Monday, January 24, 2011

ராமர் கோவிலும் கழுமரமும் - அசோகன் முத்துசாமி





பாபர்மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் தீர்ப்பு வந்த பின்பு கலவரங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை. நாடு அமைதியாக இருக்கின்றது. இந்த அமைதிக்குக் காரணம் தீர்ப்பின் தன்மைதான் என்று பலரும் கருதுகின்றனர். அமைதி நிலவுவது உண்மைதான். ஆனால், இந்த அமைதி எத்தனை நாளைக்கு என்பதும், இது எத்தகைய அமைதி என்பதும் கேள்விகள்.

இது ஒரு சமரசத் தீர்ப்பு, யாருக்கும் பாதகமில்லாமல் நிலத்தை பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள், இது ஒரு ராஜதந்திர தீர்ப்பு, நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சனையை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேசித் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு சூத்திரத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ளனர் என்றெல்லாம் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. 

எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், டி.வி.சர்மா ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் 2:1 என்ற பெரும்பான்மையின்படி, பாபர் மசூதி இருந்த இடத்தை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த சன்னி வக்ஃப் போர்டு, நிரோமி அகாரா (இதுவும் ஒரு இந்து மத அமைப்புதான்), கடவுள் ராமரின் பிரதிநிதிகள் (!) ஆகிய மூன்று தரப்பிற்கும் தலா ஒரு பாகம் என மூன்று சமபாகங்களாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடவுள் ராமரின் பிரதிநிதிகள் மற்றும் நிரோமி அகாரா இரண்டும் அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்கிற அமைப்புகள். ஆதலால்,  ராமருக்கு இரண்டு பங்கு. அல்லாவுக்கு ஒரு பங்கு. 

1.சாதாரணமாக எடுத்த எடுப்பிலேயே எவருக்கும் எழுந்திருக்க வேண்டிய கேள்வி இதுதான்: அந்த இடத்தில் பாபர் மசூதி இருந்தது. 1992 டிசம்பர் 6ம் நாள் அது இடிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதாவது, அந்த இடம் முஸ்லிம்களுக்கு பாத்தியதைப்பட்டது. முஸ்லிம்களின் சொத்தை எடுத்து, மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியை போனால் போகிறது என்று முஸ்லிம்களுக்குக் கொடுத்திருக்கின்றார்களே, என்ன அநியாயம் இது? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள்; அதில் ஒரு சில்லை எடுத்து கடைக்காரருக்கும் கொடுக்கின்றார்கள்!

அது ஏதோ பொதுஇடம் போன்ற ஒரு மயக்கம் மதமோதல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்களில் ஒரு பிரிவினரின் மனதில் இருப்பது போல் தெரிகின்றது. சண்டை போட்டுக்கொண்ட மூவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்கள். “மசூதி இடிக்கப்பட்டது ஏதோ நடந்தது நடந்துவிட்டது என்பது போலவும், அதில் வாதிடுவதால் பயனேதும் இல்லை என்பது போலவும் எடுத்துக்கொண்ட அலகாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை காலி நிலம்போல் கருதியிருக்கின்றது” (டி.ஆர். அந்தியர்ஜீனா, தி ஹிந்து, 5.10.10). 

ஆனால் பிரச்சனை என்னவோ இன்னும் முடியவில்லை. உச்சநீதிமன்றம் இருக்கின்றது, மேல்முறையீடுகளின் மீது அது தீர்ப்பு வழங்கிய பின்புதான் முடியும் என்கிற பொருளில் கூறவில்லை. (அப்போதும் முடியுமா என்பதும் நிச்சயமில்லை). உண்மையில் இது ஒரு ஓரமாக பதுங்கிக் கிடந்த சங்பரிவாரிகளை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வெளியே உலா வரச் செய்துவிட்டது. அந்தக் காரணத்தால் பிரச்சனை முடியவில்லை.  

“ராமர் கோவில் அரசியல் திட்டத்திற்கும், 1989ல் நாங்கள் துவங்கிய ராமர் கோவில் இயக்கத்திற்கும் என்ன ஆயிற்று எங்கள் விமரிசகர்கள் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களிடம் பதிலிருக்கவில்லை. ஆனால், இப்போது தீர்ப்பிற்குப் பின்னர் எங்களிடம் பதில் இருக்கின்றது. அயோத்தியில் ராமர் கோவில் வந்து விட்டால் எங்களது இயக்கம் வெற்றி பெற்றுவிட்டதாக எங்களால் கூறிக் கொள்ள முடியும் என்று பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கூறினார்” (நீனா வியாஸ், தி ஹிந்து, 2.10.10). 

இந்தப் பிரச்சனை இப்போதைக்கு முடியப்போவதில்லை என்பது மட்டுமின்றி, சங்பரிவாரிகளால் முன்னரே பட்டியலிடப்பட்டிருந்த பல புதிய பிரச்சனைகள் கிளப்பப்படுவதற்கான வாய்ப்புகளை இந்த தீர்ப்பு உருவாக்கியிருக்கின்றது. முஸ்லிம்கள் மசூதிகள் கட்டுவதற்காக 30000 கோவில்களை இடித்துள்ளனர் என்று விஎச்பி தொடர்ந்து கூறி வருகின்றது என்பதை நினைவில் கொள்வோம்.  
2.கடந்த செப்- 30ம் தேதி தீர்ப்பு தொலைக்காட்சிகளில் வெளிவந்த போது பிரபல அரசியல்சட்ட நிபுணர் ராஜீவ் தாவன் ஆவேசமடைந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். உடனடியாக என்டிடிவியில் அவர் தெரிவித்தக் கருத்து: “இது ஒரு பஞ்சாயத்து நீதி. முஸ்லிம்களின் சட்டப்பூர்வ உரிமைகளை இது பறிக்கிறது; இந்துக்களின் தார்மீக உணர்வுப்பூர்வ உரிமைகளை சட்டப்பூர்வ உரிமைகளாக ஆக்குகிறது”. இந்த மோசடியை இதைவிட சுருக்கமாக யாரும் விவரிக்கமுடியாது. முஸ்லிம்களின் இடத்தில்தான் மசூதி இடிப்பு  நிகழ்ந்தது; எந்தவகையிலும் முஸ்லிம்களுக்கு அந்த இடம் சொந்தமில்லை என்று கூறுவ தன் மூலம் இந்த உண்மையை மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது என்று அவர் மேலும் கூறியிருக்கின்றார். அவரது கருத்தை ஆமோதித்த மற்றொரு நிபுணர் பி.பி.ராவ் “வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் அதேவேளையில் இந்த சொத்தை நீதிமன்றம் எப்படி பிரிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது. இது பஞ்சாயத்து நீதி தவிர வேறொன்றில்லை”. (என்டிடிவி 30.9.10,  தி ஹிந்து, 1.10.10). (பஞ்சாயத்து நீதி = கட்டப் பஞ்சாயத்து நீதி)

ஏனெனில், யாருமே சொத்தைப் பிரிக்கவேண்டும் என்று கோரவில்லை. மேலும் அந்த இடம் ‘முஸ்லிம்களுக்கு’ சொந்தமில்லை என்றும் தீர்ப்பு கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் அது மசூதியே அல்ல என்றும் கூறுகின்றது. சர்ச்சைக்குரிய கட்டிடம் ஒரு மசூதியா? அப்படியானால் எப்போது, யாரால் கட்டப்பட்டது? என்கிற பிரச்சனைக்கு தீர்ப்பு பின்வருமாறு பதிலளிக்கின்றது: சர்ச்சைக்குரிய கட்டிடம் பாபரால் கட்டப்பட்டது. எந்த வருடம் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிராகக் கட்டப்பட்டுள்ளது. எனவே, அது ஒரு மசூதிக்கு உரிய பண்பைக் கொண்டிருக்க முடியாது. 

