Wednesday, January 26, 2011

நம்பிக்கைக்கு நீதிமன்றத்தில் இடமில்லை -ராஜேந்தர் சச்சார்



நீதிபதி ராஜேந்தர் சச்சாருடன் ஒரு பேட்டி. 


(பேட்டி கண்டவர்: அஜாய் ஆசீர்வாத் மகாபிரசாஸ்தா) தமிழில்:அசோகன் முத்துசாமி

டெல்லி உயர்நீதிமனற்த்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் அயோத்தி தீர்ப்பைக் கடுமையாக விமரிசிப்பவர்களில் ஒருவர். இந்திய முஸ்லிம்களின் வறிய நிலைமைகளை ஆவணப்படுத்திய சச்சார் அறிக்கையின் ஆசிரியர். செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்ட முன்னுதாரணங்கள் எதையும் பின்பற்றவில்லை என்றும், சங்பரிவாருக்குச் சாதமாகத் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்திருக்கின்றது என்றும் கூறுகின்றார். பிரன்ட்லைன் ஆங்கில இதழுக்கு அவர் அளித்த பேட்டி:      
   
ராமஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சை வெறும் மதப் பிரச்சனை மட்டுமல்ல; இந்தியாவில் அது கடந்த இருபது ஆண்டுகளாக அரசியல் விவாதப் பொருளாகவும் ஆகிவிட்டது. தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்? 
பதில்: தீர்ப்பை இரண்டே வார்த்தைகளில் சுருக்கிவிடலாம்: குற்ற ஆவணம். 1992ம் ஆண்டு ஒரு குற்றம் நிகழ்த்தப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால் அந்த குற்றம் செய்யப்படவில்லை என்றும், பிரச்சனை நீதிமன்றத்திற்குச் சென்று விட்டது என்றும் எண்ணிக் கொள்ளுங்கள். எத்தகைய சூழலிலும் நிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? வெளிப்படையாகச் சொன்னால், அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டுள்ள இந்துத்துவ மனுதாரர்கள் எந்த அடிப்படையில் அந்த நிலம் வேண்டும் என்று கோரினார்களோ, அதே அடிப்படையில் ஒரு பரிகாரமாக அவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். மசூதி 16ம் நூற்றாண்டிலிருந்து அங்கு இருக்கின்றது. அவர்கள் வரலாற்று நோக்கில் சமீபத்தில்தான் வழக்கு தொடுத்தார்கள். தாவா உண்டான நாளிலிருந்து 12 வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று வரைமுறைச் சட்டம் கூறுகின்றது. சட்டப்படியாகக் கூறவதென்றால், கோவிலை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டிருந்தாலும் சங்பரிவாரத்திற்கு உரிமை இல்லை; ஏனெனில், வரம்பிற்கு உட்பட்ட காலத்திற்கு முள்பிருந்தே மசூதி இருந்திருக்கின்றது.
இந்த வழக்கிற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கின்றது என்று 2003லிருந்து நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். (தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார்). '1940ம் ஆண்டு பிரைவி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்ட சாஹித் கஞ்ச் என்கிற மசூதி லாகூரில் இருக்கின்றது. அந்த வழக்கில் 1722ல் ஒரு மசூதி இருந்தது என்பது ஒப்புக் கொள்ளப்படுகின்றது. ஆனால், 1762 வாக்கில் அந்த கட்டிடம் மகாரானா ரஞ்சித் சிங் தலைமையில் சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. குருத்வாராவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1935ம் ஆண்டில்தான் அது ஒரு மசூதி என்றும், முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. 'நீதியரசர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு புனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் அளிக்கும் மத உணர்வின் மீது அனைத்து வகையிலும் பரிவு கொண்டிருந்த போதிலும், வரைமுறைச் சட்டப்படி அத்தகைய ஒரு கட்டிடம் வேறொரு மதத்தவரின் வசம் இருக்க முடியாது என்கிற வாதங்களை ஏற்க முடியாது' என்று பிரைவி கவுன்சில் கூறியது; பிரச்சனைக்குரிய சொத்தும், அதன் கீழ் உள்ள அனைத்து நலன்களும் 12 'வருடங்களுக்கு மேலாக இப்போது வக்புக்கு எதிரிடையாக சீக்கியர்கள் வசம் இருப்பதால், கால வரையறைச் சட்டப்படி வக்புக்காக அந்த சொத்தை தன் வசம் வைத்திருக்கும் முத்தவல்லியின் (பாதுகாவலர்) உரிமை முடிவிற்கு வந்துவிட்டது' என்று மேலும் கூறியது.
