Saturday, May 5, 2012

நரபலியிலும் சாதியம்

மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு ஐந்து வயது தலித் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட கொடுரம் அம்பலமாகியுள்ளது . திமுகவைச் சேர்ந்த அயுப்கான் என்பவர் புதிதாக ஒரு கல்லூரி தொடங்கியிருக்கிறார்.(அவருடன் மதுரைச் சேர்ந்த வேறு சிலரும் பங்குதாரர்களாக இருப்பதாக ஜூனியர் விகடன் 9.5.12 இதழ் செய்தி கூறுகிறது).அந்த வியாபாரம் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு சோதிடரிடம் ஆலோசனை கேட்கிறார். அவர் ஒரு சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும என்கிறார். எந்த சாமிக்கோ அந்தச் சிறுமியின் ரத்ததால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார். (சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் ஒரு துளிகூட ரத்தம் இருக்கவில்லையாம்!இதில் கைதேர்ந்தவர்கள்தான் இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்கிறது காவல்துறை. அவர்கள் தற்போது கைதும் செய்யப்பட்டுவிட்டார்கள்.ஒரு மாதத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட மகாமுனி, அவரது மகன் மலபார் கருப்பு இருவரில் ஒருவர் 'உடல்நலமின்றியும்', மற்றொருவர்  தற்கொலை செய்து கொண்டும் செத்துப் போயுள்ளார்கள் )அவர் தலித் சிறுமி என்று குறிபாகச் சொன்னாரா என்று தெரியவில்லை. (தீட்டுப்பட்ட சாதியின் ரத்தம் சாமிக்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை.). நிற்க.  சோதிடரின் 'சக்தி' பற்றி முஸ்லீமான அயுப்கானுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். பலி கேட்கும் சாமியின் 'சக்தி' பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அதாவது அது கேட்பதைக் கொடுத்தால் தொழில் நன்றாக நடக்கும் என்கிற சக்தியை பிறரது அனுபவத்திலிருந்து (?) தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.   அது இந்துச் சாமியாக இருந்தாலும் முஸ்லீமான அயுப்கான் (என்ன ஒரு மத நல்லிணக்கம் ! இதை அவர் தன்னுடைய மதச்சார்பற்ற கட்சியிலிருந்து பெற்றிருப்பாரோ? ) அதை வழிபடத் தயாராக இருந்திருக்கிறார். அது கேட்பதைக் கொடுக்கத் தயாராக இருந்திருக்கிறார். (பணத்திற்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை) தொழில் நன்றாக நடக்க வேண்டுமே?  மொத்ததில்  பணம் சம்பாதிக்கும் ஆசை என்ன கொடூரங்களையெல்லாம் செய்ய வைக்கிறது?! இவர்கள் கல்விக் கூடங்கள் நடத்தி, மணவர்கள் அதில் படித்து ........சமுதாயம் உருப்பட்டுவிடும். யாரைப் பலி கொடுத்தாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. ஆனால், பலி கொடுக்க இவர்கள் தலித் சிறுமியைத் தேர்வு செய்திருப்பதற்கு சாதியம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்பது என் அனுமானம். அவர்கள் கேள்வி கேட்டால் அடித்து ஒடுக்கிவிடலாம் என்று நினைத்திருக்கலாம். வேறு சாதி இந்துச் சிறுமியாக இருந்தால் தப்பிக்க முடியாது, விளைவுகள் கடுமையாக இருக்கும்  என்று பயந்திருக்கலாம்.அல்லது நம் சாதிகளைச் சேர்ந்த சிறுமியை ஏன் பலி கொடுக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். மனிதத்தன்மையற்ற அரக்கர்கள்!  வரலாற்றில் இது போல் பலி கொடுக்க வேண்டும் என்று வந்தால் தாழ்த்தப்பட்டவர்களைப் பலி கொடுக்கும் வழ்க்கம் இருந்த்தாகக் கூறப்படுகிறது. என்ன்ன கொடுமை அய்யா இது? ஆவேசத்தை அடக்க முடியவில்லை. மூட நம்பிக்கை ஒழிப்பிற்கும் சாதி ஒழிப்பிற்கும் இவர்களைப் பலி கொடுக்க வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது.

No comments:

Post a Comment