வேறு சில இடங்களிலும் அது மசூதி அல்ல என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய அந்தக் கட்டிடம் ஸ்தூபிகளைக் கொண்டதல்ல என்பதனால், இஸ்லாமியச் சட்டப்படி அது ஒரு மசூதியாக இருக்க முடியாதா? என்ற கேள்விக்கு மசூதியாக இருக்கமுடியாது என்றும்  அந்தக் கட்டிடம் மூன்று பக்கங்களிலும் கல்லறைகளால் சூழப்பட்டிருக் கிறது என்று வாதிகளே கூறியிருப்பதிலிருந்து தெரிவதால் அது சட்டப்படி மசூதியாக இருக்கமுடியாதா?  என்கிற கேள்விக்கு ஆம்  என்றும் பதிலளித்துள்ளனர் நீதிபதிகள். (ஆதாரம்: அலகாபாத் உயர்நீதிமன்ற இணையத்தில் வெளியாகியுள்ள தீர்ப்புச் சுருக்கத்தின் முதல் பாகம். )

தீர்ப்பின் மற்றொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ‘சர்ச்சைக்குரிய நிலத்தின் கட்டப்பட்ட பகுதி உள்பட சர்ச்சைக்குரிய நிலம் பாபருக்கு அல்லது அதைக் கட்டியவருக்கு அல்லது கட்டும்படி யார் உத்தரவிட்டார்களோ அவர்களுக்குச் சொந்தமானது என்று நேரடி ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை’.(தி ஹிந்து, மே.கு இதழ்)

மொத்தத்தில் அது மசூதியே அல்ல என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் 
என்பதற்கு ஆதாரமில்லை என்பதும்தான் இதன் சாரம்.  அது மசூதியே இல்லை என்பது சங்பரிவாரத்தின் பல கூற்றுகளில் ஒன்று.  நீதிமன்றம் அதை அப்படியே பிரதிபலிக்கின்றது. மசூதியே இல்லை என்றால் அது எதற்காகக் கட்டப்பட்டதாம்? இந்துக் கோவிலை இடித்துவிட்டுத் தான் பாபர் அந்த மசூதியைக் கட்டினார் என்றும் இதே சங்பரிவாரம் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகின்றது. அது அப்படித்தான். ஒரே நேரத்தில் பலவிதமான கருத்துக்களைப் பரப்பும். அவை முன்னுக்குப் பின் முரணாகக்கூட இருக்கும். எந்தெந்த தருணங்களில் எந்தெந்த கருத்து தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு உகந்ததாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளும். மசூதியே இல்லை என்பது சட்டத்திற்காக; மசூதிதான் என்பது மதவெறியைத் தூண்டுவதற்காக!

3.இடிக்கப்பட்டது மசூதியா இல்லையா என்பதற்கு ஆதாரங்களைக் கேட்கும்  நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றது.

பிரச்சனை: சர்ச்சைக்குரிய இடம் பகவான் ராமன் பிறந்த இடமா?

தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடம் பகவான் ராமன் பிறந்த இடம். பிறந்த இடம் என்பது சட்ட உரிமை களுள்ள ஒரு மனிதர் மற்றும் தெய்வமுமாகும். ஒரு குழந்தையாக பகவான் ராமர் பிறந்த இடமாக வழிபடப்படும் அது தெய்வீகசக்தியாக உருவகப்படுத்தப்படுகிறது. தெய்வீகசக்தி எங்கெங்கும் எப்போதும் நிறைந்திருக்கிறது; யார் வேண்டுமானாலும் தமது விருப்பத்திற்கு ஏற்ப அதை எந்த வடிவத்திலும் அல்லது உருவத்திலும் வரவழைத்துக் கொள்ளலாம்; அது உருவமற்றதாகவும், வடிவமற்றதாகவும்கூட இருக்கலாம். 
பிரச்சனை: சர்ச்சைக்குரிய இடத்தின் நிலை என்னவாக இருக்கும்? உதாரணமாக, உள்முற்றமும், வெளி முற்றமும். 

தீர்ப்பு: வழக்கில் உள்ள சொத்து ராமன் பிறந்த இடம் என்பதும், பொது வாக அந்த சொத்தில் இருந்த ராமர், சீதை, மற்றும் இதர வழிபடத்தக்க பொருட்கள் அனைத்தையும் வழிபடும் உரிமை இந்துக்களுக்கு இருக்கிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக, ஒரு தெய்வமாக இந்துக்கள் அனாதிகாலம் தொட்டு வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள், அந்த இடத்திற்கு காலம்காலமாக  புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் கட்டப்பட்டப்பின் 1949ம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதியில் சிலைகள் வைக்கப்பட்டன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிமுற்றம் இந்துக்களின் பிரத்யேக உடமையாக இருந்தது என்பதும், சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் இருந்த உள்முற்றத்திலும் அவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கட்டிடம் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு விரோதமாகக் கட்டப்பட்டுள்ளதால் அதை மசூதியாகக் கருதமுடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இதைப் படித்தவுடன் சிரிப்பு வராதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்லது ஆபத்தானவர்கள்.   

4.நம்பிக்கையை ஒரு சான்றாகக் கொள்ள முடியுமா என்பதுதான் முதலில் எழும் கேள்வி. சட்டத்தின் முன் மட்டுமல்ல, பொதுவாகவே ‘வெறும் நம்பிக்கை’ ஒரு ஆதாரமாக முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். மதநம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிவில் தன்மை கொண்ட வழக்குகளை மட்டுமே நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்று சிவில் சட்டங்களின் 9ம் பிரிவு கூறுகின்றது. (ஏ.ஜி.நூரனி, ஃபிரன்ட்லைன், அக்.22, 2010). 
“சொத்துத் தகராறு வழக்குகளைப் பொருத்தவரையில், சான்றுகள் தேவை. நம்பிக்கையே நீதிக்கு ஆதாரம் என்றால் இந்த மண்ணின் சட்டம் குறித்து பல கேள்விகள் எழும்”. (பிருந்தா காரத், தி ஹிந்து 2.10.10)  எனினும் நம்பிக்கை ஒரு சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது; அதிலும்கூட அலகாபாத் நீதிமன்றம் பாரபட்சம் காட்டியுள்ளது. இதே நீதிமன்றம் இதேவழக்கில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கின்றது; வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வாதத்தை ஏற்க முடியாது என்கிற ரீதியில் தீர்ப்பில் கூறியிருக்கின்றது. 

பிரச்சனை: வாதிகள் கூறுவதுபோல் (சன்னி வக்பு வாரியம்) அந்தக் கட்டிடம் எல்லாம் வல்ல இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததா? 

தீர்ப்பு: இந்தப் பிரச்சனை வாதிகளுக்கு எதிராக தீர்மானிக்கப்பட்டது. 

அதாவது, முஸ்லிம்கள் அது எல்லாம் வல்ல இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடமாக ‘நம்புவதை’ நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நீதிபதிகள் இந்துத்துவவாதிகளின் கருத்துக்களை எதிரொலித்திருப்பது மட்டுமின்றி, நுணுக்கமாக சில விஷயங்களை அணுகி முஸ்லிம்களின் உரிமையை அவர்களது கோட்பாடுகளின் பெயராலேயே, அவர்களது உட்பிரிவுகளின் பெயராலேயே பறித்திருக்கின்றனர். 

பாபர்தான் அந்த மசூதியைக் கட்டினார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை வாதிகள் கொடுக்கவில்லை என்று ஒரு இடத்திலும், மசூதியைக் கட்டிய பாபரும், மீர்பாகியும் இஸ்லாத்தின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதலால் சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என மற் றொரு இடத்திலும், பாபர் கட்டவேயில்லை, மீர்பாகிதான் கட்டினார் என்று இன்னுமொரு இடத்திலும், ஒட்டுமொத்தமாக சங்பரிவாரத்திற்கு ஆதரவாக தீர்ப்பில் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் சங்பரிவாரம் மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது நீண்டகாலமாகக் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், நீதிமன்றமோ ‘சங்பரிவாரத்தின்’ நம்பிக்கையையே உண்மைத் தரவாக எடுத்துக் கொள்கின்றது!   

5.இந்துத்துவ கும்பல் இஸ்லாமியர்க்குச் சொந்தமான ஒரு சொத்தை தன்னுடையது என்கிறது. அது இஸ்லாமியருக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரமாயிருந்த மசூதியை அழிக்கிறது. அதற்கு முன்னரே அது தனக்குச் சொந்தம் என்பதற்கான சில சான்றுகளை திருட்டுத்தனமாக மசூதிக்குள் வைக்கின்றது. மசூதியை இடித்தவுடன் அந்த இடத்தில் ஏற்கனவே வைத்த சிலைகளைக் கொண்டு ஒரு தற்காலிகக் கோவிலை நிர்மாணிக்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்றால் சிலை வைத்தவர்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது. சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது என்கிற கண்கூடான உண்மையையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்கின்றனர். எப்படியேனும் சங்பரிவாரத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிவிட வேண்டுமென நீதிபதிகள் பிரமாணம் எடுத்துக் கொண்டுவிட்டனர் போலும்!

மதவெறியர்களும், ரவுடிகளும் சட்டத்தை மதிப்பதில்லை. சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பாகத்தான் எதையும் செய்வார்கள். ஆனால்  அதைச் சட்டப்படியானதாகவும், நியாயப்படியானதாகவும் மாற்றுவதற்கு எல்லா தகிடுதத்தங்களிலும் ஈடுபடுவார்கள். ஆதாரங்களை பலவந்தமாக உருவாக்குவார்கள். அநீதியே நீதியாகிவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமல்லவா? 

