Tuesday, January 25, 2011

வரலாறு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது -பேராசிரியர் டி.என்.ஜா



பேராசிரியர் டி.என்.ஜா அவர்களின் பேட்டி-டி.கே.ராஜலட்சுமி
(டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்)
 தமிழில்: அசோகன் முத்துசாமி

வரலாற்று உண்மையையும் நம்பிக்கையையும் மாண்புமிகு நீதிபதிகள் வேறுபடுத்திப் பார்த்திருக்க வேண்டாமா? 

வரலாற்றுச் சான்றுகளின் இடத்தை நம்பிக்கை பிடிப்பதற்கு எப்போதும் அனுமத்திருக்கக் கூடாது. காரண காரிய அறிவை நம்பிக்கை வென்று விட்டது போல் தெரிகின்றது; இது துர்பாக்கியமானது. நம்பிக்கை வரலாற்றை மறுக்கின்றது.

இப்போது இருக்கும் பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்களின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதற்காகப் பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியமுள்ளவையாக தீர்ப்பின் சில அம்சங்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? மேலும், அது வரலாற்றை திருத்தி எழுதுவதற்கும் இட்டுச் செல்லாதா? 

ஆம், அநேகமாக அதுதான் நடக்கப் போகின்றது. உண்மைக்கு, வரலாற்றுச் சான்றுக்கு, வரலாறு எழுதும் மரபிற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும். வரலாற்று ஆசிரியர்கள் எப்போதுமே பாரபட்சமற்றவர்கள் என்று நான் கூறவில்லை; மனப்பூர்வமான அக்கறையுள்ள வரலாற்று ஆசிரியர்கள் பாரபட்சமற்றவர்கள்.
ஒரு வரலாற்று ஆசிரியர் என்கிற முறையில் இந்த தீர்ப்பை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

வாதிட்டுக் கொண்டு கட்சிக்காரர்கள் நிலத்தை பாகம் பிரிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாக நான் நினைக்கவில்லை. சொத்து யாருக்கு உரியது என்பதை தீர்மானிக்குமாறு அவர்கள் கோரினார்கள். சமூகங்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக வாழ விரும்பினார்கள் என்றால் அது நாட்டிற்கு நல்லது; ஆனால், நீதி என்ற ஒன்று இருக்கின்றது. சமரசம் என்பதைப் பொருத்த வரையில் வழக்கு தொடுத்திருப்பவர்களில் சிலரை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் அதை ஏற்பட அனுமதிக்க மாட்டடார்கள் என்பதுதான் என்னுடைய ஒரே அச்சம்.

பாபர் மசூதி குறித்து தேசத்திற்கு அறிக்கை அளித்த சுயேச்சையான வரலாற்று ஆசிரியர்கள் குழுவில் நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். இன்றைய சூழலில் வரலாறு அல்லது வரலாற்று உண்மைகள் பாத்திரம் வகிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வரலாற்றின் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கின்றது? 

(1) நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை நீதிமன்றங்கள் எப்படி விசாரித்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலைகள் வைக்கப்பட்ட இடம்தான் உண்மையில் ராமர் பிறந்த இடம் என்று அவர்கள் உறுதியாகக் கூறியிருக்கின்றார்கள். ஆதலால், தீர்ப்பு நம்பிக்கையையும் இறையியலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது; நிச்சயமாக வரலாற்றை அல்ல. சிலைகள் எங்கு வைக்கப்பட்டிருந்தனவோ அங்கு ராமர் பிறந்தார் என்கிற கூற்றை வரலாற்றுச் சான்றுகள் ஆதரிக்கவில்லை. எந்த வகையான சதன்றை நீதிமன்றம் நம்பியது என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்கிற நம்பிக்கையை தெளிவாக முதலில் குறிப்பிட்டது 1788ல் பிரெஞ்சு கிறிஸ்துவப் பாதிரியார் டிப்பென்தாலர் என்பதை யாராவது நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிற, கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதியே கட்டப்பட்டது என்கிற கருத்தை பலர் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், வங்காள மருத்துவ சேவையில் பணியாற்றிய ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரான்சிஸ் புக்கானன் 1810ல் அயோத்திக்குச் சென்றார்; கோவில் இடிப்புக் கருத்து ஆதரமற்றது என்று தெளிவாக எழுதினார். 1885ல்தான் இப்பிரச்சனையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முதல் மோதல் நிகழ்ந்தது; நிலைமையை மட்டுப்படுத்த வாஜித் அலி ஷா மூன்று நபர் கமிட்டியை நியமித்தார். 1857 எழுச்சிக்குப் பின்னர் (விடுதலைப் போர்), 1889ல் ஒரு இந்து பூசாரி அந்த இடத்திற்கு உரிமை கோரி உள்ளூர் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் 1934ல் ஏற்பட்ட ஒரு மோதல் தவிர்த்து, 1889லிருந்து 1949 வரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் ராம் சபுத்ராவில் அமைதியான முறையில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்தார்கள்.
1949ல் பைசாபாத் வட்டாட்சியர் கே.கே.நாயர் மறைமுக ஆதரவுடன் பாபர் மசூதியின் நடுகவிகை மாடத்தின் கீழ் ராமர் சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதிலிருந்து அயோத்தியை முன்னிட்டு நடந்த மோதல்களின் கதை ஆரம்பமாகின்றது; நாயர் ஆர்எஸ்எஸ்-சின் உறுப்பினதாரக இருந்தார் என்று கூறப்படுகின்றது.