அப்போது, அந்த இடம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு குருத்வாராதான் என்றும் குறிப்பிட்டது. அது இடிக்கப்பட்ட பிரச்சனையும் அல்ல. பாபர் மசூதி அதைக் காட்டிலும் மிகப் பெரிய அரசியல் பிரச்சனையும், உணர்ச்சிகரமான பிரச்சனையுமாக ஆக்கப்பட்டுவிட்டது.
ஒரே மாதிரியான பிரச்சனைக்கு ஒரே மாதிரியான தீர்வு என்கிற வகையில், 400 வருடங்களுக்கு முன்னர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னர் ஒரு கோவில் இருந்திருந்தாலும், விஷ்வ இந்து பரிசத்தும், மற்றவர்களும் தொடுத்த வழக்குகள் தோற்க வேண்டும். அதற்கு மாறாக, கால வரையறைச் சட்டப்படி செல்லத்தக்கதாகிய சன்னி வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிறகு, இரண்டாவது அம்சம். மசூதிக்குக் கீழே கோவில் இருந்தது என்பதற்கு தெளிவான சான்று இல்லை. ஏதோ ஒரு கோவிலின் இடிபாடுகள் இருந்திருக்கலாம் என்று பலர் குறிப்பிடுகின்றனர். நாட்டின் அரசியல் 5000 ஆண்டுகள் காலப் பரப்பு கொண்டது. இந்துக் கோவில்களும், மசூதிகளும் கட்டுவதற்காக பல பவுத்த கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன. சில இந்து மன்னர்களால் சில மசூதிகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மதக் காரணங்களுக்காக அல்ல; அக்கால கட்டத்தின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக. இதன் பொருள், இடித்து மீட்டெடுப்பதன் மூலம் அவையனைத்தின் புனிதத்தையும் பெறப்போகிறீர்கள் என்பதா? பாபர் மசூதி விஷயத்தில், எந்தக் காலத்திலும் அந்த இடத்தில் கோவில் எதுவும் இருந்ததில்லை என்று பல வரலாற்று அறிஞர்களின் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அது ராமர் பிறந்த இடம் என்கிற இந்து நம்பிக்கையின் அடிப்படையிலான ஒரு தகராறில் ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க முடியும்? நீதிமன்றத்தில், நம்பிக்கைக்கு அர்த்தம் எதுவும் இல்லை.
அடுத்து, மூன்றாவது அம்சம். முஸ்லிம்கள் மசூதியைக் கட்டுவார்களா இல்லையா என்பது வேறு பிரச்சனை. அது முஸ்லிம்களின் விருப்பம். ஆனால், மசூதி இடிக்கப்பட்டிருப்பதால் அந்த நிலம் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பல இளைஞர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அந்த நிலம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது, நாங்கள் அதில் அனைத்து சமூகத்தவருக்குமான பள்ளிக் கூடமோ அல்லது மருத்துவ மனையோ கட்டியிருப்போம் என்று பல முஸ்லிம்கள் கூறினர். நிலம் முஸ்லிம்கள் வசம் திரும்பச் செல்லக் கூடாது என்கிற வாதத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குரானில் கூட, ராமனும் கிருஷ்ணனும் இறைதூதர்கள் என்றும், முகம்மது கடைசி தூதர் என்றும் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. பல முஸ்லிம் றிஞர்கள் இந்த முடிவிற்கு வந்திருக்கின்றனர்.
தீர்ப்பு நகைப்பிற்குரியது. அங்கு ஒரு கோவில் இருந்தது என்கின்ற இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சர்ச்சைகிடமான அறிக்கையை நாம் ஏற்றுக் கொள்வோம். முஸ்லிம்களும் அதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கக் கூடும். அந்த இடத்தில் மசூதி கட்டுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்திருக்கக் கூடும்; ஆனால், அந்த நிலம் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் அவர்கள் எதை வேண்டுமானாலும் கட்டியிருக்கலாம். அது அவர்களது மனித உரிமை, சமூக உரிமை. கோவில் இடிக்கப்பட்டிருந்தாலும், 500 ஆண்டு கால வழிபாட்டுத் தலத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அறிவுடமையாகுமா? வரலாற்று நிகழ்வுகளை மதிப்பிடும் தகுதி நீதிமன்றத்திற்கு கிடையாது.