இந்த ஆழமான சூழ்ச்சியின் ஒருபகுதிதான் மசூதியை இடித்தது. ஏனெனில், 1950லிருந்தே மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு நடந்து வருகின்றது. தன்னுடைய பாசிசத் திட்டத்திற்குத் தேவையான ஆதாரங்களை உற்பத்தி செய்யும் ஒரு செயல்தான் மசூதி இடிப்பு; தற்காலிகக் கோவில் நிர்மாணம்; அதில் வழிபாடு நடத்துதல். இதற்கு ஏதுவாக 1949லேயே திருட்டுத்தனமாக ராமர் சிலையை மசூதிக்குள் கொண்டு போய் வைத்தது. ( மசூதியின் நடுகவிகை மாடத்திற்குக் கீழ் ராமர் சிலையை ஒரு சிறு கும்பல் வஞ்சகமாக வைத்தபோது பைசாபாத் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கே.கே.நாயர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று கூறப்படுகின்றது ) . 

உண்மையில் மசூதி இடிக்கப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டுமானால், அதை இடித்தவர்களைத் தண்டிக்கவேண்டும்; அந்த இடத்தில் மீண்டும் ஒரு மசூதியைக் கட்டித் தரவேண்டும். அப்படி மசூதி கட்டித் தர வேண்டும் என்றால், அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையைக் கொண்ட கோவிலை அகற்ற வேண்டியிருக்கும். அப்படி அகற்றினால், ராமர் கோவில் அகற்றப்படுகிறது என்று புதுப்பிரச்சனை கிளப்பப்படும். முன்னர் கற்பிதமாக ஒரு பிரச்சனையைக் கிளப்பினார்கள்; வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டார்கள்; அதற்கு நீதி வழங்கவேண்டும் என்றால், இப்போது ‘நிஜமாகவே’ அங்கு இருக்கும் ஒரு ராமர் கோவிலை அகற்ற வேண்டியிருக்கும்; இல்லாத கோவிலுக்கே இவ்வளவு உயிர்களை பலி வாங்கியவர்கள், இருக்கின்ற கோவிலுக்கு எத்தனை உயிரை வேண்டுமானலும் பலி கொடுப்பார்கள். பலி எடுப்பார்கள். 

அதனால்தான், மசூதி இடிக்கப்பட்ட மூன்றாவது நாள், 1992 டிசம்பர் 9ம் தேதி, உடனடியாக அந்த தற்காலிகக் கோவிலை அகற்றவேண்டும் என்று மறைந்த மேற்குவங்க முதலமைச்சர் ஜோதிபாசு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார். அப்போதே அகற்றியிருந்தால் இப்படியொரு சிக்கல் வளர்ந்திருக்காது. அதற்குப் பயந்துகொண்டே இந்தத் தீர்ப்பை சிலர் வரவேற்கின்றனரோ என்று தோன்றுகின்றது. அமைதி நிலவவேண்டும் என்றால் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் அவ்வளவுதான் என்று சட்டத்தையும், அமைதி விரும்பும் மக்களையும் பிளாக்மெயில் செய்கின்றனர். இப்போது நிலவும் அமைதியின் தன்மைகளில் இதுவும் ஒன்று.    

சங்பரிவாரிகள் நாடு முழுவதும் இதுபோன்ற ரியல் எஸ்டேட் பிரச்சனைகளைக் கிளப்பிக் கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம். காசி, மதுரா, குதுப்மினார், ஆதம் பாலம் போன்ற பெரிய பெரிய பிரச்சனைகள் மட்டுமின்றி, ஊர்ஊருக்கு எங்கெல்லாம் மசூதிகளும், தர்க்காக்களும், தேவாலயங்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இடம் யாருக்குச் சொந்தம் என்கிற தகராறுகளைக் கிளப்பியுள்ளார்கள். கிளப்பிக் கொண்டே  இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழிலுக்கே உரிய வெட்டுக் குத்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

“தன்னை ஒரு சமூகம் என்று கூறிக் கொள்ளும் ஒரு குழு  தங்களால் வழிபடப்படும் ஒரு கடவுள் அல்லது அரைக்கடவுள் பிறந்த இடம் என்று வலியுறுத்தி, நிலத்திற்கு உரிமை கோரக்கூடிய முன்னுதாரணத்தை இந்த தீர்ப்பு சட்டத்தின் நீதிமன்றத்தில் ஏற்படுத்தியுள்ளது. எங்கெல்லாம் பொருத்தமான நிலச்சொத்து இருக்கின்றதோ அங்கெல்லாம் இத்தகைய ஜென்மபூமிகள் ஏராளமாக உருவாக்கப்படும் அல்லது தேவையான சர்ச்சை உற்பத்தி செய்யப்படும். வேண்டுமென்றே வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டது கண்டிக்கப்படவில்லை என்பதால், தொடர்ந்து மற்ற சின்னங்கள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு என்ன இருக்கின்றது? வழிபாட்டுத்தலங் களின் அந்தஸ்து மாற்றப்படுவதைத் தடுக்கும் 1993ம் ஆண்டு மசோதா பலனளிக்கவில்லை என்பதை நாம் கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்துவருகிறோம்”  என்று ரொமிலா தாப்பர் இந்த தீர்ப்பைச் சாடியுள்ளார். (தி ஹிந்து, 2.10.10).  இந்தச் சட்டம் அமலில் இருக்கும்போதுதான் 2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் பல அழிக்கப்பட்டன. அங்கும், ஒரிசாவிலும் கிறித்துவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.  

6.அலகாபாத் நீதிமன்றம் மசூதி இடிப்பை நியாயப்படுத்திவிட் டது; அல்லது ஏற்றுக்கொண்டுவிட்டது. ராமர் பிறந்த இடம் மசூதி இருந்த இடம்தான் என்று தீர்ப்பு கூறியிருப்பதும், அங்கு வைக்கப்பட்ட ராமர் சிலைகளை அகற்றக்கூடாது என்று கூறியிருப்பதும், கடவுள் ராமரின் பிரதிநிதிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலத்தைப் பிரித்துக் கொடுத்திருப்பதும் அதைத்தான் உணர்த்துகின்றது. இது குறித்து இந்தியாவின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அந்தியார்ஜீனா கூறுகின்றார்: 

“ராமர் பிறந்த இடம் அங்குதான் இருக்கிறது என்று இந்துக்கள் நம்புவதால் மசூதி இருந்த இடத்தில் அதன் நடு கவிகை மாடத்தின் கீழ் இருக்கும் பகுதியை இந்துக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் (மசூதி வளாகத்திற்குள்ளேயே மசூதியிலிருந்து சுமார் நூறு அடி தூரத்தில் இருந்த சீதையின் சமையலறை. அதுவும் வழிபடப்பட்டு வந்தது-கட்டுரையாளர்) ஆகியவை நிர்மோகி அகாராவிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்றில் இரண்டு பாகத்தை இரண்டு இந்து வாதிகளுக்கும், ஒருபகுதியை ஒரே முஸ்லிம் வாதிக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. ஆதலால், இந்தத் தீர்ப்பு 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை சட்டபூர்வமாக ஆக்குகின்றது, நியாயப்படுத்துகின்றது. ஏனெனில், சர்ச்சைக்குரிய இடத்தில் இன்று மசூதி இல்லை என்கிற அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கி யுள்ளது.” (தி ஹிந்து, மே.கு இதழ்). 

அதாவது, மசூதி இடிக்கப்பட்டது என்பதையே அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1949ம் ஆண்டு சிலைகள் திருட்டுத்தனமாக உள்ளே வைக்கப்பட்டனவா என்கிற கேள்விக்கு ‘சிலைகள் உள்ளே வைக்கப்பட்டன’ என்று பதிலளிக்கின்ற நீதிபதிகள், அப்படி வைக்கப்பட்டதைக் கண்டிக்காத - இப்போது அந்த சிலைகளை அகற்றக்கூடாது என்று உத்தரவிடுகின்ற- நீதிபதிகள் மசூதி இடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? 

தீர்ப்பு பாரபட்சமாக இருப்பதால் உள்நோக்கத்தை சந்தேகப்படுவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. இந்த நீதிபதிகளுக்கு எதுவும் ‘கலாச்சார அரசியல்’ பின்னணி இருக்கின்றதா? இதற்கிடையே, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான அகர்வாலுக்கு விஎச்பியின் தலைமையில் இயங்கும் சாமியார்கள் சங்கம் பாராட்டு விழா நடத்தவிருக்கின்றது என்பதையும் குறித்துக் கொள்ளவும். 

அந்தியார்ஜீனா மேலும் கூறுகிறார்: “வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சிக்காரர் சட்டத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டு நடப்பில் இருக்கும் நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டால் (1992ல் மசூதி இடிக்கப்பட்டது இந்து கட்சிக்காரர்களுக்குச் சாதகமாக ஆனதைப்போல), நீதிமன்றம் முதலில் முந்தைய நிலைமையை மீளுருவாக்க உத்தரவிட வேண்டும் என்பதே நீதியின் அடிப்படை விதியாகும். இந்த வழக்கில் போல் அது சாத்தியமில்லை என்றால் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட கட்சிக்காரருக்கு அது சாதகமாவதை நீதிமன்றம் அனுமதிக்காது. நீதியின் அடிப்படை விதியான இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் அலட்சியப்படுத்திவிட்டது.”