(2) நான் அகழ்வாய்வில் பங்கேற்வில்லை. மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் சான்றுகளை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்களின் குழுவில் நான் இருந்தேன். சர்ச்சையிட்டுக் கொள்ளும் கட்சிக்காரர்கள் பேச்சு வார்த்தையின் மூலம் சமரசம் செய்து கொள்ளுமாறு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் விரும்பினார். விஷ்வ இந்து பரிசத் தன் வசம் இரண்டு அல்லது மூன்று வரலாற்று அறிஞர்களையும், தொல்பொருள் ஆய்வாளர்களையும் கொண்டிருந்தது; ஆனால், பாபர் மசூதி செயற்குழுவினரிடம் ஒருவரும் இருக்கவில்லை. தேச நலன் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று கருதிய நாங்கள் நான்கு பேர்-சூரஜ் பான், அதார் அலி, ஆர்.எஸ்.சர்மா மற்றும் நான்-சுயேச்சயான வரலாற்று அறிஞர்களாக அவர்களது கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்தோம்.
அந்த அந்தஸ்தில்தான் நாங்கள் எங்கள் அறிக்கையை எழுதினோம்; இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தோம்; 'ராமஜென்மபூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்று அறிஞர்களின் அறிக்கை' என்ற பெயரில் பின்னர் வெளியிட்டோம். பேச்சுவார்த்தைகள் «£ல்வியடைந்த அந்தக் காலம் முழுவதும் இந்திய தொல்லியல் துறை எங்களுக்கு விளையாட்டு காட்டியது; 1975-1980களின் ராமாயண திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட அயோத்தி அகழ்வாய்வுகளின் இடக் குறிப்பேடு உள்பட முக்கியமான ஆவணங்களைத் தர மறுத்தது. சான்றுகளைக் கேட்டு அரசாங்கத்திற்கு நாங்கள் பல கடிதங்கள் எழுதினோம். அவற்றுக்கு பதில் அளிக்கப்படவேயில்லை. அயோத்தி பிரச்சனையில் தொல்லியல் துறையின் அணுகுமுறை எப்போதும் இருமனப் போக்கு கொண்டதாக இருந்தது. தொல்லியல் துறை சுயாட்சி அதிகாரமற்ற ஒரு அரசுத் துறையாகவே இருந்தது. அது இந்து அடிப்படைவாதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.
(3) வரலாற்றின் தீர்ப்பைப் பொருத்த வரையில், நீங்கள் பின்னோக்கிச் சென்றால் 1528க்கு முன்னர் அயோத்திக்கு உரிமை கொண்டாடிய பல்வேறு மதக் குழுக்கள் இருந்ததற்கான சான்றுகளைக் காணலாம். 3000 பவுத்த துறவிகள் மற்றும் நூறு மடங்கள் இருந்ததாகவும், பிராமணீய மதத்தைச் சேர்ந்த வெறும் பத்து கோவில்கள் மட்டும் இருந்ததான சீன யாத்ரிகர் யுவான் சுவாங் எழுதினார். ஏழாம் நூற்றாண்டில் அய«£த்தியில் பவுத்தம் ஆதிக்கம் செலுத்தியது. முதலாம் மற்றும் நான்காம் தீர்த்தங்கரரர்கள் அயோத்தியில் பிறந்தவர்கள். இன்றும் கூட அயோத்தி சமணர்களின் புண்ணிய தலமாக இருக்கின்றது. 12ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம்கள் இருந்ததற்கான வலுவான சான்றுகள் இருக்கின்றன. சுபி துறவிகள் 12ம் நூற்றாண்டிலிருந்து அயோத்திக்கு வந்து போயிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மத்திய ஆசியாவிலிருந்து வந்த குவாசி குத்துத்தீன் ஆவாதி என்பவர் அஜ்மீரின் க்வாஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் சீடர் என்று சொல்லப்படுகின்றது. அயோத்தியில் சுபி புண்ணிய தலங்கள் பல இருக்கின்றன. இவ்வாறாக, பவுத்தர்கள் இருந்திருக்கின்றனர்; சமணர்கள் இருந்திருக்கின்றனர்; 12ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம்கள் இருந்திருக்கின்றனர். இந்த சான்றுகளை எல்லாம் எப்படி நிராகரிக்க முடியும் என்பதையும், இந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று உறுதியாகக் கூற முடியும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில் அயோத்தி புண்ணிய  யாத்திரை செல்லும் தலமாகக் கூட இருக்கவில்லை. 'அயோத்தி மகாத்மியம்' என்றழைக்கப்படும் ஸ்கந்த புராணத்தில் அயோத்தி பற்றிய குறிப்பு இருக்கின்றது. இந்த நூல் தொகுக்கப்பட்ட காலம் 300 லிருந்து 400 ஆண்டுகள் வரை நீள்கின்றது; ஏராளமான இடைச் செருகல்கள், முரண்பாடுகள் இருக்கின்றன. சரயூ நதிக்கரையில் உள்ள ஸ்வர்கதுவார் (சொர்க்க வாசல்) என்கிற ராமர் சொர்க்கத்திற்கு ஏறிச் சென்ற இடம் பற்றி குறைந்த பட்சம் நூறு செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன;  அவரது பிற்நத இடம் பற்றி வெறும் பத்து செய்யுள்கள் மட்டுமே குறிப்பிடுகின்றன; ஆனால், ராமர் பிறந்த குறிப்பிட்ட இடம் பற்றி எதுவும் இல்லை.
வரலாற்று ரீதியாக சான்றளிக்கப்பட்டுள்ள மூன்று ராமர் கோவில்கள் மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்ற; அவை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. துளசிதாசரின் 'ராமச்சரிதமனாஸ்' ராமர் பிறந்த இடம் பற்றி குறிப்பாக எதுவும் சொல்வதில்லை. மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்பட்டதாகவும் அவர் எதுவும் குறிப்பிடுவதில்லை. இன்னும் காலத்தில் பின்னோக்கிச் சென்றால், 11ம் நூற்றாண்டில் ஆவாத் பகுதியை ஆண்ட கார்வால் மன்னனின் பட் லட்சுமிதாரா என்கிற மந்திரி ஒருவர் இருந்தார். 'க்ருத்வகல்பதரு' என்கிற நூல் ஒன்றை அவர் எழுதினார். அதில் தீர்த்தங்கள் பற்றிய 'தீர்த்தவிவேச்சன்கண்டா' என்கிற ஒரு பகுதி இருக்கின்றது. அயோத்தியை ஒரு புண்ணியதலமாக அது குறிப்பிடவில்லை.
கார்வால் மன்னர்கள் 11ம் நூற்றாண்டில் அதை புண்ணியதலமாகக் குறிப்பிடவில்லை என்றால் அதை புண்ணியதலம் என்றோ அல்லது ராமர் பிறந்த இடம் என்றோ எப்படிக் குறிப்பிட முடியும்? உண்மையில், பிரயாக்-தான் மிக முக்கியமான புண்ணியதலமாக இருந்தது. மொத்த உத்திரப் பிரதேசத்திலும் 17ம் நூற்றாண்டிற்கு முன்னர் ராமர் கோவில் எதுவும் இருக்கவில்லை. கனாககாபவன் அல்லது கனகமன்படா அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. ஆனால், ஒருவர் வடக்கு பீகாருக்கும், நேபாள் தெராய்க்கும் போனால், ஜனக்பூரில் 1898ல் கட்டப்பட்ட சீதா கோவில் ஒன்று இருந்தது.

