Thursday, January 27, 2011

மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் தீர்ப்பு-டி.ஆர்.அந்தியர்ஜூனா



தமிழில்:அசோகன் முத்துசாமி

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மசூதி இடிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் குறித்து எந்தக் கண்டனமும் இல்லாதது அயோத்தி வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் எடுப்பாகத் தெரிகின்ற அம்சமாகும்.
மசூதி இடிப்பு பற்றி தன்னுடைய 1994ம் ஆண்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பின்வருமாறு கூறியது: ''குறுகிய காலத்திற்குள்ளேயே மொத்த கட்டிடமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆம், அது தேசத்திற்கு அவமானத்தைத் தரும் செயல். இடிக்கப்பட்டது ஒரு பண்டைய கட்டிடம் மட்டுமல்ல; ஆனால், பெரும்பான்மையினர் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்கிற சிறுபான்மையினரின் நம்பிக்கையும்,  நீதியுணர்வின் மீதான அவர்களது நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியல் சட்டத்தின் செயல்பாடு ஆகியவற்றின் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையையும் நிலைகுலையச் செய்துவிட்டது. எந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு மாநில அரசாங்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்ததோ அந்த பாதுகாப்பற்ற 500 ஆண்டு காலப் பழமையான கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது''.
மசூதி இடிப்பு குறித்து மத்திய அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை பின்வருமாறு கூறியது: ''1992 டிசம்பர் 6ம் நாள் அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர்மசூதி கட்டிடம் இடிக்கப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரிய செயல். இந்தக் காரியத்தைச் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு எதிராக மட்டும் தாக்குதல் நடத்தவில்லை; நமது அரசியல் சட்டத்தில் போற்றி பாராட்டப்படுகின்ற மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். திடீரென்ற, வெட்கக் கேடான ஒரு செயலால் சில ஆயிரம் பேர்கள் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கின்றனர்; இந்த சம்பவத்தைக் கண்டு மக்கள் மனவேதனையும், அச்சமும் அடைந்திருக்கின்றனர்.''
1992 டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரதமரும், மத்திய அரசாங்கமும் மசூதி மீண்டும் கட்டப்படும் என்று அறிவிக்கின்ற அளவிற்கு கடுஞ்சீற்றம் நிலவியது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த காட்டுமிராண்டித்தனம் பற்றி அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக, மசூதி இடிப்பு ஏதோ நடந்தது நடந்து விட்டது என்பது போலவும், அதில் வாதிடுவதால் பயனேதும் இல்லை என்பது போலவும் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை காலி நிலமாகக் கருதியிருக்கின்றது. அங்கிருந்த மசூதியின் நடுகவிகை மாடத்தின் கீழ்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புவதால் அந்தப் பகுதியை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ராமர் மேடை (ராம் சபுத்ரா) மற்றும் சீதையின் சமையலறை (சீதா ரசோய்) ஆகியவை அடங்கிய பகுதிகளை நிர்மோகி அகாராவிற்கு (வழக்கில் ஒரு வாதியாக இருக்கும் ஒரு வைணவ அமைப்பு-மொர்) ஒதுக்க வேண்டும் என்றும் கூறிய பின்னர், சர்ச்சைக்குரிய இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் இரண்டு பாகத்தை இந்து வாதிகளுக்கும், ஒரு பகுதியை முஸ்லீம் வாதிகளுக்கும் மேலே குறிப்பிட்ட வகையில் பிரித்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுகின்றது. ஆதலால், நீதிமன்றத்தின் உத்தரவு சர்ச்சைக்குரிய இடத்தில் இன்று மசூதி இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்த தீர்ப்புகள் 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்துகின்றன; சட்டபூர்வமானதாக ஆக்குகின்றன.
வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சிக்காரர் சட்டத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு, இருக்கும் நிலைமையை தனக்குச் சாதகமான வகையில் மாற்றிக் கொண்டாரென்றால் (இந்து வாதிகளுக்குச் சாதமாக 1992ல் மசூதி இடிக்கப்பட்டது போல்), அதற்கு முன்பிருந்த நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் என்றுதான் முதலில் நீதிமன்றம் உத்தரவிடும் என்பது நீதியின் அடிப்படை விதியாகும்.
இந்த வழக்கில் போல அது சாத்தியமில்லை எனில், சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட கட்சிக்காரருக்கு அது அனுகூலமாக ஆவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது. நீதியின் இந்த அடிப்படை விதியை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு அலட்சியப்படுத்திவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு பழுதற்றதா இல்லையா என்பதை சோதிப்பதற்கான உரைகல் இதுதான்: ''மசூதியின் நடுகவிகை மாடத்தின் கீழ் இருக்கும் பகுதியில்தான் ராமர் பிறந்தார்'' என்கிற நீதிமன்றத்தின் முடிவு சரியானது என்று கருதிக் கொண்டால் அல்லது கோவிலை இடித்துத்தான் 1528ம் ஆண்டு மசூதி கட்டப்பட்டது என்று கருதிக் கொண்டால், மசூதி இடிக்கப்படாமல் அதே இடத்தில் இருந்திருந்தால், நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று இப்போது போல் உத்தரவிட்டிருக்க முடியுமா? 500 வருடங்கள் பழமையான மசூதியை இடித்து தரை மட்டமாக்கி ஒரு காலி நிலத்தை உருவாக்கி மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். அப்படியொரு உத்தரவு வழங்குவது அசாத்தியம் என்பது தெளிவு.
அப்படி இல்லை எனில், மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒரு சட்ட விரோதச் செயலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இப்போது செய்திருப்பது போல் சர்ச்சைக்குரிய இடத்தைப் பிரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? சமரசத்திற்காகவும், தேசிய இணக்கத்திற்காகவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகக் கருதப்படும் உயர்நீதிமன்றத்தின் பெரும்பான்மையான தீர்ப்பு நல் நோக்கம் கொண்டதுதான். அந்த உணர்வில் முஸ்லிம் சமுதாயத்தால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டால், தேசத்தின் எரிந்து கொண்டிருக்கும் ஒரு மதப் பிரச்சனையை அது தீர்த்துவிடும். அதுதான் எதனினும் சிறந்த, விரும்பத் தக்க ஒரு முடிவு. அது நிகழவில்லை என்றால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது முஸ்லிம் சமுதாயத்தில் கடும் மனக்குமுறலை உண்டாக்கும். ஏனெனில், ஒரு வழிபாட்டுத் தலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை நீதிமன்றம் பொறுத்து, ஏற்றுக் கொண்டு விட்டதாக முஸ்லிம் சமுதாயம் அதைப் பார்க்கும்.

(கட்டுரையாளர் மூத்த வழக்கறிஞர்; மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்)

நன்றி: தி ஹிந்து, அக்டோபர் 5, 2010.
---------------------------------        





No comments:

Post a Comment