“இந்த தீர்ப்பு சரியானதுதானா என்பதற்கான சோதனை இதுதான்: மசூதியின் நடு கவிகை மாடத்திற்கு கீழ் இருக்கும் பகுதி ராமர் பிறந்த இடம் அல்லது 1528ம் ஆண்டு ஒரு கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்ற நீதிமன்றத்தின் கூற்றை சரியென்று வைத்துக் கொண்டாலும், மசூதி இடிக்கப்படாமல் அதே இடத்தில் இருந்திருந்தால், நீதிமன்றம் இப்போதுபோல் சர்ச்சைக்குரிய இடத்தை பாகம் பிரிப்பதற்கு உத்தரவிட்டிருக்குமா? 500 வருடங்கள் பழமையான மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் இதைச் செய்திருக்கமுடியும். மசூதியை இடிக்கும் உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கவே முடியாது” (மே.கு இதழ்). 
சங்பரிவாரத்தின் செயல்கள் வெறும் ஆத்திரத்தால் நிகழ்த்தப்படுபவை அல்ல என்பதையும், அவை நீண்டகால திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் இது மீண்டும் நிரூபிக்கின்றது.   

7. பாபர் மசூதியின் நடு கவிகை மாடத்திற்குக் கீழேதான் ராமர் பிறந்தார் என்று அகர்வால் மற்றும் வர்மா ஆகிய இரண்டு நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ‘இந்துக்கள்’ அப்படி நம்புகின்றார்கள் என்பதை மட்டுமின்றி, தொல்லியல் துறை ஆய்வுகளையும் அதற்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

பிரச்சனை: ஒரு இந்துக்கோவிலை இடித்துவிட்டுத்தான் அந்த மசூதி கட்டப்பட்டதா? 

தீர்ப்பு: ஒரு பழைய கோவில் இருந்த இடத்தில் அதை இடித்துவிட்டுத்தான் சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட அந்த கட்டிடம் ஒரு மிகப்பெரிய இந்துமத வழிபாட்டுத்தலம் என்பதை இந்திய தொல்லியல் துறை நிரூபித்திருக்கிறது.இது அகர்வால் மற்றும் வர்மா ஆகிய நீதிபதிகளின் தீர்ப்பு. 
கோவில் எதையும் இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை. அது கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே சிதிலமடைந்த ஒரு இந்துக் கோவிலின் மிச்சமீதங்கள் இருந்தன என்று எஸ்.யு.கான் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கின்றார். இதற்கும் தொல்லியல் துறையின் கண்டுபிடிப்புகளே ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தொல்லியல் துறை இந்த ஆய்வை மேற்கொண்டது ‘தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர்’ வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது நடத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும். அப்போது தொல்லியல் துறை கூறிய முடிவுகளை வரலாற்று அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

“இதர தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வையும், அதன் விளக்கங்களையும் கடுமையாக ஆட்சேபித்தபோதும், (அலகாபாத் உயர்நீதிமன்றத்தால்) அவை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இது தொழில் முறை நிபுணத்துவம் தேவைப்படும் ஒரு விஷயம் என்பதனாலும், அவ் விஷயத்தில் கூர்மையான கருத்து வேறுபாடுகள் இருப்பதனாலும், திட்டவட்டமாக ஒரு கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வதும், அதுவும் சர்வசாதாரணமாக அதை ஏற்றுக் கொள்வதும், இந்த தீர்ப்பின் நம்பகத்தன்மைக்கு எள்ளளவும் உதவவில்லை.” (ரொமிலா தாப்பர், மேகு இதழ்). 

உண்மையில் தொல்லியல்துறையின் கண்டுபிடிப்புகளே மசூதிக்குக் கீழே இந்துக் கோவில் இருந்ததை மறுக்கின்ற விதமாக இருக்கின்றன. “முதலாவதாக, இந்துக்கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்ற மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகளின் கூற்று இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுச் சான்றுகளையே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த இடம் முழுவதும் விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன; சுர்க்கியும் (தூளாக்கப்பட்ட சுட்ட செங்கல்லில் இருந்து தயாரிக்கப்படுவது), சுண்ணாம்புக்கல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (இவையனைத்தும் முஸ்லிம் கட்டுமானங்களுக்கேயுரியவை). இந்த சான்றுகள் மசூதிக்குக் கீழே இந்துக்கோவில் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூற்றை மறுக்கின்றன. 

“அடித்தள தூண்களை ஆதாரமாகக் கொண்டுள்ள தொல்லியல்துறையின் அறிக்கை வேறுவிதமாகக் கூறுகிறது. இது தெள்ளத்தெளிவான மோசடியாகும். ஏனெனில், தூண்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தூண்கள் இருந்தது என்று கூறப்படுவதை தொல்லியல் நிபுணர்கள் மறுக்கின்றனர். அந்த இடத்தின் வரைபடம், கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வு சம்பந்தப்பட்ட இதர சான்றாதாரப் பொருட்கள் ஆகியவற்றை அறிஞர்கள், வரலாற்று நிபுணர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் ஆகியோரின் நுண்ணாய்வுக்கு உட்படுத்துவது இப்போது தவிர்க்க முடியாதது.” (சப்தர் ஹஷ்மி அறக்கட்டளை, தி ஹிந்து, 3.10.10). 

இப்பிரச்சனையில், ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலுக்கு’ தனிப்பட்ட முறையில் ஒரு அறிக்கை அளித்த வரலாற்று அறிஞர் சூரஜ் பான் கூறியுள்ள சில கருத்துக்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். இங்கு பேசப்படும் தூண்கள் மசூதியின் நுழைவாயிலில் இருந்தவை. அவை கருப்புக்கல் தூண்கள். பொதுவாகவே அவை உயரம் குறைவானவை; பருமன் குறைவானவை; அவை பாரம் தாங்கக்கூடியவை அல்ல; நுழைவாயிலில் அவை வைக்கப்பட்டிருப்பதே அவற்றின் வண்ண வேற்று மைக்காகத்தான்; அவற்றில் அழகு வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருப்பதும் அலங்காரத்திற்காகவே அவை வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றது என்கிறார். மேலும், அவை மசூதி கட்டுமானத் திட்டத்திற்கே பொருந்தி வருகின்றன; இந்துக் கோவில்களுக்கு அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறுகின்றார். 

இல்லாத சான்றுகளை வைத்துக்கொண்டும், சான்றுகளின் தன்மையைத் திரித்தும் தொல்லியல்துறை உண்மைக்கு மாறான ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. நீதிமன்றம் அந்த அறிக்கையை ஆதாரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. (அதே நேரத்தில், தொல்லியல் துறையின் அறிக்கை மசூதியைக் கட்டியவர்கள் கோவிலை இடித்து விட்டுத்தான் கட்டினார்கள் என்றும் கூறவில்லை. அது அப்படிக் கூறியிருந்தால் அது தொல்லியல் துறையின் அறிக்கையாக இருந்திருக்காது; சங்பரிவாரத்தின் அறிக்கையாக இருந்திருக்கும்; தொல்லியல்துறையில் சங்பரிவாரிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகியிருக்கும்.)

8.“இந்தத் தீர்ப்பு நம்பிக்கையையும், இறையியலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது; நிச்சயமாக வரலாற்றை அல்ல. சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிற கூற்றை வரலாற்றுச் சான்றுகள் ஆதரிக்கவில்லை. நீதிமன்றம் எந்த வகையான சான்றுகளை நம்பியது என்பது எனக்குத் தெரியவில்லை. 1788ம் ஆண்டில்தான் அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்கிற நம்பிக்கை பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க பாதிரியார் டிப்பென் தாலர் என்பவரால்தான் முதன்முதலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது என்பதை யாராவது நீதிமன்றத்திடம் கூறியிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிற கருத்தை, கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதியே கட்டப்பட்டது என்கிற கருத்தை பலர் பரப்ப ஆரம்பித்தனர். ஆனால், வங்க மருத்துவச்சேவையில் பணியாற்றிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் பிரான்சிஸ் புக்கானன் 1810ல் அயோத்திக்குச் சென்றிருந்தார்; கோவில் இடிக்கப்பட்டது என்கிற கருத்து தவறானது என்று அவர் தெளிவாக எழுதினார்” என்று வரலாற்றறிஞர் டி.என்.ஜா. தெரிவிக்கிறார் ( ஃபிரன்ட்லைன்,அக்.22, 2010).