நீதிமன்றம் வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகளை விவரமாக ஆராயவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? 

அவர்கள் வரலாற்றுச் சான்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றேன். மறைந்த சூரஜ் பான், சிரீன் ரத்னாகர், ஆர்.சி.தாக்ரன் மற்றும் சிவீரா ஜெய்ஸ்வால் போன்ற வரலாற்று அறிஞர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அளித்த சான்றுகளுக்கெல்லாம் என்ன ஆயிற்று? வரலாறு ஒரு பாத்திரம் வகித்திருக்க வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு விஷயம் தீர்மானிக்கப்படுகிறது என்றால், வரலாறு பின்னுக்கு தள்ளப்படுகின்றது.
மசூதிகள் கட்டுவதற்காக முஸ்லிம்கள் 30000 கோவில்களை இடித்ததாகத் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றது. கோவில்கள் இடிக்கப்பட்டது பற்றி எழுதியுள்ள ரிச்சர்ட் ஈட்டன் என்கிற அமெரிக்க வரலாற்று அறிஞர் மொத்த எண்ணிக்கை 80ஐத் தாண்டாது என்கின்றார். பல்வேறு பிரிவுகளையும், மதங்களையும் சேர்ந்த மன்னர்களால் மதக்கட்டிடங்கள் இடைவிடாமல் அழிக்கப்பட்டது பற்றி வரலாறு முழுவதும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன.
நீதிமன்றம் நம்பியிருக்கக் கூடிய இந்திய தொல்லியல் துறையின் கண்டுபிடிப்புகள் இறுதியானவை அல்ல. 2003ம் ஆண்டு அகழ்வாய்வு அறிக்கையில் மசூதிக்குக் கீழே ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் காணப்பட்டதாகவும், அதைத் தூண்கள் தாங்கியிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. தூண்களின் அடித்தளத்தில் செங்கல் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது கூறியது. அகழ்வாய்வை கண்காணித்த பல்வேறு தொல்லியல் அறிஞர்கள் அங்கங்கே சிதறிக் கிடந்த செங்கற்கட்டிகளை ஒன்றாகச் சேர்த்து தூண்களின் அடித்தளங்கள் போல் காட்டப்பட்டன என்று நீதிமன்றத்தில் புகார் செய்தனர். அறிக்கையின் முக்கிய பகுதியின் அத்தியாயங்களை எழுதியவர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததும், 'முடிவுகளின் தொகுப்பு' என்றழைக்கப்பட்ட இறுதிப் பகுதியின் ஆசிரியர் என்று எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது சுவாரஸ்யமானது.
மேலும், அறிக்கையின் முக்கிய பகுதியில் எந்தக் கோவில் பற்றியும் குறிப்பு எதுவும் இல்லை; ஆனால், அது முடிவுகளின் தொகுப்பில் திடீரென்று தோன்றுகின்றது. அந்த அறிக்கை கலப்படம் செய்யப்பட்ட ஆவணம் என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

சமுதாயம் வகுப்புவாதமயமாக்கப்படுவதற்கும் இந்தப் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? இந்த சர்ச்சையின் விளைவுகள் குறித்து உங்களுக்கு அக்கறை இருந்த காரணத்தால் நீங்களும், வேறு சிலரும் சாட்சியமளிக்க முன்வந்தீர்கள். 

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதையொட்டி முதல் மோதல் எழுந்தது. இரண்டு சமுதாயங்களும் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இரு சமுதாயங்களுக்கு இடையில் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக 1970ல் விஎச்பிதான் இந்தப் பிரச்சனையை வகுப்புவாதமயமாக்கியது; இது இறுதியில் மசூதி இடிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. இயல்பாகவே, முஸ்லிம்களும், அவர்களைப் போல பல இந்துக்களும் தாங்கள் புண்படுத்தப்பட்டதாக நினைக்கின்றார்கள். ஆனால், அடிப்படைவாதிகள் தங்களது பிளவுவாத நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்கள். தன்னை அதிகார பீடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பாரதீய ஜனதாக் கட்சி அயோத்தி பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்டது.

வரலாறு அல்லது நம்பிக்கை சந்மபந்தப்பட்ட விஷயங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க முடியுமா? 

தலைநகரத்தில் அனுமார் கோவில்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்திருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் அரசாங்கமும் நீதிமன்றங்களும் ஒரு ராமரின் பிரச்சனையை மட்டும் தீர்த்தால் போதாது; பல அனுமார்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியிருக்கும்; அனுமார் கோவில்கள் பெரும்பாலும் அதிகாரபூர்வமற்ற நிலங்களில்தான் கட்டப்படுகின்றன.

நன்றி: பிரன்ட்லைன், அக்டோபர் 22, 2010.    

    ................................................

No comments:

Post a Comment