நீதிபதிகள் நம்பிக்கையை விரிவாக மேற்கோள் காட்டியிருக்கின்றார்கள். உங்களது கருத்து.

நான் அதைத்தான் கூறினேன். சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள் என்பது அவர்களது தீர்ப்பு.   அந்தப் போக்கில் வரலாற்று அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய வலதுசாரி வரலாற்றை அவர்கள் உண்மையென நிறுவிவிட்டனர்.
மதநம்பிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் வரலாற்றைத் திருத்துவதற்கு நிங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? நம்முடையது போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இதை அனுமதிக்க முடியாது. நான் ஒரு கடுமையான வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை; ஆனால், இது அரசியல் நேர்மையின்மையாகும். நமது அரசியல் கட்சிகள் ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்துவிட்டன. அரசாங்கம் ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தால் மசூதி இடிப்பு நடந்தே இருக்காது. ஆனால், இப்போது இந்த கட்சிகள் நிதிமன்றம் தீர்மானிக்கட்டும் என்கின்றன. இது ஒரு அரசியல் பிரச்சனை. அரசு நிர்வாகத்தின் முக்கியமான பகுதிகளில், நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன . ஆனால், இப்போது நிதிமன்றம் தீர்மானிக்கட்டும் என்று கூறுவது இக்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் வசதியாக இருக்கின்றது. அரசியல் கட்சிகள் ஒரு நிலை எடுக்க வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும்; தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் சட்ட முன்னுதாரணங்களோ அல்லது பொது விதிகளோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நீதியை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக நீதிபதிகள் பாதுகாவலர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர்.

ராமஜென்மபூமி இயக்கத்திற்கு புத்துயிரூட்டப் போவதாக சங்பரிவாரம் குறிப்பிட்டுள்ளது. இது மதச் சமூக மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வதற்கு இட்டுச் செல்லக் கூடும். நீதித்துறை நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற காரணகாரிய அறிவு ஆகிய கோட்பாட தீர்ப்பு சேதப்படுத்திவிட்டதா?

பெரும்பான்மை கருத்தின் பக்கம் சாய்ந்துள்ள இது சந்தேகத்திற்கு இடமின்றி ராமஜென்மபூமிக்கு ஆதரவான தீர்ப்பு. சங்பரிவாரம் இதில் தனக்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கருதுகின்றது. ஆனால், மொத்த நீதித்துறையையும் அப்படிக் கண்டிப்பது சரியல்ல. அதன் புகழுக்கு இது நிச்சயமாக பங்கம் விளைவித்துவிட்டது. உண்மை என்னவெனில், 1949ம் ஆண்டு ராமர் சிலைகள் அங்கு வைக்கப்பட்டன. அது திருட்டுத்தனமான செயல். முஸ்லிம்கள் அங்கு நீண்ட காலமாக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அது ஒரு மசூதி. ஒரு இந்துச் சிலை அங்கு வைக்கப்படும்போது, முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்யாதது இயல்பானதே; உருவச் சிலை வழிபாடு அவர்களது மதநெறிகளுக்கு எதிரானது. அதனால்தான் அவர்கள் பாபர் மசூதிக்குப் போவதை நிறுத்தினார்கள். அதன் பொருள் அவர்களது உரிமைகளும் போய்விட்டன என்பதல்ல. 1949ல் நீதிமன்றம் அங்கு எல்லா விதமான வழிபாட்டையும் தடை செய்தது. ஆனால், 1528ல் அங்கு ஒரு கோவில் இடிக்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; அவ்விதமாக, சர்ச்சைக்குரிய தொல்லியல் துறை அறிக்கையை செல்லத்தக்கதாக ஆக்கிவிட்டது. கோவில் இடிக்கப்பட்டிருந்தாலும், பாபர் மசூதி சட்ட விரோதமானது என்கிற முடிவிற்கு நீங்கள் வர முடியாது.