முதன்முதலில் இப்படியொரு கருத்து அல்லது நம்பிக்கை ஏற்பட்டதே 1788ல்தான்; ஆனால், நீதிமன்றமும், சங்பரிவாரமும் அனாதி காலம்தொட்டு இந்த நம்பிக்கை இருப்பதாகக் கூறுகின்றன. மேலும், எந்தக் கோவிலும் இடிக்கப்படவில்லை என்பதற்கு இலக்கியமும், மசூதியில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்களும் ஆதாரமாக இருக்கின்றன. 

“மசூதியின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கணிசமான அளவு நீளமான குறிப்புகள் மசூதி 1528-29ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் ஒரு கோவிலை இடித்துவிட்டுத்தான் அல்லது கோவில் இருந்த இடத்தில்தான் அந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது என்பதற்கு அவற்றில் எந்தக் குறிப்பும் இல்லை. மசூதியைக் கட்டிய மீர்பாகி கோவிலை இடித்துத்தான் அதைக் கட்டினார் என்றால், அடித்தளக் கல்வெட்டுக்களில் அதுபற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். மீர்பாகி கோவிலை இடித்திருந்தால் அதை அவர் ஒரு பெருமைக்குரிய செயலாக நிச்சயமாக கருதி யிருப்பார். மசூதி கட்டியதுபோல அதையும் தன்னுடைய தனிப்பட்ட மதப் பெருமைக்காக அவர் அதைப் பதிவு செய்திருப்பார். அவர் அப்படி எந்தச் செயலையும் பதிவு செய்யவில்லை என்பதன் பொருள் அவர் உண்மையில் கோவில் எதையும் இடிக்கவில்லை என்பதுதான். அதுபோல நடக்காத ஒரு சம்பவத்தைப் பதிவு செய்ய எந்தக் காரணமும் இல்லை” என்று  வரலாற்று அறிஞர்கள் ஆர்.எஸ். சர்மா, டி.என்.ஜா, சூரஜ்பான், அதாத் அலி ஆகியோர் 1991ம் ஆண்டு அளித்த  ‘பாபர் மசூதி- ஜென்மபூமி சர்ச்சை-தேசத்திற்கு வரலாற்று அறிஞர்களின் அறிக்கை’ என்கிற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (டி.கே.ராஜலட்சுமி, ஃபிரன்ட்லைன், அக்.22, 2010). 

துளசிதாசரின் ராமசரித மானசிலும் கோவில் எதுவும் இடிக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்படவில்லை. “பாபர் மசூதி கட்டப்பட்ட சுமார் 50 வருடங்களுக்குள்  1575-76ல் துளசிதாசர் தனது புகழ்பெற்ற ராமசரித மானஸ் என்கிற காவியத்தை எழுதினார். மிகத் தீவிரமான பக்தி பரவசத்துடன் எழுதப்பட்ட ராமாயணக்கதை. அவதார புருஷன் ராமன் பிறந்த இடமே நாசம் செய்யப்பட்டு, அங்கிருந்த கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், இதயத்தை வாட்டும் அந்த சோகத்தைப் பற்றி துளசிதாசர் எழுதாமல் இருந்திருக்க முடியுமா? அவர் அது பற்றி ஒன்றும் எழுதாமலிருப்பது அப்படியொரு சம்பவம் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று பொருள்படுகின்றது. ராமர் மீதும், அயோத்திமீதும் அவருக்கிருந்த பற்றைக் கருத்தில் கொண்டால், உண்மையில் அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை என்றும் ஆகிறது. மாறாக துளசிதாசர் பிரயாகைதான் தனக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டிய முதன்மையான புண்ணியத்தலம் என்று குறிப்பிடுகிறார்; அயோத்தியில் உள்ள எந்த இடமும் ராமர் பிறந்த இடம் என்கிற வணக்கத்திற்குரிய இடமாகக் கருதப்படும் மரபு எதுவும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை” (மே.கு கட்டுரை)

உண்மையில், நீதிமன்றம் ‘இந்துக்களின் நம்பிக்கையை’ சான்றாகக் கொள்ளவில்லை; சங்பரிவாரிகளின் தடாலடிப் பேச்சுக்களை நம்பிக்கையாகக் கொண்டுள்ளது. மசூதி இருந்த இடத்திற்குக் கீழே இந்துக்கோவில் எதுவும் இருந்ததா என்கிற ஆய்வே அதற்கு ஏற்ற சான்றுகளை உற்பத்தி செய்வதற்குத்தான். அப்படி ஒரு ஆய்வை இதே அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிடுகின்ற வகையில் வழக்கு தொடுத்தார்கள் சங்பரிவாரிகள். ஆய்வும் நடந்தது. என்ன கிடைத்ததோ அதற்கு மாறாக அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது! சகல துறைகளிலும் சங்பரிவாரிகள் ஊடுருவியிருக்கிறார்கள். சங்பரிவாரம் சட்டத்தை மதிப்பதில்லை என்று தட்டையாக முடிவிற்கு வந்துவிடவும் கூடாது. அது சட்டத்தை தனக்கு ஏற்றவகையில் வியாக்கியானம் செய்யும் அல்லது தன் கோட்பாடுகளையே சட்டமாக்கிவிடும்.

9. இந்த வழக்கு முற்றிலும் சம்பந்தப்பட்ட வாதிகளிடமே விடப்பட்டதும், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள் கேட்கப்படாததும் மேலே குறிப்பிட்ட 1991ம் ஆண்டு அறிக்கையை அளித்த வரலாற்று அறிஞர் களைக் கவலை கொள்ளச்செய்ததால், சுயேச்சையான வரலாற்று அறிஞர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை அணுகினர். தொல்லியல்துறையின் ஆய்வு விவரங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தருமாறு கோரினர். இவர்களின் ஆய்வறிக்கை எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஒப்புக்கொண்டது. ஆனால், விஎச்பி ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கமோ தந்திரமாக மவுனமாக இருந்தது. (ஆதாரம்: டி.கே.ராஜலட்சுமி, மே.கு இதழ்). 

அயோத்தியில் ஒரு குறிப்பிட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் பண்டைக் காலத்திலிருந்தே நம்பி வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக விஎச்பியால் சமஸ்கிருத இலக்கியங்கள் எதையும் குறிப்பிட முடியவில்லை என்பது அந்த வரலாற்றறிஞர்கள் முதலில் கவனித்த விஷயம்.  16ம் நூற்றாண்டுக்கு முன்னர் (உண்மையில் 18ம் நூற்றாண் டுக்கு முன்னர்) எந்த பக்தி இலக்கியத்திலும் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று எதுவும் குறிப்பிடவில்லை என்றும், 1528-9ல் பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் அல்லது எந்தக் கோவிலும் இருந்தது என்று கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்களது அறிக்கை முடிவிற்கு வந்தது. ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் இடிக்கப்பட்டது என்கிற கதையின் முழுவடிவம் மிகவும் பின்னாளில் 1850ல்தான் வந்தது என்றும் அவர்கள் கூறினர். 

இத்துடன் முடியவில்லை விஷயம். விஎச்பி ஸ்கந்த புராணத்திலுள்ள ‘அயோத்தி மகாத்மியத்தை’ (அயோத்திக்கு புனிதயாத்திரை மேற்கொள் வதன் பெருமைகள்)  தனது வாதத்திற்கு ஆதாரமாகக் கூறுகிறது.  அதையும் ஆய்ந்து வெளிப்படுத்திவிட்டனர் அந்த அறிஞர்கள்: “அயோத்தி  மகாத்மியத்தின் பல்வேறு பதிப்புகளும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலோ 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலோ எழுதப்பட்டதுபோல் தெரிகிறது. அவ்வளவு பிற்காலத்திலும்கூட பிறந்தஇடம் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. மகாத்மியத்தில் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டிய இடமாக ஜென்மபூமி ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை’.        

வரலாறும் இல்லை; இலக்கியத்திலும் குறிப்பில்லை. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனாதி காலம் தொட்டு இந்த நம்பிக்கை இருப்பதாகவும், பண்டைய இலக்கியங்கள் அனைத்தையும் தாங்கள் படித்துப் பார்த்தே இப்படி தீர்ப்பு வழங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.   

10. இந்திய அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவு குடிமக்கள் அனைவருக்கும் தத்தமது மதநம்பிக்கைகளைச் சுதந்திரமாகக் கொண்டிருப்பதற்கும், பின்பற்றுவதற்குமான உரிமையை உத்திரவாதப்படுத்துகிறது.  ஆனால், அதே சட்டம் இப்போது சங்பரிவாரிகளுக்குச் சாதகமாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது; செய்யப்பட்டுள்ளது. 

