங்கள் சும்மா இருந்து விட்டு, இந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கை இப்படிச் சொல்வது அந்தக் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இருக்கட்டும். எப்படியாயினும், அணுஉலை எதிர்ப்பாளர்களில்  கூறிய பல்வேறு காரணங்களில் ஒன்றை இலங்கையும் கூறுகின்றது. விபத்து பாதிப்பு. ஆனால், கூடங்குளம் எதிர்ப்பாளர்களில்  சிலர் அதை மட்டும் முன்வைக்கவில்லை. அல்லது அத்துடன் வேறு சில கருத்துக்களையும் முன்வைத்தார்கள். இங்கு அணுஉலை அமைப்பதே 'தமிழினத்திற்கு' எதிரான செயல் என்றார்கள். இந்த அணுஉலையை ஏன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்? குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகிலோ, மன்மோகன் சிங் வீட்டிற்கு அருகிலோ, அல்லது வேறு எங்காவது அமைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். விபத்து ஏற்பட்டால் தமிழன் மட்டும்தான் பாதிக்கப்படுவான், ஆனால் இந்த மின்சாரத்தை வேறு மாநிலங்களும் பங்கு போட்டுக் கொள்ளும் என்றார்கள். ஆபத்து தமிழனுக்கு, மின்சாரம் மற்றவர்களுக்கா என்றார்கள். தமிழர்கள் என்ன இழிச்சவாயர்களா என்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்குத்தான் போகப் போகிறது, அதற்குத் தமிழன் பலியாக வேண்டுமா என்று கூடச் சிலர் பேசினார்கள். (இப்போது இலங்கையே தென்னிந்திய அணுஉலைகள் அனைத்தையும் எதிர்ப்பதைப் பார்த்தால் அது தவறான செய்தி என்று தெரிகின்றது). அணுஉலையை ஆதரிப்பவர்கள் 'தமிழின' விரோதிகள் என்றார்கள். தனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் (அதுவே ஒரு அரசியல்தான்) உலை எதிர்ப்புப் போராட்டக்காரர் உதயகுமாரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார். தன்னைத் 'தமிழினத்தின்' நண்பன் என்று காட்டிக் கொள்ள அவர் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். தமிழினத்தின் பெயரால் தன்னுடைய போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் மிகச் சாதுர்யமான ஒரு அரசியல் நடவடிக்கை அது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த கஙட்சிகளில் சிலவும், எதிர்த்த இலங்கையும் இப்போது அணுஉலையை எதிர்ப்பு என்கிற நிலையில் ஒன்றாக இருக்கின்றன. இப்போது நமது கேள்வி என்னவென்றால், உலையை எதிர்ப்பவர்கள் தமிழினத்தின் நண்பர்கள் என்றால், இப்போது ராஜபட்சேவும் தமிழினத்தின் நண்பராகிவிட்டார் என்றுதானே பொருள்? ராஜபட்சே தலைமையிலான இலங்கை அரசாங்க எதிர்ப்பு, இந்திய அரசாங்க எதிர்ப்பு, தமிழக அரசாங்க எதிர்ப்பு, அணுஉலை எதிர்ப்பு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தமிழ் அடையாள/இனவாத அரசியலை முன்வைத்தவர்கள் இப்போது ஒன்று ராஜபட்சே எதிர்ப்பைக் கைவிட வேண்டும். அல்லது அணுஉலை எதிர்ப்பைக் கைவிட வேண்டும். ராஜபட்சே எதையெல்லாம் எதிர்க்கின்றாரோ அதையெல்லாம் ஆதரிக்க வேண்டும் இல்லையா? இல்லை என்றால் ஒன்று ராஜபட்சேவை ஆதரிக்க வேண்டும். அல்லது அணுஉலையை ஆதரிக்க வேண்டும். தர்க்கப்படி அதுதானே நியாயம்? சாதி, மத, மொழி, தேச அடிப்படையிலான அடையாள அரசியல் எல்லா விஷயங்களையும் தட்டடையாகவே பார்க்கும். தட்டையாக மட்டுமே பார்க்க முடியும். தமிழன்-தமிழன் அல்லாதவன், இந்து-இந்து அல்லாதவன் இப்படியாக மட்டுமே பார்க்கும். தமிழர்களுக்கு எதிரானது என்று அணுஉலையை எதிர்ப்பவர்களால் தமிழ் இனவிரோத 'சிங்கள இனவெறியன்' என்று அழைக்கப்படுகின்ற ராஜபட்சேவும் அணுஉலையை எதிர்த்தாரென்றால் அவரை ஆதரிப்பார்களா, எதிர்ப்பார்களா? இல்லை, அப்படிப் பார்க்கக் கூடாது; நாங்களும் எதிர்க்கிறோம்; அவரும் எதிர்க்கிறார்; அதற்காக நாங்களும் அவரும் ஒன்று சேர வேண்டும் என அர்த்தமில்லை என்று பதில் சொல்லக் கூடும். ஆனால், அவர்களது செயல் 'சிங்கள இனவெறியன்' ராஜபட்சேவிற்கு மறைமுகமாக உதவுகின்ற செயல்தான். இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையிலான அமெரிக்க தீர்மானத்தை குற்றம் சாட்டப்பட்டுள்ள தேசம் என்கிற அடிப்படையிலிருந்து எதிர்க்கும் இலங்கை, அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தற்காக இப்படிப் பழி வாங்குகின்றது என்றாலும், அதில் இலங்கைக்கு இவர்கள் துணை போவதாகத்தான் உலை எதிர்ப்பு என்பது இருக்கும். இல்லை, அணுஉலை எதிர்ப்புதான் எங்களுக்குப் பிரதானம் என்றால், அதற்கு தமிழ்ச் சாயம் பூசுவதைக் கைவிட வேண்டும். உலை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கிற நிலை எடுக்க வேண்டியிருக்கும். இதன் பொருள், அடையாள அரசியலைக் கைவிட வேண்டியிருக்கும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் அனைவரையும் இணைத்துக் கொண்டு போராடுவோம், எந்தப் பேதமும் பார்க்க மாட்டோம் என்கிற நிலை எடுக்க வேண்டியிருக்கும். அணுமின்சாரமும் தற்போது தேவையாக இருக்கிறது என்கிற நிலையில் அதை ஆதரிப்பவர்களில் ஒருவன் நான் என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். ஆனால், சில நியாயமான அச்சங்களின் அடிப்படையில் (ஆனால் போக்கப்படக் கூடிய அச்சங்கள்தான், சமாளிக்கப்படக் கூடிய அச்சங்கள்தான்) மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது வேறு. அந்த அச்சத்தை பிற மொழி பேசும் மக்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவது என்பது வேறு. பிந்தையதை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது என்பதற்கு அடையாள அரசியலின் எண்ணற்ற முரண்பாடுகளே போதுமான காரணங்களாக இருக்கின்றன. பொதுவாக எதிரெதிர் இனவாதம், மதவாதம், மொழிவாதம், சாதி வாதம் ஆகியவை பரஸ்பரம் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டே இருக்கின்றன, இருக்கும் என்பது இந்தப் பிரச்சனையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. -------------------------------------------------------10.4.12



No comments:

Post a Comment