இது சொத்துத் தகராறு சம்பந்தப்பட்ட ஒரு சிவில் வழக்கு. ஆனால், பாபர் மசூதி இடிப்பு எனும் குற்றச் செயலை மறைமுகமாக நியாயப்படுத்துகின்ற வகையில் இது அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய தீவிரமான விஷயம். இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 

இந்த தீர்ப்பு பல விஷயங்களைச் சேதப்படுத்திவிட்டது. இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளைக் காயப்படுத்திவிட்டது. மசூதியை அழித்து, அதை இந்துக்களிடம் கொடுங்கள் என்று கூறுவது போல் இருக்கின்றது. மூன்றில் இரண்டு பங்கு நிலம் இந்துக்களுக்குப் போகப் போகின்றது. ஒரு சட்டத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ள முடியாது.
நடந்ததை மறந்துவிட்டு போய்க் கொண்டேயிருங்கள் என்று ஊடகங்கள் மக்களிடம் கூறுகின்றன. எங்கே போவது? எங்கே நாம் போவது? எதை நோக்கிப் போவது? உங்களால் ஒரு குற்றத்தை மறக்க முடியாது. ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு அதைச் செய்தவர் தப்பிக்க முடியாது என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு அவர்களது சொத்தின் மீதான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்திற்கு வாரிசாகும் உரிமை அவனுக்குக் கிடையாது என்று பொதுவான சட்டம் கூறுகின்றது. ஆனால் இங்கே மசூதியை அழித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப் பெறுகின்றார்கள்.

சச்சார் கமிட்டி அறிக்கையைத் தயாரித்தவர் என்கிற முறையில் முஸ்லிம்களின் மோசமான நிலைமைகளை நீங்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றீர்கள். அத்தகைய ஒரு தீர்ப்பிலிருந்து முஸ்லிம்கள் என்ன விதமான செய்தியைப் பெறுவார்கள்? 

அது ஒரு ஆபத்தான செய்தியாக இருக்கும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒரு நிலை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 1946ல் பீகார் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அது இந்து-முஸ்லிம் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. கலவரக்காரர்கள் கலவரத்தை நிறுத்தவில்லை என்றால் டெல்லியிலிருந்து அவர்கள் மீது குண்டு வீசப் போவதாக நேரு பகிரங்கமாகக் கடிதம் எழுதினார். பீகார் முஸ்லிம் தொகுதியாக இருந்தது; முஸ்லிம் லீக் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. ஆனாங்ல அரசியல் கட்சிகளின் பரந்த நோக்கு ஏராளமான குழப்பங்களைத் தவிர்த்தது. அரசு ஒரு நிலை எடுக்க வேண்டியிருந்தது; அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருந்த மதச்சார்பற்ற நெறிகளை வலியுறுத்த வேண்டியிருந்தது. என்றபோதிலும், அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள முஸ்லிம்களின் கருத்து ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது நல்ல விஷயம். ஆனால், ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல் அனைத்தையும் மறக்குமாறு நீங்கள் அவர்களிடம் கூற முடியாது. அது இந்த அமைப்பின் மீதும், இந்திய அரசியலின் மீதும் அந்த சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனை.
ஏன் எல்லாவற்றையும் மறந்துவிடுமாறு என்று முஸ்லிம்களை வேண்டிக் கொள்ள வேண்டும்?  அதே கேள்வியை சங்பரிவாரத்திடமும் கேட்கலாம். அவர்கள் ஏன் எல்லாவற்றையும் மறக்கக் கூடாது? இந்த தீர்ப்பு விஷயத்தில் கூட அவர்கள் வெற்றி பெற்றதாக உணர்கிறார்களோ தவிர, திருப்தியடைவில்லை. அங்கிருக்கும் மொத்த நிலத்திலும் ராமர் கோவில் கட்ட அவர்கள் விரும்புகின்றார்கள். இது இந்துப் புனிதத் தன்மை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அது முஸ்லிம் புனிதத்தன்மை சந்மபந்தப்பட்ட பிரச்சனையும் இல்லையா? என்னைப் பொருத்த வரையில் இந்த தீர்ப்பு அப்பட்டமாக மதவெறியிடம் சரணடைவதாகும். அரசியல் உறுதியற்ற பலவீனமே அயோத்தி சிக்கலுக்கு காரணம்.

நன்றி: பிரன்ட்லைன், அக்டோபர் 22, 2010

No comments:

Post a Comment