“தனது 5000 பக்கங்களுக்கும் மேற்பட்ட தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘அத்தகைய ஒரு நம்பிக்கை (ராமர் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்கிற நம்பிக்கை) ஒரு குறிப்பிட்ட புள்ளி யில் குவிமையப்படும்போது, உண்மைத்தரவுகளின் முழுமையில் வேறுவிதமாக நாங்கள் நினைப்பதற்கு காரணம் எதுவும் இல்லாத போது, அது மதத்தின் ஒரு இன்றியமையாத பகுதி என்கிற தன்மையைப் பெறுகிறது என்று நாங்கள் கருதுகின்றோம். குறிப்பாக, அது ஒரு மதத்திற்கு தனிச் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்துடன் தொடர்புடையதாக இருக்கும்போது. ஆதலால், அது வேறு ஒரு தன்மையைப் பெறுகின்றது. (வெறும் நம்பிக்கையல்ல-கட்டுரையாளர்). மதத்தின் அத்தகைய ஒரு இன்றியமையாத பகுதி அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவால் பாதுகாக்கப்படுகிறது.” (ஜே.வெங்கடேசன், தி ஹிந்து, மேகு இதழ்). 

எந்தப் பிரிவு சிறுபான்மையினருக்கு பக்கபலமாக இருந்ததோ அதையே அவர்களுக்கு எதிராக திருப்பிவிட்டார்கள். மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் என்று சங்பரிவாரம் கூறுவதை இந்துக்களின் நம்பிக்கை என்று நீதிபதிகள் வகைப்படுத்துவது சரியல்ல. ஏனெனில், இந்துக்கள் என்றழைக்கப்படுகின் றவர்கள் அனைவருமே அப்படிக் கருதவில்லை. ராமன் இந்துக்களின் பொதுவான கடவுளுமல்ல; பொதுவான அவதாரமும் அல்ல. ராமபக்தர்களுக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் இருப்பது உண்மைதான். ஆனால், சுதந்திரத்தின் நீளம் அடுத்தவன் மூக்கு வரையிலும்தான். அவன் முகத்தில் குத்தி, மூக்கை உடைப்பதற்கு அல்ல. மசூதியை இடித்தது ராமபக்தர்களின் வழி பாட்டுச் சுதந்திரம் என்று வியாக்கியானம் செய்யப்படுமானால், சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இந்திய அரசியல் சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புகள் மீது நம்பிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகம்.     

11. ஒரு பக்கம் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம்தான் என்ற நம்பிக்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது. மற்றொரு பக்கம் மசூதிகளை இடிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்ற வாதமும் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றது. “இந்தியாவிற்குப் பொருந்தக்கூடிய முகமதிய சட்டத்தின் கீழ், ஒரு மசூதியின் மீதான சொத்துரிமை எதிர்மறையான உடமையின் மூலம் இழக்கப்படலாம். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவதில் மசூதி ஒரு இன்றியமையாத பகுதி அல்ல. தொழுகை எங்கு வேண்டுமானாலும் நடத்தப்படலாம்; திறந்தவெளியிலும் கூட. எனவே மசூதியைக் கையகப்படுத்துவது என்பது இந்திய அரசியல் சட்டத்தால் தடை செய்யப்படவில்லை” என்று சுப்பிரமணியம் சுவாமி 1994ம் ஆண்டு ‘இந்திய ஒன்றியத்திற்கும் இஸ்மாயில் பரூக்கிக்கும்’ இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ‘அரசியல் சட்ட  இருக்கை’ அளித்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றார். (தி ஹிந்து, 8.10.10). 

பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையின் அடிப்படை சாரத்திற்கு மாறாக அதிலிருந்து தனக்குகந்த ஒரு சிறு பத்தியை மட்டும் எடுத்து மேற்கோள் காட்டுகிறார். உண்மையில் உச்சநீதிமன்ற இருக்கை அளித்த அந்தத் தீர்ப்பு மசூதி இடிப்புக்கு எதிராகவும், ராமர் அங்கே பிறந்தார் என்பதற்கு எதிராகவும் இருந்தது என்றும்,  அது ஏகமனதான தீர்ப்பு என்றும், கீழ் நீதிமன்றங்கள் உள்பட அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடியது என்றும், அதை அலகாபாத் உயர்நீதிமன்றம் மீறிவிட்டது என்றும் அரசியல் சட்ட வல்லுநர் நூரனி தெரிவிக்கின்றார். (ஃபிரன்ட் லைன், மே.கு இதழ்).  

சுப்பிரமணியம் சுவாமி கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அரசாங்கம் கையகப்படுத்தலாம் என்று இருக்கின்றதேயொழிய, சங்பரிவாரிகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்று இல்லை. சுவாமி மேலும் எழுதுகிறார்: “பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் என்ன தவறு என்றால், அது சட்டத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை; ஆதலால், அது கிரிமினல் குற்றம். மற்றபடி எந்த அரசாங்கமும் பாபர் மசூதியை முஸ்லிம்களிடமிருந்து பறிக்கலாம்; பொது ஒழுங்கு, பொது நலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அப்படிச் செய்வது என்று அந்த அரசாங்கம் முடிவெடுத்தால் அது சட்டபூர்வமானதே (அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவு). இஸ்லாமியச் சட்டத்திலும் இதுதான் நிலை. ஏனெனில், சவூதி அரேபியாவில் சாலைகள் அமைப்பதற்காக மசூதிகள் இடிக்கப்படுகின்றன. நபிகள் தொழுகை நடத்திய மசூதிகூட இடிக்கப்பட்டுள்ளது.”

இந்தியாவில்கூட சாலைகள் அமைப்பதற்காக கோவில்கள் இடிக்கப்படுகின்றன. தர்காக்கள் இடிக்கப் படுகின்றன. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. அது ஒரு வாதமே கிடையாது. பொதுஇடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும், கோவில்கள் உள்பட, நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கின்றது. நபிகள் தொழுகை நடத்திய மசூதி பற்றி சுப்பிரமணிய சுவாமி கூறும் தகவல் உண்மையா, பொய்யா என்பதும் இங்கே பிரச்சனையில்லை. இஸ்லாத்தின் ஒரு பிரிவினரான வகாபிகள்தான்  அந்த மசூதியை இடித்தார்கள் என்று இந்து பத்திரிகைக் கடிதம் (அக்.9,2010)  ஒன்று கூறுகின்றது. 

எப்படியானபோதும், மசூதியை இடிக்கலாம், அதற்கு சட்டத்திலே இடமிருக்கின்றது என்று தற்போதைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவாக வாதிடுவதன் மூலம் மசூதி இடிப்பை நியாயப்படுத்துகின்றார்.  கோவில் இடிக்கப்பட்டாலும், சிதைந்து போனாலும் அது கோவில்தான்; மசூதி இடிக்கப்பட்டுவிட்டால் அது காலி இடம்தான் என்கிறார். “புனிதத் தன்மையைப் பொறுத்தவரையில், ஒரு கோவிலும் ஒரு மசூதியும் சமமானவை என்று கருத முடியுமா? இன்று பொருந்தக்கூடிய இரண்டு முக்கியமான உச்ச தீர்ப்புகளின்படி இதற்கு ‘இல்லை’ என்பதே பதில். இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட இருக்கையின் ஒரு தீர்ப்பின் படி, மசூதி இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத பகுதி அல்ல. (1994). அதே நேரத்தில், ஒரு கோவில் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் அல்லது சிதைந்திருந்தாலும், அது எப்போதும் கோவில்தான் என்று பிரிட்டனின் மேல்சபை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு (1991) கூறுகின்றது”.

தஞ்சையில் ராமமூர்த்தி என்கிற விவசாயியால் கண்டெடுக்கப்பட்டு, அவரிடமிருந்து பழம் கலைப் பொருட்கள் வியாபாரிகளால் வாங்கி இங்கிலாந்திற்குக் கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட நடராஜர் சிலை குறித்து இங்கிலாந்தில் நடந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி மேலும் எழுதுகிறார்: “நான் சட்ட அமைச்சராக இருந்தபோது 1991ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி சிலையை வாங்கியவரின் மேல்முறையீட்டின் மீது நீதிபதிகள் புர்ச்சாஸ், நு£ர்சே, லெக்காட் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினர்: ‘ஆதலால், கோவிலை ஒரு கட்சிக்காரராக இந்த வழக்கில் ஏற்றுக் கொள்ளலாம் என்று நாங்கள் கருதுகிறோம். நடராஜர் சிலையை மீட்கும் உரிமை அதற்கு அதனளவிலேயே இருக்கின்றது என்றும் கருதுகின்றோம்.’ இவ்வாறாக, பயன்படுத்தப்படாத, சிதிலமடைந்த கோவில் ஒரு கட்சிக்காரராக ஆனது”.

“...இஸ்லாத்தில் மசூதி என்பது வெறும் தொழுகை வாசிக்கும் மையம் தான், ஒரு மதம் என்கிற வகையில் மசூதி இஸ்லாமின் இன்றியமையாத ஒரு பாகமல்ல என்கிற காரணத்தினால், எந்தவொரு மசூதிக்கும் உலகில் எங்கும், எந்த நீதிமன்றத்திலும்  இப்படியொரு தீர்ப்பு வழங்கப்படவில்லை”.

மசூதி இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி அல்ல என்றால், கோவிலும் இந்துக்களின் இன்றியமையாத பகுதி அல்லதான். அதுதான் நியாயம். மசூதிகளைப்போல கோவில்களும் பிரார்த்தனைகளுக்கான இடங்கள் தான். இல்லை, கோவில் கடவுளின் இருப்பிடம்; மசூதி அப்படியல்ல என்பது சுவாமியின் வாதம். ஆனால், நபிகள் மசூதியை கடவுளின் இருப்பிடம் என்றுதான் கூறுகின்றார். எனது நம்பிக்கைதான் உயர்ந்தது, உனது நம்பிக்கை தாழ்ந்தது என்கிற வழக்கமான மடத்தனம்தான் சுவாமியின் வாதத்தில் இருக்கின்றதே தவிர எந்த சட்ட நியாயமும் கிடையாது. மேலும், எந்த நிலையில் இருந்தாலும் ஒரு கோவில் கோவில்தான் என்றால், யார் வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஒரு சிலையைக் கொண்டு வைத்துவிட்டு, அது இந்துக் கோவில் என்று வாதிடலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மசூதி இருந்த இடத்தில் அது கட்டப்படுவதற்கு முன்னர் ராமர் கோவில் அல்லது இந்துக்கோவில் எதுவும் இருந்ததா என்கிற பிரச்சனையில் ஆலோசனை வழங்குமாறு 1993ம் வருடம் மத்திய அரசு, அரசியல் சட்டத்தின் 143 (1) பிரிவின்படி உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால், நீதிபதிகள் எம்.எஸ். வெங்கடாச்சலய்யா, ஜே.எஸ்.வர்மா, ஜி.என்.ராய், ஏ.எம்.அகமதி, எஸ்.பி.பருச்சா ஆகியோரைக் கொண்ட அரசியல் சட்ட இருக்கை ஏகமனதாக அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது. வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வு போன்ற விஷயங்களைக் கையாளும் ஆற்றல் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், அதனால் அது நிபுணர்களை நியமிக்க வேண்டியிருக்கும் என்றும், அந்த நிபுணர்களின் கருத்துக்களை ஆட்சேபணையின்றி ஏற்க வேண்டியிருக்கும் என்றும், அந்தக் கருத்து ஏதேனும் ஒரு தரப்பின் விமரிசனத்திற்கோ அல்லது இரண்டு தரப்புகளின் விமரிசனத்திற்குமோ உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் காரணம் கூறியது. 1994ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இந்த தீர்ப்பு வெளிவந்தது. 143(1) பிரிவு ஒரு மாற்றுத் தீர்வு அளிக்கும் செயல்முறையாக இருக்க முடியாது என்றும், இந்தக் கேள்வியே பொருத்தமற்றது என்றும்  கூறியது. (1994ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது).

“நீதிமன்றங்கள் சட்டம் அல்லது உண்மை குறித்த விஷயங்களைக் கையாளலாம். தொல்லியல் அல்லது வரலாற்றுத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கையாளும் தகுதி பெற்றவையல்ல அவை. ஒரு நீதிபதி ஆவணச்சான்றுகள் அல்லது தான் நேரில் பார்த்தாக அல்லது கேட்டதாக ஒரு சாட்சி கூறுவதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். இந்திய சாட்சியங்கள் சட்டப்படி, வதந்திகளை நீதிமன்றங்களில் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று இப்பிரச்சனை குறித்து அன்றே நானி பால்கிவாலா கருத்து கூறினார். (நூரனி, மே.கு இதழ்). ஆனால், இத்தனையையும் மீறி, அலகாபாத் உயர்நீதிமன்றம் 2003ல் பாஜக அதிகாரத்திலிருந்தபோது மசூதிக்குக் கீழே கோவில் எதுவும் இருந்ததா என்று தோண்டிப் பார்க்குமாறு உத்தரவிட்டது. பொய்களை எல்லாம் உண்மையாக்குவதற்கும், சட்டமாக்குவதற்கும்  சங்பரிவாரிகளும், அவர்களுடைய கருத்துக்களை ஆதரிக்கும் சுவாமி போன்றவர்களும் எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள்.   

12. ஆளும் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் முதலில் ஆகா, அருமையான தீர்ப்பு என்று சிலாகித்துவிட்டன. குடிமக்கள் அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசாங்கமும் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் இந்தத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலர் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக முணுமுணுத்தனர். நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளதையும், உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் மேலாக நம்பிக்கைகள் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதையும் இடதுசாரிகள் ஆபத்தான முன்னுதாரணம் என்று வர்ணித்தனர். முலாயம்சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்கள் தீர்ப்பை விமரிசித்தனர். இதற்கெல்லாம் பிறகும், பாஜக இந்த தீர்ப்பு தனக்குக் கிடைத்த வெற்றி (அது உண்மையும்கூட) என்று சித்தரிப்பதைக் கண்டவுடன்தான் காங்கிரஸ் சுதாரித்துக் கொண்டது. அதன் நிலைப்பாட்டில் சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘இந்த தீர்ப்பு நீதியை நோக்கிய போக்கின் ஒரு பகுதி மட்டுமே; அது உச்சநீதிமன்றத்தில் முடிவடையும்’ என்றும், ‘அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தவில்லை’ என்றும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. 

இந்துராஷ்ட்ரத்தை அமைப்பது பாஜகவின் செயல்திட்டம். அதுபோல் கலாச்சார விஷயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனியே திட்டம் எதுவும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்துப் போக்குகள் இருக்கின்றன. இந்து வகுப்பு வாதிகளையும் தாஜா செய்யும்; பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபடுவதற்கு பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிடும்; ஷா பானு வழக்கில் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ரகளை செய்தால் அதற்கு ஏற்றாற்போல் ஒரு புது சட்டத்திருத்தத்தையே மேற்கொண்டு அவர்களையும் தாஜா செய்யும்; அவ்வப்போது மதச்சார்பின்மைவாதிகளின் பேச்சையும் கேட்டுக் கொள்ளும்; வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டமும் போடும். இத்தகையக் கருத்துக்கள் கொண்ட அனைவருக்கும் அக்கட்சியில் இடம் இருக்கின்றது. எந்தெந்த சமயத்தில் எந்தெந்த சக்திகளின் கை மேலோங்குகின்றதோ அப்போது அந்த சக்திகளின் கருத்துதான் தன் கருத்து என்று அதைப் பிடித்துக்கொள்ளும். சுருக்கமாகக் கூறினால், அது ஒரு கொள்கை கொண்ட கட்சியல்ல; பல கொள்கைகளின் கூட்டணி. 

இந்துத்துவத்துடன் அவ்வப்போது சமரசம் செய்துகொள்வதால் காங்கிரஸையும் இந்துத்துவக் கட்சி என்று வகைப்படுத்த முடியாது. காங்கிரசை இந்துத்துவக் கட்சி என்று வகைப்படுத்தினால், மதவாதத் திற்கு எதிரான போராட்டத்தில் அக்கட்சியைப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, 2004 தேர்தலில் வகுப்புவாத பாஜக அபாயத்திற்கு எதிராக இடதுசாரிகள் உள்பட மதச்சார்பற்ற சக்திகள் காங்கிரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாஜக பதவியிறக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி, காங்கிரஸ்  தலைமையில் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஒரு மாற்று அரசாங்கமும் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் உண்மையில் இந்துத்துவக்கட்சியாக இருந்திருந்தால், மற்ற மதச்சார்பற்ற கட்சிகளை விடுங்கள், இடதுசாரிகள் அதை ஆதரிக்கும் பேச்சே எழுந்திருக்காது. அது பாஜகவிற்குச் சாதகமாக ஆகியிருக்கக்கூடும்.    

இருந்தபோதும், காங்கிரஸ் கட்சிக்கு அதன் பழைய பாரம்பரியங்களை நினைவுறுத்த வேண்டியிருக்கின்றது. “மதச்சார்பற்ற கட்சிகள் உறுதியான ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். 1946ம் ஆண்டு பீகார் பற்றியெரிந்து கொண்டிருந்தது. இந்து-முஸ்லிம் கலவரங்களால் அது பாதிக்கப் பட்டிருந்தது. கலவரங்கள் நிற்கவில்லை என்றால் டெல்லியிலிருந்து கலவரக்காரர்கள் மீது குண்டுவீசுவேன் என்று அவர் (நேரு) பகிரங்கமாக எழுதினார். பீகார் முஸ்லிம் லீகின் தொகுதியாக இருந்தது. லீக் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அரசியல் கட்சிகளின் பரந்த கண்ணோட்டம் பெரும் அழிவைத் தடுத்தது. அரசு ஒரு நிலை எடுக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற மாண்புகளை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்” என்று நீதியரசர் ராஜேந்திர சச்சார் தெரிவிக்கின்றார். (பிரன்ட்லைன், மேகு இதழ்).  

இதைப் படித்தவுடன் கலவரம் நடத்தியது முஸ்லிம்கள்தான் என்பதால் நேரு அப்படிச் சொன்னார் என்கிற முடிவிற்கு வரவேண்டிய அவசியமில்லை. அது தவறுமாகும். ஏனெனில், அவர் அதே அளவு தீவிரத்துடன்தான் இந்து மதவாதிகளையும் கையாண்டார் என்பது வரலாறு. 

12.சில பத்திரிகைகள் இதுகுறித்து செய்திகள் வெளியிடும்போது, இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளன. வேண்டுமென்றோ அல்லது ஒரு வசதிக்காகவோ அப்படிச் சொல்லப்படுகின்றது என்று  வைத்துக்கொண்டாலும், அது தவறாகும். ஏனெனில், இந்துக்கள் என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றவர்கள் அல்லது கருதப்படுகின்றவர்கள் அனைவருமே அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று  தவம் இருப்பவர்கள் அல்ல. அங்கு கோவில் கட்டவில்லை என்றால் நாட்டில் மழை பெய்யாது என்றோ, சாமிக்குத்தம் ஆகிவிடும் என்றோ, பஞ்சம் பட்டினி தலை விரித்தாடும் என்றோ, கொள்ளைநோய் எல்லோரையும் கொண்டு போய்விடும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை. அவர்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் பிரச்சனையும் அல்ல இது.

மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்டுவோம் என்று தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக மூர்க்கத்தனமாக இயக்கங்கள் நடத்தி 1999ல் சங்பரிவாரத்தின் அரசியல் அங்கமான பாஜக ஆட்சிக்கு வந்தபோது அது பெற்றிருந்த வாக்குகள் வெறும் 23.75% தான். அதாவது 76.25%  மக்கள் அயோத்தியில் கோவிலை ஆதரிக்கவில்லை. அல்லது கோவில் கட்டுவதை முக்கியப் பிரச்சனையாகக் கருதவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக பெற்ற வாக்குகள் குறைந்து 2009 பாராளுமன்றத் தேர்தலில் அது வெறும் 18.81 விழுக்காடாக ஆனது. அதாவது 81.19% மக்கள் கோவிலை ஆதரிக்கவில்லை அல்லது அதை முக்கியமான பிரச்சனையாகக் கருதவில்லை. இத்தனைக்கும் பாஜக அடுத்தடுத்த தேர்தல்களில் முந்தைய தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டது. 1999ல் 339 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 2009ல் 432 தொகுதிகளில் போட்டியிட்டது. (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்). மேலும், இந்த எல்லா தேர்தல்களிலும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே பாஜக போட்டியிட்டது. 
கோவில் பிரச்சனைக்கு மட்டும்தான் இந்த வாதம் பொருந்தும். பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் அனைவருமே கோவிலுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்றோ அல்லது அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் அனைவருமே அதன் இதர கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தையும் எதிர்ப்பவர்கள் என்றோ அர்த்தமல்ல. முஸ்லிம்கள் நாலு பெண்டாட்டி கட்டிக்கொள்கிறார்கள், பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள், பசுவை வதைக்கிறார்கள் என்பன போன்ற இந்துத்துவவாதிகளின் கருத்துக்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது  பலவற்றையோ பிரதிபலித்துக்கொண்டே இந்துத்துவ பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பவர்கள் இருக்கின்றனர். உள்ளூர் அரசியல், சாதி போன்ற பல்வேறு காரணங்கள் செயல்படுகின்றன. அதற்காக அவர்களை மதவாதிகள் என்று வகைப்படுத்திவிடவும் முடியாது. 

13.இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களை பாதிக்குமா எனக் கேட்டால், அவர்களை மட்டும் பாதிக்காது என்பதுதான் பதில். ஏனெனில், சங்பரிவாரம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது கிறித்துவர்களுக்கும், பௌத்தர்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிரானது. தத்துவ அடிப்படையில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. பகுத்தறிவிற்கு, கடவுள் மறுப்பிற்கு எதிரானது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. அனைத்திலும் முக்கியமாக இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படும், தங்களை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் எதிரானது. பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிரானது. இவர்களில் இந்த விவரங்களை அறிந்தவர்கள் அனைவரின் மனதையும் இந்த தீர்ப்பு புண்படுத்திவிட்டது. கலக்கமடையச் செய்திருக்கிறது. கோபமடையச் செய்திருக்கின்றது. 

14. இந்த தீர்ப்பை யாருக்கும் வெற்றி, தோல்வி என்று பார்க்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ்சின் சர்சங்சாலக் மோகன் பகவத் அருளியிருக்கின்றார். அனைவரும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

அதேவேளையில், சங்பரிவாரம் இது தனக்குக் கிடைத்த வெற்றி என்பதை மறைக்கவே இல்லை. மாறாக, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றது. வழக்கம்போல் தன்னுடைய வெற்றியை இந்துக்களின் வெற்றி என்று சித்தரித்துக் கொண்டிருக்கின்றது. வெற்றியே என்றபோதிலும் சங்பரிவாரமும் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், இடம் முழுமையாக அதற்கு ஒதுக்கப்படவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்தையும் தங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்கிறது. 

‘எங்களது நிலைப்பாடு சரியென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ராமர் சிலை இருக்கும் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட நிலம் ராமர் பிறந்த இடம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரம்மாண்ட கோவிலுக்கு வழிவகுத்துள்ளது. பிரம்மாண்டமான கோவிலுக்கு சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை யாருக்காவது விட்டுக் கொடுப்பது என்கிற கேள்விக்கு இடமிருக்கிறதா என்ன?’ என்று பிரவீன் தொக்காடியா கேட்கின்றார். 

இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சங்பரிவாரமும் கூறிக் கொண்டிருக்கின்றது. 

“இந்தப் பிரச்சனை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். அது வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போவதற்கு முன்னர் துவங்க வேண்டும். பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டால் சமரசத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னர் இந்த நிலத்தின் மீது முஸ்லிம்கள் உரிமை கொண்டாடுவது, மெக்காவில் ஒரு கோவில் கட்டவேண்டும் என்று இந்துக்கள் உரிமை கொண்டாடுவதற்குச் சமம் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதால், இந்தப் பிரச்சனையில் இனியும் மனக்கசப்புகள் இருக்கக் கூடாது என்பதை இரண்டு சமூகங்களும் உணர வேண்டும். டிசம்பர் 6ஐ மறந்து விடுங்கள், கடந்தகால மனக்கசப்பை மறந்துவிடுங்கள், நடந்தது முடிந்ததாக இருக்கட்டும், சமசரப் பேச்சுவார்த்தையில் பிரச்சனையைத் தீர்ப்போம்” என்று பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். 

மெக்காவை வேண்டுமென்றே இழுத்திருப்பதன் மூலம் முஸ்லிம்கள் மீது ஒரு அந்நிய சாயலை பூச முயற்சித்திருக்கிறார். தங்கள் பங்கையும் விட்டுக்கொடுத்து கோவில் கட்டுவதற்கு உதவுவதன் மூலம் முஸ்லிம்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கூறியிருக்கின்றார்.  

மொத்த நிலமும் இவர்களுக்குக் கிடைத்தால்தான் இந்தப் பிரச்சனையை இவர்கள் ‘முடிப்பார்கள்’ என்பது தெளிவு. உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதற்கு வகை செய்யவில்லை எனில் கலவர முயற்சிகளில் இறங்குவார்கள். மறுபக்கம் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர். அதை ஏற்காதவர்களும் கூட உச்சநீதிமன்றம் என்ன சொன்னாலும் ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என்று அறிவித்துள்ளனர். தங்களுக்கு அநீதி இழைக்கப் படுகின்றது என்பது கண்கூடாகத் தெரிந்தபோதும் முஸ்லிம்கள் பொறுமை காத்துள்ளனர். ஆத்திரமூட்டல் எதற்கும் அவர்கள் பலியாகவில்லை. 

ஆனால், மதச்சார்பற்ற சக்திகள் அமைதி காப்பதோ அல்லது எப்படியோ இந்தப் பிரச்சனை தீர்ந்தால் சரி என்று நினைப்பதோ ஆபத்தாகும். உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பைச் சொல்கின்றவரை எதுவும் செய்யாமல் வாளாவிருப்பதோ ஆபத்தாகும். ஏனெனில், ராமர் கோவில் கட்டுவது மட்டும் இந்துத்துவத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அதில் அது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து தன்னுடைய பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாகக் கையிலெடுக்கும். மொத்த தேசத்தையும் கழுமரத்தில் ஏற்றிவிடும்.

நன்றி ; புதுவிசை அக். டிச.2010

No comments:

Post a Comment